Home Manipallavam Read Manipallavam Part 2 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

62
0
Read Manipallavam Part 2 Ch5 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 2,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 2 Ch5 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – ஞானப் பசி

அத்தியாயம் 5 : இவள் தான் விசாகை!

Read Manipallavam Part 2 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

திருநாங்கூர் அடிகளின் பூம்பொழிலில் அவரிடமிருந்து முதற் சுவடியை வாங்கிக் கொண்ட அந்தக் கணத்தில் இளங்குமரன் மனம், நாள் தவறாமல் ஊர்வம்புகளையும் அடிபிடி சண்டைகளையும் ஏற்றுக் கொண்டு முரட்டுப் பிள்ளையாகக் காவிரிப் பூம்பட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்த தன் பழைய நாட்களைச் சற்றே நினைவு கூர்ந்தது. அந்தப் பழைய நாட்களின் நிகழ்ச்சியில் ஒன்றைத் தனியே பிரித்து இப்போது தான் சுவடியைத் தாங்கிச் சுமந்து நிற்கும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அவன்.

அந்த நாளில் காவிரிப்பூம்பட்டினத்தின் அம்பலங்களிலும், பொது மன்றங்களிலும் இளைஞர்கள் தங்கள் பலத்தைப் பரீட்சை செய்வதற்காகத் தூக்கிப் பார்க்கும் ‘இளவட்டக்கல்’ என்னும் கனமான உருண்டைக் கற்கள் இருந்தன. இவற்றைத் தூக்க முடிகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்து இளைஞர்களின் தோள் வலிமையைக் கணக்கிட முடிந்தது.

பூம்புகாரின் புறநகரமாகிய மருவூர்ப்பாக்கத்தின் தெரு முனைகளிலும், நாளங்காடிச் சதுக்கத்திலும், மறக்குடி மக்கள் மிகுந்த புற வீதிகளிலும் இத்தகைய இளவட்டக் கற்கள் கிடக்கும். இவற்றைச் சுற்றி எப்போதும் இளைஞர்களின் கூட்டத்தைக் காணலாம். பொன் திணித்தாற் போன்ற அழகிய தோள்கள் புடைக்க, நெற்றியில் குறுவியர் முத்தரும்பக் கல்தூக்கும் காளையர்களின் எழிலைக் காண்பதற்காக அந்தந்த வீதிகளின் மேன் மாடங்களில் அங்கங்கே தாமரை பூத்துத் தயங்கினாற் போல் பெண்களின் மலர்ந்த முகங்கள் தோன்றும். தன் விடலைப் பருவத்தில் நகரத்திலுள்ளவற்றிலேயே மிகவும் பெரியவை என்று கருதப்பட்ட இளவட்டக் கற்களையெல்லாம் அலட்சியமாகத் தூக்கி அருகிலிருந்தவர் முகங்களில் வியப்பை மலரச் செய்திருக்கிறான் இளங்குமரன். தீரர்களின் செயல்களைக் கண்டு வியப்படைகிற பருவத்து இளைஞர்களிடையே அவன் வியப்புகளைச் செய்துகாட்டும் தீரனாக இருந்த காலம் அது!

‘வலிமை வாய்ந்த இந்தக் கைகளில் இப்போது இந்தச் சுவடி ஏன் அதிகமாக கனப்பது போல் ஒரு பாரத்தை உணர்த்துகிறது? மெல்லிய இந்தச் சுவடியைத் தாங்கிச் சுமக்கும் போது என் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? திடீரென்று நான் இளைத்துப் போய்விட்டேனா? என்னிடமிருந்து இந்த ஒரே ஒரு நாள் போதுக்குள் ஏதோ ஒரு வலிமை குறைந்திருக்கிறதே! அது எங்கே குறைந்தது? யார் முன்னிலையில் குறைந்தது? விதையிடுவதற்கு உழுது வைத்த நிலம் போல் என் மனம் எதை எதிர்பார்த்து இப்படி இறுக்கம் நெகிழ்ந்து குழைந்து போயிருக்கிறது?’ என்ற நினைவுகளுடன் கையில் சுவடியேந்தியபடி தயங்கி நின்றான் இளங்குமரன். சற்றே நிதானமாக எண்ணிப் பார்த்த போது தானும் தன் உணர்வுகளும் இளைத்த இடம் அவனுக்கு மீண்டும் நினைவு வந்தது.

“மறுபடியும் எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர்! மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே!” என்று உலக அறவியின் வாயிலில் அந்த பௌத்த சமயத் துறவி சிரித்துக் கொண்டே கூறினாரே; அவர் அப்படிக் கூறியதைக் கேட்டுத் தான் தலை குனிந்து நின்ற அந்தக் கணமே தன் வலிமையும் தானும் இளைத்துப் போய்விட்டது போன்று ஒரு பிரமையை இளங்குமரன் உணர்ந்திருந்தான். அவனுடைய தயக்கத்தை அடிகள் கவனித்தார்.

“எதை நினைத்துத் தயங்குகிறாய், இளங்குமரா? உன் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? இந்தச் சுவடி அவ்வளவு பெரிய சுமையல்லவே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் நாங்கூர் அடிகள்.

“அறிவின் உலகமாகிய இந்தச் சுவடிகளையெல்லாம் பார்க்கும் போது இவற்றின் அருகே நான் மிகவும் இளைத்துப் போய்த் தளர்ந்து விட்டாற் போல் எனக்குத் தோன்றுகிறது ஐயா!”

“உடம்பிற்கு அப்பாற்பட்டதாய், உடம்பைக் காட்டிலும் வலியதாய் உள்ள உணர்வுகளுக்கு அருகில் நிற்கிற போது உடம்பு சிறியதாய்த் தோன்றுவது இயல்புதான். அப்படிப்பட்ட சமயங்களில் மனத்தைப் பெரிதாக்கி மலரச் செய்துகொண்டு பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். கல்விக்குக் கரை இல்லை. கற்பவருக்கு நாளும் இல்லை. இருக்கிற நாட்களிலும் அவலக் கவலைகளுக்கும் நோய் நொடிகளுக்கும் கழிகிற நாட்கள் பல. சுருள் சுருளாகப் பிடரியில் படரும் கரிய முடியும், பட்டுக் கரையிட்ட ஆடைகளும், பொன்னுருக்கினாற் போன்ற மேனி நிறமும் உடம்புக்குத்தான் அழகு தரமுடியும். மனத்துக்கு அழகும், வலிமையும் தருவது கல்விதான். இதை இன்று தான் நீ அடையத் தொடங்குகிறாய். தளர்ச்சியையும், சோர்வையும் விலக்கிவிட்டு மலர்ந்த மனத்தோடு என் முன்பாக இப்படி உட்கார்ந்து கொள்.”

கைகளில் சுவடியை விரித்து வைத்துக் கொண்டு அடிகளுக்கு முன்னால் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தான் இளங்குமரன். கிரந்தசாலையைச் சுற்றியிருந்த பூம்பொழிலில் மலர்ந்திருந்த பூக்களின் மணமும், தூபப் புகையின் வாசனையும், காலைப் பொழுதின் தூய்மையும், கற்பதற்காக நெகிழ்ந்திருந்த மனமும், எதிரே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆசிரியன் தோற்றமும் இளங்குமரனுக்குப் புனிதமான எண்ணங்கள் பிறக்கும் சூழ்நிலையைத் தந்தன.

தமக்கே உரிய கோமளமான குரலில் பாடத்தைத் தொடங்கினார் அடிகள்: “ஒவ்வொரு மொழிக்கும் ஆதி வடிவம் ஒலி வடிவம் தான். கண்ணுக்குப் புலனாகாத பரம்பொருளைக் காட்டுவதற்காகக் கண்ணுக்குப் புலனாகிற தெய்வ விக்கிரகங்களைப் படைத்துக் கொண்டு வழிபடுவதுபோல் தோற்றமில்லாத ஒலிக்குத் தோற்றமளிக்க ஏற்பட்ட வரிவடிவங்களே எழுத்துக்கள். ஓசை வேறு; ஒலி வேறு. பண்படாமலும் வரையறை பெறாமலும் வழங்குவன வெல்லாம் ஓசை. பண்பட்டும் வரையறை பெற்றும் வழங்குவன எல்லாம் ஒலி, ஒலியிலிருந்து எழுத்துக்கள் பிறந்தன. எழுத்துக்களிலிருந்து மொழிக்கு உருவம் பிறந்தது. எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தன. சொற்கள் பொருள்களை அடைந்தன. பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரே பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி நிலத்திற் பதங்கள் விளைந்தன. ஒற்றைத் தனி மலர் போல் ஓரெழுத்தில் விளைந்த சொற்களும், தொடுத்து மலர்கள் போல் பல எழுத்துக்களிணைந்து விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது. சொல் செவிக்குப் புலனாகும் போது ஒலி வடிவில் இலங்குகிறது. கண்ணுக்குப் புலனாகும் போது எழுத்து வடிவில் இலங்குகிறது. பூ என்ற தோற்றமும், மணம் என்ற உணர்வும் தனித்தனி நிலைகளாயினும் இரண்டும் ஒன்றிலிருந்து எழுகிற உணர்வுகள் அல்லவா? அதுபோல் சொல்லும் பொருளும் வேறு வேறு உணர்வுகளாயினும் மலர் மணம் போல் சொற் பொருளுணர்ச்சி ஓரிடத்திலிருந்து எழுவதே…”

“சொற்பொருளுணர்ச்சி என்பது என்ன ஐயா?” என்று இளங்குமரன் ஆர்வத்தோடு அவரிடம் குறுக்கிட்டுக் கேட்டான்.

“இன்ன சொல்லால் இன்ன பொருள் தான் உணரப்படும் எனப் பழகிய வழக்குக்குச் சொற்பொருளுணர்வு என்று பெயர். பாம்பு என்ற சொல்லைக் கூறினால் உடனே பாம்பு என்னும் பொருளும், பாம்பு என்ற பொருளைப் பார்த்தால் உடனே பாம்பு என்ற சொல்லும் இடையீடு இன்றி ஒருங்கே நினைவு வருகிறதல்லவா? உலகத்து மொழிகளில் எல்லாம் உணர்த்தப்படும் பொருள்களிடையே வேறுபாடு இல்லை. உணர்த்தும் சொற்களில் தான் வேறுபாடு உண்டு. இனிமை என்கிற உணர்வு புல்லாங்குழல், யாழ் முதலிய எல்லா இசை வகைக்கும் பொதுவாவது போல் ‘பொருளுணர்த்துதல்’ என்பது எல்லா மொழிச் சொற்களுக்கும் பொதுவான குறிக்கோள். ஒன்றாகிய பரம்பொருளை ஒவ்வொரு சமயமும் வேறு மார்க்கங்களில் வந்து முடிவு காண முயல்வது போல் ஒரே பொருளை வேறுவேறு சொற்களால் உணர்த்துவது மொழிகளின் மதம். மொழியுணர்வை ஒட்டிச் சமயவுணர்வும் இறையுணர்வும் இணைந்து வளர்வது நமது தமிழ்நாட்டில் வழக்கமாயிருக்கிறது இளங்குமரா!”

“ஐயா! தமிழ் என்ற சொல்லால் நம்முடைய மொழியையும், நாட்டையும் இணைத்துப் பேசி வருகிறோம். இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்?”

“ஆகா! நீ இப்படியல்லவோ தொடர்ந்து தூண்டிக் கேட்க வேண்டும்! நீ கேட்கக் கேட்க எனக்கு உற்சாகம் வளருகிறது அப்பனே! தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். இந்தத் தெய்வத் திருமொழியின் ஒலி செவிக்கு இனியது. எழுத்து கண்ணுக்கினியது. சொற்கள் வழங்குவதற்கு இனியன. பன்னூறு ஆண்டுகளாகப் பண்பட்டு வளர்ந்த மொழியைப் பேசும் பாக்கியம் செய்தவர்களாயிருக்கிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தலைமுறைகள் செய்த தவத்தால் வளர்ந்து வளர்ந்து சொற்களெல்லாம் மந்திரமாய் ஆற்றல் பெற்ற மொழி இது” என்று பெருமிதத்தோடு பதில் கூறினார் அடிகள்.

இதைக் கேட்ட அந்த விநாடியில் தான் ஒரு தமிழ்மகன் என்பதனால் இளங்குமரனுக்கு மனத்தில் ஏற்பட்ட பெருமை ஒப்பற்றதாயிருந்தது.

எழுத்திலக்கணத்தைப் பற்றிய சிறந்த கருத்துக்கள் பலவற்றை நுணுக்கமாக இளங்குமரனுக்குக் கூறி விளக்கினார் அடிகள். அவற்றையெல்லாம் கேட்கக் கேட்கப் புதிய உலகம் ஒன்றைத் திறந்து காண்பித்தாற் போலிருந்தது இளங்குமரனுக்கு.

பாடம் முடிந்ததும் அடிகள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே இளக்குமரனிடம் இப்படிக் கூறினார்:

“கடவுள் மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயித்து அவர்களை உலகத்துக்கு அனுப்பினார்! அவர்கள் உலகத்தில் எத்தனையோ எழுத்துக்களையும் மொழிகளையும் நிர்ணயித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள். உலகத்தில் தலையெழுத்தைக் கணக்கிடுகிற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். தங்கள் தலையெழுத்தை மாற்றிக் கொள்ள வழி தெரியாவிட்டாலும் காலத்தின் தலையெழுத்தைப் புறங்காணும் காவியங்களையும், இலக்கிய இலக்கியங்களையும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எவ்வளவு விந்தையான உலகம் இது! தெய்வம் விதியை வகுத்து எழுதிப் படைத்தது. மனிதர்கள் எழுதிப் படைத்து விதி வகுத்திருக்கிறார்கள். ‘சொல்லையும் பொருளையும் போல் சக்தியும் சிவமுமாய் இணைந்திருக்கும் சொற்பொருட் காரணமான பெருமானைச் சொல்லும் பொருளுமாக இணைத்துப் பாவித்துச் சொற்பொருளால் வணங்குகிறேன்’ என்று பரம்பொருளை வணங்குகிற அளவுக்கு பெருமை படைத்திருக்கிறார்கள். மண்ணுலகத்துக்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள், தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் என்ற பெயரும் சூட்டியிருக்கிறார்கள். விதியின் எழுத்துக்கு வடிவம் தெரியவில்லை, பொருளும் தெரியவில்லை. மனிதர்கள் படைத்த எழுத்துக்கு வடிவும் பொருளும் வகையும் எல்லாம் இருக்கிறது அல்லவா?”

இளங்குமரன் ஆவல் மீதூரக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் இருவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த கிரந்தசாலையின் வாயிற் பக்கமிருந்து “தாத்தா! நான் உள்ளே வரலாமா?” என்று பெண் குரல் ஒன்று வினாவியது.

“யார்? விசாகையா? வா, அம்மா! இரண்டு மூன்று நாட்களாக உன்னை இந்தப் பக்கமே காணவில்லையே, எங்கே போயிருந்தாய்?” என்று அடிகள் அந்தக் குரலுக்குரியவளை வரவேற்றுக் கூறிக் கொண்டே வாயிற்பக்கம் திரும்பினார்.

தலையில் நிறுத்திய சங்குபோல் எடுத்துக் கட்டிய சடைமுடியும், எளிய தோற்றமும், அட்சய பாத்திரம் ஏந்திய கைகளுமாக மேக மண்டலத்திலிருந்து தூய்மையே வடிவாய் இறங்கிவரும் மின்னல்போல் உள்ளே நுழைந்தாள் துறவுக்கோலம் பூண்ட புத்த சமயப் பெண் ஒருத்தி. அழல்கொண்டு செய்தாற் போன்ற நிறமும், துறவிக் கோலத்துக்குரிய சீவர ஆடையும், நடந்து வருகிற போதே தன்னைச் சுற்றிலும் தூய்மை சூழச் செய்கிற தனித் தன்மையுமாக அந்தப் பெண்ணைக் கண்டதுமே இளங்குமரனின் மனம் வணங்கியது. பேதமை மாறாத இளம் வயது நிலவைக் கறை துடைத்தாற் போன்ற தூயமுகம். அதில் உணர்ச்சியலைகள் படியாது அமைதி திகழும் கண்கள். சிவந்த இதழ்களில் நிறைந்த சாந்தம். சாந்தத்திலிருந்து தனியே பிரிக்க முடியாததொரு புன்னகை. தோற்றம் நிறையப் பாதாதிகேச பரியந்தம் வார்த்தைகளார் சொல்ல முடியாதொரு பேரமைதியோடு அந்தத் துறவி நின்றாள். அவளுடைய வெண்கமலப் பூங்கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய கோலமும் நின்ற நிலையும் மின்னலிற் செய்து நிறுத்திய சிற்பமோ எனக் காண்பார் கண்களைத் தயங்கச் செய்தன. பெரியதாய், அழகாய், அளவாய்த் தொடுத்துத் தொங்கவிட்டிருந்த முல்லை மாலை சரிந்து நழுவுவது போல் தரையில் மெல்ல அமர்ந்தாள் விசாகை.

“இளங்குமரா! இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உன்னைப் போலவே என்னிடம் கற்றவள். இவள் இந்தக் கோலம் பூண நேர்ந்தது ஒரு விந்தையான வரலாறு. தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது; மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான் என்று சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியது உனக்கு நினைவிருக்கிறதல்லவா? விதி வகுத்த வாழ்வை மீறித் தான் வகுத்த வாழ்வுக்கு விதி அமைத்துக் கொண்ட பெண் இவள். இத்துணை இளம் வயதில் இவள் மனத்துக்குக் கிடைத்திருக்கிற வைராக்கிய முதிர்ச்சி அற்புதமானது; பிறர் வியக்கத் தக்கது” என்று நாங்கூர் அடிகள் இளங்குமரனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

“விந்தை! விந்தை! என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்கிற அளவுக்கு என் வாழ்வில் அப்படி என்ன இருக்கிறது, தாத்தா? துர்பாக்கியங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த பழங் கதையை மறுபடியும் நினைவூட்டுவதில் உங்களுக்கு என்ன தான் இன்பமோ?” என்று சொல்லிச் சிரித்தாள் விசாகை. அந்தச் சிரிப்பில் பாவ நினைவுகளை அழிக்கும் தெய்வீகத் தூய்மை தெரிந்தது. துன்பம், பயம், சோர்வு, சிறுமை எல்லாமே அந்தச் சிரிப்பில் எரிந்து பொசுங்கின.

“ஓகோ! நீ விரும்பவில்லையானால் உன்னைப் பற்றிச் சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன் விசாகை! உன்னுடைய கதை இந்தப் பிள்ளைக்கு அவசியம் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் சொல்ல நினைத்தேன்…” என்று தயங்கினாற் போலக் கூறி நிறுத்தினார் அடிகள்.

“நன்றாகச் சொல்லுங்கள், தாத்தா! எனக்கு மறுப்பேயில்லை. ஆனால் கதைக்கு உரியவளாய்க் கதைக்கு ஆளாகிக் கதையாகி விட்ட எனக்கு என்னவோ அதில் அப்படிப் பெருமைப்பட ஒன்றுமில்லை என்பது போல் தோன்றுகிறது.”

“கதாபாத்திரங்களே தங்கள் கதையை நினைத்துப் பெருமைப்பட்டால் கதை சொல்கிறவன் கதி என்ன ஆவது? நீ பேசாமல் கேட்டுக் கொண்டிரு விசாகை! இந்தப் பிள்ளை உன் கதையைக் கேட்டதும் எவ்வளவு பெருமைப்படுகிறான் என்பதைப் பார்க்கலாமே!” எனச் சிரித்துக் கொண்டே கூறியபடி இளங்குமரன் முகத்தைப் பார்த்தார் அடிகள். அந்த முகத்தில் நிறையத் தெரிந்து கொள்ளும் ஆவல் நிறைந்திருந்தது.

Previous articleRead Manipallavam Part 2 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 2 Ch6 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here