Home Na Parthasarathy Read Nithilavalli Part 2 Ch13 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch13 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

86
0
Read Nithilavalli Part 2 Ch13 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 2 Ch13|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch13 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – சிறைக்கோட்டம்

அத்தியாயம் 13 : பெருஞ்சித்திரன்

Read Nithilavalli Part 2 Ch13|Na.Parthasarathy|TamilNovel.in

காதோரங்களிலும் பிடரியிலும் கருகருவென்று அலையலையாகச் சுருண்ட குஞ்சியின்[1] அழகும், அவனுடைய இளம் முகத்தின் பெண்மைச் சாயலையே மிகைப்படுத்திக் காட்டுவதை அசைப்பிலே திரும்பிப் பார்த்துக் கவனித்தான் கொல்லன். கொற்றவைக் கோயிலிலே வன்னி மரத்தடியில் அன்று மாலை விளக்கு வைக்கிற நேரத்திற்குத் தான் யாரைச் சந்தித்து அழைத்து வர வேண்டும் என்று பெரியவர் தன்னை விரட்டியிருந்தாரோ அந்தப் பிள்ளையாண்டான் இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று கொல்லன் சுலபமாகப் புரிந்து கொண்டான். பேதைப் பருவத்துப் பெண்களைப் ‘பெட்டைப் பயல்கள்’ என்று கூறும் சொல் வழக்குப் பாண்டிய நாட்டின் எல்லையிலேயே கொற்கையிலும், கொற்கையைச் சூழ இருந்த[2] மாறோக வளநாட்டுப் பகுதியிலும்தான் உண்டு என்று கொல்லன் கேள்விப்பட்டிருந்தான். இவன் கொற்கை சூழ்ந்த மாறோக வளநாட்டைச் சேர்ந்தவனே என்பதை அந்தப் பதப் பிரயோகமே நிரூபித்து விட்டது. ஆயினும் கொல்லன் இன்னும் அவனைப் பெயர் சொல்லிப் ‘பெருஞ்சித்திரன்’ என அழைக்கவில்லை. வன்னி மரத்தடி வருகிற வரை வழி காட்டுகிறவனைப் போலவே கொல்லன் நடித்தான். அந்த விடலைப் பிள்ளையாண்டானோ, ‘இவன் தான் நாம் சந்தித்து ஒன்பது முத்துகளைத் தந்து, உறவு கொண்டு பழக வேண்டியவன்’ என்ற சிறு அனுமானம் கூட இல்லாமல் வன்னி மரத்தடி வந்ததும் பட்டு நூலிழை போன்ற தனது அந்த இனிய குரலில்,

“ஐயா எனக்கு வழி காட்டியதற்கு மிக்க நன்றி. இனி நீங்கள் போகலாம்” என்பது போல் கொல்லனுக்கு விடை கொடுத்து அனுப்ப ஆயத்தமானான். இதைக் கேட்டுக் கொல்லன் உள்ளுறச் சிரித்துக் கொண்டான். அவன் விடை கொடுத்த பின்பும் போகாமல் தயங்கி நின்ற கொல்லனை, ‘என்னடா, இவனைப் போகச் சொல்லியும் விடாமல் இன்னும் தயங்கி நிற்கிறானே’ – என்று நினைத்துப் பொறுமை இழந்து போய் நோக்கினான் இளைஞன்.

அதற்கு மேலும் தனக்கு வழி காட்டியவனை அங்கிருந்து போகச் சொல்லி வற்புறுத்த, அந்த வெளியூர் இளைஞன் தயங்கியிருக்க வேண்டும். பொது இடமாகிய கொற்றவைக் கோயிலை விட்டு, மற்றொரு மனிதனை வெளியே துரத்தத் தனக்கென்ன அதிகாரம் என்ற தயக்கமும், அதே சமயம் அந்த இடத்தில் அப்போது தனக்குத் தேவையான தனிமையை நாடும் மனமுமாக இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தான் பிள்ளையாண்டான். அவன் நிலையைக் கண்டு கொல்லனால் சிரிப்பை அடக்க முடியாவிட்டாலும், சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

“ஐயோ பாவம்! இவ்வளவு தவிக்கிறானே, இவனுக்கு சிறிது தனிமையைக் கொடுத்துத்தான் பார்க்கலாமே’ என்று கொற்றவைத் தெய்வத்தை வலம் வருவதற்குப் போனான் கொல்லன். கொற்றவையை ஒன்பது முறை வலம் வந்து, ‘பாண்டி மரபுக்கு விரைவில் நல்ல காலம் பிறக்க வேண்டும்: என்று பிரார்த்தனை செய்த பின் கொல்லன் வன்னி மரத்தடிக்குத் திரும்பியபோது, இவனைத் தவிர்க்க விரும்பியவன் போல் அவன் எழுந்து வலம் வருவதற்குச் சென்றான். இம்முறை கொல்லன் பிடிவாதமாக வன்னி மரத்தடியிலேயே உட்கார்ந்து கொண்டான். இவனைத் தவிர்ப்பதற்காக வலம் வரச் சென்ற பிள்ளையாண்டான், மறுபடி வன்னி மரத்தடிக்கு வந்து பார்க்கும் போது இவன் அங்கேயே இருக்கக் கண்டு திகைத்தான். அந்த நிலையில் கொல்லனே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அவனருகே சென்று ‘பெருஞ்சித்திரன்’ என்று மெல்ல அழைத்தான். அந்த அழைப்பின் மூலம் ‘இவன்தான் நாம் காண வந்தவனா?’, என்ற வியப்பை அடைந்த இளைஞன் அடுத்த அடையாளத்தையும் உறுதி செய்து கொள்ளக் கருதி,

“எண்ணிக்கை?”, என்று கொல்லனை நோக்கி வினாவும் தொனியில் கேட்டான். கொல்லனும் உடனே ஒரு கணம் கூடத் தயங்காமல் “ஒன்பது?” என்றான். அவனோ மேலும் விடாமல் ‘எவை ஒன்பது?’ என்று வினாவைத் தொடர்ந்தான். பொறுமை இழந்து விடவோ, சினம் கொள்ளவோ செய்யாமல், “முத்துகள்-கொற்கைத்துறை முத்துகள்” என்று ஒரு முறைக்கு இருமுறையாக அழுத்திச் சொன்னான் கொல்லன். உடனே வந்திருந்த இளைஞன் தன் இடுப்புக் கச்சையிலிருந்து சிறிய பட்டுத் துணி முடிப்பு ஒன்றை எடுத்து அவிழ்த்து, ஒன்பது முத்துகளை எண்ணித் தேர்ந்து கொல்லனிடம் கொடுத்தான். முத்துகள் கைக்கு வந்ததும், மேற்கொண்டு தாமதம் எதுவும் செய்யாமல், தன்னைப் பின் தொடருமாறு அவனுக்கு சைகை காட்டி விட்டு நடந்தான் கொல்லன். அந்த இளைஞனும் மறு பேச்சுப் பேசாமல் கொல்லனைப் பின் தொடர்ந்தான்.

ஊர் எல்லையைக் கடந்து அடர்ந்த காட்டுப் பகுதி வருகிற வரை விரைந்து நடப்பதைத் தவிர இருவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ‘அபாய எல்லையைக் கடந்து விட்டோம்’ என்ற நம்பிக்கை வந்த பின்பு கொல்லன் அந்த இளைஞனை விசாரித்தான்:

“ஐயா! இன்னும் ஐந்தாறு நாழிகைப் பயணம் போக வேண்டும். உங்களுடைய பசி, தாகம், எப்படி? நிலைமைகள் எனக்குத் தெரிந்தால் நல்லது.”

அந்தப் பிள்ளையாண்டான் தன் வயதிற்கு மிகவும் இளைஞனாகத் தோன்றினாலும், பெரியவரைத் தேடிக் காண வந்திருக்கும் சிறப்பு நோக்கி, அவனுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்தே விளித்துப் பேசினான் கொல்லன்.

“ஆம்! எனக்குப் பசிக்கிறது!… பகலில் சிறிது அவலும் இரண்டு பொரிவிளங்காய் உருண்டையும் சாப்பிட்டேன். என்னிடமே இன்னும் மூன்று நான்கு வேளைக்குப் போதுமான அவலும் பொரிவிளங்காயும் இருக்கும். நீர் பருக ஏற்றாற்போல் ஒடையோ, காட்டாறோ குறுக்கிட்டால், அங்கே அமர்ந்து உண்ட பின், பயணத்தைத் தொடரலாம்” என்று அவன் மறுமொழி கூறவே, ஒர் ஒடையின் கரைக்கு அவனைக் கொல்லன் அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று.

அந்த முன்னிருட்டு வேளையில் ஒடையின் கரையில் ஒரு பாறை மேல் அமர்த்தி அவனை உண்ணுமாறு வேண்டினான் கொல்லன். அவன் கொல்லனிடம் பேச்சுக் கொடுத்தான்:

“வேறு எந்த உணவானாலும் பருக நீரின்றிக் கூட உண்டு விடலாம் ஐயா! இந்த அவலை மட்டும் அப்படி உண்ண முடியாது! உங்களுக்குத் தெரியுமா, அவலை விக்கியே பலர் செத்துப் போயிருக்கிறார்கள். ஆனாலும் வழிப் பயணத்தில் கெடாத உணவு அவல்தான். அதனால் இந்த அவலையும், பொரிவிளங்காயையும் விட்டுத் தொலைக்கவும் முடியவில்லை.”

“செத்துப் போவதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே உண்பதும், பருகுவதும் எனக்குப் பிடிக்காது! வாழ்வதைப் பற்றிய அக்கறையுடனும், பிரியத்துடனும் உண்ண வேண்டும், பருக வேண்டும், தின்ன வேண்டும். ஐயா! சாகிறவர்கள் அவல் விக்கித்தான் சாக வேண்டும் என்பதில்லை… உண்பதற்கு அவல் கூடக் கிடைக்காததாலும் சாக முடியும்” என்றான் கொல்லன்.

இதற்கு இளைஞன் பதில் ஒன்றும் கூறவில்லை. கல் உருண்டைகளைப் போல் இருக்கிற இரண்டு பொரி விளங்காய்களை எடுத்துக் கொல்லனிடம் நீட்டினான் அவன். கொல்லனும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

வாயில் இட்டுப் பல்லால் கடிக்க முயன்று தோற்றபின், கொல்லன் அந்தப் பொரிவிளங்காயை எடுத்துப் பாறை மேல் அடித்து உடைக்கலானான். அப்படியும் அது உடையவில்லை. கொல்லன் சிரித்தான்.

“ஏன் ஐயா சிரிக்கிறீர்கள்? பொரிவிளங்காய் உங்களுக்குப் பிடிக்காதா?”

“பிடிக்குமா, பிடிக்காதா என்பதை விட உடையுமா, உடைக்குமா என்பதுதான் இப்போது பொருத்தமான கேள்வியாக இருக்கும் போலிருக்கிறது. இந்தப் பொரி விளங்காயை வைத்து மதுரைக் கோட்டையையே கூட உடைத்துக் களப்பிரர்களை ஒடச் செய்து விடலாம்…”

அவன் இதைக் கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். பின்பு சொன்னான்: –

“வாயில் சிறிது நேரம் ஊறினால், அப்புறம் தானே உடைந்து விடும்.” “ஆம், உண்மைதான். சிறிது ஊற விட்டால் எதுவும் உடைந்து போய் விடும்.” கொல்லனின் இந்த வாக்கியத்தை அந்த இளைஞன் மிகவும் இரசித்துப் பாராட்டினான். அவன் உண்டு முடித்ததுமே, “பெரியவரைக் காக்க வைக்கக் கூடாது. நாம் விரைவில் போக வேண்டும்” என்று துரிதப்படுத்தி அவனை அழைத்துக் கொண்டு இருளில் பயணத்தைத் தொடர்ந்தான் கொல்லன். கொற்கை இளைஞன் சிறிது தொலைவு நடப்பதற்குள்ளாகவே தள்ளாடினான். மிகவும் கோமளமான மெல்லுடல் வாய்ந்த அவன், வாடிப் போய்த் தளர்ந்து விட்டான் என்று புரிந்தது. சிரிக்கச் சிரிக்க எதை,எதையாவது வம்பு பேசி உற்சாகப்படுத்தியே அவனை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இளைஞன் இவனைக் கேட்டான்.

“அந்தப் பொரிவிளங்காய்களை உண்ண முடிந்ததா இல்லையா?”

“இல்லை! பத்திரமாக வைத்திருக்கிறேன். நாளைக்கோ, நாளன்றைக்கோ ஊர் திரும்பிய பின், என் உலைக் களத்தில் சம்மட்டியால் அடித்து நொறுக்கினால் அது உடையலாம். யார் கண்டார்கள்? உங்களுடைய கொற்கைப் பொரி விளங்காய் என் சம்மட்டியையே உடைத்தாலும் வியப்பு அடைவதற்கில்லை.”

இதைக் கேட்டும் அவன் விழுந்து, விழுந்து சிரித்தான். சிறு குழந்தையைக் கதை சொல்லி உறங்கச் செய்வது பேர்ல் அவனைச் சிரிக்க வைத்துக் களைப்புத் தெரியாமல் அழைத்துப் போக வேண்டிய கடமை கொல்லனுக்கு இருந்தது. அன்று பகலில் திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையின் நளின உணர்வுகளைக் கலைத்து விடாமல் காப்பதற்காக, இரும்பில் வேலை செய்து பழகிய தான், பொன்னிற் புனைபவன் போல் இங்கிதமாகப் பேசிப் பழக வேண்டியிருந்ததை ஒப்ப, இப்போது இந்தக் கொற்கை நகர் விடலைப் பிள்ளையாண்டானிடம் நகை வேழம்பனைப்[3] போல்தான் நடிக்க வேண்டியிருப்பது கொல்லனுக்கே புரிந்தது. திருமால் குன்றத்திலிருந்து மதுரைக்கும், திருமோகூருக்கும், திருமோகூரிலிருந்து மறுபடி திருமால் குன்றத்துக்கும் என்பதாகக் கடந்த சில தினங்களாய் இடைவிடாமல் அலைந்ததனால், இரும்புத்தசைகள் எனத் திரண்டிருந்த கொல்லனின் முழங்கால் கூட வலித்தன. ‘தன் பணிகளையும், தான் ஒடும் ஒட்டங்களையும், பெண்ணின் நளினங்களைக் கொண்ட அந்த இளம் ஆண் பிள்ளையால் ஒரு நாள் போதாவது தாங்க முடியுமா?’ என்று நினைத்துப் பார்த்தான் கொல்லன். இப்படி எண்ணியவாறே அந்த இளைஞனும் உடன் வரக் குறுகலான காட்டு வழியே நடந்து கொண்டிருந்த போது, ஒரிடத்தில் எதையோ பார்த்து விட்டுப் பயந்து அலறிப் பின் வாங்கினான் இளைஞன்.

அவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தால், காட்டு மரங்கள் எரியும் தீ வெளிச்சத்தில் தேர் வடம் போன்ற பூதாகரமான மலைப்பாம்பு ஒன்று, காட்டு எலியைப் பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது.

இளைஞன் பயந்தாங்கொள்ளியாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், பேதைத் தன்மை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கொல்லன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் புரிந்து கொண்டான். திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி, தென்னவன் சிறுமலை வேங்கைப்புலி மாறன் ஆகிய தீரர்களோடு இணையாக இவனை நினைத்துப் பார்க்கவும் கூட முடியாமலிருந்தது.

“மலைப்பாம்பு எலியை விழுங்குகிறது! அதில் நீங்கள் பயப்பட ஒன்றும் இல்லை. பேசாமல் என்னோடு நடந்து வர வேண்டும் நீங்கள். உங்களுக்கு எந்த அபாயமும் வராது”, என்று தைரியம் கூறி, அந்த இளைஞனை மேலே வழி நடத்திச் சென்றான் கொல்லன். ஒரு நிலைமைக்கு மேல் கொல்லனுக்குக் கோபமே கூட வந்து விட்டது. நல்லடையாளச் சொல் வெளியாகி விட்ட கவலை, களப்பிரர்களின் கொடுமை, இவற்றைப் பற்றிய தீவிரமான சிந்தனைகளுக்கு நடுவே வெறும் பிள்ளைக் கதைகளையும் பெருஞ் சிரிப்பையும் மட்டும் விரும்பும் ஒருவனை வழி நடத்திப் போவது பெரியவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அதை அவன் செய்தாக வேண்டியிருந்தது.

குடுமி
தொல்காப்பியம் சொல்லதிகாரம் 164-ம் சூத்திர உரை – சேனாவரையர்.
நகைச்சுவைக் கூத்தாடுபவன்

Previous articleRead Nithilavalli Part 2 Ch12 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 2 Ch14 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here