Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 16 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 16 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

76
0
Read Nithilavalli Part 1 Ch 16 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch16|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 16 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – அடையாளம்

அத்தியாயம் 16 :முத்துப்பல்லக்குப் புறப்பட்டது.

Read Nithilavalli Part 1 Ch16|Na.Parthasarathy|TamilNovel.in

இளையநம்பி தன் மனத்தில் எழுந்த ஐயப்பாட்டை அழகன் பெருமாளிடமோ, இரத்தினமாலையிடமோ கேட்பதற்கு முன் அங்கே அந்தக் கூடத்தில் சித்திர வேலைப் பாடுகள் அமைந்த அழகிய சிறிய முத்துப் பல்லக்கு ஒன்றைப் பணியாட்கள் தூக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். ஒளிவீசும் கொற்கை வெண்முத்துக்கள் பதிக்கப்பட்ட அந்தப் பல்லக்கு அங்கே வந்ததும் சந்திரோதயமே ஆகியிருப்பது போன்றதோர் அழகு வந்து பொருந்தியது.

குறளனிடமிருந்து செம்பஞ்சுக் குழம்பு பேழையையும், அதைத் தீட்டும் தந்த எழுதுகோலையும் பெற்றுக்கொண்டு ஒரு தோழிப் பெண் முதலில் பல்லக்கில் ஏறிக்கொண்டபின் இளைய நம்பியையும், அழகன் பெருமாளையும் நோக்கிப் புன்முறுவல் பூத்தபடி கணிகை இரத்தினமாலையும் அதில் ஏறிக்கொண்டாள்.

பல்லக்குப் புறப்படு முன் மீண்டும் வெளியே தலையை நீட்டி இளைய நம்பியைப் பார்த்து ஆளைக்கிறங்கச் செய்யும் ஓர் அரிய மோகனச் சிரிப்போடு, “ஐயா திருக்கானப் பேர்க்காரரே! இந்தக் கைகள் மேற்கொண்ட எந்தக் காரியங்களிலும் இதுவரை தோற்றதில்லை”–என்று தன் அழகிய கைகளைக் காண்பித்துச் சொன்னாள் இரத்தினமாலை. அதுகாறும் அவளைப் பொறுத்தவரை கல்லாயிருந்த அவன் மனமும் இப்போது மெல்ல இளகியிருக்க வேண்டும். அந்த நெகிழ்ச்சியின் அடையாளமாக முத்துப் பல்லக்கிலிருந்து தெரியும் அவளுடைய சுந்தர மதிமுகத்தை ஏறிட்டுப் பார்த்து, “புரிகிறது! உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி யோடு திரும்பி வா” என்றான் இளையநம்பி. ⁠முதல்முதலாக அந்த அழகிய வாலிபன், தன்னை மதித்துப் புரிந்து கொண்டு சுமுக பாவத்தில் முகமலர்ச்சியோடு பேசிய இச்சொற்கள் அந்தப் பேதைக் கணிகைக்கு உள்ளக் கிளர்ச்சியை அளித்திருக்கவேண்டும் என்பதை அவள் வதனம் சிவந்து நாணி மலர்ந்ததிலிருந்து அறிய முடிந்தது.

⁠தன்னுடைய பதற்றத்தில் அவளைத் தவறாக மதிப்பிட்டு விட்டதற்காக இளைய நம்பியின் மனம் கூசி நாணத் தொடங்கியிருந்தது இப்போது. அழகன் பெருமாளிடமும் குறளனிடமும் கூடக் கண்களாலேயே குறிப்புக் காட்டி விடை பெற்றாள் இரத்தினமாலை.

⁠முத்துப் பல்லக்கு வீதியில் படியிறங்குகிற வரை அவள் பார்வை இளைய நம்பியின் மேல்தான் இருந்தது. பல்லக்கு வீதியில் இறங்கி மறைந்ததும், இப்பால் தன்னுடைய பதற்றங்களையும், சினத்தையும் மறந்து பொறுத்துக்கொண்டதற்காக அழகன்பெருமாளைப் பாராட்டிச் சில சொற்கள் கூறினான் இளையநம்பி.

⁠”ஐயா! நீங்கள் இந்த உபசார வார்த்தைகளைக் கூறாவிட்டாலும், நானோ, இரத்தினமாலையோ, எங்களைச் சேர்ந்தவர்களோ, கடமைகளில் ஒரு சிறிதும் தளர்ச்சி அடைந்து விட மாட்டோம். பெரியவர் மதுராபதி வித்தகரிடம் கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்து விட்டுக் களப்பிரர் ஆட்சியை மாற்றுவதற்குச் சூளுரைத்திருக்கிறோம். அந்தச் சபதத்தை நாங்கள் ஒருகாலும் மறக்கவே முடியாது” என்றான் அழகன்பெருமாள்.

⁠மேலும் சில சொற்களால் அவனுடைய கடமை உணர்வைப் பாராட்டிய இளையநம்பி, தன்னுடைய ஐயப்பாட்டை மீண்டும் அவனிடம் வினவினான்:-

⁠“அழகன்பெருமாள் இப்போது இரத்தினமாலை தன் கைகளில் சங்கேத எழுத்துக்களின் வடிவில் சுமந்து செல்லும் இந்த வினாக்களுக்கு யார், எப்படி, எங்கிருந்து விடை தருவாா்கள்?” ⁠“கவலைப்படாதீர்கள் ஐயா! கைகளில் சுமந்து செல்லும் வினாக்களுக்கான விடைகளையும், விளக்கங்களையும் இரத்தினமாலை மீண்டும் தன் அழகிய கைகளிலேயே கொண்டு வருவாள். அவள் திரும்பி வந்ததும் நாம் யாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அதுவரை நாம் இங்கேயே காத்திருப்போம்” என்றான் அழகன்பெருமாள் மாறன்.

⁠இரத்தினமாலையின் திறமையைப் பற்றி அழகன் பெருமாள் எவ்வளவோ உறுதி கூறியும், இளையநம்பி அப்போதிருந்த மனநிலையில், அவனால் அதை முழுமையாக நம்ப இயலவில்லை.

⁠அரண்மனையில் போய் அவள் அந்தக் காரியத்தை முடித்துக் கொண்டு வர மேற்கொண்டிருக்கும் தந்திரோபாயத்தை அவன் வியந்தாலும், அவளது வெற்றி தோல்வியைப் பற்றி இப்போதே எதுவும் அநுமானம் செய்ய முடியாமலிருந்தது.

⁠“களப்பிரர்கள் பொல்லாதவர்கள்! கபடம் நிறைந்தவர்கள். சூழ்ச்சியில் பழுத்தவர்கள். கரந்தெழுத்து முறை அவர்களுக்குத் தெரிந்துவிட்டால், இரத்தினமாலையின் தலையே பறி போய் விடும்”– என்று தன் ஐயப்பாட்டைத் தெரிவித்தான் இளையநம்பி.

⁠ஆனால் ஒரே வாக்கியத்தில் திடமாக அதை மறுத்தான் அழகன்பொருமாள்:–

⁠“நீங்கள் இரத்தினமாலையின் திறமையைக் குறைத்துக் கணக்கிடுகிறீர்கள்…”

⁠“பெண்களின் திறமையை எப்போதுமே நான் பெரிதாகக் கணக்கிட விரும்பவில்லை…”

⁠“அப்படியானால், நீங்கள் பிறர் திறமையையே கணக்கிட விரும்பவில்லை என்றுதான் இதற்கு அர்த்தம் கொள்ளமுடியும்.”

⁠“முத்துப் பல்லக்கில் ஆடல்பாடல்களின் பெயரால் அலங்காரமாக அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகும்

பெண்ணை அப்படிப் புறப்பட்டுப் போவதற்காகவே திறமைசாலி என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி என்னை வற்புறுத்துகிறாயா அழகன் பெருமாள்?”

“நான் எதையும் வற்புறுத்தவில்லை ஐயா! நீங்களாகவே பின்னால் புரிந்து கொள்ளப்போவதை இப்போதே நான் எதற்காக வற்புறுத்த வேண்டும்?”

இளையநம்பி இதற்கு மறுமொழி சொல்லாமல் சிரித்தான். அழகன்பெருமாளோ விடாமல் மேலும் தொடர்ந்தான்:

“முத்துப் பல்லக்கும், ஆடல்பாடலும் உங்களுக்கு ஏனோ கோபமூட்டுகின்றன?”

“மிகச் சிறியவற்றிற்காக நான் எப்போதுமே கோபப் படமாட்டேன் அழகன்பெருமாள்–”

“கோபப்பட மாட்டேன் என்று நீங்கள் சொல்கிற தொனியிலேயே கோபம் தெரிகிறதே ஐயா!”

“அது உன் கற்பனை.”–

“கற்பனைக்கும் எனக்கும் வெகுதூரம்”– என்று அவனைப் போலவே தானும் பதில் சொன்னான் அழகன் பெருமாள். இவ்வளவில் அவர்கள் உரையாடல் மேலே தொடராமல் அப்படியே நின்று போயிற்று.

Previous articleRead Nithilavalli Part 1 Ch 15 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 1 Ch 17 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here