Home Na Parthasarathy Read Nithilavalli Part 2 Ch23 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch23 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

61
0
Read Nithilavalli Part 2 Ch23 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 2 Ch23|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch23 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – சிறைக்கோட்டம்

அத்தியாயம் 23 : இருளில் ஒரு பெண் குரல்

Read Nithilavalli Part 2 Ch23 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

பூத பயங்கரப் படைத் தலைவன் பின் தொடர, மாவலி முத்தரையர் சிறைக் கோட்டத்துக்குள் வந்த போது, கீழே பாதாள நிலவறைக்குள் இருந்த தென்னவன் மாறனைக் காண்பதற்காகத் தளத்தின் கற்களைப் பெயர்த்துப் படியிறங்க முயன்று கொண்டிருந்த, தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் அகப்பட்டுக் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுவோமோ என்று அழகன் பெருமாள் அஞ்சினான்.

அந்த அச்சமும், நடுக்கமும், உந்தித் தள்ளியதால்தான் மாவலி முத்தரையரும், பூத பயங்கரப் படைத் தலைவனும் சிறைக்கோட்டத்திற்கு உள்ளே நுழைந்து வருவதற்குள்ளேயே, அழகன் பெருமாள் எதிர் கொண்டு சென்று அவர்களைச் சந்தித்தான். பணியாரக் கூடையுடன் நண்பர்களைப் போல் நல்லடையாளச் சொல்லைக் கூறிக் கொண்டு வந்திருந்த அந்த ஐவரும், தங்களிடம் தோற்று ஏமாறித் திரும்பிய மறுகணமே, மாவலி முத்தரையர் வந்திருப்பதிலிருந்து, ‘அவர்களை அப்படி அனுப்பியதும் இவராகத்தான் இருக்க வேண்டும்’ என்று அழகன் பெருமாளால் அநுமானிக்க முடிந்தது. வந்ததுமே வம்புக்கு இழுத்தார் மாவலி முத்தரையர்: “நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகரின் குழுவைச் சேர்ந்தவர்களுக்குப் பசி தாகம் எல்லாம் கூட மறந்து போய் விடும் போலிருக்கிறதே?”

அழகன் பெருமாள் அவருக்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர், அவனுடைய ஆத்திரத்தைக் கிளறிவிடும் வகையில், ஏளனமான தொனியில் இரைந்து சிரிக்கலானார். இந்தச் சிரிப்பு அவனுக்கு எரிச்சலூட்டுகிறதா, இல்லையா என்பதை அவர் கவனிக்க விரும்பியது போலிருந்தது. அவர் தன் ஆத்திரத்தைத் தூண்டி அதன் மூலம் எதையோ தன்னிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறார் என்பதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். அவருடைய போக்கைத் தெரிந்து நிதானப்படுத்திக் கொள்கிற வரை, தானாக ஆத்திரப்பட்டு எதுவும் பேசுவதில்லை என்ற முடிவை அவன் வகுத்துக் கொண்டிருந்தான்.

அவன் தனக்குப் பயந்து பேசாமல் இருப்பதாக, மாவலி முத்தரையர் நினைத்துக் கொண்டார். மங்கலத் தன்மை அறவே இல்லாத அந்தச் சூனியமான முகத்தை இரண்டாவது முறை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாமல், வெறுப்போடு வேறு திசையிலே பார்த்தான் அழகன் பெருமாள். இதற்குள் அழகன் பெருமாளே வியந்து போகும்படியான ஒரு காரியத்தை உள்ளே தள வரிசைக் கல்லைப் பெயர்த்துக் கொண்டிருந்தவர்கள் செய்திருந்தார்கள். பெயர்த்த கற்களை அப்படியே வைத்து விட்டுக் கல்லைப் பெயர்த்ததால் ஏற்பட்ட பிளவு வெளிப்பட்டுத் தெரிந்து விடாதபடி அதன் மேலேயே கால்களை நீட்டிக் கொண்டு வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள். தான் கட்டளையிடவோ, சைகை செய்யவோ முடியாமல் சிறைக் கோட்டத்திற்குள் நுழைகிறவர்களை எதிர் கொள்ளப் போன சமயத்திலும் அவர்கள், தாங்களாகவே எச்சரிக்கையடைந்து தந்திரமாகத் தளத்தில், அந்த இடத்தை மறைத்திருப்பதைக் கண்டு அதைச் செய்த நண்பர்களை மனத்துக்குள் பாராட்டிக் கொண்டான் அழகன் பெருமாள். அடுத்த கணமே, மாவலி முத்தரையர் இடிக் குரலில் அவனை வினாவினார்:

“இவர்கள் ஏன் இப்படி வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள்? சிறைப் பட்டிருப்பவர்கள், பெருமைக்குரியவர்கள் உள்ளே வர நேரும் போது எழுந்து நின்று எதிர் கொள்ள வேண்டும் என்பதைக் கூட இவர்கள், மறந்து விட்டார்களா என்ன?”

“பசி தாகத்தினால் அவர்கள் நலிந்து போயிருக்கிறார்கள். உங்கள் சிறைக் கூடத்தில் அகப்பட்டு விட்டால் உண்ண உணவும், பருக நீரும் கூடத் தருவதில்லை. உண்ணாமலும் பருகாமலுமிருப்பவர்கள், அதற்குக் காரணமானவர்களை எப்படி மதிக்க முடியும்?” என்று அதுவரை பேசாமல் இருந்த அழகன் பெருமாள் பதில் பேசினான். மாவலி முத்தரையரும் கோபத்துடனேயே, இதற்கு மறுமொழி கூறினார்.

“இன்னும் சில நாழிகை நேரத்தில் கழுமரம் ஏறிச் சாகப் போகிறவர்கள் உண்ட பின் செத்தால் என்ன? உண்ணாமலே செத்தால் என்ன?”

“அப்படியானால், இன்னும் சில நாழிகை நேரத்தில் சாகிறவர்கள், எழுந்து நின்று எதிர் கொண்டால் என்ன? எழுந்து நிற்காமலே எதிர் கொண்டால் என்ன? கொல்லப்படப் போகிறவர்களிடத்தில், கொல்கிறவர்கள் ஏன் முறைகளையும், பெருமைகளையும் எதிர்பார்த்து வருத்தப்பட வேண்டும்?” என்று அவரிடம் பதிலுக்குச் சுடச் சுடக் கேட்டான் அழகன் பெருமாள்.

“எல்லாரையும் கொல்லுவது எங்கள் நோக்கமில்லை. எங்களுக்குப் பயன்படுகிறவர்களையும், உதவி புரிபவர்களையும் நாங்கள் துன்புறுத்துவதும் வழக்கமில்லை” என்று அதுவரை உரையாடலில் கலந்து கொள்ளாமல் இருந்த பூத பயங்கரப் படைத் தலைவன் பேசினான். வந்திருக்கும் இருவருக்குமே, தங்களை வசப்படுத்தி உண்மைகளை அறிய முயலும் நோக்கம் இருப்பதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். வந்திருக்கும் இருவரும் அதிக நேரம் சிறைக் கோட்டத்திற்குள் தங்காமல் வெளியேறி விட்டார்களாயின், தானும், நண்பர்களும் உடனே தப்பி விடலாமென்று விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்தான் அழகன் பெருமாள்.

ஆனால், மாவலி முத்தரையரோ, அந்தச் சிறைக் கோட்டத்தைத் தேடி வந்து அதிக நேரம் அங்கே செலவழிக்கத் திட்டம் இட்டிருந்தவர் போல், மெல்ல ஒவ்வொன்றாகப் பேசிக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தார்.

மற்றவர்கள் எல்லாரும் தளத்திலே கற்களைப் பெயர்த்த இடத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு விட்டதனால், மாவலி முத்தரையருடனோ, பூத பயங்கரப் படைத் தலைவனுடனோ உரையாட அழகன் பெருமாள்தான் எஞ்சியிருந்தான்.

மாவலி முத்தரையர் நயமாகவும், பயமுறுத்தியும் ஏதேதோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அழகன் பெருமாள் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் தந்திரமாக அவருக்கு மறுமொழி கூறி வந்தான்.

மாவலி முத்தரையர் கேட்டார்:

“கயல் மீன் அடையாளம் பாண்டிய மரபினருக்குச் சொந்தமானது. இப்போது பாண்டியர்கள் ஆட்சியுரிமையோடு இல்லை என்றாலும், மறுபடி பாண்டியர் நாட்டைக் கைப்பற்றி ஆள வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இன்றும் அங்கங்கே இருக்கிறார்கள். கயல் என்கிற சொல்தான் அவர்களுடைய தாரக மந்திரமாக இருக்கிறது. இவையெல்லாம் எனக்குத் தெரியும்…”

“அப்படியா?… எனக்கு இவற்றைப் பற்றி எதுவுேமே தெரியாது ஐயா” என்றான் அழகன் பெருமாள். இதைக் கேட்டு மாவலி முத்தரையர், பற்களையும், உதடுகளையும் இறுக்கிக் கடித்தது போல் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார். அடுத்த கணையை மெல்ல எய்தார்.

“இதைப் பற்றித் தெரியுமா? உங்களைப் போலவே ஏற்கெனவே எங்களிடம் சிறைப்பட்டிருக்கும் அந்தப் புலித் தோல் அங்கி இளைஞன் பாண்டிய அரச மரபைச் சேர்ந்தவன் என்கிற இரகசியத்தையும் நான் அறிவேன்.” “பொறுத்தருள வேண்டும் ஐயா! தாங்கள் எதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்; ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே எனக்கு விளங்கவில்லை. நாங்கள் வெறும் குடிமக்கள், எளியவர்கள். அரச மரபுகளையும் அதன் இரகசியங்களையும் பற்றி நாங்கள் கவலைப்பட்டோ, தெரிந்து கொண்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை” என்றான் அழகன் பெருமாள். முதலில் விடிந்ததும், விடியாததுமாக உண்பதற்குப் பணியாரக் கூடையோடு வந்த ஐவரும் இப்போது வந்திருக்கும் மாவலி முத்தரையரும் ஒரே முயற்சியோடு தான் தங்கள் எதிரே நிற்கிறார்கள் என்பது நன்றாக அழகன் பெருமாளுக்குப் புரிந்து விட்டது. நயமாக முயன்று, தங்களிடமிருந்து செய்திகளை அறிய அவர்கள் விரும்புகிறார்கள் என்பது அவனை மிகவும் எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. மாவலி முத்தரையர் மேலும் அவனைக் கேட்டார்:

“அப்படியானால் உங்களைப்போல எளிய குடிமக்கள் பூத பயங்கரப் படையினரைப் போன்ற மாறு வேடத்தில், கடுமையான பாதுகாப்புகளையும் மீறிக் கோட்டைக்குள் ஏன் வந்தீர்கள்?”

“கோட்டைக்குள் வரும் போதுதான் பூத பயங்கரப் படையின் உடையை அணிந்து கொண்டோம் என்பதில்லை. களப்பிரர்களது பூத பயங்கரப் படையினர் உடை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த உடைக்காகவே அப்படையில் சேர நாங்கள் ஆசைப்பட்டது உண்டு. ஆனால் யாரும் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். உடைகளில் எங்களுக்குப் பிரியம் அதிகம். இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.”

இதைக் கேட்டு மறுமொழி கூறாமல் விஷமச் சிரிப்புச் சிரித்து விட்டு, வாளாவிருந்தார் மாவலி முத்தரையர். அந்தச் சிரிப்பும், அந்த மெளனமும் அவர் அழகன் பெருமாள் கூறியதை ஏற்கிறாரா இல்லையா என்பதைக் கண்டு கொள்ள முடியாதவையாயிருந்தன. “மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் பாண்டியர் இயக்கத்துக்குத் தலைவனான வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகன், ஒரு காலத்தில் எனக்கு மிக நெருக்கமானவனாக இருந்து பின் பகைவனாகியவன் என்பதையும் நீ அறிந்திருக்க மாட்டாய்” என்று மீண்டும் அவர் உரையாடலைத் தொடங்கிய விதத்திலிருந்தே அழகன் பெருமாளைப் பழைய வலையில் சிக்க வைக்க முயல்வது தெரிந்தது. நெடுநேரம் இப்படியே எதையாவது பேசிக் கொண்டிருந்தால் எந்த இடத்திலாவது எதிராளி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள மாட்டானா என்று அவர் தவிப்பது பேச்சில் தெரிந்தது.

“பகை, நட்பு என்பன எல்லார் வாழ்விலும் இருப்பது இயல்பு. தங்களுக்கும் அது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நட்பும், பகையும் தங்களைப் பொறுத்து யாரோடு எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதை நான் எவ்வாறு அறிய முடியும்?” என்றான் அழகன் பெருமாள்.

இதைக் கேட்டு மீண்டும் அவர் நச்சுப்புன்னகை பூத்தார். அழகன் பெருமாளை ஏற இறங்கப் பார்த்தார். கூறலானர்:

“நீ மிகவும் சாதுரியமானவன் அப்பனே! உன்னிட மிருந்து எதையாவது தெரிந்து கொள்ள முயல்வது என்பது கல்லில் நார் உரிக்கலாம் என்பதைப் போல் அசாத்தியமானதாயிருக்கிறது. ஆனால் சாதுரியங்கள், வார்த்தைகளைப் பாதுகாக்குமே ஒழிய, உங்கள் உயிரைப் பாதுகாக்காது என்பதை நினைவு வைத்துக் கொள்…”

“நீங்கள் புகழ்கிற அளவு நாங்கள் சாதுரியம் உள்ளவர்கள் இல்லை. அறியாமையினால் பூத பயங்கரப் படையினரின் உடையை அணிந்து, கோட்டையைச் சுற்றிப் பார்க்க வரப் போக, இங்கே சிறையில் சிக்கிக் கொண்டு விட்டோம். இது எவ்வளவு பெரிய பேதைமை?”

“எது பேதைமை ? யார் பேதைகள் என்பது போகப் போகத் தெரியும்” என்று கூறி விட்டு, மேலாடையைச் சுழற்றி வீசித் தோளில் சாற்றிக் கொண்டு கோபமாக அங்கிருந்து வெளியேறினார் மாவலி முத்தையர். பூத பயங்கரப் படைத் தலைவனும் சிறைக் கோட்டக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து, அவரோடு சென்றான். அவர்கள் இனிமேல், தங்களை உயிரோடு விடுவது சந்தேகமே என்ற அளவு அழகன் பெருமாளுக்குப் புரிந்து விட்டது.

உடனே கற்களை நகர்த்தித் தளவ ரிசையை மூடினார்கள். கீழ் நோக்கி இறங்கிய படிகளும், சுவரும் அகழி நீர்ப் பரப்புக்குச் சமமான பள்ளமாயிருந்ததனால், நீர் கசிந்து வழுக்கின. இருட்டு வேறு மைக்குழம்பாயிருந்தது. படிகளைக் கடந்து கீழே பாதாளச் சிறைக்குள் வந்து விட்டோம் என்ற நிலைமையை உணர்ந்ததும், அழகன் பெருமாள், தென்னவன் மாறனை மெல்லக் கூப்பிட்டான். பதில் இல்லை. பசியினாலும், களைப்பினாலும் தென்னவன் மாறனும், அவனோடு இருக்கும் திருமோகூர் அறக் கோட்டத்து மல்லனும் சோர்ந்து தளர்ந்து, பதிலுக்குக் குரல் கொடுக்கவும் ஆற்றலற்றுப் போய் விட்டார்களோ என்று அழகன் பெருமாள் தவித்துக் கொண்டே கைகளால் துழாவிய போது, கிணற்றின் ஆழத்திலிருந்து ஒலிப்பது போல் ஒரு பெண் குரல் அங்கே ஒலித்தது.

அழகன் பெருமாளும் அவனோடு இருந்தவர்களும் திகைத்தார்கள்.

“நீங்கள் யாரைத் தேடி வந்திருக்கிறீர்களோ, அவர்கள் இருவரும் இங்கிருந்து தப்பி விட்டார்கள்! உயிர் வேண்டுமானால் நீங்களும் இங்கிருந்து உடனே தப்ப வேண்டும். அபாயம் உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று மீண்டும் அந்தக் குரல் ஒலித்த போது, அந்தக் குரல் யாருடை யது என்பது அழகன் பெருமாளுக்கு ஞாபகம் வந்து விட்டது. அது காம மஞ்சரியின் குரல் என்பதை அவன் உணர்ந்தான்.

அவள் காலடியோசை நடந்த திசையைப் பின்பற்றி, அவர்கள் நடந்தார்கள். இருளில் மற்றொரு படிக்கட்டை அவள் அடையாளம் காட்டினாள்.

“ஐயா! இதன் வழியே சென்றால் நடுவூரில் உள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தின் அருகே கொண்டு போய் விடும். அப்புறம் அங்கிருந்து தப்ப வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்தப் பேதை இதற்குப் பிரதிபலனாக உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஆண் அழகரும் பெருவீரருமான தென்னவன் மாறனார், என்னை வெறும் காமக் கணிகை என்று மட்டுமே நினைத்திருந்தார், வெறுத்தார், அலட்சியப்படுத்தினார். இங்கிருந்து தப்பிய விநாடி வரை என்னைப் பொறுத்து அவர் கருத்து மாறியதா, இல்லையா என்றே எனக்குத் தெரியாது. இப்படி இங்கே வந்து அவரையும், உங்களையும் தப்ப விட்டதன் மூலம் உயிரை இழக்க நேர்ந்தால் கூட, என் வாழ்வின் பெரும்பாக்கியமாக அதை நான் கருதுவேன் என்பதை அவரிடம் தயை கூர்ந்து, நீங்கள் சொல்ல வேண்டும். என் உடலை அவரிடம் இழக்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்கவில்லை. என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்காக இழக்கும் பாக்கியத்தைப் பெறுவேன். அதற்கு அவர் கூடக் குறுக்கே நிற்க முடியாது” என்று அவள் கூறிய போது, அழகன் பெருமாளின் மனம் நெகிழ்ந்தது. மற்றவர்களுக்கோ கண்ணில் நீர் நெகிழ்ந்தது.

Previous articleRead Nithilavalli Part 2 Ch22 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 2 Ch24 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here