Home Kalki Read Mohini Theevu Ch 5

Read Mohini Theevu Ch 5

89
0
Read Mohini Theevu Ch 5 | Kalki | Read Mohini Theevu Free Read Mohini Theevu Ch 5 is an historical novel by Kalki. Mohini Theevu has 10 chapters and its good story to read. Mohini theevu free download, mohini theevu pdf, download mohini theevu, mohini theevu audiobook
Mohini Theevu ch 5 மோகினித் தீவு ஐந்தாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 5

மோகினித் தீவு

ஐந்தாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 5

அந்தப் பெண்ணரசி கதையில் இந்தக் கட்டத்துக்கு வந்த போது, ஆடவன் குறுக்கிட்டு, “பெண்களின் விஷயமே இப்படித்தானே? வீண் பிடிவாதம் பிடித்து வேண்டாத காரியத்தைச் செய்து விடுவது? அப்புறம் அதற்காக வருத்தப்படுவது? தாங்கள் வருந்துவது மட்டுமா? மற்றவர்களையும் பொல்லாத கஷ்டங்களுக்கு உள்ளாக்குவது, இது பெண் குலத்தின் தனி உரிமை அல்லவா?” என்றான்.

அவனுடைய காதலி ஏதோ மறுமொழி சொல்ல ஆரம்பித்தாள். அதற்கு இடங்கொடாமல் அந்த மோகன புருஷன் கதையைத் தொடர்ந்து கூறினான்:-

“காசியிலிருந்து வந்த தேவேந்திரச் சிற்பியின் தமையன் மகனைப் பார்த்ததும் மதிவாணனுக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டது. மதுரை மாநகரத்தில் பல்லாயிர மக்களுக்கு மத்தியில் இருந்த போதிலும், மதிவாணனைத் தனிமை சூழ்ந்திருந்தது. காசியிலிருந்து வந்த கோவிந்தன் என்னும் வாலிபன் அந்தத் தனிமை நோய்க்கு மருந்தாவான் என்று தோன்றியது. கோவிந்தனிடம் அந்தரங்க அபிமானத்துடன் பேசினான்; நட்புரிமை பாராட்டினான். அடிக்கடி வரவேண்டும் என்று வற்புறுத்தினான். கோவிந்தன் சிற்பக் கலையைப் பற்றி நன்கு அறிந்திருந்தான். இலக்கியங்கள் கவிதைகளிலும் பயிற்சி உடையவனாயிருந்தான். ஆகையால், அவனுடன் அளவளாவிப் பேசுவதற்கு மதிவாணனுக்கு மிகவும் விருப்பமாயிருந்தது. கோவிந்தன், “எனக்கு இந்த நகரில் உறவினர் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்க்க வேண்டும். ஆயினும் அடிக்கடி வரப் பார்க்கிறேன்!” என்றான்.

மதிவாணனுடைய விரதத்தைப் பற்றி அறிந்து கொண்ட கோவிந்தன், தனக்கும் ஒரு விரதம் உண்டு என்று சொன்னான். அதற்காக ஆசார நியமங்களைத் தான் கண்டிப்பாக நியமிப்பதாகவும், எவரையுமே தான் தொடுவதும் இல்லை; தன்னைத் தொடுவதற்கு விடுவதும் இல்லையென்றும் சொன்னான். இதைப் பற்றி மதிவாணன் எந்த விதமான சந்தேகமும் கொள்ளவில்லை. கோவிந்தனுடைய ஆசார நியமத்தைத் தான் எதற்காக கெடுக்க முயல வேண்டும் என்று இருந்து விட்டான்.

பாண்டிய குமாரி புருட வேடம் பூண்டு அடிக்கடி சிற்பக் கூடத்துக்கு வந்து போவது பற்றித் தேவேந்திரச் சிற்பியின் மனத்திலே கவலை உண்டாயிற்று. இதிலிருந்து ஏதேனும் விபரீதம் விளையப் போகிறதோ என்று பயப்பட்டார். பயத்தை வெளிப்படையாகச் சொல்லாமலும், இரகசியத்தை வெளியிடாமலும், தமது சீடனிடம், “கோவிந்தன் வரத் தொடங்கியதிலிருந்து உன்னுடைய வேலையின் தரம் குறைந்துவிட்டது” என்றார். அவன் அதை ஆட்சேபித்து, “வேலை அபிவிருத்தி அடைந்திருக்கிறது” என்றான். பாண்டிய குமாரியோ தேவேந்திரச் சிற்பியின் ஆட்சேபங்களைப் பொருட்படுத்தவில்லை. இந்த நிலைமையில் தேவேந்திரச் சிற்பி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். அதற்குத் தகுந்தாற் போல், அவருடைய கவலையை அதிகமாக்கும் படியான காரியம் ஒன்று நிகழ்ந்தது. மதுரை நகரின் ஒற்றர் தலைவன், ஒவ்வொரு நாளும் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு வரத் தொடங்கினான். “யாரோ புதிதாகச் சோழ நாட்டிலிருந்து ஒரு சீடன் வந்திருக்கிறானாமே?” என்றெல்லாம் விசாரணை செய்யத் தொடங்கினான். தேவேந்திரச் சிற்பியார் மனத்தில் பயந்து கொண்டு வெளிப்படையாகத் தைரியமாய்ப் பேசினார். “இங்கே வந்து தொந்தரவு செய்தால் பாண்டியரிடம் சொல்வேன்” என்று ஒற்றர் தலைவனைப் பயமுறுத்தினார். அதற்கெல்லாம் ஒற்றர் தலைவன் பயப்படவில்லை. மறுபடியும் மறுபடியும் வந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள், கோவிந்தன் வேடம் பூண்டு வந்த ராஜகுமாரி மதிவாணனிடம் பேசி விட்டு வெளிவந்த போது, ஒற்றர் தலைவன் பார்த்து விட்டான். “நீ யார்? எங்கே வந்தாய்?” என்று கேட்டான். சந்தேகம் கொண்டு தலைப்பாகையை இழுத்து விட்டான். உடனே புவனமோகினி ரௌத்ராகாரம் அடைந்து, ஒற்றர் தலைவனைக் கண்டித்துத் திட்டினாள். அவன் நடுநடுங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பிறகு போய் விட்டான். இதெல்லாம் அரைகுறையாக உள்ளே தன் வேலைக் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மதிவாணன் காதில் விழுந்தது! கோவிந்தனுடைய அதிகார தோரணையான பேச்சும் குரலும் அவனுக்கு வியப்பையும் ஓரளவு திகைப்பையும் உண்டாக்கின. கோவிந்தனைப் பற்றி ஏதோ ஒரு மர்மம் இருக்கிறதென்று ஐயம் அவன் மனத்தில் உண்டாயிற்று.

இது நிகழ்ந்த சில நாளைக்கெல்லாம் பராக்கிரம பாண்டியரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஒரு திருவிழா நடந்தது. அன்றைக்குப் பாண்டியரும் அவருடைய குமாரியும் ரதத்தில் அமர்ந்து ஊர்வலம் போனார்கள். அப்போது மதிவாணன் சிற்பக் கூடத்தின் மேல் மாடத்தில் நின்று ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சோழ ராஜகுமாரனுடைய மனம் அப்போது பெரிதும் கலக்கத்தை அடைந்திருந்தது. அவன் மதுரைக்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. ஆயினும் வந்த காரியம் நிறைவேறுவதற்கு வழி எதையும் அவன் காணவில்லை. உத்தமசோழரை வைத்திருந்த சிறைக்குக் கட்டுக்காவல் வெகு பலமாயிருந்ததை அவன் தெரிந்து கொண்டிருந்தான். எத்தனை எத்தனையோ யுக்திகளை அவன் உள்ளம் கற்பனை செய்தது. ஆனால், ஒன்றிலும் காரியசித்தி அடையலாம் என்ற நிச்சயம் ஏற்படவில்லை. நாளாக ஆக, பராக்கிரம பாண்டியன் மீது அவனுடைய குரோதம் அதிகமாகி வந்தது. வேறு வழி ஒன்றும் தோன்றாவிட்டால், பழிக்குப் பழியாகப் பராக்கிரம பாண்டியர் மீது வேல் எறிந்து அவரைக் கொன்று விட வேண்டுமென்று எண்ணினான்.

இத்தகைய மனோ நிலையில், அவன் சிற்பக் கூடத்தின் மேன் மாடத்திலிருந்து பாண்டிய மன்னரின் நகர்வலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். பராக்கிரம பாண்டியர் வீற்றிருந்த அலங்கார வெள்ளி ரதம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரதத்தில் பாண்டியருக்கு பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை கவனித்தான். பாண்டியரின் பட்டமகிஷி காலமாகி விட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் அரசர் பக்கத்தில் உட்கார்ந்து வருவது அவருடைய மகளாய்த்தானிருக்க வேண்டும். தனக்கு நேர்ந்த இன்னல்களுக்கெல்லாம் காரணமான அந்தப் பெண் எப்படித்தான் இருப்பாள் என்று தெரிந்து கொள்ள, அவனை மீறிய ஆவல் உண்டாயிற்று. ஆகையால் நின்ற இடத்திலிருந்து அகலாமல், நெருங்கி வந்த ரதத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

சிற்பக் கூடத்துக்கு நேராக ரதம் வந்ததும், பாண்டிய குமாரி சிற்பக்கூடத்தின் மேல்மாடத்தை நோக்கினாள். தேவேந்திரச் சிற்பியின் பல சீடர்களுக்கு மத்தியில் நின்ற மதிவாணனுடைய முகத்தை அவளுடைய கண்கள் தேடிப்பிடித்து அங்கேயே ஒரு கண நேரம் நின்றன; அந்தக் கணத்தில் மதிவாணன் தன் மனத்தைச் சில காலமாகக் கலக்கி வந்த இரகசியத்தைக் கண்டு கொண்டான். எவ்வளவு திறமையாக எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடலாம். ஆனால், கண்கள் உண்மையை வெளியிடாமல் தடுக்க முடியாது. தேவேந்திரச் சிற்பியின் தமையன் மகன் என்று சொல்லிக் கொண்டு வந்து தன்னோடு சிநேகம் பூண்ட வாலிபன், உண்மையில் மாறுவேடம் தரித்த பாண்டிய குமாரி புவனமோகினிதான் என்று தெரிந்துவிட்டது.

இந்த உண்மையைத் தெரிந்து கொண்டதும் சுகுமாரனுடைய உள்ளம் கொந்தளித்தது. பற்பல மாறுபட்ட உணர்ச்சிகள் பொங்கி எழுந்தன. எல்லாவற்றிலும் முதன்மையாக இருந்தது, தன்னை ஏமாற்றியவளைத் தான் ஏமாற்றி விட வேண்டும் என்பதுதான். அப்படி ஏமாற்றுவதன் மூலம் தான் வந்த காரியத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக ஓர் உபாயத்தைச் சுகுமாரன் தேடிக் கடைசியில் கண்டு பிடித்தான். ஆனால், காரியத்தில் அதை நிறைவேற்ற வேண்டி வந்த போது, அவனுக்கு எவ்வளவோ வருத்தமாயிருந்தது…”

கதை இந்த இடத்துக்கு வந்த போது, அந்த ஆடவனின் முகத்தில் உண்மையான பச்சா தாபத்தின் சாயை படர்ந்தது. அவனுடைய குரல் தழதழத்தது பேச்சு தானாகவே நின்றது. அவன் கதையை விட்ட இடத்தில், அந்தப் பெண்மணி எடுத்துக் கொண்டாள்:-

“பாவம்! அந்த வஞ்சகச் சிற்பியின் கபட எண்ணத்தை அறியாத புவனமோகினி, வழக்கம் போல் மறுநாள் அவனைப் பார்ப்பதற்காக ஆண் வேடத்தில் சென்றாள். அவனைத் தான் ஏமாற்றியதற்காகத் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டாள்.

மதிவாணன் வெகு திறமையுடன் நடித்தான். நேற்றோடு தன்னுடைய விரதத்தைக் கைவிட்டு விட்டதாகச் சொன்னான். பாண்டிய குமாரியின் சுண்டு விரல் ஆக்ஞைக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யச் சித்தமாயிருப்பதாகக் கூறினான். இனிமேல் ஆண்வேடம் பூண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றும், ராஜகுமாரியாகவே தன்னைப் பார்க்க வரலாம் என்றும் தெரிவித்தான். கள்ளங்கபடமற்ற புவனமோகினி, அவனுடைய வஞ்சக வார்த்தைகளையெல்லாம் உண்மையென்று நம்பினாள்.

இந்நாளில், மேற்கே குடகு நாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற பாண்டிய சேனை பெருந்தோல்வியடைந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. பராக்கிரம பாண்டியர், “தோல்வியை வெற்றியாகச் செய்து கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, உதவிப் படையுடன் புறப்பட்டுப் போனார். போகும்போது, அவர் தம் அருமை மகளிடம் தம்முடைய முத்திரை மோதிரத்தை ஒப்படைத்து, “நான் இல்லாத காலத்தில் இராஜ்யத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது” என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால், தன்னுடைய உள்ளத்தையே பாதுகாக்க முடியாமால் நாடோ டி வாலிபன் ஒருவனுக்குப் பறிகொடுத்துவிட்ட புவன மோகினி இராஜ்யத்தை எப்படிப் பாதுகாப்பாள்? அவள் மனோநிலையை அறிந்த இளஞ்சிற்பி, தன் வஞ்சக வலையைத் தந்திரமாக வீசினான்.

ஒருநாள் புவனமோகினி தேவேந்திரச் சிற்பியின் சிற்ப மண்டபத்துக்குப் போன போது மதிவாணன் சோகமே உருவாக உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அவனுக்கு எதிரே ஒரு செப்பு விக்கிரகம் உடைந்து சுக்கு நூறாகக் கிடந்தது. அவனுடைய சோகத்துக்குக் காரணம் என்னவென்று பாண்டியகுமாரி கேட்டாள். நொறுங்கிக் கிடந்த விக்கிரகத்தை இளஞ்சிற்பி காட்டி, “செப்புச் சிலை வார்க்கும் வித்தை இன்னும் எனக்குக் கைவரவில்லை. என் ஆசிரியருக்கும் அது தெரியவில்லை. இந்த உயிர் வாழ்க்கையினால் என்ன பயன்? ஒரு நாள் பிராணனை விட்டு விடப் போகிறேன்” என்றான். பாண்டிய குமாரியின் இளகிய நெஞ்சு மேலும் உருகியது. “அந்த வித்தையைக் கற்றுக் கொள்வதற்கு வழி ஒன்றும் இல்லையா?” என்று கேட்டாள். “ஒரு வழி இருக்கிறது. ஆனால், அது கைகூடுவது துர்லபம்” என்றான் மதிவாணன். மேலும் குடைந்து கேட்டதில், அவன் தன் அந்தரங்கத்தை வெளியிட்டான். “செப்புச் சிலை வார்க்கும் வித்தையை நன்கு அறிந்தவர் ஒரே ஒருவர் இருக்கிறார். அவர் இந்த நகரத்தில் கட்டுக் காவலுடன் கூடிய கடுஞ்சிறையில் இருக்கிறார். உத்தம சோழரை ஒரு நாள் இரவு தனியாகச் சிறையில் பார்க்க முடியுமானால் போதும். அவரிடம் அந்த வித்தையின் இரகசியத்தை அறிந்து கொண்டு விடுவேன். உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் இந்த நகருக்கு வந்ததே இந்த நோக்கத்துடனே தான். ஏதாவது ஓர் உபாயம் செய்து உத்தம சோழரைச் சிறையில் சந்தித்து அவரிடமுள்ள இரகசியத்தை அறிந்து போகலாம் என்று தான் வந்தேன். ஆனால், கை கூடுவதற்கு ஒரு வழியையும் காணவில்லை. நான் இந்த உலகில் உயிர் வாழ்ந்து என்ன பயன்?” என்றான். இதையெல்லாம் உண்மையென்று நம்பிய புவனமோகினி, “நீ கவலைப்பட வேண்டாம். உன்னுடைய மனோரதம் ஈடேற நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்றாள். அதை நம்பாதது போல் மதிவாணன் நடித்தான். முடிவில் “அவ்விதம் நீ உதவி செய்தால் என் உயிரையே கொடுத்தவளாவாய். நான் என்றென்றைக்கும் உன் அடிமையாயிருப்பேன்” என்றான்.

மறுநாள் புவனமோகினி மதிவாணனிடம் பாண்டிய மன்னரின் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தாள். “இன்றிரவு இந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு சிறைக்கூடத்துக்குப் போ! இதைக் காட்டினால் திறவாத சிறைக் கதவுகள் எல்லாம் திறந்து கொள்ளும். அசையாத காவலர்கள் எல்லாரும் வணங்கி ஒதுங்கி நிற்பார்கள். உத்தம சோழரைச் சந்தித்து இரகசியத்தை தெரிந்து கொள். நாளைக்கு முத்திரை மோதிரத்தை என்னிடம் பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்து விடு!” என்றாள்.

மதிவாணன், முத்திரை மோதிரத்தை வாங்கிக் கொண்டு, மறுபடியும் நன்றி கூறினான். பாண்டிய குமாரிக்குத் தான் ஏழேழு ஜன்மங்களிலும் கடமைப்பட்டிருப்பேன் என்று சொன்னான். அவளுக்குத் தன்னுடைய இருதயத்தையே காணிக்கையாகச் சமர்ப்பித்துவிட்டதாகவும், இனி என்றென்றைக்கும் அவள் காலால் இட்ட பணியைத் தன் தலையினால் ஏற்றுச் செய்யப் போவதாகவும் கூறினான். அதையெல்லாம், அந்தப் பேதைப் பெண் புவனமோகினி உண்மையென்றே நம்பினாள்…

Source

Previous articleRead Mohini Theevu Ch 4
Next articleRead Mohini Theevu Ch 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here