Home Kalki Read Mohini Theevu Ch 8

Read Mohini Theevu Ch 8

90
0
Read Mohini Theevu Ch 8 | Kalki | Read Mohini Theevu Free Read Mohini Theevu Ch 8 is an historical novel by Kalki. Mohini Theevu has 10 chapters and its good story to read. Mohini theevu free download, mohini theevu pdf, download mohini theevu, mohini theevu audiobook
Read Mohini Theevu Ch 8 மோகினித் தீவு எட்டாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 8

மோகினித் தீவு

எட்டாம் அத்தியாயம்

Read Mohini Theevu Ch 8

பூரணச் சந்திரன், உச்சிவானத்தைத் தாண்டி மேற்குத் திசையில் சற்று இறங்கி நின்றான். சந்திரன் நின்ற நிலை, அந்த அதிசயத் தம்பதிகள் கூறி வந்த கதையைக் கேட்டுவிட்டுப் போகலாம் என்று தயங்கி நிற்பது போலத் தோன்றியது. காற்று அடித்த வேகம், வரவரக் குறைந்து இப்போது நிச்சலனமாகியிருந்தது. அந்த மோகினித் தீவின் காவலர்களைப் போல் நின்ற மரங்கள், அச்சமயம் சிறிதும் ஆடவில்லை. இலைகள் சற்றும் அசையவில்லை. கடலும் அப்போது அலை ஓய்ந்து மௌனம் சாதித்தது. சுகுமாரன் புவனமோகினியின் கதையைக் கேட்பதற்காகப் பிரகிருதியே ஸ்தம்பித்து நிற்பது போலக் காணப்பட்டது.

இப்போது நான் அந்த வரலாற்றைத் திருப்பிச் சொல்லும்போது, வார்த்தைகள் உயிரற்றும் உணர்ச்சியற்றும் வருவது எனக்கே தெரிந்துதானிருக்கிறது. ஆனால், அவர்கள் மாற்றி மாற்றிக் கதை சொல்லி வந்த போது, ஒவ்வொரு சம்பவத்தையும் என் கண் முன்னால் நேரில் காண்பது போலவே இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றி அந்தத் தம்பதிகளில் ஒருவர் கூறியபோது, நான் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன். கதாபாத்திரங்கள் அனுபவித்த இன்பதுன்பங்களையெல்லாம் நானும் சேர்ந்து அனுபவித்தேன்.

இடையிடையே சில சந்தேகங்களும் கேள்விகளும் என் மனத்தில் உதித்துக் கொண்டு வந்தன. இந்தச் சுந்தர புருஷன் யார்? இவனுடைய காதலியான வனிதாமணி யார்? எப்போது இந்தத் தீவுக்கு இவர்கள் வந்தார்கள்? இவர்கள் தங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், இந்தப் பழைய காலக் கதையைச் சொல்லிவரும் காரணம் என்ன? அந்தக் கதைக்கும் இவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? அல்லது அக்கதைக்கும் இந்தத் தீவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்க முடியுமா? ‘புவனமோகினி’ என்ற பாண்டிய குமாரியின் பெயருக்கும் ‘மோகினித் தீவு’ என்னும் இத்தீவின் பெயருக்கும் பொருத்தம் உண்டா! இம்மாதிரியான கேள்விகளும் ஐயங்களும் அடிக்கடி தோன்றி வந்தன. ஆனால் அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டுச் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பெண்மணி மூச்சு விடுவதற்காகக் கதையை நிறுத்தினால், ஆடவன் கதையைத் தொடர்ந்து ஆரம்பித்து விடுகிறான். ஆடவன் சற்று நிறுத்தினால் பெண்மணி உடனே ஆரம்பித்து விடுகிறாள்.

இப்படி மாற்றி மாற்றி மூச்சுவிடாமல் சொல்லி வந்த போதிலும், அவர்கள் கதை சொன்ன முறையில் ஒரு ‘பாணி’ இருந்தது. ஒரு ‘உத்தி’ இருந்தது என்பதைக் கண்டு கொண்டேன். பாண்டிய குமாரிக்கு நிகழ்ந்த சம்பவங்கள், அவளுடைய ஆசாபாசங்கள், அவளுடைய உள்ளத்திலே நிகழ்ந்த போராட்டங்கள் இவற்றையெல்லாம் அந்த மோகினித்தீவின் அழகி கூறி வந்தாள். சோழநாட்டு இளவரசனைப் பற்றியும், அவனுடைய மனோ நிகழ்ச்சிகள், செய்த காரியங்கள் – இவற்றைப் பற்றியும், அந்த அழகியின் காதலன் சொல்லி வந்தான்.

இப்படிப் பங்குபோட்டுக் கொண்டு அவர்கள் கதை சொன்ன விசித்திர முறை எனக்கு ஒரு பக்கத்தில் வியப்பு அளித்துக் கொண்டு வந்தது. மற்றொரு பக்கத்தில் கதையை மேலே தெரிந்து கொள்ள ஆசை வளர்ந்து வந்தது.

பாண்டிய குமாரி போர்க்களத்துக்குப் போனாள் என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணி கதையை நிறுத்திய போது, வழக்கம் போல ஆடவன் குறுக்கிடாமலிருந்ததைக் கண்டேன். ஆனால், அந்த இடத்தில் என் மனதில் மேலே நடந்ததைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொங்கிற்று.

“போர்க்களத்திலே என்ன நடந்தது? யுத்தம் எப்படி நடந்தது? பாண்டிய குமாரி போரில் வெற்றி பெற்றாளா?” என்று பரபரப்புடன் கேட்டேன்.

என்னுடைய கேள்வியிலிருந்தும், குரலில் தொனித்த கவலையிலிருந்தும், அந்தத் தம்பதிகள் என்னுடைய அனுதாபம் புவனமோகினியின் பக்கந்தான் என்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இருவருடைய முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அந்தச் சுந்தரப் புருஷன் தன் நாயகியின் முகவாயைச் சற்றுத் தூக்கிப் பிடித்து, நிலா வெளிச்சத்தில் அவளுடைய முகத்தை உற்று நோக்கினான்.

“கண்மணி! பார்த்தாயா? இந்த மனிதர் பாண்டிய குமாரியைப் பற்றி எவ்வளவு கவலை கொண்டு விட்டார் என்று தெரிகின்றதல்லவா! இவருடைய நிலைமையே இப்படி இருக்கும்போது சோழ நாட்டு வீரர்கள் போர் முனையில் புவன மோகினியைப் பார்த்ததும், திணறித் திண்டாடிப் போய்விட்டதில் வியப்பு என்ன?” அவன் ஆசையோடு முகத்தைப் பிடித்திருந்த கையை, அந்தப் பெண்ணரசி மெதுவாய் அகற்றி விட்டு, “ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லாதீர்கள்!” என்றாள். பிறகு என்னைப் பார்த்துச் சொன்னாள்:-

“சோழநாட்டு வீரர்கள் ஒன்றும் திண்டாடிப் போகவில்லை. புவனமோகினிதான் திணறித் திண்டாடிப் போனாள். அந்தப் பேதைப் பெண் அது வரையில் போர்க்களம் என்பதையே பார்த்ததில்லை. அவளுக்கு யுத்த தந்திரம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அன்றுவரையில், அவள் ஆடல் பாடல்களிலும் வேடிக்கை விளையாட்டுகளிலும் கோயில் குளங்களுக்குப் போவதிலும் உல்லாசமாகக் காலங்கழித்து வந்தவள் தானே; திடீரென்று யுத்த களத்தில் கொண்டு போய் நிறுத்தியதும், அவளுக்குத் திக்கு திசை புரியவில்லை. பெரியவர்களுடைய புத்திமதியைக் கேட்காமல் வந்து விட்டதைக் குறித்து வருந்தினாள். அவள் போர்க்களத்துக்குச் செல்வதை மந்திரிகள், பிரதானிகள், மற்றப் படைத் தலைவர்களில் யாரும் விரும்பவில்லை. ஒற்றர் தலைவன் தினகரன் ‘அவள் போனால் நிச்சயம் தோல்விதான்!’ என்று சபதம் கூறினான். வயது முதிர்ந்த பெரியவர்கள், “அரசர் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கையில் பாண்டிய குமாரிக்குப் போர்க்களத்தில் ஏதாவது நேர்ந்துவிட்டால் பாண்டிய ராஜ்யம் என்ன ஆவது!” என்று கவலைப்பட்டார்கள். இவ்வளவு பேருடைய கருத்துக்கும் மாறாகவே, புவனமோகினி யுத்தகளத்துக்குப் புறப்பட்டுப் போனாள். அதற்குத் தூண்டுகோலாக அவளுடைய இதய அந்தரங்கத்தில் மறைந்து கிடந்த சக்தி என்னவென்பதை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். சிற்ப மாணவன் வேடம் பூண்டு வந்து, அவளை வஞ்சித்து விட்டுச் சென்ற சோழ ராஜகுமாரனைப் போர்க்களத்திலே நேருக்கு நேர் பார்க்கலாம் என்ற ஆசைதான். அந்தப் பாழும் விருப்பமே, அவளைப் போர்க்களத்தின் முன்னணியில் கொண்டு போய் நிறுத்தியது. ஒரு பெண் போர்க்கோலம் பூண்டு, பாண்டிய சைன்யத்தின் முன்னணியில் வந்து சண்டைக்கு ஆயத்தமாக நிற்பதைப் பார்த்துவிட்டுச் சோழ நாட்டு வீரர்கள் குலுங்கச் சிரித்தார்கள். வஞ்சக நெஞ்சங் கொண்ட சுகுமாரன், சோழர் படைக்குப் பின்னால் எங்கேயோ நின்று, தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்…”
இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் நாயகன் ஆத்திரத்துடன் குறுக்கிட்டுப் பேசினான்:- “இவள் சொல்லுவதை நீங்கள் நம்ப வேண்டாம். சோழ நாட்டு வீரர்கள் பாண்டிய குமாரியைப் பார்த்துச் சிரிக்கவில்லை. அவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள்! சுகுமாரன் பின்னால் நின்று தனக்குள் சிரித்துக் கொண்டிருக்கவும் இல்லை. அந்த அபாக்கியசாலி, தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த புவனமோகினியுடன் எதிர்த்து நின்று யுத்தம் செய்யும்படி ஆகிவிட்டதே என்று மனம் நொந்து வேதனைப்பட்டான். ஒருவரும் பாராத தனி இடத்தைத் தேடிச் சென்று கண்ணீர் வடித்தான். முதலில் சில நாள் அவன் போர்க்களத்தில் முன்னணிக்கே வரவில்லை. பாண்டிய குமாரியை நேருக்கு நேர் சந்திப்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான், அவன் பின்னால் நின்றான். ஆனால், சுகுமாரன் முன்னணிக்கு வர வேண்டிய அவசியம் சீக்கிரத்திலே ஏற்பட்டு விட்டது. பாண்டிய குமாரிக்கு யுத்த தந்திரம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லையென்று இவள் சொன்னாள் அல்லவா? அது என்னமோ உண்மைதான்! அதுவரையில், அவள் போர்க்களத்தையே பார்த்ததில்லை யென்பதும் மெய்தான். ஆனால் அவ்விதம் அவள் அதுவரை யுத்த களத்தைப் பாராமலிருந்ததே, அவளுக்கு மிக்க உதவியாய்ப் போய் விட்டது. போர் முறைகளைப் பற்றிய அவளுடைய அறியாமையே ஒரு மகத்தான யுத்த தந்திரம் ஆகிவிட்டது.

போர் முறைகள் தெரிந்தவர்கள் சாதாரணமாய்ப் போவதற்குத் தயங்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் பாண்டிய குமாரி சர்வ சாதாரணமாகப் போகலுற்றாள். பெண்களிடம் சாதாரணமாகக் காணமுடியாத நெஞ்சுத் துணிவையும் தைரியத்தையும் அவள் காட்டினாள். அந்தத் துணிச்சலும் தைரியமும் சிறந்த கவசங்களாகி, அவளைக் காத்தன. அவள் காட்டிய தீரம், பாண்டிய வீரர்களுக்கு அபரிமிதமான உற்சாகத்தை ஊட்டியது; போர்க்களத்தில் பாண்டிய குமாரி எந்தப் பக்கம் தோன்றினாலும், அந்தப் பக்கத்திலுள்ள பாண்டிய வீரர்கள், வீர கோஷத்தை எழுப்பிக் கொண்டு சோழர் படையின் பேரில் பாய்ந்தார்கள். அதற்கு மாறாகச் சோழ வீரர்களோ, புவனமோகினியைச் சற்றுத் தூரத்தில் கண்டதுமே வில்லையும் அம்பையும் வாளையும் வேலையும் கீழே போட்டு விட்டு, அந்த அழகுத் தெய்வத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

பயம் என்பதே அறியாமல், புவனமோகினி அங்குமிங்கும் சஞ்சரித்ததைப் பார்த்த சோழ நாட்டு வீரர்களில் பலர், மதுரை மீனாக்ஷி அம்மனே மானிடப் பெண் உருவம் எடுத்துப் பாண்டிய நாட்டைப் பாதுகாப்பதற்காக வந்திருக்கிறாள் என்று நம்பினார்கள். அவளைத் தூரத்தில் கண்டதும் சிலர் கையெடுத்துக் கும்பிட்டார்கள். சிலர் பயந்து பின் வாங்கி ஓடினார்கள். சிலர் பின் வாங்கி ஓடுவதற்கும் சக்தியில்லாமல் திகைத்துப் போய் நின்றார்கள். அப்படி நின்றவர்களைச் சிறை பிடிப்பது பாண்டிய வீரர்களுக்கு மிகவும் எளிதாய்ப் போய் விட்டது. இதையெல்லாம் அறிந்த உத்தம சோழர் மனம் கலங்கினார். சுகுமாரனை அழைத்து வரச் செய்து அவனுடைய கோழைத் தனத்தைக் குறித்து நிந்தனை செய்தார். “நீயே ஒரு பெண்ணுக்குப் பயந்து பின்னால் சென்று ஒளிந்து கொண்டால், மற்ற வீரர்கள் எப்படிப் போர் செய்வார்கள்?” என்று கேட்டார். “இப்படி அவமானத்துடன் தோல்வியடைந்து, சோழ குலத்துக்கு அழியாத அப கீர்த்தியை உண்டு பண்ணவா என்னைப் பாண்டியன் சிறையிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்தாய்? அதைக் காட்டிலும், நான் சிறைக் கூடத்திலேயே சாகும்படியாக விட்டிருக்கலாம்!” என்றார். அப்போது சுகுமாரன் தான் போர்க்களத்தின் முன்னணிக்குப் போய்த் தீர வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். சோர்ந்து போயிருந்த சோழ வீரர்களைத் திரட்டி உற்சாகப் படுத்தினான். தான் முன்னால் போர்க்களத்துக்குப் போவதாகவும், தன்னைப் பின் தொடர்ந்து மற்றவர்கள் வரும்படியும் சொன்னான். இளவரசனிடம் அளவில்லாத விசுவாசம் கொண்டிருந்த சோழ நாட்டு வீரர்கள், இனி ஊக்கத்துடன் யுத்தம் செய்வதாக அவனுக்கு வாக்களித்தார்கள். போர் முனையின் முன்னணிக்குப் போய், அவன் அநாவசியமான அபாயத்துக்கு உள்ளாகக் கூடாது என்று வருந்திக் கேட்டுக் கொண்டார்கள்.

அன்றைக்கே சோழர்களின் பக்கம் அதிர்ஷ்டம் திரும்பி விட்டதாகத் தோன்றியது. சோழ வீரர்கள் உற்சாகத்துடன் பாண்டியர் படையைத் தாக்குவதற்குப் போன சமயத்தில், பாண்டிய வீரர்கள் சோர்வுற்றிருந்தார்கள். பாண்டிய குமாரி போர்க்களத்திலிருந்து திடீரென்று மறைந்து விட்டதாகவும் தெரிய வந்தது.

எனவே, சோழர் படையின் தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாமல், பாண்டிய வீரர்கள் பின் வாங்கி ஓடத் தொடங்கினார்கள். அவ்விதம் ஓடியவர்களைத் துரத்தியடிப்பது சோழ வீரர்களுக்கு மிகவும் சுலபமாய்ப் போய்விட்டது. இதன் பேரில், உத்தம சோழரும் மற்றவர்களும் சுகுமாரனைக் கொண்டாடினார்கள். ஆனால் அவனுடைய மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. பாண்டிய குமாரியின் கதி என்ன ஆயிற்றோ என்று எண்ணி எண்ணி அவன் மனங் கலங்கினான்…”

Source

Previous articleRead Mohini Theevu Ch 7
Next articleRead Mohini Theevu Ch 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here