Home Na Parthasarathy Read Nithilavalli Part 2 Ch20 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch20 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

91
0
Read Nithilavalli Part 2 Ch20 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 2 Ch20|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch20 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – சிறைக்கோட்டம்

அத்தியாயம் 20 : பெருஞ்சித்திரன் பேசினான்

Read Nithilavalli Part 2 Ch20|Na.Parthasarathy|TamilNovel.in

நீராடிப் புலர்த்திய கூந்தல் முதுகில் புரள, அந்தக் கூந்தலோடு தெரிந்த அவன் முகம் பெண் பிள்ளை ஆண் கோலம் புனைந்து வருவது போலிருந்தது. பெரியவரை வணங்குவதற்காகத் தரையில் நெடுஞ்சாண் கிடையாக அவன் விழுந்த போது கூட இயல்பாக வணங்குவதற்குக் கீழே கிடப்பது போல அமையாமல் நாணிக் கோணித் தடுக்கி விழுவது போல் அமைந்தது. வணங்குகிறவனை வாழ்த்த வேண்டுமே என்ற முறைக்காகப் பெரியவர் அவனை வாழ்த்தினார்.

“நீ பாண்டியகுல அரசுடைமைச் சின்னங்களாகிய நவநித்திலங்களை, இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறாய்! அதற்காக உனக்கு நன்றி சொல்ல வேண்டும்! உன் குடும்பத்து உடைமையை, அந்தக் குடும்பத்தில் ஒருவனாகிய நீயே கொண்டு வந்திருப்பதற்கு நான் நன்றி கூறுவது முறையில்லை என்றாலும், உன்னை ஒத்த பருவத்து விடலைப் பிள்ளைக்கு நன்றியும், பாராட்டும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் என்பதை உணர்ந்தே நான் இப்படிப் பாராட்டுகிறேன்.” அந்தப் பிள்ளை விடலைத் தனம் நீங்கிப் பொறுப்புள்ளவனாக வளர்ந்திருக்கிறானா, இல்லையா என்பதை மிகமிகத் தந்திரமான முறையில் பரிசோதனை செய்ய விரும்பித்தான் அவர் இவ்வாறு சிறிதும் பொருத்தமற்ற விதத்தில் சற்றே அதிகமான வார்த்தைகளைக் கொட்டி அவனுக்கு நன்றி கூறியிருந்தார். தகுதியற்றவனைத் தூற்றி வசை பாடித்தான் அவமானப்படுத்த வேண்டும் என்பதில்லை; அளவற்றுப் புகழ்வதன் மூலமாகவும் அவமானப்படுத்த முடியும். எதிரிகளை வசை பாடி அவமானப் படுத்துவது பாமரர்கள் காரியம். துதிபாடி அவமானப் படுத்துவது அரச தந்திரிகள் காரியம். கொற்கைப் பெருஞ்சித்திரன் மதுராபதி வித்தகருக்கு எதிரி இல்லை என்றாலும், பலவீனமான துணைவனாகவே இருந்தான். முதல் தரமான விரோதியை விடப் பலவீனமான நண்பன் கெடுதலானவன் என்று பெரியவருக்குத் தெரியும்.

தாம் அவனுக்கு நன்றி கூறி, அவன் நவநித்திலங்களைக் கொற்கையிலிருந்து கொண்டு வந்து சேர்த்ததைப் பாராட்டிய வஞ்சப் புகழ்ச்சியைப் புரிந்து கொண்டு உடனே அவன், “ஐயா, நீங்கள் இந்த எளியேனை நன்றி கூறிப் பாராட்டலாமா? நானும் என் மரபினரும் தங்களுக்கு அல்லவா, கல்பகோடி காலத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்?” என்பதாக உபசாரத்துக்காகவாவது சொல்கிறானா, இல்லையா என்று எதிர்பார்த்தே அவர் பேசியிருந்தார். அரச குடும்பத்துப் பிள்ளைக்கு இருக்க வேண்டிய தந்திரமும், உடனே அநுமானித்து முடிவெடுக்கும் இயல்பும், இந்தப் பிள்ளையிடம் சிறிதேனும் இருக்கிறதா, இல்லையா என்று முடிவாக அறியவே அவர் இதைச் செய்ய வேண்டியிருந்தது.

கொற்கைப் பெருஞ்சித்திரனோ, அவர் தன்னைப் புகழ்ந்து நன்றி சொல்லுவதை மெய்யாகவே வார்த்தைக்கு வார்த்தை பொருளுள்ளதாக எடுத்துக் கொண்டு மகிழ்ந்து முகம் மலர்ந்தான்.அதோடு அமையாமல், “ஐயா! வழி நடைக் களைப்பும் சோர்வும் எனக்குச் சொல்லி மாளாத அளவு வேதனையைக் கொடுத்து விட்டன. இந்த முனையெதிர் மோகப் படை வீரர் மட்டும் வந்து, என்னை எழுப்பியிருக்க வில்லையாயின் இன்னும் மூன்று நாளானாலும், என்னுடைய தூக்கம் கலைந்திருக்காது” என்றான் பெருஞ்சித்திரன். மதுராபதி வித்தகர் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டார். அவர் மனம் உள்ளே நகைத்தாலும், முகம் சலனமற்று இருந்தது.

“அப்படியா? நாம் நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காகத்தானே களப்பிரர்கள் நமக்குப் பல்லாண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஒய்வு கொடுத்திருக்கிறார்கள் பெருஞ்சித்திரா? கொற்கையில் இவ்வளவு காலமாக நீ செய்து கொண்டிருந்ததும் அதுதானே?”

அவருடைய அந்தக் கேள்விக்கு அவன் மறுமொழி கூறவில்லை. இப்போது அவன் தலை குனித்து நின்றான். அவர் தன்னைப் புகழவில்லை என்பதும், சினத்தோடு எள்ளி நகையாடிப் பேசுகிறார் என்பதும் மெல்ல அவனுக்கு உறைத்து விட்டது. எனவே, அவனால் அவருக்கு உடனே மறுமொழி எதுவும் கூற முடியவில்லை.

“சோனகர் நாட்டிலிருந்து வரும் குதிரைக் கப்பல்கள் கொற்கைத் துறைக்கு வந்து விட்டனவா, இல்லையா? அந்தக் கப்பல்கள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தும், நீ அதன்படி செயல்படவில்லை.”

“………”

“கொற்கைக் குதிரைக் கொட்டாரத்து இளநாக நிகமத்தான் எப்படி இருக்கிறான்? அவனுக்காவது பாண்டிய மரபின் மேல், இன்னும் நன்றியும், நம்பிக்கையும் நன்றாக இருக்கிறதா இல்லையா?”

“……….”

“நீ விழித்துக் கொண்டிருக்கிறாயா? அல்லது என் எதிரே நின்றபடியே உறங்குகிறாயா என்பதாவது எனக்கு உடனே தெரிய வேண்டும்! நான் கேட்கக் கேட்க நீ பதிலே சொல்லாமல் நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?”

இந்தக் குரலின் கனம் தன்னை அழுத்துவது போல் உணர்ந்தான் கொற்கைப் பிள்ளையாண்டான்.அவனுடைய நா பேச மேலெழாமல் ஒட்டிக் கொண்டாற் போல ஆகி விட்டது. துணிந்து பேசலாம் என்றாலோ நாக்குழறி விடுமோ என்றும் பயமாக இருந்தது. அவருடைய கண்கள் இரண்டும் இமையாமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வார்த்தையாக மெல்ல அவன் பேசலானான்.

“குதிரைக் கப்பல் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன… ஆனால், அந்தக் குதிரைகளை எல்லாம் உடனேயே அங்கிருந்து இங்கே கோநகரத்துக்குக் கொண்டு… வந்து விட மாட்டார்கள். ஏறக்குறைய ஆறு திங்கள் காலமாவது அவற்றைப் பழக்கி வசப்படுத்திய பின்பே ஏறிப் பயணம் செய்யவோ, தேர்களில் பூட்டவோ, கடிவாளமிடவோ, அவை பயன்பட முடியும்.”

“போதும்! போதும்! பேச்சை நிறுத்து. எனக்கு நீ குதிரையின் விலங்கியல்புகளைப் பற்றிப் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கப்பல்கள் வந்தாயிற்றா, இல்லையா என்பதுதான் உன்னிடமிருந்து எனக்குத் தெரியவேண்டும்.”

“அதுதான் வந்தாயிற்று என்று முதலிலேயே சொன்னேனே…?”

“குதிரைக் கோட்டத்து இளநாக நிகமத்தான்[1] பற்றி நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் மறுமொழி கூறவேயில்லையே?”

“அவர் என்னிடம் மனம் விட்டு எதுவும் பேசுவதில்லை. நாளும், நேரமும் குறிப்பிட்டு நவ நித்திலங்களைக் கொண்டு வந்து சேர்க்குமாறு நீங்கள் செய்தியனுப்பிய பின் என்னைக் கூப்பிட்டுப் பல அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் செய்த பின் திருமோகூருக்கு அனுப்பி வைத்தார். இன்னொன்று இப்போதுதான் நினைவு வருகிறது. நான் அங்கிருந்து புறப்படுமுன் தங்களிடம் தெரிவிப்பதற்கென்று ஏதோ சில அந்தரங்கமான செய்திகளைத் தொகுத்து, என்னிடம் உரைப்பதாகக் கூறியிருந்தார். புறப்படும் முன்பாக நானும் அவற்றை எல்லாம் நினைவூட்டிக் கேட்டேன். ஆனால் என்ன காரணத்தாலோ கடைசியில் எதுவும் கூறாமலே, முத்துகளுடன் அவர் என்னை அனுப்பிவிட்டார்….”

“கூறுகிறவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியாவிட்டால், கூறப்படுகிறவர்களால் எதையும் பெறமுடியாமல் போவது இயல்பு…”

“…….”

“நிகமத்தான் இங்கு வருவதாகச் சொன்னானா?”

“என்னிடம் அப்படி ஏதும் சொல்லவில்லை… ஆனால், வந்தாலும் வரலாம் ஐயா!”

“பதில் மட்டும் போதும்! உன்னுடைய அநுமானமோ, உய்த்துணர்வோ எனக்குத் தேவையில்லை. ஏனெனில் அவற்றைச் செய்யவோ, சொல்லவோ போதிய பக்குவம் உனக்கு வந்திருப்பதாகத் தோன்றவில்லை. இப்போது நீ போகலாம். நான் மறுபடி சொல்கிற வரை நீ இங்கிருந்து எங்கும் போகக் கூடாது. இந்த மலை எல்லையில், இதோ உன் அருகில் இருக்கிறானே இவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டு எப்போதும் உன்னோடு இருப்பான். நீயாகத் தனியே எங்காவது செல்ல முயன்றாயோ களப்பிரர்கள் பனங்காயைச் சீவுவது போல் உன் தலையைச் சீவி விடுவார்கள்…”

இதைக் கேட்டு அவன் முகத்திலும், கண்களிலும் பயத்தின் சாயல் வந்து படர்ந்தது. அவரை வணங்கி விட்டு, வெளியே இருந்த முனையெதிர் மோகர் படை வீரனோடு போய்ச் சேர்ந்து கொண்டான் அந்த இளைஞன். அந்தக் காவல் வீரனை மட்டும் தனியே உள்ளே கையசைத்து அழைத்தார் மதுராபதி வித்தகர். அவன் வந்தான். “அதிக எச்சரிக்கையோடு கவனித்துக் கொள் இந்தப் பிள்ளையாண்டானைப் போல் மன உறுதியற்றவர்கள் எதிரிகளிடம் சிக்கி விட்டால் அதைப் போன்று வினை வேறு இல்லை” என்று அவனிடம் பெருஞ்சித்திரனைப் பற்றி அழுத்தமாக எச்சரித்து அனுப்பி வைத்தார் அவர்.

அவர்கள் சென்றபின், அவர் சிந்தனையில் இளைய நம்பியையும், தென்னவன் மாறனையும், பெருஞ்சித்திரனையும் ஒப்பு நோக்கிய பல்வேறு எண்ணங்கள் எழுந்தன. இளையநம்பியை விட வலியவனும், மூத்தவனும் ஆகிய தென்னவன் மாறனின், முன் கோபமும், முரட்டுத் தனமும் கூட ஓரளவு குறைபாடுடைய அரச குணங்களாகவே அவருக்குத் தோன்றின. இணையற்ற அரசகுணம் என்பது பிறருடைய சிந்தனைக்கு உடனே பிடிபடாத பல தந்திரங்களைக் கொண்டது. அது இளையநம்பியிடமும் அதிகமாக வளர்ந்திருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் இளையநம்பியிடம் அவர் எதிர் பார்க்கும் அரச சுபாவங்களை உண்டாக்கி பக்குவப்படுத்துவதற்கான மூலக்கூறு இருப்பதாகத் தோன்றியது அவருக்கு.

இவர்களில் மூன்றாமவனாகிய பெருஞ்சித்திரனைப் பற்றி அவர் நினைக்கவே ஒன்றும் இல்லாமல் போயிற்று. அவர் சிந்தனை பாண்டிய நாட்டின் நாளைய தினங்களைப் பற்றியதாக இருந்தது. அதில் கவனம் செலுத்தும் கடமையும் அவருக்கு இருந்தது.

அந்த வேளையில் முற்றிலும் எதிர்பாராதவிதமாக அவருடைய ஆபத்துதவிகள் இருவரும் பரபரப்பாக அங்கே மூச்சு இரைக்க உள்ளே நுழைந்தனர். அவர்கள் வந்த நிலை மிக மிகப் பதற்றமானதாக இருக்கவே அவர் சலனமடைந்தார். ஏதோ புதிய அபாயம் நெருங்கியிருக்க வேண்டும் என்பது ஒன்று மட்டுமே அப்போது அவருக்குப் புரிய வந்தது.

வணிகன்

Previous articleRead Nithilavalli Part 2 Ch19 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 2 Ch21 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here