Home Manipallavam Read Manipallavam Part 4 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

67
0
Read Manipallavam Part 4 Ch18 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 4 Ch18|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

நான்காம் பாகம் – பொற்சுடர்

அத்தியாயம் 18 : சோற்றுச் செருக்கு

Read Manipallavam Part 4 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

தந்தையார் கீழே எறிந்த ஊன்றுகோல், பிடி வேறு, தண்டு வேறாகக் கழன்று விழுந்தபோது, ‘இப்படிப் பொருள் கூடச் சில சமயங்களில் நிற்கத் துணை புரியாது. இடறி என்னை ஏமாற்றி விடுகின்றன’ என்று அவர் கூறிய வார்த்தைகளுக்கு நேரான பொருள் வானவல்லிக்குப் புரிந்தது. ஆனால் அந்த வார்த்தைகளில் அடங்கியிருப்பதாக அவள் சந்தேகப்பட்ட ஏதோ ஒரு குறிப்புப் பொருள் மட்டும் அவளுக்குப் புரியவேயில்லை.

‘ஊன்றி நிற்பதற்குப் பயன்படவில்லை என்பதை அப்படிச் சொல்லுகிறாரா? அல்லது அதில் இருப்பதாக அவர் நம்பிக்கொண்டிருந்த வேறு பயன் ஒன்று இல்லாமற் போய்விட்டதை அப்படிச் சொல்கிறாரா?’

ஒன்றும் புரியாமல் மருண்டு நின்ற வானவல்லி முதலில் நினைத்தது போலக் கூடிய விரைவில் அவர் முன்னிலையிலேயிருந்து தப்பிச் சென்றுவிட வேண்டு மென்றுதான் மீண்டும் நினைத்தாள். சுற்றிலும் நெருப்புக் கனலும் நீற்றறையில் நிற்பது போல இப்போது அங்கே நின்றாள் அவள். அவருடைய கோபத்துக்கு அப்படி ஓர் ஆற்றல் உண்டு என்பதைப் பலமுறை கண்டு உணர்ந்திருக்கிறாள் அவள். அந்தக் கோபம் சூழ்நிலையையே மாற்றி அமைத்துவிடும். கோடை வெயிலைப் போல் அதற்கு ஆளாகிற எல்லாரையும் வாட்டிவிடும். கொடுமையான வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வெயிலில் நிற்கிறவர்கள் அங்கிருந்து நிழலைத் தேடி உடனே ஓடிப்போய் விடுவதற்குத் தவிப்பதுபோல் அவர் கனன்று சீறும்போது அதற்கு ஆளாகிறவர்களும், சுற்றி இருப்பவர்களும், அதிலிருந்து விலகி ஓடிவிடத் தவிப்பது உண்டு.

அவருக்கு முன்னால் இப்போது வானவல்லியும் அப்படித்தான் தவித்துக்கொண்டு நின்றாள். அவளு டைய தவிப்பைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது புரிந்துகொண்டே புரியாதது போலவோ அவர் மேலும் பேசினார்.

“மகளே, நான் நம்பிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் என்மேல் அவநம்பிக்கை உண்டாவதைப் போன்ற அறிகுறிகள் சிறிது காலமாக எனக்குத் தெரிகின்றன. இதே நிலைமை இப்படியே வளருமானால் நான் இனிமேல் எப்படி மாறுவேன் என்று உறுதி சொல்ல முடியாது. என்றாவது ஒருநாள் இப்படியே இந்தப் பெருமாளிகைக்கு நெருப்பிட்டுக் கொளுத்திவிட்டு இங்குள்ள எல்லாரும் அழிந்தது தெரிந்தபின் நானும் அழிந்து சாக வேண்டியதுதான். எல்லாவற்றையும் அழித்து ஒழித்து நிர்மூலமாக்கிவிட்டு நானும் அழிய வேண்டும். நான் அழியும்போது இங்கு எதுவும் அழிக்கப் படாமல் மீதமிருக்கக் கூடாது. இன்ன பொருளை இன்ன இடத்தில் வைத்திருக்கிறோம் என்று நான் நம்பிக் கொண்டிருந்தவை எல்லாம் எனக்குத் தெரியாமலே இடம் மாறியிருக்கின்றன. யாரிடத்தில் எல்லாம் பொதியமலை சரிந்தாலும் சரியாதென்ற உறுதியோடு நான் நம்பிக்கை வைத்திருந்தேனோ அவர்களிடத்திலேயே அது இல்லை என்று இப்போது தெரிகிறது. எங்கெல்லாம் மிகவும் மதிப்பும் பெறுமானமும் உள்ள பொருள்களைப் பொதிந்து வைத்திருந்தேனோ அங்கெல் லாம் அவற்றைக் காணவில்லை. இதோ கீழே சுழன்று விழுந்து கிடக்கின்றதே, இந்த ஊன்றுகோலின் தண்டுக்கும், பிடிக்கும் நடுவே உள்ள குழலில் நான் வைத்திருந்த அரும் பெரும் பண்டம் ஒன்றையுமே இப்போது இதில் காண முடியவில்லை மகளே!”

ஆத்திரமாகப் பேசிக் கொண்டே வந்தவர் அதையெல்லாம் சொல்வதற்கும் கேட்கச் செய்வதற்கும் அவள் தகுதியுடையவள் இல்லை என்பதைத் திடீரென்று உணர்ந்து கொண்டு விட்டதைப் போலப் பேச்சை நடுவிலேயே நிறுத்தினார். அதுவரை தாம் பேசியிருந்த பேச்சுக்களால் மகளுடைய முகத்தில் என்னென்ன உணர்வுகள் விளைந்திருக்கின்றன என்பதை அவளே பார்த்துவிட முடியாத வேகத்தில் அவளுடைய முகத் திலிருந்து தான் பார்த்துத் தெரிந்து கொண்டு விரைவாய்க் கீழே குனிந்து ஊன்றுகோலையும் பிடியையும் எடுத்துத் திருகினார் அவர்.

வானவல்லி அந்த நேரத்தைத் தான் வெளியேறிச் செல்வதற்கு அவர் கொடுத்த அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து மெல்ல நழுவினாள். அவரும் அவளைத் தடுக்கவில்லை. அப்போது அவருக்கும் வேறு வேலைகள் அவசரமானவையாகவும் அவசியமானவையாகவும் செய்வதற்கு இருந்ததனால் அவள் அங்கிருந்து போவது பற்றி நினைக்கவோ கவலைப்படவோ விரும்பவில்லை அவர்.

அவள் சென்றதும் ‘ஊன்றுகோலில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த ஐம்படைத் தாலியை யார் அதிலிருந்து எடுத்திருக்க முடியும்?’ என்ற சிந்தனையில் அவர் மூழ்கினார். அந்தப் பொருள் அவ்வளவு பத்திரமாக அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் உண்மை தன்னைத் தவிர இன்னும் ஒரே ஒருவருக்குத் தான் தெரியும் என்ற ஞாபகம் அவருக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையையே மாற்றித் தள்ளிவிடக் கூடிய பெரிய இரகசியங்களுக்கு அடையாளமான அந்த ஐம்படைத் தாலி இந்த ஊன்றுகோலுக்குள் வைக்கப்பட்ட போது நான் என் இரு கண்களால் பார்த்ததைத் தவிர இன்னும் ஒரு கண் மட்டும் பார்த்திருக்கிறது. அந்தப் பொருள் இதனுள் வைக்கப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்து இப்போது திருடியிருக்க முடியுமானால் அப்படித் திருடியவன் அந்த ஒரு கண்ணுக்கு உரியவனா கத்தான் இருக்க வேண்டும். கற்பூரக் கப்பலைத் தேடிக் கொண்டு கடற்பயணம் செல்வதற்குமுன் சுரமஞ்சரியை பயமுறுத்தி மருட்டுவதற்கு ஓர் அடையாளமாக இதை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் இருட்டில் அவள் மாடத்திலே வைத்து விட்டு வந்தவனும் அந்த ஒற்றைக் கண்ணுக்கு உரியவன்தான். ஏதோ திட்டமிட்டு என்னைக் கவிழ்த்துவிடும் எண்ணத்தோடுதான் அவன் அந்த ஐம்படைத் தாலியை இதற்குள்ளேயிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும். அதை இதிலிருந்து வெளியேற்றுவதற்கும் என் உயிரையே உடம்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் அதிக வேறுபாடில்லை. இந்த ஊன்றுகோல் யாரை மருட்டுவதற்காக அந்த மாடத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்ததோ அந்த மாடத்திலிருந்தவர்களுக்கு இதைப் பிடி வேறு தண்டு வேறாகக் கழற்ற முடியும் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லாதபோது அவர்கள் அதை இதிலிருந்து வெளியே எடுத்திருப்பார்களோ என்று நான் சந்தேகப்படுவதற்கும் இடமில்லை.

‘சந்தேகமில்லாமல் இது நகைவேழம்பருடைய வேலைதான். இந்த ஐம்படைத் தாலியும் அதைப் பற்றிய உண்மைகளும் அவரால் வெளிப்படுத்தப் பெறுவதற்கு முன்னால் அவருடைய உயிரையே இந்த உலகத்தி லிருந்து நான் முதலில் வெளிப்படுத்தி விட்டால் என்ன?’ என்று கொடுமையாகவும், குரூரமாகவும் முதிர்ந்து நின்று நினைத்தார் பெருநிதிச் செல்வர். இப்போது அந்த ஒற்றைக்கண் வேங்கை தன்னிடம் வகையாக மாட்டிக் கொண்டு அடைபட்டிருப்பதால் தான் நினைப்பதைச் செய்வது சாத்தியமானதே என்று நம்பினார் அவர்.

இந்த அவசரமான தீர்மானத்திற்கு வந்தவுடனே பெருமாளிகையில் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான காவலன் ஒருவனைக் கூப்பிட்டு, “நீ இப்போது உடனே புறப்பட்டுப்போய் மருவூர்ப் பாக்கத்து அலைவாய்க் கரையில் உள்ள யவனப்பாடியில் இருக்கும் நாகர்குலத்து மறவனான அருவாளனை இங்கே அழைத்துக் கொண்டு வரவேண்டும். இன்று கதிரவன் மறையும் போதுக்குள் நீ அவனோடு திரும்பி இங்கே வர முடியாவிட்டால் உன்னால் எனக்கு ஒரு பயனும் இல்லை. சம்பாபதி வனம், சக்கரவாளத்துக் காடுகள், காவிரிக்கரை நாணற் புதர் எங்கெல்லாம் தேட முடியுமோ அங்கெல்லாம் தேடி அருவாளனைக் கண்டு பிடித்து இங்கே திரும்பி வரும்போது அவனோடு வா. அவன் இல்லாவிட்டால் வராதே…” என்று உறுதியான கட்டளையாகச் சொல்லி அனுப்பினார் பெருநிதிச் செல்வர். அவருக்கு அந்தரங்கமானவனாகிய அந்த காவலன் உடனே அதைச் செய்வதற்குப் புறப்பட்டான்.

அவனை அனுப்பிவிட்டுச் சிந்தனைக்குரிய பல சந்தேகங்களை மாற்றி மாற்றி நினைத்துப் பாதி பயமும் பாதி அவநம்பிக்கைகளுமாகக் குழம்பினார் அவர். நிம்மதி சிறிதும் இல்லாமல் என்னென்னவோ எண்ணிப் பரபரப்படைந்திருந்தன அவருடைய உணர்வுகள்.

‘என் பயம் வீணானது. காரணமற்றது. பொய்யானது. இன்னும் ஆயிரம் நகைவேழம்பர்கள் எனக்கு எதிராக மாறினாலும் அந்தக் காலாந்தகன் மறுபடி உயிரோடு பிழைத்து வந்தாலும் என்னை என்ன செய்து விட முடியும்? செத்தவர்கள் பேயாக மாறி வேண்டுமானாலும் வரலாம். பிழைத்து வர முடியாது. இது தெரிந்தும் நான் ஏன் பதறுகிறேன்? என் உடல் எதற்காக நடுங்குகிறது?’ என்று எண்ணி எண்ணி மாய்ந்தபடியே வெளியே சென்றிருக்கும் காவலன், நாகர் குலத்து அருவாளனை அழைத்து வருவதையே எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர். அப்போது வேறு எந்த வேலையையும் செய்வதற்குப் பொறுமை இல்லை அவருக்கு. பட்டினப் பாக்கத்தில் வானளாவ நிமிர்ந்து நிற்கும் தன்னுடைய அந்த மாளிகை ஒவ்வோரடுக்காகச் சரிவது போல் அவருடைய மனக்கண்ணில் அழிவைக் குறிக்கிற பொய்த் தோற்றங்கள் வரிசையாய்த் தோன்றின.

அன்று மாலை இருட்டுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னால் அவர் அனுப்பியிருந்த காவலன் நாகர் குலத்து அருவாள மறவனோடு திரும்பி வந்துவிட்டான். இறைச்சி மலையாக வளர்ந்திருந்த அந்த முரட்டு நாகன் பெருநிதிச் செல்வருடைய அந்தரங்க அறையில் நுழைந்து அவரை வணங்கிவிட்டுப் பணிவாக எதிரே நின்றான். அவனை அழைத்து வந்த காவலனை அங்கிருந்து வெளியே போய்விடுமாறு குறிப்புக் காட்டினார் பெருநிதிச் செல்வர். காவலன் வெளியேறியதும் மாச பர்வதமாக வந்து நின்ற அருவாளனை நெருங்கி மெல்லிய குரலில் அவனை வேண்டிக்கொண்டார் அவர்.

“அருவாளா! நீண்ட நாட்களுக்கு முன்னால் ஓர் இந்திர விழாவில் நானும் நகைவேழம்பரும் உன்னை ஒரு காரியத்துக்குத் துண்டிவிட்டு அனுப்பினோம். சம்பாபதி வனத்து இருளில் அந்த முனிவரையும் அவருடைய வளர்ப்புப் பிள்ளையையும் எமனுலகுக்கு அனுப்பிவிடச் சொல்லி நாங்கள் உன்னை அனுப்பிய காரியம் அன்று உன்னால் நடைபெறவில்லை. இருந்தும் இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு உன்னை நான் மீண்டும் இங்கே அழைத்திருக்கிறேன். இன்று நான் உன்னைச் செய்யச் சொல்லி வேண்டிக்கொள்ளப் போகிற செயல் உன் நிலையில் உனக்கு மிகவும் சிறியது தான். ஆனால் என் நினைப்பில் அது மிகவும் பெரியது, அவசியமானது. அவசரமானது. அதை நீ செய்வதற்கு மறுக்கக்கூடாது.”

அருவாளன் தன்னுடைய பயங்கரமான உருட்டு விழிகளால் விழித்து அவரைப் பார்த்துவிட்டுச் சிறிது நேரம் தயங்கியபின் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து மறுமொழி கூறினான்.

“ஐயா! என்னுடைய இந்த உடம்பில் இருக்கிற செருக்கு எதுவோ அது நீங்கள் எனக்கு அளித்தது. நீங்கள் வளர்த்தது. உங்களுடைய சோற்றுச் செருக்கால் நிமிர்ந்து நிற்கிற நான் உங்கள் கட்டளையை மறுப்பேனா?”

“நீ நான் சொல்லுவதற்கு ஒப்புக்கொண்டால் மட்டும் போதும். என்னுடைய உதவிகளுக்கு என்னிடமே நன்றி சொல்ல வேண்டாம். என்னால் உதவி பெற்றவர்கள் என்மேல் நன்றியுடையவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நான் சமீப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டேன் அருவாளா! என்னுடைய சோற்றை நான் யார் யாருக்கு எல்லாம் இட்டேனோ அவர்கள் என்னை எதிர்க்கும் செருக்கைத்தான் அடைந்திருக்கிறார்களே ஒழிய என்னைக் காக்கும் செருக்கை அடைந்திருப்பதாக நானே நம்பவில்லை. நான் இட்ட சோறு அதைத் தின்பவர்களிடம் நன்றியை வளர்த்திருக்கும் என்பதில் எனக்கே நம்பிக்கை இல்லை. நீ மெய்யாகவே என்னைப் புகழ்ந்தாலும் இப்போதுள்ள என் மனநிலையில் உன் புகழ்ச்சியை நான் போலியானதென்றே நினைப்பேன். இன்று காலையிலிருந்து எனக்கு என் மேலேயே நம்பிக்கை இல்லை…”

“நிறைய மனக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள் போல் தோன்றுகிறது ஐயா! இப்படிப்பட்ட நிலையில் உங்களை நான் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. உங்கள் அந்தரங்க நண்பர் நகைவேழம்பர் அருகில் இருந்தால் இப்படி உங்களைக் கவலைப்பட விட் டிருக்கமாட்டாரே? அவர் இப்போது எங்கே?” என்று அருவாளன் கேட்டான்.

“இப்போது என்னுடைய கவலையே அவர் இங்கு இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதைப் பற்றிய கவலைதான் அருவாளா! அவர் இருப்பதுதான் எனக்குக் கவலை. என் கவலை தீர வேண்டுமானால் அவர் இல்லாமல் தொலைய வேண்டும்!” என்று கூறிவிட்டு அந்தக் கூற்றைக் கேட்கிறவனின் முகத்து விளைவை அறிவதற்காக அருவாளனுடைய கொடிய முகத்தைக் கூர்ந்து பார்த்தார் அவர். அருவாளனுடைய முகத்தில் திகைப்பும் சந்தேகமும் தெரிந்தன.

“நான்தானா இப்படிப் பேசுகிறேன் என்று என்மேல் சந்தேகப்படாதே, அருவாளா! இன்று இரவு நடு யாமம் முடிவதற்குள் இந்த நகரத்தில் ஓர் உயிர் உன் கையால் குறைய வேண்டும். அப்படிக் குறைகிற உயிர் என் கவலையைத் தீர்க்கிற உயிராகவும் இருக்க வேண்டும். அந்த உயிர் போகும்போது என் கவலையும் போய்விட வேண்டும்.”

அருவாளன் மெளனமாக அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். இரும்புப் பலகை போன்ற அவனுடைய பரந்த மார்பு மேலெழுந்து விரிந்து விம்மி தணிந்தது. அவர் அவனுடைய அந்த மெளனத்தைப் பொறுக்க முடியாமல் அவனைச் சீறிக் கோபித்துக் கொண்டார்.

“ஏன் இன்னும் மெளனமாக இருக்கிறாய்? இப்போது மட்டும் நான் அளித்த சோற்றுச் செருக்கு உன்னிடமிருந்து எங்கே போய் ஒளிந்து கொண்டது?”

இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் அவன் தலை தாழ்ந்தது. இந்தக் கேள்வியினால் அவன் மடக்கப்பட்டு விட்டான் என்பதைச் சொல்வது போல அவனுடைய முகபாவமும் மாறியது.

“செய்கிறேன், ஐயா! செய்கிறேன். நீங்கள் எதைச் சொல்லுகிறீர்களோ அதைச் செய்து உங்களிடமிருந்து நான் பெற்ற சோற்றுச் செருக்குக்கு நன்றி செலுத்தி விடுகிறேன்…” என்று ஆவேசத்தோடு அவருக்குப் பதில் கூறினான் அவன்.

Previous articleRead Manipallavam Part 4 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 4 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here