Home Na Parthasarathy Read Nithilavalli Part 2 Ch21 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch21 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

106
0
Read Nithilavalli Part 2 Ch21 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 2 Ch21|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch21 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – சிறைக்கோட்டம்

அத்தியாயம் 21 : ஒரு போதையின் உணர்வுமே

Read Nithilavalli Part 2 Ch21|Na.Parthasarathy|TamilNovel.in

பெரியவர் மதுராபதி வித்தகரின் புதிய நல்லடையாளச் சொல் பற்றிய ஒலையை வையையாற்றின் திருமருத முன்துறையில் வரிசையாக இருந்து மருத மரங்களில் ஒன்றில் வைத்து விட்டு, விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே, திருமோகூர் திரும்பியிருந்தான் கொல்லன். ஊர் திரும்பியதும், உடனே காராளரைச் சந்தித்துப் புதிய நல்லடையாளச் சொல்லை அறிவிக்க வேண்டியிருந்தாலும், பூத பயங்கரப் படையினருக்காக, ஒரு போக்குக் காட்ட நினைத்துத் தன் உலைக்களத்திற்குச் சென்றான் அவன். விடாத நடையினால் கைகால்கள் சோர்ந்திருந்தன. கண்களில் உறக்கம் வந்து மன்றாடிக் கொண்டிருந்தது. விடிகின்ற வரை காத்திருக்க முடியாமல், அவன் மனம் பரபரப்படைந்தது. காராளரைச் சந்திக்க விரும்பியது.

அதே வேளையில், திருமோகூர் பெரிய காராளர் மாளிகையில் வேறோர் மெல்லிய இதயமும் உறக்கமின்றி, சிந்தித்துத் தவித்துக் கொண்டிருந்தது. வைகறையின் தண்மையில் பூக்கள் இதழ் விரிக்கும் அந்த அருங்காலை வேளையில் செல்வப் பூங்கோதையின் இதய மலரும், இதழ் விரித்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அந்த ஒரு பெரிய மலரில் பல்லாயிரம் பூக்கள் நறுமணமும் ஒருங்கிணைந்தது போல் அவ்வளவு நினைவுகளை அவள் நினைத்திருந்தாள். பூட்டி வைத்தாலும் பேழைக்கு உள்ளேயே மணக்கும் சந்தனத்தைப் போல் நினைவுகள் அவள் உள்ளத்தில் மணந்து கொண்டிருந்தன. அவளுடைய இந்த நிலையை, அவள் தாயும் கண்டிருந்தாள்.

“உறங்கவில்லையா மகளே? இரவு முழுவதும் உன் கைகளின் வளை ஒலிகளையும், நீ படுக்கையில் புரள்வதை யும், பெருமூச்சு விடுவதையும் நான் கண் விழித்த போதெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஏன் இப்படி இருக்கிறாய்? எதை நினைத்து வேதனைப்படுகிறாய்? உன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லையடீ பெண்ணே…?” என்று எதை நன்றாகவும், தெளிவாகவும் புரிந்து கொண்டிருந்தாளோ, அதை ஒரு சிறிதுமே புரிந்து கொள்ளாதவள் போல் பேசினாள் செல்வப்பூங்கோதையின் தாய். ஒரு தாய் புரிந்து கொண்டாலும், புரிந்து கொண்டிருப்பதை உடனே மகளிடம் வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாத மிக நுண்ணிய உணர்வைச் செல்வப்பூங்கோதையின் தாயும் அப்போது அடைந்திருந்தாள். தான் நினைப்பவை எதுவும் தாய்க்குப் புரியவில்லை என மகளும், தான் புரிந்து கொண்டவை எதுவும் மகளால் அறிந்து கொள்ளப்படவில்லை எனத் தாயும், தத்தமக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

செல்வப் பூங்கோதை மிகவும் சாதுரியமாக நடந்து கொள்கிறவளைப் போல், “அம்மா! அந்தத் திருக்கானப்பேர் இளைஞர் மீண்டும் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி, ‘அவர் இப்போது இங்கே இல்லாததைப் பற்றித் தெரியாமல், அவரைக் காணலாம் என்னும் ஆசையில் இங்கே புறப்பட்டு வந்தால் என்ன செய்வது? களப்பிரர்கள் இந்த ஊரெல்லாம் மூலைக்கு மூலை பூத பயங்கரப் படையினரை உலாவ விட்டிருப்பதும், பெரியவர் இந்த ஊரை விட்டு வெளியேறியிருப்பதும் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ?” என்று தன் அன்னையைக் கேட்டாள். மகள் தன் சொற்கள் மூலமே வகையாக மாட்டிக் கொள்வதைப் புரிந்து கொண்ட தாய் அதற்காக உள்ளுறச் சிரித்துக் கொண்டாள். அன்பும், பிரியமும் தன் மகளை எவ்வளவு பேதைமையுள்ளவளாக்கி விட்டன என்று எண்ணிப் பார்த்தாள் தாய். அன்பைப் பிடிவாதமாகச் செய்வதற்குப் பேதைமையும் ஓரளவு வேண்டும் என்றே தோன்றியது தாய்க்கு. பேதைமை அறவே இல்லாத காய்ந்த அன்பில், எந்த நெகிழ்ச்சியும் இருக்க முடியாது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். பெரியவர் திருமோகூரை விட்டு வெளியேறியிருப்பதும், பூத பயங்கரப் படையின் தொல்லைகள் பெருகியிருப்பதும் முறையாகவும், மிக விரைவாகவும் இளையநம்பிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்திருந்தும், மகள் ஏன் இப்படி அறவே அறியாதவள் போல், தன்னை அது பற்றி வினாவுகிறாள் என்பது புரிந்து நினைத்தாள் தாய். யாரிடமாவது உடனே திருக்கானப்பேர் இளைய நம்பியைப் பற்றிப் பேச வேண்டும் என்ற மகளின் ஆர்வத்தை இதிலிருந்து தாய் அறிந்து கொள்ள முடிந்தது. எதையோ மிகவும் திறமையாக ஒளிக்க முயல்கிறவளைப் போன்ற முயற்சியில், அதையே வேறொரு விதத்தில் தெளிவாகத் தெரியச் செய்து கொண்டிருக்கும் மகளின் நிலைமையைப் புரிந்து கொண்டாலும், அவள் மனம் அந்தப் பேதைமையில் நினைப்பதனால் அடைய முடிந்த மகிழ்ச்சியைத் தான் தடுக்கக் கூடாதென்று, மகளை விடப் பெரிய பேதையைப் போல் நடித்தாள் தாய். அந்த நடிப்பையும் அவள் மகளுக்காகவே செய்ய நேர்ந்தது.

“நீ நினைப்பது போல் ஆண் பிள்ளைகளும் அரச கருமத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், அவ்வளவு வெள்ளையாக நடந்து கொண்டு எதிரிகள் கையிலே சிக்கி விட மாட்டார்கள் பெண்ணே” என்று தாய் மகளுக்கு மறுமொழி கூறிக் கொண்டிருந்த வேளையிலேயே, மாளிகையின் முன் கூடத்தில் காராளரும், கொல்லனும் பேசும் குரல்கள் உட்புறம் கேட்கத் தொடங்கின. அப்போது ஏறக்குறையப் பொழுது புலர்கிற வேளை ஆகியிருந்தது. கூட்டத்திலிருந்து கேட்க முடிந்த பேச்சுக் குரல்களைக் கொண்டு உய்த்துணர்ந்து, கொல்லன் திரும்ப வந்திருக்க வேண்டும் என்பதைச் செல்வப் பூங்கோதையும் தாயும் புரிந்துகொண்டனர். உடனே மாளிகைக் கூடத்துக்கு ஒடிப் போய்க் கொல்லன் தந்தையாரிடம் என்ன கூறுகிறான் என்பதையும், தந்தையார் அவனிடம் எதை, எதை வினாவுகிறார் என்பதையும் ஒட்டுக் கேட்க ஆவலாயிருந்தது செல்வப் பூங்கோதைக்கு. ஆனால் நன்றாக விடியாத அந்த இருட்காலையில் அவசர, அவசரமாக எழுந்து ஒடிப்போய்த் தந்தையாருக்கு முன் நிற்கவும் தயக்கமாக இருந்தது மகளுக்கு. ஒரு வேளை தாய் எழுந்து போய்த் தந்தையாரும், கொல்லனும் பேசுகிற இடத்தில் நின்று கொண்டால், தானும் தாயோடு சென்று நிற்க முடியும் என்று தோன்றியது மகளுக்கு. அவள் தாயைக் கேட்டாள்:

“அம்மா! கொல்லன் மறுபடியும் திரும்ப வந்திருக்கிறான் போலிருக்கிறதே; தந்தையும், கொல்லனும் பேசிக்கொள்ளும் குரல் கேட்கிறதே?”

“ஆமாம்! கொல்லன் வந்திருக்கிறான்…”

“நான் எழுந்திருந்து போக நேரமாகவில்லையா அம்மா? நீராடப் போகும் வேளையாகிவிட்டதே!”

“மகளே! நீராடப் போவதற்காகப் புறப்பட வேண்டுமா? அல்லது கொல்லனும் உன் தந்தையும் உரையாடுவதைக் கேட்க வேண்டுமா? உன் மனம் எனக்குப் புரிகிறது” என்று கேட்டுவிட்டு மெல்லச் சிரித்தாள் செல்வப் பூங்கோதையின் தாய். மகள் தன் குறிப்புத் தாய்க்கும் புரிந்து விட்டதை அறிந்து நாணினாள்.

தன் அந்தரங்கத்தைப் புரிந்து கொண்ட அன்னையின் முன் பேசத் தயங்கிச் சில கணங்கள் வாளாவிருந்தாள் செல்வப் பூங்கோதை.

ஆயினும் மகளின் மனங்கோணாமல் நடந்து கொள்ள ஆசைப்பட்ட தாய் நீராடப் பொய்கைக்குச் செல்வது போல், குடத்தோடு மகள் பின் தொடரக் கூடத்தில் போய் நின்று கொண்டாள். இருவரும் கூடத்தில் நுழைந்த வேளையில்-

“…சிறைப்பட்டு விட்டவர்களைக் களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது’ என்று கொல்லன் பெரிய காராளரிடம் கூறிக் கொண்டிருந்தான். அவ்வளவில், தாயும், மகளும் எதிர்பாராத விதமாகப் பெரிய காராளரும், கொல்லனும் பேசிக் கொண்டே வெளியேறிப் போய் விட்டார்கள். அதிகாலையிலே நெற்கழனிகளிடையே வரப்புகளில் நடந்து உலவித் திரும்புகிற வழக்கத்தை உடைய காராளர், கொல்லனையும் பேசிக் கொண்டே தம்மோடு வருமாறு கூப்பிட்டுக் கொண்டு போய் விட்டார் என்பதை அவர்கள் உணர முடிந்தது.

ஆனால், கொல்லனின் வாய் மொழியாய் அரைகுறையாகக் கேட்ட அந்த வாக்கியம் மட்டுமே, அவள் மனத்தில் அல்லாத, பொல்லாத சந்தேகங்களை எல்லாம் உண்டாக்கி விட்டது. எந்த உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்றால், தன் இதயத்தைக் கொள்ளை கொண்டவரைப் பற்றிய செய்திகள் தெரியும் என்று நம்பி அவள் தாயோடு எழுந்து வந்தாளோ, அந்த நோக்கம் இப்போது வீணாகி விட்டது. ஆனாலும் கூட்டத்திற்குள் நுழைந்த வேளையில் காதில் விழுந்த வாக்கியத்தில், ‘களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது?’ … என்று குறிப்பிட்டது யாரை எண்ணிக் குறிப்பிட்டதாக இருக்கும்? ஒருவேளை திருக்கானப்பேரைச் சேர்ந்தவர் கோநகரில் ஏதாவது தீய சூழ்நிலையின் காரணமாகக் களப்பிரர்களிடம் சிக்கிக் கொண்டு விட்டாரா? அவரை மீட்பதுதான் கடினமாகத் தோன்றுகிறது என்று கொல்லன் தந்தையிடம் கூறிக் கொண்டு போகிறானா? என்றெல்லாம் எண்ணி எண்ணிச் சஞ்சலமும், சலனமும், கவலையும் அடைந்து கொண்டிருந்தது அவள் உள்ளம்.

“அம்மா! நீயும், நானும் இங்கே உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நீ கேட்டாயா? ஏதோ கவலைப்படுவதற்குரிய காரியம் நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இவ்வளவு தீவிரமாகச் சிந்தித்தபடியே பேசிக் கொண்டு வெளியே போக மாட்டார்கள் அவர்கள் இருவரும். என் மனமோ காரணம் புரியாமலே வேதனை கொள்கிறது. நீ என்ன நினைக்கிறாய்? கடவுள் அருளால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது அல்லவா?” என்று உருகி நெகிழ்ந்த குரலில், தாயைக் கேட்டாள் செல்வப் பூங்கோதை. பெண்ணின் பேதைமையையும் காரணமற்ற சந்தேகங்களையும் எள்ளி நகையாடிப் பேசி விட முடியும் என்றாலும், அவளுடைய இளமை உள்ளம் வாடி விடாமல் பாதுகாக்கக் கருதிய தாய், “நீ நினைப்பது போல் கவலைப்படுவதற்குரிய காரியங்கள் எவையும் நடந்திருக்க முடியாது பெண்ணே ஆலவாய் இறைவனும், இருந்த வளமுடைய பெருமாளும் அவருக்கு ஒரு கெடுதலும் வராமல் உற்ற துணையாயிருப்பார்கள் என்ற நம்பிக்கையும், மனோதிடமும் உனக்கு வேண்டும்” என்று ஆறுதலாக மறுமொழி கூறினாள்.

தந்தையும், தாயும் கூடப் புரிந்து கொள்ள முடியாத குறிப்பான வார்த்தைகளில் கொல்லனிடம் திருக்கானப்பேர் நம்பியின் நலனையும், பிற நிலைமைகளைப் பற்றியும் ஏதாவது விசாரிக்கலாம் என்று செல்வப் பூங்கோதை எண்ணியிருந்தாள். கொல்லனும், தந்தையும் தற்செயலாகப் பேசிக் கொண்டே வெளியேறி விட்டதால், அவள் நினைத்ததைச் செய்ய இயலவில்லை.

“நீங்களும் இங்கே அவரை நினைத்து உருகித் தவிக்கிறீர்கள். அங்கே அவரும் உங்களை நினைத்து உருகித் தவிக்கிறார். இந்தப் பாழாய்ப் போன களப்பிரர் ஆட்சி ஒழிந்ததுமே, உங்கள் இருவருக்கும் நல்லகாலம் விடியும் அம்மா!” என்பதாகச் சென்ற முறை, மதுரையிலிருந்து திரும்பியதும், கொல்லன் கூறியிருந்த ஆறுதலையே இப்போது மீண்டும் நினைத்துக் கொண்டு தாயோடு நீராடி வரப் புறப்பட்டாள் செல்வப் பூங்கோதை. தான் இங்கே எக்காலமும் அவரை நினைத்து உருகித் தவிப்பது போல், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மதுரை மாநகரில் அவர் தன்னை நினைத்துத் தவிப்பாரா என்று எண்ணி எண்ணி மனம் மருகினாள் அவள். அவர் தன்னை எண்ணி உருகுவதாகக் கொல்லன் வந்து கூறியிருந்தாலும், பேதையாகிய தான் தவிக்கும் தவிப்பிற்கும் வீர ஆண்மகனாகிய அவர் தன்னை நினைக்கும் ஞாபகத்திற்கும், நிறைய வேறுபாடு இருக்கும் என்றே செல்வப் பூங்கோதைக்குத் தோன்றியது.

Previous articleRead Nithilavalli Part 2 Ch20 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 2 Ch22 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here