Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 30 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 30 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

120
0
Read Nithilavalli Part 1 Ch 30 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch30|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 30 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – அடையாளம்

அத்தியாயம் 30 : சாகஸப் பேச்சு

Read Nithilavalli Part 1 Ch30|Na.Parthasarathy|TamilNovel.in

“நீங்கள் ஒப்புக் கொண்டால் இப்போதும்கூட நான் ஓர் உதவி செய்யமுடியும்!… இன்று மாலையிலேயே இருந்த வளமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபாட்டைச் செய்தபின் உங்களுக்காக யானைப் பாகன் அந்துவனைக் கண்டுவர முடியும்.”

“இப்போதுள்ள நிலையில் அது அபாயகரமானது”– என்றான் அழகன் பெருமாள்.

“நீண்ட நாட்களாக இங்கே வராததிலிருந்து அந்துவனைப் பற்றியே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அவனுக்கும் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்னவோ?” என்று ஐயத்தோடு கூறினான் இளையநம்பி. அதைக் கேட்டுக் கலீரென்று சிரித்தாள் இரத்தினமாலை. இளையநம்பி உடனே கடுமையாக அவளை நோக்கிக் கேட்டான்:

“ஏன் சிரிக்கிறாய்?”

ஒருகணம் தயங்கியபின் பருகிவிடுவது போலவும், ஆவல் நிறைந்து ததும்பும் தன் விழிகளின் ஓரங்களால் அவனுடைய முகத்தைப் பார்க்க முயன்றபடியே–

“அந்துவனைப் பற்றி நாம் இங்கிருந்து கவலைப் படுவது போல் நம்மைப் பற்றி அவனும் அங்கிருந்து கவலைப்படலாம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது”– என்றாள்.

⁠“அப்படியானால், அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடும் என்று நினைக்கவும் அவசியமில்லை என்கிறாயா நீ?”

⁠“சந்தேகமென்ன? நான் இப்போது சென்றாலும் யானைக் கொட்டாரத்தில் அவனைக் காண முடியும்!”

⁠“தெய்வ வழிபாட்டுக்குப் போகிற நீ என்ன காரணத்தோடு யானைக் கொட்டாரத்தில் போய் அவனிடம் பேசிக் கொண்டு நிற்க முடியும்?”

⁠“அது நான் படவேண்டிய கவலை. என்னால் முடியும் என்பதால்தான் நான் கவலைப்படாமல் போய்த் திரும்ப, முன் வருகிறேன்.”

⁠“இப்படி வெடுக்கென்று மறுமொழி கூறும்போதெல்லாம்தான் உன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது இரத்தினமாலை!”

⁠“ஆகா! நிறையக் கோபித்துக் கொள்ளுங்கள். எனக்கும் அது பிடிக்கிறது. திருக்கானப்பேர்க்காரர்கள் முகங்களில் புன்சிரிப்பை விடக் கோபம்தான் அழகாக இருக்கும் போல் தோன்றுகிறது.”

⁠“அப்படியானால் என் கோபத்திற்கு நீ பயப்பட மாட்டாய்! அல்லவா?”

⁠“ஆண்களின் கோபத்தை எப்படி வெற்றி கொள்வதென்கிற இரகசியம் எனக்குத் தெரியும்?”

⁠இதைச் சொல்லும்போது அவள் குரலில் தொனித்த இங்கிதமும், முகத்தில் ஒளிர்ந்த நாணமும், கண்களிலும் இதழ்களிலும் தோன்றி மறைந்த முறுவலும் இளைய நம்பிக்குப் புரிந்தன. அவள் ஒரு தேர்ந்த மந்திரவாதியின் சாகஸ்த்தோடு அவனை மயக்கினாள் அப்போது.

⁠காரணம் புரியாத வெறுப்போடு தொடங்கிய ஒரு நட்பு இப்போது இப்படிக் காரணம் புரியாத மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியிருந்தது. அவன் மாறியிருந்தான். அவள் மாற்றியிருந்தாள். அவன், அவளுடைய இதயத்தின் யாழ் ஒலியை இன்னும் நெருங்கிக் கேட்க முடியாதபடி அழகன் பெருமாளும், குறளனும், மாந்திரீகன் செங்கணானும் அருகில் இருந்தார்கள்.

⁠ஆயிரம் பேர் அருகிலிருந்தாலும், புரிகிறவனுக்கு மட்டும் புரிய வைக்கும் நயமான வார்த்தைகளில் பேசும் சாகஸம் அந்த இளம் கணிகையிடம் இருந்தது. சொற்களைக் கவியின் நயத்தோடு தொடுத்துத் தொடுத்து அனுப்புகிற வித்தையை அவள் கற்றிருப்பது போல் தோன்றியது. மனத்தினால் தங்களுக்கு இடையே ஏதோ புரிவது போலவும், நெருங்குவது போலவும் உணர்ந்தான் இளையநம்பி. ஒரு வெறுப்பின் முடிவு இவ்வளவு பெரிய பிரியமா என்று நினைத்த வேளையில், தான் சுலபமாகத் தோற்றது எப்போது என்று அவனுக்கே புரியவில்லை. தோற்றிருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. வென்றவள் மேல் சீறவோ, சினம் கொள்ளவோ முடியாமல் இருந்ததுதான் ஏனென்று அவனுக்கே தெரியவில்லை.

⁠அன்று மாலை அவள் இருந்த வளமுடையார் கோவிலுக்குச் சென்று வர அவர்கள் எல்லோரும் இணங்கினார்கள். அந்துவனைக் காணவும் அவனிடமிருந்து ஏதாவது தெரிந்தால் அதை அறிந்து வரவும் அவள் சென்று வருவதில் தவறில்லை என்றே இளையநம்பிக்கும் தோன்றியது இப்போது.

⁠இரத்தினமாலை தன் வலது கையில் பூக் குடலையோடு பணிப் பெண் பின் தொடரப் புறப்பட்ட போது–

⁠“இருந்த வளமுடைய பெருமாளிடம் இன்று என்ன வரம் வேண்டுவதாக உத்தேசமோ?” என்று அவளைக்கேட்டான் இளையநம்பி. அவள் அவனை ஏறிட்டுப் பார்த்து முக மலர்ந்தாள். பின்பு நிதானமாக மறுமொழி கூறினாள்:-

⁠“நேற்று வரை ‘நாட்டைக் களப்பிரர்களிடமிருந்து காப்பாற்று’ என்று வேண்டுவதைத் தவிர வேறு சொந்த வரம் எதற்கும் என்னிடம் விருப்பமின்றி இருந்தது. இன்று அதற்கும் அதிகமாகச் சொந்த முறையிலும் கூட ஒருவரம் வேண்டலாம் என்று தோன்றுகிறது.”

இதன் அர்த்தத்தை உள்ளூற உணர்ந்து அவன் புன்னகை பூத்தான்.

பல்லக்கில் ஏறுவதற்கு முன் அவனை அவள் கேட்டாள்:

“இன்றும் நான் திரும்பி வந்த பின்பு நீங்கள் என்னைக் கோபித்துக் கொள்வீர்கள். என் மாளிகையிலிருந்து உடனே வெளியேறி விடுவதாகப் பயமுறுத்துவீர்கள்.”

“உனக்கு ஏன் மீண்டும் அப்படி ஒரு கற்பனை?”

“கற்பனையில்லை-மெய்யாகவே நீங்கள் அப்படிக் கோபித்துக் கொண்டால்தான் நான் பாக்கியம் செய்தவளாவேன்…”

“அது எப்படி?”

“நீங்கள் கோபித்துக் கொண்டால்தான் இன்றும் உங்கள் பாதங்களை தீண்டிப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொள்ள நான் வாய்ப்புப் பெறுவேன். இல்லையானால் உங்களை நான் வேறெப்படி அருகில் நெருங்கவும் வணங்கவும் தீண்டவும் முடியும்?”

அவளுடைய இந்தச் சொற்கள் அவனை மிகவும் நெகிழச் செய்தன. ஒரு புதிய உணர்வின் சிலிர்ப்பில் இந்தச் சமர்ப்பணத்தை எப்படி எந்தச் சொற்களைக் கூறி உபசரித்துத் தனக்குள் ஏற்பதென்ற சிந்தனையில் ஓரிரு கணங்கள் அவனுக்குப் பொருத்தமான பதில்களே கிடைக்கவில்லை.

பல்லக்கில் ஏறுமுன் சாகஸமான சொற்களின் உரிமைக் காரியாகிய அவள் கூடச் சொற்களின் எல்லைக்கு அப்பால் போய் விழிகளில் நீர் மல்க இருப்பதை அவனும் கண்டான். அவளுடைய அந்தக் கண்ணீரைச் சொற்களால் உபசரிப்பதா, உணர்வினால் ஏற்பதா என முடிவு செய்யவே இயலாமல் சில கணங்கள் திகைத்தான் அவன்.

Previous articleRead Nithilavalli Part 1 Ch 29 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 1 Ch 31 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here