Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 38 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 38 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

100
0
Read Nithilavalli Part 1 Ch 38 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch38|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 38 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – அடையாளம்

அத்தியாயம் 38 : மனமும் நறுமணங்களும்

Read Nithilavalli Part 1 Ch 38 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

அப்பகுதியில் சந்தனக் கல்லின் மேல் குறளன் அறைத்துக் குவித்திருந்த சந்தனத்தின் வாசனையையும், திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப்பூங்கோதை தன் ஓலையை பிறர் அறியாமல் பாதுகாக்க, அவள் தன் மஞ்சத்தில் தலையணையில் வைத்துப் பாதுகாத்ததாலோ என்னவோ அவள் கூந்தலின் நறுமண வசீகரங்களின் வாசனையுமாக நுகர்ந்து கொண்டே அந்த ஓலையைப் படிக்கலானான் இளையநம்பி. பள்ளி எழுந்து நீராடி வந்த உற்சாகமும், காலை நேரத்தின் உல்லாசமும், அறையின் நறுமணமும், கைக்கு வந்திருந்த ஓலையின் சுகந்தமும் அவனை மயக்கிக் கொண்டிருந்தன. அந்தக் கணங்களில் எல்லாக் கவலைகளையும் மறந்து மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான் அவன். அவனைச் சூழ்ந்திருந்த நறுமணங்கள் அவன் மனத்தையும் குதூகலம் கொள்ள வைத்திருந்தன.

அவள் தன் ஓலையை இணைத்துக் கட்டியிருந்த பட்டுக் கயிறும் மணந்தது. அந்தப் பட்டுக்கயிற்றை எடுத்துப் பார்த்த போது அது பெண்கள் தங்கள் கூந்தலை முடிந்து கட்டும் வகைளைச் சேர்ந்த பட்டுக் கயிறாக இருப்பதைக் கண்டு அவன் மனத்துக்குள் நகைத்துக் கொண்டான்.

⁠அன்று காலையில் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்த இரத்தினமாலையின் அருகேயும் அப்படி ஒரு பட்டுக் கயிறு கிடந்ததும் நினைவு வந்தது அவனுக்கு.

⁠ஓலையின் வாசகங்களைப் படிக்குமுன் அந்தக் கூந்தல் பட்டுக் கயிற்றின், மனத்தைக் கிறங்கச் செய்யும் நறுமணங்களை நாசியருகே உணர்ந்தான் அவன்.

⁠முன்பு எப்போதோ தன்னோடு கற்ற ஒரு சாலை மாணவனாகிய திருக்கானப்பேர்ப் பித்தன் பாடிய ஒரு பாடல் இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தது. பூக்களைப் பார்த்து ஓர் இளம் பருவத்துக் கவி கேட்பது போல் அமைந்திருந்தது, அந்தப் பாடலின் கருத்து. மிக அழகிய அந்தக் கற்பனையை நினைத்தான் அவன்.

⁠“காலையில் மலர்ந்து மாலையில் வாடும் இவ்வுலகின் பூக்களே! உங்களில் யாருக்கு வாசனையும், தோற்றப் பொலிவும் அதிகம் என்று நீங்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டுப் பயனில்லை! உங்களில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவிதமான வாசனையும், ஒருவிதமான தோற்றப் பொலிவும்தான் உண்டு. ஆனால் உங்களில் அனைவரின் வாசனைகளும், அனைவரின் தோற்றப் பொலிவும் ஒரே வடிவத்திற் சேர்ந்தே அமைந்திருக்குமானால், அந்த வடிவத்திற்கு நீங்கள் அனைவரும் தோற்றுப் போக வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு வடிவத்தைப் பற்றி இன்று எனக்குத் தெரியும்.

⁠உங்களில் மல்லிகைப் பூவுக்கு மல்லிகையின் வாசனை மட்டும் தான் உண்டு. தாழம்பூவுக்குத் தாழம்பூவின் வாசனை தான் உண்டு. சண்பகப் பூவுக்குச் சண்பகப் பூவின் வாசனை தான் உண்டு. பித்திகைப் பூவுக்கு அந்த வாசனை மட்டும்தான் உண்டு. நான் காதலிக்கும் பெண்ணின் கூந்தலிலோ, அத்தனை பூக்களின் வாசனையையும் ஒரு சேர நுகர முடிகிறது. அவளுடைய தோற்றத்திலோ அத்தனை பூக்களின் பொலிவையும் ஒருசேரக் காண முடிகிறது. அவளோ முகத்தைத் தாமரைப் பூவாகவும், கண்களைக் குவளைப் பூக்களாகவும், இதழைச் செம்முருக்கம் பூவாகவும், நாசியை எட்பூவாகவும், கைவிரல்களைக் காந்தள்பூக்களாவும் காட்டி, ஆயிரம் பூக்களின் அழகும் ஒன்று சேர்ந்த ஒரு பெரும் பூவாக வந்து என்னைக் கவருகிறாள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணின் வடிவிலும், வாசனைகளிலும் தோற்றுப் போய் மானம் இழந்த வேதனை தாங்காமல் அல்லவா, நீங்கள் ஒவ்வொரு பெண்ணின் கூந்தலிலும் வாழை நாரினால் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கி வாடுகிறீர்கள்?

⁠உங்களில் சில மலர்கள் பெண்களில் கை பட்டாலே மலர்ந்து விடும் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. உங்களை விட அழகும் மணமும் உள்ளவர்கள் உங்களைத் தொடப் போகிறார்களே என்று கூசி நாணி நீங்கள் தோற்பதைத்தானே அது காட்டுகிறது?’ என்று இளமையில் திருக்கானப்பேர்ப் பித்தன் காதல் மயக்கத்தில் அழகாகக் கற்பனை செய்திருக்கும் ஒரு கவிதையின் கருத்தை இளையநம்பி இப்போது நினைவு கூர்ந்தான்.

⁠அவள் அனுப்பியிருந்த அந்தக் கற்றையில், மூன்று ஓலைகள் சுவடி போல் இணைக்கப்பட்டிருந்தன. எழுத்துக்கள் ஓலையில் முத்து முத்தாகப் பதிந்திருந்த காரணத்தால், ஏட்டில் எழுதும் வழக்கமும், பயிற்சியும் அவளுக்கு நிறைய இருக்க வேண்டும் என்று அவனால் உய்த்துணர்ந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு அவள் தீட்டிய மடல் பணிவாகத் தொடங்கியது.

⁠‘திருக்கானப்பேர் நம்பியின் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்கி, அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடல் தங்களை நலத்தோடும் உறவோடும் காணட்டும்.

⁠ஒருவேளை இந்தப் பேதையைத் தாங்கள் தங்களுடைய பல்வேறு அரச கருமங்களுக்கு நடுவே மறந்து போயிருந்தாலும் இருக்கலாம். நினைப்பதும், மறப்பதும் ஆண்களுக்குச் சுலபமான காரியங்கள். என்னைப் போல பேதைப் பெண் களுக்கு ஒன்றை நம்பிக்கையோடு நினைத்து விட்டால், அப்புறம் மறக்க முடிவதில்லை. எங்களை அறவே மறந்து போய் விடுகிறவர்களைக் கூட நாங்கள் மறக்க முடிவதில்லை. இதனால் எல்லாம்தான் பெண்களாகிய எங்களைப் பேதைகள் என்று சொல்லியிருக்கிறார்களோ என்னவோ?

⁠மதுரை மாநகரில் தங்களைக் கொண்டு வந்து விட்டு விட்டுத் திரும்பிய நாளிலிருந்து இந்தப் பேதைக்கு ஒவ்வொரு கணமும் உங்கள் நினைவுதான். என்னிடம் நேர்ந்து வரும் சுபாவ மாறுதல்களை இப்போது என் தாய் கூடக் கவனித்து என்னை வினவுகிற அளவு, உங்கள் ஞாபகம் என்னைப் பித்துப் பிடித்தவள் போல் ஆக்கி விட்டது. ‘பூப்போல் பொதிந்து கொண்டு செல்வது’ என்று வசனம் சொல்லுவார்கள். நாங்களோ உங்களைப் பூக்களிலேயே பொதிந்து கொண்டு போய்க் கோநகருக்குள் சேர்த்தோம்.

⁠உங்களை இருந்த வளமுடையார் கோயில் நந்தவனத்தில் விட்டுவிட்டு ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு நானும் என் தாயும் திரும்புகிற வழியில் பூத பயங்கரப் படையினர் யாரையோ ஒற்றன் என்று சிறைப்பிடித்துச் செல்வதை வழியிலேயே கண்டோம். அந்த வினாடி முதல் உங்கள் நலனுக்காக நான் வேண்டிக் கொள்ளாத தெய்வங்கள் இல்லை. இங்கு எங்கள் வீட்டிற்கு நீங்கள் விருந்துண்ண வந்தபோது, என் தந்தையிடம் ‘இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே’ என்று குறும்பாகச் சிரித்தபடியே வினாவியிருந்தீர்கள்.

⁠அப்படி நான் தெய்வங்களை எல்லாம் வேண்டியது அன்று எப்படியோ? இன்று மெய்யாகவும் கண் கூடாகவும் ஆகியிருக்கிறது. கோநகருக்குள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் உங்களைக் காக்க வேண்டும் என்று இப்போது நான் எல்லாத் தெய்வங்களையும் எப்போதும் வேண்டிய வண்ணமிருக்கிறேன். ஏற்கெனவே நான் கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்குப் போடத் தொடங்கியதை ஒரு மண்டலம் முடிந்த பின்பும் நிறுத்தவில்லை. உங்களுக்காக வேண்டிக் கொண்டு தொடர்ந்து விளக்கேற்றிக் கொண்டு வருகிறேன்.

⁠மாலை மயங்கிய வேளையில் திருமோகூர் வீதியில் நான் கொற்றவை கோயிலுக்கு விளக்கேற்றச் சென்று கொண்டிருந்த போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்து வழி கேட்டீர்கள்! ‘உங்களிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்கவில்லையே, உங்களுக்கு என்ன மறுமொழி சொல்லுவது!’ என்று நான் மறுமொழி கூறத் தயங்கிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே,

⁠‘அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது’ என்று என் வாயைப் பேசத் தூண்டினீர்கள். அன்று நான் ஊமையாயில்லை. உடனே துடிப்புடன் உங்களுக்கு விரைந்து கடுமையான சொற்களால் மறுமொழி கூறினேன். ஆனால் என் அந்தரங்கத்தைப் பேசுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் யாருமில்லாத காரணத்தால் இன்று, இப்போதுதான் ஏறக்குறைய நான் ஊமையைப் போலாகி விட்டேன். என்னை இப்படி ஆக்கியது யார் தெரியுமா? நீங்கள்தான்!

⁠இந்த மடலை உங்களுக்காக வரையும்போது என் ஏக்கத்தின் அளவைச் சொற்களால் உணர்த்த முடியாது. இந்த ஊரில் என் பருவத்துக்குச் சமவயதுள்ள தோழிகளிடம் பேசிப் பழகிக் கொண்டிருந்த நான், இப்பொழுதெல்லாம் அவர்களோடு பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போல் ஆகிவிட்டது. யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. எனக்கு நானே சிந்தித்து மாய்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் கண்களில் நீர் நெகிழப் பிரமை பிடித்தாற் போல் அப்படியே அமர்ந்து விடுகிறேன். என் கைகள் மெலிந்து வளைகள் கழன்று போய்ச் சோர்கின்றன. தோள்களும் மெலிந்து விட்டன. நான் இப்படி எல்லாம் வேதனைப் படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்னை நினைக்கிறீர்களா? என் வேதனைகளைப் புரிந்து கொள்கிறீர்களா? என் தாபங்களையும் தவிப்புக்களையும் கற்பனையிலாவது உங்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?

⁠இன்னொரு செய்தி! யாருக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் தங்கள் மேல் அடியாள் கொண்டிருக்கும் இந்தப் பிரேமையைப் பற்றியும், இந்த மடலைப் பற்றியும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மட்டும் தெரியவே வேண்டாம். நெகிழ்ந்த உணர்வுகளையும், மனிதர்களுக்கு இடையேயுள்ள ஆசாபாசங்களையும் அவர் அதிகம் பொருட்படுத்துவதில்லை. உணர்ச்சிகளை மதிக்க மாட்டார் அவர். இதனால் எனக்கு அவரிடமுள்ள பக்தியோ, மதிப்போ குறைந்து விட்டது என்று பொருளில்லை. கல்லின் மேல் விழும் பூக்களைப் போல் பிறருடைய மென்மையான உணர்வுகளைத் தன் சார்பால் கடுமையாகவே ஏற்று, வாடச் செய்யும் அவரது மன இறுக்கம்தான் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய இந்த அநுபவம் அவரைப் பொறுத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்படாமலும் போயிருக்கலாம். ஆனால் இது நம்மோடு இருக்கட்டும் என்பதற்காகவே இதனை இங்கே எழுதினேன். மறுபடி உங்களை எப்போது காணப் போகிறேனோ? என் கண்கள் அதற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றன. தவம் செய்து கொண்டிருக்கிறேன்.

⁠இந்த ஓலையை உங்களிடம் எப்படி அனுப்பப் போகிறேனோ தெரியவில்லை. இது உங்களிடம் வந்து சேருமுன் திருமோகூரிலும், கோநகரிலும் என்னென்ன மாறுதல்கள் நேருமோ? அதுவும் தெரியவில்லை. உங்கள் அன்பையும் அநுக்கிரகத்தையும் எதிர்பார்த்து இங்கு ஒரு பேதை ஒவ்வொரு கணமும் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும்…’-

⁠இப்பகுதியை அவன் படித்துக் கொண்டிருந்த போது மாளிகைப் பணிப் பெண் வந்து அவசரமாகக் கூப்பிடுவதாய்க் குறளன் உள்ளே வந்து தெரிவித்தான்.

⁠இளையநம்பி கையிலிருந்த ஓலைக் கற்றையைப் பார்த்தான். படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதமிருந்தது. அதை

அப்புறம் வந்து படிக்கலாம் என்ற எண்ணத்தில் எல்லா ஓலைகளையும் அப்படியே இடைக்கச்சையில் மறைத்துக் கொண்டு பணிப் பெண்ணோடு அவள் அழைத்துச் சென்றபடியே மாளிகையின் முன் வாயிற்பகுதிக்கு விரைந்தான் அவன்.

Previous articleRead Nithilavalli Part 1 Ch 37 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 1 Ch 39 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here