Home Manipallavam Read Manipallavam Part 3 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

60
0
Read Manipallavam Part 3 Ch19 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 3,nithiliavalli Part 3,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 3 Ch19|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றிக்கொடி

அத்தியாயம் 19 : சுந்தர மணித் தோள்கள்

Read Manipallavam Part 3 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

ஆலமுற்றத்துப் படைக்கலச்சாலைக்குத் திரும்பி வந்த பின்னும் நெடுநேரம்வரை முகுந்தபட்டரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் இளங்குமரன். ‘அறிவின் மிகுதி காரணமாக மனத்தில் உண்டாகிற செருக்கை இழக்கக்கூடாது என்று எண்ணி எண்ணி அந்த இறுமாப்பையே வளர்த்து மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள ஆசைப்படும் அறிவாளிகளைத் தான் நேற்று வரை இந்த நாளங்காடியில் நான் சந்தித்தேன். தான் தனக்குப் பெருமையாக விரும்பி வளர்த்துக் கொண்ட அகங்காரமே ஒரு நிலைக்குமேல் தனக்கும் அடங்காதபடி மதமாகப் பெருகிவிடும்போது அதை அந்த விநாடி வரை வளர்த்து வந்தவன் பரிதாபத்துக்கு உரியவனாகி விடுகிறான். கல்வியின் மிகுதி காரணமாகவும் மனித மனத்தில் பெருமிதம் உண்டாகலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீரத்துக்குத்தான் ‘பெருமிதம்’ என்பது மற்றொரு பெயர். பெருமிதமாவது மற்றவர்களினும் உயர்ந்துதான் பேரெல்லையில் நிற்றல். அறிவாளியாக இருப்பவன் பேரெல்லையில் நிற்பதை மற்றவர்கள் உணர்ந்து அவன் உயரத்தையும் தங்கள் தாழ்வையும் நினைத்து வியப்பதுதான் நியாயமான பெருமிதம். அப்படி இல்லாமல் ‘நான் பேரெல்லையில் உயர்ந்து நிற்கிறேன்’ – என்று பெருமிதத்துக்குச் சொந்தக்காரனே தன்னை வியந்துகொள்ள முற்படும் போதுதான் பெருமிதம் மெல்ல மெல்லப் பெருமதமாக மாறுகிறது’ – என்று எண்ணியவனாக நெருப்புப் பிடித்த வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்தவரைப் போன்ற அகங்கார மதத்திலிருந்து விடுபடத் துடித்த முகுந்தபட்டரின் முகத்தை நினைவுக்குக் கொணர்ந்து வந்தபடியே சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.

மருள் மாலை நேரத்துக் கடற்காற்று ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் மரங்களையும், செடி கொடிகளையும் அவற்றின் காய், கனி, பூங்கொத்துக்களையும் ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தது. இளங்குமரன் படைக்கலச் சாலையின் தோட்டத்தில் நினைவுகள் வரிசையாய் அடுக்கும் மனநிலையோடு உலாவிக் கொண்டிருந்தான். மண்ணில் கூந்தலைப்போல் தரையில் சுருண்டு கொடியோடிப் பரந்து படர்ந்திருந்த அறுகம்புல் வெளியில் புள்ளி மான்கள் உலாவிக் கொண்டிருந்தன. அந்த மான்கள் தலை நிமிரும்போது தற்செயலாய் அவற்றின் கண்கள் மட்டும் தனியாக நகர்ந்து முன் வருவன போல் தோன்றும் அழகை இளங்குமரன் கண்டான். இன்னொரு புறம் இந்த மண்ணின் எண்ணற்ற அழகுகளைக் காண்பதற்காகவே தன் வண்ணத் தோகையெல்லாம் கண்ணாகி நின்றாற் போல் மயில் ஒன்று கலாபம் விரித்து ஆடிக் கொண்டு இருந்தது. ஆலமுற்றத்துக் கோயில் மதிலுக்கும் அப்பால் கடல் நீலநிறத்துக் கோல எழிற் கொள்ளையாக எல்லையற்றுப் பரந்து தெரிந்தது. தோட்டத்தில் உலாவிக் கொண்டே தன்போக்கில் நிமிர்ந்த இளங்குமரன் முல்லை தன்னை நோக்கி வருவதைக் கண்டு திகைத்து நின்றான். மாலையில் படைக்கலச் சாலைக்கு வந்து தன்னைக் காண்பதாகத் தன்னிடம் நாளங் காடியில் வளநாடுடையார் கூறியிருந்தது இப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. புறப்படும் போது வளநாடுடையாரும் அவர் மகளும் சேர்ந்து புறப்பட்டு வந்திருக்க வேண்டுமென்றும், வளநாடுடையார் நீலநாக மறவரோடு பேசச் சென்றபின் முல்லை தனியாகத் தன்னைத் தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வருகிறாள் என்றும் இளங்குமரன் இப்போது புரிந்து கொண்டான்.

முல்லை தொலைவில் வரும் தோற்றத்தைக் கொண்டே அன்று அவள் அதிகமான சிரத்தையோடு தன்னை அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்பதை இளங்குமரன் அறிந்து கொள்ள முடிந்தது. எதிரே தன்னை நோக்கி அவள் ஒவ்வொரு முறை சிலம்பு ஒலிக்கும் பாதங்களைப் பெயர்த்து வைக்கும் போதும் அப்படிப் பாதம் பெயர்த்து மிதித்து நடக்கின்ற மண்ணின்மேல் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டே நடந்து வருவதுபோல இருப்பதை இளங்குமரன் கண்டான். உடனே காரணமின்றியோ அல்லது காரணத்துடனோ அவனுக்கு விசாகையின் நடை நினைவுக்கு வந்தது. ‘இந்த மண்ணில் ஊன்றி நடக்கமாட்டேன்’ என்பதுபோல் பிரவாகத்தில் மிதக்கும் பூவாக நடந்து வரும் விசாகையையும், இந்த மண்ணில் ஒவ்வோர் அடி பெயர்த்து வைக்கும்போதும் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டு நடப்பதுபோல நடந்து வரும் முல்லையையும் ஒப்பிட்டு எண்ணி, அந்த எண்ணத்துக்கும், நிறுவைக்கும் மனத்துக்குள்ளிருந்து, கிடைக்கும் முடிவை அவன் பெறுவதற்குள்ளேயே முல்லை அவனுக்கு மிக அருகில் வந்துவிட்டாள்.

“என் தந்தையும் நானும் வந்தோம். ஆலமுற்றத்துத் தாத்தாவும் தந்தையும் பேசிக்கொண்டே கடற்கரைப் பக்கமாகப் போய்விட்டார்கள். நான் மட்டும்…”

பலமில்லாதவன் வீசி எறிந்த கல் குறிவைத்த இலக்குக்கு முன்னாலேயே தளர்ந்து கீழே விழுந்து விடுவதைப் போல் முல்லையின் பேச்சும் தைரியமாகத் தொடங்கப்பட்டுத் தைரியம் நடுவிலேயே தளர்ந்து போனதால் இப்படித் தயங்கி நின்றது.

இளங்குமரன் அவள் முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தான். அவனுடைய பார்வையைத் தாங்கிக்கொள்வதற்கே பயமாயிருந்தது அவளுக்கு. அவனோ பார்வையோடு விட்டுவிடாமல் அவளைத் தன் வார்த்தைகளையும் தாங்கிக்கொள்ள வைத்தான்.

“நீயும் கடற்கரைப் பக்கமாகப் போயிருக்கலாமே முல்லை! உனக்கு மட்டும் கடற்கரைக் காற்றின் மேல் திடீரென்று இவ்வளவு வெறுப்பு இன்றைக்கு எப்படி ஏற்பட்டது?”

“முதன்மையான விருப்பமாக எதை விரும்பு கிறோமோ அதுவே கை நழுவிப் போகிறபோது இரண்டாம் பட்சமான எல்லாவற்றையும் வெறுக்க வேண்டியதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று இளங்குமரனுக்குப் பதில் சொல்லிவிட்டுத் தான் சிறிது தைரியமாகவே பேசிவிட்டதாக உள்ளூறப் பெருமையும் பட்டுக் கொண்டாள் முல்லை. நாளங்காடியில் அவனுக்கு நெல்லிக்கனியளிக்கும் போது பயந்தது போல அவன் முகத்தைப் பார்ப்பதற்குப் பயப்படாமல், இங்கே இப்போது தான் சற்றுத் துணிந்தே அவனுடன் பேசலாமென்று தோன்றியது அவளுக்கு. அவனும் துணிவாகவே அவளைக் கேட்டான்:

“நீ முதன்மையாக விரும்பியது எது? இரண்டாம் பட்சமாக விரும்பியவை எவை? முதன்மையாக விரும்பியது ஏன் கிடைக்கவில்லை? அதற்காக இரண்டாம் பட்சமாக விரும்பியவற்றை நீ வெறுப்பானேன்? என்று தெரியாமல் நான் உன்னுடைய கேள்விக்கு மறுமொழி சொல்வது சாத்தியமில்லை முல்லை!” என்றான் இளங்குமரன்.

“சாத்தியமிராதுதான். என்னுடைய இந்த இரண்டு கைகளாலும் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருடைய தோள்களில் புண்பட்ட போதெல்லாம் மருந்து தடவிக் காயத்தை ஆற்றினேன் நான். இப்போது இவ்வளவு காலத்துக்குப்பின் அந்தத் தோள்களில் காயம் பட்ட தழும்பும் தெரியவில்லை. அவை சுந்தரமணித் தோள்களாகப் பொன்நிறம் பெற்று மின்னுகின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்தத் தோள்களுக்கு மருந்திட்டு அவற்றைக் காத்தவளுடைய கைகளுக்கு இன்றுவரை அந்தத் தோள்கள் நன்றி மறந்தவையாகவே இருக்கின்றன என்பதை நினைப்பதுதான் எனக்குத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது ஐயா.”

முல்லை இப்படி இன்னும் குழந்தைத் தன்மை மாறாமல் தான் சொல்ல வந்த விஷயத்தைச் சிறு பிள்ளைக் கதை போலப் பின்னிப் பின்னிச் சொல்லியதைக் கேட்டு இளங்குமரன் மேலும் சிரித்தான்.

“முல்லை! இன்று நீ யாரைக் குறை சொல்லுகிறாயோ அந்த மனிதன், மார்பிலும் தோளிலும் காயம் படுவதைக் கவிகள் விழுப்புண்கள் என்று கூறிப் புகழின் முத்திரைகளாகப் போற்றியிருக்கிறார்கள்; ஆகவே ‘நீ இவற்றை மருந்திட்டு ஆற்ற வேண்டாம்’ என்று சொல்லி அந்த நாளிலேயே உனக்கு எச்சரிக்கை செய்தது உண்டா, இல்லையா? அன்று நீ அவன் தனக்கு மருந்திட வேண்டாமென்று மறுத்ததையும் பொருட் படுத்தாமல் அவனுக்கு மருந்திட்டுக் காயங்களை ஆற்றிவிட்டு இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு வந்து மறுபடியும் உன் சொற்களால் அதே மனிதனுடைய மனத்தைக் காயப்படுத்தலாமா? இது உனக்கு நியாயமா? அன்று ஆற்றிய காயத்துக்கு நீ இன்று வந்து பயனை எதிர்பார்ப்பதும் பண்பில்லையே? பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யும் காரியங்கள் உயர்ந்தவைகள் அல்லவே? அப்படிப் பயனை எதிர்பார்த்துச் செய்யும் நோன்புகளைச் ‘சீல விரதங்கள்’ என்று பெயரிட்டுச் சமய நூல்கள் கூடக் குறைவாகத் தானே மதிப்பிடுகின்றன?”

“நான் சமய நூல்களைப் படிக்கவில்லை. இந்த உலகத்தில் நான் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான். அந்த அன்பை உங்களோடு வாதிட்டுத் தோற்கவும் நான் விரும்பவில்லை.” நாளங்காடியில் சமயவாதிகளின் பெரிய பெரிய கேள்விகளையெல்லாம் அழகாகவும் ஆணித்தரமாகவும் கூறிய மறுமொழிகளின் மூலம் வென்ற இளங்குமரன் பேதமை ஒன்றைத் தவிர வேறெதுவும் கற்றறியாத முல்லை என்னும் இளம்பெண்ணுக்கு முன்னால் இப்போது தயங்கினான். திகைத்தான்.

‘இந்த உலகத்தில் நான் பகுத்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான்!’ என்று சொல்லிக்கொண்டே, கண்ணீரும் அழுகையும் பொங்க எதிரே வந்து நிற்கும் இந்தப் பெண்ணுக்கு இன்று நான் என்ன பதில் சொல்வது? என்று அவன் மனத்தில் பெரிதாய் ஒரு கேள்வி எழுந்தது.

அன்புக்குச் சமயம் ஏது? வாதம் ஏது? தர்க்கம் ஏது? எந்தப் பிரமாணத்தைச் சொல்லி அதை எப்படி மறுப்பது? எதிரே நிற்கும் முல்லையின் மனத்தைப் போலவே மேலே நிர்மலமாய்க் களங்கமற்றிருந்த ஆகாயத்தைப் பார்த்தான் இளங்குமரன். யாருக்குச் சொல்வதற்குப் பதில் கிடைக்காமல் அவன் ஆகாயத்தில் அதைத் தேடிக் கொண்டிருந்தானோ, அவள் தன்னுடைய சுந்தரமணித் தோள்களை, அவை தனக்குப் பதில்கள் என்பதுபோலப் பார்க்கலானாள். கடற்காற்று ஆனந்தமாக வீசிக்கொண்டிருந்தது. மயில் இன்னும் நன்றாகத் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. முல்லைக்கும் இளங்குமரனுக்கும் நடுவில் நின்ற குட்டிப் புள்ளிமான் ஒன்று தலைநிமிர்ந்து மை தீட்டினாற்போல் ஓரங்களில் கருமை மின்னும் தன் அழகிய நீள்விழிகளால் இருவரையும் மாறிமாறிப் பார்த்தது. குனிந்து அந்த மானின் கண்களைப் பார்த்த இளங்குமரன் முல்லையைப் பார்க்கவில்லையானாலும் அவள் கண்களிலும் அதே மருட்சி கலந்த அழகுதான் அப்போது இருக்குமென உணர்ந்தான்.

Previous articleRead Manipallavam Part 3 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 3 Ch20 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here