Home Manipallavam Read Manipallavam Part 3 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

102
0
Read Manipallavam Part 3 Ch4 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 3,nithiliavalli Part 3,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 3 Ch4 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றிக்கொடி

அத்தியாயம் 4 : புகழ் வெள்ளம்

Read Manipallavam Part 3 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

வாழ்நாளெல்லாம் அறிவுப்போரிலேயே செலவிட்டு வெற்றிமேல் வெற்றிபெற்ற பெரு மக்கள் ஒவ்வொருவராகத் தனக்குத் தோற்பதைப் பார்த்தபோது இளங்குமரனுக்குத் தயக்கமாக இருந்தது. வெற்றியை மெய்யின் வெற்றியாகவும் தோல்வியைப் பொய்யின் தோல்வியாகவும் நினைத்து மனம் விகாரமடையாமல் காத்துக் கொண்டான். வாதத்தில் அவன் வென்று முன் னேற முன்னேற ‘நாவலோ நாவல்’ என வெற்றி முழக்கமிடும் புகழ்க் குரல்கள் மிகுந்து ஒலித்தன. கண்களை அகல விழித்து அவனையே தெய்வீக ஆற்றலாகக் கருதிப் பார்க்கும் முகங்கள் அதிகமாயின. பார்க்கிற கண்களில் எல்லாம் பார்க்கப்படுகிற கண்களின் மேல் பக்தி பிறந்தது.

‘அலை அலையாகப் புரண்டு வரும் இந்தப் புகழ் வெள்ளத்தில் நான் நிற்க வேண்டிய எல்லையில் கால்களும் என் மனம் நிற்க வேண்டிய எல்லையில் நினைவுகளும் தரித்து நிற்க முடியாமல் மிதந்து போகும் படி ஆகிவிடக் கூடாது. எல்லையற்ற இந்தப் புகழைப் பார்க்கும்போது எனக்குப் பயமாயிருக்கிறது. படிப்பினால் அழிந்த ஆணவத்தைப் படிப்பின் பயனாகப் பெற்றால், மறுபடியும் அதை எப்படி அழிக்க முடியும். புகழை உணர்வதற்கும், உணர்ந்ததை நினைத்து அநுபவிப்பதற்கும் மனத்தில் பழகியும், பழக்கியும், புகழுக்கே அடிமையாகிவிடாமல் நான் விழிப்பாயிருக்க வேண்டும். புகழில் அழிந்தால் நான் விரைவாக மூப்படைந்துவிடுவேனோ என்று நடுங்குகிறேன். புகழில் மிதந்தாலோ நான் சோம்பற் குணமுடையவனாகி விடுவேனோ என்று அஞ்சுகிறேன். புகழ் என்னுடைய முயற்சிகளை ஒடுக்கிவிடலாம். என் மனம் இலக்கு வைத் திருக்கின்ற குறிக்கோள்களை மறைத்துப் பொய்யான இலக்குகளையும் காட்டிவிடலாம்…

‘புகழ் வெள்ளத்தின் அலைகளே! சூழ்ந்திருப்பவர் முகங்களிலும் கண்களிலும் என்னை நோக்கி மலரும் பிரசித்திகளே! பிரதாபங்களே! நான் நிறுவிய உண்மைகளைப் போய்ச் சார்ந்து கொள்ளுங்கள்? என்னை விட்டு விடுங்கள்’ என்று, புகழில் மனம் நனைந்து போகாமல் ஆணவத்துக்குக் காரணமான நினைவுகளை விலக்கி விட்டு அவன் நடந்தபோது அவன் விலக்கிய ஆணவங்களே ஓருருவம் ஆனாற் போன்று எதிரே வந்து அவனை வாதத்துக்கு அழைத்தான் ஓர் இளைஞன். அந்த இளைஞனுடைய உருவமும் அவன் பேசிய சொற்களும் நின்ற நிலையுமே இளங்குமரனைத் தடுத்து நிறுத்தின. அவனுடைய தோற்றத்தைப் போலவே சொற்களும் அழகாயிருந்தன.

“உயிர் என்றும் ஆன்மா என்றும் தனியாக எதுவும் இல்லை. என்னுடைய உடம்பே உயிர். அதுவே ஆன்மா. நான் இளைத்தேன். நான் பருத்தேன். நான் கறுத்தேன் – என் உடம்பைச் சுட்டிக் காட்டியே குணங்களும், தொழில் நிகழ்ச்சிகளும் கூறப்படுகின்றன. எனவே தேகமே ஆன்மா என்று நான் கூறுகிறேன். இந்த முடிவை நீ எப்படி மறுக்க இயலும்?” – இப்படித் திமிரோடு பேசினான் அந்த இளைஞன்.

அந்த இளைஞனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான் இளங்குமரன்: “தம்பீ! உன்னுடைய முடிவே உன் கருத்துக்குப் பெரிய மறுப்பாக இருக்கிறதே, நான் வேறு மறுக்க வேண்டுமா? நீ எந்தக் கருத்தைச் சொல்வதற்குத் துணிகிறாயோ, அந்தக் கருத்துக்கே மாறான முடிவைத் தருகிறது உன்னுடைய சித்தாந்தம். இப்படி வாதத்தைத் தொடங்குவதே ‘அவ சித்தாந்தம்’ என்னும் தருக்கக் குற்றம். ஆனாலும் கேள். உன்னையும் உன் உடம்பையும் இணைத்து வார்த்தையால் கூற வேண்டுமானால் நீ எப்படிக் கூறுவாய்?”

“இது என்ன கேள்வி? ‘எனது உடம்பு’ என்று கூறுவேன், அல்லது ‘என்னுடைய உடம்பு’ என்று கூறுவேன்” என்றான் அந்த இளைஞன்.

“கூறுவாய் அல்லவா? நீயே உடம்பாகவும் உடம்பே ஆன்மாகவும் இருப்பாயானால் என் உடைய – உடம்பு என்று ஏன் உடைமையும் உடையவனும் வேறாக இருப்பதைத் தொடர்புபடுத்திக் கூறுவது போல் பேசுகிறாய்? உன் பேச்சிலிருந்தே உயிர் வேறு உடம்பு வேறு என்பது தெரிகிறதே? உடையவனையும் உடைமையையும் சம்பந்தப்படுத்துகிற தொடர்பு இரண்டு வகை யானது. உடையவனிலிருந்து பிரித்தால் தனித்தும் இயங்குகிற உடைமை, பிரித்தால் தனித்தும் இயங்காத உடைமை என்பனவே அவை. ‘எனது உடம்பு’ என்கிறாய். இதில் உன்னையும் உடம்பையும் தனித்தனியாகப் பிரிக்க இயலாது. எனது வீடு என்று சொல்கிறாய். இதில் உன்னையும் வீட்டையும் தனித்தனியே பிரிக்க இயலும். பிரிக்க முடியாமல் தன்னோடு தானாகவே இணைந்த சம்பந்தத்துக்குத் தற்கிழமை என்றும், பிரிக்க முடிந்த சம்பந்தத்துக்குப் பிறிதின் கிழமை என்றும் பெயர். உடம்போடு ஆன்மாவுக்கு உள்ள சம்பந்தம் தற்கிழமை. இதே நீயே உன்னுடைய சொற்களால் ஒப்புக்கொண்டவன் ஆகிறாய் தம்பீ! சாருவாக மதத்தில் மிக இளம் பருவமாகிய இந்த வய திலேயே உனக்குப் பெரும் பற்று ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. இளமையில் உன்னைக் கவர்வன வெல்லாம் என்றும் உன்னைக் கவர முடியும் என்று நினைக்காதே. சாருவாகர்கள் அழகிய சொற்களை மட்டுமே காதலிக்கிறார்கள். சொற்களுக்கு அப்பால் அவற்றின் பயனாக உள்ளவற்றைப் பற்றி அவர்கள் நினைப்பதே இல்லை. இரண்டு சொற்களில் விளக்க வேண்டிய கருத்தை இருபது சொற்களால் அடுக்கி விளக்குவது வாதமுறைக்கு முரண்பாடான பிழைகளில் ஒன்று. தேவைக்கு அதிகமான சொற்களைக் கொண்டு எந்தப் பொருளை வற்புறுத்த முயல்கிறாயோ அந்தப் பொருள் அப்படி வற்புறுத்துவதனாலேயே நைந்து போகும். எல்லையை மீறி உண்டாகும் பலமே ஒரு பலவீனம். அதிகமாக முறுக்கப்பட்ட கயிறு அதனாலேயே அறுந்து போவதைப் பார்த்திருப்பாய். ‘சொற் பல்குதல்’ என்பது தருக்கத்தில் குற்றம். அந்தக் குற்றத்தை உன் போன்ற சாருவாகர்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள்.”

இவற்றையெல்லாம் கேட்டதும் அந்தப் பிள்ளை எவ்வளவு வேகமாக எதிர்த்து வந்து நின்றானோ அவ்வளவு வேகமாகத் துவண்டு போனான். “தம்பீ! நிறைவடையாத அறிவுக்குப் ‘புல்லறிவு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். புல்லறிவினால் ஏற்படுகிற ஆண்மை உறுதியானது என்று நம்பி அதையே வாதத்துக்குப் பலமாகக் கொண்டு வாதிடுவதற்கு வரக் கூடாது. மேட்டு நிலத்தில் உள்ள முற்றாத இளம் புல்லைக் கிழட்டுப் பசு மேய்ந்தது போல் நிறைவடையாத நுகர்ச்சியால் வந்த புல்லறிவாண்மை வாதத்துக்குப் பயன் படாது” என்று போவதற்கு முன் அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினான் இளங்குமரன்.

அந்தக் கூட்டத்தில் இப்போது இளங்குமரனுக்கு முன்னால் வந்து நிற்பதற்கே பயப்படுகிறவர்கள் அதிகமானார்கள். இவன் ஞானத்தை நிறைத்துக் கொள்வதற்கான நூல்களை மட்டும் கற்றுக் கொண்டு வரவில்லை. மற்றவர்களை வெல்வதற்கான தவவலிமையையும் சேர்த்துப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறான். இவனுக்கு முன்னால் நிற்கும் போதே நம்மடைய கல்வி குறைபாடு உடையதாக நமக்குத் தோன்றுகிறதே என்று தயங்கினார்கள். வைதிக சாத்திரங்களாகிய மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் ஆகிய ஆறு தரிசனங்களிலும் வல்லவர்கள் பலர் அந்தக் கூட்டத்தில் இருப்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று. ‘நீருட் கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாவதை’ப் போல நூல்களைக் கற்றிருந்தும் அவற்றில் மனம் தோயாத காரணத்தால்தான் அவர்களெல்லாம் மலைத்து நிற்கின்றார்களென்று அவனுக்குப் புரிந்தது. எதிரே வந்து தன்முன் கொடியை நடுவதற்கு இன்னும் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்றான் அவன். யாரும் வருவதாகத் தோன்றவில்லை. இரவு வளர்ந்து நேரமாகிவிட்ட படியால் கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நெருங்கி நின்ற பெருங்கூட்டம் கலைந்ததனால் இளங்குமரன் தனது யானையை நிறுத்திவிட்டு வந்த இடத்துக்குப் போவதற்கு வழியில்லை. தேரும் சிவிகையும் குதிரைகளுமாக முந்திக் கொண்டு விரைந்த அந்தக் கூட்டத்தில் இருந்தாற்போல் இருந்து பரிதாப கரமான துயரக்குரல் ஒன்று எழுந்தது. கூட்டத்தில் மிக அருகிலிருந்து எழுந்த அந்தக் குரலை கேட்டு இளங்குமரன் திரும்பினான். கண் பார்வை மங்கி முதுகு கூன் விழுந்து மூதாட்டி ஒருத்தி கூட்டத்தில் திணறிக் கொண்டிருந்தாள். ஊன்றுகோலையே கண்ணாகக் கொண்டு நடந்து கொண்டிருந்த அவள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தினால் நெருக்குண்டு தடுமாறி விழுந்தாள். ஏதோ ஒரு பல்லக்கின் முன் பக்கத்துக் கொம்பைச் சுமந்து கொண்டு வந்த யவனன் ஒருவன் கீழே குனிந்து பாராததனால் கவனக் குறைவாய் அந்த மூதாட்டியை மிதிப்பதற்கிருந்தான்.

அவளைக் கைதூக்கி நடத்திக் கொண்டுபோய் நேரான வழியில் விடுவதற்காக இளங்குமரன் ஓடினான். அந்த முதுமகள் விழுந்த இடத்திலிருந்தவர்களே அதற்குள் அவளைத் துரக்கி விட்டிருக்கலாம், ஏனோ செய்யவில்லை. மிதிப்பதற்கிருந்த பல்லக்குத் தூக்கிக் கூட கீழே பார்த்துவிட்டு அருவருப்போடு துள்ளி விலகுவதையும் இளங்குமரன் கண்டான். சுற்றிலும் இருந்தவர்கள் கூசி விலகுவதையும், கீழே விழுந்திருப்பவளைப் பார்த்து ஏதோ இரைவதையும் கவனித்து இன்னும் வேகமாக நடந்து அவளை அணுகினான் அவன். அருகிற் போனதும் மற்றவர்கள் அவனைத் தடுத்தார்கள்.

“தொடாதீர்கள், அவளுக்குப் பெரு நோய்” என்று பல குரல்கள் இளங்குமரனை எச்சரித்தன. தன் உடம்பின் அழகால் தானே பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஓர் உதவி செய்ய நேர்ந்திருந்தால் அவன் பயந்து பின் வாங்கியிருப்பானோ, என்னவோ? இப்போது அப்படிப் பயந்து பின்வாங்கவில்லை. கையை முன் விரித்துக் குனிந்தான் அவன். அப்படிக் குனிந்தபோது, “ஐயோ! வேண்டாம். கீழே கிடக்கிறவள் உங்களைப் பெற்ற தாயாக இருந்தாலும் தீண்டத்தகாத நோய் இது” என்று இனிய குரல் ஒன்று மேலே பல்லக்கிலிருந்து ஒலித்தது. ஒரு விநாடி அந்தக் குரலுக்குரியவளைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தான் இளங்குமரன். பார்த்தபோது பார்க்கப்பட்ட முகத்தினால் தானே சிறிது வியப்பு அடைவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. சுரமஞ்சரியா என்று அவன் நாவிலிருந்து மிகவும் மெல்ல ஒலித்த பெயர் அவளுக்குக் கூடக் கேட்டுவிட்டது போலிருக்கிறது. “சுரமஞ்சரி இல்லை. அவளுடைய சகோதரி வானவல்லி” என்று அந்தப் பெண் மறுமொழி கூறினாள். அப்படி மறுமொழி கூறும்போது அவள் முகத்தில் பயத்தின் நிழல் படிந்து மறைவதைக் காண முடிந்தது. அந்த உணர்ச்சி நிழலில் அவள் வேறு எதையோ மறைத்துக் கொள்ள முயல்வது தெரிந்தது. இளங்குமரன் சிரித்துவிட்டு அவளை நோக்கி சொன்னான்:

“அம்மணி! நீங்கள் இதைப் பெருநோய் என்று சொல்லிப் பயப்படுகிறீர்கள். பயப்படுத்துகிறீர்கள்! இதை விடக் கடுமையான பெருநோய் ஒன்று இருக்கிறது. அதை உங்களுக்குச் சொல்லட்டுமா? பிறருடைய துன்பத்தைக் கண்டு மனம் இரங்காமல் தன்னுடைய கெளரவத்தையே நினைத்துக் கூசுகிற மனத்தில், அந்தக் கூச்சம்தான் பயங்கரமான பெருநோய். நெடிய வார்த்தைகளைச் சொல்லிப் பிறரை ஏவியும் கட்டளையிட்டும் ஆள்வதையோ, வேகமாகத் தேரிலும் சிவிகை யிலும் ஏறிப்போவதையோ தான் செல்வத்தின் இலட்சணங்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் செல்வமாக நினைப்பது துன்பப்படுகிறவர்கள் மேல் உண்டாகிற அதுதாபத்தையும் உதவி செய்யும் ஆவலையும்தான். மனத்தை அரித்தெடுக்கின்றதனால் ஆசைதான் ‘பெருநோய்’ என்கிறேன் நான். என் கண்களுக்கு முன்னால் இந்தப் பிரபஞ்சத்தில் என்னிலிருந்து அந்நியமாகவும் அயலாகவும் தெரிகிற எல்லா உயிர்களும் எந்தக் கணமும் சிறிது கூடத் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்று – மற்றவர்களுக்குத் துன்பம் வரக்கூடாது என்பதற்காக எனக்குள்ளேயே நான் மனப்பூர்வமாக அஞ்சி அநுதாபப்படுகிற உணர்வு தான் பெரிய செல்வமென நம்புகிறேன். பெற்ற தாயாயிருந்தாலும் தீண்டத் தகாத நோய் இது என்று பயமுறுத்துகிறீர்கள். நான் இந்த உலகத்தை இப்போது பார்க்கிற பார்வையில் எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன். எல்லாத் தாய்களிலும் பெண்ணைக் காண்கிறேனில்லை. எல்லாப் பெண்களிலும் என் தாயைக் காண்கிறேன். என் தாய்மையையே உணர்கிறேன்…”

அவனுடைய தத்துவத்தை இதற்கு மேல் கேட்க விருப்பமில்லாதது போல் அந்த அழகிய முகம் பல்லக்குக்குள் மறைந்தது. உடனே பட்டுத் திரையும் விழுந்து பல்லக்கை மூடியது.

உலகத்திலேயே அதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சியைத் தரக்கூடிய காரியம் வேறொன்று இல்லாதது போல் சிரத்தையோடு அந்த மூதாட்டியைத் தொட்டுத் தூக்கி ஊன்றுகோலைக் கையில் எடுத்துக் கொடுத்துச் சிறிது தொலைவு தழுவினாற் போலத் தாங்கி நடத்திக் கொண்டு போய், நெருக்கமில்லாத வழியில் அனுப்பி விட்டுத் திரும்பினான் இளங்குமரன். திரும்புமுன் அந்த முதுமகள் கூறிய நன்றியுரை இன்னும் தன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருப்பதாக உணர்ந்தான் இளங்குமரன்.

“பழுத்துத் தளர்ந்த பாகற் பழம்போல் இமைகள் தொங்கிப் பார்வையை மறைக்கிறதப்பா. நீ யாராயிருந்தாலும் உன்னை ஒருமுறை கண்குளிரப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் பார்க்க முடியவில்லை. என்னால் உன்னுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லையானாலும் அகத்தைப் பார்க்க முடிகிறது. பிறர்மேல் கருணை கொள்வதையே பெரு நிதியாகக் கருதும் நெஞ்சுக்கு உரியவன் எப்படி இருக்க முடியுமென்று நினைத்து நினைத்து – அந்த நினைப்பு களையே கோடுகளாக இழுத்து என் நெஞ்சில் உன் உருவத்தை எழுதிப் பார்க்கிறேன். அப்படி எழுதிப் பார்க்கும்போது சாந்தம் திகழும் கண்களை அகல விழித்து அவற்றில் பெருகும் கருணையையே அழகாகக் கொண்டும் நித்திய செளந்தரியத்தின் எல்லைகளாய் இரண்டு கைகளை நீட்டிக் கொண்டும் நீ உருவாகி நிற்கிறாய்!” என்று அந்த முதுமகள் நாத் தழுதழுக்கச் சொல்லியபோது அவளுடைய சொற்களில் மனமும் உணர்வுகளும் குழைந்து பரிவு பெருக நின்றான் இளங்குமரன். அவளுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டு மென்று அவன் நினைத்ததும் சொல்ல வரவில்லை. அவள் பேசியதைக் கேட்ட பின்பு அவனுக்குப் பேசவே வரவில்லை.

அந்த முதுமகள் நிறைய கற்றவளாய் இருக்க வேண்டுமென்று அவளுடைய சொற்களிலிருந்து புரிந்தது. அவளுடைய சொற்களுக்குப் பின் தன்னுடைய சொல் லாமையே – மெளனமே மதிப்பு நிறைந்ததென்று எண்ணிக் கொண்டு யானை நின்ற இடத்துக்குத் திரும்பி நடந்தான் அவன்.

அவ்வாறு நடக்கும்போது தன்னுடைய பழைய சொற்களையே மறுபடியும் நினைத்துக் கொண்டான். எல்லாருடைய தாய்களிலும் என்னுடைய தாய் இருக்கிறாள். என்னுடைய தாயாரைத் தெரிந்து கொள்கிற வரை எல்லாப் பெண்களையும் தாயாகவே பார்க்கிறேன் நான், தாயாகவே உணர்கிறேன்.

‘இன்று இந்த மூதாட்டிக்கு உதவினோம் என்று திரும்பத் திரும்ப நினைத்து இப்படி நினைப்பதாலேயே மனத்தில் கர்வச் சுமை ஏறிவிடுமோ’ என்ற பயத்தை உணர்ந்தவனாக யானைமேல் ஏறினான் இளங்குமரன்.

மீண்டும் புகழில் நனைந்து விடாமலும், மிதந்து விடாமலும் தன்னைத் தன் நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற விழிப்பு அவனுக்கு ஏற்பட்டது.

Previous articleRead Manipallavam Part 3 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 3 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here