Home Manipallavam Read Manipallavam Part 5 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 5 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

55
0
Read Manipallavam Part 5 Ch4 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 5,nithiliavalli Part 5,nithiliavalli Part 5,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 5 Ch4 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 5 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

ஐந்தாம் பாகம் – நிறை வாழ்வு

அத்தியாயம் 4 : அகக்கண் திறந்தது

Read Manipallavam Part 5 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

தன் தாய் தந்தை உற்றார் உறவினர் எல்லாரும் அழிந்தொழிந்து காலமாகி விட்டார்கள் என்று அருட்செல்வ முனிவர் கூறிய தாங்க முடியாத அந்தத் துக்கச் செய்திக்காகக் கதறி அழுவதா, அல்லது ‘நீ அழுவதை நான் விரும்பவில்லை. நீ வீரனாக எழுந்து நிற்க வேண்டும்’ என்று அவர் கேட்கும் வேண்டுகோளுக்கு இணங்கி நிற்பதா என்று புரியாமல் மருண்டான் இளங்குமரன். ‘நெகிழ்ந்த உணர்ச்சிகளை எதிரேதிரே சந்திப்பதற்கு ஞானிகளாலும் கூட முடியாது’ எனக் கப்பலிலிருந்து இறங்கி வரும்போது வளநாடுடையார் கூறியிருந்த அநுபவம் நிறைந்த சொற்களை இப்போது மீண்டும் நினைக்கத் தோன்றியது அவனுக்கு. கண்களை இமையாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அருட்செல்வ முனிவரை நோக்கிக் கூறலானான் இளங்குமரன்:

“சுவாமீ! மதம் பிடித்த யானையைப் போல் என்னுடைய இந்த இரண்டு கைகளுக்கும் நான் எதிர்ப்பை தேடிக் கொண்டு திரிந்த காலத்தில் எந்தச் செய்தியை உங்களிடம் பலமுறை தூண்டித் தூண்டிக் கேட்டேனோ அதை அப்போது சொல்வதற்கு மறுத்தும் மறைத்தும் என்னை ஏமாற்றிவிட்டு, உணர்வுகளாலும், இலட்சியத் தாலும் நான் மாறிவிட்ட இந்தக் காலத்தில் இப்போது இப்படி அதைச் சொல்வதற்கு முன்வருகிறீர்களே?”

அருட்செல்வரிடம் இப்படி இந்தக் கேள்வியைக் கேட்டபோது கண்ணும் மனமும் கலங்கிய நிலையில் இளங்குமரன் வேதனைப் படுவதை அருகில் நின்ற வளநாடுடையாரும் குலபதியும் கவனித்தார்கள். இளங்குமரனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அருட்செல்வ முனிவர் தம்முடைய மறுமொழியால் போக்கினார். அந்த மறுமொழியை அவர் கூறும்போது அடக்கம் நிறைந்த அவருடைய இயல்பையும் மீறிக்கொண்டு அவர் பேசும் சொற்களில் கணத்திற்குக் கணம் ஆவேசம் வளர்வது புலப்பட்டது. தம்முடைய சொற்களின் மூலம் அவன் மனத்தில் ஏதோ ஒரு கனலைப் பற்ற வைப்பதற்கு முயன்றார் அவர்.

“இளங்குமரா! நீ உணர்ச்சி வசப்பட்ட விடலைப் பிள்ளையாகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் உன்னிடம் பல செய்திகளை நான் சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் உண்டு. காவிரிப்பூம் பட்டினத்திலே நான் உன்னை வளர்த்து ஆளாக்கிய போது உன்னையும், என்னையும் அழித்து விடுவதற்கு ஒவ்வொரு கணமும் சூழ்ந்து கொண்டிருந்த பகைகளைப் பற்றி நீ அறிந்திருக்க மாட்டாய். அந்தக் காலத்தில் ஒற்றர்களைப் போல் உன்னையும், என்னையும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பயங்கரமான மனிதர்களைப் பற்றியும் அறிந்திருக்க மாட்டாய். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உன் உயிரையும் காப்பாற்றி வளர்த்துக் கொண்டு என் உயிரையும் பகைவர்கள் பறித்துக்கொண்டு விடாமல் நான் வாழ்ந்த வாழ்க்கையை இப்போது நினைத்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கிறது. கடைசி கடைசியாக நான் எதற்குப் பயந்து கொண்டிருந்தேனோ அந்த விளைவே உன்னையும் என்னையும் மிக நெருக்கமாகச் சூழ்ந்தது. அப்போதுதான் நான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். உன் எதிரிகளைப் பழி வாங்கி அவர்களிடமிருந்து நீ மீட்க வேண்டிய செல்வங்களை மீட்பதற்காக உன் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். உன்னுடைய குலப் பகைவர்கள் யார் என்பதைக் காலம் பார்த்து உனக்குச் சொல்லி உன்னைத் தூண்டுவதற்காக நானும் காப்பாற்றப்பட வேண்டும். நாம் இரண்டு பேருமே அந்த நோக்கத்திற்காக உயிரைக் காத்துக் கொண்டு வாழ்கிறோம் என்று நம்மை அழிக்க விரும்புகிறவர்களுக்குத் தெரிவதும் உடனடியாக இருவருக்கும் கெடுதலைத் தரும். இப்படித் தீர்மானமாகச் சிந்தித்த பின்புதான் நான் சிறிது காலம் இறந்து போய் விட முடிவு செய்தேன். இறப்பது என்றால் ‘எல்லை கடந்து போவது’ என்றும் ஓர் அர்த்தம் உண்டு அல்லவா? அந்தப் பொய்ச் செய்தியை உலகத்திற்குப் பரப்பிவிட்டு நான் பூம்புகாரின் எல்லையைக் கடந்து இங்கே வந்த போது வளநாடுடையாரிடம் முன்பு ஒப்படைத்துவிட்டு வந்த கடமையை அவரும் இன்றைக்கு இங்கே உன்னை அழைத்து வந்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார். உன்னையும் என்னையும் காப்பாற்றிக் கொண்டு நான் சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையில் வாழ்ந்தபோது வளநாடுடையாரும், ஆலமுற்றத்து நீலநாக மறவரும் பலவகையில் எனக்கு உதவியாயிருந்தார்கள். அப்படி அவர்கள் என்னிடம் அந்தரங்கமாகப் பழகியும் அவர்களிடம் கூடச் சில இரகசியங்களை நான் சொல்ல முடிந்ததில்லை. சூழ்நிலை அப்படியே என் வாயைப் பேசவிடாமல் அடக்கியிருந்தது.

“குழந்தாய்! நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட காரியமானாலும் அந்தக் காரியத்தைத் தொடங்குவதற்கு முன் இருள் தீர எண்ணித் தொடங்க வேண்டும். உனக்கு ஆவல் வந்த போது இந்தக் காரியத்தைச் செய்யக் காலம் வரவில்லை. இப்போது ஏற்ற காலம் வந்திருக்கிறது. ஆனால் உன் மனத்தில் மானமும், உணர்வுகளில் கொதிப்பும் வரவில்லை. தீக்கடையும் அரணிக்கோலில் கடைகிறவரை நெருப்பு ஒளிந்திருப்பதைப் போல க்ஷத்தியரியனுடைய மனத்தில் மானம் நிறைந்திருக்க வேண்டும். உராய்ந்து பார்க்கும் போது தீக்கடைக் கோலிலிருந்து நெருப்புப் பிறப்பதைப் போலத் தான் பிறந்த குடிக்கு உற்ற துன்பங்களை உணர நேரும்போதே வீரனுடைய நினைவுகளில் சூடு பிறக்க வேண்டும். சூழ்நிலையிலும், உணர்வுகளிலும் எவ்வளவுதான் அமைதியடைந்திருந்தாலும் நீ உன்னுடைய உள்ளக் கனலை ஒருபோதும் அவிய விட்டு விடக்கூடாது. தன்னுடைய பகைக் குலத்தின் கடைசி மூச்சுத் துடித்துக் கொண்டிருக்கிறவரை வீரனின் மனத்தில் கனல் நிறைந்திருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டே வந்த முனிவரின் பேச்சில் இளங்குமரன் நடுவே குறுக்கிட்டான்:

“சுவாமீ! உங்களுடைய பேச்சின் ஆவேசத்தில் நான் இடையே குறுக்கிடுவதற்காகத் தாங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும். நானோ என் எண்ணங்களில் திரு நிறைய வேண்டும் என்று இடைவிடாமல் பாவனை செய்து கொண்டு அமைதியில் மூழ்க ஆசைப்படுகிறேன். நீங்களோ ‘உன் மனத்தில் கனல் நிறைய வேண்டும்’ என்கிறீர்கள். மனத்தின் எல்லையில் அருளையும், சான்றாண்மையையும் நிறைத்துக் கொண்டு நான் கருணை மறவனாக வாழ ஆசைப்படுகிறேன். நீங்களோ, கொடுமை மறவனாக என்னை, வில்லும் வாளும் எடுத்துக் கொண்டு உங்கள் வழியில் எழுந்து நிற்கச் சொல்லுகிறீர்கள்.”

“அப்படி எழுந்து நிற்க நீ கடமைப் பட்டிருக்கிறாய்! அதோ அந்த ஓவிய மாடத்தைப் பார். அந்த ஓவியங்களில் உயிரற்று வாழ்கிறவர்களுக்கும், உயிரோடு வாழ்கிற உனக்கும் என்ன வேறுபாடு? உன்னுடைய உடம்பில் இரத்தம் ஒடுகிறது. அது வீரக்குடியின் புகழ்பெற்ற குருதி. இன்று உன் குடும்பத்துக்கு நீ பயன்பட வேண்டிய காலமும் வந்துவிட்டது.

‘பொருள்கருவி காலம்வினை இடனோ(டு) ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.’

என்று செயலுக்கு இலக்கணம் கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நம்மைச் சூழ்ந்திருந்த இருள் தீர்ந்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் இந்திர விழாவின் முதல் நாள் இரவு உன் தாயை உனக்கு காண்பிப்பதாக நான் கூறியிருந்தேனல்லவா? அதற்கு முன்பே இரண்டொரு இந்திர விழாக்களின் போது அப்படிக் கூறி உன்னை ஏமாற்றி ஏங்க வைத்தேன். அப்போதெல்லாம் நீ என்மேல் கோபப்பட்டிருப்பாய். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நீ வளர்ந்து பெரியவனாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே உன்னுடைய தந்தையும் தாயும் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார்கள். நீ பெரியவனான பின்பு உன்னிடம் சொல்வதற்காக என்னிடம் உன் தாய் கூறி விட்டுப் போன செய்தி ஒன்று உண்டு. அது வேறொன்றுமில்லை, உன் தந்தையும் தாயும் அழிந்து போகக் காரணமாயிருந்தவர்களை நீ உன் கைகளால் பழிவாங்க வேண்டு மென்ற கட்டளைதான் அது. அதை இவ்வளவு காலங்கடந்து உன்னிடம் சொல்வதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கொடுமை நிறைந்த செய்திகளைக் கேட்டு நீ ஏங்கி நலிந்து வளர்ச்சி குன்றலாகாதே என்பதற்காகச் சிறிது காலம் அவற்றை நீ அறிந்து விடாமல் மறைத்தேன். நீ வலிமையோடு உணர்ச்சி வசப்பட்டு நின்ற காலத்தில் அந்த உணர்ச்சி வேகத்தினாலேயே எல்லாத் திட்டமும் கெட்டுப் போகுமோ என்றும் சிறிது காலம் அவற்றை உன்னிடமிருந்து மறைத்தேன். அப்படி மறைத்த தெல்லாம்கூட உன்னுடைய நன்மைக்காகத்தான். கடைசியாக, உன்னைச் சம்பாபதி வனத்திற்கு வரச் சொல்லி அங்கு உன் தாயைக் காண்பிப்பதாகக் கூறியிருந்தேனே – அன்று நான் உனக்குக் காட்ட நினைத்திருந்தது உன் தாயின் அருமையான ஓவியத்தையும், அவள் இறந்து போன இடத்தையும்தான். அவற்றை நீ பார்த்துவிட்டு உண்மையைப் புரிந்துகொண்டு ஆவேசமாயிருக்கும் சமயத்தில் இன்று உன்னுடைய உள்ளத்தில் நான் மூட்டுவதற்கு முயன்று கொண்டிருக்கிற இதே கனலை அன்றே மூட்டி விட விரும்பியிருந்தேன். ஆனால் அன்றிரவில் நான் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. உன் தாயின் ஓவியம் ஒன்றும் அவள் சாவதற்கு முன்பு அணிந்திருந்த விலை வரம்பற்ற அணிகலன்கள் பலவும் நீ இன்ன குடியிலே இன்னாருக்கு மகனாகத் தோன்றியவன் என்பதை நினைவூட்டும் அடையாள மாலை ஒன்றும் பூம்புகாரில் ஓரிடத்தில் ஒரு கொடிய மனிதருடைய பாதுகாப்பில் ஒளிக்கப்பட்டுக் கிடக்கின்றன. அவை தன்னிடத்தில் ஒளிக்கப்பட்டுக் கிடப்பதை நான் ஒருவன் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறேன் என்பதும் அந்தக் கொடியவனுக்குத் தெரியும். உனக்கு நினைவு தெரிந்து நான் உன்னுடைய வளர்ப்புத் தந்தையே தவிர உன்னைப் பெற்ற தந்தையில்லை என்பதையும் நீ அறிந்துகொண்ட பின் உன் பெற்றோரைப் பற்றி என்னிடம் கேட்ட போதெல்லாம் நான் அந்தக் கொடியவனிடம் போய் இரகசியமாக அவனைச் சந்தித்து உன் தாயின் ஓவியத்தையும் பிற பொருள்களையும் என்னிடம் கொடுத்து விடுமாறு உன் சார்பாக மன்றாடிய போதெல்லாம் அவன் என் வேண்டு கோளுக்குச் சிறிதும் செவிசாய்க்கவில்லை. என்னை அலட்சியப்படுத்தினான். ஏளனம் செய்தான். பயமுறுத்தினான்.

“இறுதி முறையாக நீயும் நானும் பிரிவதற்கு முந்திய இந்திர விழாவன்று முதல் நாள் காலையிலும் அந்தக் கொடியவனைச் சந்தித்து மன்றாடினேன். ‘இன்று நடு இரவுக்கு மேல் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் காத்திருந்தால் அவற்றை என் பணியாட்கள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள்’ என்று உறுதி கூறி அன்று என்னைத் திரும்பி அனுப்பியிருந்தான் அந்தக் கொடியவன். அன்றிரவு அனுப்பிய பணியாட்கள் செய்ய வந்த பணி என்ன தெரியுமா? சம்பாபதி வனத்துப் புதரில் வைத்து உன்னையும் என்னையும் கொன்று விட முயன்ற பணிதான். தெய்வ சித்தத்தால் அன்று நீயும் நானும் உயிர் தப்பி விட்டோம். அதன் பின்புதான் நான் அதிகமான விழிப்பையும் கவனத்தையும் அடைந்தேன். என் மனத்தில் இடைவிடாமல் சிந்தித்து இப்படி மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டேன்.

“வளநாடுடையாரின் இல்லத்திலிருந்து வெளியேறி நானே என்னுடைய தவச் சாலைக்குத் தீ வைத்து விட்டு நகரில் நான் இறந்து போனதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பிய பின் இந்தத் தீவுக்குப் புறப்பட்டு விடலாம் என்றும் அப்படி புறப்படு முன் நீலநாகரிடமோ வள நாடுடையாரிடமோ மட்டும் உண்மையைக் கூறிக் காலம் வருகிறவரை அந்த உண்மையை அவர்கள் வெளியிடக் கூடாதென்று வாக்கும் வாங்கிக் கொண்டு விடவேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன். இந்த எண்ணத்தோடு நான் வளநாடுடையாரின் வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இரகசியமாக வெளியேறிச் சக்கரவாளத்துக்குள் நுழைந்த போது வன்னி மன்றத்திற்குப் போகிற வழியில் ஒரு புதரருகே நமக்கு ஆகாதவர்களின் பேச்சுக் குரல் கேட்டு நின்று கவனித்தேன். முதல் நாள் இரவு சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் நம்மைக் கொன்று விட முயன்றவர்களே இந்திர விழாவின் இரண்டாம் நாளாகிய மறுநாளன்று இருள் மயங்கும் மாலையில் என் தவச்சாலைக்குத் தீ வைத்துவிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது, எதைச் செய்வதற்காக நான் போலியாய்த் திட்டமிட்டுக் கொண்டிருந்தேனோ அதை மெய்யாகவே செய்வதற்குத் திட்டமிடுகிறவர்களைப் பற்றி அறிந்தபின் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்கள் வைக்கிற நெருப்பில் சிக்கி அழிந்தது போலத் தோன்றும்படி பொய் செய்துவிட்டு நான் யாரும் அறியாமல் தப்பி வளநாடுடையாரைச் சந்தித்து அவரிடம் கூறவேண்டியதைக் கூறிய பின் இரவோடிரவாகப் புறப்பட்டு இந்தத் தீவுக்குப் பயணத்தைத் தொடங்கிவிடுவதென்று இருந்தேன். எல்லாம் அப்படியே நடந்தது. ‘இருட்டியபின் நகர் அரவம் அடங்கி ஓய்கிறவரை சுடுகாட்டுக் கோட்டத்தின் பாழடைந்த காளிகோயிலில் மறைந்திருந்து விட்டு அப்புறம் வளநாடுடையாரைச் சந்திக்கப் போகலாம்’ என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்செயலாக வளநாடுடையார் நான் ஒளிந்திருந்த அந்த இடத்துக்கே வந்து என்னைச் சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. நானும் அவரும் பேச வேண்டியவற்றையெல்லாம் எங்களுக்குள் பேசிக் கொண்டு விட்டோம்.

“அன்று பின்னிரவு நேரத்தில் பூம்புகார்த் துறையில் நான் இந்தத் தீவுக்குக் கப்பலேறு முன்பு வளநாடுடையாரிடம் உன்னைப்பற்றிக் கூறிய சொற்கள் எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கின்றன. ‘அந்தப் பிள்ளையின் தன்னம்பிக்கை அவனைக் காப்பாற்றும். தன்னைப் பிறர் வெற்றி கொள்ள விடாமல் தானே பிறரை வெற்றி கொள்ளும் மனம் அவனுக்கு இருக்கிறது. உலகத்தில் மிகப் பெரிய செல்வம் இப்படிப்பட்ட மனம்தான். இந்த மனம் உள்ளவர்கள் உடம்பினால் தோற்றுப் போனாலும் உள்ளத்தினால் வெற்றி பெறுவார்கள்!’ என்று உன்னைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அன்று அப்படிச் சொல்லிய நானே இன்று நீ உடம்பினாலும் தோற்றுப் போகக் கூடாதென்று கருதுகிறேன். நான் நீண்ட காலமாக உனக்குக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்த உன் தாயின் உருவத்தை இன்று நீயே இந்த ஓவிய மாடத்தில் பார்த்து விட்டாய். ஒருவேளை இங்கு நீ பார்த்த ஓவியங்களில் எது உன்னுடைய தாயின் ஓவியம் என்று புரியாமலே அதை உன் கண்கள் பார்த்திருக்கலாம். என்னுடன் மறுபடியும் வா! இப்போதே உனக்கு மீண்டும் அந்தப் புண்ணிய வதியைக் காண்பிக்கிறேன்” என்று பூப்போல மென்மையாயிருந்த அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போய் ஓவிய மாடத்திலே ஓரிடத்தில் அவனை நிறுத்தி வைத்தார்.

இத்தனை காலமாகத் தன்னைப் பெற்றவளைக் காண வேண்டுமென்று நிலைத்த ஏக்கமாக அடிமனத்தில் அழுந்திப் போயிருந்த இணையில்லாத பேருணர்வு இன்று இந்த ஒரே ஒரு கணத்தில் விசுவரூபமாய்ப் பெருகி மனத்தின் எல்லையெல்லாம் வியாபித்து நிற்க, இந்த ஒரு கணத்துக்காகவே இத்தனை நாளும் காத்துக் கொண்டிருந்ததைப் போலப் பரிவு பெருக இளங்குமரன் கண் மலர்ந்தான். எதிரே பார்த்தான். அந்தக் கணத்தை வாழ்த்தினான். அந்தக் கணத்துக்காகவே வாழ்ந்து கொண்டி ருந்ததைப் போலவே வாழ்த்தினான். அது அவன் சற்று முன்பு பார்த்திருந்த ஓவியம்தான்.

எந்த ஓவியத்தின் கண்களிலிருந்து நவரசங்களுக்குப் பதில் கருணை ஒன்றே பெருகி அவன் உள் உணர்வுகளை அன்பு வெள்ளத்தில் நனைத்ததோ, அதே ஓவியத்தை நோக்கி இப்போது அவனுடைய கண்களிலிருந்தும் கருணை பெருகிச் சுரந்து முதலில் பெருகிய கருணையோடு கலப்பதற்கு முந்துவதுபோலத் தவித்தது. காலத்தின் இயக்கத்தையே தடுத்து நிறுத்தி ஓடாமற் செய்துவிட்டாற் போன்ற நித்தியமான விநாடிகளாயிருந்தன அவை. யார் யாரோ தன்னிடமிருந்து பெற்றுக்கொண்டு மகிழத் தவித்த அன்பையெல்லாம் அப்படித் தவித்தவர்களுக்கு அளிக்காமல் இந்த ஒற்றைக் கணத்துக்காகவே தான் சேர்த்துக் கொண்டு வந்ததுபோல் தோன்றியது அவனுக்கு. அப்போது அவனுக்கு ஏற்பட்டிருந்த பெருமிதத்திற்கு ஓர் அளவே இல்லை.

‘என்னுடைய தாய் தன் காலத்தில் தனது தலைமுறையிலேயே பேரழகு வாய்ந்தவளாக வாழ்ந்திருக்க வேண்டும். என்னுடைய தாயின் கண் பார்வையிலிருந்து தான் நவரசங்களுமே பிறந்ததாக யாரோ கவியுணர்வு உள்ளவர்கள் இந்த ஓவியத்தின் கீழுள்ள ஏட்டில் எழுதி யிருக்கிறார்கள். இந்த எழில் வாய்ந்த தாயின் கைகளில் நான் ஏதோ ஒரு காலத்தில் என் பிஞ்சுக் கால்களை உதைத்துக் கொண்டு மெல்லத் தவழ்ந்திருக்கிறேன். இந்த எழில் வாய்ந்த தாயின் கண்கள் பார்த்துப் பார்த்துப் பெருமைப்படும்படியாக நான் இவளுக்குக் குழந்தையா யிருந்திருக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டே கண்களில் நீர் மல்க நின்ற அவனுக்குத் தன் தாயோடு தொடர்பு டைய வேறொரு ஞாபகமும் அப்போது வந்தது.

“நீங்கள் சான்றாண்மையாளராகப் புகழ் பெற்று நிற்பதை உங்கள் தாய் கண்டால் உங்களை ஈன்ற போதினும் பெருமகிழ்ச்சி அடைவாள்” என்று திருநாங்கூர்ப் பூம்பொழிலில் ஏதோ ஒரு நாள் காலை விசாகை கூறிய வார்த்தைகள் இந்தக் கணத்தில் அவனுக்கு நினைவு வந்தன. அத்தகைய பெரும் பாக்கியத்தைத் தன்னுடைய தாய்க்குத் தான் அளிக்க முடியாமல் போய்விட்டதை எண்ணியபோது மனத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையை அடைந்தான் அவன்.

‘உன் மனத்தின் வலிமையை வளர்த்துக் கொள்வதற்கு நீ என்ன கற்றிருக்கிறாய்?’ என்று பல நாட்களுக்கு முன்பு இந்திர விகாரத்துத் துறவி தன்னைக் கேட்டபோது அவனது உள் மனத்திலிருந்து விழித்துப் பார்த்த அகக் கண் எதுவோ அந்த அகக் கண்ணிலேயே அவலம் கலங்கித் துயரம் மலிந்து கொண்டிருந்தது இப்போது.

“இவர் உன் தந்தை! இவரும் இப்போது இந்த உலகத்தில் இல்லை” என்று அந்த ஓவியத்தில் இருந்த வீர ஆடவரைச் சுட்டிக் காண்பித்தார் அருட்செல்வ முனிவர். அந்த ஓவியத்தைத் தன் கண்களால் பார்த்த முதல் கணத்திலேயே அதிலுள்ள காதலர்களை உமையாகவும், சிவனாகவும் பக்தி பாவித்துக் கொண்டு வணங்க வேண்டும் போலத் தனக்குத் தோன்றிய உணர்வை மீண்டும் இப்போது இளங்குமரன் எண்ணினான். இப்படி எண்ணிய போது தன்னுடைய அகக்கண் இன்னும் நன்றாக மலர்ந்து அங்கே ஆன்மாவின் உணர்ச்சிக்கு மட்டுமே புலப்படக் கூடியதொரு துக்க மயமான சுக விளைவு பெருகுவதை இளங்குமரன் அனுபவித்தான். அந்தப் பரிபூரணமான அநுபவத்தில் அவன் மெய்மறந்து நின்ற போது வளநாடுடையார் அவன் அருகில் வந்து கூறலானார்:

“குலபதி உன்னுடைய தாய்மாமன் மகன் என்பதை இப்போது நீயாகவே புரிந்து கொண்டிருக்கலாம் இளங்குமரா! இந்தப் படத்திலிருக்கிற பெண் தன் தந்தையோடு உடன் பிறந்தவள் என்று சிறிது நேரத்துக்கு முன் குலபதியே உன்னிடம் கூறியிருந்ததை மறுபடியும் நீ இப்போதும் நினைத்துக்கொள். இந்தக் குடும்பத்தின் புகழை உலகத்துக்குச் சொல்ல வேண்டிய சக்தி ஒன்று இதிலிருந்து தவறி எப்படியோ எங்கோ வெளியேறிப் போய்விட்டது! அதை மறுபடியும் கண்டுபிடித்து இங்கே சேர்க்கிற வரை எனக்கு இவ்வளவு செல்வமிருந்தும் நான் மனத்தினால் ஏழைதான் என்று இந்த ஓவிய மாடத்துக்குள்ளே நீ நுழைந்த போது உன்னிடம் குலபதி வருத்தப்பட்டது யாருக்காகத் தெரியுமோ? உனக்காகத்தான்! நீதான் இந்தக் குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றப் போகிற சக்தி என்று குலபதியும் அருட்செல்வ முனிவரும், நானும் எல்லோருமே நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் சாவதற்கு முந்திய விநாடியில் உன் தாயின் மனத்திலும் தோன்றியிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நீதான் எங்களுடைய நம்பிக்கைகளைக் காப்பாற்ற வேண்டும்.”

“ஐயா! இந்த உறவுகளையும் பற்றுதல்களையும் புரிந்து கொள்ளும் போதில் எனக்குப் பெருமையாக இருப்பதைப் போலவே தயக்கமாகவும் இருக்கிறது. இந்த உறவுகளை அங்கீகரித்துக் கொள்வதன் மூலமாகவே நான் வேறெந்த மனிதர்கள் மேலாவது உறவு மாறி வைரமும் பகைமையும் கொள்ள நேருமோ என்று எண்ணிக் கலங்குகிறேன்.”

“இனிமேல் கலங்கிப் பயனில்லை குழந்தாய்! இதோ இந்தச் சுவடிகளைப் பார். சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையில் வசிக்கும்போது இவற்றை என் கையில் வைத்து நான் எழுத்தாணியால் கீறிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் நீ இவற்றையும் என்னையும் சேர்த்துப் பார்த்திருக்கிறாய். ஆனால் அப்போதெல்லாம் இவற்றில் நான் எழுதிக் கொண்டிருப்பது என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் உனக்கு ஏற்பட்டதில்லை. நான் ஏதாவது பழைய நூல்களுக்கு உரையெழுதிக் கொண்டிருப்பதாக நீ நினைத்திருக்கலாம். ஆனால் இன்று இவற்றைப் படிக்கச் சொல்லி நானே உன்னைத் தூண்ட வேண்டிய நிலையில் பொறுப்புடையவனாக இருக்கிறேன். உன்னுடைய புகழ் வாய்ந்த குடிக்குத் துன்பம் நேர்ந்த சோக வரலாறு இந்தச் சுவடிகளில் அடங்கியிருக்கிறது. இதை நீ படித்து உணரும்போது உன் குடிக்குக் கேடு சூழ்ந்தவர்கள் யாரோ அவர்கள் மேல் நீ கோபமும் கொதிப்பும் அடைந்து தான் ஆகவேண்டும். நெருப்பையும் சந்தனத்தையும் ஒரே உணர்ச்சியோடு உடம்பில் தாங்கிக் கொள்கிற அளவு சாந்த குணத்தின் உயரமான எல்லையில் போய் நிற்கிறவனாகவே இருந்தாலும் இந்த ஏடுகள் கூறும் உண்மைகளைப் படிக்கும்போது உன் இரத்தம் சூடேறிக் கொதிக்கத் தான் செய்யும். அதை உன்னால் தவிர்க்க முடியாது. நீ தவிர்க்கவும் கூடாது.”

“அப்படிக் கொடிய அநுபவம் எனக்கு ஏற்படத்தான் வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“உன் தாயே அப்படித்தான் நினைத்தாள்; சொன்னாள். அவள் இன்று உயிருடன் இல்லாத காரணத்தால் அவள் மனம் எந்தக் காரியத்தை நீ செய்து நிறைவேற்றுவாய் என்று நம்பிக்கொண்டே அழிந்து இறந்ததோ, அந்தக் காரியத்தை உனக்கு நினைவூட்டும் பொறுப்பை நானே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.”

“உங்களை நான் மறப்பதற்கில்லை. உங்களுக்கு நான் நிறையக் கடமைப் பட்டிருக்கிறேன். அதோ அந்த மாடத்திற்கு அப்பால் பேரொளிப் பக்கமாகிய சுக்கிர பட்சத்து நிலா எழுந்துவிட்டது. இந்த ஏடுகளை நாளை இதே வேளைக்குப் படிக்கிறேன். நான் இன்று இந்த வேளைக்கும் நாளை இதே வேளைக்கும் நடுவிலுள்ள ஒரே நாளை மட்டும் என் விருப்பம் போல் செலவழிக்க எனக்குப் பிச்சை கொடுத்தருளுங்கள்” என்று அருட்செல்வ முனிவருடைய கால்களில் வீழ்ந்து வணங்கியபடியே மன்றாடினான் இளங்குமரன். அவனுடைய பவித்திரமான கண்களிலிருந்து பெருகிய கருணை நீர்ப் பெருக்கில் அவருடைய தளர்ந்த பாதங்கள் நனைந்தன. அவர் அவனை நோக்கிக் கேட்டார்:

“பல நாட்களாகத் தீர்க்க வேண்டிய பழி சுமந்து கிடக்கும் போது இந்த ஒரே ஒரு நாளை என்னிடமிருந்து பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”

“வாழ்க்கைத் துன்பங்களுக்கு வேறு விதமான மருந்து காண வேண்டுமென்ற தாகம் ஒரு நாளில் ஏதோ ஒரு விநாடியில் தான் புத்தருக்கு உண்டாகியிருக்க வேண்டும். அந்தப் புனித ஞாயிறு பிறந்த ஒளி நாளைக்குப் பரவ இருக்கிறது. நாளைக்குக் காலையில் நான் மணிபல்லவத்துக்கு வருவதாக விசாகையிடம் சொல்லியிருக்கிறேன். நாளைக்கு ஒருநாள் மட்டுமாவது என்னைக் கோபமும் கொதிப்பும் அடையவிடாமல் என் போக்கில் வாழ அனுமதி தந்தருளுங்கள். நாளைக்கு இரவில் இதே நிலா உச்சி வானத்தை அடைவதற்குள் நான் மறுபடி இங்கே திரும்பி வந்து விடுகிறேன். அதன் பின்பு என்னை எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் நீங்கள் நடத்திக் கொண்டு போகலாம். நாளைக்கு மறுநாள் பொழுது புலர்வதற்குள் என்னுடைய குடியின் வரலாறுகளெல்லாம் அடங்கிய இந்தச் சுவடிகளை நான் படித்து முடித்து விடுவேன். என் அறிவின் வலிமையால் இந்தச் சுவடிகளை நான் படிக்கும்போது என் மனம் யார் மேல் வைரமும் பகையையும் கொள்ள முடியுமோ, அவர்களைக் கூடப் பொறுத்து நிற்க நான் முயல்வேன்.”

“அப்படிப் பொறுத்து நிற்பதற்கு நீ முயலக் கூடாது குழந்தாய்! கோபத்தில் இரண்டு வகை இருக்கிறது. சீற்றம் என்பது ஒன்று. செற்றம் என்பதும் ஒன்று. சீற்றம் என்பது கோபம் விளைய வேண்டிய நிகழ்ச்சி நிகழ்ந்த உடனே தோன்றித் தீர்ந்த உடனே தீர்ந்து போகிற கோபம். செற்றம் என்பது மனத்தினுள்ளேயே நெடுங் காலமாக நிகழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற கோபம். நீ உன் எதிரிகள் மேல் அடைய வேண்டிய கோபம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அந்தக் கோபத்தை இன்னும் ஒருநாள் தாமத மாகத்தான் அடைய வேண்டும் என்று நீ விரும்பினால் அதற்கு நான் குறுக்கே நிற்கவில்லை. உன் விருப்பப்படியே வளநாடுடையாரையும் உடன் அழைத்துக் கொண்டு நீ புத்த பூர்ணிமைக்குப் போய்விட்டு வா. ஆனால் எனக்கு நீ வாக்குக் கொடுத்திருப்பதை மறந்து விடாதே. இதே இடத்தில் தீபத்தையும் சுவடிகளையும் வைத்துக் கொண்டு நாளைக்கு இரவு உனக்காக நான் காத்திருப்பேன்” என்று கூறி அவன் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தார் அருட்செல்வ முனிவர்.

குலபதி அவர்களை வழியனுப்புவதற்குச் சங்கு வேலித்துறை வரை உடன் வந்திருந்தான். அவர்கள் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு வந்திருந்த பழைய கப்பல் மாலையிலேயே மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தது. மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும் மாலையில் அந்தக் கப்பலிலேயே புறப்பட்டுப் போயிருக்க வேண்டுமென்றும் தோன்றியது. சங்குவேலித் துறையிலிருந்து மணிபல்லவத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கீழை நாட்டு வாணிகக் கப்பல் ஒன்றில் இளங்குமரனும் வளநாடுடையாரும் இடம் பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

“ஐயா! நாளைக்கு நிலாப் புறப்படும் நேரத்திற்கே நான் இந்தத் துறையில் வந்து உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன். உங்கள் ஓவிய நண்பரையும் திரும்பி வரும்போது இங்கே உடனழைத்து வந்து விடுங்கள்” என்று விடை பெறும்போது குலபதி மனம் நெகிழ்ந்து கூறினான். அவனுடைய வார்த்தைகளில் இப்போது உறவின் நெருக்கமும், உரிமையும் கலந்து தொனித்தன.

“அதைப் பற்றியெல்லாம் நீ ஒன்றும் கவலைப்படாதே குலபதி! நான் ஒருவன் துணையாகக் கூடச் செல்லும் போது இளங்குமரனைத் திரும்ப அழைத்து வருவது பற்றி உனக்குச் சந்தேகம் ஏற்படவே வழியில்லை” என்று உறுதி கூறினார் வளநாடுடையார். வெள்ளி வெண்குடம் போல் நிலா மிதக்கும் வானத்தின் கீழே கடலில் பயணம் செய்யும் அந்த அழகிய வேளையில் இளங்குமரனுடைய புறக் கண்கள் தாம் கப்பலையும், கடலையும் உடன் இருந்தவர்களையும் வானத்து நிலாவையும் பார்த்துக் கொண்டிருந்தன. புறக்கண்களை விட ஆற்றல் வாய்ந்த அவனது அகக்கண்ணோ மணிநாகபுரத்தின் ஓவிய மாடத்தில் பார்த்த தன் தாயையும் தந்தையையும் மறுபடி மறுபடி தன்னுடைய மனத்திற்குள்ளேயே உயிருருவமாகக் கற்பித்துப் பார்த்து மானசீகமாக அவர்களைப் பலமுறை வணங்கிக் கொண்டிருந்தது.

Previous articleRead Manipallavam Part 5 Ch3 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 5 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here