Home Manipallavam Read Manipallavam Part 4 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

84
0
Read Manipallavam Part 4 Ch4 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli Part 4,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 4 Ch4 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 4 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

நான்காம் பாகம் – பொற்சுடர்

அத்தியாயம் 4 : புரியாத புதிர்கள்

Read Manipallavam Part 4 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

இருளில் தந்தையாரின் ஊன்று கோலைப் பார்த்து நடுங்கிய அதே இரவில் சுரமஞ்சரி தானும் வசந்தமாலையுமாகச் சிந்தித்துச் சிந்தித்து ஒரு முடிவு கிடைக்காமல் கலங்கும் படியாக நேர்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் நிகழ்ந்திருந்தது. அந்த நாளின் இரவு அவளால் மறக்கமுடியாதது. தானும் தோழியுமாகத் தங்கள் மாடத்தின் உட்புறம் நின்று பேசிக்கொண்டிருந்த போது பெருமாளிகையின் முன்புறம் வாயிலருகே யாரோ யாரையோ பளிரென்று அறைகிற ஒசை கேட்டதை உணர்ந்து விரைந்து சென்று பார்த்ததை எண்ணி எண்ணி மனம் குழம்பிக் கொண்டிருந்தாள். சுரமஞ்சரியின் சிந்தனையில் அப்போது சுழன்று கொண்டிருந்த எண்ணங்கள் யாவும் விடுவிக்க முடியாத புதிர்களாக இருந்தன. புதிர்களிலிருந்து விடுவிப்பதற்கு முன் தானே அங்கிருந்து விடுபட்டு ஓடிவிடலாம் போலத் தோன்றியது அவளுக்கு. அதுவும் இயலாமல் தான் காவலில் வைக்கப்பட்டிருப்பதை நினைத்தபோது தான் அவளுடைய வேதனை அடங்காமல் வளர்ந்தது. வேதனை வளரும்போது சிந்தனையும் வளர்ந்தது. பொதுவாகத் தங்களுக்குள் பலவீனமுடைய இருவர், பலமும் வலிமையும் கொண்டு எதையும் சந்திக்க முடிந்த ஆற்றல்கள் நிறைந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்காக ஒன்று சேருவதுண்டு. நகைவேழம்பரை முற்றிலும் அடக்கியாள முடியாதபடி தந்தையாரிடம் உள்ள ஆற்றாமை என்ன? தந்தையாரை முற்றிலும் புறக்கணித்து விட்டுத் தனித்தவராக நிமிர்ந்து நிற்க முடியாதபடி நகைவேழம்பரிடம் உள்ள ஆற்றாமை என்ன? இரண்டு ஆற்றாமைகள் ஒன்றுபடுவதால் ஏதேனும் ஓர் ஆற்றல் தோன்ற முடியுமென்று அரசியல் நுணுக்கங்களைக் கூறும்போது திருவள்ளுவரைப் போன்ற புலவர்கள் தங்கள் நூல்களில் தெரிவித்திருப்பதை நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி. இந்தச் சிந்தனைப் புதிர்களுக்கு மேல் மற்றொரு புதிரும் மறுநாள் காலை அந்த மாளிகையில் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையாரையும் நகைவேழம்பரையும் மறுநாள் காலையிலிருந்து அங்கே காணவில்லை. அவர்களை வசந்தமாலையோ தானோ நேரில் பார்க்க முடியாவிட்டாலும் மாளிகையில் ஏதாவதொரு பகுதியிலிருந்து அவர்கள் இருவரும் பேசுகிற குரலையாவது சுரமஞ்சரி கேட்பாள். மறுநாள் விடிந்ததிலிருந்து மாளிகையின் எந்தப் பகுதியிலும் தனியாகவோ, சேர்ந்தோ நகைவேழம்பர் – தந்தையார் இருவருடைய குரலும் கேட்கவில்லை. அந்த இரண்டு குரலும் கேட்காததனால் மாளிகையே மாறிப்போய்த் திடீரென்று புதுமை பெற்றுவிட்டாற் போலிருந்தது. முதல்நாள் இரவில் கண்டதையும் மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் காணாமற் போனதையும் சேர்த்து எண்ணி இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏதேனும் காரண காரியத் தொடர்பு இருக்குமோ என்று நெஞ்சம் குழம்பினாள் சுரமஞ்சரி. நூலில் சிக்கல் விழுவதுபோல் ஒரு புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இன்னொரு புதிர் தோன்றிக் குழப்பத்தை மிகுதியாக்கியதே ஒழியத் தெளிவு பிறக்கவில்லை; புதிரும் விளங்கவில்லை.

“வசந்தமாலை! பார்த்தாயோ, இல்லையோ? இந்த மாளிகையின் இன்றைய நாடகத்தில் காட்சி மாறி விட்டது. நடிப்பும் மாறிவிட்டது. அவர்களுடைய பேச்சுக் குரலே கேட்கவில்லை. இன்னும் என்னென்ன கெடுதல்களுக்கு ஏற்பாடு நடக்கிறதோ, தெரியவில்லை” என்று தன் தோழியிடம் சொன்னாள் சுரமஞ்சரி. யாரிடமாவது ஒரு நோக்கமுமின்றிப் பேச்சுக் கொடுத்தாலும்கூட அப்போதுள்ள சூழ்நிலையில் அதுவே தன் மனதுக்கு ஆறுதலாயிருக்குமென்று அவள் எண்ணினாள்.

“இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பெரு மாளிகையில் இரைந்து கேட்கிற குரல்கள் எவையும் ஒலிக்காது அம்மா. உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும் இன்று அதிகாலையிலேயே கடற் பயணத்துக்காகப் புறப்பட்டுப் போய்விட்டார்களாம். சீனத்திலிருந்து வந்து சேரவேண்டிய கற்பூரக் கப்பல் ஏதோ இதுவரை வரவில்லையாம். அதைத் தேடி எதிர்கொண்டு போயிருக்கிறார்களாம், திரும்பி வருவதற்குச் சில நாட்களாகும் போலத் தோன்றுகிறது. காலையில் மாளிகையின் கீழ்ப்புறத்திலிருந்து இங்கு வந்திருந்த பணிப் பெண்ணைக் கேட்டு இதைத் தெரிந்து கொண்டேன்” என்றாள் தோழி.

“அப்படியா? இதை என்னால் நம்ப முடியவில்லை! ஆனால் இதில் நம்பவும் இடமிருக்கிறது வசந்தமாலை. நேற்று இரவு நடுச்சாமத்துக்கு மேல் இதோ இப்போது நாம் நின்று கொண்டிருக்கிறோமே, இந்த இடத்திலிருந்து கீழே முன்புறத்து வாயிலருகே என்ன காட்சியைக் கண்டோம் என்பதை நினைவூட்டிக்கொள். தந்தையாரும் நகைவேழம்பரும் எதிரெதிரே எப்படி நின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பார். இன்றைக்குக் காலையில் பொழுது விடிந்ததும் இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கப்பலில் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்றால் யாராவது நம்புவார்களா?”

“நம்புவார்களோ, மாட்டார்களோ நடந்திருக்கிறது. இன்று வைகறையில் இங்கு வந்து இந்தச் செய்தியை எனக்குக் கூறிய பணிப்பெண் மிகவும் தன்மையானவள். நமக்கு மிகவும் வேண்டியவள். அவள் பொய் சொல்லியிருக்க மாட்டாள்.”

“வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பதை வைத்துக் கொண்டு, நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் தீர்மானம் செய்ய முடியுமானால் என்னுடன் பிறந்த வானவல்லியும், என்னைப் பெற்று வளர்த்த நற்றாயும்கூட இப்போது இந்த மாடத்திற்குள் எட்டிப் பார்க்காமல் இப்படிப் புறக்கணிப்பாக இருப்பார்களா? இந்தப் புறக்கணிப்பை என்னவென்று சொல்லுவது? இந்த மாளிகையில் நான் ஒருத்தி உயிரோடு இருப்பதை எல்லாருமே மறந்து போய்விட வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டவர்களைப் போல நிச்சயமாக மறந்தே போய்விட்டார்களடி வசந்தமாலை! இந்த மாளிகைக்கு உள்ளே தான் இப்படி என்றால் வெளியிலாவது என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்டோ? அதுவும் இல்லை. நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே விளங்கவில்லை தோழி! இந்த மாளிகை, இதிலிருக்கிறவர்கள் எனக்குத் தருகிற புறக்ககணிப்பு எல்லாவற்றையும் நான் இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் என்னைப் பற்றியும் சிறிது நினைக் கிறார் என்று நான் அறிய நேரும்போது இந்த உலகத்திலேயே நம்பிக்கை நிறைந்தவளாக நீ என்னைக் காணலாமடி வசந்தமாலை! நாம் வாழ்வதற்கு என்று தனியாக நமக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அல்லது நம்முடைய வாழ்க்கையைக் கவனத்தோடு நோக்கிக் கொண்டிருப்பதற்குத் தனியாக ஒரு மனிதர் வேண்டும். இரண்டுமே இல்லாவிட்டால் உயிர் வாழ்வதில் பயன் என்ன? ஒன்றின் மறதி என்பது மற்றொன்றின் ஆழமான நினைவுதான்! மறப்பதற்கும் முடியாமல், நினைப்பதற்கும் பயனின்றி இப்போது நான் எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

“உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது, அம்மா! ஆனால் நான் என்ன செய்ய முடியுமென்றுதான் எனக்கும் தெரியவில்லை. உங்கள் தோழிக்கு உங்களிடம் நிறைந்த அநுதாபம் இருந்தும் அவள் வாயில்லாப் பூச்சியாயிருக்கிறாள் என்பதை நீங்களே அறிவீர்கள்.”

“நீ என்ன செய்வாய்? என்னைப் போலவே நீயும் சிறைப்பட்டிருக்கிறாய்! உனக்கு என் மேல் கனிவும், அநுதாபமும் இருப்பதே நீ எனக்கு இதயபூர்வமாகச் செய்யும் உதவிதான். அந்த அநுதாபத்தைக் கூட என் தாயும் சகோதரியும் எனக்கு அளிக்க முடியவில்லை போலிருக்கிறது, வசந்தமாலை! நீ எனக்கு அளித்துக் கொண்டு வருகிற பொருள் விலை மதிப்புக்கு அப்பாற்பட்ட பெறுமானமுடையது. மனத்தில் ஆழத்திலிருந்து கிடைக்கிற மெய்யான அநுதாபத்துக்கு விலையே யில்லையடீ…”

“உங்கள் தாயும், சகோதரியும் இயல்பாகவே இப்படி இருப்பார்களென்று என்னால் நம்பமுடியவில்லை. அம்மா! இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் தாயும் வானவல்லியும் வந்து உங்களைக் காணமுடியாதபடி ஏதேனும் பொய் சொல்லியிருப்பார்களோ என்று நான் சந்தேகப் படுகிறேன். வெறும் ஊன்றுகோலை நிறுத்தி வைத்தே இருட்டில் உங்களையும் என்னையும் பயமுறுத்தி விடலாமென்று கருதியவர், மற்றவர்களை வேறுவிதமாகப் பயமுறுத்தியிருக்க மாட்டாரென்பது என்ன அம்மா நிச்சயம்? ஒன்று உங்கள் தாயும் சகோதரியும் பயமுறுத்தப்பட்டு உங்களைப் பார்க்க வராமல் இருக்க வேண்டும். அல்லது ஏமாற்றப்பட்டு உங்களைப் பார்க்க வராமல் இருக்க வேண்டும். வேறுவிதமாக நினைப் பதற்கு என்னால் முடியவில்லை.”

“உண்மையில் இப்படி இருக்குமோ என்னவோ? ஆனால் உன்னுடைய பதில் எனக்கு ஆறுதலளிப்பதாயிருக்கிறது. நாம் எதையாவது நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது முடியாவிட்டால் யாராலாவது நினைக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் நடைப்பிணமாக வாழ்வதற்கு நம்மைப் போன்ற பெண்களால் ஆகாது. நான் அதியற்புதமான பேரழகு படைத்தவளென்று நீங்களெல்லாம் வாய்க்கு வாய் என்னைப் புகழுகிறீர்கள். இதோ இந்த மாடத்திலிருக்கும் நிலைக்கண்ணாடியும் என்னையே பிரத்தியட்சமாகக் காட்டி எனக்கே என் அழகை நிரூபிக்கிறது. ஆனால் நான் அழகாயிருக்கிறேன் என்பதை நீங்களும் இந்தக் கண்ணாடியும், இதற்கெல்லாம் மேலாகப் பூம்புகார் நகரமும் சொன்னால் கூட அவற்றுக்காக நான் பெருமைப்பட மாட்டேன். என்னுடைய அழகை யார் உணரவேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேனோ, அவர் உணர வேண்டும், அவர் நினைக்க வேண்டும். அவர் பாராட்ட வேண்டும். ஆகாயத்தை நோக்கி நிமிர்ந்து பெரிதாக எதையோ இலக்கு வைத்துக்கொண்டு பார்க்கும் அந்த நளின நயனங்களின் ஆண்மை திகழும் கம்பீரமான பார்வை கீழே குனிந்து என்னைப் பார்க்க வேண்டும். என்னைத் தேட வேண்டும், என் அதிகை நாட வேண்டும். இந்த ஆசை நிறைவேறாதவரை நான் நினைக்கிறவள்தான்; நினைக்கப்படுகிறவள் இல்லை. வசந்தமாலை ஒரு செய்தியை நான் எப்படி நினைக்கிறேனோ, அப்படியே உனக்குப் புரிய வைப்பதற்கு முடிந்த வார்த்தைகளை இப்போது நான் என்னுடைய பேச்சுக்காகத் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருடைய அழகில் நான் மனந் தோய்ந்திருக்கிறேனோ அவருடைய சொற்களாலேயே என்னுடைய அழகு அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்…”

இவ்வாறு சொல்லிக்கொண்டே வந்த சுரமஞ்சரி சொற்களை நிறுத்திக்கொண்டு வசந்தமாலையின் கண்களை உற்றுப் பார்த்தாள். அந்தக் கண்களில் குறும்பு தெரிந்தது. எதையோ சொல்ல விரும்பும் ஆவலும் தெரிந்தது.

“நீங்கள் எதைச் சொல்லத் தவிக்கிறீர்களோ, அதையே உங்கள் சொற்களைக் காட்டிலும் நயமாக உங்களுடைய கண்கள் பேசுகின்றனவே அம்மா?”

“வாய் திறந்து பேசியே புரியாதவர்களுக்குக் கண்களால் பேசியும் பயனில்லை, தோழி! இரண்டு வகையான பேச்சிலும் இதுவரை எனக்குத் தோல்வி தான். தொடர்ந்து தோற்றுப் போய்க்கொண்டே வருகிறவள் ஆசைப்படும்படியாக இந்த உலகத்தில் என்ன மீதமிருக்கிறது?”

“வெற்றி மீதமிருக்கிறதே; அது போதாதா அம்மா? எதில் நிறையத் தோற்றுக் கொண்டிருக்கிறோமோ அதில் நிறையத் தாகம் கொள்வதும் தவிர்க்க முடியாதவை என்று நீங்களே சொல்வீர்களே…”

“பார்க்கலாம்! நான் சொல்லிக் கொண்டிருப்பதில் நானே தோற்றுப் போய்விட முடியாதென்பது என்ன உறுதி” என்று சொல்லிச் சிரிக்க முயன்று கொண்டே முதல்நாள் இரவிலிருந்து அந்த மாடத்தில் கிடந்த தந்தையாரின் ஊன்றுகோலைத் தன்போக்கில் கையிலெடுத்துச் சுழற்றினாள் சுரமஞ்சரி. ஒரு நோக்கமுமில்லாமல் தற்செயலாக அவள் செய்த இந்தச் செயலுக்கு முற்றிலும் எதிர்பாராத விளைவு ஒன்று ஏற்பட்டது. அந்த விளைவும் அதில் அடங்கியிருந்த உண்மையும் சுரமஞ்சரி வசந்தமாலை இருவரையுமே பெரு வியப்பில் ஆழ்த்தியது.

ஒன்றையும் செய்ய வேண்டிய குறிப்பில்லாத போது கைத்தினவாகத் தானே செய்யும் நோக்கமில்லாத காரியமாகத்தான் சுரமஞ்சரி ஊன்றுகோலின் பிடியைப் பற்றிச் சுழற்றினாள். இரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்றிருந்த அந்த யாளி முகப்பிடியோ மரைமரையாகக் கழன்று ஊன்றுகோலிலிருந்து தனியே பிரிந்து அவள் கைக்கு வந்துவிட்டது. பிடியும் ஊன்றுகோலும் தனித் தனியே கழன்றதற்காக மட்டும் சுரமஞ்சரியோ, வசந்தமாலையோ வியப்படையவில்லை. அவை தனித் தனியே கழன்றபோது அவற்றினிடையே சிறைப்பட்டுக் கிடந்த உண்மை ஒன்றும் கழன்று, வெளியேறித் தனியே தரையில் வீழ்ந்தது.

யாளி முகப்பிடி தனியே கழன்றபின் நீண்ட குழல் போலிருந்த ஊன்றுகோலின் உள்ளேயிருந்த சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய ஆயுதங்களைப்போல் சிறுசிறு பொன் வடிவங்களால் கோவை செய்யப்பட்ட ஆரம் ஒன்று வெளிவந்து கீழே விழுந்தது.

“இது ஐம்படைத்தாலி என்னும் ஆரம் அம்மா!” என்று சொல்லிக்கொண்டே கீழே குனிந்து அந்த ஆரத்தை எடுத்துத் தலைவியிடம் நீட்டினாள் வசந்தமாலை.

“சிறு குழந்தைகளுக்குக் காப்பிடும் போதல்லவா இதையும் அணிவார்கள்? இதை எதற்காக இந்த ஊன்று கோலுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்?” என்று கேட்டுக்கொண்டே அதை வாங்கி வியப்புடன் பார்க்கலானாள் சுரமஞ்சரி.

“ஒருவேளை இந்த ஊன்றுகோலையே சிறு குழநதையாக நினைத்து உங்கள் தந்தையார் இதற்குக் காப்பிட்டிருக்கலாமோ, என்னவோ?” என்று நகை பாடினாள் வசந்தமாலை. சுரமஞ்சரி பதிலுக்கு நகைக்கவில்லை. அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்த ஊன்று கோல், அதன்பிடி, உள்ளேயிருந்த ஐம்படைத்தாலி யாவும் விடுபடாத புதிர்களாயிருந்தன அவளுக்கு. தந்தையாரும் நகைவேழம்பரும் கடற் பயணித்திலிருந்து திரும்புகிற வரை அந்தப் புதிர்களை விடுவிக்கும் தனது முயற்சிக்குத் தடையில்லை என்ற ஒரே ஆறுதல் மட்டும் அவளுக்கு இருந்தது.

Previous articleRead Manipallavam Part 4 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 4 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here