Home Manipallavam Read Manipallavam Part 4 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

64
0
Read Manipallavam Part 4 Ch19 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 4 Ch19|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

நான்காம் பாகம் – பொற்சுடர்

அத்தியாயம் 19 : சாவதற்குத் தந்த வாழ்வு

Read Manipallavam Part 4 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

அருவாளனுடைய சம்மதம் பெருநிதிச் செல்வருக்கு நிறைந்த நிம்மதியை அளித்தது. அவர் விருப்பத்தைச் செயலாக்க அவன் முன் வந்ததில் அவருக்குப் பரம திருப்தி ஏற்பட்டிருந்தது.

“நல்லது! உன்னுடைய நன்றி யிலாவது நான் நம்புவதற்கு இன்னும் இடம் இருக்கிறது. என்னிடம் நீ தின்ற சோறு என்னை ஆதரிக்கும் செருக்கைத்தான் உனக்குத் தந்திருக்கிறது. என்னையே எதிர்க்கும் செருக்கைத் தரவில்லை. போய்விட்டு உன் கூட்டாளியோடு இன்றிரவு நடு யாமத்துக்கு இரண்டு நாழிகை இருக்கும்போது திரும்பவும் இங்கே வா. முதலில் உன் கையில் ஒப்படைத்து அப்புறம் எமன் கைக்கு மாற்ற வேண்டிய உயிரை இப்போது இந்த மாளிகையின் நிதியறையில்தான் அடைத்து வைத்திருக்கிறேன். இன்றிரவு அந்த உயிருக்கு அதன் உடம்பிலிருந்து விடுதலை அளித்துவிடலாம்” என்று கூறி அருவாளனுக்கு விடை கொடுத்து அனுப்பினார் பெருநிதிச் செல்வர். அவர் கூறியபடி நள்ளிரவுக்கு முன்னால் மறுபடி அங்கே வருவதாக ஒப்புக் கொண்டு புறப்பட்டுச் சென்றான் அருவாளன்.

அங்கிருந்து அவன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்தில் தன்னுடைய இன்னொரு சந்தேகத்தையும் உடனே தீர்த்துக் கொண்டுவிட எண்ணியவராய்ச் சுரமஞ்சரியைச் சிறை வைத்திருந்த மாடத்துக்கு ஏறிச் சென்றார் அவர். அப்போது அந்த மாடமும் அதன் பகுதிகளும் வழக்கத்தை மீறிய அமைதியோடு இருந்தன. மாடத்தின் உட்பக்கம் சுரமஞ்சரியோ வசந்தமாலையோ பேசிக்கொள்ளும் ஒலிகூடக் கேட்கவில்லை. இருவரும் அந்த முன்னிரவு வேளையிலேயே தூங்கியிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவர் கதவைத் தட்டினார். சிறிதுநேரம் வரை அவருக்கு ஒரு பதிலும் இல்லை. மறுபடியும் அவர் முன்னைவிடப் பலமாகத் தட்டிய போது வளைகுலுங்கும் ஒலியோடு யாரோ நடந்து வந்து கதவைத் திறந்தார்கள்.

கதவைத் திறந்தவள் தோழிப் பெண்ணாகிய வசந்த மாலை என்று தெரிந்ததும் “சுரமஞ்சரி அதற்குள் உறங்கி விட்டாளா பெண்ணே?” என்று அவர் அவளிடம் கேட்டார். தன்னை அந்த நேரத்தில் அங்கே கண்டு அந்தத் தோழிப் பெண் பயந்து நடுங்குவதை அவர் பார்த்தார். தனக்குப் பதில் சொல்வதற்குக் கூட நா எழாமல் அவள் அச்சம் கொண்டு திகைத்துப் போய் நிற்பதைப் பொறுக்க முடியாமல் மறுபடி அதே கேள்வியை முன்னினும் உரத்த குரலில் கேட்டார் பெருநிதிச் செல்வர். அந்தக் குரல் அவளை மேலும் நடுநடுங்கச் செய்தது.

“இதோ தலைவியை எழுப்புகிறேன்” என்று கூறிக் கொண்டே சுரமஞ்சரி தூங்கிக் கொண்டிருந்த மஞ்சத்தருகே சென்று மெல்ல அவளுடைய தோளைத் தொட்டு எழுப்பினாள் வசந்தமாலை. அப்படி எழுப்புவதற்கு முன் தூங்கும் தன் தலைவியின் முகத்தை அவள் பார்த்த போது அந்த முகம் உறக்கத்திலும் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அச்சிரிப்புக்குக் காரணமான ஏதோ ஒர் இனிய கனவு தலைவிக்குக் கிடைத்திருக்க வேண்டும் எனப் புரிந்தது வசந்தமாலைக்கு. அப்படிப்பட்ட கனவிலிருந்து அவளை வலிய எழுப்பும் துன்பமான செயலைத் தன் கைகளால் தானே செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடு தலைவியை எழுப்பினாள் தோழிப் பெண். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்த சுரமஞ்சரி முற்றிலும் விழிப்புக் கொள்ளாத அரைகுறை உறக்கத்தில், “வசந்தமாலை! அவருடைய கண்களில் என்னுடைய கனவுகள் வளருகிறதடீ” என்று வாய் சோர்ந்து எதையோ முன்னும் பின்னும் தொடர்பின்றி அரற்றினாள். தலைவி அரற்றும் அந்தச் சொற்கள் கதவருகே வந்து நிற்கும் பெருநிதிச் செல்வரின் செவிகளில் கேட்டுவிடக் கூடாதே என்று பயந்த வசந்த மாலை “அம்மா! கனவைப் பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம். முதலில் நன்றாக விழித்துக் கொள்ளுங்கள்! இப்போது வாயிலில் உங்கள் தந்தையார் வந்து நின்றுகொண்டிருக்கிறார்” என்று தலைவியின் காதருகே குனிந்து பதற்றத்தோடு மெல்லச் சொன்னாள். தந்தையின் பெயரைக் கேட்டதும் அந்த நேரத்தில் கேட்கக் கூடாத பேய் பூதங்களைப் பற்றிக் கேட்டுவிட்டது போலத் திடுக்கிட்டு எழுந்து நின்றாள் சுரமஞ்சரி. அவளுடைய கண்கள் பயத்தினால் மருண்டு பார்த்தன. வாயிலில் தந்தை ஊன்றுகோலுடன் வந்து குரூரமான பார்வையோடு நின்று கொண்டு, “ஒன்றுமில்லை! உனக்கு என்மேல் இருக்கிற கோபத்தில் இந்த நேரத்துக்கு நான் இங்கே தேடி வருவதே தவறு என்று நீ சீறினாலும் சீறுவாய். நான் வந்த காரியம் அவ்வளவு பெரிய சீற்றத்துக்குக் கூடத் தகுதியானது இல்லை. அது மிகவும் சிறியது! இதோ இப்படி என் பக்கமாகப் பார்! இந்த ஊன்றுகோலை உனக்கு நினைவிருக்கிறதோ?” – என்று அந்த ஊன்றுகோலை முன்னால் காண்பித்தபடி வாயிற்புறத்திலிருந்தே அவர் அவளைக் கேட்டார்.

அந்தக் கேள்வியைச் சிறிதும் இலட்சியம் செய்யாதவளாய் நின்றாள் சுரமஞ்சரி. ‘தான் அப்போது அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாற் போல ஒரு வெறுப்பு அவள் முகத்தில் தெரிவதை வசந்தமாலையும் பார்த்தாள். தானும் தன் தலைவியும் தெரிந்துகொள்ள வேண்டிய அருமை உண்மை ஒன்றை இந்தச் சமயத்தில் தெரிந்து கொண்டுவிட விரும்பினாள் வசந்தமாலை. உடனே அவள் மெல்ல மறுபடியும் தன் தலைவியின் காதருகே சென்று, “அம்மா! அந்த ஐம்படைத் தாலியைக் காணாமல் தவித்துக் கொண்டு தான் இப்போது இவர் பதறிப்போய் இங்கே வந்திருக்கிறார். நாம் அதைப் பற்றிய இரகசியத்தைத் தெரிந்து கொள்ள இதுதான் ஏற்ற சமயம். சிறிது நேரம் தேடிப் பார்ப்பது போல் இந்த மாடத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றிவிட்டு என்னிடமே இருக்கும் இந்த ஐம்படைத் தாலியை எடுத்து இங்கு ஏதோ ஒரு மூலையில் கிடைத்தததாகச் சொல்லி இவரிடம் கொடுத்து விடுகிறேன். அப்படிக் கொடுப்பதற்கு முன்னும் கொடுத்த பின்னும் இவர் அடைகிற உணர்ச்சிகளை நாம் இருவருமே கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்று கூறினாள். தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி கூறாமல் அலட்சியம் செய்ததைப் போலவே தோழியின் இந்தத் தந்திர முயற்சியையும் அவள் அலட்சியம் செய்தாள். தலைவியின் அலட்சியத்தைத் தனக்குச் சம்மதமாகப் புரிந்துகொண்ட தோழி தன் திட்டப் படியே செய்தாள். சிறிது நேரம் பெருநிதிச் செல்வரின் பொறுமையைச் சோதித்தபின், “ஐயா! எங்களுடைய மாடத்தில் உங்கள் ஊன்றுகோல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கீழே இந்தப் பொருள் கிடந்தது. இதை உங்களிடம் கொடுத்துவிட வேண்டுமென்று பத்திரமாக நான் எடுத்து வைத்திருந்தேன்” என்று அந்த ஐம்படைத் தாலியை அவரிடம் பயபக்தியோடு கொடுத்து விட்டாள் வசந்தமாலை. அப்போதும் சுரமஞ்சரி ஒன்றும் பேசாமல் தன் தந்தையையும், வசந்தமாலையையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டுதான் நின்றாள். மனத்திற்கு விருப்பமான கனவு கலைக்கப்பட்டு நனவுலகத்தின் துன்பமயமான அநுபவங்களை அந்த நேரத்திலே தான் அடைய நேர்ந்ததை வெறுத்தாள் அவள்.

பெருநிதிச் செல்வரோ அவர்கள் இரண்டு பேர்களும் தன் முகத்திலிருந்து தெரிந்து கொள்வதற்குக் காத்திருந்த உணர்ச்சிகளைச் சிறிதளவும் தன்னிடம் தெரியவிடாமல் சர்வசாதாரணமாக அந்த ஐம்படைத் தாலியைத் தன் கையில் வாங்கிக்கொண்டு நின்றார். வாங்கிக் கொண்ட விதத்திலும் வாங்கிக் கையில் வைத்துக் கொண்ட விதத்திலும் எந்த அவசியமும் தெரியாத அலட்சிய பாவம் திகழ நின்றுகொண்டு ஓரிரு கணங்களுக்கு அந்தப் பொருளைப் பற்றிய நினைவையே அவர்களிடமிருந்து மறைப்பதற்காக, “இது என்ன? இந்தப் பொற் பேழை நிறையக் கொண்டு வந்து இங்கே வைத்த பணியாரங்களும் உணவும் அப்படியே இருக்கின்றன? நீங்கள் இருவருமே ஒன்றும் உண்ண வில்லையா?” என்று கவனத்தில் பட்ட வேறொரு காட்சியைப் பற்றித் தேவையைவிட அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர் போலக் கேட்டார். அவர் தங்களை அப்போது திட்டமிட்டுக் கொண்டு ஏமாற்றுகிறார் என்று சுரமஞ்சரிக்கும் வசந்தமாலைக்கும் ஓரளவு புரிந்தது. தொலைந்துபோன ஐம்படைத் தாலி திரும்பக் கிடைத்ததால் தனக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியைத் தெரியவிடாமல் செய்வதற்காகத்தான் கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டாத சிறிய விஷயமான இந்த உணவுப் பேழையைப் பற்றி அவர் விசாரிக்கிறார் என்றும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். நொடிப்போதில் எதிரே நிற்கிறவர்களுடைய ஆவலையும் மனப்போக்கையும் புரிந்துகொண்டு தாம் அதற்கேற்ப விரைந்து மாறிக்கொண்டு எதிரேயிருப்பவர்களின் உணர்வைத் தாங்கி நிற்கும் அந்தத் தந்திரத்தைப் பார்த்து வியப்பதா, பயப்படுவதா என்றே புரியாமல் மலைத்து நின்றார்கள் தோழியும் அவளுடைய தலைவியும். அப்போது அவருடைய குரல் இருந்தாற் போலிருந்து திடீரென்று உரம் பெற்று மிக வலிமையாக அவர்களை நோக்கி ஒலித்தது:

“பெண்ணே! உன்னைக் காட்டிலும் உன்னுடைய தந்தைக்குப் புத்தி அதிகமாக இருக்கும் என்பதை நீ ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒர் இந்திரவிழாவின் இரண்டாவது நாள் பூத சதுக்கத்துக் கூட்டத்தில் யாரோ பிள்ளையாண்டானைக் கண்டுபிடித்து அழைத்து வந்து அவனுடைய ஓவியத்தை வரைந்து வாங்கினாய் அல்லவா? அந்த நாளிலிருந்து இன்று இந்த ஐம்படைத் தாலியைக் கீழே கிடந்ததென்று சொல்லி என்னிடம் தோழி மூலமாக எடுத்துக் கொடுக்கச் செய்யும் இந்த விநாடி வரை உன் தந்தைக்கே விருப்பமில்லாத பல காரியங்களை நீ வரிசையாகச் செய்திருக்கிறாய் என்பதைப் புரிந்துகொள். இந்த நிலையைத் தெளிவுபடுத்தி விவரமாக உனக்கு இப்போது சொல்ல முடியாதவனாக இருக்கிறேன் நான். ஆனால் சுருக்கமாக உனக்கு ஒன்று சொல்ல முடியும். இன்று உன் தந்தையின் எல்லா நினைவுகளும் எவை எவற்றை எண்ணிக் கவலையும் குழப்பமும் அடை கின்றனவோ அவற்றையெல்லாம் அப்படி உயிர்த்து எழச் செய்தவள் நீதான் என்பதைப் படிப்படியாகக் காரண காரியங்களோடு உன்னிடம் விளக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய எனக்கு இன்று நேரமில்லை. இப்படிப் பெற்று வளர்த்துப் பேணி உனக்கு நான் தந்த வாழ்வு என்னுடைய சாவுக்கு நானே இட்டிருக்கிற வித்தோ என்று நினைத்துக் கொண்டு பயப்பட வேண்டிய காலமும் வந்துவிட்டது” என்று வாயிலுக்கு அப்பால் ஒரு காலும் இப்பால் ஒரு காலுமாகப் போகிற போக்கிலே பேசுவதுபோல் அவர் பேசிவிட்டுப் போன வார்த்தைகள் சுரமஞ்சரியும் அவள் தோழியும் தீர்த்துக் கொண்டு தெளிவு பெற விரும்பிய குழப்பங்களைப் போலப் பலமடங்கு புதிய குழப்பங்களை அவர்களுக்கு இப்போது அளித்துவிட்டன.

அந்த ஐம்படைத் தாலி திரும்பக் கிடைத்த நிகழ்ச்சியையே ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாக்கி விடுகிறவரைப்போல் அதற்குச் சில கணங்கள் இடைவெளியளித்து அதை மிகவும் அலட்சியம் செய்து தாங்களும் அதைச் சாதாரணமாகக் கருதத் தொடங்கி விட்ட நேரத்தில், ‘உனக்கு நான் தந்திருக்கிற வாழ்வால் எனக்கு நீ தரப் போவது சாவுதான்’ என்று துணிந்து அவர்களிடம் புதிர் போட்டுவிட்டுப் போயிருந்தார் அவர்.

அங்கிருந்து அவர் தலை மறைந்ததும், “பத்துப் பன்னிரண்டு பேரரசர்களுக்குச் சூழ்ச்சிகளைக் கற்பித்துச் சொல்லிக் கொடுக்கும் ஒரே ஓர் அமைச்சராக இருக்கிற அளவு அற்புதமான சூழ்ச்சிகளைப் பாடம் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் உங்கள் தந்தையாயிருக்கிறார் என்பதற்காக நீங்களும் பெருமைப் படலாமே அம்மா” என்று சுரமஞ்சரியிடம் மெல்லச் சொல்லி சிரித்தாள் வசந்தமாலை.

Previous articleRead Manipallavam Part 4 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 4 Ch20 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here