Home Manipallavam Read Manipallavam Part 2 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

72
0
Read Manipallavam Part 2 Ch21 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 2,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 2 Ch21|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – ஞானப் பசி

அத்தியாயம் 21 : தெய்வ நாட்கள் சில

Read Manipallavam Part 2 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தனக்காகவே திருநாங்கூர் வந்திருந்த முல்லையினிடமும் கதக்கண்ணனிடமும் மனம் நெகிழ்ந்து பழகாமல் அவர்களுடைய அன்பையும் ஆர்வத்தையும் புறக்கணித்துத் திருப்பியனுப்பியதை நினைத்தபோது இளங்குமரனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. அன்று மாலை தூய நினைவுகள் பொங்கும் மனத்தோடு உலகத்துப் பேரறிஞர்கள் எல்லாம் அணி வகுத்து நிற்கும் ஞானவீதியில் தனியொருவனாக நடந்து தான் வெற்றிக் கொடி உயர்த்திச் செல்வதாக எண்ணியபடி அவன் இருந்த கனவு நிலையை முதலில் விசாகை வந்து கலைத்தாள். தாயைப் பற்றி நினைவூட்டிக் கலங்கச் செய்தாள். அந்தக் கலக்கத்திலிருந்து நீங்கு முன்பே முல்லையும், அவள் தமையனும் வந்து வேறொரு வகைக் கலக்கத்தை உண்டாக்கிவிட்டுப் போயிருந்தார்கள். தன்னுடைய கல்வி கலக்கத்திலிருந்து விலகி நிற்கும் தெளிவை இன்னும் அடையவில்லை என்பதை அவன் இப்போது உணர முடிந்தது.

‘கலக்கங்களில் இருந்துதான் தெளிவு பிறக்க வேண்டு’ மென்று அடிகள் பலமுறை கூறியிருந்தாலும், பழைய சார்புகளும் நினைவுகளும் தன்னை வழி. மாற்றிக் கொண்டு போய் விடலாகாதே என்ற பயம் அவனுக்கு இருந்தது. பருகி விடுவது போன்ற தாகத்தோடு தன் நீலோத்பல விழிகளை அம்புகளின் கூர்மையுடையன வாக்கிக் கொண்டு முல்லை பார்த்த பார்வையை நினைத்துக் கொண்டான் இளங்குமரன். அந்தக் கண்களின் வனப்புக்குத் தான் அளித்த காணிக்கையான கவிதையையும் நினைத்துக் கொண்டான்.

இயல்பாகவே எழும் பாசங்களைப் போக்கிக் கொள்வதென்பது தேர்ந்த மனித மனத்துக்கும் அரியது என்று அன்றைக்கு அவன் உணர்ந்தான். ‘நெல்லுக்குள் உமியும், செம்பிற் களிம்பும் போலப் பாசங்கள் மனத்துடனேயே பிறந்தவை’ – என்று அவன் கற்றிருந்ததன் அநுபவம் அவனுக்கே விளங்கிற்று. முல்லை வந்து எதிரே கண் கலங்கி நின்றிராவிட்டால் காவிரிப்பூம்பட்டினமும் பழைய சார்புகளும் அவனுடைய நினைவில் வந்திருக்கப் போவதில்லை. பாடல் எழுதப்பெற்ற அந்த ஏட்டையும், நாகலிங்கப் பூவையும் முல்லையின் கையில் கொடுக்கும் போது பேதைச் சிறு பெண்ணாய் அவள் தன் முன்னால் சிரித்துக் கொண்டு நின்ற பழைய நாட்கள் எல்லாம் நினைவு வந்து அவனையே மனம் நெகிழ்ந்து உருகும்படி செய்து விட்டன. அடுத்த நாள் பொழுது புலரும் வரை அவன் தன் மனத்தில் அவளை மறக்க முயன்று கொண்டே நினைத்துக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்த பின் நீராடித் தூய்மை பெற்றுப் பாடம் கேட்பதற்காக அடிகளின் கிரந்த சாலைக்குள் அவன் நுழைந்த போது விசாகை பளிரென்று மின்னும் புதிய சீவர ஆடை புனைந்து கையில் அட்சய பாத்திரமும் ஏந்தியவளாய் எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தாள். நிர்மலமான புனிதப் பூ ஒன்று பொன் நிறத்தில் பூமியையே காம்பாகக் கொண்டு பூத்து நிற்பது போல அந்த வைகறையில் தோன்றினாள். அவள் எங்கேயோ யாத்திரை போகிறாள் போலத் தோன்றியது.

இளங்குமரனை எதிரே பார்த்ததும் விசாகை நின்றாள். இளங்குமரனும் நின்றான். “இந்தப் பாத்திரத்தில் நிறைவதைக் கொண்டு ஏழைகளின் வயிற்றை நிறைப்பதற்காக ஊர் சுற்றப் புறப்பட்டு விட்டேன். மறுபடியும் விரைவில் நாம் சந்திப்போம். ஞான நூல்களைக் கற்கும் போது மனத்தில் எந்தக் கலக்கமும் இருக்கக் கூடாது. இரும்பில் தோன்றும் துரு வளர்ந்து பெருகி இரும்பையே அழித்துவிடுவது போலச் சஞ்சலம் மன உறுதியை அழித்து விடும். மந்தையில் ஊரார் பசுக்களைக் கணக்கிட்டு எண்ணி மேய்க்கின்ற ஆயனைப்போல, நமக்குப் பயன் கொள்ளாமல் நூல்களை எண்ணிப் படிப்பதில் உறுதியில்லை. இன்றிலிருந்து உங்களுடைய ஒவ்வொரு நாளும், தெய்வ நாளாகக் கழிய வேண்டும்” என்று விசாகை கூறியபோது மனமும், மெய்யும் சிலிர்த்து அந்தப் பரிசுத்தவதியைக் கைகூப்பி வணங்கினான் இளங்குமரன்.

தூய்மையே வடிவமாகி ஒரு மின்னல் நகர்ந்து செல்வது போல விசாகை மேலே நடந்தாள். நேற்று மாலை ஒரு பெண் தன்னுடைய மோகம் நிறைந்த வார்த்தைகளால் எனக்குக் கலக்கத்தை உண்டாக்கினாள். இன்று காலையில் இன்னொரு பெண் தன்னுடைய ஞானம் நிறைந்த வார்த்தைகளால் என் கலக்கத்தைப் போக்கினாள் என்று நினைத்து வியந்த வண்ணமே தன் நாட்களைத் தெய்வ நாட்களாக்குவதற்காகக் கிரந்த சாலைக்குள் நுழைந்தான் இளங்குமரன். விசாகையின் வார்த்தைகள் அவனுக்குப் புதிய உறுதி அளித்திருந்தன.

அன்றைய தினத்துக்குப்பின் கால ஓட்டத்தைப் பற்றிய நினைவே அவனுக்கு இல்லை. அவன் மூழ்கிப் போன உலகத்தில் ஒரே ஒரு காலம்தான் இருந்தது. அதற்குப் பெயர் அழிவின்மை. அவன் கற்ற நூல்களில் காலத்தின் சிற்றெல்லை பற்றியும், பேரெல்லை பற்றியும் கருத்துக்கள் வந்தன. காலத்தின் மிகக் குறுகிய சிற்றெல்லைக்குக் கணிகம் என்று பெயர். காலத்தின் மிகப் பெரிய பேரெல்லைக்குக் கல்பம் என்று பெயர். ஏழு செங்கழுநீர்ப் பூவின் இதழ்களை வரிசையாய் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பலசாலியான மனிதன் ஒருவன் மிகவும் கூரிய உளியைக் கொண்டு துளையிட்டால் ஆறு இதழ்களைத் துளைசெய்து முடித்துவிட்டுப் பின்பு ஏழாவது இதழிலும் புகுவதற்கு ஆகிற நேரம் ஒரு கணிகம். ஒரு யோசனைத் தொலைவுக்கு உயர்ந்து இறுகிய வச்சிரமலை ஒன்று கருக்கொண்ட பெண்டிர் உடுத்து நைந்த பட்டுத் துணியினால் தேய்க்கப்பட்டு முற்றிலும் தேய்ந்து போவதற்கு ஆகிற காலம் கல்பம். ‘ஆசீவக சமயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த உலகமும் இதில் வாழும் உயிர்களும் எண்பத்து நான்கு லட்சம் மகா கல்ப காலம்தான் வாழ்வார்கள்’ என்று கருத்துடையவர்கள். அந்தச் சமயத்தின் கொள்கைகளையும், தத்துவங்களையும் இளங்குமரனுக்குக் கற்பிக்கிறபோது அடிகள் காலத்தைப் பற்றிய இந்த அளவுகளையும் கற்பித்திருந்தார். பசித்து உண்பவன் அங்ஙனம் உண்பது பின்னும் பசிப்பதற்காகவே என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அந்தச் சித்தாந்தத்தைப் போலவே இளங்குமரனுடைய ஞானப் பசியும் தீரத்தீர வளர்ந்து கொண்டிருந்தது. எவ்வளவு கற்றாலும் அடங்காத பசியாக இருந்தது அது. எத்தனை திங்கட் காலம் வேறு உலக நினைவுகளே இல்லாமல் ஞான வேட்கையில் மூழ்கினாலும் ஒரு கணிக நேரம் தான் கற்றது போல் குறைவாகத் தோன்றியது. தன்னை நுகர்வதில் சோர்வு தராத அநுபவம் எதுவோ அதுவே தெய்வீகமானது. அதில் ஈடுபடும் நாட்களும் தெய்வ நாட்களே! உயரிய தத்துவங்களையும் சமயங்களின் நெறிகளையும், வாதிட்டு வெற்றி கொள்ளும் தருக்க முறைகளையும், கற்கக் கற்க இன்னும் கற்க வேண்டுமென்ற ஆர்வம் பெருகியது இளங்குமரனுக்கு.

ஒரு காலத்தில், மாமிசப் பர்வதம் போல எதிர்த்து வந்த மல்லர்களையெல்லாம் இடது கையால் சுழற்றிக் கீழே தள்ளக் கூடிய வலிமை பெற்றிருந்த தன் உடம்பு இப்போது கொடி போன்று இளைத்து வெளுத்திருப்பதையும், ஆனால் அந்தக் காலத்தில் ஞானபலமில்லாமல் இளைத்ததாயிருந்த தன் மனம் இப்போது அந்த வலிமையினைப் பெற்றுப் பெருத்து வருவதையும் சேர்த்து நினைத்தான் அவன்.

இனிமேல் கண் பார்வையின் ஒளியினாலும் இதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கும் கனிந்த சொற்களாலும் ஆன்மாவின் பலத்தினாலுமே இந்த உலகத்தில் எதையும் வெற்றி கொண்டு நிற்க முடியும்போல் ஒரு நம்பிக்கை அவனுக்கு உண்டாயிற்று. அவன் மனத்திற்குள்ளே தொடங்கிய இந்த ஞான யாத்திரையில் பல மாதங்கள் கழிந்து போயிருந்த போதிலும் கற்றது குறைவே என்னும் உணர்வினால் கழிந்த காலம் எல்லாம் மிகச் சில நாட்களைப் போலவே அவனுக்குத் தோன்றின. ஐந்திரம், பாணினியம், தொல்காப்பியம் போன்ற இலக்கணக் கடல்களில் நீந்துவதற்குக் கழிந்த காலமும் தருக்கத்திற்காக வேத வியாசரின் பத்து அளவைகளையும் கிருத கோடியின் எட்டு அளவைகளையும் சைமினியின் ஆறு அளவைகளை யும் ஆழ்ந்து கற்ற காலமும், தெய்வத் திரு நாட்களாக அவன் வாழ்வில் வந்தவை. பெளத்தர்களின் திரிபிடக நெறியையும் பிற கருத்துக்களையும் அவன் கற்ற காலத்தில் விசாகை அவனுக்குப் பெருந்துணையாக இருந்தாள். வேதநெறிக்கு உட்பட்ட ஐந்து வகைச் சமயங்களின் வாதங்களையும், வேதநெறிக்குப் புறம்பான ஐந்து வகைச் சமயங்களின் வாதங்களையும், அவன் ஞானக்கடலாகிய நாங்கூர் அடிகளாரிடம் கற்று அறிந்து தெளிந்த காலம் மறக்க முடியாத பொற் காலமாயிருந்தது. இப்படிக் கழிந்த தெய்வ நாட்களினிடையே காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நீலநாக மறவரும் வீரசோழிய வளநாடுடையாரும் அடிக்கடி திருநாங்கூருக்கு வந்து இளங்குமரனைச் சந்தித்துவிட்டுச் சென்றார்கள். விசாகை இடையிடையே யாத்திரை செல்வதும் மீண்டும் திருநாங்கூருக்கு வந்து தங்குவதுமாக இருந்தாள். காலம் அடக்குவாரின்றி ஒடிக் கொண்டிருந்தது.

இளங்குமரன் திருநாங்கூருக்கு வந்த பின் ஓராண்டுக் காலம் கழித்து வைசாக பெளர்ணமிக்குப் பத்து நாட்கள் இருக்கும்போது வீரசோழிய வளநாடுடையார் மட்டும் தனியாக அவனைத் தேடிவந்தார். அவர் தேடி வந்த போது பிற்பகற் போதாயிருந்தது. “தம்பி! இன்றே நீ என்னோடு புறப்படவேண்டும். இருட்டுவதற்குள் நாமிருவரும் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்து அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு இன்று பின்னிரவில் மணிபல்லவத் தீவுக்குக் கப்பலேற வேண்டும்” என்று அவசரமும், பதற்றமும், கலந்த குரலில் வேண்டினார் வளநாடுடையார். இளங்குமரன் அதற்கு இணங்கவில்லை. “உன் வாழ்வில் நீ அடைய வேண்டிய பெரும் பயன் இந்தப் பயணத்தில்தான் இருக்கிறது. மறுக்காமல் என்னோடு புறப்படு” என்று வற்புறுத்தினார் அவர்.

“என் வாழ்வில் நான் அடைய வேண்டிய பெரும் பயனை இந்தத் திருநாங்கூர்ப் பூம்பொழிலில் அடைந்து கொண்டு தானே இருக்கிறேன்” என்று சொல்லிப் பிடிவாதமாக மறுத்தான் இளங்குமரன். அடிகளிடமே நேரில் சென்று இளங்குமரனைத் தன்னோடு மணிபல்லவத்துக்கு அனுப்ப வேண்டுமென்று மன்றாடினார் வளநாடுடையார். அடிகளும் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். உண்மையைச் சொல்லிக் கூப்பிடலாம் என்றால் சக்கரவாளக் கோட்டத்துக் காளி கோயிலில் அருட்செல்வ முனி வருக்குச் செய்து கொடுத்த சத்தியம் நினைவு வந்து வளநாடுடையாரைத் தடுத்தது. நாங்கூர் அடிகளிடம் கோபமாகவும் கேட்டுப் பார்த்தார் அவர்.

“எப்போதுதான் இந்தப் பிள்ளையாண்டானை உங்களுடைய ஞானச் சிறையிலிருந்து விடுதலை செய்யப் போகிறீர்கள்?”

“இன்னும் சிறிது காலத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள் ஐயா! அவனே சிறைக் கதவுகளைத் திறந்து கொண்டு புறப்பட்டு விடுவான்” என்று சிரித்தபடியே கூறி அவரை அனுப்பிவிட்டார் அடிகள். வளநாடுடையார் ஏமாற்றத்தோடு திரும்பினார். அவர் மட்டும் அன்று இரவு மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போய் வந்தார்.

உலகம் எங்கும் ஒரேவிதமாக ஓடிக் கொண்டிருந்த காலம் திருநாங்கூரில் இளங்குமரனுக்குத் தெய்வ நாட்களாகவும், காவிரிப்பூம்பட்டினத்தில் வளநாடுடையார் முல்லை முதலியவர்களுக்கு நைந்த நாட்களாகவும், எங்குமே வெளியேறிச் செல்ல முடியாமல் செல்வச் சிறையிலே அடைபட்டுக் கிடந்த சுரமஞ்சரிக்கும் அவள் தோழிக்கும் காலமே இயங்காதது போலவும் தோன்றின. சுரமஞ்சரி அளவிட்டுக் கொண்டு வந்த காலக் கணக்குப் பார்த்தால் அவள் நெடுங்காலம் அப்படி அடைபட்டபடியாயிருந்தாள் என்றே சொல்ல வேண்டும். அவள் நெஞ்சிற்குள்ளேயோ இளங்குமரனைப் பற்றிய நினைவு அடைபட்டிருந்தது.

வெயிலும் மழையும் காற்றும் பனியுமாகப் பருவங்களால் விளையும் அழகுகள் பூம்புகாரில் மாறி மாறி விளைந்து கொண்டிருந்தன. காலம் இயங்கிக் கொண்டிருந்தது. மனிதர்களின் நினைவுகளையும் ஆசைகளையும் ஏக்கங்களையும். சுமந்து இயங்கிக் கொண்டேயிருந்தது.

நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் வாணிக நிமித்தமாக அடிக்கடி கப்பல்களில் கடற்பயணம் செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். காவிரியில் புதுப் புனல் பெருகியது; தணிந்தது. மறுபடி பெருகியது! தணிந்தது. ஆண்டுகள் ஓடின. பூம்புகார்வாசிகள் மேலும் இரண்டு இந்திர விழாக்களை அனுபவித்து மறந்து விட்டார்கள். மூன்றாவது இந்திரவிழாவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

Previous articleRead Manipallavam Part 2 Ch20 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 2 Ch22 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here