Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 17 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 17 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

130
0
Read Nithilavalli Part 1 Ch 17 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch17|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 17 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – அடையாளம்

அத்தியாயம் 17 :என்னென்னவோ உணர்வுகள்

Read Nithilavalli Part 1 Ch17|Na.Parthasarathy|TamilNovel.in

மதுரை நகரில் இருந்து மோகூர் திரும்பிய இரவில் செல்வப் பூங்கோதையின் கண்கள் உறங்கவே இல்லை. தந்தை வந்து ஆறுதல் கூறிய பின்பும் அவள் மனம் அமைதி அடையவில்லை. மதுராபதிவித்தகர் தன் தந்தையிடம் கூறியிருந்த அந்த வாக்கியங்களை எண்ணியே அவள் மனம் கலங்கிக்கொண்டிருந்தது. ⁠‘பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு வாழ்வின் சுகதுக்கங்களைப்பற்றிய கற்பனைகளே அதிகம். அவர்கள் கூறுகிறவற்றில் இந்தக் கற்பனைகளையும், உணர்ச்சிகளையும் கழித்துவிட்டே பதங்களுக்குப் பொருள் தேட வேண்டும்’–

⁠‘ஏன் அவர் இப்படிச் சொன்னார்’? என்று சிந்தித்து மாய்ந்து கொண்டிருந்தாள் அவள். அறிவும், நல்லது கெட்டது பிரித்து உணரும் மனப்பக்குவமும், வளராமல் அறியாப் பருவத்துப் பேதையாகவே தான் இருந்திருக்கலாகாதா என்று தோன்றியது அவளுக்கு. ஒரு விதத்தில் நினைத்துப் பார்த்தால், அறிவினால் சந்தேகங்களும், கவலைகளும், பயங்களுமே வளர்கின்றன. குழந்தைப் பருவத்தின் அறியாமைகளும் வியப்புக்களும் அப்படி அப்படியே தங்கிவிடும் ஒரு வளராத மனம் வேண்டும் போல் இப்போது உடனே உணர்ந்தாள் அவள். மோகூருக்கும், மதுரை மாநகருக்கும் நடுவே பல காததுாரம் நீண்டு பெருகி விட்டது போல், தாப உணர்வால் தவித்தது அவள் உள்ளம். தானும் தன் மனமுமே உலகில் தனியாக விடப்பட்டது போல் உணர்ந்தாள் அவள்.

⁠‘பெண்கள் உணர்ச்சி மயமானவர்களாமே, உணர்ச்சி மயமானவர்கள்! உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்க்கையில் பின் என்னதான் இருக்கிறது? சுகம் – துக்கம், கண்ணீர் – சிரிப்பு, எல்லாமே உணர்ச்சிகளின் அடையாளங்கள்தாமே? உணர்ச்சிகள் இல்லாமல் இவை, எல்லாம் ஏது? இவை எல்லாம் இல்லாமல் வாழ்க்கைதான் ஏது? அவருடைய உயரத்திலிருந்து பார்க்கும்போது வேண்டுமானால் உணர்ச்சிகள் சிறுமையுடையனவாக அவருக்குத் தோன்றலாம். அதற்காக எல்லாருக்குமே உணர்ச்சிகளும், கற்பனைகளும் இல்லாமலே போய் விட முடியுமா?’ என்று எண்ணினாள் திருமோகூர்ப் பெரியகாராளர் மகள் செல்வப் பூங்கோதை. அவிட்ட நாள் விழாவுக்காக, மதுரைக்குப் போய் விட்டுத் திரும்பிய இரவை உறக்கமின்றியே கழித்ததால், இரவும் வைகறையும் அவளைப் பொறுத்தவரை வேறுபாடின்றியே இருந்தன. உறங்காத காரணத்தால், கழிந்து போன ஓர் இரவே ஒராயிரம் இரவுகளின் நீளத்தோடு மெல்ல மெல்ல நகர்ந்து போனாற் போலிருந்தது.

⁠மனத்தில் தாப மிகுதியினாலும், எல்லாரிலுமிருந்து பிரிந்து திடீரென்று தான் மட்டும் தனியாகி விட்டாற் போன்ற ஒரு பிரமையினாலும் விடிந்து வைகறை மலர்ந்த பின்னும் கூடச் சுற்றிலும் இருளே இருப்பது போல் உணர்ந்தாள் அவள். இதைக் கண்டு அவள் தாய் பதறிப் போனாள்:-

⁠“பெண்ணே! இதென்ன துயரக் கோலம்? நீ இரவெல்லாம் உறங்கவில்லை போலிருக்கிறதே? உன் கண்கள் ஏன் இப்படிக் கோவைப் பழங்களாகச் சிவந்திருக்கின்றன? கனவில் ஏதேனும் காணத் தகாதவற்றைக் கண்டு பயந்து கொண்டாயா? உன் கண்களையும் முகத்தையும் பார்த்தால் உறங்கினதாகவே தெரியாத போது, நீ கனவு எப்படிக் காண முடியும்? ஏன் இப்படி இருக்கிறாய்! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?”

⁠–தாய்க்கு என்ன மறுமொழி கூறுவது என்று புரியாமல் தவித்தாள் செல்வப் பூங்கோதை. ஆனால், அடுத்த விநாடியே தாயிடம் அவள் கேட்ட கேள்வியிலிருந்து தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று தன் தாயே அனுமானித்துக் கொள்ள இடங் கொடுத்து விட்டாள்:-

⁠“அம்மா! நேற்றிரவு வெள்ளியம்பலப் பகுதியில், ஒற்றன் என்று சந்தேகப்பட்டுக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படை வீரர்கள் யாரையோ சங்கிலியாற் பிணித்து இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தோமே; அது அந்தத் திருக்கானப்பேர்க்காரராக இருக்க முடியாதுதானே? என் மனம் அதை நினைத்தே கலங்கிக் கொண்டிருக்கிறது.”

⁠திருடப் பயன்படும் கன்னக்கோலைப் பிறர் திருடி விடாமல் ஒளிக்க முயலுகையில் பிடிபட்ட கள்வனைப் போல், எதை மறைக்க முயன்று கொண்டிருந்தாளோ, அதன் மூலமே தாயிடம் பிடிபட்டு விட்டாள் செல்வப்பூங்கோதை.  ⁠அவள் கூறியவற்றை எல்லாம் கேட்டு விட்டுச் சிரித்தபடியே அவள் முகத்தையும், கண்களில் தென்படும் உணர்வுகளையும் கூர்ந்து நோக்கினாள் தாய். பெண்ணின் கண்களில் தெரியும் நளினமும், மென்மையும் நிறைந்த நுண்ணுணர்வுகளை மிகவும் எளிமையாகப் புரிந்து கொண்டாள் அவள். இங்கிதமாகவும், நளினமாகவும் வினாவ வேண்டிய ஓர் உணர்வின் பிடியில் மகள் கட்டுண்டிருப்பது தாய்க்குப் புரிந்தது.

⁠“நன்றாயிருக்கிறது மகளே! இதற்காகவா விடிய விடிய உறக்கமின்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய் நீ! ஆண்மக்கள் மனவலிமை மட்டுமின்றி உடல் வலிமையும் உடையவர்கள். தங்களுக்கு ஏற்படும் அபாயங்களிலிருந்து மீளவும், தப்பவும் அவர்களுக்குத் தெரியும். வீரர்களைப் பற்றிப் பேதைகள் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன?”

⁠“பேதைகளின் கவலைகளையும், கண்ணீரையும் பின் தங்க விடாத வீரர்கள் இவ்வுலகில் எங்கேதான் இருக்கிறார்கள் அம்மா?”

⁠“ஒவ்வொன்றாய் நீ கேட்கிற கேள்விகளைப் பார்த்தால், உனக்கு மறுமொழி கூற என்னால் ஆகாது பெண்ணே? நேரமாகிறது. பொய்கைக் கரைக்கு நீராடப் போக வேண்டாமா? திருமோகூர்ப் பெரிய காராளர் வீட்டுப் பெண்கள் சூரியோதயத்துக்கு முன் நீராடி வீடு திரும்பி விடுவார்கள் என்று நற்பெயர் பெற்றிருப்பதைக் கெடுத்து விடாதே மகளே!” என்ற அவளையும் அழைத்துக் கொண்டு பொய்கைக் கரைக்கு நீராடப் புறப்பட்டாள் தாய்.

⁠பனியும், மெல்லிருளும் புலராத மருத நிலத்து வைகறையில், பசும் பயிர்ப் பரப்பிடையே குடங்களை ஏந்தியபடி நீராடச் சென்றார்கள் அவர்கள். நீராடச் செல்லும்போது, பெரியகாராளர் மகள் ஏந்திச் சென்ற குடம் வெறுமையாயிருந்தது என்றாலும், மனம் நினைவுகளால் நிறைந்திருந்தது. பார்த்துப் பழகிய மறுநாளிலிருந்து தாயும், தந்தையும், சுற்றமும், உற்றாரும், வீடு வாயிலும் எல்லாம் மறந்து போகும்படி தன்னையே நினைக்கச் செய்துவிட்ட ஒரு சுந்தர இளைஞனைப் பற்றிய நினைவுகளே அவள் மனத்தில் நிறைந்திருந்தன. ⁠கோழி கூவும் ஒலியும், காற்றின் குளிர்ச்சியும், நடந்து சென்ற வழியின் காலை நேரத்து அழகுகளும் பதியாத அவள் மனத்தில், ‘அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது’–என்று இதே வழியில் நடக்கும் போது, இளையநம்பி கூறிய அந்தப் பழைய சொற்கள் மட்டும் அழியாமற் பதிந்திருந்து நினைவும் வந்தன. அது தொடர்பாக அவன் பேசியிருந்த சாதுரியமான பேச்சுகளும் நினைவு வந்தன. பொய்கைக்கரையை அடைந்ததும் முதலில் தாய்தான் நீராடினாள். தாய் நீராடிக் கொண்டிருந்த அந்த வேளையில், ஆவல் மிகுதியால் செல்வப் பூங்கோதை ஒரு காரியம் செய்தாள். பொய்கைக்கரை அலை ஓரமாக ஈர மணலில் கூடல் இழைத்துப்[1] பார்க்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. தன் நினைவில் இருக்கும் இனிய எண்ணங்கள் கை கூடுமா, கூடாதா என்று அறியும் ஆசையோடு, தியானம் செய்யும் போது மூடிக் கொள்வது போல் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலால் மணலில் அழுத்திக் கோடு இழுத்தாள். தொடங்கிய இடத்திற்குப் பொருந்தும்படி, தான் இழுத்த கோடு வட்ட வடிவமாக வந்து முடிய வேண்டுமே என்று மனம் வேகமாக அடித்துக் கொண்டது. அந்தக் கோட்டை இழுத்து முடிப்பதற்குள் அவள் அடைந்த பதற்றமும், பரபரப்பும் சொல்லி முடியாது. தொடங்கிய கோடு வட்டமாக முடிய வேண்டுமானால், சிறிதும் விலகாமல் தொடங்கிய இடத்திலேயே வந்து முடிய வேண்டும். அப்படி முடிந்த வட்டம் நிறைவேறினால்தான், எண்ணம் கைகூடும். எனவே, வட்டம் கூடியிருக்கிறதா என்பதைக் கோடு வரைந்து முடித்த பின்பே கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.

⁠விரலால் கோட்டை வரைந்து முடித்து விட்டு அவள் கண்களைத் திறந்து பார்க்கவும், அதே நேரத்தில் அவளுடைய தாய் நீர்ப்பரப்பில் அழுந்த முழுகியதனால் உண்டான பெரிய

அலை ஒன்று வந்து கரை ஓரத்து மணற்பரப்பை மூடிக்கோடுகளை அழிக்கவும் இணையாக இருந்தது. அலை செய்த அழிவு வேலையால் வட்டம் பொருத்தமாக இணைந்திருந்ததா, இல்லையா என்பதையே அவள் கண்டறிய முடியாமல் போயிற்று. அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.

கண்களை மூடிக் கொண்டு மீண்டும் விரைந்து கோட்டைத் தொடங்கிச் சுழித்து வட்டம் வரைந்தாள். மீண்டும் முன் நேர்ந்தபடியே நேர்ந்தது. அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. வாய்விட்டு அழவும் முடியவில்லை. அந்தப் பொய்கை, அதிலே மூழ்கி நீராடிக் கொண்டிருந்த தாய், அதன் கரைகள், அதில் பூத்திருந்த நீர்ப்பூக்கள், கீழ்வானத்தின் சிவப்பு – எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் காரணம் புரியாது எதற்காகவோ சினம் கொண்டாள் அவள். அந்தச் சினத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

தான் கண்ணீர் சிந்தி அழுவதைத் தாய் பார்த்துவிடக் கூடாதே என்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தாள் அவள். நினைத்தது கை கூடுமா கூடாதா என்று கூடலிழைத்து அறிய முயன்ற தன் அற்ப ஆவலும் நிறைவேறாது போய் விட்டதே என்று தவித்து வருந்தியது அவள் மனம். நீராடி வீடு திரும்பும்போதும் தன்னுடைய அந்த ஏமாற்றத்தைத் தாய்க்கு மறைத்து விடவே முயன்றாள் அவள். தாய்க்கும் தெரியாமல் மறைக்க ஓர் அந்தரங்கம் வாழ்வில் தனக்குக்கிடைக்க முடியும் என்பதைச் சில நாட்களுக்கு முன் அவளே நம்பியிருக்க மாட்டாள். இப்போது அந்த அதிசயம் அவள் வாழ்விலேயே நடந்து விட்டது. தாயிடமும் பங்கிட்டுக் கொள்ள முடியாத அந்தரங்கம் ஒரு பருவத்தில் ஒரு நட்பைப் பொறுத்து ஒவ்வோர் இளம் பெண்ணுக்கும் உண்டு என்பதே முதல் முதலாக இன்றுதான் செல்வப் பூங்கோதைக்குப் புரிந்தது.

மகளிர் அறியும் ஓர் ஆருடம்.

Previous articleRead Nithilavalli Part 1 Ch 16 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 1 Ch 18 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here