Home Kalki Read Mohini Theevu Ch 6

Read Mohini Theevu Ch 6

65
0
Read Mohini Theevu Ch 6 | Kalki | Read Mohini Theevu Free Read Mohini Theevu Ch 6 is an historical novel by Kalki. Mohini Theevu has 10 chapters and its good story to read. Mohini theevu free download, mohini theevu pdf, download mohini theevu, mohini theevu audiobook
Mohini Theevu ch 6 மோகினித் தீவு ஆறாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 6

மோகினித் தீவு

ஆறாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 6

மோகினித் தீவின் சுந்தர புருஷன் கூறினான்: “இளம் சிற்பியைக் குறித்துப் பாண்டிய குமாரி கொண்ட எண்ணத்தில் தவறு ஒன்றுமில்லை. சுகுமாரன் தன் இதயத்தை உண்மையில் அவளுக்குப் பறிகொடுத்து விட்டான். அவளை ஏமாற்ற வேண்டியிருக்கிறதே என்னும் எண்ணம், அவனுக்கு அளவில்லாத வேதனையை அளித்தது. ஆயினும், தந்தையை விடுதலை செய்ய வேண்டிய கடமையை அவன் எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமான கடமையாகக் கருதினான். பாண்டிய குமாரியிடம் தான் கொண்ட காதல் பூர்த்தியாக வேண்டுமானால், அதற்கும் உத்தம சோழரை விடுவிப்பது ஒன்றுதான் வழி. இவ்விதம் எண்ணிச் சுகுமாரன் புவனமோகினி தன்னிடம் நம்பிக்கை வைத்துக் கொடுத்த மோதிரத்தைத் தான் வந்த காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினான். ஆயினும் அதற்கு இன்னும் பல தடங்கல்களும் அபாயங்களும் இருக்கத்தான் இருந்தன. ஒற்றர் தலைவன் தினகரன் அந்தச் சிற்ப மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது எல்லாவற்றிலும் பெரிய இடையூறு. அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று அவன் சிந்தித்து, கடைசியில் அந்த இடையூறையும் தன்னுடைய நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள, ஓர் உபாயம் கண்டு பிடித்தான்.

அன்று சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்ததும், சுகுமாரன் சிற்பக் கூடத்திலிருந்து வெளியேறினான். சற்றுத் தூரத்தில் வேறு எதையோ கவனிப்பவன் போல நின்று கொண்டிருந்த தினகரனை அணுகி “ஐயா! இந்த ஊரில் சிறைக்கூடம் எங்கே இருக்கிறது தெரியுமா?” என்று கேட்டான். தினகரனின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவனுடைய புருவங்கள் மேலேறி நின்றதையும் கவனித்தும் கவனியாதவன் போல், “என்ன ஐயா! நான் சொல்வது காதில் விழவில்லையா? இந்த ஊரில் சிறைக்கூடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போக வேண்டும்?” என்றான். அதற்குள் தினகரன் நிதானமடைந்து விட்டான். “இந்த ஊரில் பன்னிரண்டு சிறைக்கூடங்கள் இருக்கின்றன. நீ எதைக் கேட்கிறாய் அப்பா?” என்றான். “உத்தம சோழரை வைத்திருக்கும் சிறையைக் கேட்கிறேன்,” என்று சுகுமாரன் சொன்ன போது, மறுபடியும் தினகரனுடைய முகம் ஆச்சரியம் கலந்த உவகையைக் காட்டியது. “உத்தம சோழரை அடைத்திருக்கும் சிறை திருப்பரங்குன்றத்துக்குப் பக்கத்திலே இருக்கிறது. ஆனால், நீ எதற்காகக் கேட்கிறாய்? நீ இந்த ஊரான் இல்லை போலிருக்கிறதே!” என்றான். “ஆமாம்; நான் இந்த ஊர்க்காரன் இல்லை. தஞ்சாவூரிலிருந்து வந்தவன். இன்று ராத்திரி, நான் உத்தமசோழரை அவசியம் பார்த்தாக வேண்டும். ஆனால் அவர் இருக்கும் சிறை எனக்குத் தெரியாது. உனக்கு முக்கியமான வேலை ஒன்றும் இல்லை போலிருக்கிறதே! கொஞ்சம் எனக்கு வழிகாட்ட முடியுமா?” என்றான்.

தினகரன் மேலும் திகைப்புடன், “வழி காட்ட முடியும் அப்பா! அதைப்பற்றிக் கஷ்டம் ஒன்றும் இல்லை; ஆனால் நீ என்ன உளறுகிறாய்? கடும் சிறையில் இருக்கும் உத்தம சோழரை நீ எப்படிப் பார்க்க முடியும்?” என்றான். “அதற்கு என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அதைச் சொன்னால் சிறைக் கதவு உடனே திறந்து விடும். உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், நீயும் என்னோடு வந்து பார். எனக்கு வழி காட்டியதாகவும் இருக்கும்,” என்றான் சுகுமாரன். ஒற்றர் தலைவன் தன்னுடைய திகைப்பையும் வியப்பையும் வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு, “நான் வழி காட்டுவது இருக்கட்டும். உத்தம சோழரை நீ எதற்காகப் பார்க்கப் போகிறாய்? அவரிடம் உனக்கு என்ன வேலை? நீ யார்?” என்றான். “நானா? தேவேந்திரச் சிற்பியாரின் மாணாக்கன். செப்புச் சிலை வார்க்கும் வித்தையின் ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன். பாண்டிய குமாரி பெரிய மனது செய்து முத்திரை மோதிரத்தை என் வசம் கொடுத்திருக்கிறாள். நாளைக்கு அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். ஆகையால் இன்று ராத்திரியே உத்தம சோழரை நான் பார்த்தாக வேண்டும். உனக்கு வர இஷ்டமில்லை என்றால், வேறு யாரையாவது அழைத்துக் கொண்டு போகிறேன்” என்றான் சுகுமாரன்.

இதையெல்லாம் பற்றி என்ன நினைக்கிறது என்று தினகரனுக்குத் தெரியவில்லை. இதில் ஏதோ கபட நாடகம் இருக்கிறது என்பது மட்டும் அவன் மனதிற்குத் தெரிந்தது. எப்படியிருந்தாலும் இந்தப் பையனைத் தனியாக விடக்கூடாது; தானும் பின்னோடு போவது நல்லது என்று தீர்மானித்தான். “இல்லை அப்பனே! நானே வருகிறேன். எனக்கு அந்தச் சிறைச்சாலையின் காவலர்கள் சிலரைக் கூடத் தெரியும்!” என்றான். “வந்தனம். இங்கிருந்து நீ சொல்லும் சிறைக்கூடம் எத்தனை தூரம் இருக்கும்?” என்று சோழகுமாரன் கேட்டான்.

“அரைக் காதம் இருக்கும்” என்று தினகரன் கூறியதும், “அவ்வளவு தூரமா? நடந்து போய் வருவது என்றால் வெகு நேரம் ஆகிவிடுமே? நான் இரவில் சீக்கிரமாய்த் தூங்குகிறவன். குதிரை ஒன்று கிடைத்தால், சீக்கிரமாய்ப் போய் வரலாம்,” என்றான் சுகுமாரன். “குதிரைக்கு என்ன பிரமாதம்? ஒன்றுக்கு இரண்டாக வாங்கித் தருகிறேன். இரண்டு பேருமே போய்விட்டு வரலாம். எனக்குக் கூட உத்தமசோழரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. ஆமாம், அவர் ராஜ ராஜ சோழரின் நேரான வம்சத்தில் பிறந்தவராமே? அது உண்மைதானா?” என்று தினகரன் கேட்டான். “அதெல்லாம் எனக்குத் தெரியாது ஐயா! உத்தம சோழர் சிற்பக் கலையில் சிறந்த நிபுணர் என்று மட்டும் தெரியும். முக்கியமாக செப்பு நிபுணர் என்று மட்டும் தெரியும். முக்கியமாக செப்பு விக்கிரஹம் வார்க்கும் வித்தை, தற்சமயம் இந்தத் தேசத்திலேயே, அவர் ஒருவருக்குதான் தெரியுமாம். பாண்டிய குமாரி புவனமோகினி சிற்பக் கலையில் ஆசையுள்ளவளாயிருப்பது அதிர்ஷ்டவசந்தான். இல்லாவிட்டால் பாண்டிய மன்னரின் முத்திரை மோதிரம் லேசில் கிடைத்து விடுமா?” என்று சொல்லி, சுகுமாரன் தான் பத்திரமாய் வைத்திருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து ஒரு தடவை பார்த்துவிட்டு மறுபடியும் அதைப் பத்திரப்படுத்தினான். ஆனால், அந்த ஒரு வினாடி நேரத்தில், அது உண்மையான அரசாங்க முத்திரை மோதிரம் என்பதைத் தினகரன் பார்த்துக் கொண்டான். அதைப் பலவந்தமாக சுகுமாரனிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிடலாமா என்று ஒரு கணம் தினகரன் நினைத்தான். ஆனால், அந்த அதிசயமான மர்மத்தை முழுதும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசை காரணமாக, அந்த எண்ணத்தை ஒற்றர் தலைவன் கை விட்டான். “சரி வா! போகலாம்!” என்று சொன்னான்.

அரண்மனைக் குதிரை லாயங்களில் ஒன்றுக்குத் தினகரன் இளஞ்சிற்பியை அழைத்துக் கொண்டு போனான். உள்ளே சென்று லாயத் தலைவனிடம் ஏதோ சொல்லிவிட்டு, இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்தான்.

“அடே அப்பா! நீ யார்?” என்றான் சுகுமாரன். தினகரன் ஒரு கணம் யோசித்து “நான் யார் என்றால், இந்த மதுரையில் வசிக்கும் ஒருவன். எனக்குக் கூடச் சிற்பக் கலையில் ஆசை உண்டு. அதனால் தான் உன்னோடு வருகிறேன்,” என்றான். “கட்டாயம் வா! அது மட்டுமல்ல. உத்தம சோழரிடம் நான் எதற்காகப் போகிறேனோ அதை மட்டும் தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் சிற்ப வித்தையில் நான் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இராது. மதுரையில் ஒரு சிற்பக்கூடம் ஏற்படுத்தலாம் என்றிருக்கிறேன். நீ எனக்கு உதவி செய்ய முடியுமா?” என்றான் சுகுமாரன். “ஆகட்டும் முடிந்ததைச் செய்கிறேன்,” என்றான் தினகரன். இருவரும் குதிரைகள் மேல் ஏறித் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் இருந்த பெரிய சிறைச் சாலைக்குச் சென்றார்கள். வழக்கம் போலச் சிறைக் காவலர்கள் அவர்களைத் தடை செய்தார்கள். ஒற்றர் தலைவன் தினகரனைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திகைப்பாயிருந்தது. ஏனெனில், தினகரனுக்குப் பாண்டிய ராஜ்யத்தில் மிக்க செல்வாக்கு உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் யாராயிருந்தால் என்ன? அவர்களுடைய கடமையைச் செய்தேயாக வேண்டுமல்லவா?

தடுத்த காவலர்களிடம் சுகுமாரன் முத்திரை மோதிரத்தைக் காட்டியதும், மந்திரத்தைக் காட்டிலும் அதிக சக்தி முத்திரை மோதிரத்துக்கு உண்டு என்று தெரிந்தது. புவனமோகினி சொன்னது போலவே, காவலர்கள் தலை வணங்கினார்கள். கதவுகள் தட்சணமே திறந்து கொண்டன. இருவரும் பல வாசல்கள் வழியாக நுழைந்து, பல காவலர்களைத் தாண்டி, உத்தம சோழரை வைத்திருந்த அறைக்குச் சென்றார்கள். உத்தம சோழரைப் பயங்கரமான தோற்றத்துடன் பார்த்ததும், சுகுமாரனுடைய உள்ளத்தில் அமுங்கியிருந்த கோபம், துக்கம் எல்லாம் பொங்கின. ஆயினும், மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். அவருடைய அறைக்குள் நுழைவதற்குள் “நீர் கொஞ்ச நேரம் வெளியிலேயே இருக்கலாமா?” என்று தினகரனைக் கேட்டான். “நன்றாயிருக்கிறது; இத்தனை தூரம் அழைத்து வந்துவிட்டு, இப்போது வெளியிலேயே நிற்கச் செய்கிறாயே?” என்றான் தினகரன். அவ்விதம் சொல்லிக் கொண்டே சுகுமாரனுடன் உள்ளே நுழைந்தான். அறைக்குள் நுழைந்ததும் சுகுமாரன் கதவைச் சாத்திக் கொண்டான். தினகரன் மீது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனைப் பிடித்துக் கட்டி விட்டான். வாயிலும் துணி அடைத்து விட்டான். இதையெல்லாம் பார்த்துத் திகைத்திருந்த உத்தம சோழரை, சுகுமாரன் உடனே விடுதலை செய்தான். அதற்கு உதவியாக அவன் கல்லுளியும் சுத்தியும் கொண்டு வந்திருந்தான். உத்தம சோழரின் இடுப்பில் சங்கிலிகட்டி, அதைச் சுவரில் அடித்திருந்த இரும்பு வளையத்தில், இப்போது சுகுமாரன் தினகரனைப் பிடித்துக் கட்டிவிட்டான். அவன் அணிந்திருந்த உடைகளைக் கழற்றித் தந்தையை அணிந்து கொள்ளச் செய்தான். “எல்லா விபரமும் அப்புறம் சொல்கிறேன். இப்போது என்னோடு வாருங்கள். நான் என்ன பேசினாலும் மறுமொழி சொல்ல வேண்டாம்,” என்று தந்தையிடம் கூறினான்.

உடனே தந்தையும் மகனும் சிறையை விட்டு வெளிக்கிளம்பினார்கள். நல்ல இருட்டாகையால், காவலர்கள் அவர்களைக் கவனிக்கவில்லை. சுகுமாரனும் தினகரனுடன் பேசுவது போல, “உத்தம சோழருக்கு ரொம்ப வயதாகிவிட்டது, பாவம்! எத்தனை காலம் இன்னும் உயிரோடு இருக்கிறாரோ என்னமோ?” என்று சொல்லிக் கொண்டே நடந்தான். இருவரும் சிறையை விட்டு வெளியேறினார்கள். சுகுமாரனும் தினகரனும் ஏறி வந்த குதிரைகள் ஆயத்தமாயிருந்தன. அவற்றின் மேல் ஏறித் தஞ்சாவூரை நோக்கி குதிரைகளைத் தட்டி விட்டார்கள். வழியில் ஆங்காங்கு அவர்களை நிறுத்தியவர்களுக்கெல்லாம், முத்திரை மோதிரத்தைக் காட்டியதும், தடுத்தவர்கள் திகைப்படைந்து, இரண்டு பேருக்கும் வழி விட்டார்கள். குதிரை மீது வாயு வேக மனோ வேகமாகப் போய்க் கொண்டிருந்த போதிலும், சுகுமாரனுடைய உள்ளம் மட்டும் மதுரையிலேயே இருந்தது. தான் செய்து விட்ட மோசத்தைப் பற்றி புவனமோகினி அறியும் போது, எப்படியெல்லாம் நொந்து கொள்வாளோ, அதனால் அவளுக்கு என்ன துன்பம் விளையுமோ என்னமோ என்று எண்ணி மிகவும் வருத்தப் பட்டான்…”

Source

Previous articleRead Mohini Theevu Ch 5
Next articleRead Mohini Theevu Ch 7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here