Home Manipallavam Read Manipallavam Part 3 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

64
0
Read Manipallavam Part 3 Ch2 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 3,nithiliavalli Part 3,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 3 Ch2 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றிக்கொடி

அத்தியாயம் 2 : அறிவுப் போர்க்களம்

Read Manipallavam Part 3 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

இடையீடின்றி நெருங்கி வளர்நத பசும் புல்வெளியில் பால் குடம் சரிந்தது போல் நாளங்காடியின் அடர்ந்த மரக் கூட்டங்களுக்குள்ளே நிலவு கதிர் பரப்பிக் கொண்டிருந்தது. எதிர்ப் பக்கத்தே வழியை மறித்தாற் போல் நின்ற தேரிலிருந்து தன்னைச் சினத்தோடு நோக்கிய நகைவேழம்பரையும் பெருநிதிச் செல்வரையும் சிரித்துக் கொண்டே பார்த்தான் இளங்குமரன். அந்தப் பார்வையும் சில கணங்கள்தான். அதன் பின் கூட்டம் விலகி வழி ஏற்பட்டிருந்த வேறு பக்கமாக யானையைத் திருப்பிச் செலுத்திக் கொண்டு சென்றான் அவன். நாளங்காடியில் இன்று சந்தித்த இந்த இருவரும் அவனுடைய மனத்தில் கடுமையான வெறுப்புக்கும் குரோதத்துக்கும் உரியவர்களாக இருந்த காலமும் உண்டு. இன்றோ அவனுடைய மனத்திற்குள் எவர் மேலும் வெறுப் பில்லை; எவர் மேலும் குரோதமில்லை. உருவுடன் கூடிய ஆசைகளும் உருவமற்ற ஆசைகளும் எதுவுமே இல்லை. மேலே மிக உயர்ந்த வானப் பரப்பில் பறக்கும் பறவை சிறகுகளைத் தவிர வேறெந்தப் பாரமும் இல்லாமல் பறந்து செல்வது போல் அவனுடைய நினைவுகளின் போக்குக் கீழேயிருந்து மிக உயரமான இடத்தில் மிக உயரமான மார்க்கத்தில் சென்றது. விருப்பு வெறுப்புக்களில் சாயாத நிலையான மனத்தைச் ‘சமசித்தத்துவம்’ என்று கூறியிருந்தார் நாங்கூர் அடிகள். சமசித்தத்துவத்தை அடைய முயன்று கொண்டிருந்தான் இளங்குமரன். அப்படிப்பட்ட சித்தத்தோடு பார்க்கிற போது உலகமே விசித்திரம்தான்.

சாயவும் கோணவும் செய்யாமல் ஒருநிலைப்பட்ட மனத்தோடு இன்னதைக் காணலாம், இன்னதைக் காணக் கூடாது என்ற சம்பிரதாய எல்லைகளையும் கடந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரிவன எல்லாம் அநுதாபத்துக்கும், பரிதாபத்துக்கும் உரியனவாகவே தென்படுகின்றன. துன்பப்படுகிறவர்கள், இன்பப்படுகிறவர்கள், துன்பமும் இன்பமும் கலந்து படுகிறவர்கள் எல்லாரும் இந்த உலகத்தில் நெஞ்சில் சுகமோ, துக்கமோ எதையோ சுமந்து கொண்டு திரிகிறார்கள். உடம்பையும் பொருட் சுமைகளையும், தேரிலோ, குதிரையிலோ பிறரிடம் கொடுத்தோ சுமக்கச் செய்வது போலச் சுமக்கச் செய்ய முடியாதது நெஞ்சின் சுமை. நினைப்பதைச் சொல்ல இயலாமல் சுமப்பதைத் தவிர்க்க முடியாமல் குழந்தையின் துன்பம் போல் தனக்குற்றதைச் சொல்ல மொழியின்றிச் சொன்னாலும் அவற்றுக்கு உணர்த்தும் ஆற்றலின்றித் தவிப்பது ஒப்ப இந்திர விழாக் கூட்டத்தில் தெரிந்த முகங்களில் எல்லாம் தான் இரங்குவதற்கான ஏதோ ஒர் உணர்வைத் தேடிக் கொண்டிருந்தான் இளங்குமரன். சுகத்தைச் சுமந்தால் என்ன? துக்கத்தைச் சுமந்தால் என்ன? சுமை என்னவோ சுமைதானே? சுமைக்கு உள்ளடங்கிய பொருள் உப்பானாலும் வெல்லமானாலும், சுமக்கிறவனுக்குக் கனமான சுமையாவது போலத்தானே நினைவுகளும்? உப்புச் சுமையை விட வெல்லச் சுமை அதிகமாகக் கனத்தாலும் கனக்கலாம்.

‘மதுவிலிருந்து பிறக்கும் மயக்கம் போல ஐம்பெரும் பூதங்களின் மயக்கமே இந்த உலகம்’ என்று வெறியுடன் கூறிக் கொண்டு வந்த அந்தக் களிமகனிலிருந்து, கனல் பொறி பறக்கும் பார்வையால் தன்னை எரித்துவிடுவது போலப் பார்த்த நகைவேழம்பர், பெருநிதிச் செல்வர் வரை எல்லாருடைய நெஞ்சிலும் சுமை இருப்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று. ஆசையாக இருக்கிறவரை அதுவே ஒரு சுமை. ஆசை நிறைவேறி விட்டால் ‘நிறைவேறி விட்டது’ என்று நினைத்து நினைத்துப் பூரிக்கும் திருப்தியே ஒரு சுமை. எண்ணியது நிறைவேறா விட்டால் நிராசையும், அதனால் ஏமாற்றம் உண்டாவதும் சுமையே. ஆகாயத்தில் பறக்கும் பறவையைப் போல நெஞ்சில் சுகதுக்கச் சுமையில்லாத நாங்கூர் அடிகளைப் போன்றவர்களே உயர்ந்த நினைவுகளில் சஞ்சரிக்க முடிகிறதென்று எண்ணினான் இளங்குமரன். அவருடன் பழகிய பயனாலே தனக்கும் அந்த நிலை ஒரளவு வந்ததெனவும் நம்பினான்.

இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்த மனத்தோடு யானையைச் செலுத்திக்கொண்டு நான்கு பெரிய வீதிகள் சந்திக்கும் நாளங்காடிச் சதுக்கத்துக்கு வந்திருந்தான் அவன். அந்த இடத்தில் அவன் வெற்றி கொள்ள வேண்டிய போர்க்களம் காத்திருந்தது. அங்கே பல்வேறு சமயங்களைச் சேர்ந்த அறிஞர்கள் பிறரை வாதத்துக்கு அழைக்கும் கோலத்தில் கொடி கட்டிக் கொண்டு கூடி யிருந்தார்கள். எங்கும் அறிவொளிரும் கண்கள். சுவடிகள் நிறைந்த கைகள். எதிர்த்து வாதம் புரிவதற்காக மற்றவர்களை அழைக்கும் கொடிகள். வாதிடுபவர்களின் திறமையைக் காண்பதற்காகக் கூடியிருந்தவர்களின் முகங்களில் எல்லையில்லாத ஆர்வம் தெரிந்தது. யானையிலிருந்து கீழிறங்கி கொடியும் கையுமாக, அந்த ஞான வீதிக்குள் நுழைந்தான் இளங்குமரன். அங்கிருந்த வயது மூத்த அறிஞர்களுக்கு நடுவே பேரெழில் நம்பியாகிய இளைஞன் ஒருவன் கொடி ஏந்திய கையினனாக நுழைந்தவுடன் கூடியிருந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொது மக்களுக்கு ஆர்வம் பெருகிற்று. இனிமேல் இங்கே சுவையான நிகழ்ச்சிகளைக் காணப்போகிறோம் என்பது போன்ற உற்சாகமும் அவர்களுக்கு உண்டாயிற்று.

“இந்தப் பெரிய உலகம் முழுவதும் படைப்புக்கு முழு முதற் காரணனாகிய தேவன் ஒருவன் இட்ட முட்டை. படைப்புக்கு நல்வினை தீவினைகள் காரணமில்லை; தேவன் ஆணை ஒன்றே போதும்” என்று தனது கொடிக்குக் கீழே நின்று இரைந்து கூவிக் கொண்டிருந்த ஒரு பிரமவாதிக்கு முன்னால் போய் நின்றான் இளங்குமரன்.

ஒளிமயமான உடலோடு கந்தருவருலகத்து இளைஞன் ஒருவன் போல எதிரே வந்து கொடியை ஊன்றிக் கொண்டு நிற்கும் இளங்குமரனைக் கண்டவுடன், அந்தப் பிரமவாதி தான் திரும்பத் திரும்பக் கூறிக் கொண் டிருந்தவற்றை நிறுத்திவிட்டு அவனை உற்றுப் பார்த்தார். அவருடைய பார்வையைக் கண்டு இளங்குமரன் புன்னகை பூத்தான்.

“உச்சந் தலையில் இருந்து உள்ளங் கால் வரை தேடுவதுபோல என்னிடம் எதைப் பார்க்கிறீர்கள், ஐயா?”

“எதையா? பார்க்க வேண்டியதைத்தான் பார்க்கிறேன். நீயோ இளம் பிள்ளையாகத் தோன்றுகிறாய். காற்றாடியைப் பறக்கவிட்டு மகிழ வேண்டிய கைகளில் கரையில்லாத ஞானத்தின் சின்னமாகிய இந்தக் கொடியை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறாய். என்னைக் காட்டிலும் குறைந்த அறிவுள்ளவர்களோடு நான் வாதிடுவது ஏகதேசம்* என்னும் தருக்கக் குற்றமாகி விடுமே?”

  • வாதி – பிரதிவாதி இருவரில் ஒருவரது பலக்குறைவு

“ஞானத்தின் நிறைவையோ குறைவையோ தோற்றத்திலிருந்தும் பருவத்திலிருந்துமே தெரிந்து கொண்டுவிட முடியுமா? முடியுமானால் காட்சியைத் தவிர மற்ற அளவைகள் எல்லாம் பொய்யாகி விடுமே? காட்சியே அளவையும் துணிவும் ஆனால் எனக்கு நீங்கள் சொன்ன அதே தருக்கக் குற்றத்தை உங்களுக்கும் நான் சொல்லலாமே. ஊன்றுகோலை ஊன்றித் தொண்டு கிழவராய்த் தள்ளாடி நடக்க வேண்டிய முதிய வயதிலே தளர்ந்த கைகளில் கொடியோடு நிற்கிறீர்களே? ஊக்கமும் உற்சாகமும் கற்ற நூல்களின் எந்தப் பகுதியிலும் எந்த விநாடியிலும் மனத்தை இணைத்து கொள்ள முடிந்த ஞாபகமும் உள்ள இளைஞனாகிய நான், மூப்பினால் இவற்றையெல்லாம் இழந்திருக்கும் உங்களோடு வாதம் புரிய விரும்புவதும் ஏகதேசம் என்னும் தருக்கக்குற்றம் ஆகுமே. பசுவின்கால் குளம்பைக் காட்டிலும் அதற்குப் பின்னால் முளைத்த கொம்பு வலியதாவதுபோல் முன் தோன்றியதனினும் பின்தோன்றியது வலிமையுடையதென்னும் நியாயமும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே…?”

இதைக் கேட்டபின் கண்களை அகலவிரித்து இளங்குமரனை வியப்போடு பார்த்தார் அந்தப் பிரமவாதி. ‘யாரோ சிறுபிள்ளை, தன்னை வம்புக்கு இழுக்க வந்திருக்கிறான்’ என்று நினைத்ததற்கு முற்றிலும் மாறாக எதிரே நிற்பவன் பழுத்த ஞானமும் தருக்க நியாய வழிகளில் நல்ல தேர்ச்சியும் உள்ளவன் என்று அறிந்ததும் தன்னுடன் அறிவுப் போரிட வந்திருப்பவன் தனக்குச் சரியான எதிரிதான் என்ற நிறைவோடு அவர் வாதிட முன் வந்தார்.

“பால் தயிராவது போலப் பிரமமே உலகமாகத் திரிந்து ஆக்கம் பெற்றிருக்கிறது. உயிர்களுக்கு நல்வினை, தீவினை இரண்டும் முதல்வனாகிய இறைவன் ஆணையினால் வருமென்பது பொருந்தாது. உலகத்து மக்கள் ஒன்றைச் செய்வதற்குக் கருவியும், துணைக் கருவிகளும் வேண்டி நிற்றல் போல இறைவனுக்கு இவ்வுலகைப் படைக்கும் காலத்தில் துணைக் கருவிகள் வேண்டியதில்லை. வேண்டும் என்றால் முழு முதலாகிய இறைவனின் சுதந்திரத்திற்கு அது இழிவாகும் அல்லவா?” என்று பரிணாம விவாதத்தைத் தொடங்கினார் பிரமவாதி.

“நீங்கள் கூறுவது பொருந்தாது. இருவினைகள் துணைக் கருவிகளாகவே அமையும். பிறவி வினையினால் வந்தது, வினைக்கு விளைவாகியது. நல்வினைக்குப் பயன் இன்பம்; தீவினைக்குப் பயன் துன்பம். பயன்களை நுகர்வதற்குப் பிறந்தே ஆக வேண்டும். பழத்தினுள் அடங்கிய வித்துக்கள் மீண்டும் முளைப்பது போல வினைகள் பழுத்த பின் பயன் தோன்றுவது தவறாது. புனருற்பவமாகிய மறுபிறப்பில் வினைவித்துக்கள் முளைக்கும். ஒரு நகரத்து அரசன் தன் நகரத்தைக் காப்பதற்குக் காவலர்களை நியமிப்பதுபோல இறைவனுடைய நியமனம் பெற்று இரு வினைகள் ஆணை நடத்தும். ஆகையினால் உங்களுடைய பரிணாம வாதத்துக்குப் பொருள் இல்லை. எந்தவிதமான பயனும் இல்லை.”

“நல்லது! அப்படியானால் நீ இதற்குப் பதில் சொல்! வினைகள் உண்டு என்பதற்கும் அவை உயிர்க்குப் பயனாகத் தொடரும் என்பதற்கும் அவை முதல்வன் ஆணையால் நடக்கும் என்பதற்கும் சான்று என்ன? உள்ள பொருளானால் அப்பொருள் தோன்ற வேண்டும். வினைகளுக்குத் தோற்றம் ஏது?”

“தோற்றமற்றவையெல்லாம் இல்லாப் பொருள்கள் என்பது உங்களுடைய முடிவானால் இந்த உலகமாகிய முட்டையை இட்டவனாக நீர் கூறும் தேவன் தோன்றாமையின் இல்லாதவனாவான். இல்லாப் பொருள்கள் எல்லாம் தோற்றமுடையனவும் அல்ல, தோன்றாப் பொருள்களெல்லாம் இல்லாதனவும் அல்ல. உள்ளதாவதொரு பொருளை மறுப்பதற்கே இல்லை என்னும் சொல் பயன்படும். ஆகையினால் நீர் இல்லையென்று மறுப்பதனாலேயே அது உள்ளதாகின்றது. பொருள் தோன்றிய பின்பே அதற்குக் குணந்தோன்றும் என்பது தருக்க நூல் முடிவாதலால் ‘வினைகள் இல்லை’யென அவற்றுக்கு இன்மையாகிய குணத்தை நீர் கற்பிக்கத் தொடங்கியதனாலே அதற்கு முன்பே அவை உள்ளனவாகக் கருதி உடன்பட்டீர். முற்பிறவியில் சேர்த்த வினைகளில் அப்போதே நுகர்ந்தவை போக எஞ்சிய வினைகள் ‘சஞ்சிதம்’ எனப் பெயர் பெறும்.

“ஆசைப்பட்டு அடைந்த இன்பமும் இன்பப்பட்டு அடைந்த ஆசைகளுமாக விருப்பம் அடங்காமல் வளர்வதைப் போலத் துன்பப்படுவதனால் பெற்ற ஆசைகளும் ஆசைப்படுவதனால் பெற்ற துன்பங்களுமாக வினைகள் உயிருக்குப் பயனாகத் தொடரும் இயல்பின. சூதாடுகிறவர்கள் சூதில் பொருளை இழக்க இழக்க, இழந்தவற்றைப் பெறுவதற்காக மேலும் அவ்விளையாட்டின் மேல் பெருங்காதல் கொள்வர். இழந்தவற்றைப் பெற்ற பின்பும் மேலும் மேலும் பெறுகிற ஆசையால் காதல் பெருகும். ஆகவே சூதாடுகிறவர்களுக்குத் தோற்றுத் துன்பப்படுகிற போதும் ஆசை; வென்று இன்பப்படுகிற போதும் ஆசையே. ஆசையாகிய துன்பமும், துன்பமாகிய ஆசையும் மாறி மாறி நிலவும் சூதாடுமிடம்போல உயிர்கள் ஏதாவதொரு வினை எஞ்சி நிற்கும் படியே தொடரும்.

‘இழத்தொறு உம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழந்தொறுஉம் காதற்று உயிர்’

என்ற ஆன்றோர் வாக்கை நீரும் கேள்விப்பட்டது உண்டு அல்லவா? காந்தத்துக்கு நேராக இரும்பைப் பிடிக்கும் போது அந்தக் காந்தமே இரும்பை வலித்து இழுத்துக் கொள்ளுதல் போல இறைவன் துகர்வித்தலாலே வினைப் பயனை உயிர்கள் நுகரும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…”

என்று இளங்குமரன் கூறி விளக்கியபோதில் மேலே அவனிடம் என்ன கேட்பது என்று தோன்றாமல் தடு மாறினார் அந்தப் பிரமவாதி. அவர் தலை குனிந்தார். ஏதேதோ சுவடிகளைப் புரட்டினார். மீண்டும் சுவடிகளைக் காட்டிவிட்டு நிமிர்ந்தார். ஏதோ கேட்கத் தொடங்கிவிட்டுக் கேள்வியை முடிக்காமலே மறுபடி தலைகுனிந்தார். அப்போது குனிந்த அவருடைய தலை மீண்டும் நிமிரவே இல்லை. சுற்றிலும் கூடியிருந்த பெரு மக்களிடமிருந்து நாவலோ நாவல் என வெற்றிக் குரல் முழக்கம் எழுந்தது. அந்த முழக்கம் மேலே எழுந்து ஒலிக்கத் தொடங்கிய அதே நேரத்தில் அவருடைய கொடி கீழே விழுந்தது.

இளங்குமரன் அந்த வெற்றியின் செருக்கில் தன் மனம் கனத்துப் போகாமல் குருவை தியானித்துக் கொண்டு சுற்றிலும் ஒலித்த வாழ்த்தொலிகளைக் கேட்பதிலும் உணர்வதிலும், உதாசீனனாகி மேலே நடந்தான்.

உலகத்துப் பொருள்களின் பொதுத்தன்மை, சிறப்புத் தன்மை, கூட்டத்தன்மை ஆகியவற்றை விவரித்துக் கொண்டே ‘வைசேடிகன்’ ஒருவன் இளங்குமரனுக்கு முன்னால் வந்து தன்னுடைய கொடியை நட்டான். காது செவிடுபடும்படி உரத்த குரலில் பேசினான் அவன். .

“பொருள்களிலே நீர், ஒலி, ஊறு, உருவம், சுவை ஆகிய நான்கு குணங்களை உடையது. தீ ஒலி, ஊறு, உருவம் ஆகிய மூன்று குணங்களை உடையது. காற்று, ஒலி, ஊறு ஆகிய இரண்டே குணங்களை உடையது. ஆகாயம் ஓசைக் குணம் ஒன்றே உடையது” என்று செவிகளைத் துளைக்கிறாற் போன்ற பெருங்குரலில் ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பக் கத்தினான் அந்த வைசேடிகன். அவனைப் பார்த்து, “இப்போது இந்தக் கணமே ஆகாயம் தனது ஓசைக் குணத்தை இழந்து விட்டது, ஐயா!” என்று சொல்லி மெல்லச் சிரித்தான் இளங்குமரன். “ஏன்? எப்படி இழந்தது?” என்று வைசேடிகன் வெகுண்டு கேட்டபோது, “ஆகாயத்தின் ஓசைக் குணம் அவ்வளவும் இப்போது உங்களுக்கே வந்துவிட்டது. இல்லாவிட்டால் இவ்வளவு பலமாகக் கத்துவீர்களா?” என்று நிதானமாகச் சொல்லிக் கூட்டத்தில் சிரிப்பலைகளை எழச் செய்தான் இளங்குமரன்.

Previous articleRead Manipallavam Part 3 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 3 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here