Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 40 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 40 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

56
0
Read Nithilavalli Part 1 Ch 40 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch40|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 40 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் - அடையாளம்

அத்தியாயம் 40 : மங்கலப் பொருள்

Read Nithilavalli Part 1 Ch 40 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

“நல்லடையாளச் சொல்லைக் கூற நாங்கள் ஒரு விநாடி காலந் தாழ்த்தியிருந்தால் எங்களைக் கொன்று நமனுலகுக்கு அனுப்பியிருப்பீர்கள் அல்லவா?” -என்று உள்ளே வந்ததும் கழற்சிங்கன் இளையநம்பியைக் கேட்டான்.

“இந்தப் பயம் உங்களுக்கு முன்பே இருந்திருந்தால் நீங்கள் பூதப்யங்கரப் படை வீரர்களைப் போன்ற மாறுவேடத்தில் இங்கு வந்திருக்கக்கூடாது”-என்று அதற்கு இளையநம்பியை முந்திக் கொண்டு இரத்தினமாலை மறுமொழி கூறினாள். அவர்களில், சாத்தன் அதற்கு விடை கூறினான்:-

“இந்த வேடத்தைத் தவிர, வேறு எந்த மாறு வேடத்தாலும் நாங்கள் உயிர் பிழைத்து இங்கே வந்து சேர்ந்திருக்க முடியாது.”

கோநகரிலேயே வேண்டிய நண்பர்கள் பலர் வீடுகளில் மறைந்து வாழ்ந்தது முதல், கடைசியாக இன்று கணிகை மாளிகை வந்து சேர்ந்தது வரை தாங்கள் பட்ட வேதனைகளை எல்லாம் காரி சொன்னான்.

“எப்படியோ ஆலவாய்ப்பெருமாள் அருளால் இங்கே வந்து சேர்ந்து விட்டீர்கள்! களப்பிரர்களிடம் சிறைப்பட்டு விட்ட நம்மவர்களான தென்னவன் மாறனையும், திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் விடுவிக்கும் பொறுப்பைப் பெரியவர் நம்மிடம் விட்டிருக்கிறார். இனி நாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்” -என்றான் அழகன் பெருமாள். அப்போது அந்த மூவரும் தேனூர் மாந்திரீகனைப் பற்றி விசாரிக்கவே, அவன் காயமுற்று வந்து அங்கு படுத்திருக்கும் நிலைமையை அவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மூவரையும் அவன் இருந்த கட்டிலருகே அழைத்துச் சென்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை படைக்கலங்களை மறுபடி மறைத்து வைக்கச் சென்றாள்.

⁠இந்நிலையில் ஏற்கெனவே தான் அரைகுறையாகப் படித்துவிட்டு வைத்திருந்த செல்வப் பூங்கோதையின் ஓலையில் படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதியிருப்பதை நினைவு கூர்ந்தவனாகச் சந்தனம் அரைக்கும் <— அரைக்கும் என்பதே சரி —> பகுதிக்குத் திரும்பினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் குறிப்பறிந்து அவனைப் பின்தொடர்ந்தான். தான் படிக்காமல் எஞ்சியிருந்த அவளது மூன்றாவது ஓலையில் என்னென்ன அடங்கியிருக்குமோ என்ற ஆவல் ததும்பும் மனத்துடன் இடைக் கச்சையிலிருந்து அந்த ஓலையை எடுத்து மீண்டும் படிக்கத் தொடங்கினான் இளையநம்பி.

⁠“ஏற்கனவே நான் எழுதி வைத்து விட்ட இந்த அன்புமடலை உங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இவ்வூர்க் கொல்லன் இங்கு வந்தபோது மன்றாடி வேண்டிக் கொண்டேன். ‘திருமோகூரிலிருந்து வேறு எங்கோ மாறிச் சென்று விட்ட பெரியவர் மதுராபதி வித்தகரைக் காணச் செல்வதாகவும் மீண்டும் எப்போதாவது கோநகருக்குச் செல்ல நேர்ந்தால் என் ஓலையை உங்களிடம் சேர்ப்பதாகவும்’ – கொல்லனிடமிருந்து எனக்கு மறுமொழி கிடைத்தது. அப்போது நாங்கள் எந்த நிலையிலிருக்கிறோம்? ஊர் எந்த நிலையிலிருக்கிறது? களப்பிரர்களின் கொடுமைகள் எப்படி உள்ளன? என்பன பற்றி எல்லாம் இந்த ஓலையை உங்களிடம் சேர்க்கும்போதே கொல்லன் விரிவாகச் சொல்லக்கூடும். அவற்றை எல்லாம் நான் விவரித்து எழுத இயலவில்லை.

⁠ஓர் அன்பு வேண்டுகோளுடன் அடியாள் இதை முடிக்க விரும்புகிறேன். இதை நான் கொடுத்தனுப்பி, இது உங்கள் கைக்குக் கிடைத்தால்-அப்படிக் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியை நானடைவதற்காக நீங்கள் எனக்கு மாற்றம் தந்து எழுதத்தான் வேண்டும் என்பதில்லை. எழுதினால் இப்பேதை எல்லையில்லாப் பெருமகிழ்ச்சியை அடைவேன் என்றாலும், நான் உங்களிடம் இப்போது வேண்டப் போவது வேறு. உங்களுக்கு இது கிடைத்து நீங்கள் இதைப் பார்த்து விட்டதன் மாற்றாக, ஏதாவதொரு மங்கலப் பொருளை எனக்குக் கொடுத்தனுப்புங்கள். அது போதும். நீங்கள் கொடுத்தனுப்புவது எதுவாயிருந்தாலும், அந்தப் பொருள் அடியாளுக்கு மங்கலமும் சுபசகுனமும் உடையதாயிருக்கும் என்பது உறுதி. உங்கள் நினைவுகள் என்னுள்ளே மணக்கும்படி எனக்கு எதையாவது கொடுத்தனுப்புவீர்களா? உங்களுடைய பேதையின் இந்த வேண்டுகோளை நீங்கள் மறக்க வேண்டாம்”-என்று முடிந்திருந்தது அவளுடைய அந்த ஓலை. எந்த மங்கலப் பண்டத்தை அவளுக்காகக் கொடுத்தனுப்புவது என்று ஒரு விநாடி தயங்கினான் இளையநம்பி. அடுத்த கணமே அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, அந்தப் பகுதியிலிருந்த பூக்குடலையிருந்து ஒரு பெரிய செந்தாழம்பூவை எடுத்தான். வாசனை நிறைந்த அதன் மடல்களிலே இரண்டை உருவி, அவற்றைப் பட்டையாகத் தைத்து, அதனுள் இரண்டு கழற்சிக்காய் அளவு பொதிய மலைச் சந்தனத்தை உருட்டி வைத்துக் கட்டினான். ஒரு பெண்ணுக்கு ஆண் அளிக்க முடிந்த பொருள்களில் பூவையும் சந்தனத்தையும் விட மங்கலமான பொருள்கள் வேறு எவையும் இருக்க முடியாதென்று அவனுக்குத் தோன்றியது. ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவேயுள்ள ஞாபகங்களுக்குப் பூவும் சந்தனமுமே இனிமையான சாட்சிகள். ஒன்று பெண்ணின் கூந்தலை மணக்கச் செய்வது. மற்றொன்று அவள் உடலை மணக்கச் செய்வது. அந்த இரு மங்கலப் பொருள்களையும் ஒன்றாகப் பொதிந்து-ஒன்றில் ஒன்றை இட்டு நிறைத்து அனுப்புவதன் மூலம் அவைகளை அடைகிறவளின் மனம் எவ்வளவு மகிழ்ச்சிப் பெருக்கினால் துள்ளும் என்பதை இப்போதே கற்பனை செய்ய முயன்றான் இளையநம்பி.

⁠தாழையையும், பூவையும், சந்தனத்தையும் ஒரு பெண்ணுக்கு அனுப்புவதில் எத்தனை குறிப்புகளை அவள் புரிந்து கொள்ள முடியுமென்று சிந்தித்தபோது அவனுக்கு மகிழ்ச்சி பெருகியது. ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவே மணமுள்ள பூவே ஒரு மெளனமான உரையாடல் என்றால், சந்தனம் இன்னொரு <— இன்னும் + ஒரு -> இன்னொரு —> சீதப் பனிச் சொற்கோவை. அது அவளுக்கும் புரியும் என்று நம்பியவனாக, “நான் கொடுத்தேன் என்று இதைப்

பெரிய காராளர் மகளிடம் சேர்த்தாலே போதுமானது” – என்று அதைத் திருமோகூர்க் கொல்லனிடம் அவனைக் கூப்பிட்டுக் கொடுத்தான் இளையநம்பி. கொல்லனும் அதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டான். பெரியவருக்கு ஏதேனும் மறுமொழி ஓலை தரலாம் என்றால் அவர் எந்த மறுமொழி ஓலையையும் எதிர்பார்க்கவில்லை. நிலைமையை அறிந்து வருமாறு மட்டுமே தன்னைப் பணித்தார் என்பதாகக் கொல்லன் கூறிவிட்டான். மறுபடி நிலவறை வழியே அவன் புறப்பட்டுச் செல்ல அன்று நள்ளிரவு வரை அங்கேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. நள்ளிரவில் கொல்லன் புறப்பட்டுப் போனான். அவனை வழியனுப்பிவிட்டு அழகன்பெருமாள், இளையநம்பி முதலியவர்கள் உறங்கப் போகும்போது இரவு நடுயாமத்திற்கு மேல் ஆகிவிட்டது.

மறுநாள் அதிகாலையில் இளைய நம்பியைத் துயிலெழுப்ப அவன் கால்களினருகே மஞ்சத்தில் அமர்ந்து இரத்தினமாலை யாழ் வாசித்துக்கொண்டிருந்தாள். அந்த இனிய யாழொலி கேட்டு எழுந்த இளையநம்பி சிரித்துக் கொண்டே அவளை வினவினான்:

“இதென்ன புது வாத்திய உபசாரம்?”

“இப்படியெல்லாம் தங்களை நோகாமல் உறங்கச் செய்து நோகாமல் துயில் எழுப்பிப் பாதுகாக்கச் சொல்லிப் பெரியவரின் ஆணை”-என்றாள் அவள், அதற்கு மறுமொழி கூறாமல் ஏதோ நினைத்துக் கொண்டவனாக மேன் மாடத்திலிருந்து படிகளில் இறங்கி விரைந்து கீழே அழகன்பெருமாளைக் காணச் சென்றான் இளையநம்பி.

அங்கே அழகன் பெருமாள் படுத்திருந்த இடம், தேனூர் மாந்திரீகனின் கட்டில் எல்லாமே வெறுமையாயிருந்தன. வியப்போடும் சினத்தோடும் திரும்பினான் அவன்.

“அவர்கள் நால்வரும் அழகன் பெருமாளும் இப்போது இங்கு இல்லை!” என்று கூறியபடியே படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இளையநம்பி அதைக் கேட்டுத் திகைப்படைந்தான்.

Previous articleRead Nithilavalli Part 1 Ch 39 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 2 Ch1 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here