Home Manipallavam Read Manipallavam Part 3 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

56
0
Read Manipallavam Part 3 Ch17 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 3,nithiliavalli Part 3,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 3 Ch17|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றிக்கொடி

அத்தியாயம் 17 : நிலவில் பிறந்த நினைவுகள்

Read Manipallavam Part 3 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

பூக்கூடையைச் சுமந்து சென்ற யவனப் பணியாளன் திரும்பி வந்து கூறிய செய்திகளைக் கேட்டுப் பதற்றமடைந்தவராய் நகைவேழம்பரோடு தேரில் நாளங்காடிக்கு விரைந்து கொண்டிருந்தார் பெருநிதிச் செல்வர். அப்படி வேகமாகத் தேரில் போய்க் கொண்டிருக்கும்போது அவருடைய உடம்பு மட்டுமின்றி நினைவுகளும் மனமும் கூடப் பதறின, நடுங்கின. திரும்பி வந்த யவனப் பணியாளன் கூறிய செய்திகளிலிருந்து சுரமஞ்சரி தன்மேல் கடுஞ் சிற்றம் கொண்டிருக்க வேண்டும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவருக்குப் புரிந்தது. நகைவேழம்பர் கூறியதுபோல் இந்தச் சூழ்ச்சியால் தாங்கள் நினைத்த பயன் விளையாவிட்டாலும் சுரமஞ்சரியைப் பற்றி இளங்குமரன் மிகக் கேவலமாக எண்ணும்படியான சூழ்நிலை உருவாயிருக்கும்.

இவர்களுடைய பழக்கமும், உறவும் சிதைவதற்கு இந்த நிகழ்ச்சியே போதும். ஆனால் இதன் காரணமாக என் மகள் சுரமஞ்சரிக்கு என் மேலும் நகைவேழம்பர் மேலும் பெருங்கோபம் மூண்டிருக்கும். ஏற்கெனவே அவளுக்கு எங்கள் மேல் இருந்த சந்தேகம் இன்று பெருகி வளர்ந்திருக்கும். அந்த ஆத்திரத்தினால் பெருங் கூட்டம் கூடியிருக்கிற நாளங்காடி நாற்சந்தியில் என் கெளரவமும் பெருமையும், பாழ்பட்டுப் போகும்படி எதையாவது சொல்லிவிட்ப் போகிறாளே என்று எண்ணித் தேர்ச் சக்கரங்களைவிட வேகமாக உருண்டு கொண்டிருக்கும் பதறிய நினைவுகளோடு போய்க் கொண்டிருந்தார் அவர். இந்தச் சந்தேகங்களையும் பதற்றங்களையும் தேரில் உடன் வந்து கொண்டிருந்த நகைவேழம்பரிடம் மனம் விட்டுப் பேசலாம் என்றால் சற்றுமுன் அவருக்கு ஏற்றபட்டிருந்த பிணக்கினால் அவர் பேசுவதற்கே விருப்பமில்லாதவர் போல வேறு புறம் பார்த்துக் கொண்டிருந்தார். பல்லக்கின் பின்புறச் சட்டத்தில் பணிவாக முழந்தாளிட்டு உட்கார்ந்து கொண்டிருந்த யவன ஊழியனிடம் பேசலாமென்று மனம் தவித்தாலும் இதையெல்லாம் அவனைப் போன்ற ஊழியனிடம் பேசுவது கெளரவக் குறைவு என்ற எண்ணம் குறுக்கிட்டுத் தடுத்தது. எல்லா ஆத்திரத்தையும் சேர்த்துத் தேரோட்டியிடம் காண்பித்தார் அவர். “இதென்ன ? ஆமை ஊர்வதுபோல் தேரைச் செலுத்துகிறாயே, குதிரைகளை விரட்டு, என் பொறுமையைச் சோதிக்காதே.” தேரோட்டி சாட்டையைச் சொடுக்கினான். குதிரைகள் தாவிப் பாய்ந்தன. நாளங்காடி நெருங்க நெருங்கப் பயத்தினால் அவர் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. அவர்களுடைய தேர் நாளங்காடியை அடைந்து குறிப்பிட்ட இடத்தினை அணுகி நின்றபோது ஆத்திரத்தின் பிரதிபிம்பமாகப் பெண்மையின் ஊழிக் காலம் போல சுரமஞ்சரி அங்கிருந்த கோலத்தை அவரே தம் கண்களால் கண்டு அஞ்சினார். அப்போது அவளுக்கு முன்னால் கீழே இறங்கிப்போய் நிற்க வேண்டுமென்று நினைப்பதற்கே பயமாக இருந்தது அவருக்கு. தலைவிரி கோலமாக நகைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டுத் திமிறிக்கொண்டு ஓட முயலும் சுரமஞ்சரியை வானவல்லியும், வசந்தமாலையும் பக்கத்துக்குப் பக்கம் கைகளைப் பற்றித் தடுத்துக் கொண்டு நின்றார்கள். பல்லக்கிலும் தரையிலுமாக அவள் கழற்றிச் சிதறிய அணிகலன்கள் கிடந்தன. வெறி கொண்டவள் போல எதையோ சொல்லிக் கூக் குரலிட்டுக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி.

“இது நரகத்துக்குப் போகும் வாகனம். நான் இதில் ஏறிவரமாட்டேன்” என்று பல்லக்கைச் சுட்டிக் காட்டித் திரும்பத் திரும்பக் கத்தினாள் அவள். நிலைமையின் பயங்கரம் அவருக்குப் புரிந்தது. தானோ, நகைவேழம்பரோ அப்போது அவளுக்கு முன்னால் போய் நிற்பதால் நல்ல விளைவு எதுவும் ஏற்படாதென்று உறுதியாகத் தோன்றியது அவருக்கு. கெளரவத்தைக் காப் பாற்றிக் கொள்வதற்காக அவளைச் சமாதானப்படுத்தப் போய் அதனாலேயே அந்தக் கெளரவம் நாற்சந்தியில் சிதறும்படி ஆகிவிடக் கூடாதே – என்று மனத்தில் முன்னெச்சரிக்கை ஒன்றும் எழுந்தது.

“பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தாதே! தேரைச் சற்று ஒதுக்குப்புறமாகவே விலக்கி நிறுத்து” என்று தேரோட்டிக்கு உத்தரவிட்டார் அவர். தேர் ஒதுக்கி நிறுத்தப்பட்டது.

மீண்டும் தேரோட்டிக்குக் கட்டளையிட்டார் அவர். “நீ போய் வானவல்லியை மட்டும் இங்கே அழைத்து வா… நான் வந்திருப்பதை எல்லாரும் கேட்கும்படி சொல்லாமல் வானவல்லிக்கு மட்டும் குறிப்பினாற் புலப்படுத்திவிட்டு அவளைக் கூப்பிடு.”

தேரோட்டி அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்குச் சென்றான். மெளனம் கலக்கத்தைத் தவிர்க்கும் – என்பதற்கு மாறாக ஏதோ ஒரு கலக்கத்தைப் பிறப்பிப்பதற்குக் காரணமாகப் போகிற அசாதாரண மெளனத்தோடு தேரில் இருந்தார் நகைவேழம்பர், பட்டினப்பாக்கத்திலிருந்து புறப்பட்டது தொடங்கி அவருடைய இந்த மெளனத்தைக் கவனித்தவராய் இது என்ன விளைவுக்கு அடிகோலுமோ என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே வந்தார் பெருநிதிச் செல்வர். இப்போது, தேரோட்டியை அனுப்பிவிட்டுக் காத்திருந்த இந்தச் சில விநாடிகளிலும் நகைவேழம்பரிடம் இதே மெளனத்தையே கவனித்து அவர் உணர்ந்தார்.

இதற்குள் தேரோட்டி வானவல்லியையும் அழைத்துக் கொண்டு வந்து எதிரே நிற்கவே அவருடைய கவனம் முழுவதும் செய்ய வேண்டிய காரியத்தின் அவசரத்தில் திரும்பியது. வானவல்லியே தன்னை வெறுப்போடு பார்ப்பதைக் கண்டு அவளிடம் என்ன சொல்வதென்று தயங்கினார் அவர். நடந்த நிகழ்ச்சிகள் அவள் மனத்தை எவ்வளவு தூரம் பாதித்திருந்தால் செல்வத் தந்தையாகிய தன்னையும் இப்படி வெறுப்போடு பார்க்கும் துணிவை அவளுக்கு அளித்திருக்க வேண்டும் என எண்ணிப் பார்த்துக் கொண்டு பின்பு பேசினார்: “வானவல்லி! உன் முகத்தைப் பார்த்தால் சுரமஞ்சரியைவிட நீதான் அதிகமாகக் கோபம் அடைந்திருக்கிறாற் போல் தோன்றுகிறது. நடந்ததை யெல்லாம் உங்களோடு பூக்கூடை சுமந்து வந்த பணியாளன் எனக்குச் சொன்னான். என்னிடம் ஒரு தவறும் இல்லை. நமக்குப் பூக்களைக் கொண்டு வந்து கொடுத்தவர்கள் தாம் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். உலகத்தில் யாரையும் நம்ப முடியவில்லை அம்மா. யாருக்கு, எங்கே, எதன் மூலம் எதிரிகள் இருக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடிவதில்லை. சுரமஞ்சரியைக் காட்டிலும் உன் தந்தையிடம் உனக்கு அநுதாபம் அதிகமென்று நான் நம்பிக் கொண்டிருப்பதைப் பொய்யாக்கிவிடாதே, மகளே! எப்படியாவது நீயும், வசந்தமாலையுமாக முயன்று சுரமஞ்சரியைப் பல்லக்கில் ஏற்றி உட்காரச் செய்து மாளிகைக்கு அழைத்து வந்துவிடுங்கள். நம்முடைய குடும்பத்தின் பெருமையும், பீடும், இப்படி இந்த நாளங்காடி நாற்சந்தியில் சிதற வேண்டாம் என் அருமைப் பெண்ணே! உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இன்று இந்த விநாடியில் நீ என்னுடைய மானத்தைக் காப்பாற்றி உதவி செய்” – பெருநிதிச் செல்வர் தம் மகள் வானவல்லியிடம் இவ்வாறு கூறி வேண்டிக் கொள்ளும்போது தேரோட்டியும், பணியாளனும் குறிப்பறிந்து விலகி நின்று கொண்டிருந்ததனால் நகைவேழம்பர் மட்டுமே மூன்றாம் மனிதராக இருந்து இவற்றைக் கேட்க நேர்ந்தது.

அன்று நடந்த நிகழ்ச்சியிலிருந்து தந்தையார் மேல் எவ்வளவோ சந்தேகங்களும், பயமும் ஏற்பட்டிருந்தாலும் அவர் இப்போது வேண்டிக்கொண்ட விதம் வானவல்லியின் மனத்தை குழையச் செய்துவிட்டது. வந்த போது இருந்த ஆத்திர வேகம் தணிந்தவளாய் அவள் அவரைக் கேட்டாள்:

“இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள், அப்பா?”

“செய்வதற்கு முடியாத எதையும் செய்யச் சொல்லவில்லை அம்மா. செய்ய முடிந்ததைத்தான் சொல்கிறேன். நீயும் வசந்தமாலையுமாகச் சேர்ந்து சுரமஞ்சரியை வலுவில் பிடித்துத் தூக்கியாவது பல்லக்கில் உட்கார்த்தி மாளிகைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும், வீட்டுக்கு வந்து அவள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஏசட்டும். நான் பொறுத்துக் கொள்வேன். குடிப்பெருமையை நடுத்தெருவில் விலை பேச விடக்கூடாது மகளே! உனக்குத் தெரியாததில்லை!” என்று குழைந்து பணிந்து வேண்டினார் பெருநிதிச் செல்வர்.

அவருடைய வேண்டுகோள் தன் மனத்தில் உறைத்துத் தான் அதை ஏற்றுக் கொண்டு இணங்கிச் செயல்படுத்தப் புறப்படுவது போல் திரும்பிச் சென்றாள் வானவல்லி. தம்முடைய தந்திரப் பேச்சுக்கு வெற்றி கிடைத்து விட்டது என்ற நம்பிக்கை பெருநிதிச் செல்வருக்கு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வசந்தமாலையும், வானவல்லியும் சுரமஞ்சரியைத் திமிர விடாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டு போய்ப் பல்லக்கில் ஏற்றும் காட்சியைத் தம் கண்களால் தாமே கண்ட பின்புதான் அவருக்கு முழு நம்பிக்கையும் வந்தது. சுரமஞ்சரி பல்லக்கிலிருந்து குதித்து விடாமல் மற்றப் பெண்கள் இருவரும் அவளைப் பிடித்துக் கொண்டதையும், கழற்றி எறியப்பட்டுக் கிடந்த அணிகலன்களை எல்லாம் பல்லக்குத்துக்கிகள் எடுத்துப் பல்லக்கினுள்ளேயிருந்த வானவல்லியிடம் பத்திரமாக அளித்ததையும் அதன்பின் பல்லக்கு அங்கிருந்து புறப்பட்டதையும் பார்த்துவிட்டுத்தான் பெருநிதிச் செல்வர் நிம்மதியடைந்தார். இவ்வளவும் நிகழ்வதை நகைவேழம்பரும் கண்டு கொண்டிருந்தாலும் அவர் மெளனமாகவே இருந்தார்.

பல்லக்கை முன்னால் சிறிது தொலைவு போக விட்ட பின் தேரைப் பின்னால் செலுத்திக் கொண்டு போகுமாறு தேரோட்டிக்கு உத்தரவிட்டார் பெருநிதிச் செல்வர். மாளிகையை அடையும்போது பிற்பகல் நேரமும் முடிந்திருந்தது. பல்லக்கைப் பின்தொடர்ந்து தேர் மாளிகைக்குப் போனதும் சுரமஞ்சரியையும், அவள் தோழியையும் மட்டும் தந்திரமாகத் தனியே அழைத்துப்போய் அவர்கள் வழக்கமாய்த் தங்கும் மாடத்துக்குள்ளேயே முன்போலச் சிறை வைத்தார் பெருநிதிச் செல்வர். தம்மை நேரில் அவள் காணும்படி விடாமலே இதைச் செய்தார் அவர். முன்பு இப்படி அவர் சிறை வைத்தபோது அவளும் அவள் தோழியும் குமுறியதுபோல் இப்போது குமுறவில்லை. சோர்ந்து துவண்டு அழுதபடியே தரையில் சாய்ந்து கிடந்தாள் சுரமஞ்சரி. வசந்தமாலைக்கு அந்த நிலையில் தன் தலைவியோடு பேசவே பயமாயிருந்தது. நேரம் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டேயிருந்தது.

மாலை முற்றி இருட்டியது. அந்த மாடமும் தீபமின்றி இருண்டிருந்தது. இருட்டே மெல்ல யாருக்காகவோ அழுவது போல் அந்த மாடத்தில் இருந்து விசும்பலும் அழுகையும் கேட்டுக் கொண்டே இருந்தன. பேச்சு மட்டும் இல்லை.

இன்னும் நேரமான பின் இரண்டாம் நாள் நிலா வானில் அந்த மாடத்துக்கு நேரே வந்து மிதந்தது. ஒரு கணம் தானே அந்த நிலாவாக மாறிக் கீழே மண்ணில் எங்கோ இருக்கும் இளங்குமரனின் முகத்தைத் தேடுவ தாகக் கற்பனை செய்துகொண்டாள் சுரமஞ்சரி. அந்தக் கற்பனையாலும் அழுகை நிற்கவில்லை. பல நாழிகை மெளனத்துக்குப்பின் அந்த மாடத்தில் வசந்தமாலையும் தன்னோடு சிறைப்பட்டிருப்பதை அப்போதுதான் நினைத்துக் கொண்டவள்போல் அவள் இருளில் எங்கோ இருப்பதாகப் பாவித்துக் கொண்டு கதி கலங்கச் செய்யும் ஒரு கேள்வியை அவளிடம் கேட்டாள் சுரமஞ்சரி. அந்தக் கேள்வியைச் செவியுற்ற வசந்தமாலைக்கும் பாதாதிகேச பரியந்தம் மயிர்க் கூச்செறிந்து நடுங்கியது.

தன் தலைவி, அந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்பதற்குக் காரணமாக அவள் மனத்தில் பெருகி முதிர்ந்திருந்த உணர்வு துணிவா, விரக்தியா, பயமா, சோகமா என்று புரிந்து கொள்ளவே இயலாமல் மயங்கினாள் வசந்தமாலை. தலைவியிடமிருந்து எந்த உணர்வை மூலமாகக் கொண்டு அந்தக் கேள்வி பிறந்திருந்தாலும் தோழிக்குப் பயம் ஒன்றே முடிவாக அதிலிருந்து ஏற்பட்டது.

Previous articleRead Manipallavam Part 3 Ch16 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 3 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here