Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 23 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 23 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

80
0
Read Nithilavalli Part 1 Ch 23 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch23|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 23 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – அடையாளம்

அத்தியாயம் 23 : தென்னவன் மாறன்

Read Nithilavalli Part 1 Ch23|Na.Parthasarathy|TamilNovel.in

தன் உள்ளங்கையை வாளால் கீறி நேர்கோடாகப் பொங்கி மேலெழும் இரத்தத்தைக் காண்பித்து, “ஐயா! இந்த உடலில் ஓடுவது பாண்டிய மரபின் குருதிதான் என்பதைப் போர்க் களத்தில் நிரூபிக்க வேண்டிய நாள் தொலைவில் இல்லை” என்று குருதி பொங்கும் கையை முன்னால் நீட்டி அவரிடம் சூளுரைத்துக் கொண்டிருந்தான் தென்னவன் மாறன்.

⁠திடீரென்று அவன் இருந்தாற் போலிருந்து வாளை உருவியதால் என்னவோ ஏதோ என்ற அருகில் ஓடி வந்திருந்த மல்லன், இப்போது அவர்கள் உரையாடலை நன்றாகவே கேட்க முடிந்தது.

⁠“பகைவனைக் கருவறுத்து நிர்மூலமாக்கும் கனலை உள்ளேயே வளர்த்து வருகிற எந்தச் சாதுரியமுள்ளவனும், அந்தக் கனலின் வேர்வையைக் கூடத் தன் புற உடலில் தெரிய விடக் கூடாது. காலம் கணிகிறவரை நாம் எதற்காக வேர்க்கிறோம் என்பதைக் கூட நம் எதிரிகள் அறியலாகாது. நீயோ இரத்தத்தையே கீறிக் காண்பிக்கிறாய்.”

⁠“உங்களிடம் தான் அதைக் காண்பிக்கிறேன். எதிரியிடமில்லை…”

⁠“ஓர் எதிரியைச் சந்திக்கும்போதும் இதே உணர்ச்சி வேகம் உனக்கு வர முடியாதென்பது என்ன உறுதி? நீ மான்கள் அஞ்சி ஓடும் புலித்தோல் அங்கியைத் தரித்திருக்கிறாய்! மனிதர்கள் ஐயுறவு கொள்ளும்படி வாளை உருவிக் காட்டுகிறாய். இதுவே உன்னைக் களப்பிரர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும். தென்னவன் சிறுமலையில் ஒருவன் புலித்தோல் அங்கியணிவது இயல்பு. இங்கே இந்த மருத நிலத்து ஊரிலும், நாகரிகமான கோநகரிலும் இதை மருண்டு போய்த் தான் பார்ப்பார்கள். நீ பெரிய வீரன் என்பதிலோ, உடல் வலிமையுள்ள பலவான் என்பதிலோ நான் கருத்து வேறுபடவில்லை. ஆனால், உன்னுடைய உரத்த குரலும், வஞ்சகமில்லாமல் உடனே விருப்பு வெறுப்புகளையும், கோப தாபங்களையும் காட்டிவிடும் வெள்ளைத் தன்மையுமே உன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்றுதான் கலங்குகிறேன்.”

⁠தென்னவன் மாறன் இதற்கு மறுமொழி எதுவும் கூற முடியவில்லை. குனிந்த தலை நிமிராமல் பெரியவரின் எதிரே நின்றான் அவன். எதிரே அவன் நிற்பதையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார் பெரியவர்.

⁠அவ்வாறு நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந்த பின்பு கூறலானாா்;

⁠“நீ சில நாட்களுக்கு இங்கேயே, நம்முடைய திருமோகூர்ப் பெரிய காராளரோடு தங்கியிரு! நான் மீண்டும் உன்னைக் கூப்பிட்டுச் சொல்லுகிற வரை தென்னவன் சிறுமலைக்கு நீ திரும்ப வேண்டாம்! கோநகருக்குள் போகவே கூடாது.”

⁠“உங்கள் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று கூறித் தென்னவன் மாறன் தலை வணங்கி விடை பெற இருந்த போது, தொலைவில் பெரிய காராளர் பரபரப்பாக வருவது தெரிந்தது.

⁠அங்கிருந்த மூவருமே அவருடைய எதிர்பாராத வருகையால் கவரப்பட்டார்கள். காராளர் அப்போது தன்னைத் தேடிவருகிற காரியம் புதிதாக வந்திருக்கும் தென்னவன் மாறன் முன்னிலையில் வெளிப்பட வேண்டாம் என்று கருதிய மதுராபதி வித்தகர், “மல்லா! இவனை அழைத்துக் கொண்டு நீ காராளர் திரு மாளிகைக்குப் போ! காராளர் என்னிடம் பேசிவிட்டுச் சிறிது நேரத்தில் அங்கு வந்து உங்களோடு சேர்ந்து கொள்வார்” என்று சொல்லி அவர்களிருவரையும் அப்போது அங்கிருந்து மெல்லத் தவிர்த்து அனுப்பினார்.

⁠அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்த வேளை. மேற்கு வானம் பொன் மேகங்களாற் பொலியத் தொடங்கியிருந்தது. பெரியவரைத் தேடி வந்திருந்த காராளர் வழியில், தன் எதிரே திரும்பிக் கொண்டிருந்த மல்லனையும், தென்னவன் மாறனையும், “நீங்கள் இருவரும் சிறிது தொலைவு போவதற்குள் நான் பின்னாலேயே வந்து விடுவேன்” என்ற சொற்களுடன் சந்தித்து விடை கொடுத்து அனுப்பினார். அவர்களும் மேலே நடந்தார்கள். காராளர் அருகே வந்ததும் பெரியவருக்கு எதிரே தயங்கி நின்றார்.

⁠“என்ன நடந்தது?”

⁠“நேற்றிரவும், இன்று காலையிலும் இரண்டு ஒற்றர்கள் பிடிபட்டதன் காரணமாக, வெள்ளியம்பலப் பகுதியிலும் பிற பகுதியிலும் அவிட்ட நாள் விழாவுக்காக வந்திருந்த யாத்திரிகர்களை வெளியேற்றிவிட்டு, மிகவும் பதற்றமான நிலையில் நண்பகலிலேயே களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விட்டார்களாம்.”

⁠“இரவு உங்கள் செல்வப் பூங்கோதை யாரோ ஒற்றன் வெள்ளியம்பலத்தருகே பிடிபட்டதாகச் சொன்ன போதே நான் இதை எதிர்பார்த்தேன். உப வனத்திலுள்ள நம்மவர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்களா?”

⁠“யானைப் பாகன் அந்துவன் காலைவரை அவர்கள் பாதுகாப்பைப் பற்றி உறுதி கூறியனுப்பியிருக்கிறான். பகலுக்கு மேல்தான் கோட்டை வாயில்கள் அடைக்கப் பட்டிருக்கின்றன.”

⁠“பிடிபட்டிருக்கும் அந்த இருவர் மூலம், நம்மவர்கள் பல்லாயிரக் கணக்கில் யாத்திரிகர்கள் என்ற பெயரில் ஓர் உட்பூசலை எழுப்பும் நோக்குடன் கோ நகருக்குள் வந்திருந்தார்கள் என்ற இரகசியம் வெளிப்படலாம் என்னும் கவலை உங்களுக்கு இருக்கிறதா?”

⁠“அறவே இல்லை. சித்திரவதையே செய்தாலும் நம்மவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கத் துணியவும் மாட்டார்கள்.”

⁠“இப்படி இந்த அவிட்ட நாள் விழாவன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஓர் உட்பூசலுக்கு முயலும் நோக்குடன் நம்மவர்கள் ஆயிரக் கணக்கில் அகநகரில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நாம் இளையநம்பியிடம் கூடச் சொல்லியனுப்பாதது நல்லதுதான்!”

“அழகன் பெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் அது தெரிந்திருக்கும்.”

“என் கட்டளைகளை ஒரு மாத்திரை ஒலி கூட மிகை யாகவோ, குறைவாகவோ புரிந்து கொள்ளாமல் சரியாகப்புரிந்து கொள்கிறவன் அவன்! அவனிடமிருந்து பிறர் யாரும் அறிந்திருக்க முடியாது.”

“பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா! இது மாலையில் தெரிந்த செய்தி. இரவில் மேலும் தெளிவாகத் தெரியும். அவற்றையும் தெரிந்து கொண்டு நீங்கள் உலாவப் புறப்படு முன் மீண்டும் வருகிறேன்.”

“வரும்போது நீங்கள் மட்டும் தனியாகவே வாருங்கள் காராளரே! என் குறிப்புப் புரியாமல் அந்தத் தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானையும், உங்களோடு கூப்பிட்டுக் கொண்டு வந்து விடாதீர்கள்.”

“உங்கள் குறிப்பு எனக்குத் தெரியும்! நான் தனியாகவே வருவேன் என்பதை நீங்கள் நம்பலாம்” என்று காராளர் பெரியவருக்கு உறுதி கூறிவிட்டுப் புறப்பட்டார்.

மீண்டும் அவர் தன் மாளிகைக்குத் திரும்பியபோது செல்வப் பூங்கோதை, தென்னவன் மாறனுக்கும் மல்லனுக்கும் நெய் மணம் கமழும் தேன்குழல்களைக் கொடுத்து உண்ணச் சொல்லி உபசரித்துக் கொண்டிருந்தாள்.

“இவர் தேன் குழலைக் கடித்துத் தின்னும் ஒலி மதுரை வரை கேட்கும் போலிருக்கிறதே அம்மா!” என்று தென்னவன் மாறனைச் சுட்டிக் காட்டிக் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார் காராளர்.

“என்ன செய்வது? களப்பிரர்களை நினைத்துக் கொண்டு தேன்குழல் தின்றால்கூடப் பல்லை நற நற வென்று தான் கடிக்க வேண்டியிருக்கிறது…” என்றான் தென்னவன் மாறன். மல்லனும், செல்வப் பூங்கோதையும், காராளரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

Previous articleRead Nithilavalli Part 1 Ch 22 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 1 Ch 24 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here