Home Manipallavam Read Manipallavam Part 3 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

67
0
Read Manipallavam Part 3 Ch18 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 3,nithiliavalli Part 3,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 3 Ch18|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றிக்கொடி

அத்தியாயம் 18 : சொல் இல்லாத உணர்வுகள்

Read Manipallavam Part 3 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

அகன்ற வீதியில் சோழர் கோநகரத் தின் இராக் காவலர்கள் அளவாக அடிபெயர்த்து நடக்கும் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் இருளும் மௌனமுமே தங்களுக்குள் பரம இரகசியமாகக் கலந்து பேசிக் கொண்டு ஏதோ சதி செய்வது போலப் பயங்கர அமைதி நிலவியது. சுரமஞ்சரி தன் மாடத்தில் தன்னோடு இருளில் சிறை வைக்கப் பட்டிருந்த வசந்தமாலையைக் கேட்டாள்.

“வசந்தமாலை! வாழ்வதில் எதுவும் சுகமாகத் தெரியவில்லையானால், சாவதில் அந்தச் சுகம் இருக்கலாமோ என்று எண்ணிச் சாகத் தவிக்கும் துடிப்பு உனக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதோ…?”

வசந்தமாலை திடுக்கிட்டாள். அப்பால் என்ன இருக்கிறதென்று புரிந்து கொள்ள முடியாது சுற்றிலும் மூடியிருந்த இருளைப் போலவே இந்தக் கேள்வியும் இருந்தது. இந்தக் கேள்வியில் நிரம்பியிருக்கும் வார்த்தைகளுக்கு என்ன பொருள், ஒரு பொருளும் அமையாமல் வார்த்தைகள் இருக்க முடியாது. சில சமயம் வார்த்தைகளிலே தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குக் கனமான பொருள் இருப்பதும் உண்டு. அப்படி ஏதோ ஒரு கனமான துயரம் தன் தலைவியின் சொற்களில் இருப்பதை மெல்ல மெல்ல உணர்ந்தாள் வசந்தமாலை. அழுகை ஒலியை அடையாளமாகக் கொண்டு இருளில் தலைவி இருந்த இடத்தை அநுமானம் செய்தவாறு வசந்தமாலை நெருங்கி வந்தாள். அருகில் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு மெல்லக் கேட்டாள்.

“சாவதைப் பற்றிய நினைவு. உங்களுக்கு இப்போது எதற்காக அம்மா வந்தது?”

“நைந்துபோன மனத்துக்கு எதை நினைப்பது, எதை நினையாமலிருப்பது என்ற எல்லைகளே இல்லையடி தோழி! ஒவ்வொரு விநாடியும் அணுஅணுவாகச் செத்துப்போய்க் கொண்டிருப்பதை விட ஒரேயடியாகச் சாவது சுகம்தானே? பூக்குடலையிலிருந்து புறப்பட்ட அந்தப் பாம்பு என்னைத் தீண்டியிருக்கக் கூடாதோ?” என்றாள் சுரமஞ்சரி.

வசந்தமாலை இப்போதும் தன் தலைவியிடம் பேசுவதற்குத் தகுதியான சொற்கள் தனக்குக் கிடைக்காமல் தவித்தாள். அவளுடைய அநுபவத்தில் பலமுறை இப்படிச் சொற்கள் கிடைக்காமல் தவிக்க நேர்ந்திருக்கிறது. எதிர்பாராத உணர்ச்சிகளை ஏற்று மறுமொழி கூறுவதற்குச் சொற்கள் துணை செய்யாமற் போய் நீந்தத் தெரியாதவள் வெள்ளத்தினிடையே குதித்தது போல் மயங்கினாள் அவள். ‘துக்கம், பயம், தவிப்பு, காதல், வேட்கை போன்ற சில உணர்ச்சிகளை முழுமையாகப் பேசுவதற்கு ஏற்ற முழுமையான மொழி ஒன்று உலகத்தில் இன்னும் ஏற்படவில்லை போலிருக்கிறது, தோழி!’ என்று தன் தலைவி எப்போதோ தன்னிடம் சொல்லியிருந்த வாக்கியத்தை நினைத்துக் கொண்டாள் வசந்தமாலை. அவளுடைய மெளனத்தைக் கலைத்துக் கொண்டு மீண்டும் சுரமஞ்சரியின் கேள்வி எழுந்தது.

“என்னடி வசந்தமாலை? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய்?”

“என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, அம்மா. உங்களுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்வதற்கு என்னிடம் சொற்கள் இல்லை. அதற்குத் தகுந்த சொற்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ‘உணர்ச்சிகளைப் பரிபூரணமாக பேசுவதற்கென்று முழுமையான மொழி, எதுவும் உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை!’ என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே! அதைத்தான் இப்போது நான் உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.”

“சில வெண்கல மணிகளுக்கு நடுவிலுள்ள நாவு அறுந்து போகும். அப்படி நாவறுந்த பின்பு அவற்றில் இருந்து நாதம் பிறவாது. உற்சாகம் அற்றுப்போன என் மனமும் இப்போது அப்படித்தான் நாக்கிழந்த மணியைப் போல இருக்கிறது. என்னுடைய வேட்கை சிறிது சிறிதாக வளர்ந்து தணியாத் தாகமாகியும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் ஏமாந்து நிற்கிற காரணத்தால் என் வேட்கை தீரவேண்டும் அல்லது நானே தீர்ந்து விட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தாயிற்றடி வசந்தமாலை?”

“தன்னையே அழித்துக் கொள்ளத் துணியும் அளவுக்கு அப்படி ஒரு வேட்கையும் உண்டா அம்மா!”

“உனக்குத் தெரியாதடி வசந்தமாலை! வேட்கை என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘எதை அநுபவிக்கத் தவிக்கிறோமோ அதை அடைந்தாலன்றித் தீராத உணர்வு’ என்று பொருள் விரியும். இரண்டு மனங்களுக்கு நடுவில் ஒன்றை மற்றொன்று தழுவ நெருங்கும் வேட்கைக்கு ‘ஒருவர் ஒருவரை இன்றி அமையாமை’ என்று அகப் பொருள் நூல்களில் பதசாரம் சொல்லியிருக்கிறார்கள், தோழீ.”

“எந்தப் பதத்துக்கு எந்த நூலில் எப்படிப் பொருள் சொல்லியிருந்தால் என்ன அம்மா? மனத்தில் முதிர்ந்து முற்றி முறுகியவைகளாகக் கன்றிப்போன உணர்ச்சி களின் ஆழத்தை அளப்பதற்கு ஒரு மொழியிலும் சரியான பதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீங்கள் பலமுறை சொல்லியதுதான் நிலைத்த உண்மையாக நிற்கும்போல் இருக்கிறது.”

“வசந்தமாலை! இந்த வேட்கை முள் மனத்தில் தைத்த நாளிலிருந்து நான்தான் எல்லா வேதனைகளையும் பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்குக் காரணமானவர் என்னவோ இந்த வினாடிவரை ஒரே விதமாகத் தான் இருக்கிறார். எதற்கும் அடிமைப்படாத இரும்பு மனிதர்களைக்கூட அன்புக்கு அடிமைப்படுத்தலாம் என்று அறநூல் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், என்னுடைய மனத்தில் வேட்கையைப் பிறப்பித்தவராகவும், வேட்கையாகவும், வேட்கையைத் தீர்க்கும் மருந்தாகவும் – எல்லாமுமாகவும் அமைந்திருக்கிற சுந்தர இளைஞரோ, அன்பைக்கூடப் பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ளத் தயங்கும் அளவுக்குத் தன்மானம் உள்ளவராக இருக்கிறாரே! இன்றைக்கு நாளங்காடியில் நடந்த நிகழ்ச்சி அவருடைய தன்மானத்தில் கோபத்தையும் கலந்திருக்கும் – என் தந்தையாரின் சதிக்கு உடந்தையாக இருந்துகொண்டு நானே அவரைச் சூழ்ச்சியால் கொல்ல விரும்புகிறேன் என்றுகூட அவர் நினைத் திருக்கலாம்…”

“நிச்சயமாக அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார் அம்மா! உங்கள் மனம் அளவற்றுக் கலங்கிப் போயிருக்கிற காரணத்தால் நீங்களாகவே அவருடைய குணத்தை மாற்றி மாற்றி நினைத்துக்கொண்டு வீணாக வருந்துகிறீர்கள். கோபதாபங்களுக்கு ஆட்படுகிற சிறிய மனிதராக அவர் இப்போது தோன்றவில்லை. அப்படி ஆட்படுகிறவராயிருந்தால் நாளங்காடிக் கூட்டத்தில் உங்கள் மேல் எறியப்பட்ட கற்களைத் தம் உடம்பில் தாமே தாங்கிக் கொண்டிருக்க மாட்டார் அவர். வேகமாக மலையுச்சிக்கு ஏறிச்சென்றவன் அதற்கு அப்பால் பயங்கரமான பள்ளத்தாக்கைத் தவிர வேறொன்றுமில்லை என்று அறிந்துகொண்டு மறுபடியும் சமநிலைக்கே திரும்பி வந்தாற் போல் உடல் வலிமையால் ஒரு காலத்தில் அகங்கார ஆடம்பர ஆணவங்களின் உச்சிக்குப் போய்விட்டு எளிமைக்குத் திரும்பிய அநுபவ ஞானியாகத்தான் இப்போது தோன்றுகிறாரம்மா அவர்! உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு இந்தக் கெடுதல் செய்தவர்கள் ஒருநாளும் நன்றாகயிருக்கமாட்டார்கள். அந்த நச்சுப்பாம்பு நாளங்காடியில் ஒருவரையும் தீண்டவில்லையானாலும் உங்கள் மனதில் அவருக்காக அவரையே பொருளாகக் கொண்டு பிறந்திருக்கும் வேட்கையைத் தீண்டி அதில் இழைந்திருக்கும் உறவினுள் நஞ்சைக் கலந்ததைப் போல ஆக்கிவிட்டது.”

“வசந்தமாலை! அந்த உறவு பிறந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை அவரிடம் ஒரே தன்மையுடைய தாய் மாறாமலே இருக்கும் குணம் ஒன்றை நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன். என்னிட மிருந்து எதையும் ஏற்றுக் கொள்ளாமை என்ற குணம் தான் அது. அவர் யவனமல்லனை வெற்றிகொண்டு தோளில் முல்லை மாலை அசைய என் பல்லக்கெதிரே நின்றுகொண்டே நான் பரிசளித்த மணிமாலையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். பின்னொரு நாள் வெள்ளியை யுருக்கி வார்த்து நீட்டினாற் போன்ற வெண்தாழை மட லில் செம்பஞ்சுக் குழம்பையும் என் உள்ளத்து உணர்வின் நளினங்களையும் குழைத்துக் குழைத்து எழுத்துக்களாய்த் தீட்டி நான் எழுதிய மடலையும், மடலின் விருப்பத்தையும் சேர்த்தே ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

“அதன்பின் புயலும் மழையுமாயிருந்த பயங்கர இரவு ஒன்றில் கப்பல் கரப்புத் தீவின் நடுவே என்னுடைய மனத்தின் மெல்லிய உணர்வுகளையே காணிக்கைகளாக ஏந்திக்கொண்டு நான் மலர்ந்து மணம் பரப்பி நின்ற போது ஏற்றுக்கொள்ள மறுத்தார். இப்படித் தொடர்ந்து மறுத்து கொண்டே இருப்பதற்கு எவ்வளவு நெஞ்சு உரம் வேண்டும் என்று நினைத்துப் பார்க்கும் போது அவருடைய அந்த மனவலிமைக்கு முன்னால் நானும் என்னுடைய வேட்கையும் அணுவாகத் தேய்ந்து சிறுத்துப் போய்விட்டதுபோல் தோன்றுகிறதடீ. ‘மனத்தை இடைவிடாமல் அரித்தெடுக்கின்ற காரணத்தினால் ஆசைதான் பெருநோய்’ என்று எனக்கு முன்பே நிமிர்ந்து நின்றுகொண்டு துணிவோடு சொல்கிற ஞான வீரரிடம் போய் என்னுடைய ஆசையை நான் சொல்வதற்கான வார்த்தைகள் எந்த மொழியிலாவது இருக்க முடியுமா என்பதுதான் இப்போது என் பயமாயிருக்கிறதடீ வசந்தமாலை!”

சுரமஞ்சரி ஒவ்வொரு சொல்லிலும் அழுகை தேங்கி நிற்க – ஒவ்வொரு சொல்லுமே தனித்தனியாகவும் வாக்கியமாகவும் பிரிந்தும் சேர்ந்தும் அழுவது போலவே பேசினாள். பக்கத்தில் இருளோடு இருளாக மண்டியிட்டு அமர்ந்திருந்த வசந்தமாலையிடமிருந்து தன்னுடைய இந்தப் பேச்சுக்குப் பதில் இல்லாமற் போகவே சுரமஞ்சரி பேச்சை நிறுத்தினாள்.

“என்னடி வசந்தமாலை! நான் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறாயோ, இல்லையோ?”

“…”

இந்தக் கேள்விக்கும் வசந்தமாலையிடமிருந்து பதில் இல்லாமற் போகவே சுரமஞ்சரி தன் முகத்தை வசந்தமாலையின் முகத்தருகே கொண்டு போய் மூச்சுக் காற்றோடு மூச்சுக் காற்றுக் கலக்க முடிந்த அண்மையில் தோழி அப்போது அந்த மாடத்தின் இருளில் எதை அப்படி உற்றுக் கவனிக்கிறாள் என்று துழாவினாள். தலைவியாகிய தன் பேச்சையும் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்துவிட்டு உற்றுக் கவனிக்கும் அளவுக்கு அப்படி முக்கியமாக வசந்தமாலையின் பார்வைக்கு என்ன கிடைத்திருக்க முடியும் என்ற சந்தேகத்தோடு தோழியின் பார்வை சென்ற திக்கிலேயே தன் பார்வையையும் பின்தொடரவிட்டாள் சுரமஞ்சரி. அப்படிச் சென்ற பார்வை தனக்கு இலக்காக வாய்ந்த இடத்தில் போய் நின்றதும் அங்கே தென்பட்ட காட்சியிலிருந்து பயமும் நடுக்கமும் பிறந்தன. வசந்தமாலைக்கு வாய் அடைத்துப்போன காரணம் இப்போது சுரமஞ்சரிக்கும் புரிந்தது. சுரமஞ்சரியும் வாய் அடைத்துப் போனாள். பேசும் முயற்சிக்காக நாக்குப் புரள மறுத்தது. கண்கள் நிலைகுத்தி இமைக்கவும் மறுத்தன.

பார்வை சென்ற திக்கிலே இருளின் நடுவில் அந்தரத்தில் தொங்கும் நெருப்புப் பொறிகளைப் போல் இரண்டு சிவப்பு இரத்தினங்கள் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தன. கறுப்பு உடம்பில் இரத்தம் வழிவது போல் செவ்வொளி விரிந்து இருளின் கடுமையைத் துளைத்துக் கொண்டு பாயும் ஆற்றல் வாய்ந்த அத்தகைய இரத்தினங்கள் அந்தப் பெரு மாளிகையில் தன் தந்தையாரின் ஊன்றுகோல் பிடியான யாளி முகத்தில் மட்டுமே உண்டென்பதைச் சுரமஞ்சரி நினைத்தாள், உணர்ந்தாள். அதன் விளைவாகப் பயந்தாள்.

Previous articleRead Manipallavam Part 3 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 3 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here