Home Kalki Read Mohini Theevu Ch 7

Read Mohini Theevu Ch 7

72
0
Read Mohini Theevu Ch 7 | Kalki | Read Mohini Theevu Free Read Mohini Theevu Ch 7 is an historical novel by Kalki. Mohini Theevu has 10 chapters and its good story to read. Mohini theevu free download, mohini theevu pdf, download mohini theevu, mohini theevu audiobook
Mohini Theevu ch 7 மோகினித் தீவு ஏழாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 7

மோகினித் தீவு

ஏழாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 7

இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த மோகினித் தீவின் சௌந்தர்யராணி குறுக்கிட்டு கூறலுற்றாள்:- “ஆமாம், ஆமாம்! ஆண்பிள்ளைகள் மிக்க மன இளக்கமுள்ளவர்கள். அதிலும் சுகுமார சோழனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. புவனமோகினியை நினைத்து நினைத்து அவன் உருகிக் கொண்டே போனான். அங்கே, பாண்டிய குமாரிக்கு அன்றெல்லாம் கவலையாகவே இருந்தது. யாரோ ஊர் பேர் நிச்சயமாகத் தெரியாதவனிடம், முத்திரை மோதிரத்தைக் கொடுத்து விட்டோ மே, அது சரியோ தவறோ, அதனால் என்ன விளையுமோ என்ற கவலை அவள் மனதை அரித்தது.

இதைக் காட்டிலும் அதிகக் கவலை அளித்த ஒரு விஷயமும் இருந்தது. ஒற்றர் தலைவன் தினகரன், தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான் என்பது புவனமோகினிக்குத் தெரிந்திருந்தது. அதைக் குறித்துத் தந்தையிடம் சொல்லவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குச் சில சமயம் தோன்றியிருப்பினும், குற்றமுள்ள நெஞ்சு காரணமாக அதற்குத் தைரியம் உண்டாகவில்லை. இப்போது அந்தத் தினகரனால் மதிவாணனுக்கு ஏதாவது அபாயம் உண்டாகலாம் அல்லவா?

இந்தக் கவலை காரணமாக அரண்மனைச் சேவகர்களில் தன்னிடம் மிக்க பக்தியுள்ளவன் ஒருவனை அழைத்துத் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொன்னாள். அப்படிப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தவன், இளஞ் சிற்பியும் ஒற்றர் தலைவனும் சேர்ந்து குதிரை லாயத்துக்குப் போய், இரண்டு குதிரைகளில் ஏறிக் கொண்டு திருப்பரங்குன்றத்தை நோக்கிப் போனார்கள் என்று தெரிவித்தான். இதனால் புவனமோகினியின் மனக்கலக்கம் மேலும் அதிகமாயிற்று.

அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. தான் செய்துவிட்ட தவறினால், ஏதோ ஒரு விபத்து நடக்கப் போகிறது என்று, அவளுடைய உள் மனத்தில் வேதனை நிறைந்த ஒரு மௌனக் குரல் அடிக்கடி இடித்துக் கூறிக் கொண்டிருந்தது. தினகரன் ஒற்றர் தலைவன் என்பது இளஞ்சிற்பிக்குத் தெரியாது தானே? அவனை நம்பி மோசம் போகிறானோ என்னமோ? அல்லது, ஒரு வேளை அந்த இளஞ்சிற்பியும் ஒரு வஞ்சகனோ? இருவரும் ஒத்துப் பேசிக் கொண்டு, ஏதாவது தீங்கு இழைக்கப் போகிறார்களோ? உத்தம சோழர் மீது ஏதேனும் புதிய பழியைச் சுமத்தி, அவருடைய உயிருக்கே உலை வைத்து விடுவார்களோ?

இப்படிப் பலவாறு எண்ணி வேதனைப் பட்டாள். கடைசியில் அவளால் பொறுக்க முடியாமற் போயிற்று. அரண்மனை ரதத்தை அவசரமாக எடுத்துவரச் செய்து, இரவு இரண்டாம் ஜாமத்தில், திருப்பரங்குன்றத்துச் சிறைக்கூடத்தை நோக்கிச் சென்றாள். முன்னும் பின்னும் அரண்மனைக் காவலர்கள், பாண்டிய குமாரியைத் தொடர்ந்து வந்தார்கள்.

சிறைக்கூடத்து வாசலுக்குப் பாண்டிய குமாரி வந்து சேர்ந்ததும், சிறைக் காவலர்கள் வியப்புடனே வந்து வணங்கி நின்றார்கள். “யாராவது இங்கு வந்தார்களா? சிறைக்குள்ளிருக்கும் சோழ மன்னனைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்களா?” என்று அவர்களைக் கேட்டாள். “ஆம், தாயே! இரண்டு பேர் வந்தார்கள். முத்திரை மோதிரத்தைக் காட்டி விட்டு உள்ளே போனார்கள். சோழ மகாராஜாவைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பியும் போய் விட்டார்கள்! வந்தவர்களில் ஒருவனைப் பார்த்தால், ஒற்றர் தலைவன் தினகரன் மாதிரி இருந்தது!” என்று சிறைக் காவலர்களின் தலைவன் கூறினான்.

இதைக் கேட்டதும், புவனமோகினிக்கு ஓரளவு மன நிம்மதி ஏற்பட்டது. அதே சமயத்தில், சிறையிலே கிடந்து வாடும் உத்தம சோழரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. காவலர்கள் முன்னும் பின்னும் தீவர்த்தி பிடித்துக் கொண்டு வர, புவனமோகினி சிறைக்குள் சென்று, உத்தம சோழரை அடைத்திருந்த அறையை அடைந்தாள். அறைக்குள்ளே கருங்கல் மேடையில் சோழ மன்னர் தலைகுனிந்து உட்கார்ந்திருந்த காட்சியைப் பார்த்ததும் புவனமோகினிக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம் உண்டாயிற்று. ஏனெனில் நிமிர்ந்து பார்த்த முகம் உத்தம சோழரின் முகம் அல்ல; அது பாண்டிய நாட்டு ஒற்றர் தலைவன் தினகரனுடைய முகம்!

பாண்டிய குமாரியும் மற்றவர்களும் வருவதை நிமிர்ந்து பார்த்துத் தெரிந்து கொண்ட ஒற்றர் தலைவன் “மோசம்! மோசம்! என்னை அவிழ்த்து விடுங்கள்! சீக்கிரம் அவிழ்த்து விடுங்கள்! இத்தனை நேரம் அவர்கள் வெகு தூரம் போயிருப்பார்கள்! உடனே அவர்களைத் தொடர்ந்து பிடிக்கக் குதிரை வீரர்களை அனுப்ப வேண்டும்!” என்று கத்தினான். சிறைக் காவலர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்கள். புவனமோகினி, இன்னது நடந்திருக்க வேண்டும் என்று ஒருவாறு யூகித்துக் கொண்டாள். தினகரனுடைய நிலைமையையும், அவனுடைய பதட்டத்தையும் கண்டதும், முதலில் அவளுக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது. “ஆமாம் அம்மணி! இன்றைக்குச் சிரிப்பீர்கள், நாளைக்கு அரசர் திரும்பி வந்தால் அப்போது தெரியும்; எத்தனை பேருடைய தலை உருளப் போகிறதோ?” என்றான்.

இதைக் கேட்ட புவனமோகினிக்கு நெஞ்சில் சிறிது பீதி உண்டாயிற்று. ஆயினும் வெளிப்படையாக வேண்டுமென்றே அதிகமாகச் சிரித்தாள். அன்றைக்கு இந்தத் தினகரன் சிற்பக்கூடத்தில் தன்னுடைய வேஷத்தைக் கலைத்து அவமானப்படுத்தியதற்கு, இது தக்க தண்டனையென்று கருதினாள். பிறகு, “ஒற்றா! வெறுமனே பதட்டப்படுவதில் என்ன பிரயோஜனம்? நடந்ததை நிதானமாகச் சொல்லு!” என்றாள். “நிதானமாகச் சொல்லச் சொல்லுகிறீர்களே! அவர்கள் இத்தனை நேரமும் மதுரையைத் தாண்டிப் போயிருப்பார்களே? சீக்கிரம் அம்மா, சீக்கிரம்!” என்றான் தினகரன். “அவர்கள் என்றால் யார்?” என்று புவனமோகினி கேட்டாள். “உத்தம சோழரும் அவருடைய புதல்வர் சுகுமாரனுந்தான். வேறு யார்?” என்றான் தினகரன்.

அப்போதுதான் புவனமோகினிக்குத் தான் செய்த தவறு எவ்வளவு பெரிது என்று தெரிந்தது. ஆயினும் தன்னுடைய கலக்கத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “அவர்கள் ஓடிப்போகும்படி நீ எப்படி விட்டாய்? ஒற்றர் தலைவன் என்ற உத்தியோகம் வேறு பார்க்கிறாயே?” என்றாள். “ஆம் அம்மணி. என் பேரில் குற்றம் சொல்ல மாட்டீர்களா? ஊர் பேர் தெரியாத சிற்பியிடம் பாண்டிய சாம்ராஜ்யத்தின் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தது நானா, நீங்களா?” என்றான் தினகரன்.

“வாயை மூடிக்கொள்! முத்திரை மோதிரத்தை யாருக்காவது கொடுக்கிறேன். அதைக் குறித்துக் கேட்க நீ யார்? உத்தம சோழர் தப்பிச் செல்வதற்கு நீ உடந்தையாயிருந்தாய் என்று நான் சொல்கிறேன். இல்லாவிட்டால் எதற்காக அந்தப் பையனுடன் நீ இங்கே வந்தாய்? உன்னைச் சங்கிலியில் கட்டிப் போடும் வரையில் என்ன செய்தாய்? நீயும் அந்த இளஞ்சிற்பியும் சேர்ந்து சதி செய்துதான் உத்தம சோழரை விடுதலை செய்திருக்கிறீர்கள்” என்று புவனமோகினி படபடவென்று பொறிந்துக் கொட்டினாள்.

“அம்மணி! என் மீது என்ன குற்றம் வேண்டுமானாலும் சாட்டுங்கள்! என்ன தண்டனை வேண்டுமானாலும் விதியுங்கள்! ஆனால், அவர்களைத் தொடர்ந்து, பிடிப்பதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்! நாலாபுறமும் குதிரை வீரர்களை அனுப்புங்கள். முக்கியமாகத் தஞ்சாவூர்ச் சாலையில் அதிகம்பேரை அனுப்புங்கள்! நான் வேண்டுமானால், இந்தச் சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறேன் – மகாராஜா திரும்பி வரும் வரையில்!” என்றான் தினகரன்.

“ஓகோ! சிறையில் அடைப்பட்டுக் கிடந்தேன். அதனால் ஓடியவர்களைப் பிடிக்க முடியவில்லை என்று சாக்குச் சொல்லப் பார்க்கிறாயோ? அதெல்லாம் முடியாது. உன்னாலேதான் அவர்கள் தப்பித்துச் சென்றார்கள். நீதான் அவர்களைப் பிடிக்க வேண்டும்” என்று பாண்டிய குமாரி சொல்லி, அவனை விடுவிக்கும்படி காவலர்களிடம் கூறினாள். விடுதலையடைந்ததும், தினகரன் தலைதெறிக்க ஓடினான்.

ஒற்றர் தலைவனிடம் அவ்விதம் படாடோபமாகப் பேசினாளே தவிர, உண்மையில் புவனமோகினியின் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தான் செய்த காரியத்தினால் விளைந்ததையெண்ணி ஒரு பக்கம் கலங்கினாள். இளஞ்சிற்பி உண்மையில் சோழ ராஜகுமாரன் என்பதை எண்ணிய போது, அவள் சொல்ல முடியாத அவமான உணர்ச்சியை அடைந்தாள். அவன் தன்னை ஏமாற்றியதை நினைத்து, அளவில்லாத கோபம் கொண்டாள்.

இரவுக்கிரவே முதன் மந்திரியை வரவழைத்து நடந்ததை அவரிடம் சொல்லி, நாலாபக்கமும் குதிரை வீரர்களை அனுப்பச் செய்தாள். இத்தனைக்கும் நடுவில் அந்தப் பெண்ணின் பேதை உள்ளம் சுகுமாரனும் அவன் தந்தையும் தப்பித்துச் சென்றது குறித்து உவகை அடைந்தது. குதிரை வீரர்களுக்குக் கட்டளை தந்து அனுப்பும் போதே அவளுடைய இதய அந்தரங்கத்தில் அவர்கள் அகப்படாமல் தப்பித்துக் கொண்டு போய்விட வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. வீரர்கள் நாலா பக்கமும் சென்ற பிறகு, ‘தாயே மீனாக்ஷி! அவர்கள் அகப்படாமல் தப்பித்துச் செல்ல வேண்டும்’ என்று அவள் உள்ளம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தது…”

இந்தச் சமயத்தில், அந்தப் பெண்மணியின் நாயகன் குறுக்கிட்டு, “புவன மோகினியின் பிரார்த்தனை நிறைவேறியது. சோழர்கள் இருவரும் அகப்படவே இல்லை. முத்திரை மோதிரத்தின் உதவியால், பாண்டிய நாட்டின் எல்லையைக் கடந்து, பத்திரமாகக் கொல்லிமலைச் சாரலுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்!” என்றான்.

பெண்மணி தொடர்ந்து கூறினாள்:-

“அவர்கள் தப்பிப் போய்விட்டார்கள் என்று தெரிந்ததும், தினகரன் புவனமோகினி மேல் தனக்கு வந்த கோபத்தைத் தேவேந்திரச் சிற்பியின் பேரில் காட்டினான். சோழநாட்டு இளவரசனுக்குச் சிற்ப கூடத்தில் இடம் கொடுத்து வைத்திருந்ததற்காக அவரைச் சிறையிலிட்டான். உத்தம சோழர் இருந்த அதே அறையில், தேவேந்திரச் சிற்பியை அடைத்து வைத்தான். உத்தம சோழர் தப்பிச் சென்ற செய்தியை முதன் மந்திரி உடனே ஓலையில் எழுதி, அவசரத் தூதர்கள் மூலம், குடகு நாட்டில் போர் நடத்திக் கொண்டிருந்த பராக்கிரம பாண்டியருக்கு அனுப்பி வைத்தார்.

பாண்டிய மன்னர் ஏற்கெனவே போரில் காயம் பட்டிருந்தார். இந்தச் செய்தி அவரை மனமிடிந்து போகும்படி செய்துவிட்டது. உள்ளமும் உடலும் புண்பட்டு, மிகவும் பலவீனமான நிலையில் பராக்கிரம பாண்டியர் மிகவும் கஷ்டத்துடன் பிரயாணம் செய்து, மதுரைக்கு விரைந்து வந்தார். உத்தம சோழர் தப்பிச் சென்ற விவரங்களையெல்லாம் அறிந்ததும், அவரும் மகள் பேரில் வந்த கோபத்தைத் தேவேந்திரச் சிற்பியின் பேரில் காட்டினார். நாற்சந்தியில் அவரை நிறுத்திச் சவுக்கினால் அடிக்கும்படி கட்டளையிட்டார். புவனமோகினி அவர் காலில் விழுந்து வேண்டிக் கொண்டும் பயனில்லை. தேவேந்திரச் சிற்பிக்குப் பதிலாகத் தன்னைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டது அவருடைய கோபத்தை அதிகமாக்கியது.

எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போன்ற ஒரு செய்தி அப்போது வந்தது. அது, உத்தம சோழரும் சுகுமாரனும் பெரிய படை திரட்டிக் கொண்டு, பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறார்கள் என்பதுதான். இதைக் கேட்ட பாண்டியர், தன் தேக நிலையைப் பொருட்படுத்தாமல் போர்க்களம் செல்ல ஆயத்தமானார். புவனமோகினிக்கு அப்போது தான் செய்த குற்றத்துக்குப் பரிகாரம் செய்ய ஒரு வழி தோன்றியது.

“அப்பா! நீங்கள் படுத்திருந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நான் சைன்யத்துக்குத் தலைமை வகித்துச் சென்று சோழர்களை முறியடித்து, அவர்களுடைய கர்வத்தை ஒடுக்குகிறேன். அந்தச் சோழ ராஜகுமாரனை எப்படியாவது சிறைப்பிடித்து வருகிறேன்!” என்றாள். பராக்கிரம பாண்டியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். “நீ என்னுடைய உண்மையான வீரப்புதல்வி தான்; சந்தேகமில்லை. அப்படியே செய்!” என்று அனுமதி கொடுத்துத் தேவேந்திரச் சிற்பியை விடுதலை செய்தார். புவனமோகினி பாண்டிய சைன்யத்துக்குத் தலைமை வகித்துப் போர்முனைக்குப் புறப்பட்டுச் சென்றாள்…”

Source

Previous articleRead Mohini Theevu Ch 6
Next articleRead Mohini Theevu Ch 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here