Home Manipallavam Read Manipallavam Part 5 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 5 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

112
0
Read Manipallavam Part 5 Ch5 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 5,nithiliavalli Part 5,nithiliavalli Part 5,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 5 Ch5 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 5 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

ஐந்தாம் பாகம் – நிறை வாழ்வு

அத்தியாயம் 5 : விசாகையின் தத்துவம்

Read Manipallavam Part 5 Ch5 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிநாகபுரத்திலிருந்து புறப்பட்டிருந்த கப்பல் ஒன்றரை நாழிகைப் பயணத்தில் மணிபல்லவத் தீவை அடைந்து விட்டது. மணிநாகபுரமும், மணிபல்லவமும் வேறு வேறு இடங்கள் என்று பிரித்துச் சொல்ல முடியாதபடி மிக அருகிலேயே இருந்தன. மணிநாகபுரத்து நகர எல்லை முடிகிற கோடியில் ஒரு சிறிய நீர்ச் சந்திதான் மணிபல்லவத்தைத் தனியே பிரித்தது. நீண்ட தொலைவிலிருந்து வருகிற பிறநாட்டு மக்கள் மணிநாகபுரம் சங்குவேலி, பெருந்தீவு, மணிபல்லவம் எல்லாப் பிரிவுகளையும் நாகநாடு என்ற ஒரே தொகுதியாக எண்ணிப் புண்ணியப் பெயராகிய மணிபல்லவம் என்பதனாலேயே அதனை அழைத்து வந்தனர். கடலில் மிதக்கும் மரகதப் பசுந்தளிராக நிலாக் கதிர்களின் கீழ் அந்தத் தீவு புண்ணியப் பயன்களெல்லாம் ஒன்றுபட்டு மிதப்பது போலத் தெய்வ நகரமாய்த் தெரிந்தது. இளங்குமரனும், வளநாடுடையாரும் மணிபல்லவத் தீவின் மேற்கு கரையில் இருந்த இறங்குத் துறையில் இறங்கிப் பகல் நேரமே போலக் கலகலப்பாக இருந்த வழியே நடந்தனர். வீதி நிறையப் பெளத்த சமயத் துறவிகளும், வேறு பல சமயங்களைச் சேர்ந்த ஞானிகளும், சீவர ஆடையணிந்த பெண் துறவிகளுமாக எங்கு நோக்கினும் ஒளி நிறைந்த முகங்களாகத் தென்பட்டனர். தீவே மணப்பது போல அகிற் புகையும், கற்பூரமும், நறுமண மலர்களும் சந்தனமும் மணந்தன.

கோமுகி என்னும் தாமரைப் பொய்கைக் கரையில் பெரிய பெரிய கல் தூண்களில் அமைந்த தீப அகல்களில் பந்தம் எரிப்பது போல் நெய்யூற்றப் பெற்றுப் பெரிதாய் எரிந்து கொண்டிருந்த விளக்கு சுடர்களில் கீழே பாலி மொழியில் எழுதப் பெற்ற புனித கிரந்தங்களைத் துறவிகள் உரத்த குரலில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் பெருங்கூட்டம் நின்று கேட்டுக் கொண்டிருந்தது. மற்றொரு புறம் பெளத்த சமயக் காப்பியங்களை விளக்கும் நாடகங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். பெளத்த சமயத்து வழிபாடும் தானங்களாகிய விகாரைகளில் எல்லாம் தீபாலங்காரம் செய்திருந்தார்கள். நோக்குமிடமெல்லாம் தாமரைப் பூக்கள் அம்பாரம் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருந்தன.

நாக நாட்டின் இரத்தினத் தீவு என்று பெயர் பெற்ற அந்தப் பெரும் தீவுப் பகுதிகளின் அழகெல்லாம் இன்று இந்தப் புண்ணிய நகரத்திற்கே தனியாக வந்து பொருந்தி விட்டாற்போல் தோன்றியது. மணிபல்லவத் தீவில் கோமுகிப் பொய்கையின் கரையைச் சுற்றிக்கொண்டே, வளநாடுடையாரோடு வந்தபோது விசாகை, ஓவியன் மணிமார்பன், அவன் மனைவி பதுமை எல்லாரையும் இளங்குமரன் அங்கே சந்திக்க நேர்ந்தது. ஒரு பெரிய கூட்டத்திற்கு நடுவே அமர்ந்து போதிமாதவர் படைத்தருளிய திரிபிடக நெறியை விசாகை விவரித்துச் சொற் பொழிவு செய்து கொண்டிருந்தாள். விசாகைக்கு அருகில் அவளைச் சூழ்ந்தாற்போல ஓவியனும் அவன் மனைவியும் அமர்ந்திருந்தார்கள். தானும் வளநாடுடையாரும் அங்கு வந்திருப்பதை அவர்களில் யாரும் அப்போதே கண்டுவிட முடியாமல் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று விசாகையின் பிடக நெறி விளக்கத்தைச் செவிமடுத்தான் இளங்குமரன். அங்கே விசாகையின் எதிர்ப்புறம் தொண்டு கிழவராக வீற்றிருந்த பெளத்த சமயத்துத் துறவி யாரென்று இளங்குமரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்தான் இளமையில் விசாகைக்கு சமய ஞானத்தைக் கற்பித்த சமந்த கூடத்துப் புத்த தத்தராக இருக்கலாமோ என்று எண்ணினான் அவன். விசாகையின் பிடகநெறி விளக்கம் முற்றுப் பெற்றதும் அவனுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது. கூட்டம் கலையப் பெற்று விசாகையும் அவளோடிருந்தவர்களும் தனியான போது இளங்குமரனும், வளநாடுடையாரும் அவர்களுக்கு அருகிற் சென்று நின்றார்கள், விசாகை அவர்கள் இருவரையும் உற்சாகமாக வரவேற்றாள்.

“வரவேண்டும்! வரவேண்டும். ஒருவேளை நீங்கள் மணிநாகபுரத்திலிருந்து நாளைக்கு வைகறையில்தான் வருவீர்கள் என்று இந்த ஓவியரும் இவருடைய மனைவியாரும் கூறினார்கள். நல்ல வேளையாக நீங்கள் இப்போதே வந்துவிட்டீர்கள்” என்று கூறிவிட்டுத் தன் எதிரேயிருந்த மூத்த துறவியின் அருகே இளங்குமரனையும், வளநாடுடையாரையும் அழைத்துச் சென்று அவர்களை இன்னாரென்று சொல்லி அவருக்கு அறிமுகப்படுத்தினாள் விசாகை. அவன் நினைத்தபடியே அவர்தாம் புத்த தத்தராயிருந்தார். சமதண்டத்து ஆசீவகர்களை இளங்குமரன் வென்ற திறமை பற்றியெல்லாம் அங்கு வந்து சேர்ந்த உடனே விசாகை அவரிடம் நிறையப் பெருமையாகக் கூறியிருந்தாள் போல் இருக்கிறது. அவர் இளங்குமரனிடம் ஆர்வத்தோடும், அன்போடும் பேசினார்.

“குழந்தாய்! இந்தத் தீவில் நிகழ்கிற வைசாக பூர்ணிமை விழா என்பது தனியாக எங்களுடைய சமயச் சடங்கு மட்டும் அல்ல, கீழ்த்திசை நாடுகளின் அறிவுத்துறை வன்மைகளும், பண்பாட்டுப் பெருமைகளும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொள்வதற்கு இந்த நல்ல நாளும், இந்தத் தீவும் பன்னெடுங் காலமாகப் பயன்பட்டு வருகின்றன. இந்தத் தீவின் கரைகளில் அலைகள் ஒலிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே கீழை நாடுகளில் விதம் விதமான தத்துவங்களும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கி விட்டன. நம்மைப் போன்றவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சந்தித்துக் கொள்ளவும், ஒரு பெரிய அறிவுப் பரம்பரை தொடர்ந்து சங்கமமாகிப் பெருகவும் இந்தத் தீவும் இந்த நாளும் இடமாயிருந்து வருகின்றன. விசாகை இந்த முறை புத்த பூர்ணிமைக்காக இங்கு வந்து இறங்கிய விநாடியிலிருந்து என்னிடம் உன்னைப் பற்றியே நெடு நேரமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். திருநாங்கூரடிகள் என்னுடைய நெருங்கிய நண்பர். சமயவாதத்தில் நானும் அவரும் கடுமையாக எதிர்த்து நின்றிருக்கிறோம். அவர் என்னைப் பலமுறை வென்றிருக்கிறார். அவருக்கு நான் தோற்றிருக்கிறேன். ஆனால் நட்புச் செய்வதில் இருவருமே ஒருவருக்கொருவர் சிறிதும் தோற்றதில்லை. நீ அவருக்கு மிகவும் பிரியமான மாணவன் என்று விசாகையிடம் கேட்டறிந்த போது என் மனம் பூரித்தது. உலகில் நீ வாழும் நாட்கள் நிறைந்து பெருகுமாக” என்று அவனிடம் அன்பாக உரையாடி வாழ்த்தினார் அந்த முதியவர். அவன் அந்த முதுமைக்கும் ஞானத்துக்கும் தன் மனப்பூர்வமான பணிவையும் வணக்கங்களையும் செலுத்தினான்.

அன்றிரவு எல்லாரும் கோமுகிப் பொய்கைக் கரையிலிருந்த பெளத்த மடத்தில் தங்கினார்கள். களைப்பினாலும், பயணம் செய்த சோர்வினாலும் எல்லாரும் உறங்கிய பின்னும் விசாகையும் இளங்குமரனும் கோமுகிப் பொய்கைக் கரையில் போய் அமர்ந்துகொண்டு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புத்த ஞாயிறு என்பது என்னவென்பதை அழகிய முறையில் ஒரு தத்துவமாக அவனுக்கு விளக்கிச் சொன்னாள் விசாகை,

“புத்த ஞாயிற்றின் தோற்றத்துக்குரிய சிறந்த நாளாக வைசாக பூர்ணிமையைக் கொண்டாடுவது மட்டும் எங்களுடைய சடங்கு அல்ல! ‘எல்லா உயிரும் எங்கும் எப்போதும் எல்லா விதத்திலும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற முதிர்ந்த கருணை யார் மனத்தில் எந்த விநாடி தோன்றினாலும் அங்கே அந்த விநாடியில் புத்த ஞாயிறு பிறந்து விட்டது என்று தான் கொள்ள வேண்டும். உயிர் இரக்கம்தான் பெரிய ஞானம். அது யார் மனத்தில் இருந்தாலும் அவர்களைப் புத்தர் போற்றுகிறார். ஆசைகளால் தான் கோபமும், வெறுப்பும் உண்டாகின்றன. ஆசைகள் அழிந்தால் எதன் மேலும் கோபமில்லை. எதன் மேலும் வெறுப்பில்லை. எப்போதும் மனம் இந்த உலகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருக்கிற உபசாந்தி நிலை சித்திக்கிறது” என்று விசாகை ஆர்வம் மேலிட்டுக் கூறிக் கொண்டே வந்தபோது இளங்குமரன் நடுவில் இடையிட்டுப் பேசினான்:

“இப்போது நான் கூறப் போகிற செய்தியைக் கேட்டு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் அம்மையாரே! ‘உபசாந்தி நிலை’யை அடைய வேண்டும். அடைய வேண்டும் என்று நான் தவித்த காலமெல்லாம் போய் என் மனம் அந்த நிலைக்குப் பக்குவமாகி நிற்கும் இந்தச் சமயத்தில் அதை நானே இழக்க வேண்டியவனாகி விட்டேன். நாளைக்கு இந்த வேளையில் இதே தீவின் வேறொரு பகுதியிலே என் மனத்தின் எல்லையெல்லாம் யார் மேலோ எதற்காகவோ கோபமும் வெறுப்பும் ஏற்படப் போகிறது. தீக்கடைகோலைப் போல என் எண்ணங்களைத் தூண்டிக் கடைந்து யாரோ யார் மேலோ என்நெஞ்சில் கனலை மூட்டப் போகிறார்கள். இந்தப் புண்ணியத் தீவுக்கு ஒரு முறை வந்து – இதன் மண்ணை மிதித்து நடந்தாலே உபசாந்தி நிலை கிடைக்கும் என்று உங்கள் சமயத்தைச் சேர்ந்த துறவிகள் சொல்கிறார்கள். எனக்கோ இங்கு வந்தபின் ஏற்கெனவே கிடைத்திருந்த மன அமைதியும் போய்விடும் போல் இருக்கிறது.”

இப்படித் தாங்க முடியாத ஏக்கத்தோடு இளங்குமரன் தன்னிடம் கூறிய சொற்களையெல்லாம் கேட்டு விசாகை சிரித்தாள்.

“தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களைக் காட்டிலும் கடைப்பிடிக்கிறவர்களை சிறந்தவர்கள் என்று நீங்கள் பல முறை என்னிடம் கூறியிருப்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். போதிமாதவருக்குப் பெருமை அவர் கண்ட தத்துவமாகவே அவருடைய வாழ்க்கை அமைந்தது என்பதுதான்! அறிவினாலும், மனத்தினாலும் வாழத் தொடங்கி விட்ட நீங்கள் மறுபடி உணர்ச்சிகளால் வாழவேண்டிய அவசியம் மீண்டும் எதற்காக நேர்கிறது?”

விசாகை தொடக்கத்திலிருந்து தன் மனத்தில் பவித்திரமான நினைவுகள் பிறக்கக் காரணமாயிருந்தவள். ஆகையினால் அவளிடம் எதையும் ஒளிக்காமல் சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது இளங்குமரனுக்கு. தான் மணிநாகபுரத்தில் குலபதியின் மாளிகைக்குச் சென்றதையும் அங்கே அருட்செல்வ முனிவரைச் சந்திக்க நேர்ந்ததையும் அவருடைய வேண்டுகோளையும் விசாகையிடம் கூறினான் இளங்குமரன்.

அவன் கூறியவற்றைக் கேட்டபின் விசாகை எதையோ ஆழ்ந்து சிந்திக்கிறவளாய் அமைதியான முகத் தோற்றத்தோடு இருந்தாள். இளங்குமரன் அவளிடம் மேலும் கூறலானான்:

“நீங்கள் உலகத்தின் கண்ணிரைத் துடைப்பதற்காக உங்கள் கண்களில் நீரைச் சுமந்துகொண்டு வாழ்கிறீர்கள். நானோ என் குடும்பத்தில் என்றோ இறந்து போனவர்களின் சினத்தைச் சுமக்க வேண்டியவனாகி இருக்கிறேன். மணிநாகபுரத்து மண்ணில் இறங்கி நின்றவுடன் உங்கள் மங்கலமான வாயைத் திறந்து ‘நிறைக நிறைக’ என்று வாழ்த்தினர்களே? அப்படி வாழ்த்தியபோது எது எப்படி என்னிடம் நிறைய வேண்டும் என்று நீங்கள் வாழ்த்தினீர்களோ? என் மனம் கோபத்தினால்தான் இனிமேல் நிறைய வேண்டும் என்று அருட்செல்வ முனிவர் கூறு கிறார். நானோ என் மனத்தில் எல்லையற்ற திரு நிறைய வேண்டும் என்று விரும்பினேன்.”

“நாம் ஆசைப்படுவதற்கும் அடைய வேண்டியதற்கும் நடுவில் தெய்வ சித்தம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. ஆசைப்பட்டவற்றையெல்லாம் அடைவது எளிதானால் இந்த உலக வாழ்க்கை இப்படியா இருக்கும்? ஆனால் இப்போதும் உங்களுக்கு நான் ஒன்று சொல்ல முடியும். உங்களுடைய வாழ்க்கையை விந்தையானது. வாழ்க்கைக் கடலின் எல்லாவிதமான அலைகளிலும் நீங்கள் ஒதுங்கிக் கரை கண்டிருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை இந்த மணிபல்லவத் தீவைப் போலவே நான்கு பக்கத்து அலைகளையும் தாங்கிக்கொண்டு அழியாத தத்துவமாக நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தத்துவம் கடந்த பொருள் எதுவோ அதை, தத்துவங்களால் அளக்க முடியாது என்று கருதி அதற்குக் கந்தழி என்று தமிழில் பெயரிட்டிருக்கிறார்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் நீங்கள் இதுவரை அனுபவங்களால் வளர்த்து அவற்றையே தத்துவங்களாகக் கொண்டு அனுபவங்களைக் கடந்து நின்றிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட வாழ்வைத்தான் காவியம் எழுதவல்ல மகா கவிகள் ஒவ்வொரு கணமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு பக்கத்திலிருந்து மோதும் கடல் அலைகளையும் தாங்கிக் கொண்டு இந்தப் புண்ணியத் தீவு நிற்பதைப் போல, நீங்களும் நான்கு பருவத்து வாழ்க்கைச் சோதனைகளும் ஒன்று சேர்ந்தாற் போல் உங்களைத் தேடி வருகிற இந்தச் சமயத்தில் இவற்றைத் தாங்கி வென்று நிற்க வேண்டும். இந்த அநுபவத்திலும் நீங்கள் வளர்ந்து நிற்க வேண்டும். தெய்வீகமான பெரிய காவியங்களில் எல்லாம் அந்தக் காவியத்திற்குத் தலைவனாக இருப்பவனுடைய உயிர்க்குணம் அது நிறைகிற முடிந்த எல்லையில்தான் பிறந்து தொடங்கி ஒளிர்கிறது. இராமாயணம் முடிந்த பின்புதான் இராமனுடைய தரும வாழ்வைப் பற்றிய சிந்தனை தொடங்குகிறது. பாரதம் முடிந்த பின்புதான் பாண்டவர்களுடைய அறப்போரினது பெருமையைப் பற்றி எண்ணங்கள் பிறக்கின்றன. தன்னுடைய கதை எல்லை முடிந்த பின்பும் தன்னிலிருந்து பிறந்த சிந்தனை எல்லைக்கு முடிவே இல்லாமல் வளர்கிற புனிதமான காவியங்களைப் போல் நீங்கள் நிறைந்து நிற்க வேண்டும். இதுதான் திருநாங்கூரடிகளின் விருப்பம். என் விருப்பமும் இதுவே…” என்று விசாகை கூறியபோது இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளங்குமரனுக்கு மெய் சிலிர்த்தது. அவன் தன் கண்களை மூடிக் குருவை நினைத்துக் கொண்டான்.

“அதோ” என்று கிழக்கே காண்பித்தாள் விசாகை. இளங்குமரன் பார்த்தான். கீழ்த்திசை வெளுத்துக் கொண்டி ருந்தது. இருவரும் எழுந்து நீராடப் புறப்பட்டனர். போது கழிந்ததே தெரியவில்லை.

கிழக்கே அடிவானத்தைக் கிளைத்துக் கொண்டு எழும் சிவப்புக் கோளத்தைப் பார்த்துக்கொண்டே “ஞாயிறு பிறந்துவிட்டது அம்மையாரே!” என்றான் இளங்குமரன்.

“கீழ்த்திசையில் மட்டுந்தானா! அல்லது உங்கள் மனத்திலுமா?” என்று கேட்டாள் விசாகை.

“மனத்திலும் தான். மனத்தில் சிறிது போது சூழ்ந்திருந்த இருளைப் போக்கி ஒளி கொடுத்தவர் நீங்கள். உங்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே இருள் விலகிப் பொழுது புலர்ந்துவிட்டது” என்று கூறியபடியே கண்களில் பயபக்தி மலர விசாகையைப் பார்த்தான் இளங்குமரன்.

“உங்கள் வாழ்க்கை காவியமாக நிறைய வேண்டும்” என்று இரண்டாம் முறையாக அதே வாக்கியத்தைப் பொய்யைச் சிதைக்கும் தூய்மைப் புன்முறுவலோடு மறுபடி அவனை நோக்கிக் கூறினாள் விசாகை.

Previous articleRead Manipallavam Part 5 Ch4 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 5 Ch6 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here