Home Na Parthasarathy Read Nithilavalli Part 2 Ch2 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch2 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

77
0
Read Nithilavalli Part 2 Ch2 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 2 Ch2|Na. Parthasarathy| TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – சிறைக்கோட்டம்

அத்தியாயம் 2 : மாவலி முத்தரையர்

Read Nithilavalli Part 2 Ch2 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நன்றாக மழித்து முண்டனம்[1] செய்து மின்னும் தலையும் நீண்டு தொங்கும் காதுகளும், கண்களின் கீழேயும் நடு நெற்றியிலும் கோரமாகத் தழும்பேறிய கருமையுமாக மாவலி முத்தரையர் எழுந்து நின்றார். ஒரு குருவுக்குரிய சாந்தமோ, அமைதியோ அவர் கண்களில் இல்லை. நெற்றியிலும், கண்களின் அடியிலேயும் இருந்த கறுப்புத் தழும்புகள் வேறு, மேலும் அந்த முகத்தைக் கொடூரமாகக் காண்பித்தன. பார்த்த மாத்திரத்திலேயே ஒரு கபட சந்நியாசிக்கு முன் நிற்கிறோம் என்று உணர வைத்து விடும் அளவுக்கு அவர் தோற்றமும் அவர் மேற்கொண்டிருந்த புனிதமான கோலமும் முரண்பட்டன. அவர் பேசலானார்:-

“கலியா! இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் ஏற்கெனவே உன்னுடைய பூத பயங்கரப் படையினர் மூலம் நீ தெரிந்து கொண்டிருப்பதை விட அதிகமான செய்திகளை நான் கூற முடியும் என்று நினைக்கிறேன். தென் பாண்டி நாட்டு நெற்கழனிகளில் நெல்லும், கொற்கைத் துறைச் சிலாபங்களில்[2] முத்துகளும், பொதியமலையில் சந்தனமும், தேக்கும், அகிலும் விளைகின்ற மகிழ்ச்சியில், என்றோ கைப்பற்றிய இந்தப் பாண்டிய நாட்டைக் கவலையில்லாமல் ஆண்டு கொண்டிருக்கலாம் என்று நீயும், நானும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தம்மைச் சுற்றி உள்நாட்டிலேயே உருவாகிக் கொண்டிருக்கும் அபாயங்களையும், பகைகளையும் நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இதை மிக நன்றாக உணர்ந்திருக்கிறேன்.” “அடிகள் உணர்ந்தால் நானே உணர்ந்தது போல்தான்! பாண்டியர்கள் கலகம் செய்து ஆகப் போவது என்ன? நாம்தான் அந்தப் பழம் பெரும் அரச மரபை மறுபடியும் தலையெடுக்க முடியாதபடி பூண்டோடு அழித்து விட்டோமே? வம்சமே இல்லாமற் போய் விட்ட ஒரு குலம் மறுபடி வாகை சூட முடியுமா?”

“கலியா! பலமுறை நீ என்னிடம் இப்படியே கூறி வருகிறாய்! உன் நினைப்புத் தவறானது. மேலாகத் தெரியும் அடி மரத்தின் வாட்டத்தைக் கொண்டு கீழே வேர்கள் எல்லாமே வாடி விட்டன என்பதாக நீ அநுமானம் செய்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். பாண்டிய அரச ம்ரபுக்கு இன்னும் வேர்கள் இருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”

“எதைக் கொண்டு தாங்கள் அப்படி நம்புகிறீர்கள்?”

“மிகப் பெரிய ஆலமரங்கள் எளிதாக அழிவதில்லை!”

“அழித்துப் பல ஆண்டுகள் கடந்து விட்டனவே?”

“விழுதுகளில் சிலவற்றை அழித்து விட்டு மூல விருட்சமே பட்டுப் போய் விட்டதாக நீ நினைக்கிறாய்?”

“மூலவிருட்சம் எங்கே இருக்கிறது?”

“எங்கே இருக்கிறது என்பதுதான் எனக்கும் தெரியவில்லை. ஆனால், இருக்கிறது என்பதை மட்டும் நம்புகிறேன். அந்த மூல விருட்சத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?”

“தெரியாது! அதையும் தாங்கள்தான் கூறியருள வேண்டும் அடிகளே!”

“வைகை வள நாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென்பாண்டிய மதுராபதி வித்தகன்! அவன் உயிரோடு இருக்கும் வரை பாண்டிய குலம் அழிந்திருக்கும் என்பதை நான் நம்ப மாட்டேன்! பாண்டிய குலம் அழிந்திருந்தால், அந்தக் கிழச் சிங்கம் இதற்குள் வெளிப்பட்டு வந்து காவியுடை தரித்துத் துறவியாகி இருக்கும். அந்தக் கிழச் சிங்கம் இன்னும் மறைந்திருப்பதே பாண்டிய மரபின் வேர் இன்னும் இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஊக்கமுடையவன் ஒடுங்கியிருப்பதும், மறைந்திருப்பதும் பயத்தினால் அல்ல. இயலாதவர்கள் ஒடுங்குவது கையாலாகாமை. இயன்றவர்கள் ஒடுங்குவது தங்களை மேலும் வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே.”

“இருக்கட்டும்! ஆனால் ஒரு துறவி தனியாகத் தான் மட்டுமே முயன்று அழிந்து போன பேரரசு ஒன்றை மீண்டும் எப்படி உருவாக்க முடியும்?”

“துறவியா? யார் துறவி? நான் உயிரோடு இருக்கிற வரை அந்த மதுராபதி துறவியாக இருக்க முடியாது. அவன் உயிரோடு இருக்கிற வரை நானும் முழுத் துறவியாக இருக்க முடியாது. துறவிகள் விருப்பு வெறுப்பற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அவன் உயிரோடு இருக்கிற வரை எனக்கும் நான் உயிரோடு இருக்கிற வரை அவனுக்கும் வெறுப்பதற்கும், பகைப்பதற்கும் நிறைய விஷயங்கள் உண்டு…”

“நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை அடிகளே!”

“புரிவது சற்றே சிரமமானதுதான். களப்பிரர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையிலுள்ள இந்தப் பழம் பகையில், இரண்டு அறிவு வீரர்களின் தனிப் பகையும், குரோதமும், பொறாமையும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. காலம் வரும் போது அது உனக்குத் தெரியும். இந்த இரண்டு அறிவாளிகள் ஒருவரை மற்றொருவர் எப்படிப் பழி தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த மற்றொரு பகையின் முடிவும் இருக்கும்.”

இதைக் கூறும் போது மாவலி முத்தரையரின் அந்தக் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்துவிட்டன. அவருடைய சரீரமே தீப்பற்றி எரிவது போல் கனன்று புழுங்கியது. நெருப்பாய்க் கொதிக்கிற பகைமையும், குரோதமுமே வந்து எதிரே வடிவு கொண்டு நிற்பது போல் அப்போது களப்பிரக் கலிய மன்னனின் முன்னிலையில் தோன்றினார் மாவலி முத்தரையர்.

அவருடைய முன்னிலையில், அப்போது நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகர் எதிர்ப்பட்டால், தாவிப் பாய்ந்து கழுத்தை நெறித்துக் கொன்று விடுவார் போன்று மாவலியார் அவ்வளவு கோபமாயிருந்தார். அந்த அரசவையில் அப்போது, மாவலி முத்தரையரை எதிர்த்துப் பேசவோ வாதம் செய்யவோ துணிந்தவர்கள் யாருமில்லை.

அவர் போர்த்திக் கொண்டிருந்த துறவுக் கோல உடை கூட அந்த வேளையில் உடையாகத் தோன்றாமல் அவரது சரீரமே கோபத்தால் கனல் பற்றிக் கொழுந்து விட்டு எரிவது போல் தோற்றமளித்தது. மதுராபதி வித்தகர் மேல் உள்ள ஆறாச் சினத்தைத் துறவு நிலைக்குப் பின்னும் விட முடியாத அளவிற்கு அது ஆழமானது என்பதை மாவலி முத்தரையரின் முகத்திலிருந்து அறிய முடிந்தது. அறிவுப் பகை துறவியானாலும் நீங்காது போலிருக்கிறது. அதே சமயத்தில், மதுராபதி வித்தகர் பற்றி மாவலி முத்தரையர் கூறிய சினம் மிக்க வார்த்தைகளின் ஊடே கூட, ‘உன்னளவு நான் உயரமுடியாத படி நீ இணையற்ற உயரத்துக்கு அறிவிலும் சாதுரியத்திலும் வளர்ந்து நிற்கிறாயே’ –என்று மதுராபதி வித்தகரை நோக்கிப் பெறாமைப்படும் தொனியே புலப்பட்டது. மதுராபதி வித்தகரின் மேல் முதலில் மதிப்பு ஏற்பட்டு, அந்த மதிப்பே நாளடைவில் ஆற்றாமையாகவும், கோபமாகவும், பொறாமையாகவும், மாறி உருவெடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. மாவலி முத்தரையர் முதலில் ஏலாமையாலும், அதன் பின்பு சினத்தினாலுமே கனன்றார் என்பதையும் அநுமானிக்க முடிந்தது. தன் பகையை அரசியற் பெரும் பகையாக மாற்றவும் அவரால் இயன்றது.

மொட்டைத் தலை
முத்துக் குளிக்கும் இடம்

Previous articleRead Nithilavalli Part 2 Ch1 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 2 Ch3 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here