Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch1 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch1 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

68
0
Read Nithilavalli Part 3 Ch1 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch1|Na. Parthasarathy| TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch1 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றி மங்கலம்

அத்தியாயம் 1 : சூழ்நிலைக் கனிவு

Read Nithilavalli Part 3 Ch1 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

களப்பிரப் பேரரசுக்கு எதிராகக் கலகம் செய்ய முயல்வோர் எப்படித் தண்டிக்கப்படுவார்கள் என்பதை யாவருக்கும் எச்சரிக்கவும் பயமுறுத்தவும் கருதித் தென்னவன் மாறன் கழு ஏற்றப்பட்டதையும், அவனுக்கு உதவி செய்ய முயன்ற குற்றத்துக்காகக் காம மஞ்சரி நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதையும் பாண்டிய நாடு முழுமையும் பறையறைந்து அறிவிக்கச் செய்திருந்தார் மாவலி முத்தரையர். இந்தச் செய்தியை அறிந்து, இரண்டு மூன்று நாட்கள் உண்ணவும் உறங்கவும் பிடிக்காமல் கண்களில் நீர் நெகிழப் பித்துப் பிடித்தது போல் கிடந்தான் இளைய நம்பி. கொலை செய்யப் பட்ட தென்னவன் மாறன், தாயாதி உறவில் இளைய நம்பிக்கு அண்ணன் முறையாக வேண்டும் என்ற உண்மையையும் அந்த வேளையில்தான் இரத்தின மாலை அவனுக்குத் தெரிவித்திருந்தாள்.

களப்பிரர்கள் கையில் சிக்கிய பின், தென்னவன் மாறன் உயிருடன் மீள மாட்டான் என்ற அநுமானம் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு இருந்தாலும், அவன் கொல்லப்பட்டு விட்டான் என்ற துயரத்தை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட அவராலும் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சூழ்நிலை கனிகிற வரை பாண்டிய மரபு மேலும் சிறிது காலம் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியதன் அவசியத்தை அவரும் நன்கு புரிந்து கொண்டார். தம்மிடமிருந்து கட்டளை வருவதற்கு முன் இளைய நம்பி இரத்தினமாலையின் மாளிகையிலிருந்து எங்கும் வெளியேறக் கூடாதென்று மீண்டும் அவனை வற்புறுத்திச் செய்தி அனுப்பியிருந்தார் பெரியவர். கண்ணை இமை பாதுகாப்பது போல், அவனை அகலாமல் அருகிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இரத்தினமாலைக்கும் இரகசியமாகச் சொல்லி அனுப்பியிருந்தார் அவர். தென்னவன் மாறனை இழந்து விட்ட சூழ்நிலையில், இளைய நம்பியைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத தாகியிருந்தது. இளம் பருவத்தினனும், இணையற்ற வீரமுடையவனும் ஆகிய ஒருவனை ஆடல் பாடல்களும், சுவையான உணவும், அலங்காரமும், சுகபோகங்களும் மட்டுமே உள்ள ஒரு மாளிகையில் நெடுங்காலமாக அடைத்து வைத்திருப்பதிலுள்ள சிரமங்களை மதுராபதி வித்தகரும் அநுமானித்திருந்தார். இருந்தாலும், வேறு வழியில்லாத காரணத்தாலும், இளைய நம்பி தங்குவதற்கு அதைவிடப் பாதுகாப்பான வேறு இடம் இல்லாததாலும், அவனை அங்கேயே தங்க வைத்துப் பத்திரமாகக் கவனித்துக் கொள்வது அவசியமாகி இருந்தது. உபசரிப்பதிலும், பேணிப் போற்றி அன்பாகப் பாதுகாப்பதிலும், இணையற்றுத் தேர்ந்திருந்த இரத்தினமாலை மட்டும் அருகில் இல்லா விட்டால், இளைய நம்பியை அப்படி ஒரே இடத்தில் உறையச் செய்திருக்க இயலாமற் போயிருக்கும். அவளால் மட்டுமே அது இயலும். அவளால் மட்டுமே அது அப்போது இயன்றதாகியிருந்தது.

நாட்டைக் கைப்பற்றுவதற்கான சூழ்நிலை கணிகிற வரை தாமும், தம்மைச் சேர்ந்தவர்களும், தம் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்களும் ஒடுங்கியிருப்பது போல் பாவனை காண்பிக்க எண்ணினார் பெரியவர். ஏறக்குறைய எட்டுத் திங்கள் காலம் வரை இந்த ஒடுக்கம் நீடித்தது. ‘பாண்டிய மரபாவது இனிமேல் தலை எடுப்பதாவது? அந்த மரபைத் தான் நாம் அடியோடு தொலைத்து விட்டோமே’ என்று களப்பிரர்கள் மனப்பூர்வமாக நம்பிப் பாண்டியர்களுக்கு எதிரான பூத பயங்கரப்படை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கை விடுகிற வரை பொறுமையாக இருந்தார் மதுராபதி வித்தகர்.

‘இனி நமக்கு எதிர்ப்பே இல்லை’ என்று களப்பிரர்கள் அயர்ந்த பின்பே, சூழ்நிலை கனிந்திருப்பதை அவர் உறுதி செய்து கொண்டார். களப்பிரர்களை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்துவதற்கு அதுதான் ஏற்ற நேரம் என்று எல்லாக் கோணங்களிலும் கணித்து முடிவு செய்த பின், அவர் வெகு காலத்துக்குப் பின் முதன் முதலாக, ஒரு முனை யெதிர் மோகர் படை வீரனைத் திருமோகூருக்கு இரகசியத் தூது அனுப்பிப் பெரிய காராளரையும், கொல்லனையும் அழைத்து வருமாறு ஏவினார். அப்போது நல்ல மாரிக்காலம். ஒவ்வொரு பிற்பகலிலுமே மழை கொட்டிக் கொண்டிருந்தது. மாலையிலும், இரவிலும் திருமால் குன்றத்துச் சிலம்பாற்றில் பயங்கர வெள்ளம் பெருகி ஓடியது.

காரிருளும் இடியும் மின்னலுமாக மழை மிக மிக அதிகமாயிருந்த அந்த இரவில், பெரிய காராளரும், கொல்லனும், தப்பி வந்து அவர்களோடு திருமோகூரில் மறைந்திருந்த குறளனும், பெரியவரைக் காண்பதற்காகத் திருமால் குன்றத்துக்குத் தேடி வந்தனர். அவர்கள் தேடி வந்த சமயத்தில், பெரியவர் சிலம்பாற்றின் மறு கரையில் தங்கியிருந்தார். சிலம்பாற்றில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு அதிகமாகி இருந்ததால், திருமோகூரிலிருந்து சென்றிருந்த மூவரும், ஆற்றின் மறு கரையில் இருளோடு இருளாக, நெடு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆற்றின் குறுக்கே பாலமிட்டது போல், பிரம்மாண்டமான மரம் ஒன்று முறிந்து விழுந்திருந்தது. அந்த மரத்தை நம்பி, ஆற்றைக் கடக்கலாமா, கூடாதா என்று அறிவதற்காக முதலில் தங்கள் மூவரிலுமே உருவில் சிறியவனான குறளனை, அந்த மரத்தின் வழியே மறு கரைக்குச் செல்லும்படி அனுப்பிப் பார்த்தார்கள் அவர்கள். குறளன் ஓர் இடையூறுமின்றி மறு கரைக்குப் போய்ச் சேர்ந்து, அப்படிச் சேர்ந்து விட்டதற்கு அடையாளமாகக் குரலும் கொடுத்தான். தொடர்ந்து காராளரும், கொல்லனும் அந்த மரத்தைப் பற்றி ஏறி, மறுகரை சேர முடிந்தது. மறுகரையில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆபத்துதவிகள், உடனே மூவரையும் பெரியவரது இடத்திற்கு விரைந்து அழைத்துச் சென்றனர். நீண்ட காலத்திற்குப் பின்பு, பெரியவர் மதுராபதி வித்தகரை முதல் முதலாகச் சந்திக்கப் போகிறோம் என்று எண்ணும் போது காராளருக்கு மெய்சிலிர்த்தது.

அந்த மலையில் பெரியவர் தங்கியிருந்த குகையை அடைவதற்கு ஒரு நாழிகைப் பயணத்துக்கு மேல் ஆயிற்று. குகை வாயிலில் இருந்த முனையெதிர் மோகர் படைக்காவல் வீரர்கள் நல்லடையாளம் பெற்ற பின், இவர்களை உள்ளே செல்ல விட்டனர். ஆபத்துதவிகள் வெளியே தங்கி விட்டதால், முதலில் காராளரும், அடுத்துக் கொல்லனும், மூன்றாவதாகக் குறளனும் குகைக்குள்ளே சென்றனர்.

உள்ளே இருந்து தீப்பந்தத்தின் ஒளியில், பாறைமேல் மற்றொரு செம்பொற் சோதி சுடர் விரித்து இருப்பது போல், பத்மாசனம் இட்ட கோலத்தில் அமர்ந்திருந்தார் மதுராபதி வித்தகர். காலடியோசை கேட்டுக் கண் விழித்த அவர், நெஞ்சாண் கிடையாகக் கண்களில் நீர் மல்க வீழ்ந்து வணங்கிய காராளரையும், மற்றவர்களையும் வாழ்த்தினார். எழுந்து அங்கே வந்து, விழிகளில் உணர்ச்சி நெகிழ நின்ற காராளரை, நெஞ்சாரத் தழுவிக்கொண்டார். காராளர் குரல் உடைந்து உணர்வு பொங்கப் பேசலானார்;

“ஐயா! பல திங்களாகத் தங்களைக் காணும் பேறு இன்றித் தாய்ப் பசுவைத் தேடித் தவிக்கும் கன்று போல் தவித்துப் போனேன். திருமோகூர் முழுவதுமே இருள் சூழ்ந்தது போல் ஆகிவிட்டது. செய்வதற்குச் செயல்களும் இல்லை. செய்யச் சொல்லிக் கட்டளை இடுவாருமில்லை. நான் அநாதையைப் போல் ஆகியிருந்தேன்.” “இப்போது செய்வதற்கு மிகப் பெரிய செயல்களும் வாய்த்திருக்கின்றன. உம்மை நம்பித் தேர்ந்தெடுத்துச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டு அனுப்புவதற்குத்தான் இப்போது இங்கு எல்லாரையுமே நான் வரவழைத்திருக்கிறேன்” என்றார் பெரியவர்.

“அப்படியானால் அது எளியேன் பெற்ற பெரும் பேறாக இருக்கும்! தயை கூர்ந்து கட்டளை இட வேண்டுகிறேன்.”

“காராளரே! உடனே நீங்கள் பல்லவர் நாட்டிற்கும், சேர நாட்டிற்கும் திவ்ய தேச யாத்திரை புறப்பட வேண்டும். அரண்மனையிலுள்ள களப்பிரக் கலியரசனை நேரில் கண்டு, அவனுடைய வாழ்த்துகளுடனேயே, அவனிடமே சொல்லி விடை பெற்று உங்கள் திவ்ய தேச யாத்திரையைத் தொடங்க வேண்டும்…”

“ஐயா தாங்கள் மெய்யாகவே அடியேனைத் திவ்ய தேசயாத்திரை போகச் சொல்கிறீர்களா, அல்லது இதுகாறும் பல திங்கட் காலமாகத் தேசப்பணியில் சோம்பி இருந்து விட்டேன் என்பதற்காக இப்படி எள்ளி நகையாடுகிறீர்களா? நாடு இன்றுள்ள நிலையில் அடியேன் எப்படி யாத்திரை போக முடியும்?”

“காராளரே! நான் இப்போது உம்மிடம் விளையாட்டுப் பேச்சாகவோ, உம்மைக் குத்திக் காட்டுவதற்காகவோ, இந்தக் கட்டளையை இடவில்லை. நான் அப்படி எல்லாம் சற்றே சிரித்து மகிழச் சொற்களைப் பயன்படுத்தி, உரையாடுகிற இயல்பு உடையவனில்லை என்பதும் உமக்கே தெரியும். அப்படி இருந்ததும் நீர் என்னிடம் இவ்வாறு கேட்பதைக் கண்டு நான் வியப்படைகிறேன்….?”

“பொறுத்தருள வேண்டும் ஐயா! தங்கள் திருவுளக் குறிப்பை எளியேன் புரிந்துகொள்ளத் தவறி விட்டேன்.”

“சூழ்நிலை நன்றாகக் கனிந்து, நமக்கு இசைவாக இருக்கிறது காராளரே! வடதிசையில் பல்லவர் நாட்டிற்கும், மேற்கே சேர நாட்டிற்கும் நீர் போய் வர வேண்டும் என்று இரண்டு இடங்களைக் குறிப்பிட்டு நான் கூறிய போதே, அதிலுள்ள குறிப்பை நீர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். களப்பிர அரசனிடம் சொல்லி அவன் இசைவுடன் நீர் யாத்திரையைத் தொடங்க வேண்டும் என்று நான் கூறியதிலுள்ள அரச தந்திரமும் சாதுரியமும் கூட உங்களுக்கு இதற்குள் விளங்கியிருக்க வேண்டும்.”

“இப்போது நன்றாக விளங்குகிறது ஐயா! திவ்ய தேச யாத்திரை என்று கூறிக் கொள்வதாலும், களப்பிரக் கலியரசனிடமே சொல்லி விடை பெற்று யாத்திரையைத் தொடங்குவதாலும், ஐயப்ப்ாடுகளிலிருந்து என்னை நான் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் மெய்யாகவே பல்லவர் நாட்டிலும், சேர நாட்டிலும் தங்களுக்காக அடியேன் என்னென்ன காரியங்களைச் சாதித்துக் கொண்டு வர வேண்டும் என்பதைத் தாங்கள் இனிமேல்தான் கூறப் போகிறீர்கள் என்று எண்ணுகிறேன்!”

“உங்கள் எண்ணம் தவறானதில்லை காராளரே! சேர வேந்தனுக்கும், பல்லவ மன்னனுக்கும் முத்திரையிட்டு, நம் இலச்சினை பொறித்த இரு இரகசிய ஒலைகளைத் தனித் தனியே நான் உங்களிடம் இப்போது தரப் போகிறேன். அந்த ஒலைகளை அவர்களிடம் சேர்ப்பதுடன், என் கருத்தை அந்த இரு பெருமன்னர்களுக்கும் விளக்கிக் கூறி, நான் ஒலை மூலம் அவர்களிடம் கோரியிருக்கும் உதவிகளைப் புரிய முன் வருமாறு செய்ய வேண்டும். இப்போதுள்ள நிலைமையில் உங்களைத் தவிர, வேறு யார் இங்கிருந்து இப்படித் திவ்ய தேச யாத்திரை புறப்பட்டாலும், களப்பிரர்கள் அவர்கள் மேல் சந்தேகப்படுவார்கள், பின் தொடர்வார்கள், தடுப்பார்கள். ஆனால், நீங்கள் புறப்படுவதை, அதுவும் தன்னிடமே வந்து, ஆசி பெற்றுப் புறப்படுவதைக் களப்பிரக் கலியரசன் தடுக்க மாட்டான். ஆனாலும் அதிலும் ஓர் அபாயம் இருக்கிறது காராளரே! அரசன் சந்தேகப் படாவிட்டாலும், அவனோடு நிழல் போல இணை பிரியாமல் இருக்கிற மாவலி முத்தரை யன் உங்கள் திவ்ய தேச யாத்திரையைப் பற்றி நிச்சயமாகச் சந்தேகப்படுவான். அவனுக்கும் சந்தேகம் வரமுடியாதபடி ஒர் உபாயத்தை நான் உமக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறேன்.”

“என்ன உபாயம் ஐயா அது?”

“கலியரசனுக்கு முன்பு நெகிழ்ந்த குரலில், கண்களில் நீர் கசிய அழுவது போன்ற தொனியோடு, ‘அரசே! நான் களப்பிரப் பேரரசுக்கு எவ்வளவோ நெல் உதவி புரிந்தும், எவ்வளவோ நன்றி விசுவாசத்தோடு இருந்தும், பூத பயங்கரப் படையினர் என் மேல் ஐயுற்று திருமோகூரில் என்னை வீட்டோடு சிறை வைத்தார்கள். சோதனைகளும் பாதுகாவலும் புரிந்தார்கள். எளியேன் பாண்டிய நாட்டு எல்லையில், திருமோகூரில் இருப்பதாலேயேதானே மாமன்னருக்கு, இப்படி என்மேல் ஒரு வீணான சந்தேகம் தோன்ற நேர்ந்தது? ஆகவே, மாமன்னர் மனம் எளியேன் மேல் ஐயப்பட நேரிடாதபடி, இனிமேல் இன்னும் சில திங்கள் காலத்துக்குத் திவ்ய தேசங்களில் யாத்திரை செய்யவும் புண்ணிய தீர்த்தமாடவும், புனிதத்துறை படியவும் நான் முடிவு செய்து புறப்பட்டு விட்டேன். தங்கள் நம்பிக்கையிலும் மதியமைச்சர் மாவலி முத்தரையருடைய விசுவாசத்திலும், இந்த அடிமை தாழ்வாகவோ, குறைவாகவோ, மதிக்கப்பட்டு விடக் கூடாதே என்று கருதியே இப்பயணம்?’ என்பதாகப் போய் மன்றாட வேண்டும் நீங்கள்…”

“நல்ல உபாயம்! நிச்சயம் பலிக்கும் சூழ்நிலை இசைவாக இருக்கிறது! இப்போது எதுவும் பலிக்கும்.”

அதன் பின், பல்லவனுக்கும், சேரனுக்குமாக எழுதி முத்திரை இட்ட ஒலைகளைக் காராளரிடம் அளித்து விட்டு, எங்கெங்கே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தனியே நீண்ட நேரம் விவரித்தார் மதுராபதி வித்தகர். பெரியவர் எல்லாவற்றையும் கூறிய பின், “தீர்த்த யாத்திரையை நான் தனியே மேற்கொள்வதா? மனைவியை யும், மகளையும் கூட அழைத்துச் செல்வதா?” என்று உடனே வினாவினார் காராளர்.

“நீர் குடும்பத்துடனேயே செல்லுவது நல்லது. மெய்யாக நீர் செல்லும் அரச தந்திரக் காரியம் எதுவோ, அது உம் மனைவிக்கும் மகளுக்கும் கூடத் தெரியலாகாது” என்றார் பெரியவர். காராளரும் அதை ஒப்புக் கொண்டு உறுதி கூறினார்.

காராளரிடம் பேசி முடித்த பின், கொல்லனையும் குறளனையும் அழைத்து, “உனக்கும் குறளனுக்கும் நான் இடப்போகும் கட்டளை சிரமமானதுதான் என்றாலும், நம்முடைய முனை எதிர் மோகர் படை வீரர்கள் சிலரது துணையுடன், பாண்டிய நாட்டில் மோகூரிலும், வேறு பல இடங்களிலும் நாம் உருவாக்கி மறைத்து வைத்திருக்கும் வேல், வாள், கேடயம், ஈட்டி முதலிய படைக் கலங்களையும் பிற ஆயுதங்களையும், காராளர் தீர்த்த யாத்திரை முடிந்து திரும்புவதற்குள், நீங்கள் படிப்படியாய் நிலவறை வழியாக இரத்தினமாலையின் மாளிகைக்குள்ளே கடத்திக் கொண்டு போய் அங்கே அடுக்கி விட வேண்டும். இரத்தினமாலையின் மாளிகையில் இடம் போதாவிடில், அம்மாளிகையின் கீழுள்ள நிலவறைப் பகுதியிலும் வெள்ளியம்பல மன்றின் கீழுள்ள நிலவறைப் பகுதியிலும் ஆயுதங்களை அடுக்கலாம். ஆயுதங்களைக் கொண்டு போய் அடுக்கும் வேலை முடிந்ததுமே, நம் வீரர்களில் இருநூற்றுவருக்கு மேல் நிலவறை வழியே சென்று, இளையநம்பியோடு சேர்ந்து கொள்ள வேண்டும். மேலும் பன்னூறுபேர் வெள்ளியம்பல மன்றில் அடையாளம் காண் முடியாதபடி ஊடுருவ வேண்டும். சில நூறு பேர், நடுவூர் வசந்த மண்டபத் தோட்டத்தில் மறைந்திருக்க வேண்டும். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்வேன். இதற்கு இடையில் முடிந்தால் கொற்கையிலுள்ள குதிரைக் கோட்டத்துத் தலைவன், மருதன் இளநாக நிகமத்தானை என்னிடத்திற்கு அழைத்து வர ஒருவர் போய் வர வேண்டும்” இவ்வாறு கட்டளையிட்டு அவர்களை அனுப்பினார் பெரியவர்.

Previous articleRead Nithilavalli Part 2 Ch26 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch2 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here