Home Manipallavam Read Manipallavam Part 4 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

57
0
Read Manipallavam Part 4 Ch21 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 4 Ch21|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

நான்காம் பாகம் – பொற்சுடர்

அத்தியாயம் 21 : கால ஓட்டத்தின் சிதைவுகள்

Read Manipallavam Part 4 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

சோர்ந்து தளர்ந்து சாகக் கிடக்கிற அந்தக் கோலத்திலும் கூட அவருடைய காட்டாற்றுப் பேச்சில் குறுக்கிட்டு நடுவே பேசுவதற்குப் பயமாக இருந்தது அருவாளனுக்கு. அவருடைய தோற்றத்தில் ஏதோ ஓர் அம்சத்துக்கு இப்படிப் பயமுறுத்துகிற ஆற்றல் இருப்பதாக அவன் உணர்ந்தான். ‘விடிவதற்குள் இவரைத் தீர்த்துவிடாமல் திரும்பினால் பெருநிதிச் செல்வர் என்னைத் தீர்த்து விடுவாரே’ என்ற நினைப்பு வேறு இடையிடையே தோன்றி அருவாள மறவனுக்குத் தன் நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது. உடனே தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கவும் அவனால் முடியவில்லை. அவரோ அந்தப் பழைய பலி பீடத்தில் சாய்ந்துகொண்டு உயிரைக் கொடுப்பதற்கு முன்னால் உணர்ச்சிகளை வாரி வாரிக் கொடுத்துக் குமுறிக் கொண்டிருந்தார். அவர் பேச்சுக் குறையவுமில்லை. நிற்கவுமில்லை. தொடர்ந்தது.

“அருவாளா! என்னுடைய நினைவுகளையெல்லாம் காலம் தேய்த்துச் சிதைத்து விட்டது. நானே கால ஓட்டத்தில் சிதைந்து போய் விட்டேன். இந்தப் பட்டினப்பாக்கத்தில் எட்டிப் பட்டமும் ஏனாதிப் பட்டமும் பெற்று வாழும் பெரிய பெரிய செல்வர்களுக்கு நீயும் நானும் நம்மைப் போன்றவர்களும் வெறும் கதவுகளைப் போலத்தான் பயன்படுகிறோம். கதவுகளால் எவை எவை மறைக்கப்பட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவற்றை மறைக்க ஆற்றலின்றிக் கதவுகள் சிதைத்து போனால் பழைய கதவு களைக் கழற்றி எறிந்துவிட்டுப் புதிய கதவுகளை மாற்ற வேண்டியதுதானே? பெருநிதிச் செல்வருடைய எல்லா இரகசியங்களுக்கும் நான் பலமான கதவாயிருந்த காலத்தில் அவர் என்னை நன்றாகப் பேணினார்! எதை எதை நான் மறைத்துப் பாதுகாத்தேனோ அவற்றை நானே வெளிப்படுத்தி விடுவேனோ என்று அவர் நம்பிக்கை இழந்த காலத்தில் நான் இப்படி அழிக்கப்பட்டு விட்டேன். பிறருக்குப் பயன்பட்டு அழிகிற எல்லாரும் கடைசியில் இப்படிக் கதவுகளைப் போலத் தான் ஆகிறார்கள். போகட்டும் உடைந்த கதவினால் பயனும் பாதுகாப்பும் இருக்க முடியாது தான். உன்னிடமிருந்து எனக்குச் சில செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நான் மிக உயர்ந்த இடத்திலிந்து உருண்டு விழுந்து விட்டேன் அருவாளா! அந்தப் பெருமாளிகையின் நிலவறையிலேயே நான் இறந்துபோய் விடுவேனோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய சாவு கூட அந்த மாளிகையின் எல்லைக்குள்ளே நடக்ககூடாது என்று பெருநிதிச்செல்வர் கருதி விட்டாற்போல் இருக்கிறது…” என்று நலிந்த குரலில் நகைவேழம்பர் கூறிக்கொண்டு வந்த அவருடைய சொற்களால் மனம் மாறியிருந்த அருவாளன் அவர் மேல் சிறிது இரக்கமும் கொள்ளத் தொடங்கியிருந்தான்.

‘பிறரைக் காப்பதற்குப் பயன்பட்டுப் பின்பு தன்னையே காத்துக் கொள்ள முடியாமல் அழிந்து போகிற எல்லாருடைய கதையும் என் நிலையில்தான் இருக்கும்’ என்று அவர் கூறியிருந்த வாக்கியம் அவன் மனத்தில் இனம் புரியாததோர் ஊமைக் கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. அந்தக் கிளர்ச்சியினால் அவரிடமே சிறிது தைரியமாகப் பேசினான் அவன்.

“ஐயா! நாம் பிறருக்குப் பயன்படலாம். ஆனால் நமக்கும் ஓரளவு பயன்படுகிறவராகப் பார்த்துத்தான் நாம் பயன்படவேண்டும். நீங்கள் அந்த மாளிகையின் எல்லையில் இருந்தாலே உங்கள் உயிர் பேயாகி அங்கே உலாவும்; அப்படி உலாவுவதுகூடக் கெடுதல் என்று எண்ணிப் பயந்து ஒதுங்குகிறவருக்குப் போய்ப் பயன் பட்டு வீணாகி விட்டீர்கள் நீங்கள்.”

இந்தச் சொற்களைக் கேட்டதும் பலிபீடத்தில் சாய்ந்து கொண்டிருந்த நகைவேழம்பர் தலையை நிமிர்த்திக் கண்ணில் வெறியும், தவிப்பும் மாறி மாறித் தெரிய, “அப்படியும் சொன்னானா அந்தப் பாவி? தெரிந்துகொள், அருவாளா! உனக்கும் ஒருநாள் அவனிடம் இந்தக் கதிதான். அந்த பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வனுக்கு நன்றிக் கடனும், சோற்றுக் கடனும் பட்டிருப்பதாக மயங்கி வீணில் அடிமையாகப் போய்விடாதே. ஏழையாயிருந்து பட்டினி கிடப்பது கூடச் சுகம். அடிமையாக இருந்து வயிறார உண்பது கூட நோய் என்று இந்த மரணாவஸ்தை நிறைந்த கடைசிக் கணத்தில் என் மனத்தின் குருட்டுத்தனம் நீங்கி எனக்கு ஒரு ஞானம் வருகிறது. இனிமேல் வந்து பயன் என்ன! நான் அடிமையாயிருந்து கொண்டே சுதந்திரமாய் இருப்பதாய் எண்ணிக் கொண்டு தப்பான நம்பிக்கையோடு கொடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். எவ்வளவு சுதந்திரமாக இருந்தாலும், எல்லாரும் என்றைக்காவது ஒருநாள் மரணத்துக்கு அடிமையாகித் தீர வேண்டியது தான் போலிருக்கிறதென்று இப்போது புதிதாகப் புரிந்து கொண்டவன் போலக் கடைசியாக இந்தப் பலிபீடத்தில் வந்து வீழ்ந்துவிட்டேன் பார். என் வாழ்வு இவ்வளவு தான். இனிமேல் எனக்கு என்ன இருக்கிறது? ஆனால்…”

சிறிது நேரம் தயங்கிவிட்டு அவர் மேலும் பேசினார்: “இனிமேல் ஒன்றுமில்லை என்றும் கை விடுவது முடியாது. கடைசியாக நான் செய்வதற்கு இன்னும் ஏதோ இருக்கிறது. பெருமாளிகையில் செத்துப் போனால் கூட நான் பேயாயிருந்து பின்னால் பய முறுத்துவேனோ என்று அஞ்சிப் பெருநிதிச் செல்வன் என்னை இங்கே தூக்கிக் கொண்டு வந்து கொல்லச் சொன்னான் அல்லவா? நான் பேயாயிருந்து அந்தக் கொடியவனுக்கு கெடுதல் செய்ய முடியுமானால் அதைச் செய்யத்தக்க விதத்தில் சாவதற்கு இப்போதும் என்னால் முடியும். அப்பனே! இப்படியே என்னைத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் போட்டுவிடு. நான் கடலிலேயே சாகிறேன். பூம்புகாரின் கடற்பரப்பில் எல்லாம் நான் இறந்தபின் பேயாக உலவுகிறேன். அந்தப் பாதக மனிதனுடைய கப்பல்களையெல்லாம் அறைந்து கடலில் கவிழ்க்கிறேன். அவருடைய பெரும் கடல் வாணிகத்தையே கவிழ்த்து விடுகிறேன். அந்தக் கப்பல்களில் ஏதாவதொன்றில் எப்போதாவது அந்தப் பாதகனும் பயணம் செய்துகொண்டு வருவான் அல்லவா? அப்போது அவனை இந்த இரண்டு கைகளாலும் பிடித்து பேயறை அறைந்து கழுத்தை நெரித்து அப்படியே கடலில் தள்ளி…!”

சொல்லிக் கொண்டே வந்தவர் உணர்ச்சித் துடிப்பில் எதிரே யாருடைய கழுத்தோ தன்னுடைய பிடியில் உண்மையாகவே இருப்பதாகக் கருதிக் கொண்டு இரண்டு கைகளாலும் நெரிக்க முயன்றபடி எழுந்திருக்க முற்பட்டுக் கால் ஊன்றி நிற்க முடியாத காரணத்தால் மறுபடி பலிபீடத்திலேயே முடங்கிச் சாய்ந்து விழுந்தார்.

விழுந்தவருக்கு மூச்சு இரைத்தது. கண் சொருகிச் சொருகி விழித்தது. அந்த இரும்பு நெஞ்சு விம்மி விம்மித் தணிந்தது. அருவாளன் மறுபடி அவரருகே மண்டியிட்டு அமர்ந்து அந்த நெஞ்சைத் தடவிக் கொடுத்தான். அவருடைய அநுபவங்களைப் பார்த்து அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. தனக்கே அவற்றிலிருந்து தேவையான பாடங்கள் கிடைப்பது போலவும் இருந்தது.

‘இவரைப்போல் கொடுமையாகவும் பயங்கரமாகவும் இனி ஒருவர் வாழ முடியாது. இவருக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருப்பது போல் கொடுமையான சாவும் இன்னொருவருக்குக் கிடைக்கக் கூடாது. கிடைக்கவும் வேண்டாம். இன்னொருவர் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாதது இந்த விதமான சாவு’ என்று எண்ணி எண்ணி மலைத்தான் அருவாளன். இன்னும் கொஞ்சம் நெல்லிக்கனிச் சாறு கலந்து நீரை அவர் வாயில் ஊற்றும்படி தன் தோழனுக்குச் சைகை செய்தான் அருவாளன்.

அவனும் அதைச் செய்தான். மீண்டும் சில விநாடிகள் மரண வேதனை. மீண்டும் சில விநாடிகள் தெளிவு. அந்த நிலையில் அவர் அருவாளனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். விரக்தியினாலும் இனி நாம் ‘சாகத்தான் போகிறோம்’ என்ற உறுதியினாலும் அப்போது மிகமிக மனத் தெளிவுடன் அவர் அவனிடம் ஒளிவு மறைவின்றிப் பேசினார். “அருவாளா! நீ இப்பொழுது என்னைப் பார்த்து பரிதாபப்படுவது போல் நான் சாவது ஒன்றும் அவ்வளவு வேதனையான காரியமில்லை எனக்கு. ஏனென்றால் இந்த உலகத்தில் நாளைக்கு வாழ்வதற்காக என்று நான் எதையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. பெருநிதிச் செல்வனைப் போலச் செல்வத்தை மலை மலையாகக் குவித்து வைத்திருந்தால் அதைக் காக்கவும் அநுபவிக்கவும் ஆசைப்பட்டாவது நாளைக்கும் அதற்கு அப்புறமும் நான் வாழ்வதற்கு விரும்ப வேண்டும். பாவங்களைத் தவிர வேறு எவற்றையும் இனிமேல் அனுபவிப்பதற்காக என்று நான் சேர்த்து வைக்கவில்லை. என்னுடைய கணக்கில் இப்போது நிறையப் பாவங்கள் இருக்கும். ‘அந்தப் பாவங்களை எல்லாம் அநுபவிப்பதற்கு நான் மீண்டும் பிறக்க வேண்டியிருக்குமே’ என்று நீ சந்தேகப்படுவாய். பிறந்தால் இன்னும் புதிதாக நிறையப் பாவங்கள் செய்து அடுத்த பிறவியிலும் இப்படியே கெட்டவனாக வாழ்ந்து விடுவேனோ என்று தான் நான் மறுபடி பிறக்கவே பயப்படுகிறேன். இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியாயமோ வரம்போ உள்ள எந்த ஒரு வாழ்க்கையையும் இந்தப் பிறவிலேயே பழகிக் கொள்ள முடியாதவன் அடுத்த பிறவியில் மட்டும் எப்படி ஒழுங்காக வாழமுடியும் என்று நானே என்னைப் பற்றிச் சந்தேகப்படுகிறேன். உனக்கு நன்றாக என்னைப் பற்றித் தெரியும். நான் நிறையக் கொலை செய்திருக்கிறேன். நிறையக் கொள்ளையடித்திருக்கிறேன். நிறையப் பொய் சொல்லியிருக்கிறேன். நிறையச் சூழ்ச்சி செய்திருக்கிறேன். ஆனால் அவ்வளவும் எனக்காக மட்டும் அல்ல! யாருடைய மாளிகையிலோ நிதியறையை நிரப்புவதற்காக நான் என்னுடைய கணக்கில் பாவங்களை நிறைத்துக் கொண்டு கெட்டுப் போய்விட்டேன்.

“நான் இப்படிச் சுகமாக நலிந்து மந்தமாக மெல்ல மெல்லச் சாவது எனக்கே பிடிக்கவில்லை. யாராவது நாலைந்து பேராகச் சேர்ந்து கொண்டு கணம் கணமாகத் துடிக்கத் துடிக்கச் சித்திரவதை செய்து என்னைக் கொல்ல வேண்டும் போல் இப்போது எனக்கே ஆசையாக இருக்கிறது. மந்தமாக நோயாளியைப் போலச் சாவது சோம்பேறித்தனமான சாவு. என்னைப் போல் அப்படி வாழ்ந்தவன் சோம்பேறித்தனமாக இப்படியா சாவது? நீயே சொல் அருவாளா? என்னைச் சித்திரவதை செய்தாலும் என்னுடைய வாய் அலறாது! கண்களில் நீர் நெகிழாது. அப்படி உடம்பையும் மனத்தையும் கல்லாகவும் இரும்பாகவும் நான் பழக்கியிருக்கிறேன். நீயும் உங்கள் உலகமும் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நான் இப்படி வாழ்ந்தது கூட ஒருவகைத் துறவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் என்னைப் போலவே இவற்றைத் துறவாக ஒப்புக் கொள்கிறவள் ஒருத்தி இதே சக்கரவாளத்துக் காட்டில் இன்னும் சிறிது தொலைவிலுள்ள வன்னி மன்றத்தில் இருக்கிறாள். சாவதற்கு முன் அவளை நான் ஒருமுறை பார்த்துவிட்டுச் சாக வேண்டும். நீயும் உன் தோழனும் போய் எனக்காக அவளை இங்கே அழைத்து வர முடியுமா? அவள் பெயர் பைரவி. கபாலிகர்களுடைய வன்னி மன்றத்திலே போய் யாரிடம் அவள் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் தெரியும். எனக்கு ஒரே ஓர் ஆசை. நிராசையோடு நான் சாக விரும்பவில்லை. என்னை இக்கதிக்கு ஆளாக்கியவனைப் பற்றிய எல்லா இரகசியங்களும் எனக்குத் தெரிந்திருப்பது போலவே அந்தக் கபாலிகைக்கும் தெரியும். அந்தக் கொடும்பாவியைப் பழிவாங்கும் பொறுப்பை இன்று அவளிடம் நான் ஒப்படைக்கப் போகிறேன். அந்தப் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டுவிட்டால் பின்பு நான் நிம்மதியாகச் சாகலாம்.”

இவ்வாறு அவர் விடுத்த வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் அருவாளனும் அவ னுடைய தோழனும் கபாலிகையாகிய பைரவியை அழைத்துக் கொண்டு வருவதற்காக வன்னிமன்றத்துக்குச் சென்றனர். அவர் பலிபீடத்தில் தலையைச் சாய்த்து உறங்குவது போல் கண்ணை மூடினார். கண்ணை மூடு முன் கடைசியாக அவர் பார்த்த பொருள் காளி கோட்டத்தின் சிதைந்த பழங்கதவாயிருந்தது.

சில கணங்களுக்குப்பின் அரை குறைப் பிரக்ஞையுடனே அவர் மெல்லக் கண் திறந்து பார்த்தபோது சுற்றிலும் ஒரே நரிக் கூட்டமாகத் தெரிந்தது. இறைச்சி தின்று பழகிய சுடுகாட்டு நரிகள் பயங்கரமாக ஊளை யிட்டுக் கொண்டு அவர் கிடந்த பலிபீடத்தைச் சூழ்ந்தன.

Previous articleRead Manipallavam Part 4 Ch20 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 4 Ch22 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here