Home Na Parthasarathy Read Nithilavalli Part 2 Ch25 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch25 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

67
0
Read Nithilavalli Part 2
Read Nithilavalli Part 2 Ch25|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 2 Ch25 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – சிறைக்கோட்டம்

அத்தியாயம் 25 : இருளும் வடிவும்

Read Nithilavalli Part 2 Ch25 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

தன்னுடன் பேசிக்கொண்டே வந்த கொல்லனின் வேண்டுகோள் என்னவாக இருக்கும் என்பது புரியாமல் முதலில் காராளர் திகைத்தாலும் அவன் அதை வாய்விட்டுக் கூறியவுடன் திகைப்பு நீங்கி, தெளிவடைந்து விட்டார்.

“ஐயா! புதிய நல்லடையாளச் சொல்லைப் பொறுத்த அளவில், தாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பழைய நல்லடையாளச் சொல் எப்படியோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டாலும், அது எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது என்பதை உரிய வேளையில் விரைவாய் அறிந்து, உடனே வேறு நல்லடையாளச் சொல்லை மாற்றி விட்டோம். இனி மேலும் அப்படி நமது நல்லடையாளம் வெளியானால், உடனே அதை நாம் அறிந்து மாற்ற முடியாமல் போனாலும் போய் விடலாம்… ஆகவே, தயை கூர்ந்து நீங்கள்…”

“என்னிடம் புதுமையாக இன்றுதான் பழகத் தொடங்குகிறவனைப் போல நீ ஏன் இவ்வளவு தயங்குகிறாய்?”

“தயக்கம் ஒன்றுமில்லை ஐயா! நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விடக் கூடாதே என்றுதான் அஞ்சுகிறேன். இந்தப் புதிய நல்லடையாளச் சொல்லைத் தங்கள் திருக்குமாரிக்குக் கூட அறிவிக்க வேண்டாம் என்பது என் கருத்து” என்று குரலைத் தணித்துக் கொண்டு அவரருகே வந்து நெருங்கி நின்று கூறினான் கொல்லன்.

அவன் கூறியதைக் கேட்டு அவர் மெல்ல நகைத்தார். பின்பு சில விநாடிகள் கழித்து, “நீ சொல்வது நியாயம்தான்! பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களுக்கு எதையும் எதிர்மறையாகவும், வேறு, வேறு கோணங்களிலும் நினைத்துப் பார்த்து முடிவு செய்யத் தெரியாது. எளிமையாகப் பிறரை நம்பி விடுவார்கள்” என்று அவரே அவன் கூறியதை ஒப்புக் கொள்வது போல் மறுமொழி கூறினார். தான் அவருடைய செல்வ மகளைப் பற்றிக் கூறிய கருத்து, அவர் மனத்தில் வேறுபாட்டையோ, ஆத்திரத்தையோ உண்டாக்கவில்லை என்பது அவனுக்கு மனநிறைவு அளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அடுத்த கணமே, அவர் பெரியவரின் இருப்பிடத்துக்குத் தம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தம்முடைய பழைய ஆவலையே, மீண்டும் வெளியிடத் தொடங்கி விட்டார். அரிய முயற்சி செய்து பல காரணங்களை எடுத்து விளக்கி, அந்த ஆவலைத் தற்காலிகமாகத் தவிர்க்கும்படி அவரை வேண்டிக் கொண்டான் கொல்லன். அவரும் விடுகிற வழியாயில்லை.

“அப்படியானால் மீண்டும் பெரியவரை நான் எப்போதுதான் பார்க்க முடியும் என்பதையாவது சொல்லேன். அவரைக் காணவும், அவருடைய உபதேசங்களைக் கேட்கவும் முடியாமல், என் நாட்கள் மலை போல் மெல்ல நகர்கின்றன.” “ஐயா! இந்த எளியேன் சொல்லியா, தங்களுக்குத் தெரிய வேண்டும்? பாண்டியர்கள் மீண்டும் நாட்டைக் கைப்பற்றும் காலம் தொலைவில் இல்லை. அந்நியர்களும், ஈவு இரக்கமற்ற கொள்ளைக்காரர்களும் ஆகிய களப்பிரர்களை வென்று துரத்தினால், பாண்டிய மரபு மீண்டும் தழைக்கும். அப்போது பெரியவரை, நீங்களும் நானும் எல்லாரும் கண்டு மகிழலாம்.”

“அந்தக் காலம் மிக மிகத் தொலைவில்தான் இருக்கிறதோ என்று நான் அஞ்சுகிறேன். மாபெரும் பாண்டியர் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் அந்த மரபைச் சுற்றி இருள் சூழச் செய்து விட்டார்களே, பாவிகள்…?”

“ஆலவாய் அண்ணல் திருவருளால், இருள் எல்லாம் விலகி ஒளி பரவும் காலம் வந்து விட்டது” என்றான் கொல்லன்.

அவர்கள் இருவரும் இவ்வாறு உரையாடிக் கொண்டே உலாவி முடித்ததும், பொய்கையில் தந்த சுத்தி செய்து நீராடினர். நீராடி முடித்ததும், கொல்லனைத் தம்மோடு மாளிகைக்கு வந்து பசியாறுமாறு வேண்டினார் காராளர். மாளிகைக்குச் சென்றால், காராளர் மகள் செல்வப் பூங்கோதையின் துயரக் கோலத்தையும், வேதனையையும் காண வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில்;

“நான் இங்கிருந்தே வேறு வழியாக வீட்டுக்குப் போகிறேன் ஐயா! நன்றாக விடிந்து விட்டது. இனி நாம் வீதியில் ஒன்று சேர்ந்து போக வேண்டாம்” என்றான் கொல்லன். அவரும் அவன் கூறியதற்கு மேல் வற்புறுத்தாமல் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார். பொய்கைக் கரையிலிருந்து மற்றொரு வழியாகத் தன் உலைக் களத்திற்குத் திரும்பினான் கொல்லன். மறுமுறை பெரியவரிடமிருந்து அழைப்போ, கட்டளையோ வரும் வரை தன் உலைக் களத்திலேயே நிறைய வேலை இருந்தது அவனுக்கு. அவனும், அவனோடு சேர்ந்த பிற கொல்லர்களும் பணியாட்களும், இன்னும் சிறிது காலத்திற்குள் நிறைய வேல்களையும் வாள்களையும் உருவாக்கி, அடுக்க வேண்டியிருந்தது. அன்று முதல் அந்த வேலையில் முனைந்து ஈடுபட்டான் அவன். களப்பிரர்கள் அறியாமல், உருவாக்கி மறையில் அடுக்கி நிறைக்க வேண்டிய ஆயுதங்கள் அவை. ஏற்கனவே பாண்டிய நாட்டின் வேறு பகுதிகளில் உள்ள பெரியவரின் அன்புக்குப் பாத்திரமான பிற கொல்லர்களும், அவனும் இப்படி நிறையப் படைக்கலன்களைச் சேர்த்து வைத்திருந்தார்கள். அந்தப் படைக்கலன்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் செயலில் மேலும் முனைந்து ஈடுபட்டான் கொல்லன். அவனுடைய நாட்கள் அதில் கழியத் தொடங்கின. காராளரைப் பொறுத்த வரை, பெரியவர் இல்லாத திருமோகூர் மந்தமாக இருப்பது போல் தோன்றிக் கொண்டிருந்தது.

விலை மதிப்பற்ற அருமருந்தில் மீதமிருக்கும் சிறிய அளவைப் போல் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் இன்று அந்த வம்சாவளியில் எஞ்சியிருக்கும் இளையநம்பி, தென்னவன் மாறன், கொற்கைப் பெருஞ்சித்திரன் ஆகிய மூவரையும் பற்றிப் பெரியவர் மதுராபதி வித்தகர், திருமால் குன்றத்து மலைப் பிளவில் ஒப்பு நோக்கிச் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனையை, அப்போது அங்கே பதற்றத்தோடு விரைந்து நுழைந்த ஆபத்துதவிகள் கலைத்தனர். வந்தவர்களுடைய பரபரப்பு, அவருடைய கவனத்தை உடனே ஈர்த்தது. வந்தவர்கள் பதற்றத்தோடு கூறலாயினர்:

“ஐயா! அபாயம் நெருங்குகிறது! இந்த மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதிகளிலும் சிலம்பாறு தரையிறங்குமிடத்தில் உள்ள மாந்தோட்டத்திலும், சிறு சிறு குழுக்களாகக் களப்பிரர்களின் பூத பயங்கரப் படை வந்து தங்கியிருக்கிறது. இந்த நிலைமை இன்று காலையில்தான் தெரிய வந்தது. நாம் உடனே இடம் மாற வேண்டும். மலையின் உட்பகுதியில் இன்னும் நெடுந் தொலைவு தள்ளிச் சென்று தங்கி விடுவோம். அபாயத்தைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி அதுதான். உடனே புறப்படுங்கள்!” இதைக் கேட்டு ஒரு கணம் தயங்கினாற் போல் நின்றார் மதுராப்தி வித்தகர். அடுத்த கணமே, அவர் கூறலானார்:

“உனக்குத் தெரியாது! நாம் அப்படிச் செய்யக் கூடாது. மலையின் உட்பகுதிக்குப் போகப் போக, நாம்தான் நம்மைத் தப்ப முடியாதவர்களாகவும், அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்கிறவர்களாகவும் மாற்றிக் கொள்கிறோம். நீங்கள் கூறுவது சாதுரியமான உபாயம் அல்ல. கீழே மலை அடிவாரத்துக் காடுகளிலும், சிலம்பாறு தரையிறங்கும் இடத்திலும் எதிரிகள் சிலர் வந்து தங்கியிருக்கிறார்கள் என்றால், நம்மவர்களைக் கொண்டு அவர்களைக் கண்காணிக்கச் செய்யுங்கள். அவர்கள் ஒருவேளை தங்கியிருக்கும் இடங்களிலிருந்தே சந்தேகம் நீங்கித் திரும்பிப் போய் விடலாம். அப்படித் திரும்பாமல் முன்னேறி, இங்கே வரத் தொடங்குவார்கள் என்று ஆகுமாயின், அப்புறம் என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்லுவேன்.”

அந்த ஆபத்துதவிகள் இருவரும் வந்த போது, இருந்த சிறிதளவு சலனமும் இப்போது அவரிடம் இல்லை. அவர் கூறியதைக் கேட்ட பின்பும், ஆபத்துதவிகள் தயங்கி நின்றனர். அவர்களைத் துரத்தாத குறையாக இரைந்தார் அவர்.

“உடனே போய் மரங்களின் மேல் ஏறி, அடர்ந்த கிளைகளிடையே மறைந்திருந்து கவனியுங்கள். பூத பயங்கரப் படையினர் மேலே வருவார்கள் என்று சிறு அறிகுறி தெரிந்தாலும், உடனே வந்து சொல்லுங்கள். மற்றவற்றைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.”

அவர்கள் சென்றார்கள். அவர் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். பல்லாண்டு கால இருளுக்குப் பின்னர், மீண்டும் பாண்டியர்கள் நாட்டைக் களப்பிரர்களிடமிருந்து மீட்கும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதை அவர் மனம் கணித்தது. மனத்தில் இயல்பாகப் பொங்கும் அந்த நம்பிக்கை வீண் போகாது என்பது அவருக்குத் தெரியும். அந்தப் பொற்காலம் நெருங்குவதை உணர்ந்துதான், திருக்கானப்பேர்க் காட்டிலும், தென்னவன் சிறு மலையிலும், கொற்கையிலும் மறைந்து வளர்ந்து கொண்டிருந்த மூன்றே மூன்று பாண்டிய வம்சாவளியினரான இளையநம்பியையும் தென்னவன் மாறனையும், கொற்கைப் பெருஞ்சித்திரனையும், பாண்டியர் குலதனமாகிய நவ நித்திலங்களையும் வரவழைத்திருந்தார் அவர். இந்த ஒரே ஒரு குறிக்கோளை நிறைவேற்றி முடிப்பதற்காகத் தம்மை முழுத் துறவியாக ஆக்கிக் கொள்ளாமல் விருப்பு வெறுப்புகளோடு வாழ்ந்தார் அவர். இந்த இலட்சியம் நிறைவேறி விட்டால் மறு விநாடியே விருப்பு வெறுப்புகளற்ற முழுத் துறவியாய்க் காவியுடுத்தி உலக பந்தங்களிலிருந்து நீங்கியவராகக் கங்கை நீராடி, இமய மலைச்சாரலில் அவர் தவம் செய்யப் போய்விடலாம். கடுமையான நியமங்களை மேற்கொண்டிருந்தும் ஒரு துறவிக்குரிய அருள் உள்ளமும், உலக பந்தங்களில் இருந்து நீங்கிய இயல்பும் இல்லாமல் தாம் வாழ வேண்டி நேர்ந்திருப்பதை எண்ணி, எண்ணி அவர் உள்மனம் வருந்தாத கணமில்லை. இப்போதும் அதே ஆத்மார்த்தமான தவிப்பை அடைந்திருந்தார் அவர். உள்ளத்தில் சிந்தனைகள் ஓடின.

‘இன்னாருக்கு நான் மிகவும் வேண்டியவன். இன்னாருக்கு நான் மிகவும் வேண்டாதவன்’ என்றெல்லாம் வேண்டுதலையும், வேண்டாமையையும் கற்பித்துக் கொள்ளத் தொடங்கிய பின், அதில் துறவுக்கே இடமில்லை. துறவு என்பது விருப்பு, வெறுப்பையே துறக்கிற அளவு பந்தபாசமற்றதாக இருக்க வேண்டும்.ஒரு பெரிய அரச மரபை உருவாக்கி, மீண்டும் நாட்டை மீட்க நான் பொறுப்பு எடுத்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன், எனக்கும், செல்லூர் மாவலி முத்தரையனுக்கும், வெள்ளியம்பலமன்றில் நிகழ்ந்த ஒரு தர்க்கத்தில், பல தேசத்து அறிஞர்கள் முன்னிலையில், அவனைத் தோல்வியுறச் செய்தேன் நான். அந்தக் காலத்தில், இப்படி நான் தலை மறைவாகிற அளவு களப்பிரர்களின் கொடுமை இல்லை.

என்னால் தோற்கச் செய்யப்பட்ட வையை வடகரைச் செல்லூரான் மாவலி முத்தரையன் தாங்க முடியாத அறிவுப் பொறாமையினாலும், காழ்ப்பினாலும் என்னை எதிர்த்து வேரறுப்பதற்குக் களப்பிரர்களோடு உறவாடத் தொடங் கினான். நான் பாண்டிய குலத்து உறுதுணையாளன் என்ற அந்தரங்க உண்மை மாவலி முத்தரையனுக்குத் தெரியும். அவன் என் பகைவனாக மாறிய பின் சமயம் பார்த்து, அதை அவன் களப்பிரப் பேரரசுக்கு அறிவித்து என்னை ஒழிக்க முயல்வானோ என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாகவே, அந்தப் பகைமை ஏற்பட்ட நாள் முதல் நான் தலை மறைவு கொள்ள நேரிட்டு விட்டது. இப்படி மறைந்து வசிக்கவும், பாண்டியர் வெற்றிக்குத் திட்டமிடவும், ஏற்பாடுகள் செய்யவும் நேர்ந்தது கூட ஒரு விதத்தில் நல்லதுதான். இல்லையானால் வேறு விதமாகவும் விளைவுகள் மாறியிருக்கலாம். விரோதியாயிருந்தாலும், முழுமையாக நான் இந்தச் செயலில் ஈடுபடும்படிச் செய்த மாவலி முத்தரையனுக்கு ஒரு விதத்தில் நன்றி செலுத்தத்தான் வேண்டும். என் மேல் அறிவுப் பொறாமை ஏற்பட்டு மாவலி முத்தரையன் என்னுடைய பகைவனாக மாறவில்லை என்றால், நான் என் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதில் இவ்வளவு முனைந்திருக்க முடியாது. நம்முடைய முழுமையான பகைவன்தான் நமது முயற்சிக்குச் சுறுசுறுப்பும், உயிரும் ஊட்டுகிறான் என்பது எவ்வளவு பெரிய உண்மை?

தமக்குத் தாமே உள் முகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர், அதில் நேரம் போவதே தெரியாமல் ஈடுபட்டிருந்தார். நண்பகலுக்கு மேல் முன்பு வந்த பூத பயங்கரப் படையின் அபாயத்தைத் தெரிவித்த அதே ஆபத்துதவிகள் மீண்டும் அவரைத் தேடி வந்தனர். இப்போது அவர்களிடம் பரபரப்போ, பதற்றமோ இல்லை. அமைதி தெரிந்தது.

“முன்பு தென்பட்ட இடங்களிலிருந்து பூத பயங்கரப் படைகள் பின் வாங்கித் திரும்பிச் சென்றுவிட்டார்கள். தாங்கள் அநுமானித்தபடியே நடந்திருக்கிறது. நாங்கள்தான் எங்கள் உணர்ச்சி வேகத்தில், ஏதேதோ நினைத்து விட்டோம். நமக்கு உடனே ஒர் அபாயமும் இல்லை. இடமும் மாற வேண்டாம்” – என்று அவர் கேட்பதற்கு முன் அவர்களாகவே கூறினார்கள். வந்தவர்கள் பின் வாங்கித் திரும்பி விட்டாலும், தொடர்ந்து மலையடிவாரத்தையும் சிலம்பாற் றங்கரையையும் விடாமல் கண்காணித்துக் கொண்டிருக்குமாறு, அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்ற ஆபத்துதவிகளுக்கும் கட்டளையிட்டு அனுப்பினார் அவர்.

அவர்கள் சென்ற பின், மீண்டும் சிந்தனைகளில் ஆழ்ந்தார். அங்கங்கே பல பகுதிகளில் மறைந்திருந்து உடனே எழுச்சி பெறத் தக்க நிலையிலுள்ள பாண்டியர்களின் படை பலம், ஆயுதங்களின் பலம், சூழ்நிலை எல்லாவற்றையும் மனக் கணக்காகக் கணக்கிட்டு நினைத்துப் பார்த்தார் அவர். அவிட்ட நாள் விழாவன்று இந்தக் கணக்கு எதிர்பாராத விதமாக பொய்த்துப் போனாலும், மிக விரைவில் களப்பிரர்களை அவர்களே எதிர்பாராதபடி, வளைத்து மடக்கிப் பாண்டியர்கள் நாட்டைக் கைப்பற்றலாம் என்று தெளிவாக அவருக்குப் புரிந்தது. சுற்றிலும் மாலை சூழ்ந்து, மலையில் இருட்டிக் கொண்டு வந்தது. அவரது சிந்தனையிலோ, அப்போதுதான் விடிவு தெரிவது போல் இருந்தது. விடியும் என்று நம்பினார் அவர்.

Previous articleRead Nithilavalli Part 2 Ch24 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 2 Ch26 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here