Home Manipallavam Read Manipallavam Part 3 Ch6 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch6 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

64
0
Read Manipallavam Part 3 Ch6 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 3,nithiliavalli Part 3,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 3 Ch6 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch6 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றிக்கொடி

அத்தியாயம் 6 : திருவிழாக் கூட்டம்

Read Manipallavam Part 3 Ch6 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

நாளங்காடியில் நெருங்கி நின்ற பெருங்கூட்டம் கலைந்தபோது யவனர் சுமந்து நின்ற அந்தப் பல்லக்கும் மெல்ல நகர்ந்தது. ஆனால் பல்லக்குக்கு உள்ளேயிருந்தவர்களின் சிந்தனை மட்டும் அந்த இடத்தை விட்டுச் சிறிதும் நகரவே இல்லை. கூட்டத்தில் தடுமாறி விழுந்த கிழவியைக் கண்டதும் அவளைத் தூக்கி விடுவதற்காக அதிராமல், பதறாமல், பூ உதிர்வது போல் அவன் நடந்த நிதான நடையையும், புன்னகையுடனே தலை நிமிர்ந்து மனத்தை அரித்தெடுக்கின்றதனால் ஆசைதான் பெருநோய் – என்று எண்ணத்திலே தைக்கும்படி வார்த்தைகளைச் சொல்லிய துணிவையும் நினைத்து நினைத்து, நினைவு அந்த இடத்திலிருந்து நகராதபோது பல்லக்கு மட்டும் நகர்ந்து முன்னேறிச் சென்றது. அதுவரை உட்கார்ந்திருந்த தோழி வாய்திறந்து மெல்லக் கேட்டாள்:

“அது ஏனம்மா அப்படிப் பொய் சொன்னிர்கள்? ‘சுரமஞ்சரியா’ என்று அவர் கேட்டபோது இவ்வளவு நீண்டகால இடைவெளிக்குப் பின் முதல் முறையாக அவரைச் சந்திக்கிற நீங்கள் ஆர்வத்தை மறைக்காமல் ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டிருக்கலாமே? எதற்காக வானவல்லியின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே மறைத்துக் கொண்டீர்கள்…?”

“மாளிகையிலிருந்து வெளியேறி வருவதற்கே வாய்ப்பில்லாமல் என்னைத் தந்தையார் சிறை வைத்திருக்கிறார் என்பதை அதற்குள் மறந்துவிட்டாயா? இந்திர விழாவின் முதல்நாளாகிய இன்றைக்கு நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் ஆசையை அடக்க முடியாமல் அங்கே வானவல்லியைச் சுரமஞ்சரியாக நடிக்கச் செய்துவிட்டு இங்கே நான் வானவல்லியாக நடிப்பதாய் ஒப்புக்கொண்டு புறப்பட்டதைக் கூடவா அதற்குள் மறந்துவிட்டாய்?” என்று இரகசியம் பேசு கிறாற் போன்ற மெல்லிய குரலில் கேட்டாள் சுரமஞ்சரி.

“ஒன்றும் மறக்கவில்லை. மறப்பதற்கு எனக்குப் பித்துப் பிடித்துவிட்டதா? என்ன? நான் சுரமஞ்சரி தான் என்று நீங்கள் அவரிடம் ஒப்புக் கொள்வதனால் உங்கள் இரகசியம் ஒன்றும் வெளியாகிவிடப் போவதில்லையே? இவ்வளவு காலத்துக்குப் பின்பும் உங்களை நினைவு வைத்துக்கொண்டு கேட்டவரிடம் ஏமாற்றமளிக்கும் மறுமொழியை நீங்கள் கூறியிருக்க வேண்டாமே என்றுதான் சொன்னேன், அம்மா.”

“என்னுடைய மறுமொழி அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் என்றா நீ நினைக்கிறாய்?. அப்படி நீ நினைப்பதாயிருந்தால் உன்னைப் போல் உலகம் தெரியாதவள் வேறு யாரும் இருக்க முடியாது. எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன். எல்லாத் தாய்களிலும் பெண்ணைக் காண்கிறேனில்லை என்று நெகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிற மனிதரிடத்தில் ‘நான்தான் சுரமஞ்சரி’ – என்பதைச் சொல்வதனால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது?”

“பயன் விளைய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமா? பெரு நோய்க்காரியான அந்தக் கிழவியைத் தொட வேண்டாமென்று நீங்களாகத்தானே வலுவில் அவரை எச்சரித்தீர்கள். என்ன பயனை எதிர்பார்த்து அந்த எச்சரிக்கையைச் செய்தீர்கள், அம்மா?”

வசந்தமாலையின் இந்தக் கேள்விக்குச் சுரமஞ்சரியால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் நாணித் தலைகுனிந்தாள்.

“ஒரு பயனையும் எதிர்பார்த்து எச்சரிக்கை செய்யவில்லை. ஏதோ மனத்தில் தோன்றியது, செய்தேன்” என்று வெட்கத்தினால் ஒடுங்கிய குரலில் அவளிடமிருந்து பேச்சுப் பிறந்தது.

“ஏதோ தோன்றியதென்று சொல்லிவிட்டுத் தோன்றியிருப்பதை உங்களுக்குள்ளேயே அந்தரங்கமாக வைத்துக்கொள்ள முயல்கிறீர்களே? ஏதோ தோன்றியதென்றுதான் காமன் கோவிலை வலம் வந்தீர்கள். ஏதோ தோன்றியதென்றுதான் அன்றைக்கு அந்த ஓவியனிடத்தில் மடல் எழுதிக் கொடுத்து அனுப்பினர்கள். ஏதோ தோன்றியதென்றுதானே முதன் முதலாக அவரைச் சந்தித்த இந்திர விழாவின்போது மணிமாலையைக் கழற்றிப் பரிசளிக்கத் துணிந்தீர்கள். இப்படியே அவரைப் பார்க்கும்போதும் நினைக்கும் போதும் உங்களுக்கு ஏதோ தோன்றிக்கொண்டே இருக்கிறது.”

இதைக் கேட்டு சுரமஞ்சரி சிரித்தாள். அவளுடைய கண்களில் மென்மையான உணர்வுகளின் சாயல்கள் மாறி மாறித் தோன்றின. வெளிப்படலாமா வேண்டாமா என்று தயங்குவது போல் இதழ்களில் ஏதோ ஒரு கனிவு நிறைந்து நின்று தயங்கியது.

“நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன் அம்மா! பூமியின் வறட்சியைத் தணிப்பதற்காக மேகங்கள் கனியும் வானத்தைப்போல் உங்கள் வதனத்திலே எதற்காகவோ நளினமான உணர்வுகள் கணிகின்றனவே! நீங்கள் இந்தச் சில விநாடிகளில் அதிகமான அழகைப் பெற்றுவிட்டாற் போல் தோன்றுகிறீர்கள், அம்மா! நான் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இதோ என் தலைக்கு மேல் பல்லக்கிற் பதித்திருக்கும் கண்ணாடியில் நீங்களே உங்களுடைய முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

சுரமஞ்சரி தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். வசந்தமாலை கூறியது மெய்தான், தன் முகத்தில் மலர்ச்சி உண்டாகியிருப்பதைச் சுரமஞ்சரி தானே உணர்ந்தாள். தனக்கு அந்த மலர்ச்சியைத் தந்தவனைப் பற்றி அவளுடைய சிந்தனைகள் படர்ந்தன. இப்போது கொடிபோல் இளைத்திருந்த அவன் தோற்றமும், தீயில் உருகி ஓடும் மாற்றுக் குறையாத பொன்னின் நிறமும், படிப்பினால் ஒளி பெற்றிருக்கும் முகமும் கண்களும் அவள் நினைவில் ஒவ்வொன்றாகத் தோன்றின. ஒவ்வொரு புள்ளியாக வைத்துக் கொண்டு இறுதியில் எல்லாப் புள்ளிகளையும் கோடுகளால் இணைத்துக் கோலமாக்குவதுபோல அவனுடைய தனித்தனி அழகுகளையும் தனித்தனிச் சிறப்புகளையும் ஒவ்வொன்றாக எண்ணிக் கூட்டி மனதுக்குள்ளேயே அந்த ஆண்மைக் கோலத்தை வரைந்து பார்த்தாள் அவள். நாளுக்கு நாள் அவன் தன்னிடமிருந்து நீண்ட தொலைவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை எண்ணியபோது துக்கத்தினால் நெஞ்சை அடைத்தது. கண்களில் நீர் நெகிழ்ந்தது. மனத்தை அடைத்த துக்கத்தை வார்த்தைகள் வெளிக் கொணர முடியவில்லை. நினைத்தாள் – சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல் இந்திரவிழாவின் முதல்நாள் ஒன்றில் மற்போரில் வென்ற வீரனாக அவனைச் சந்திக்க நேர்ந்ததையும் இன்று மீண்டும் சொற்போரில் வெல்லும் வீரனாகச் சந்திப்பதையும், இந்த இரண்டு சந்திப்புக்களுக்கும் நடுவில் எப்போதோ ஒரு கணத்தில் தன் மனத்தையே அவன் வெற்றி கொண்டதையும் அதன்பின் கணம் கணமாகத் தன் மனமே அவனுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருவதையும் – சேர்த்து நினைத்தாள் சுரமஞ்சரி. முதற் பார்வையிலேயே தன் கண்களில் நிறைந்து கொண்ட அந்தச் சுந்தர மணித் தோள்களை நினைத்தபோது அவள் நெட்டுயிர்த்தாள்.

‘மழையும் புயலுமாகக் கழிந்த ஏதோ ஓர் இரவில் கடலின் நடுவே கப்பல் கரப்புத் தீவில் நான் சாய்ந்து கொள்வதற்கு அணையாக நீண்ட கை இது. இந்த அழகிய கைகள் உதவி செய்வதற்கு மட்டுமே முன் விரிகின்றன. அன்புடன் தழுவிக்கொள்ள நீள்வதில்லையே என்று எண்ணி எண்ணி நான் பெருமூச்சு விடுவதுதான் கண்ட பயன். துன்பப்படுகிறவர்களின் துன்பத்தைக் களை வதற்காக விரைந்து முன் நீளும் இந்தக் கைகள் அன்பு செலுத்துகிறவளுடைய அன்பை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் ஏன் தயங்குகின்றனவோ? உடம்பெல்லாம் அழுகி நாறும் பெருநோய் பிடித்த கிழவியைத் தீண்டுவதற்கும் கூசாத கைகள் தன்னையே நினைத்துத் தனக்காக ஏங்கிக்கொண்டும் தவித்துக் கொண்டுமிருக்கும் பெண்ணுக்கு முன்னால் மட்டும் ஏன் துவண்டு போய் விடுகின்றனவோ? ‘துன்பப்படுகிறவர்களுக்கு உதவும் அது தாபத்தையே செல்வமாக நினைக்கிறேன்’ என்கிறாரே. நான் இவரையே எண்ணி ஏங்கித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேனே. எனக்கு இவரிடமிருந்து என்ன அநுதாபம் கிடைத்தது? எதிர்பார்க்கிற இடத்திலிருந்து கிடைக்க வேண்டிய அன்பைப் பெற முடியாமல் வேதனைப்படுகிற என்னுடைய காதலும் ஒரு துன்பந் தானே?’

தனக்குள் தானே சுரமஞ்சரி இப்படி நினைத்துக் கொண்டிருந்தபோது பல்லக்கின் திரையை விலக்கி வெளியில் பார்த்துக் கொண்டிருந்த வசந்தமாலை, “அம்மா! அம்மா! அதோ அங்கே பாருங்கள்” என்று பரபரப்போடு கூறிக் கவனத்தை வெளிப்புறமாகத் திரும்பினாள். சுரமஞ்சரி வெளியே தலை நீட்டிப் பார்த்தாள். கூட்டத்தில் ஓவியன் மணிமார்பனும் ஓர் அழகிய இளம் பெண்ணும் கைகோர்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

நெடுங்காலத்துக்குப் பின் அவனைக் கண்ட ஆவலை அடக்க முடியாமல் “வசந்தமாலை! மணிமார்பனைக் கூப்பிடடி. அவரைப் பற்றிய விவரங்களை யெல்லாம் மணிமார்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றாள் சுரமஞ்சரி, வசந்தமாலை கூப்பிடுவதற்குள் மணிமார்பனும் அவனுடன் சென்ற பெண்ணும் கூட்டத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். வசந்தமாலை “ஐயா ஓவியரே!” என்று விளித்த குரல் கூட்டத்திலிருந்த வேறு பலரைப் பல்லக்கின் பக்கமாகத் திரும்பிப் பார்க்கச் செய்ததைத் தவிர வேறு ஒரு பயனும் விளையவில்லை. வசந்தமாலை ஏமாற்றத்தோடு சுரமஞ்சரியிடம் அலுத்துக் கொண்டாள்:

“எப்போதுமே திழவிழாக் கூட்டத்தில் இந்தத் தொல்லைதான். நாம் யாரையோ அழைத்தால் வேறு யாரோ திரும்பிப் பார்க்கிறார்கள்.”

“வாழ்க்கையே திருவிழாக் கூட்டத்தில் அழைப்பது போல்தான் இருக்கிறதடி வசந்தமாலை! நாம் யாரை அழைக்கிறோமோ அவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. யாருடைய செவிகளில் கேட்க வேண்டும் என்பதற்காக நம்முடைய இதயத்திலிருந்து ஆசையும் நாவிலிருந்து சொற்களும் பிறக்கின்றனவோ, அவருடைய செவி களுக்கு அவை எட்டுவதே இல்லை. யாரை நினைத்தோ கூவுகிறோம். நினைவுக்குக் காரணமாகாத யாரோ பதிலுக்குத் திரும்பிப் பார்க்கிறார்கள். யாருக்காகவோ கண் திறக்கிறோம். ஆனால் திறந்த கண்களுக்கு முன்னால் வேறு யாரோ தென்படுகிறார்கள். என்ன உலகமோ? என்ன வாழ்க்கையோ? எல்லாமே சாரமில்லாமல் தெரிகிறதடீ!” என்று தன் தலைவி கூறியபோது அவளுடைய வார்த்தைகள் இதயத்தின் ஆழத்தில் குவிந்து கிடக்கும் சோகத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து கொட்டுவதை வசந்தமாலை உணர்ந்தாள்.

“மாளிகையிலிருந்து வெளியேற முடியாமல் இத்தனை காலம் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் இதே வார்த்தைகளைத்தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இன்று வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றிப் பார்க்கும் போதும் இதே வார்த்தைகளையே சொல்லுகிறீர்களே?”

“அடி அசடே! உடம்பைக் கட்டிப் போடுவதுதான் சிறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? மனம் விரும்புவதையும் நினைப்பதையும் அடைய முடியாமையே ஒரு சிறைதான்.” இப்படிக் கூறித் துயரத்தைத் தவிர வேறெந்த உணர்வையும் காட்டாத வறட்சியான தொரு நகை புரிந்தாள் சுரமஞ்சரி. தலைவியின் மனம் அளவற்று நொந்து போயிருப்பது தோழிக்குப் புரிந்தது. அவள் பேச்சைத் திருப்பி வேறு வழிக்குக் கொண்டு போனாள்: “விரைவில் மாளிகைக்குத் திரும்பிவிடுவது நல்லதம்மா! உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும்கூட இந்தப் பக்கமாகத்தான் தேரில் புறப்பட்டு வந்திருக்கிறார்களாம். எங்கேயாவது அவர்கள் பார்வையில் நாமிருவரும் தென்பட்டால் வம்பு வந்து சேரும்” என்று தலைவியிடம் மெல்லக் கூறிவிட்டு வெளியே பல்லக்குத் தூக்குகிறவர்களுக்குக் கேட்கிறபடி இரைந்த குரலில் வேகமாகச் செல்வதற்கான கட்டளையை இட்டாள் வசந்தமாலை. பல்லக்குத் தூக்குகிறவர்கள் நடையைத் துரிதமாக்கிக் கொண்டு முன்னேறினார்கள்.

“இந்திர விழா முடிவதற்குள் மணிமார்பனை எப்படியும் சந்தித்துவிட முயற்சி செய்ய வேண்டுமடி, வசந்தமாலை.”

“முயற்சி செய்வதைப் பற்றித் தடையில்லை. ஆனால் முயற்சி நிறைவேறுவதும், நிறைவேறாமற் போவதும் நம் கையில் இல்லை.”

“எதற்கும் முயன்று பார்க்கலாமே! இந்திர விழா முடிவதற்குள் இன்னும் ஒருநாள் வானவல்லி சுரமஞ்சரியாகவும் சுரமஞ்சரி வானவல்லியாகவும் நடித்தால் போயிற்று?”

“நம்முடைய சாமர்த்தியத்தை நகைவேழம்பரும் உங்கள் தந்தையாரும் புரிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ செய்யாதவரை எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் அம்மா! திருவிழாக் கூட்டத்தில் நடப்பது போல நாம் சிறிதும் எதிர்பாராமல் அவர்கள் இருவரும் நம் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டால் எல்லாம் சீரழிந்து போகுமே?” என்று பயத்தோடு பதில் சொன்னாள் வசந்தமாலை.

Previous articleRead Manipallavam Part 3 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleReaஅத்தியாயம் 7 : பூக்களும் பேசின!d Manipallavam Part 3 Ch7 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here