Home Na Parthasarathy Read Nithilavalli Part 1 Ch 8 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 8 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

54
0
Read Nithilavalli Part 1 Ch 8 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 1 Ch 8|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 1 Ch 8 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – அடையாளம்

அத்தியாயம் 8 : திருமருத முன் துறைக்கு ஒரு வழி

Read Nithilavalli Part 1 Ch 8 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

வருகிறவன் தன்னை நோக்கித்தான் வருகிறானா அல்லது வேறு காரியமாக வருகிறானா என்று இளையநம்பி சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே அவன் சொல்லி வைத்தது போல் இவன் எதிரே வந்துநின்று நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு இவனிடமிருந்து நல்லடையாளம் கிடைத்ததும் வணங்கினான். இருவரும் நல்லடையாளச் சொல்லைப் பரிமாறிக் கொண்டு தங்களுக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவுடன் இளையநம்பி ஏதோ பேசத் தொடங்கியபோது வந்தவன் தன் வலதுகை ஆள்காட்டி விரலை வாயிதழ்களின் மேல் வைத்துப் பேசவேண்டாம் என்பது போல் குறிப்புக் காட்டித் தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்துவிட்டு நடந்தான். வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறத்திலிருந்த தோட்டத்தின் மற்றொரு கோடி வரை அவனை அழைத்துச் சென்றான் வந்தவன். அங்கிருந்த மதிற் சுவரை ஒட்டி ஒரு பாழ் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள் அவர்கள். அந்த இடத்திற்கு வந்ததும் அவனே தன் மெளனத்தைக் கலைத்து விட்டுப் பேசினான்.

“சற்று முன்னே நான் வெள்ளியம்பலத்துக்குள் நுழைந்தபோது நகரப் பரிசோதனைக்காகத் தெருவில் அலைந்து கொண்டிருந்த களப்பிர வீரர்கள் சிலர் என்னைப் பின் தொடரக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் தான் அங்கே நின்று நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என்று பார்த்தேன்! திருமோகூரில் பெரியவர், காராளர் எல்லோரும் நலமாயிருக்கிறார்களா? முதல் முதலாகக் கோநகருக்கு வந்திருக்கிறீர்கள்! கோநகரைக் களப்பிரர்கள் அசோக வனத்திலே சிறைப்பட்ட சீதையை வைத்திருப்பது போல் வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.”

தொடக்கத்தில் அளவு கடந்த மெளனமாக இருந்து விட்டதற்காகவும் சேர்த்து இப்போது பேசுவது போல பேசினான் அந்தப் புதியவன். இளையநம்பி அவனுக்கு மிகச் சுருக்கமாகச் சில வார்த்தைகளில் மறுமொழி கூறினான். அந்த பாழ் மண்டபத்தை ஒட்டியிருந்த பகுதிகளில் மரங்களின் அடர்த்தி குறைவாக இருந்ததனால் அதிக இருள் இல்லை. அதனால் அந்தப் புதியவனை இளைய நம்பி ஓரளவு காணமுடிந்தது. முடி, உடை உடுத்தியிருந்த முறை, மீசை எல்லாவற்றாலும் ஒரு களப்பிரனைப்போல் தோன்றினான் அவன். அதைக் கண்டு இளைய நம்பி அவனைக் கேட்டான்;

“களப்பிரர்கள் ஆட்சியில் கள்ளும் காமமும் கொள்ளையாய் மலிந்திருப்பதை இந்த வெள்ளியம்பலத்தில் நுழைந்ததுமே கண்டேன். வருந்தினேன். இப்போது என் எதிரே தெரிகிற தோற்றத்திலிருந்தே, கள்ளும் காமமும் மலிந்திருக்கும் அதே வேளையில், தமிழ் நடை உடை நாகரிகங்கள் எல்லாம் நலிந்திருப்பதையும் காண முடிகிறது.”

“கொலை வெறியர்களாகிய களப்பிரர்களின் நடுவே ஊடாடி நம் காரியங்களைச்சாதித்துக் கொள்ள இப்படி நமக்கே விருப்பமில்லாத பொய்க்கோலங்களை நாம் ஏற்கவும் வேண்டியிருக்கிறது ஐயா…”

“விந்தைதான்! பொய்க்கு வேண்டிய கோலம் மெய்க்கும் வேண்டியதாக இருக்கிறது என்று நீ கூறுகிறாய் போலிருக்கிறது.”

“ஆம், ஐயா! பொய்யை யாரும் அலங்கரிக்கத் தொடங்காதவரை- மெய்க்கு அது மெய்யாயிருப்பதையே கோலமாகக் கொண்டு நாம் மன நிறைவு அடையலாம். ஆனால் பொய்யை அலங்கரிக்கத் தொடங்கிவிட்ட உலகில் மெய்யையும் நாம் அலங்கரிக்காமல் விட முடிவதில்லை.”

“நீ கூறுவது பிழை! எங்கு சத்தியத்தின் வலிமை குறைகிறதோ அங்கு சொற்களின் வலிமையால் அதை அலங் கரிக்கிறார்கள். ஆனால், சத்தியம் நெருப்பைப் போன்றது. தன் வலிமையல்லாத, எதனால் தன்னை அலங்கரித்தாலும், அதை மெல்ல மெல்லச் சுட்டெரிக்கக் கூடியது. பூக்களாலும், பொன்னாலும் நீ எதை வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். ஆனால் நெருப்பை மட்டும் பூவாலோ, பொன்னாலோ புனைய முடியாது. பூவைக் கருக்கி விட்டுப் பொன்னை உருக்கிவிட்டுத் தன் பிரகாசமே பிரகாசமாய் மேலும் வென்று எரிவது தழல். சத்தியமும் அப்படித்தான். அப்படி ஒரு சத்திய பலம் நம்மிடம் இருக்கிற வரை, பாண்டிய குலம் வெல்லும் என்பதைப் பற்றி உனக்குக் கவலை இருக்கக் கூடாது.”

⁠இந்த மனோ திடத்தையும் நம்பிக்கையையும் கேட்ட வியப்பில் ஒன்றும் மறுமொழி சொல்லத் தோன்றாமல் இருந்தான் அந்தப் புதியவன். சத்தியத்தின் மேலிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையாளனைக் கண்டதும், ‘நம் எதிரே, மனம் மொழி மெய்களால் வணங்கத்தக்க இணையற்ற வீரனும் தீரனுமான ஒருவன் நிற்கிறான்’- என்ற எண்ணத்தில் அந்தப் புதியவனுக்கு மெய் சிலிர்த்தது. இளையநம்பி அந்தப் புதியவனை வலத் தோளில் தட்டிக் கொடுத்தபடி மேலும் கூறலானான்:

⁠“தைரியமாயிரு! இப்படி யார் நாகரிகத்தையோ காட்டும் பொய்க்கோல வாழ்வு போய் மங்கலப்பாண்டிவள நாட்டு மறத்தமிழனாக, இதே மதுரை மாநகர வீதிகளில் மீண்டும் நிமிர்ந்து நடக்கும் காலம் வரும். நுட்பத்திலும், சிந்தனை வலிமையிலும் இணையற்ற ஒர் இராஜரிஷி நமக்காக அல்லும் பகலும் திட்டமிட்டு வருகிறார் என்பதை நினைவிற் கொள்…”

⁠“தங்கள் நல்வாழ்த்து விரைவில் மெய்யாக வேண்டும் என்றே நானும் ஆசைப்படுகிறேன். இப்போது நாம் போகலாம். எதுவும் தெரியாத காரிருளில், நெடுந்துரம் தங்களை நடத்தி அழைத்துச் செல்ல நேர்வதற்காகத் தாங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.”

⁠“இருளைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை அப்பனே! இன்று பாண்டி நாட்டில் இரவில் மட்டுமல்ல, பகலிலும் இருள்தான் நிரம்பியிருக்கிறது. சில ஆட்சிகள், இருளையும் ஒளி பெறச் செய்யும். வேறு சில ஆட்சிகளோ, பகலையும் கூட இருளடையச் செய்துவிடும். அப்படி ஒரு கொடுங்கோலாட்சியில்தான் இன்று நீயும் நானும் இருக்கிறோம். ஆனால் எங்கே போகிறோம், எதைத் தெரிந்துகொள்ளப் போகிறோம் என்பதை முதலில் எனக்குச் சொல். நான் அறிய வேண்டிய செய்திகள் சிலவற்றையும், செயல் திட்டங்களையும் உன்னிடமிருந்து அறிந்து கொள்ள முடியும் என்பதாக இருந்த வளமுடையார் கோவில் யானைப்பாகன் அந்துவன் என்னிடம் கூறி அனுப்பினான். அவற்றைப் பற்றி என்ன சொல்கிறாய் நீ?”

⁠“அந்துவன் கூறி அனுப்பியவற்றில் பிழை ஒன்றும் இல்லை ஐயா! அவன் அடியேனைப் பற்றித் தங்களிடம் யாவும் கூறியிருக்கிறானோ, இல்லையோ தெரியாது. அடியேன் வையை நதிக்கரையில் திருமருத முன் துறையில் உள்ள உப வனக் காப்பாளன், அழகன் பெருமாள் மாறன். பெரியவர் மதுராபதி வித்தகரை அடியேனுடைய குல தெய்வத்தினும் மேலாக மதித்துத் தொழுகிறவன். நம்முடைய எல்லாக் காரியங்களும், கோநகரில் நடைபெற இரண்டே இரண்டு வழிகள் தான் இன்னும் அடைபடாமல் எஞ்சியுள்ளன. அதில் ஒன்று, என்னுடைய உப வனத்தில் இருக்கிறது. மற்றொன்று இங்கே இந்த வெள்ளியம்பல மண்டபத்தில் இருக்கிறது.”

⁠“எந்த வழிகளைச் சொல்கிறாய் நீ?”

⁠“இதோ, இந்த வழியைத்தான் சொல்கிறேன்” என்று கூறியவாறே கீழே குனிந்து, அந்த மண்டபத்தின் கல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு கல்லைத் தூக்கிப் புரட்டினான் அழகன் பெருமாள். இளைய நம்பியின் கண்கள், அவன் புரட்டிய கல் விட்ட வழியில் ஆள் இறங்கும் இடைவெளிக்குக் கீழே மங்கலாகப் படிகள் தென்படுவதைக் கவனித்தன.

⁠“ஒரு காலத்தில் மங்கல நன்னாட்களில் அரண்மனைப் பெண்கள் இந்தச் சுரங்க வழியாகத் திருமருத முன்துறைக்கு நீராடப் போவார்களாம். கடைசியிற் களப்பிரர்கள் கோட்டையையும் அரண்மனையையும் கைப்பற்றியபின், அந்தப்புர மகளிரும், பாண்டியர் உரிமை மகளிரும் இந்த வழியாகத்தான் தப்ப முடிந்தது என்று கூடச் சொல்வார்கள்…”

⁠“இந்த வழி இருப்பதை நம்மவர்கள் தவிர வேறு யாராவது அறிவார்களா? இது நேரே திருமருத முன் துறைக்குத்தான் போகிறதா அல்லது வேறு எங்கேனும் இதிலிருந்து வழிகள் பிரிகின்றனவா?”

⁠“நம்மவர்கள் மட்டுமே பயன்படுத்தும் இரகசிய வழியாக இதை வைத்திருக்கிறோம். இங்கிருந்து திருமருத முன் துறைக்கு நெடுந்தூரம் இருப்பதாலும், நடுவே ஏதேனும் அபாயம் வந்தாலும், உடனே தப்ப வழி வேண்டும் என்பதாலும், இடையில் நகரில் புகழ்பெற்ற கணிகையர் வீதி குறுக்கிடும் இடத்தில் அங்குள்ள ஓர் நம்பிக்கையான கணிகையின் மாளிகையோடு ஒரு வாயில் இணைத்திருக்கிறோம்…”

⁠“இப்போது நாம் எங்கே புறப்பட்டுப் போகிறோம் அழகன் பெருமாள்?”

⁠“உப வனத்துக்குத்தான்! அங்கே எல்லாச் செய்திகளையும் உங்களுக்குக் கூற முடிந்தவர்களாக நம்மவர்களில் நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் பெரியவர் இங்கே சாதிக்க வேண்டிய மிகப் பெரிய அரச தந்திரக் காரியங்கள் எல்லாமே சாதிக்கப்படுகின்றன.”

⁠அதற்கு மேலும் அவனிடம் பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல், மேற்கல்லின் பக்கங்கள் உடலில் உராயாமல் கவனமாய் படிகளில் குதிப்பது போல், இறங்கி உள்ளே நுழைந்தான் இளையநம்பி. அவனைத் தொடர்ந்து அழகன் பெருமாளும் கீழே குதித்து இறங்கிக் கைகளை மேலே உயர்த்திப் புரட்டிய கல்லை உள்ளிருந்தபடியே மேற்பக்கம் தாங்கி மெல்ல மெல்ல நகர்த்தி வழியைப் பழையபடியே மூடினான். உட்புறம் இருள் சூழ்ந்தது. அழகன் பெருமாள் இளையநம்பியின் வலது கையைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டு கீழே தடுமாறாமல் படி இறங்கி நிலவறையில் விரைந்தான்.

“இந்த இருள் உங்களுக்குப் பழக்கமாயிராது. கவனமாக நடந்து வர வேண்டும் நீங்கள்?” என்று தன்னை எச்சரித்த அழகன் பெருமாளிடம் இளையநம்பி “என்னைப் பற்றிக் கவலைப்படாதே! ஒளியைத் தேடிக் கண்டுபிடிக்கிற வரை ஒவ்வொரு வீரனும் இருளில் தான் கால் சலிக்க நடக்க வேண்டியிருக்கும். இருளுக்குத் தயங்கினால் எதுவும் நடக்காது” என்று சிரித்துக் கொண்டே மறுமொழி கூறினான்.

Previous articleRead Nithilavalli Part 1 Ch 7 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 1 Ch 9 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here