Home Kalki Read Mohini Theevu Ch 10

Read Mohini Theevu Ch 10

72
0
Read Mohini Theevu Ch 10 | Kalki | Read Mohini Theevu Free Read Mohini Theevu Ch 10 is an historical novel by Kalki. Mohini Theevu has 10 chapters and its good story to read. Mohini theevu free download, mohini theevu pdf, download mohini theevu, mohini theevu audiobook
Mohini Theevu ch 10 மோகினித் தீவு பத்தாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 10

மோகினித் தீவு

பத்தாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 10

மோகினித் தீவில், பூரணச் சந்திரனின் போதை தரும் வெண்ணிலவில், குன்றின் உச்சியில் உட்கார்ந்து, அத்தம்பதிகள் எனக்கு அந்த விசித்திரமான கதையைச் சொல்லி வந்தார்கள். ஒருவரோடொருவர் மோதி அடித்துக் கொண்டு சொன்னார்கள். குழந்தைகள் எங்கேயாவது போய்விட்டு வந்தால், “நான் சொல்கிறேன்” என்று போட்டியிட்டுக் கொண்டு சொல்லும் அல்லவா? அந்த ரீதியில் சொன்னார்கள்.

அழகே வடிவமான அந்த மங்கை கூறினாள்:-

“பாண்டிய குமாரி சிறையில் தன்னந் தனியாக இருந்த போது, அவளுக்குச் சிந்தனை செய்யச் சாவகாசம் கிடைத்தது. இராஜரீக விவகாரங்களும், அவற்றிலிருந்து எழும் போர்களும் எவ்வளவு தீமைகளுக்குக் காரணமாகின்றன என்பதை உணர்ந்தாள். தன்னுடைய கலியாணப் பேச்சுக் காரணமாக எழுந்த விபரீதங்களை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்து வருத்தப்பட்டாள்; தான் ராஜகுமாரியாகப் பிறந்திராமல் சாதாரணக் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்திருந்தால், இவ்வளவு துன்பங்களும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிராதல்லவா என்று எண்ணி ஏங்கினாள்.

தன் காரணமாக எத்தனையோ பேர் உயிர் துறந்திருக்கத் தான் மட்டும் யுத்த களத்தில் உயிர் விட எவ்வளவு முயன்றும், முடியாமற் போன விதியை நொந்து கொண்டாள். இப்படிப் பட்ட நிலைமையிலே தான் தாதி வந்து சோழ குமாரன் கொடுத்த முத்திரை மோதிரத்தைக் கொடுத்தாள். புவன மோகினிக்கு உடனே சுகுமாரன் செய்த வஞ்சனை நினைவுக்கு வந்து, அளவில்லா ஆத்திரத்தை மூட்டியது. அந்த ஆத்திரத்தைத் தாதியிடம் காட்டினாள்.

“இந்த மோதிரத்தைக் கொடுத்தவரிடமே திரும்பிக் கொண்டுபோய்க் கொடுத்துவிடு! அவரைப் போன்ற வஞ்சகம்மிக்க ராஜகுமாரனின் உதவி பெற்றுக் கொண்டு உயிர் தப்பிப் பிழைக்க விரும்பவில்லை என்று சொல்லு! அதைக் காட்டிலும் இந்தச் சிறையிலேயே இருந்து உயிரை விடுவேன் என்று சொல்லு! அந்த மனிதர் முத்திரை மோதிரத்தை ஒரு காரியத்துக்காக வாங்கிக் கொண்டு, அதைத் துர் உபயோகப்படுத்தி மோசம் செய்து விட்டு ஓடிப் போனார். அது சோழ குலத்தின் பழக்கமாயிருக்கலாம். ஆனால், பாண்டிய குலப் பெண் அப்படிச் செய்ய மாட்டாள் என்று சொல்லு! வஞ்சனைக்கும் பாண்டிய குலத்தினருக்கும் வெகுதூரம்!” என்று சொன்னாள்.

இவ்விதம் கூறியவுடனே, சுகுமாரனுடைய குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாள். “தாதி! அந்த வஞ்சக ராஜகுமாரனைப் பாண்டிய குமாரி ஒரு சமயம் காதலித்தாள். அந்தக் காதலின் மேல் ஆணையாக அவளைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகச் சொல்லு! முத்திரை மோதிரத்தை உபயோகித்துத் தப்பித்துக் கொண்டு போனால், பிறிதொரு சமயம் நல்ல காலம் பிறக்கலாம்; இருவருடைய மனோரதமும் நிறைவேறக் கூடும் என்று சொல்லு!” என்பதாக அந்தக் குரல் கூறியது.

அந்தக் குரல் புவனமோகினியின் மனதை உருகச் செய்தது. அவளுடைய உறுதியைக் குலையச் செய்தது. தேவேந்திர சிற்பியின் சிற்பமண்டபத்தில் கேட்ட குரல் அல்லவா அது? பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தழதழத்த குரலில், பாண்டிய குமாரி கூறினாள்:- “தாதி! நான் இந்த வஞ்சக ராஜகுமாரனை என்றைக்கும் காதலித்ததில்லை என்று சொல்லு! சோழநாட்டிலிருந்து தேவேந்திர சிற்பியிடம் சிற்பக்கலை கற்றுக் கொள்ள வந்த ஏழை சிற்பியையே நான் காதலித்தேன் என்று சொல்லு!” என்றாள். அடுத்த கணத்தில், சோழ ராஜகுமாரன் புவனமோகினியின் எதிரில் வந்து நின்றான். அவன் கூறிய விஷயம், பாண்டிய குமாரியைத் திகைக்கும்படி செய்து விட்டது.”

அந்த மங்கையின் நாயகன் இப்போது கூறினான்:- “பாண்டிய குமாரி, தான் சோழ ராஜகுமாரனைக் காதலிக்கவில்லை யென்றும், இளஞ் சிற்பியையே காதலித்ததாகவும் கூறிய தட்சணமே, சுகுமாரனுடைய மனத்தில், தான் செய்ய வேண்டியது என்ன என்பது உதித்து விட்டது. அதுவரையில் புவன மோகினியை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு, இப்போது அவளைப் பார்க்கும் தைரியமும் வந்துவிட்டது. ஆகையினால், மறைவிடத்திலிருந்து அவள் முன்னால் வந்தான். “கண்மணி! என்னைப் பார்த்து இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லு! நான் ராஜகுமாரனாயில்லாமல், ஏழைச் சிற்பியாக மாறிவிட்டால், நான் உனக்குச் செய்த வஞ்சனையை மன்னித்து விடுவாயா? என்னை மணந்து கொள்ளவும் சம்மதிப்பாயா?” என்றான்.

பாண்டியகுமாரி உடனே மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவள் முகமும் கண்களும் அவள் மனதிலிருந்ததை வெளிட்டன. சற்றுப் பொறுத்து, அவள், “நடக்காத காரியத்தை ஏன் சொல்லுகிறீர்கள்? ஏன் வீணாசை காட்டுகிறீர்கள்? போரிலே முழுத்தோல்வியடைந்து அடிமையாகிச் சிறைப்பட்டிருக்கும் ஒரு பெண்ணுக்காக, யார் பரம்பரையாக வந்த அரசைக் கைவிடுவார்கள்? சோழ ராஜ்யத்தோடு இப்போது பாண்டிய ராஜ்யமும் சேர்ந்திருக்கிறதே? விடுவதற்கு மனம் வருமா?” என்றாள்.

“என் கண்மணி! உனக்காக ஏழு உலகம் ஆளும் பதவியையும் நான் தியாகம் செய்வேன். ஆனால் உனக்கு ராணியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லையே!” என்று சுகுமாரன் கேட்டான். “ராணியாக வேண்டும் என்ற ஆசையிருந்தால், தேவேந்திர சிற்பியின் சீடனுக்கு என் இருதயத்தைக் கொடுத்திருப்பேனா?” என்றாள் பாண்டியகுமாரி. உடனே சுகுமாரன் தன் அரையில் செருகியிருந்த உடை வாளை எடுத்துக் காட்டி, “இதோ இந்தக் கொலைக் கருவியை, ராஜகுல சின்னத்தை, பயங்கர யுத்தங்களின் அடையாளத்தை, உன் கண் முன்னால் முறித்து எறிகிறேன், பார்!” என்று சொல்லி, அதைத் தன்னுடைய பலம் முழுவதையும் பிரயோகித்து முறித்தான். உடைவாள் படீரென்று முறிந்து தரையிலே விழுந்தது!

பின்னர் சுகுமாரன் தன் தந்தையிடம் சென்றான். அரசாட்சியில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், ராஜயத்தைத் தன் சகோதரன் ஆதித்யனுக்குக் கொடுத்து விடுவதாகவும், ராஜ்யத்துக்கு ஈடாகப் புவனமோகினியைத் தனக்குத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். முதலில் உத்தம சோழர் இணங்கவில்லை. எவ்வளவோ விதமாகத் தடை சொல்லிப் பார்த்தார். சுகுமாரன் ஒரே உறுதியாக இருந்தான்.

“அப்பா! தாங்கள் நீண்ட பரம்பரையில் வந்த சோழநாட்டுச் சிம்மாசனத்தில், பராக்கிரம் பாண்டியர் மகள் ஏறச் சம்மதிக்க முடியாது என்றுதானே சொன்னீர்கள்? உங்களுடைய அந்த விருப்பத்துக்கு நான் விரோதம் செய்யவில்லை. வேறு என்ன உங்களுக்கு ஆட்சேபம்? இந்த தேசத்திலேயே நாங்கள் இருக்கவில்லை. கப்பலேறிக் கடல் கடந்து போய் விடுகிறோம்! தங்களைப் பாண்டியனுடைய சிறையிலிருந்து மீட்டு வந்ததற்காக, எனக்கு இந்த வரம் கொடுங்கள்!” என்று கெஞ்சினான். அவனுடைய மன உறுதி மாறாது என்று தெரிந்து கொண்டு, உத்தம சோழர் கடைசியில் சம்மதம் கொடுத்தார்.

“ஒரு விதத்தில் உன் முடிவும் நல்லதுதான். மகனே! சோழ குலத்தில் நம் முன்னோர்கள் கப்பலேறிக் கடல் கடந்து போய், அயல் நாடுகளில் எல்லாம் நம்முடைய புலிக்கொடியை நாட்டினார்கள். சோழ சாம்ராஜ்யம் வெகு தூரம் பரந்திருந்தது. அந்தப் பரம்பரையை அனுசரித்து, நீயும் காரியம் செய்தால், அதைப் பாராட்ட வேண்டியது தானே! மூன்று கப்பல்கள் நிறைய ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு போர் வீரர்களையும் அழைத்துக் கொண்டு போ! இன்னும் பிரயாணத்துக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் சேகரித்துக் கொள்!” என்றார். சுகுமாரன் அவ்விதமே பிரயாண ஆயத்தங்கள் செய்தான். போருக்குரிய ஆயுதங்களோடு கூடச் சிற்ப வேலைக்கு வேண்டிய கல்லுளிகள், சுத்திகள் முதலியவற்றையும் ஏராளமாகச் சேகரித்துக் கொண்டான்.

வீரர்களைக் காட்டிலும் அதிகமாகவே சிற்பக் கலை வல்லுநர்களையும் திரட்டினான். தேவேந்திரச் சிற்பியாரையும் மிகவும் வேண்டிக் கொண்டு தங்களுடன், புறப்படுவதற்கு இணங்கச் செய்தான். தேசத்தில் பிரஜைகள் எல்லாரும், இளவரசர் வெளிநாடுகளில் யுத்தம் செய்து வெற்றிமாலை சூடுவதற்காகப் புறப்படுகிறார் என்று எண்ணினார்கள். உத்தம சோழரும் புதல்வனுக்கு மனம் உவந்து விடை கொடுத்தார். ஆனால், இறுதிவரை புவனமோகினி விஷயத்தில் மட்டும் அவர் கல்நெஞ்சராகவே இருந்தார். அந்தப் பெண்ணின் உதவியால் தாம் மதுரை நகர்ச் சிறையிலிருந்து வெளிவர நேர்ந்த அவமானத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.”

இப்போது மறுபடியும் அந்நங்கை குறுக்கிட்டுக் கதையைப் பிடிங்கிக் கொண்டு கூறினாள்.

“ஆனாலும், புவனமோகினி புறப்படும்போது உத்தம சோழரிடம் போய் நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டாள். தன்னால் அவருக்கு நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் மறந்து, தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினாள். அந்தக் கிழவரும் சிறிது மனங்கனிந்து தான் விட்டார். “பெண்ணே இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் ஆரம்பத்திலேயே உன் கலியாணத்துக்கு ஆட்சேபம் சொல்லியிருக்க மாட்டேன். குலத்தைப் பற்றி விளையாட்டாக ஏதோ நான் சொல்லப்போக, என்னவெல்லாமோ, விபரீதங்கள் நிகழ்ந்துவிட்டான். போனது போகட்டும்; எப்படியாவது என் மகனும் நீயும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தினால் சரி” என்றார். “தங்கள் வாக்குப் பலித்து விட்டது இல்லையா? நீங்களே சொல்லுங்கள்!” என்று சொல்லி அந்தச் சுந்தர வனிதை தன் நாயகன் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள்.

தம்பதிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்தவண்ணம் இருந்தார்கள். நேர உணர்ச்சியேயன்றி, அப்படியே அவர்கள் இருந்துவிடுவார்களென்று தோன்றிற்று. நானும் காதலர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்; கதைகளில் படித்திருக்கிறேன். ஆனால் இந்தத் தம்பதிகளின் காதல் மிக அபூர்வமானதாக எனக்குத் தோன்றியது. அப்படி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு என்னதான் இருக்கும்? என்னதான் வசீகரம் இருந்தாலும், என்ன தான் மனதில் அன்பு இருந்தாலும், இப்படி அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதென்றால், அது விந்தையான விஷயந்தான் அல்லவா!

ஆனால், நான் பொறுமை இழந்துவிட்டேன். அவர்களிடம் பொறாமையும் கொண்டேன் என்றால், அது உண்மையாகவே இருக்கும். கதையின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகமாயிருந்தது.

“என்ன திடீரென்று இருவரும் மௌனம் சாதித்துவிட்டீர்களே! பிற்பாடு என்ன நடந்தது? கதையை முடியுங்கள்!” என்றேன்.

“அப்புறம் என்ன? ஆயிரம் வருடமாக, கரிகால் சோழன் காலத்திலிருந்து பரம்பரைப் பெருமையுடன் வந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தைத் துறந்து, சுகுமாரன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் ஏறினான். கடலில் சிறிது தூரம் கப்பல்கள் சென்றதும், மூன்று கப்பல்களிலும் இருந்த வேல், வாள் முதலிய ஆயுதங்களையெல்லாம் எடுத்து, நடுக்கடலில் போடும்படி செய்தான். கல்லுளிகளையும் சுத்திகளையும் தவிர வேறு ஆயுதமே கப்பலில் இல்லாமல் செய்து விட்டான். பிறகு பல தேசங்களுக்குச் சென்று பல இடங்களைப் பார்த்து விட்டுக் கடைசியாக இந்த ஜனசஞ்சாரமில்லாத தீவுக்கு வந்து இறங்கினோம். எல்லாம் இந்தப் பெண்ணாய்ப் பிறந்தவளின் பிடிவாதம் காரணமாகத் தான்!” என்று ஆடவன் சொல்லி நிறுத்தினான்.

கடைசியில் அவன் கூறியது எனக்கு அளவில்லாத திகைப்பை அளித்தது. இத்தனை நேரமும் சுகுமாரன் புவனமோகினியைப் பற்றிப் பேசி வந்தவன், இப்போது திடீரென்று, ‘வந்து இறங்கினோம்’ என்று சொல்லுகிறானே? இவன் தான் ஏதாவது தவறாகப் பிதற்றுகிறானோ? அல்லது என் காதிலேதான் பிசகாக விழுந்ததோ என்று சந்தேகப்பட்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். அவள் கூறினாள், “நீங்களே சொல்லுங்கள் ஐயா! அந்த உளுத்துப் போன பழைய சோழ ராஜ்யத்தைக் கைவிட்டு வந்ததினால் இவருக்கு நஷ்டம் ரொம்ப நேர்ந்து விட்டதா? நாங்கள் இந்தத் தீவுக்கு வந்து ஸ்தாபித்த புதிய சாம்ராஜ்யத்தை இதோ பாருங்கள்! ஒரு தடவை நன்றாகப் பார்த்துவிட்டு மறுமொழி சொல்லுங்கள்!”

இவ்விதம் கூறி, அந்த மோகினித் தீவின் சுந்தரி தீவின் உட்புறத்தை நோக்கித் தன் அழகிய கரத்தை நீட்டி விரல்களை அசைத்துச் சுட்டிக் காட்டினாள். அவள் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தேன். மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும், மணி மண்டபங்களும், அழகிய விமானங்களும், விஹாரங்களும் வரிசை வரிசையாகத் தென்பட்டன. பால் போன்ற வெண்ணிலவில் அக்கட்டிடங்கள் அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்ட புத்தம் புதிய கட்டிடங்களாகத் தோன்றின.

தந்தத்தினாலும் பளிங்கினாலும் பல வண்ணச் சலவைக் கற்களினாலும் கட்டப்பட்டவைபோல ஜொலித்தன. பாறை முகப்புகளில் செதுக்கப்பட்டிருந்த சிற்ப உருவங்களெல்லாம் உயிர்க்களை பெற்று விளங்கின. சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த வடிவங்கள் உண்மையாகவே உயிர் அடைந்து, பாறை முகங்களிலிருந்து வெளிக் கிளம்பி என்னை நோக்கி நடந்து வரத் தொடங்கிவிடும் போலக் காணப்பட்டன. கடைசியாகத் தோன்றிய இந்த எண்ணம் எனக்கு ஒரு விதப் பயத்தை உண்டாக்கியது. கண்களை அந்தப் பக்கமிருந்து திருப்பி, கதை சொல்லி வந்த அதிசயத் தம்பதிகளை நோக்கினேன். திடீரென்று பனிபெய்ய ஆரம்பித்தது. அவர்களை இலேசான பனிப்படலம் மூடியிருந்தது. பனியினால் என் உடம்பு சில்லிட்டது.

அவர்களை உற்றுப் பார்த்த வண்ணம், தழதழத்த குரலில், “கதை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே? நீங்கள் யார்? இந்தத் தீவுக்கு எப்போது எப்படி வந்தீர்கள்?” என்றேன்.

இருவருடைய குரலும், இனிய சிரிப்பின் ஒலியில் கலந்து தொனித்தன.

“விடிய விடியக் கதைக் கேட்டு விட்டுச் சீதைக்கு இராமன் என்ன உறவு என்று கேட்பது போலிருக்கிறதே?” என்றான் அந்தச் சுந்தர புருஷன்.

தமிழ் மொழியில் மற்றப் பாஷைகளுக்கு இல்லாத ஒரு விசேஷம் உண்டு என்று அறிஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருந்தேன். அதாவது ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் மொழி ஏறக்குறைய ஒரே விதமாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது என்பது தான். இது எனக்கு நினைவு வந்தது. இன்றைக்கும் தமிழ் நாட்டில் வழங்கும் பழமொழியைச் சொல்லி என்னைப் பரிகசித்தது, சோழ இளவரசன் சுகுமாரன் தான் என்பதை ஊகித்துத் தெரிந்து கொண்டேன். அதை வெளியிட்டுக் கூறினேன்.

“தாங்கள் தான் சுகுமார சோழர் என்று தோன்றுகிறது. உண்மைதானே? அப்படியானால் இந்தப் பெண்மணி…?” என்று சொல்லி, உயிர் பெற்ற அழகிய சிற்ப வடிவம் போலத் தோன்றிய அந்த மங்கையின் முகத்தை நோக்கினேன்.

அவள் மூன்று உலகங்களும் பெறக்கூடிய ஒரு புன்னகை புரிந்தாள். அந்தப் புன்னகையுடனே என்னைப் பார்த்து, “ஏன் ஐயா! என்னைப் பார்த்தால், பாண்டிய ராஜகுமாரியாக தோன்றவில்லையா?” என்றாள்.

நான் உடனே விரைந்து, “அம்மணி! தங்களைப் பார்த்தால் பாண்டிய ராஜகுமாரியாகத் தோன்றவில்லைதான். மூன்று உலகங்களையும் ஒரே குடையின் கீழ் ஆளக்கூடிய சக்கரவர்த்தியின் திருக்குமாரியாகவே தோன்றுகிறீர்களே!” என்றேன்.

அப்போது அந்தச் சுந்தரி நாயகனைப் பார்த்து, “கேட்டீர்களா? முன்னைக்கு இப்போது தமிழ்நாட்டு ஆடவர்கள் புகழ்ச்சி கூறுவதில் அதிக முன்னேற்றம் அடைந்திருப்பதாகத் தோன்றவில்லை? தாங்கள், அந்த நாளில் என்னைப் பார்த்து, ‘ஈரேழுப் பதினாழு புவனங்களுக்கும் சக்கரவர்த்தினியாயிருக்க வேண்டியவளை, இந்தச் சின்னஞ்சிறு தீவின் அரசியாக்கி விட்டேனே!’ என்று சொன்னது ஞாபகமிருக்கிறதா?” என்றாள்.

அதைக் கேட்ட சுகுமார சோழர் சிரித்தார். அதுவரையில் மலைப்பாறையிலே உட்கார்ந்திருந்த அந்தத் தம்பதிகள் அப்பொழுது எழுந்தார்கள். ஒருவர் தோள்களை ஒருவர் தழுவிய வண்ணமாக இருவரும் நின்றார்கள். அப்போது ஓர் அதிசயமான விஷயத்தை நான் கவனித்தேன்.

மேற்குத் திசையில் சந்திரன் வெகுதூரம் கீழே இறங்கியிருந்தான். அஸ்தமனச் சந்திரனின் நிலவொளியில் குன்றுகளின் சிகரங்களும், மொட்டைப் பாறைகளும் கரிய நிழல் திரைகளைக் கிழக்கு நோக்கி வீசியிருந்தன. சிற்ப வடிவங்களின் நிழல்கள் பிரமாண்ட ராட்சத வடிவங்களாகக் காட்சி தந்தன. நெடிதுயர்ந்த மரங்களின் நிழல்கள் பன்மடங்கு நீண்டு, கடலோரம் வரையில் சென்றிருந்தன. என்னுடைய நிழல் கூட அந்த வெள்ளிய பாறையில் இருள் வடிவாகக் காணப்பட்டது.

ஆனால்…ஆனால்… அந்த அதிசயக் காதலர்கள் என் முன்னாலே, கண்ணெதிரே நின்றார்களாயினும், அவர்களுடைய நிழல்கள் பாறையில் விழுந்திருக்கக் காணவில்லை.

இதைக் கவனித்ததினால் ஏற்பட்ட பிரமிப்புடன் அந்தத் தம்பதிகளை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். விந்தை! விந்தை! அவர்களையும் காணவில்லை!

அந்த அழகிய தம்பதிகள் இருந்த இடம் வெறுமையாய், சூனியமாய் வெறிச்சென்று இருந்தது.

திடீரென்று நிலவொளி மங்கியது. சுற்றிலும் இருள் சூழ்ந்து வந்தது. என் கண்களும் இருண்டன. தலை சுற்றியது. நினைவிழந்து கீழே விழுந்தேன்.

மறுநாள் உதய சூரியனின் கிரணங்கள் என் முகத்தில் பட்டு என்னைத் துயிலெழுப்பின. திடுக்கிட்டு விழித்தெழுந்தேன். நாலாபுறமும் பார்த்தேன். முதல் நாளிரவு அனுபவங்களெல்லாம் நினைவு வந்தன. அவையெல்லாம் கனவில் கண்டவையா, உண்மையில் நிகழ்ந்தவையா என்று விளங்கவில்லை. அந்தப் பிரச்சனையைப் பற்றி யோசிக்கவும் நேரம் இல்லை. ஏனெனில் நீலக்கடல் ஓடையில் நடுவே நின்ற கப்பல், அதன் பயங்கரமான ஊதுகுழாய்ச் சப்தத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. படகு ஒன்று இந்தக் கரையோரமாக வந்து நின்று கொண்டிருந்தது. அந்தப் படகு மறுபடியும் என்னை ஏற்றிக் கொள்ளாமல் போய்விடப் போகிறதே என்ற பயத்தினால், ஒரு பெரும் ஊளைச் சப்தத்தைக் கிளப்பிக் கொண்டு, நான் அந்தப் படகை நோக்கி விரைந்தோடினேன். நல்ல வேளையாகப் படகைப் பிடித்துக் கப்பலையும் பிடித்து ஏறி, இந்தியா தேசம் வந்து சேர்ந்தேன்.

Source

Previous articleRead Mohini Theevu Ch 9
Next articleRead Mohini Theevu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here