Home Manipallavam Read Manipallavam Part 2 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

79
0
Read Manipallavam Part 2 Ch3 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 2,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 2 Ch3 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – ஞானப் பசி

அத்தியாயம் 3 : வீதியில் நிகழ்ந்த விரோதம்

Read Manipallavam Part 2 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

தன்னைக் காப்பாற்றியது இளங்குமரனே என்பது தந்தையாருக்கும், நகைவேழம்பருக்கும் தெரிய நேர்ந்து அதன் காரணமாக இளங்குமரனுக்குத் துன்பம் வரக்கூடாதே என்பதுதான் சுரமஞ்சரியின் பயமாக இருந்தது. அந்த பயத்துடனேயே துறைமுகத்திலிருந்து தேரில் புறப்பட்டு மாளிகைக்குச் சென்றாள் அவள்.

அன்று பகலில் சுரமஞ்சரியின் தாய் ஆலமுற்றத்து ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி வருமாறு அவளை வேண்டினாள்.

“பெரிய கண்டத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்து வந்திருக்கிறாய். கோவிலுக்குப் போய் இறைவனை வணங்கிவிட்டு வா. வானவல்லியையும், உன் தோழியையும் உடன் அழைத்துக் கொண்டு போ” என்று தாய் கூறியபடியே கோவிலுக்குப் புறப்பட்டாள். சுரமஞ்சரி, சகோகதரியும், தோழியும் உடன் வர அவள் தேரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது நாளங்காடியின் அருகே இளங்குமரன் எதிர்புறமிருந்து இன்னொரு தேரைச் செலுத்திக் கொண்டு விரைவாக வருவதை கவனித்தாள். அவனை நோக்கி அவள் முகம் மலர்ந்தது. ஆனால் அவனுடைய தேர் அவளுக்காக நிற்கவே இல்லை. அவளுடைய தேருக்கு எதிரே இளங்குமரனின் தேர் விரைந்து விலகிச் சென்ற போது கடிவாளக் கயிற்றைப் பற்றியிருந்த அவனது வலது கையும் தோளும் அவள் கண்களில் தோன்றி நிறைந்தன. அவனுடைய அழகிய தோள்களிலிருந்து அவளுடைய மனத்தில் நளின நினைவுகள் பிறந்தன. அந்த நினைவுகளில் மூழ்குவதில் தனியானதொரு களிப்பு அவளுக்கு இருந்தது.

‘கண்ணைக் கவரும் இந்தச் சுந்தரமணித் தோள்களில் ஒன்றின் மேல் நேற்றிரவு ஒரு விநாடி என் தலையைச் சாய்ந்திருக்கிறேன்’ – என்று நினைக்கும் போது, அந்த நினைப்பிலேயே அவள் மனத்துக்கு ஒரு பெருமிதம் ஏற்பட்டது. செல்வச் செழிப்பு மிகுந்த பட்டினப்பாக்கத்தில் எத்துணையோ அழகிய இளைஞர்களைச் சுரமஞ்சரி பார்த்திருக்கிறாள். தன்னுடைய பார்வைக்காக எத்துணையோ இளைஞர்கள் நினைவழிந்து தவிப்பதையும் உணர்ந்திருக்கிறாள். ஆனால் அவர்களுக்காகவும், அவர்களுடைய பார்வைக்காகவும் அவள் ஒருபோதும் நினைவிழந்தது இல்லை. இறுமாப்பினால் இறுகிப் போயிருந்த அவள் மனம் நினைவழிந்து நிறையிழந்து நிற்கும்படி செய்த அழகும் ஆண்மையும் இளங்குமரனுடையவையாக இருந்தன.

இளங்குமரன் தொடர்ந்து அவளை அலட்சியம் செய்தான். எந்த அழகினால் தன் மனம் கர்வப்பட்டதோ, அந்த அழகையும் பொருட்படுத்தாமல் தன்னை அலட்சியம் செய்யவும் ஓர் ஆண்பிள்ளை இருக்கிறான் என்பதையும் முதன்முறையாக அவள் கண்டாள். அவளால் அவனை அலட்சியம் செய்ய முடியவில்லை. தனக்கும் தோற்காத பேராண்மைக்கு முன் அவள் தானே தோற்றுப் போய் நின்றாள். ஆனால் அவளுடைய தோல்வியைத் தன்னுடைய வெற்றியாக ஏற்கவும் அவன் சித்தமாயில்லை. ‘ஈடு இணையில்லாத பேராண்மையாளருக்கு நான் மனம் தோற்றேன். அவ்வாறு தோற்றதனால் என் மனம் பெருமைப்படுகிறது’ – என்ற நினைப்பை அவள் அடைவதற்குக் கூட அவன் வாய்ப்பு நல்கவில்லை. அதனால்தான் அவள் அவனிடம் பிணக்குக் கொள்ள நேர்ந்தது. ஆற்றாமையால் விளைந்த இந்தப் பிணக்கும் அவள் உள்ளத்தில் அதிக நேரம் நிலைத்திருக்கவில்லை.

அவளால் கப்பலில் சில நாழிகைகள் தான் அவனோடு பேசாமல் இருக்க முடிந்தது. சிரிப்பையும், முகமலர்ச்சியையும் செயற்கையாக மறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் எப்போதும் அப்படி இருக்க முடியவில்லையே!

எவ்வளவு காலம் காத்திருந்தாலும் இளங்குமரனின் சுந்தரமணித் தோள்களுக்கு உரிமை கொண்டாடும் பெருமையைத் தானே அடைய வேண்டும் போல் அந்தக் கணத்தில் அவளுக்கு ஒரு தாகம் ஏற்பட்டது.

“எதிரே அவருடைய தேர் போயிற்றே, பார்த்தீர்களா அம்மா?” என்று வசந்தமாலை சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“பார்த்தேன், அதற்கென்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது?” என்று அவளைக் கடிந்து கொள்வது போல் மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி.

சுரமஞ்சரி, வானவல்லி முதலியவர்கள் அமர்ந்திருந்த தேர் ஆளமுற்றத்துக் கோயிலுக்குச் செல்வதற்காகப் புறவீதியைக் கடந்து கொண்டிருந்த போது, முல்லையும் வளநாடுடையாரும் தங்கள் இல்லத்திலிருந்து புறப்பட்டு எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்துக்கு முன் புறவீதி வழியாக இளங்குமரன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்ற செய்தியைத் தன் தந்தையிடம் கூறியிருந்தாள் முல்லை. தான் வீட்டு வாயிலில் நின்று கைநீட்டி அழைத்த அழைப்பையும் பொருட்படுத்தாமல் இளங்குமரன் தேரை விரைவாகச் செலுத்திக் கொண்டு போய் விட்டதைக் கண்டு முல்லை மனம் நொந்திருந்தாள்.

“அப்பா! நேற்று நீராட்டு விழாவில் தான் அவரைச் சந்திக்க முடியாமற் போயிற்று. யாரோ ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்காகக் காவிரியில் குதித்துச் சென்றாராம். அதன் பின்பு அவரை மீண்டும் தான் சந்திக்க முடியவில்லை என்று அண்ணன் வருத்தத்தோடு தேடிக் கொண்டு போயிருக்கிறார். அதைக் கேள்விப்பட்டதிலிருந்து, அவர் மழையிலும் புயலிலும் காவிரியில் நீந்திக் கரையேறினாரோ இல்லையோ என்று நீங்களும் நானும் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவரானால் இந்த வழியாகத் தேரில் போகும் போது என்னைப் பார்த்தும் பாராதவர் போல் போகிறார். நாமும் அப்படிக் கல் மனத்தோடு இருந்து விடலாம் என்றால் முடியவில்லையே அப்பா! அவர் இப்போது கூடப் பட்டினப் பாக்கத்திலிருக்கும் அந்தப் பெண்ணின் மாளிகைக்குத் தான் தேரில் போகிறார் போலிருக்கிறது. அங்கே போயாவது அவரை அழைத்து வரலாம்; வாருங்கள்” என்று கூறிப் பிடிவாதமாக வளநாடுடையாரை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தால் முல்லை.

ஆனால் எந்தப் பெண்ணின் மாளிகைக்கு இளங்குமரன் போயிருப்பாளென நினைத்துக் கொண்டு அவள் தந்தையுடன் புறப்பட்டிருந்தாளோ அந்தப் பெண்ணே அப்போது அதே சாலையில் எதிரில் தேரேறி வருவதைக் கண்டதும் வழியை மறித்தாற்போல் வீதியில் நின்று கொண்டு, “தேரை நிறுத்துங்கள்” என்று இரைந்து கூவினாள் முல்லை. தேர் நின்றது.

“அன்று இந்திர விழாவின் போது பூதசதுக்கத்தில் அவருடைய ஓவியத்தை வரைந்து வாங்கிக் கொள்வதற்காக அவரைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பெண் இவள் தான் அப்பா! இவள் பெயர் ‘சுரமஞ்சரி’ என்று சொல்லிக் கொண்டார்கள். எனக்கு இவளிடம் பேசத் தயக்கமாயிருக்கிறது. நீங்களே இவளைக் கேளுங்கள். இவளைக் கேட்டால் அவர் இப்போது எங்கே போகிறாரென்று தெரிந்தாலும் தெரியலாம்” என்று தந்தையிடம் மெல்லிய குரலில் கூறினாள் முல்லை. தேரின் முற்பகுதியிலிருந்த சுரமஞ்சரி மட்டும்தான் முல்லையின் கண்களுக்குத் தென்பட்டாள். உயர்ந்த தோற்றத்தையுடைய வளநாடுடையாரோ பின்புறம் வேறு இரண்டு பெண்கள் இருப்பதையும் அவர்களில் ஒருத்தி முன்புறமிருப்பவளைப் போலவே தோற்றமளிப்பதையும் கண்டு யாரிடம் கேட்பதென்று திகைத்தார். “கேளுங்கள் அப்பா” என்று முல்லை மறுபடியும் அவரைத் தூண்டினாள்.

அதற்குள் தேரின் முன்புறம் இருந்த பெண் வளநாடுடையாரை நோக்கி, “நீங்கள் யார் ஐயா? இந்தப் பெண் எங்கள் தேரை எதற்காக நிறுத்தச் சொல்லிக் கூப்பிட்டாள்?” என்று சற்றுக் கடுமையாகவே வினவினாள். எனவே ஒருவிதமாகத் திகைப்பு அடங்கி அவளிடமே தமது கேள்வியைக் கேட்டார் வளநாடுடையார்.

“இளங்குமரனைப் பார்ப்பதற்காக நாங்கள் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறோம் பெண்ணே! அந்தப் பிள்ளை இப்போது பட்டினப் பாக்கத்தில் உங்கள் மாளிகையில் இருக்கிறானா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். அதைச் சொன்னால் எங்களுக்கு உதவியாயிருக்கும். உன் பெயர் தானே சுரமஞ்சரி என்பது? உன்னைக் கேட்டால் இதற்கு மறுமொழி கிடைக்குமென்று இதோ அருகில் நிற்கும் என் மகள் சொல்கிறாள்.”

“நல்லது ஐயா! சுரமஞ்சரி என்பது என் பெயர்தான். ஆனால் உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் இப்போது இவ்வளவு அவசரமாக அவரைத் தேடிக் கொண்டு போக வேண்டிய காரியம் என்னவோ?”

தேரின் முன்புறம் இருந்த சுரமஞ்சரி தன் தந்தையிடம் இப்படிக் கேட்டவுடன் அவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த முல்லைக்குச் சினம் மூண்டது.

“முடியுமானால் கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள். அவருக்கும் எங்களுக்கும் ஆயிரமிருக்கும். அதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டியதில்லை” என்று நேருக்கு நேர் அவளிடம் சீறினாள் முல்லை. முல்லையின் கோபத்தைக் கண்டு சுரமஞ்சரி பதற்றமடையவில்லை. அந்தக் கோபத்தையே சிறிதும் பொருட்படுத்தாதவளைப் போல் சிரித்தாள்.

“பெரியவரே! புறவீதியிலுள்ள பெண்கள் வீரம் மிக்க மரபைச் சேர்ந்தவர்கள் என்பதை உங்கள் மகள் இவ்வளவு கோபத்தோடு என்னிடம் நிரூபித்திருக்க வேண்டாம். நீங்கள் கேட்கிற மனிதர் எதிரே தேரில் போவதை மட்டும் தான் வரும் போது நாங்களும் பார்த்தோம். அதைத் தவிர வேறு ஒன்றும் அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. உங்கள் வீரப்புதல்வியார் நினைப்பது போல் அவரை நாங்கள் எங்கள் மாளிகையிலேயே சிறைவைத்துக் கொண்டிருக்கவில்லை. வழியை விடுங்கள். தேர் போக வேண்டும்” என்று கடிவாளக் கயிற்றைப் பற்றி இழுத்தாள் சுரமஞ்சரி. குதிரைகள் பாய்வதற்குத் திமிறின.

முல்லையும் வளநாடுடையாரும் விலகி நின்று கொண்டார்கள். சுரமஞ்சரியின் தேர் புறவீதி மண்ணை வாரித் தூற்றிவிட்டு விரைந்தது. அந்தத் தேர் சென்ற திசையில் வெறுப்பை உமிழும் கண்களால் பார்த்தாள் முல்லை.

“மனம் இருந்தால் தாமே தேடி வருகிறார்! நாம் எதற்காக அலைய வேண்டும்? திரும்பிப் போகலாம் வாருங்கள்” என்று வெறுத்தாற் போல் கூறிக் கொண்டு தந்தையுடன் வீடு திரும்பினாள் முல்லை. அவள் மனத்தில் இளங்குமரன் மேலும், இறுமாப்பின் இருப்பிடமாகத் தெரிந்த அந்தப் பட்டினப்பாக்கத்து நங்கையின் மேலும் எல்லையற்ற ஆத்திரம் கிளர்ந்திருந்தது. இளங்குமரன் என்னும் அழகை நினைத்து இன்புறும் உரிமையில் தனக்கு ஒரு விரோதியும் இருக்கிறாள் என்பதை முல்லை இப்போது உணர்ந்து கொண்டாள். அந்தப் பேரழகை நினைத்து மகிழும் உரிமையை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்கவும் அவளால் முடியாது. செல்வத்தையும் அலங்கார அழகுகளையும் கொண்டு அவனை நினைத்தும், கண்டும், பழகியும் மகிழ்வதற்குச் சுரமஞ்சரி என்னும் வேறொரு பெண் இருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுரமஞ்சரி தேரில் நின்று கொண்டு பேசிய பேச்சும் அவளது கர்வம் மிகுந்த அழகும் முல்லையின் மனத்தில் அமைதி குலைந்து போகச் செய்திருந்தன. அமைதியிழந்த மனத்துடனே அவள் வீடு திரும்பிய போது வீட்டில் கதக்கண்ணன் வந்து காத்துக் கொண்டிருந்தான். முல்லையும் தந்தையையும் கண்டதும் அவன் ஆவலோடு கூறலானான்:

“முல்லை, இளங்குமரனை நீலநாகமறவர் சிறிது நேரத்துக்கு முன்புதான் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டுப் போயிருக்கிறாராம். நல்லவேளை! நேற்று மழையிலும், புயலிலும் காவிரியிலிருந்து மீண்டும் மறுபிறப்புப் பிறந்தாற் போல் அவன் பிழைத்து வந்திருக்கிறான். அதுவே பெரிய காரியம். படைக்கலச் சாலையில் போய் விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்த பின்பு தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.”

“எனக்கு நிம்மதி போய்விட்டது அண்ணா!” என்று அழுகை நெகிழும் குரலில் முல்லையிடமிருந்து பதில் வந்தது.

Previous articleRead Manipallavam Part 2 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 2 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here