Home Manipallavam Read Manipallavam Part 4 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

66
0
Read Manipallavam Part 4 Ch1 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 4 Ch1 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

நான்காம் பாகம் – பொற்சுடர்

அத்தியாயம் 1 : அன்பு என்னும் அமுதம்

Read Manipallavam Part 4 Ch1 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் -நான்காம் பருவம்
பொற்சுடர்
பொருள்களில் பொன்னுக்கு மட்டும் தனித்தன்மை ஒன்றுண்டு. தன்னுடைய பிரகாசம் பிறரைச் சுடாமல் தனக்குப் பெருமையும் பிறர்க்கு ஒளியும் தருகிற ஒரே ஒரு திரவியம் தங்கம். தருக்க நூல்களில் பொருள்களுக்கு இலட்சணம் சொல்லும்போது தங்கத்தை நெருப்பு என்றே சொல்கிறார்கள். தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுக முடியாமை, தன்னிடமிருந்து ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தூயதாக்குதல் – ஆகிய இவை நான்கும் தங்கத்துக்கும், நெருப்புக்கும் ஒத்த குணங்கள். நெருப்பு என்பது சுடுகின்ற பொன். பொன் என்பது சுடாத நெருப்பு. வெதும்பி வாடி இளக இளகத் தம் ஒளி வளருதல் என்பது இரண்டுக்கும் பொதுத் தன்மை. சுடுவதும், சுடாமலிருப்பதும்தான் நெருப்புக்கும் பொன்னுக்குமுள்ள ஒரே வேற்றுமை.

தொட்டால் சுடுகின்றது என்ற ஒரே காரணத்தால் பொன்னைவிடப் பிரகாசமுள்ள நெருப்புக்கு மதிப்பும் விலையும் இல்லை. சுடாதது என்ற ஒரே காரணத்திற்காக நெருப்பினும் குறைந்து குளிர்ந்த பிரகாசமுள்ள பொன்னுக்கு மதிப்பு விலை எல்லாம் உண்டு. பொன்னுக்கும் மணிக்கும் முத்துக்கும் வைர வைடுரியங்களுக்கும் – அவற்றைச் சார்ந்துள்ள பிரகாசத்தின் காரணமாகத்தான் மதிப்பு என்றால் பிரகாசத்தையே மூலவடிவமாகக் கொண்ட அக்கினிக்கு இவற்றைவிட அதிகமான மதிப்பு இருக்க வேண்டும். நெருப்பாகிய சுடுகின்ற பொன்னுக்கு விலை இல்லை. பொன்னாகிய சுடாத நெருப்புக்கு விலை உண்டு. நிலம், நீர், தீ, காற்று, காலம், திக்கு, ஆன்மா, மனம் என்று உலகத்துப் பொருள்களை ஒன்பது வகையாகப் பிரித்திருக்கிறது தருக்கம். இந்த ஒன்பது வகைகளில் தங்கம் என்னும் ஒளிமிக்க உலோகம் எவ்வகைக்குள் அடங்குமென்று ஆராய்ந்தால் நெருப்பில் அடங்கும். நெருப்பாய் அடங்கும். நெருப்பினாலே அடங்கும்.

என்றும் தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பால் தூயதாக்குதல் – ஆகிய பொன்னின் குணங் களோடு தன் கண்களின் நோக்கத்தாலேயே தீமைகளை எரிக்கும் சுடரின் குணத்தையும் சேர்த்துப் பெற்றிருக்கிற காரணத்தினால் இந்தக் கதையின் நாயகனாகிய இளங்குமரனின் நான்காம் பருவத்து வாழ்வைப் பொற்சுடராகவே உருவகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. பொன்னுக்கு விலையும் மதிப்பும் எப்போது ஏற்பட்டிருக்கும்? யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கும்: பொன்னின் ஒளியில் மதிப்பு வைக்கத் தெரிந்து கொண்ட ஒரு முதல் மனிதனும் அதைத் தொடர்ந்து அதன்மேல் அதே மதிப்பை வைக்கப் பழகி விட்ட முடிவற்ற பல மனிதர்களும் பொன்னைப் பற்றி எண்ணி எண்ணிச் சுமந்துவிட்ட எண்ணத்தின் கனம்தான் பொன்னின் கனம், பொன்னின் விலை! இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால் பொன்னுக்கு விலை இல்லைதான்.

“அப்படியானால் பொன்னை மதித்து மதித்துப் பொன்னின் ஒளிக்கும் அடிமையாகி இருண்டு விட்ட மானிட இனத்தின் கண்களுக்குப் பொன்னை விடப் பிரகாசமான எதுவும் இன்றுவரை படவே இல்லையா?”

“இல்லை.”

“பொன்னைவிடப் பிரகாசமான ஒரு பொருளிலிருந்துதான் பொன்னே பிறந்தது!”

“அப்படியா? பொன்னுக்கும் முன் மூலமான அந்தப் பொருள் எது என்று தெரிந்தால் அதைப் பொன்னைக் காட்டிலும் அதிகமாக மதிக்கத் தொடங்கி விடலாமே?”

“இனிமேல்தான் தொடங்க வேண்டும் என்பதில்லை! அதை நாம் மதிக்கத் தொடங்கிய போதுதான் நமது மறைகளின் முதற் குரல் திசைகளின் செவிகளில் முதற் கேள்வியாகி ஒலித்தது. அதை நாம் மதிக்கத் தொடங்கிய போது தான் நமது வேள்விச் சாலையில் அது முதல் தெய்வமாய் வளர்ந்து எரிந்து கொழுந்து விட்டது. அதை நாம் மதிக்கத் தொடங்கிய போது தான் நம்முடைய மதிப்பு உண்மையான ஒளியைப் புரிந்து கொண்டு மதித்துப் போற்றியது.”

“அதற்குப் பெயர்?”

“சுடர்.”

“அந்தச் சுடர் பொன்னின் ஒளியிலும் இருக்கிறது அல்லவா?”

“இருக்கிறது! ஆனால் நெருப்பின் சுடரில் பொன்னிலிருப்பதைக் காட்டிலும் அதிகமான ஒளி இருக்கிறது. இயற்கைப் பொருள்களில் ஒன்றாகிய நெருப்பின் ஓர் ஒளிக்கீற்றுதான் தங்கத்திலும் தங்கமாக இருக்கிறது. தங்கமில்லாமலும் உலகில் ஒளி உண்டு. உலகில் ஒளி இல்லாவிட்டால் தங்கமே இல்லை. ஒளி இன்றேல் தங்கத்தை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாற் போலத் தங்கமாக மதித்துப் புரிந்து கொண்டிருக்க முடியாது.”

“தங்கத்திலிருந்து சுடரை மட்டும் பிரித்து விட்டால்?”

“சுடரிழந்த தங்கம் அப்படி அதை இழந்து விட்ட காரணத்தால் மண்ணாயிருக்கும்.”

“அதாவது மண்ணில் சுடர் கலவாது தங்கம் இல்லை! தங்கம் கலவாத சுடர் உண்டு.”

“தங்கம் மண்ணாயிருந்தால் அதைத் தங்கமாக மதிக்கக் காரணமாயிருக்கும் ஒளியை இதில் காண முடியாது. மண் கலவாத தனி ஒளியாயிருந்தால் அதுவே சுடும்! தங்கம் ஒளியாயிருக்கிறது. சுடவும் இல்லை. அதனால்தான் சுடுகின்ற ஒளியைக் காட்டிலும் தங்கமாகிய சுடாத ஒளிக்கு அதிக மதிப்பு.”

இந்தக் கதையின் தலைவனும், திருநாங்கூரடிகள் உருவாக்கிய காவிய நாயகனுமாகிய இளங்குமரன் ஞானப் பசி தீர்ந்தும் தீர்த்தும் வெற்றிக் கொடி நாட்டிய பின் மணிபல்லவத்துக்குப் புறப்படுகிற சமயத்தில் பொன்னாகவும் இருந்தான், சுடராகவும் இருந்தான். முழுமையான பொற்சுடராகவே இருந்தான்.

தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பால் தூயதாக்குதல் ஆகிய பொன்னின் குணங்களைப் பெற்றுத் தானே பொன்னாகி ஒளிரும் ஒருவன் வேறு பொன்னின் மேல் ஆசைப்பட என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை தான்! அவன் எல்லா ஆசைகளையும் உதிர்த்துவிட்டு நின்றபோது எல்லாருடைய ஆசைகளும் அவனைச் சூழ்ந்தன. இளங்குமரன் என்ற அந்தப் பொற்சுடருக்காக முல்லை ஏங்கினாள். சுரமஞ்சரி தவித்தாள். தன்னுடைய பெருமாளிகை நிறையக் குவிந்திருந்த அவ்வளவு பொன்னிலும் காணாத சுடரை இளங் குமரனுடைய கண்களில் கண்டு தவித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்.

தான் சார்ந்த இடங்களை ஒளியுறச் செய்யும் பொன்னைப் போல் அவர்கள் இருவருடைய ஆசை யிலும் தான் இருந்து – தன்னுடைய ஆசையில் அவர்கள் இருவரும் இல்லாமல் – அவர்களுக்கு ஒளி தந்து கொண்டிருந்தான் இளங்குமரன்.

யாரை அல்லது எதை ஆசைப்படுகிறோமோ அவர் அல்லது அது பரிசுத்தமாக இருந்தால் அந்த ஆசை விளைந்து வளர இடமாக இருப்பதன் காரணமாகவே அவை நிகழ்கின்ற மனத்துக்கும் முகத்துக்கும் அழகும் ஒளியும் உண்டாகும்! தெய்வத்தை ஆசைப்படுகிற பக்தனின் முகம், குழந்தையை ஆசைப்படுகிற தாயின் முகம், மெய்யான மாணவனை ஆசைப்படுகிற குருவின் முகம், இவைகளுக்கு வரும் அழகைப்போல் இளங்குமரனை ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அவனுடைய ஒளியையும் தங்களுடைய ஒளியையும் சேர்த்தே வளர்த்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள்.

உலகத்தில் பொன்னுக்குப் பொன்னாசை இல்லை. இளங்குமரனும் அப்படிப் பொற்சுடராக இருந்தான். தன்னுடைய மிகுந்த ஒளியினால் பிறருடைய ஆசைகளையும் தன்னையறியாமலே எரித்துச் சுத்தமாக்கிக் கொண்டிருந்தான் அவன். பூம்புகார்த் துறைமுகத்திலிருந்து கப்பல் நகர்ந்தபோது தன்னையறியாமலே தான் முல்லையை மனம் வெதும்பச் செய்திருப்பதை உணர்ந்த சில கணங்களில் மட்டும் சுடுகின்ற நெருப் பாகவும் தான் இருந்து விட்டது போல் தோன்றியது இளங்குமரனுக்கு. அதற்காகத் தனக்குள் வருந்தினான் அவன்.

‘வாழ்க்கையில் பிறரோடு பழகும்போது கோடைக் காலத்து வெயில்போல் பழகினாலும் துன்பம்; குளிர் காலத்துச் சுனை நீர் போலப் பழகினாலும் துன்பம். கோடைக் காலத்தில் குளிர்ந்த நீர் போலவும், குளிர் காலத்தில் நல்ல வெயில் போலவும், பொருந்திச் சூழ்ந்துள்ளவர்கள் மனம் வெதும்பாமலும் ஒருகால் தன் மனத்தைச் சூழ்ந்துள்ளவர்கள் வெதும்பச் செய்து விட்டால் அதைத் தாங்கிக்கொண்டு மறந்தும் – வாழத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்…’ என்று பொது வாழ்வுக்கு வேண்டிய ஒப்புரவு பற்றித் திருநாங்கூர் அடிகள் பலமுறை கூறியிருந்த பழைய அறிவுரையை எண்ணிக்கொண்டான் இளங்குமரன்.

முரடனாயிருந்து ஒளியற்றவனாகத் தோன்றினா லும் பிறர் வெறுப்பையும் – தூய்மையோடு பொற்சுடராயிருந்து ஒளிபரப்பினால் – பிறருடைய ஆசைகளையும், மோகங்களையும் எதிர்பார்த்து விலக்கிச் சுடாத நெருப்பாகவும் சுடுகின்ற நெருப்பாகவும் மாறிமாறி வாழ நேரும் விந்தையை எண்ணியபடியே கப்பலின் மேல் தளத்திலிருந்து வானத்தைப் பார்த்தான் இளங்குமரன். அவனுடைய முகத்திலும், தோளிலும், மார்பிலும் காலை வெயில் பட்டது. அவை தங்கங்களாகிய அங்கங்களாய் மின்னிப் பொற்சுடர் பரப்பின. உலகப் பொருள் யாவற்றுக்கும் ஒளி தரும் கதிரவனை வணங்கினான் ஒளிச் செல்வனாகிய இளங்குமரன்.

மணிபல்லவம் -நான்காம் பருவம்

  1. அன்பு என்னும் அமுதம்
    கடலில் தென்திசை நோக்கி விரைந்து கொண்டிருந்த அதே கப்பலில் இளங்குமரன் நின்றுகொண்டிருந்த அதே மேல் தளத்தில் பாய்மரத்தின் மறு பக்கமாக ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். இளங்குமரன் சிந்தனையில் ஆழ்ந்த மனத்தினனாக அமைதியாய் நின்று கொண்டிருந்ததனால் அவன் அங்கு இருப்பதையே மறந்து கீழே இறங்கிப்போய் விட்டதாக எண்ணிக்கொண்டு மணிமார்பனின் மனைவி தன் மனத்தில் இருந்த சில கருத்துக்களைக் கணவனிடம் பேசத் தொடங்கினாள்:

“என்ன இருந்தாலும் உங்கள் நண்பருக்கு இந்தக் கல்மனம் ஆகாது. துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கப்பலில் ஏறிக்கொள்ளும்போது அவர் வேண்டு மென்றே அந்தப் பெண்ணைப் புறக்கணித்ததை நான் கவனித்தேன். அவர் விரும்பியிருந்தால் ‘போய் வருகிறேன் முல்லை!’ என்று அந்தப் பெண்ணிடமும் இரண்டு வார்த்தைகள் பேசியிருக்கலாமே.”

“பெண்ணே! முதலில் நீ இளங்குமரனை என்னுடைய நண்பர் என்று சொல்வதை இந்தக் கணமே மாற்றிக் கொள்ள வேண்டும். நான் அவரை என்னுடைய நண்பராக நினைத்துக் கொண்டிருந்த காலமும் உண்டு. இப்போது அப்படி நினைப்பதற்கே பயமாயிருக்கிறது எனக்கு. சிலவற்றிற்குக் குருவாகவும், இன்னும் சிலவற்றுக்குத் தெய்வமாகவும் இப்போது அந்த மனிதரை நான் பாவிக்கிறேன். அவரிடம் குற்றம் இருப்பதாக நினைப்பதற்கே நான் பயப்படுகிறேன். நீயோ குற்றம் இருப்பதாக வாய்திறந்து சொல்வதற்கே துணிகிறாய்! வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லையிடம் அவர் பேசாமலே வந்ததற்கு நீயாகவே விளைவு கற்பிக்கிறாய்! எல்லாவற்றிலுமே குணம்தான் நிரம்பியிருக்கிறதென்று முற்றிலும் குணமாகவே பாவிப்பது எப்படிக் கெடுதலோ, அப்படியே முற்றிலும் குற்றமாவே பாவிப்பதும் கெடுதல். அவர் அந்தப் பெண்ணிடம் பேசாமலிருந்தது குற்றமென்று நீ எப்படிச் சொல்ல முடியும்? மெளனத்துக்குப் பொருள் விரோதமென்று கொண்டால், நான் உன்னிடம் பேசாமல் இருந்த சமயங்களில் எல்லாம் கூட உன்னோடு விரோதமாயிருந்திருக்கிறேன் என்று நீ நினைக்கலாம்.”

“நான் அப்படி நினைத்தால் தவறென்ன? கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர் மெளனமாகி விட்டால் அந்த மெளனத்திற்குக் காரணம் இல்லாமற் போகாது. பேச்சுக்குக் காரணமும், அர்த்தமும் இருப்பதுபோல் பேசாமைக்குக் காரணம், அர்த்தம் எல்லாம் இருந்தே ஆக வேண்டும்.”

“பேச்சுக்கும், பேசாமைக்கும் ஆகிய இரண்டுக்குமே அர்த்தம் இல்லை என்று அவரே சற்றுமுன் வளநாடுடையாரிடம் கூறியதைக் கேட்கவில்லையோ நீ? மெளனத்திற்கு ஒரே அர்த்தம் மெளனமாயிருப்பது என்பதுதான்…”

“அந்தப் பெண் அவருடைய மெளனத்தை அப்படி எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லையே! கப்பல் புறப்படுவதற்கு முன் நான் அவளிடம் விடை பெறுவதற்குச் சென்றேன். அப்போது அவள் எனக்கு விடை கொடுப்பதில் அசிரத்தையும், அவர் தன்னிடம் விடை பெறுவதற்கு வரமாட்டாரா என்று கவனிப்பதில் சிரத்தையும் காண்பித்தபடி நின்றிருந்தாள். அவளுடைய கண்களிலும் முகத்திலும் நம்பிக்கை அழிந்து – அது அழிந்த இடத்தில் ஏமாற்றம் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது.”

“அப்படியா? நீ சொல்வதைக் கேட்டால் முல்லை அப்போது நின்ற நிலை சித்திரத்திற்கு நல்ல காட்சியாக அமைந்திருக்கும் போல் தோன்றுகிறதே. ஒருணர்வு அழிந்து இன்னோர் உணர்வு பிறக்கின்ற காலத்து முகபாவத்தை அப்படியே சித்தரிக்க முடிந்தால் அது ஒவியத் துறையில் ஈடுபட்டிருப்பவனுக்கு மாபெரும் வெற்றி பெண்ணே! இருள் அழிந்து ஒளி பிறக்கிற நேரத்தையும், ஒளி அழிந்து இருள் பிறக்கிற நேரத்தையும் இயற்கை வரைந்து காட்டுகிறாற்போல் முழுமையாய் வரைந்து காட்டுகிற ஓவியனோ, கவிஞனோ உலகத்தில் இதுவரை ஏற்படவில்லை!”

“இந்தக் கலைஞர்களே இப்படித்தான். பிறருடைய துக்கத்திலிருந்து தேடி தங்கள் கலையைப் பிறப்பிக்கிறார்கள். ‘அவர் தன்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் புறக்கணித்தது போலப் போகிறாரே’ என்று அந்தப் பெண் முல்லை துயரக் கோலத்தில் நின்றாள் என்று சொன்னால், அந்தக் கோலம் சித்திரத்திற்கு நன்றாக இருக்குமே என்று வாய் கூசாமல் நீங்கள் பதில் சொல்லுகிறீர்களே? இப்போது நீங்கள் கூறியதை அந்தப் பெண்ணின் தந்தை கேட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்!”

“பெண்ணே! இப்படி நினைப்பதாயிருந்தால் நீ என்னைப்போல் ஒரு கலைஞனுக்கு மனைவியாக வாய்த்திருக்கக் கூடாது. ஒவ்வொரு கலைஞனுடைய மனமும் பேசாத யாழ். பிறருடைய துன்பங்களாகிய இளைத்த கைகளின் மெலிந்த விரல்கள் அந்த யாழை வருடும்போதுதான் அது பேசுகிறது. அதில் கலைப் பண்கள் பிறக்கின்றன. திருமாலும், திருமகளும், இராமனும், சீதையுமாக மண்ணில் பிறந்து மனிதர்களாக வாழ்ந்து மனிதர்களின் துன்பத்தை மனிதர்களுக்கே உரிய குறைந்த பலத்தோடு தாங்கியிராவிட்டால் எந்தக் கவியின் கையாவது இராமாயணம் எழுதத் துடித்திருக்குமா பெண்ணே?”

“சிறிது காலமாக உங்கள் நண்பரோடு இருந்து அவர் பேசிய பேச்சுக்களையும், புரிந்த சமய வாதங்களையும் கேட்டாலும் கேட்டீர்கள் – இப்போது நீங்களே அவரைப்போலப் பேசத் தொடங்கிவிட்டீர்கள்.”

“என்ன செய்வது? கண்ணாடி எல்லா உருவத்தையும் தனக்குள் வாங்கிக் காட்டுகிறாற் போலப் பரிசுத்தமானவர்கள் தங்களோடு பழகுகிறவர்களை யெல்லாம் சார்ந்து தன் வண்ணமாகச் செய்து விடுகிறார்கள்!”

இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் தலை குனிந்தாள் மணிமார்பனின் மனைவி.

“பதுமை! இதோ இப்படி என்னைப் பார்! உனக்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்லித் தருகிறேன்“ என்று தன் மனைவியை அவளுடைய அழகிய பெயரைச் சொல்லி அழைத்தான் மணிமார்பன். பிடரியில் வேர்க் கும்போது எங்கிருந்தோ தற்செயலாகக் குளிர்ச்சியை வீசிக் கொண்டு சில்லென்று பாய்ந்து வந்த தென்றலைப் போல அவன் தன்னைப் பெயர் சொல்லி அழைத்த மகிழ்ச்சியில் குழைந்து நிமிர்ந்து பார்த்தாள் பதுமை. ஓவியன் மணிமார்பன் சிரித்துக்கொண்டே அவளை நோக்கிச் சொன்னான்:

“பதுமை! நீங்கள் பெண்கள். எந்த விஷயத்தையும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதற்கு அப்பால் நினைக்க முடியாது. அல்லது நினைக்க விரும்ப மாட்டீர்கள். எல்லாப் பூக்களும் மென்மை என்பது பொதுக் குணமாகி நிற்பது போல் பெண்களாகிய நீங்கள் அன்பை மட்டும் மையமாக வைத்துக் கொண்டே யாவற்றையும் சிந்திக்கிறீர்கள். ஒற்றைத் தூணில் நிற்கிற மண்டபத்துக்குப் பலம் குறைவு. தூணுக்கும் சுமை அதிகம்.”

“எப்படியோ பேச்சைத் தொடங்கி எப்படியோ வளர்த்து முடிவில் பெண்களெல்லாம் உணர்ச்சி இல்லாத குத்துக்கற்கள் என்று முடிக்கிறீர்களே; இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?”

“அவசரப்படாதே பதுமை! நான் சொல்ல வந்தது வேறு. நீ புரிந்து கொண்டது வேறு. கோபமோ தாபமோ, ஊடலோ, உவகையோ, எல்லா உணர்ச்சிகளையும் அன்பு என்ற ஒரே அடிப்படையில்தான் அடைகிறீர்கள் பெண்களாகிய நீங்கள். எல்லா விளைவுகளுக்கும் ஒரே காரணத்தைத் தவிர வேறு மாற்றமில்லாத வாழ்வு விரைவில் சலித்துப் போய்விடும் என்பார்கள். ஆனால் உலகத்துப் பெண் குலத்துக்கு அந்த அன்பு என்ற ஒரே காரணம் இந்த யுகம் வரை சிறிதும் சலித்ததாக எனக்குத் தெரியவில்லை. நேர் மாறாக அந்த ஒரே காரணத்தில் இன்னும் உறுதியாகக் காலூன்றிக் கொண்டுதான் நிற்க முயல்கிறீர்கள் நீங்கள். பல விளைவுகளுக்குக் காரணமாயிருக்கிற ஒரு காரணம் பல காரணங்களுக்கும் விளை வாயிருப்பது நியாயந்தான். வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லை ‘இளங்குமரன் தன்னிடம் சொல்லி விடைபெற வேண்டும்’ என்று எதிர்பார்த்ததற்கும் அவளுடைய அன்புதான் காரணம். அவர் அப்படிச் சொல்லி விடைபெறாத போது அவளுடைய முகத்தில் நம்பிக்கை அழித்து ஏமாற்றம் பிறந்ததற்கும் அந்த அன்பு தான் காரணம். மண்ணுலகத்தில் உயிரை வளர்க்கும் அமுதம் இல்லை என்றார்கள் விவரம் தெரியாதவர்கள். மண்ணுலகத்தில்தான் மெய்யான அமுதம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது பதுமை : இந்த உலகத்தில் அன்புதான் அமுதம் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த அமுதத்தை வைத்துக் கொண்டே உயிர் உறவுகளை நீண்ட காலத்துக்கு அழியாமல் வளர்த்துக் கொண்டு போகலாம்.”

“ஆனால் சலிப்பு ஏற்படாத அந்தக் காரியத்தைப் பெண்களாகிய நாங்கள்தான் செய்யமுடியும் என்று ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா! குணங்கள் எல்லாம் தாய்மையிலிருந்து பிறக்கின்றன என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்களோ? உங்கள் கலைக்குத் தொடர்புடைய உதாரணத்தையே சொல்லுகிறேன். நிறங்கள் நிறமில் லாமையிலிருந்து பிறக்கின்றன. ஏழு நிறங்களிலும் அடங்காதது என்ன நிறம்?”

“சூன்ய நிறம் என்று வைத்துக் கொள்ளேன்.”

“சூன்ய நிறம் என்று நீங்கள் சொல்கிற அந்த நிறமின்மையிலிருந்து எல்லா நிறங்களும் கிளைக்க முடியுமானால் எங்கள் அன்பு என்ற ஒரே காரணத்திலிருந்து எல்லா அன்புகளும் ஏன் விளைய முடியாது?”

“விளைய முடியும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் பதுமை! என் நிலை வேறு, இளங்குமானுடைய நிலை வேறு. நான் அன்பை எதிர்பார்க்கிறவன். அன்பு செலுத்துகிறவன். அவர் தம் அன்பைப் பலர் எதிர் பார்த்து ஏங்கும்படி செய்கிறவர். அருளாளர், அன்பு செய்கிறவனுக்கும் அருள் செய்கிறவனுக்கும் வேற்றுமை உண்டு. குணங்களிலே அன்புதான் தாய்க்குணம். அருட்குணம் அன்பினின்று தோன்றிய குழந்தை. தொடர்புடையவர்கள் மேல் மட்டும் நெகிழ்கிற உறவுதான் அன்பு. தொடர்பு, தொடர்பின்மை எதையும் கருதாது எல்லா உயிர்கள் மேலும் செல்கிற பரந்த இரக்கம்தான் அருள். பரந்த எல்லையில் நின்று பார்க்கிற ஒருவரைக் குறுகிய எல்லைக்குக் கொண்டுவர முயல்வது நல்லதுதானா என்று நினைத்துப்பார்! முல்லை இளங்குமரனுடைய அன்பைத் தன்னுடைய எல்லைக்குக் கொண்டு வந்து விட முயல்கிறாள். அதே முயற்சியைச் சுரமஞ்சரியும் செய்கிறாள். பரந்த அருளாளராக உயர்ந்து விட்டவரைத் தங்களுடைய அன்பின் குறுகிய எல்லைக்குள் சிறை செய்துவிட முயல்கிற இவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி கிடைக்குமென்றும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை பதுமை!”

“சுரமஞ்சரி என்பது யார்? உங்களுக்கு மணிமாலை பரிசளித்ததாகக் சொல்வீர்களே? அந்தப் பெண்ணா?”

“அவளேதான்! அவளால்தான் இளங்குமரன் என்னும் இந்த அற்புத மனிதரை நான் என்னுடைய வாழ்க்கை வீதியில் சந்திக்க நேர்ந்தது. இந்திர விழாக் கூட்டத்தில் துாரிகையும் கையுமாகத் திரிந்து கொண்டிருந்த என்னை கூப்பிட்டு நாளங்காடியில் அவருடைய ஓவியத்தை வரைந்து தரச் சொல்லிக் கேட்டது அவள் தான். அவருடைய அழகிய சித்திரத்தை என்னுடைய கைகளால் வரையத் தொடங்கிய நாளிலிருந்தே அவருடைய குணச்சித்திரத்தை என்னுடைய மனம் வரைந்து கொள்ளத் தொடங்கி விட்டது. செல்வத்தையும் சுகபோக ஆடம்பரங்களையும் காட்டி அவற்றால் அவரைக் கவர முடியாது. செல்வத்தின் மதிப்பு மிகுதி யானால் அதைப் புறக்கணிக்கிற மனத்தின் மதிப்பு அதைவிட அதிகமென்று நினைக்கிறவர் அவர். மதிப்பு நிறைந்த பொருளைக்கூட மதிக்காமல் நிமிர்ந்து நிற்கிறவருடைய சொந்த மதிப்பை எப்படி அளக்க முடியும்? பதுமை! அவருடைய மதிப்பை அளக்க முடியாமல் தான் அந்தப் பட்டினப் பாக்கத்துப் பெண் அவருக்கு மனம் தோற்றாள்.”

“பிறருடைய தோல்வியை ஒப்புக்கொண்டு தான் பெருமிதம் அடைகிறவன் வீரன். அவரோ, சுரமஞ்சரி தனக்குத் தோற்று விட்டாள் என்பதை ஒப்பி அவளுடைய தோல்வியைத் தம்முடைய வெற்றியாகக் கூடக் கொண்டாடாமல் அலட்சியம் செய்கிறார். ‘தன் தோல்வியை – தன் மனத்தின் நெகிழ்ச்சியை அவர் அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும்’ – என்பது தான் இப்போது சுரமஞ்சரியின் தவிப்பு. அவரோ நாளங்காடியில் பலப்பல அறிஞர்களின் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். பிறருடைய அறிவின் தோல்வியை ஒப்புக் கொள்கிறவர் பிறருடைய அன்பின் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார், பதுமை!”

“விசித்திரமான உண்மையாயிருக்கிறதே?”

“உண்மை விசித்திரமானதாயில்லை! விசித்திரம் தான் உண்மையாயிருக்கிறது” என்று மூன்றாவது குரல் ஒன்று ஒலித்ததைக் கேட்டவுடன் மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். பாய் மரத்தின் மறுபுறத்திலிருந்து சிரித்தபடியே இளங்குமரன் அவர்களுக்கு முன்னால் தோன்றினான்.

அவர் அங்கே இல்லை என்று நினைத்துக் கொண்டு தான் பேசியவற்றை யெல்லாம் அவரும் கேட்டிருக்கிறார் என்று தனக்கே புரிந்துவிட்ட அந்த விநாடியில் மணிமார்பனுடைய மனைவி சொல்லிலடங்காத அளவு நாணமும், கூச்சமும், அடைந்தாள். அவளுடைய கண்கள் இளங்குமரனை நேருக்கு நேர் எதிரே பார்ப்பதற்குக் கூசின. மலையுச்சியைக் கடந்து மேலே பறந்துவிடலாம் என்று முயன்ற சிட்டுக்குருவி அந்த மலையுச்சியின் உயரம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டு போவதைக் கண்டு அயர்ந்தாற் போலிருந்தது பதுமையின் நிலை.

“சகோதரீ! உங்கள் பேருக்கு ஏற்றாற் போல் நீங்கள் பேசாமலே இருக்கிறீர்களே என்று நேற்று வரை சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று வட்டியம் முதலுமாகச் சேர்த்து உங்கள் கணவரிடம் பேசித் தீர்த்து விட்டீர்கள்” என்று இளங்குமரன் முதன்முதலாக மணிமார்பனுடைய மனைவியை நோக்கிப் பேசினான். அவள் பதில் சொல்லவில்லை. அந்தக் குரலின் ஒலியில் பயந்து தயங்கி நின்றாள்.

“பேர்தான் பதுமை! இந்தச் சொல்லரசியின் வார்த்தைகளுக்கு இவள் கணவனாகிய நானே அவ்வப் போது பதில் கூறத் திணறிப் போகிறேன் ஐயா” என்று மணிமார்பன்தான் சிரித்தவாறே இளங்குமரனுக்குப் பதில் கூறினான். இதைக் கேட்டு இளங்குமரன் புன்னகை புரிந்தான்.

“நான்… ஏதாவது… தப்பாகப் பேசியிருந்தால்… பொறுத்தருளி என்னை மன்னிக்க வேண்டும்…” என்று தயங்கித் தயங்கி ஒவ்வொரு வார்த்தையாகக் குனிந்து தலை நிமிராமலே சொன்னாள் பதுமை.

“தப்பாகப் பேசியிருப்போமோ என்று இப்போது நீங்கள் நினைத்துப் பயப்படுவதுதான் பெரிய தப்பு சகோதரீ! உங்களுடைய சில கேள்விகளுக்கு உங்கள் கணவரே பதில் கூறத் திணறியதையும் நான் கவனித்தேன். நான் முல்லையிடம் கப்பலேறு முன்பு சொல்லி விடை பெற்றுக்கொள்ளாதது மூன்று பேருடைய மனங்களைத் துன்புறுத்தியிருக்கிறதென்று எனக்கே இப்போது தெரிகிறது. முல்லை துன்புற்றதைத் தவிர நீங்கள் வேறு இதற்காக மனம் வருந்தியிருக்கிறீர்கள் போலும். முல்லையின் தந்தையும் மனம் வருந்தியிருக் கிறார். அருளாளன் அன்பில்லாதவனாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அருளாளனுடைய அன்புக்குக் காரணமும், விளைவும், தனியாக இல்லை என்பதுதான் முக்கியம். நான் தன்னிடம் சொல்லி விடைபெற்றுக் கொள்ளாததை எண்ணி முல்லை வருந்தியிருப்பாளானால் அதுவும் அறியாமைதான்” என்று இளங்குமரன் கூறிக்கொண்டே வந்தபோது பதுமையிடமிருந்து நடுவே சில சொற்கள் ஒலித்தன.

“அன்பைத் தவிர வேறெதையும் அறியாமல் இருப்பதனால்தான் பெண்களுக்கு அறியாமையையும் ஒரு குணமாகச் சொல்லிவிட்டார்கள். மற்றவற்றை அறியா மலிருப்பது என்ற பேதமையைப் போர்வையாகப் போர்த்தி எங்கள் அன்பாகிய அறிவை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்.”

“ஏதேது? நீ இவருக்கே தத்துவம் சொல்லிக் கொடுப்பாய் போலிருக்கிறதே, பதுமை?” – என்று தன் மனைவியைக் கடிந்து கொள்வது போலக் குறுக்கிட்டான் மணிமார்பன்.

“உலகத்தில் எந்தத் தத்துவத்தையும் யாரும் முடிந்து வைத்து விட்டுப் போய் விடவில்லை மணிமார்பா! உன்னுடைய மனைவியின் பேச்சிலிருந்து நான் புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமானால் அதுவும் நான் அவசியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய தத்துவம் தான். என்னையறியாமலே நான் பிறரைப் புண்படுத்தி விடுகிற சந்தர்ப்பங்கள் நேரிடாமல் எனது சான்றாண் மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். பிறர் கவனத்தை அவசியமின்றிக் கவர்ந்து நம் புறமாகத் திருப்ப வேண்டாமென்று நாம் மெளனமாக இருந்து விடுவது சில சமயங்களில் பிறரைத் துன்புறுத்தி விடுகிறது. அதற்கென்ன செய்யலாம்?” என்று இளங்குமரன் பேசிக் கொண்டிருந்தபோது, ஏதோ காரியமாகக் கப்பலின் கீழ்த் தட்டுக்குப் போயிருந்த வளநாடுடையார் மரப்படிகளில் பலத்த ஓசையெழுப்பிக் கொண்டு மேலே அதிர நடந்து வந்தார்.

அவர் மேலே வந்த விதமும் அவர்களைப் பார்த்த பார்வையும் அவசரத்தையும் பரபரப்பையும் மூட்டுவன வாயிருந்தன.

“அதோ பின்னால் நம்மைத் துரத்திக் கொண்டு வருவதுபோல் தொடர்ந்து வரும் அந்தப் படகைப் பார்த்தாயா, தம்பீ? முதலில் யாரோ எங்கோ படகுப் பயணம் செய்கிறார்கள் என்றெண்ணி நானே அசிரத்தையாகத்தான் இருந்தேன். அந்தப் படகில் இருப்பவர்களில் ஒருவர் அடிக்கடி ஊன்றுகோலை நம்முடைய இந்தக் கப்பல் செல்லும் திசையில் நீட்டி மற்றவர்களிடம் ஏதோ சொல்வதையும் அவர்கள் அதைக் கேட்டுப் படகின் வேகத்தை மிகுதிப்படுத்துவதையும் அந்தப் படகு நம்மை நெருங்குவதையும் கூர்ந்து கவனித்த பின்புதான் எனக்கே சந்தேகம் ஏற் பட்டது” என்று சொல்லிக் கொண்டே கரைப் பக்க மாகக் கையைக் காட்டினார் வளநாடுடையார். மணிமார்பனும், இளங்குமரனும் அவர் காட்டிய திசையில் விரைந்து திரும்பிப் பார்த்தார்கள். உண்மைதான்! பின்னால் வந்துகொண்டிருந்த படகு துரத்துவதைப் போலத்தான் நெருங்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தது.

“நீ கீழே போய்விடு அம்மா!” என்று வளநாடுடையார் மணிமார்பனுடைய மனைவி பதுமையைத் துரிதப்படுத்திக் கீழே அனுப்பிவிட்டுக் கணத்துக்குக் கணம் நெருங்கும் படகைக் கவனிக்கலானார். படகு அதன் உள்ளே அமர்ந்திருக்கின்றவர்களின் முகம் நன்றாகத் தெரிகிற அளவு நெருங்கிவிட்டது. மணிமார்பனுடைய பார்வை விரைந்து சென்று அந்தப் படகில் சந்தித்த முதல் முகத்தில் ஒரே ஒரு கண்தான் இருந்தது. பார்த்த அவசரத்திலும் பார்க்கப்பட்ட முகம் உண்டாக்கிய பரபரப்பிலும் ஒரு கண் இருந்தது தெரிந்ததா அல்லது ஒரு கண் இல்லாதது தெரிந்ததா என்று உணர முடியவில்லை. ஏற்கெனவே பழகிய அந்த முகத்தின் பயங்கரம் தெரிந்தது. ஒரே கண் மட்டும் இருந்ததனாலோ அல்லது ஒரு கண் இல்லாமையினாலோ படகிலிருந்தவர்களின் தோற்றத்தில் பளிரென்று பார்வையில் பதிந்த முகம் நகைவேழம்பருடையதாகத்தான் இருந்தது. அவரை இளங்குமரனும் பார்த்தான்.

“ஐயா! இவன் நல்ல எண்ணத்தோடு வரவில்லை. இந்தப் பாவி பின் தொடர்வதில் ஏதோ சூழ்ச்சியிருக்கிறது” என்று பயத்தில் சொற்களைக் குழறினான் மணிமார்பன். தன்னுடைய வாழ்வின் எங்கோ ஒரு மூலையில் பழைய நாட்கள் சிலவற்றில் அந்த ஒற்றைக் கண் கொலைகாரனிடம் அகப்பட்டுக் கொண்டு தான் பட்ட வேதனைகள் இந்த விநாடியில் மணிமார்பனுக்கு நினைவு வந்துவிட்டன போலும்.

“பயப்படாதே! படகில் வருகிறவன் எவனாக இருந்தாலும் அவன் உயிருக்குத்தான் ஆபத்து. நாம் மூன்று பேர் – கப்பல் ஊழியர்கள்-எல்லாருமாகச் சேர்ந்தால் அந்தப் படகைப் பொடிப் பொடியாகச் செய்து கடலில் கரைத்துவிடலாம் அப்பனே?” என்று சொல்லியபடி கையில் வேலை எடுத்துக் குறி பார்க்கத் தொடங்கி விட்டார் வளநாடுடையார். மணிமார்பனும் ஒரு வேலை எடுத்துக் கொண்டான். இளங்குமரன் மட்டும் கைகட்டி நின்றவாறே முகத்தில் மெல்லிய நகை மலர இருந்தான்.

“என்ன ஐயா நிற்கிறீர்கள்?. நீங்களும்…?” என்று சொற்களைத் தொடங்கிய மணிமார்பன் இளங்குமரனுடைய முகபாவத்தை நோக்கிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டான்.

“மணிமார்பா! இந்த விநாடிகள்தான் எனக்கு மெய்யான சோதனை. ‘நான் அருளாளனாக இருப்பதா? அருள் என்ற விரிந்த எல்லையிலிருந்து என்னைக் குறைத்துக் கொண்டு அன்புடையவர்களுக்கு அன்பும் விரோதிகளுக்கு விரோதமும் காட்டுகிற வெறும் மனிதனாகக் கீழே இறங்கிவிடுவதா?’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான்” என்றான் இளங்குமரன்.

Previous articleRead Manipallavam Part 3 Ch25 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 4 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here