Home Manipallavam Read Manipallavam Part 4 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

80
0
Read Manipallavam Part 4 Ch3 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 4 Ch3 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

நான்காம் பாகம் – பொற்சுடர்

அத்தியாயம் 3 : கடலில் கவிழ்ந்த நம்பிக்கைகள்

Read Manipallavam Part 4 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

துரத்திக் கொண்டு வந்த படகில் இருப்பவர்கள் தீப்பந்தங்களைக் கொளுத்தித் தங்கள் கப்பலின் மேல் எரியும் அளவுக்குத் தாக்குதல் வளர்ந்து விட்டதைக் கண்டு அமைதியாகக் கைகட்டிக் கொண்டு நிற்கும் இளங்குமரனைப் பார்த்துப் பெரும் சீற்றமடைந்தார் வளநாடுடையார். “பகைவர்களுக்கு முன்னால் இரக்கம் காட்டுவது பேதமை தம்பீ! பகைக்கு முன்னால் காட்ட வேண்டிய ஒரே அறம் பகைதான். அருள் என்றால் விலை என்ன என்று கேட்கிறவர்களிடம் நீ அருள் காட்டிப் பயனில்லை. உன் மனத்தை மாற்றிக்கொள். கைகளை உதறிக்கொண்டு இந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முன் வா! பறந்து வருகிற தீப்பந்தங்கள் இந்தக் கப்பலின் பாய்மரத்தில் பட்டுவிடாதபடி மறித்துப் பிடி. நமது பாய்மரம் தீப்பட்டு எரிந்து போனால் பின்பு இந்தக் கப்பல் எந்தத் திசையில் போகுமென்று சொல்ல முடியாது. அநாதைக் கப்பலாகிக் கடலிலேயே கிடந்து அலைக்கழியும். நமது பாய்மரத்தைக் காப்பாற்று, நம்முடைய இந்தக் கப்பல் கவிழ்ந்தால் இதனோடு என்னுடைய எல்லா நம்பிக்கைகளுமே கவிழ்ந்துவிடும்” – என்று ஆவேசத்தோடு கூறியபோது வளநாடுடை யாரின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்துவிட்டன. அந்தக் கிழட்டு உடல் தாங்கமுடியாத ஆவேசத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பாய்மரக் கப்பலின் மீகாமன் வளநாடுடையாருக்கு அருகில் வந்து கூறினான்.

“பதறாதீர்கள், பெரியவரே! நமக்கு இது ஓர் எதிர்ப்பே அல்ல; கடலில் கவிழப்போவது அவர்களுடைய படகுதான். நம்முடைய பாய்மரம் தீப்பற்றுவதற்கு அவர்கள் இன்னும் பல தீப்பந்தங்களை வீசி எறிய வேண்டும். இப்போது நான் இங்கிருந்து நேரே ஒரு சிறிய தீப்பந்தத்தை வீசி எறிந்தால் போதும். அந்தப் படகே குபிரென்று பற்றிக்கொண்டு எரியும். அவர்களுடைய படகு எரிவதற்குத் தேவையான நெருப்பு அந்தப் படகுக்குள்ளேயே இருக்கிறது. சந்தேகமாயிருந்தால் இதோ பாருங்கள்…” என்று இவ்வாறு கூறியபடியே ஒரு சிறிய தீப்பந்தத்தை எடுத்து அந்தப் படகில் ஓர் இலக்கைக் குறிவைத்து வீசினான் கப்பல் தலைவன். குறி தவறாமல் பாய்ந்தது அந்தத் தீப்பந்தம். என்ன அதிசயம்! கப்பல் தலைவனுடைய தீப்பந்தம் அந்த இடத்தை நெருங்கு முன்பே படகுக்குள் தீப்பற்றி விட்டாற்போலச் சோதி மயமான மாபெரும் தீ நாக்குகள் அந்தப் படகிலிருந்து எழுந்தன. அதிலிருந்து கற்பூர மணத்தைச் சுமந்த புகைச் சுருள்கள் எங்கும் பரவின. படகில் பற்றிய நெருப்புச் சுடருக்கு நடுவே யிருந்து, “அடப்பாவி! படகில் கற்பூரம் இருப்பதை முன்பே என்னிடம் சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா?” என்று குரூரமாக ஒரு குரல் வினாவியது. அந்தக் குரூரக் குரல் நகைவேழம்பருடையதென மணிமார்பன் புரிந்துகொண்டான். “ஐயா! அதைச் சொல்ல வந்தபோதுதான் நீங்கள் என்னை அடக்கிப் பேசவிடாமல் தடுத்து விட்டீர்களே!” – என்று ஏளனச் சிரிப்போடு ஒரு குரல் அதற்குப் பதிலும் கூறியது. நெருப்புக் கொழுந்துகளுக்கிடையே பயங்கரமாகத் தெரிந்த நகைவேழம்பருடைய முகத்தைத் தங்கள் கப்பலின் மேல்தளத்திலிருந்தே பார்த்தான் மணி மார்பன். அந்தக் காட்சியைக் கண்டு பயத்தினால் உடல் சிலிர்த்தது அவனுக்கு. அருவருப்போடு அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். “இந்த நெருப்பினால் அவியாமலிருக்கிற இவனது மற்றொரு கண்ணும் அவிந்து போய்விடும் போலிருக்கிறது…” என்று சொல்லிக் கொண்டே வளநாடுடையார் தம் கையிலிருந்த வேலைப் படகுக்குள்ளிருந்த நகைவேழம்பரின் முகத்துக்குக் குறி வைத்தபோது மீகாமன் பாய்ந்து அவரைத் தடுத்து விட்டான்.

“வேண்டாம்! புனிதமான புத்த பூர்ணிமைக்கு யாத்திரை செய்யும்போது இத்தகைய முரட்டுச் செயல்களைச் செய்வது நம்முடைய யாத்திரையின் தூய்மையைக் கெடுக்கும். அந்தப் படகில் கற்பூரம் குவிந்திருப்பதை நான் முதலிலேயே பார்த்து விட்டேன். கூடியவரை அவர்களை ஒன்றும் துன்புறுத்தாமலேயே திரும்பிப் போகச் செய்து விடலாமென்றுதான் முதலில் நான் எண்ணினேன். அவர்கள் தீப்பந்தங்களை எறிந்து நமது பாய்மரத்தை எரிக்க முயல்வதைக் கண்ட பின்பு தான் நானும் அவர்களை எரித்துவிட முன் வந்தேன். இவ்வளவு பழி வாங்கியது போதும். இனி அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கப்பல் தலைவனாகிய மீகாமன் கூறியது நியாயமாகவே தோன்றியது. உடனே அப்போது மீகாமன் கூறியபடியே செய்தார் வளநாடுடையார். மறுபடியும் அவர்கள் கப்பல் மேல் தளத்திலிருந்து திரும்பிப் பார்த்தபோது அந்தப் படகு தீயோடு மூழ்கிக் கொண்டிருப்பதையும் அதிலிருந்தவர்கள் அலைகளில் தத்தளித்தபடியே நீந்திக் கொண்டிருப்பதையும் கண்டனர். அந்தப் பகுதிக் கடற் காற்றில் எல்லாம் கற்பூரம் கருகிய மணம் மணந்து கொண்டிருந்தது.

“கடல் தெய்வத்துக்குக் கற்பூர ஆரத்தி எடுத்து முடித்தாயிற்று, பதுமை! ஐயோ பாவம்! தங்கள் படகு நிறையக் கற்பூரத்தைக் குவித்துக் கொண்டு அடுத்தவர்கள் கப்பலில் தீப்பந்தங்களை எறியத் துணிந்த அறியாமையை இவர்கள் எங்கே கற்றுக் கொண்டார் களோ? ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பார்களே, அந்தப் பழமொழிதான் இப்போது எனக்கு நினைவு வருகிறது பதுமை” – என்று தனியே தன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தான், மணிமார்பன்.

“முதல்முறை இந்திர விழாவுக்கு வந்திருந்தபோது ஏதோ ஒருநாள் இரவில் உங்களைப் புலிக்கூண்டில் தள்ளிக் கொன்றுவிட முயன்றதாகச் சொன்னிர்களே, அந்த ஒற்றைக்கண் மனிதர்தானா இவர்: அம்மம்மா! இந்த முகத்தைப் பார்த்தாலே இன்னும் பத்து நாளைக்குத் தூக்கத்தில் எல்லாம் கெட்ட சொப்பனம் காணும் போலிருக்கிறதே” என்று பயத்தில் தன் கயல்விழிகள் அகன்று விரிந்திடப் பேசினாள் மணி மார்பனுடைய மனைவி பதுமை.

“ஆமாம்! ஆமாம்! ஒரு கண் இல்லாத இந்தப் பாழ் முகத்தைப் பார்த்துத் தொலைக்கிற போதெல்லாம் அப்படி ஒவ்வொரு முறை பார்த்தவுடனும் ஒரு புண்ணிய தீர்த்தத்தில் போய் மூழ்கிவிட்டு வந்துதான் அந்தப் பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் பதுமை ! சித்திரக் கலையில் எப்போதும் ஒரு தத்துவம் நிலையான தாக உண்டு. பார்க்கவும் நினைக்கவும், அழகான முகங்கள், அழகான பொருள்கள், தோற்றங்கள், சூழ்நிலைகள் கிடைத்தால் – சைத்திரீகன், படைப்பதிலும் வரைவதிலும் அதே அழகு பிரதிபலிக்கும் என்பார்கள். பாவமே கண் திறந்து பார்ப்பது போன்ற இப்படிப்பட்ட குரூர முகங்களையே தினம் தினம் பார்த்துக் கொண்டி ருந்தால் அழகு என்கிற நளின குணமே நம் நினைப்புக்குள் வராது விலகிப் போய்விடும் பதுமை!”

“பாவம்! நாம் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிற இந்தக் கப்பலையே நெருப்பு மூட்டி எரியச் செய்து கவிழ்த்துவிடலாம் என்று கெட்ட எண்ணத்தோடு தேடிவந்து அவர் தானே கவிழ்ந்து போய்விட்டார்.”

“அவர் மட்டும் கவிழ்ந்து போகவில்லை பதுமை! அவருடைய நம்பிக்கைகளும் தூண்டிக் கொண்டு வருகிறவருடைய எல்லா நம்பிக்கைகளும் கற்பூரத்தோடு சேர்ந்தே எரிந்து போய்க் கடலில் கவிழ்ந்துவிட்டன. பதுமை! ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்வார்களே. அது இன்று தான் என் வரையில் மெய்யாயிற்று. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் இந்தப் பயங்கர மனிதருடைய மேற்பார்வையில் நான் கொடுமைப் படுத்தப்பட்ட நாட்கள் என் வாழ்விலேயே இனி என்றும் வரமுடியாத துரதிஷ்டம் நிறைந்தவை. அந்த துரதிர்ஷ்டம் நிறைந்த நாட்களில் இந்தக் கொலைகார மனிதரை என்னென்ன வெல்லாமோ செய்துவிட வேண்டும் என்று என் கைகள் துடித்தது உண்டு; இரத்தம் கொதித்ததும் உண்டு. ஆனால் அப்போது என் கைகள் இவ்வளவு வலிமையற்றவையாக இருந்தன.”

“இப்போது மட்டும் என்னவாம்? சித்திரக்காரர்களுக்குக் கைகள் விரல்கள் மனம் எல்லாமே எப்போதும் மென்மையானவையாகத்தானே இருக்க வேண்டும்?”

“அப்படியல்ல, பதுமை ! அன்றிருந்ததைவிட இன்று நான் அதிகமான பலத்தைப் பெற்றிருக்கிறேன். அன்று என்னுடைய இரண்டு கைகளின் வலிமைதான் எனக்கு உண்டு. இன்றோ நான்கு கைகளின் வலிமைக்கு நான் உரிமையாளன்.”

“எப்படி?”

“எப்படியா? இதோ இந்தப் பூங்கைகளும் சேர்த்து என் கைகளில் புதியவனாக இப்போது பிணைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுக்காகவும் சேர்த்து நான் பொறுப்பு அடைந்திருக்கிறேன்” என்று சொல்லிப் பதுமையின் வளை குலுங்கும் பெண்மைக் கரங்களைத் தன்னுடைய மென்மைக் கரங்களால் பற்றினான் ஓவியன் மணிமார்பன்.

“ஏற்கெனவே மென்மையான கைகளிலே இன்னும் இரண்டு மெல்லிய கரங்கள் வந்து சேர்வதால் வலிமை கூடுவதற்கு வழி ஏது?”

“வழி இருக்கிறது.! உன்னைப்போல் மெய்யான அன்பைச் செலுத்துகிற அழகு வாய்ந்த மங்கல மனைவி ஒருத்தியே தன் கணவனுக்கு ஆயிரம் யானைகளின் பலத்தைத் தர முடியும். பதுமை!”

கணவனுடைய புகழ்ச்சியைக் கேட்டுப் பதுமை நாணிக் கண் புதைத்தாள். குனிந்த தலை நிமிராமல் கடலைப் பார்த்துக் கொண்டே கணவனை ஒரு கேள்வி கேட்டாள் பதுமை:

“ஒரு பெண்ணின் அழகும் மங்களமுமே உங்களைப் பலசாலியாக்கி யிருப்பதாக நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களே. பூம்புகார் நகரம் முழுவதும் தேடினாலும் கிடைக்காத இரண்டு பேரழகிகளின் அழகிய கைகளைப் புறக்கணிக்கிறவருக்கு அந்தப் புறக்கணிப்பால் நான்கு கைகளின் வலிமையல்லவா கிடைக்காமல் வீணாகப் போகிறது?”

“நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய், பதுமை?”

“அதோ அந்தக் கோடியில் நின்று கொண்டு உச்சி வானத்தில் கதிரவனின் ஒளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே அவரைப் பற்றிச் சொல்கிறேன்” – என்று கப்பல் தளத்தின் மற்றொரு கோடியில் நின்று கொண்டிருந்த இளங்குமரனைக் காண்பித்தாள் பதுமை, அப்போது அவள் இதழ்களில் குறும்புப் புன்னகை முகிழ்த்தது. மணிமார்பன் தனது வலது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி அந்த மதி முகத்தின் கண்களில் வண்டு பறப்பது போல் சுழன்ற குறுகுறுப்பைப் பார்த்துக்கொண்டே அவளைக் கேட்டான்.

“பதுமை! உலகத்தில் அத்தனை குறும்புகளும் பெண்களாகிய உங்கள் பேச்சிலிருந்துதான் கிடைத்திருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா இதை?”

“ஏன் அப்படி?”

“ஏனா? நான் எதையோ சொல்லத் தொடங்கினால் நீ எப்படியோ கொண்டு வந்து முடிக்கிறாய், பதுமை! பற்பல ஆறுகளுக்கு நீர் அளிக்கும் ஒரே மலையைப் போல் இளங்குமரன் தன்னுடைய பார்வையால், பேச்சால், நினைப்பால் பலருக்கு வலிமையை அளிக் கிறவர். முல்லையும் சுரமஞ்சரியும் அவரைப் பற்றி நினைப்பதனாலேயே தங்கள் அழகை வளர்த்துக் கொள்ள முடியும். தன்னைச் சேர்கின்ற கைகளுக்குத் தானே வலிமையளிக்கவல்ல அந்தப் பொற்கரங்கள் மற்றவர்களுடைய கைகளுக்கு ஆசைப்பட வேண்டியது அநாவசியம்! அவருடைய கைகள் ஆசைப்படுகின்றவை அல்ல. ஆசைப்படச் செய்கிறவை!”

“நீங்கள் எப்போதுமே உங்கள் நண்பருக்காக – தவறு தவறு. உங்கள் குருவிற்காக விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்கள்.”

“நீ மட்டும் என்னவாம்! உங்கள் பெண் இனத்துக்காக விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாயே.”

பதுமை சிரித்தாள். சித்திரத்தில் திட்ட முடியாத அந்தச் சிரிப்பின் நளினத்தில் தானே தூரிகையாகிக் குழைந்து இணைந்தான் மணிமார்பன் அவள் தன் முகத்தை மீண்டும் கடலின் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். இருந்தாற் போலிருந்து. “அதோ.. அங்கே பாருங்கள்…” என்று பயத்தினால் முகம் வெளிறியபடி பதுமை சுட்டிக் காட்டிய திசையில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் மணிமார்பன், அலைகளில் மிதக்கும் மரக் கட்டையொன்றில் மேலே சாய்ந்து படுத் தாற்போல் பற்றிக்கொண்டு செல்லும் மனித உருவம் ஒன்றைக் கண்டான். ஒரே ஒரு கணம் அந்த உருவம் அவர்களுடைய கப்பலின் பக்கமாக முகத்தைத் திருப்பிய போது “அவர்தான்! அவரேதான்” என்ற குரல் பதுமையின் இதழ்களிலிருந்து பயத்தோடு ஒலித்தது.

Previous articleRead Manipallavam Part 4 Ch2 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 4 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here