Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

56
0
Read Nithilavalli Part 1 Ch 5 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch5 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – அடையாளம்,

அத்தியாயம் 5 : பூத பயங்கரப் படை

Read Nithilavalli Part 1 Ch 5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

பெரிய காராளர், இளைய நம்பியிடம் கூறத் தொடங்கினார்:

‘நீங்கள் எங்களுடைய சித்திர வண்டிகளில் மதுரைக்குப் போய்க் கோட்டைக்குள் நுழைவது உங்களுக்கு மிகவும் எளிதாயிருக்கும். இதே வண்டிகளில்தான் நான் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல் அனுப்பி வைப்பது வழக்கம். அதனால் என்னுடைய இந்த வண்டிகளையும், ஆட்களையும் கோட்டைப் பாதுகாவலர்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டு. என் மனைவியும், மகளும் தவிர மூன்றாவதாக நீங்கள் போகிறீர்கள். உங்களை அவர்கள் ஐயப்படாமல் இருக்க வேண்டும். கோட்டை வாயில் வரை போய்ச் சேருவதற்குள் வழியில் அங்கங்கே சந்தேகக் கண்களோடு திரியும் பூத பயங்கர்ப் படையினர்பார்வையிலும் நீங்கள் படாமல் தப்ப வேண்டும்.”

“எங்களோடு தாங்கள் மதுரை மாநகருக்கு வர வில்லையா, காராளரே?”

“நான் வர முடியாது! சில காரணங்களுக்காகப் பெரியவரோடு இங்கே இன்றியமையாதபடி இருக்கும் கடமை பெற்றுள்ளேன்! தவிரவும் வழக்கமாக நான் அதிகம்

கோட்டைக்குள் அகநகரில் போவதில்லை. அப்படிப் போனால் என்மேல் கூடக் களப்பிரர்கள் சந்தேகப்படலாம். விலகி இருந்து அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதால் தான் நான் அவர்களிடம் அடைந்திருக்கும் நம்பிக்கை நம் காரியங்களுக்குப் பயன்படுகிறது. அதையும் கெடுத்துக் கொண்டு விட்டால் ஒரேயடியாக அகநகர் விஷயங்கள் நமக்கு எதுவுமே தெரியாதபடி இருண்டு விடும். என் குடும்பத்துப் பெண்கள் இறையனார் திருக்கோவிலுக்கும், இருந்த வளமுடைய விண்ணகரத்துக்கும் புறநகரில் திருமருதமுன் துறையில் புண்ணிய நீராடவும் அடிக்கடி போய் வருவார்கள். அதனால் அவர்கள் மேல் யாருக்கும் சந்தேகம் வர முடியாது… ’’

“நியாயம்தான். தாங்கள் கூறுவதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். போகும்போது நான் எப்படி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதன்படி நடந்துகொள்வேன். அபாயங்களைத் தவிர்க்க முயலவேண்டும். நீங்கள் கவலைப்படுவதை என்னால் மறுக்க முடியவில்லை, காராளரே.”

“என் மகள் ஒர் அற்புதமான வழியைச் சொன்னாள்! அதன்படி ஒர் அபாயமும் இல்லாமல் பத்திரமாக நீங்கள் கோட்டைக்குள் போய்விட முடியும். ஆனால்…?’

“ஆனால் என்ன?… ஏன் தயங்குகிறீர்கள்?”

“திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரரும் மதுராபதி வித்தகரின் பேரபிமானத்துக் குரியவருமாகிய தங்களிடம் அதை எப்படிச் சொல்வது என்பது தான் என் தயக்கம். பெருவீரராகிய நீங்கள் அப்படி அகநகருக்குள் போக விரும்புவீர்களா, இல்லையா என்பது தெரியாமலே எப்படி அதை நான் உங்களிடம் வெளியிடுவதென்று தான் கலங்குகிறேன்…”

“தங்களுக்குத் தயக்கமாய் இருந்தால் தங்கள் மகளிடமே அதை நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை…” “அவளே உங்களிடம் இதைச் சொல்ல அஞ்சியும் வெட்கப்பட்டும்தான் என்னைக் கூறுமாறு வேண்டிக் கொண்டாள். இருந்தாலும் அச்சம் என்னையும் விட்ட பாடில்லை. ‘தோள்களில் வாகைமாலை சூடி மங்கல நிறை குடங்களோடு மறையவர் எதிர்கொள்ளத் தலை நிமிர்ந்த வீரத்திருக் கோலத்துடனே தாங்கள் நுழைய வேண்டிய கோட்டையில் இப்படியா நுழைவது?’ என்று என் மனமும் சொல்லத் தயங்குகிறது.”

“காராளரே! இப்படியே தயங்கிக் கொண்டிருந்தால் விடிய விடியத் தயங்கிக்கொண்டிருக்கலாம்! அதற்கு இது நேரமில்லை” – என்று அவன் சற்றே கோபத்தோடு இரைந்த பின்பே அவர் அவனிடம் வழிக்கு வந்தார்.

எவ்வளவுதான் அடிமைப்பட்டிருந்தாலும் அவிட்ட நாள் விழாவைக் கொண்டாடும் கோலாகலத்திலிருந்து களப்பிரர்கள், மக்களைத் தடுக்க இயலவில்லை. கோ நகருக்குள் வரும் நான்கு திசைப் புறநகர் வீதிகளிலும் ஆறு பெருக்கெடுத்து வருவதுபோல் மக்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது.

அரிவாள் நுனிபோன்ற மீசையையும் தீ எரிவது போன்ற கண்களையும் உடைய களப்பிர வீரர்களும், பூத பயங்கரப் படையினரும் அங்கங்கே பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். குதிரைகளில் உருவிய வாளுடன் ஆரோகணித்தபடி சிலர், தேர்களில் வேல்களும், ஈட்டிகளும் ஏந்தியபடி சிலர், எதுவும் அடையாளம் தெரியாத படி கூட்டத்தோடு கூட்டமாக மாறு வேடத்திற் சிலர், கோட்டைமதில்களில் மறைந்து நின்று கண்காணித்தபடி சிலர், என்று எங்கும் வீரர்களை நிறைத்து வைத்திருந்தது களப்பிரர் ஆட்சி.

அடிமைப்படுகிறவர்கள் அடிமைப்படுத்துகிறவர்கள் ஆகிய இரு சாராரில் எப்போதும் பயந்து சாகவேண்டியவர்கள் அடிமைப்படுகிறவர்களில்லை. அடிமைப்படுத்துகிறவர்கள் தான். ஏனெனில் அடிமைப்பட்டு விட்டவர்களிடம் அந்த அடிமைத் தளைகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவு

மில்லை. அடிமைப்படுத்துகிறவர்களோ தங்கள் பிடி தளர்ந்துவிட்டால் எதை எதை இழக்க நேரிடும் என்ற பயத்திலேயே செத்துக் கொண்டிருப்பவர்கள். பிறருடைய கால்களிலோ கைகளிலோ ஒரு தளையை இடுகின்ற பாவி தன் இதயத்தில் ஒர் ஆயிரம் தளைகளைச் சுமக்க நேரிடும். பாண்டிய நாட்டைப் பிடித்துப் பல ஆண்டுகள் ஆகியும் களப்பிரர்கள் நிலையும் அங்கு இப்படித்தான் இருந்தது. காலூன்ற முடியாத நிலையே தொடர்ந்து நீடித்தது.

ஒரு பெரிய தாமரைப் பூவின் இதழ்களைப்போல் அடுக்கடுக்காக அமைந்த தெருக்களையும், பூவின் நடுமையம் போன்ற அரண்மனையையும், நெருங்கிச் சூழ்ந்த பூந்தாதுகள் போன்ற மக்கள் கூட்டத்தையும், அந்தப் பூந்தாதுகளில் தேனுண்ண வரும் வண்டுகளைப்போல் பரிசில் நாடிவரும் புலவர்களையும் உடைய அழகிய மதுரை மாநகரம் அந்நியராட்சியில் தன் கலைகள் தன்னுடைய தனிப்பெரும் தமிழ்ச் சங்கம், தன்னுடைய கம்பீரம் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும், அவற்றை எல்லாம் இழந்திருக்கிறோம் என்ற உணர்ச்சிக் குமுறல் மக்களிடையே நீறுபூத்த நெருப்பாக மறைந்திருந்தது. களப்பிரர்கள் சிறைப்பிடிக்க முடியாமற் போன ஒன்று இந்த உணர்ச்சிக் குமுறல்தான்.

மதுராபதி வித்தகர் போன்ற பாண்டிய குலத் தலைவர்கள் மறைந்திருந்தாலும் எங்கிருந்தோ காற்றாய் உலவி இந்த நெருப்பைக் கணிய வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மூலநெருப்பு எங்கிருந்து கணிகிறது என்று அறியக் களப்பிரர்களால் முடியாமலிருந்தது. முடிந்தால் இந்த மூல நெருப்பைத் தடம் கண்டு சிறுபொறியும் எஞ்சிவிடாமல் அழிக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள் அவர்கள்.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்க் கலைகளும், தமிழ் நாகரிகமும், தமிழர் பெரு விழாக்களும் சோதனைகளுக்கு ஆளாயின, என்றாலும் மக்களில் பெரும்பான்மையினருடைய ஆர்வத்துக்குக் களப்பிரர்களால் அணையிட்டுவிட முடிய வில்லை. ஆனால், கட்டுக் காவல்களும், பூத பயங்கரப் படையினரின் கெடுபிடிகளும் குறைவின்றி இருந்தன.

அவிட்ட திருவிழா நாளில் நண்பகலுக்கு மேல் திருமோகூர்ப் பெரிய காராளர் வீட்டிலிருந்து புறப்பட்ட சித்திர வண்டிகள் மூன்றும், சில நாழிகைப் பயணத்துக்குப் பின் வையை நதியின் வட கரையை அடைந்திருந்தன. நதிக் கரையை நெருங்கும் வரை ஓரளவு விரைவாகச் செல்ல முடிந்த அந்த வாகனங்கள், கோநகர்ச் சுற்றுப்புறங்களில் பெருகியிருந்த திருவிழாக் கூட்டம் காரணமாக அருகில் வந்ததும் நின்று போக வேண்டியிருந்தது. முன்னால் சென்ற வண்டியில் அதை ஒட்டிச் சென்றவனைத் தவிரப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் இருந்தனர். அடுத்த இரண்டு வண்டிகளிலும் பின்புறம் ஓலை வைத்துத் தடுத்துப் பூக்கள் கீழே விழுந்து விடாதபடி தாமரை மலர்கள் நிரப்பப்பட்டிருந்தன. ஆற்றுப்பாலத்தைக் கடந்து வண்டிகள் கரை ஏறியதும், அங்கே குதிரைகளில் அமர்ந்தபடி நகருக்குள் வரும் கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த பூத பயங்கரப் படையைச் சேர்ந்த வீரர்கள் இருவர் வண்டிகளின் அருகே வந்தனர்.

முதல் வண்டியில் பெண்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருப்பதைக் கண்டு விட்டுச் சந்தேகம் தவிர்ந்த அந்த வீரர்கள் தாமரைப் பூக்கள் மட்டுமே குவிந்திருந்த மற்ற இரு வண்டிகளையும் சுற்றிச் சுற்றி வந்தனர். குதிரைகளில் அமர்ந்த படியே சுற்றி வந்ததால் வண்டிகளுக்குள் இருந்த தாமரைப் பூக்களைத் தங்கள் உயரத்திலிருந்து அவர்கள் மிக நன்றாகக் காண முடிந்தது. வண்டியை ஒட்டி வந்த இருவருமே, ‘இவை திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டு வண்டிகள்’ … என்பதை அந்த வீரர்களிடம் தெரிவித்தனர்.

வண்டிகளைச் செலுத்தி வந்தவர்கள் தக்க சமயத்தில் இவ்வாறு தெரிவித்தது பயனளித்தது என்றாலும் அந்த இரண்டு பூத பயங்கரப் படைவீரர்களில் ஒருவன் சிறிது கடுமையானவன் ஆகவும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறவன் ஆகவும் இருந்தான். மூன்று சித்திர வண்டிகளில் நடுவாக நின்ற வண்டியில் குவித்திருந்த தாமரை மலர்களைக்

குதிரை மேலிருந்தபடியே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அவன். அவனுடன் இருந்த மற்றொரு காவல் வீரன்,-

“போகவிடு அப்பனே, இரண்டு வண்டி நிறையத் தாமரைப் பூக்களைக் கோட்டைக்குள் கொண்டு போவதனால் களப்பிரர் பேரரசு ஒன்றும் கவிழ்ந்து போய்விடாது” என்று அலட்சியமாகக் கூறியும் முதல் வீரனின் சந்தேகம் இன்னும் தளர்ந்து விடவில்லை.

“அப்படிச் செய்வதற்கில்லை நண்பனே! கவிழ வேண்டிய காலம் வந்து விட்டால் படைகளால் கவிழ்க்க முடியாததை மலர்களால் கூடக் கவிழ்த்து விடலாம்…”

“இந்த வண்டிகளைப் பற்றி மட்டும் உனக்கு அந்த ஐயப்பாடு வேண்டியதில்லை. இவை நம் அரண்மனைக்கு மிகவும் வேண்டியவருடைய வாகனங்கள். அவ்வப்போது கோட்டைக் களஞ்சியங்களுக்கு நெல் கொண்டு வரும் வண்டிகள் இவை” என்று வாதாடினான் மற்றவன்.

இதற்குள் பின்வரும் வண்டிகள் நிற்பதைக் கண்டு என்னவோ, ஏதோ என்று மனக்கலக்கத்தோடு முன் வண்டியிலிருந்து செல்வப்பூங்கோதையே இறங்கி வந்து விட்டாள். நடையிலே ஒரு நாட்டுப்புறத்துப் பெண்ணின் துணிவும், தோற்றத்திலே எதிர்ப்படுகிறவர்களின் கண் பார்வைகளை வென்றுவிடும் ஒர் இளவரசி போன்ற எடுப்புமாக அவள் வந்து நின்ற கோலத்தில் பரபரப்படைந்த வீரர்கள் இருவருமே தன்னுணர்வு பெறச் சில கணங்கள் ஆயிற்று.

“இறைவனை வழிபடக் கொண்டு போகும் மலர்களுக்குக் கூடச் சோதனையா?” என்று அவள் கோபத்தோடு அவர்களை வினவினாள். இந்த வினாவைக் கேட்டு, உடனே-

“வெறும் மலர்களுக்குச் சோதனை கிடையாது. ஆனால், அந்த மலர்களுக்கே கைகள் முளைத்தால் சோதனை உண்டு! நான் சொல்வது புரியவில்லையானால் இதோ பாருங்கள்…” என்று கூறியபடியே தன் கையிலிருந்த நீண்ட வாள் நுனியால் பூங்குவியலில் அந்த வீரன் சுட்டிக்காட்டிய

இடத்தைப் பார்த்தபோது வண்டியை ஒட்டி வந்தவனும் செல்வப் பூங்கோதையும் ஒருங்கே திடுக்கிட்டனர். வண்டி வழி நெடுக ஆடி அசைந்து வந்ததினால் பூங்குவியல் சரிந்துபோய் அது நேர்ந்திருந்தது. வேகமாகத் துடிக்கும் நெஞ்சுடன் பயத்தோடு பயமாக அவள் சாகஸமே புரிந்து அவர்களை ஏமாற்ற வேண்டியிருந்தது.

உடனே அவள் விரைந்து, “உங்கள் கண்களில் தான் தவறு இருக்கிறது வீரர்களே! நீங்கள் வீண் பிரமையில் எதை எதையோ பார்ப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் கண்களில் தெரிகிறது. இதோ நான் உங்கள் பிரமை வீணானது என்று நிரூபிக்கிறேன் பாருங்கள்!” என்று கூறியபடியே வண்டியில் ஏறி, அந்த வீரன் வாள் நுனியில் சுட்டிக்காட்டிய இடத்தில் மேலும் சில பூக்களைச் சரியச் செய்து மூடியபின் அதே இடத்தில் தன் கையை வைத்துக் காட்டிவிட்டு, இப்போது நான் என் கையை இந்த இடத்திலிருந்து எடுத்து விடுகிறேன். அப்படி எடுத்த பின்பும் நீங்கள் என்கை இங்கே இருந்த நினைவோடு இந்த இடத்தைப் பார்த்தால் மறுபடியும் இங்கு என் கை இருப்பது போலவே உங்கள் கண்களுக்குத் தோன்றும். இந்தப் பிரமை ஒரு கண்கட்டு வித்தையைப் போன்றது” என்றாள்.

அவளுடைய இந்த சாகஸம் முழுவெற்றியை அளிக்கா விட்டாலும் ஒரளவு பயன்பட்டது. பூத பயங்கரப்படை வீரர்களில் இளகிய சுபாவம் உடையவன் அந்த சாகஸத்தில் மயங்கி அதை ஒப்புக் கொண்டு விட்டான் என்றாலும் மற் றொருவன் இன்னும் கடுமையாகவே இருப்பது தெரிந்தது. வேறுவிதமாக அவனை இளகச் செய்ய முயன்றாள் அவள்.

‘ஐயா, பூத பயங்கரப் படைவீரரே! உங்களுக்கு நல்ல கவியுள்ளம் இருக்கிறது. இல்லாவிட்டால் தாமரைப்பூவைக் கண்டதும் அது சர்வ லட்சணமும் நிறைந்த ஒரு கையாக உங்கள் கண்களில் படமுடியாது. கவிகள்தான் உவமானப் பொருள்களில் உவமேயங்களையும் மாறி மாறிக் காண முடியும். பாவம்! எழுத்தாணியும் ஓலைச் சுவடியும் ஏந்த வேண்டிய கைகளில் நீங்கள் வாளேந்தும்படி நேர்ந்து விட்டது.”

இதைக் கேட்டு அவன் சிரித்தான். ஆனால், இந்தச் சிரிப்பில் அவள் கூறியதை அவன் நம்பாமல் ஏளனம் செய்யும் தொனிதான் நிறைந்திருந்தது.

“உண்மையா, பிரமையா என்பதை நான் எப்படிச் சோதனை செய்ய வேண்டுமோ அப்படிச் சோதனை செய்து கொள்ள எனக்குத் தெரியும்” என்று கூறிக்கொண்டே தன் கையிலிருந்த வாளை ஓங்கி அந்தப்பூங்குவியலில் அழுத்திச் சொருக முயன்றான் அவன். அதைக் கண்டு செல்வப் பூங்கோதையும், வண்டியை ஒட்டுகிறவனும் பதறிப் போனார்கள். செல்வப் பூங்கோதை குறுக்கே பாய்ந்து அவன் பூக்குவியலில் வாளைச் செருக முடியாதபடி தடுக்கவும் செய்தாள். உடனே தாங்க முடியாத சினத்தோடு “எல்லாம் பிரமை என்றால் நீங்கள் ஏன் பதற வேண்டும்? வாளைச் சொருகித் துழாவிப் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? என்று இரைந்தான் அவன்.

“தெய்வ காரியத்துக்காகக் கொண்டு போகும் பூக்களைப் பல போர்களில் எதிரிகளின் குருதியும் நிணமும் பட்டுக் கொலைக் கறைபட்ட உங்கள் வெற்றி வாளால் தீண்டுகிறீர்களே என்றுதான் நாங்கள் பதற்றமும் பயமும் அடைகிறோம். முதலில் நீங்கள் வாளால் சுட்டிக் காட்டியபோதும் இப்போதும் நாங்கள் பயப்படுவது எல்லாம் தெய்வக் குற்றம் நேர்ந்து விடக் கூடாதே என்பதற்காகத் தானே ஒழிய வேறு எதற்காகவும் இல்லை” என்று அவள் சமயோசிதமாகக் கூறிய சொற்கள் அவனை வழிக்குக் கொண்டு வந்தன. ‘பல போர்களில் எதிரிகளின் குருதியும் நிணமும் பட்டுக் கொலைக் கறைபட்ட உங்கள் வெற்றிவாள்’ என்று அந்த அழகிய இளம் பெண்ணின் இதழ்களிற் பிறந்த இனிய சொற்களால் தன் தோள் வலிமையும், வாள் வலிமையும் புகழப்பட்டிருந்ததால் அவன் சற்றே கிறங்கியிருந்தான். புகழில் மயங்கி இளகியிருந்தான் அவன்.

ஒரு பெண்ணிடம் இல்லாத வீரமும் வலிமையும் ஓர் ஆண்மகனிடம் இருந்தாலும் அந்த வீரத்தையும் ஆண்மையையும் ஒரு பெண் வந்து தன் கிள்ளை மொழிகளால் புகழ

வேண்டும் என்று தவிக்காத ஆணே உலகத்தில் கிடையாது போலும் என்று தோன்றியது அவளுக்கு.

‘பெண் பிள்ளை புகழ்வதனால் சில வீரர்கள் கோழை ஆகிறார்கள்; சில கோழைகள் வீரர்களாகவும் செய்கிறார்கள்’ என்று தாயிடம் வம்பு பேசும்போது சில வேளைகளில் தன் தந்தை ஒரு வசனம் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள். அந்த வசனத்தின் முதற்பகுதி இப்போது இங்கே விளைந்திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

“நியாயம்தான்! கோவிலுக்குக் கொண்டு போகும் பூக்களை வாளால் பரிசோதிப்பது நமக்கே பாவம்” என்று மற்றொரு பூதபயங்கரப் படை வீரனும் செல்வப் பூங்கோதையோடு ஒத்துப் பாடினான். ஏற்கனவே தன் வாளை அவள் புகழ்ந்து கூறிய சொற்களால் கடுமை குன்றி மயங்கியிருந்தவன் தன் நண்பனின் வார்த்தைகளால் மேலும் நம்பிக்கை வரப்பெற்றவனாக அந்த வண்டிகளைப் போகவிட்டு விட்டான். வடக்குக் கோட்டை வாயிலில் காவல் இருந்தாலும் சோதனைகளோ தடைகளோ எதுவும் இல்லை. தனித்தனியே சோதனைகள் எதுவும் செய்ய முடியாதபடி கூட்டமும் அதிகமாக இருந்தது. வண்டிகள் மூன்றையும் இருந்த வளமுடையார் கோவில் நந்தவனத்தில் கொண்டு போய் மரங்களடர்ந்த பகுதி ஒன்றில் நிறுத்தினார்கள் ஒட்டி வந்தவர்கள். அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்தது.

Previous articleRead Nithilavalli Part 1 Ch4 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 1 Ch 6 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here