Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 24 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 24 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

94
0
Read Nithilavalli Part 1 Ch 24 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch24|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 24 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – அடையாளம்

அத்தியாயம் 24 : மறுமொழி வந்தது

Read Nithilavalli Part 1 Ch24|Na.Parthasarathy|TamilNovel.in

உறங்காமல் கண் விழித்திருந்து அந்த அலங்கார மயமான கணிகை மாளிகையில் இளையநம்பி முதலியவர்கள் காத்திருந்த இரவு அவர்கள் பொறுமையைச் சோதிப் பதாயிருந்தது. நேரம் ஆக ஆகப் புதுப் புதுச் சந்தேகங்கள் தோன்றின. இரவு முடியத் தொடங்கிக் காற்றும் சூழ்நிலையும் குளிர்ச்சி அடைகிற அளவு வைகறையும் நெருங்கிக் கொண்டிருந்தது.

அரண்மனைக்கு முத்துப் பல்லக்கிலே சென்ற கணிகை இரத்தினமாலையும் திரும்பவில்லை. கோட்டைவாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதனால் கணிகை மாளிகைக்கு வந்து சேரக்கூடும் என்று அழகன் பெருமாள் அதுமானம் செய்து உரைத்த உபவனத்து நண்பர்களும் அங்கு வந்து சேரவில்லை. இளம்பிள்ளை பயமறியாது என்பதுபோல் ‘அவர்களைத்தேடி நகருக்குள் புறப்படலாம்’- என்றுகூட இளையநம்பி முன் வந்தான். ஆனால் அழகன் பெருமாள்தான் அதற்கு இணங்கவில்லை.

“தெளிவாக முடிகிற நன்மைகளை நீங்களாகக் குழப்பி விடாதீர்கள்” என்று மறுத்தான் அவன்.

“விடிவதற்குள்ளேயே நமக்கு ஒளி பிறக்கும்” என்று மேலும் உறுதியாகவும் பிடிவாதமாகவும் சொன்னான் அவன். இளையநம்பிக்கு அவனுடைய உறுதி வியப்பளிப்பதாக இருந்தது. ஆயினும் அவன் பொறுமையாயிருந்தான்.

அழகன் பெருமாள் நம்பியபடியே நடந்தது. சிறிது, நேரத்தில் சந்தனம் அறைக்கும் அறையில் நிலவறையின் மறுபுறம் இருந்து கல் புரட்டப்படும் ஒலி வரவே குறளன், இளையநம்பி, அழகன் பெருமாள் மூவரும் அங்கே விரைந்தனர்.

சந்தனக்கல் விலகியதும் பிறவியிலேயே சிரிப்பு மாறாதயானைப்பாகன் அந்துவனின் முகம் தெரிந்தது அங்கே. அவன் ஒரே அவசரத்திலும் பரபரப்பிலும் இருந்தான். மேலே படியேறி வராமல் தலையை மட்டும் நீட்டியே அங்கிருந்து விஷயத்தைக் கூறத் தொடங்கினான் அவன்.

“உங்களுக்குச் சில செய்திகளைக் கூறி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே நான் வழக்கமாகத் திருமஞ்சனக் குடத்தோடு வைகைத் துறைக்குப் புறப்படும் நேரத்திற்குச் சில நாழிகைகள் முன்பாகவே இன்று காலையில் புறப்பட்டேன். இன்னும் சில நாட்களுக்கு நீங்கள் யாருமே உபவனத்துக்குத் திரும்ப வேண்டாம். உபவனமும் பூத பயங்கரப் படையின் கண்காணிப்பில் இருக்கிறது. திருமருத முன்துறையில் யானையை நிறுத்தி விட்டு உடன் வந்த பாகனிடம் நீராடி வருவதாய்ப் பொய் சொல்லிவிட்டு நீந்தியே உபவனக்கரையில் ஏறிப் பதுங்கிப் பதுங்கி மறைந்து நிலவறையில் நுழைந்து இங்கே ஓடி வருகிறேன். விரைந்து நான் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் மற்றவன் என்னைச் சந்தேகப்படுவான்.”

அவர்களும் அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு உடனே அவனைத் திரும்பிப் போக விட்டு விட்டார்கள். அவனுடைய கடமை உணர்வை எல்லாருமே பாராட்டித் தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டனர். அவனை அங்கே தாமதப் படுத்தும் ஒவ்வொரு கணமும் அவனுயிருக்கு அபாயம் தேடு வதாகும் என்று அவர்களுக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது. யானைப்பாகன் அந்துவன் ஒரு மின்னலைப் போல் வந்து தோன்றித் திரும்பிய பின், “இந்த மாறுபட்ட நிலைமைகளால் இரத்தினமாலை திரும்பவருவது பாதிக்கப் படுமா?” என்று அழகன் பெருமாளைக் கேட்டான் இளையநம்பி.

“நாம் இப்போது கவலைப்பட வேண்டியது உபவனத்திலிருந்து காலையில் நகருக்குள் வந்திருக்கும் நம்முடைய நண்பர்களைப் பற்றியதாக இருக்க வேண்டுமே அன்றி இரத்தினமாலையைப் பற்றியதாக இருக்க வேண்டிய தில்லை!” ⁠“ஏன்?”

⁠“அவள் உறுதியாகவும், பயன்படுகிற வகையிலும் திரும்பி வருவாள் என்பது சர்வ நிச்சயம்” என்று அழகன் பெருமாள் நம்பிக்கையாகத் தெரிவித்தான். ‘சூழ்நிலைகளால் எங்கும் வெளியேறிச் செல்ல முடியாதபடி சில நாட்கள் தானும் பிறரும் அந்தக் கணிகை மாளிகையிலேயே தங்க நேர்ந்திருப்பதால், இரத்தினமாலை உடனே திரும்பினாலும் தான் விரைந்து செய்யப் போவது என்ன?’ என்று எண்ணித் தனக்குத் தானே பொறுமையடைந்தான் இளையநம்பி. அந்த மாளிகைப் பெண்கள் உபசரிப்பதிலும், விருந்தினரைப் பேணுவதிலும் ஒரு கலையின் மெருகும், நளினமும் பெற்றுத் தேர்ந்தவர்களாக இருந்ததால், அங்கே ஒரு குறையும் தெரியாமல் இருக்க முடிந்தது.

⁠அங்கேயே வைகறை நீராடி முடிந்த இளையநம்பிக்கும், அழகன் பெருமாளுக்கும் பூசிக் கொள்வதற்கு நிறையச் சந்தனம் அரைத்துக் கொடுத்தான் குறளன்.

⁠“சந்தனம் பூசிக் கொள்ளும் மகிழ்ச்சியிலா இப்போது நாம் இருக்கிறோம்?” என்று அதை மறுத்த இளைய நம்பியிடம்

⁠“அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா! நம் குறளனால் ஒரு பணியும் செய்யாமல் வாளா இருக்க முடியாது. அவனுடைய சந்தனம் அரைக்கும் பணியை நமக்காக அவன் செய்திருக்கிறான். சந்தனத்தை வாங்கிப் பூசிக் கொள்ளுங்கள். நடக்க இருக்கும் காரியங்களைக் கூட மங்கல நிறைவுடையதாக்கி விடும் சக்தி பொதிகை மலைச் சந்தனத்துக்கு உண்டு ஐயா!” என்று பரிவோடு கூறினான் அழகன் பெருமாள், மனத்தை அதிற் செலுத்தும் சூழ்நிலை அப்போது இல்லை என்றாலும், அந்தச் சந்தன மணம் மாளிகையையே நிறைத்துக் கொண்டிருந்தது. இளையநம்பி தயங்குவது போலத் தயங்காமல், மார்பிலும், தோள்களிலும் அழகன் பெருமாள் சந்தனத்தை வாரி வாரிப் பூசிக் கொண்டான். அரைத்துக் கொண்டு வந்து அன்புடன் தருகிறவன் மனத்தை ஏமாற்ற விரும்பாமல் இளையநம்பியும் சிறிதளவு சந்தனத்தை ஏற்றுப் பூசிக் கொண்டான். குறளனோ, தானே முன்வந்து அவனுடைய பொன்நிற முன் கைகளில் சந்தனத்தைப் பூசி விடவே தொடங்கி விட்டான்.

⁠“இந்தச் சந்தனத்தைப் பூசு முன்பே, உங்கள் கைகள் இயல்பாகவே மணக்கின்றன ஐயா! இந்தச் சந்தனத்தின் நிறத்திற்கும், உங்கள் மேனி நிறத்திற்கும், நான் வேறுபாடு காண்பது முடியாத காரியமாயிருக்கிறது” -என்றெல்லாம் குறளன் புகழ்ந்த புகழ் வார்த்தைகள, இளையநம்பியை நாணப்படச் செய்தன. அழகன் பெருமாளும், இளைய நம்பியும், சந்தனக்கல் இருந்த அறையிலிருந்து மாளிகையின் கூடத்திற்கு வரவும், வெளிப்புற வாயிலில் முத்துப் பல்லக்கு வந்து சேரவும் ஒன்றாயிருந்தது. அழகன் பெருமாள் களிப்போடு கூறினான்:-

⁠“பார்த்தீர்களா! நம்முடைய புகழ் பெற்ற பொதிகை மலைச் சந்தனத்தைப் பூசிக் கொண்டால், நாம் எதிர் பார்க்கிற மங்கல நிகழ்ச்சிகள் உடனே நடைபெறும் என்று நான் கூறியது எவ்வளவு பொருத்தமாய் நிகழ்கிறது.”

⁠அப்போதுதான் துயிலெழுந்து வந்த மயில் போல் அழகாய்ப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்தாள் இரத்தின மாலை. அவர்கள் தன்னை எதிர்கொள்ளக் கண்டு, புன் முறுவல் பூத்து முக மலர்ந்தாள் அவள்.

⁠அழகு மின்னும் இளமூங்கிலாய்த் திரண்ட அவள் தோள்களையும், கைகளையுமே பார்க்கத் தொடங்கியிருந்த இளையநம்பி அந்த உள்ளங்கைகள் பளிங்கு போல் வெண்மையாயிருந்ததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தான். அழகன் பெருமாளுக்கும் ஏமாற்றமாயிருந்தது, சிலம்பொலி குலுங்கத் தென்றல் அசைந்து வருவது போல பணிப்பெண் பின் வர வந்து கொண்டிருந்த அவளை நோக்கி,

⁠“என்ன இது? நீ மறு மொழியோடு வருவாய் என்றல்லவா எதிர்பார்த்தேன், இரத்தினமாலை?” என்று வினாவினான் அழகன் பெருமாள்.

முதலில் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறத் தயங்கிய அவள் முகம் எதற்கோ நாணிச் சிவந்தது. சிறிது நேரத்திற்குப் பின்…

“நான் மறுமொழியோடு வரவில்லை என்பதை நீங்களாகவே எப்படி முடிவு செய்தீர்கள் அதற்குள்?” என்று அவள் அவர்கள் இருவரையும் திருப்பிக் கேட்டதும், புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு விழித்தார்கள் அவர்கள்.

Previous articleRead Nithilavalli Part 1 Ch 23 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 1 Ch 25 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here