Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch10 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch10 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

95
0
Read Nithilavalli Part 3 Ch10 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch10|Na. Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch10 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றி மங்கலம்

அத்தியாயம் 10 : அளப்பரிய தியாகம்

Read Nithilavalli Part 3 Ch10 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

பெரியவர் மதுராபதி வித்தகர் தன் சார்பில், சேர வேந்தனிடம் ஒப்புக் கொண்டிருக்கும் நிபந்தனை என்னவாக இருக்கும் என்று எண்ணித் தயங்கவோ, அஞ்சவோ செய்யாமல் முழு மனத்தோடு அதையும் ஏற்றுக் கொண்டான் இளையநம்பி. உடனே திருமால் குன்றத்திலிருந்து பெரியவர் அனுப்பியிருந்த தூதனிடம், ‘ஐயா! தாங்கள் சேரனுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதியை, என் வாக்குறுதியாகவே கருதி நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் பாண்டிய நாட்டின் எதிர்கால நன்மைதான் அடிப்படையாயிருக்கும் என்பதை எளியேன் நன்கு அறிவேன்’ என்று விநயமாகவும், வணக்கத்துடனும் மறுமொழி ஒலை எழுதிக் கொடுத்தனுப்பி விட்டான் அவன்.

பெரியவரிடம் இருந்து வந்த தூதன் மறுமொழி ஒலையோடு திரும்பிச் சென்ற பின், கீழேயுள்ள நிலவறையில் வீரர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த கொல்லனை உடனே தன்னைச் சந்திக்க வருமாறு, கணிகை மாளிகையின் மேற்பகுதிக்குக் கூப்பிட்டு அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் வருவதற்குள் ஒலைகளை எடுத்து, எழுத்தாணியால் ஏதோ அவற்றில் எழுதத் தொடங்கினான். சிறிது நேரங் கழித்து எழுதுவதை நிறுத்திக் கொண்டு, ஏதோ, நினைவுக்கு வந்தவன் போல், திருமோகூரிலிருந்து காராளர் மகள் செல்வப்பூங்கோதை அனுப்பியிருந்த, பழைய ஓலைகளை எடுத்து மீண்டும் படிக்கலானான். படித்துவிட்டுத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். சில கணங்களில் சிரிப்பு மெல்ல மெல்ல அவன் முகத்திலிருந்து மறைந்தது. முகத்தில் துயரம் தெரிய, வேதனையோடு நெட்டுயிர்க்கத் தொடங்கினான். அவன் துயரமும், மகிழ்ச்சியும் மாறி, மாறி நிலவிட அவன் மனத்திற்குள், ஏதோ ஒரு போராட்டம் நிகழத் தொடங்கியிருந்தது. எழுதுவதற்கு எடுத்த ஒலைகளில், மீண்டும் அவன் எழுதத் தொடங்கிய போது யாரோ மிக அருகில் நடந்து வரும் காலடியோசை கேட்டது. நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்காமலே, வருவது கொல்லன் இல்லை என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. காலடி ஓசையை முந்திக் கொண்டு வரும் நறுமணங்களும், கை வளைகள், காற்சிலம்புகள் ஆகியவற்றின் இங்கித நாதங்களும் இரத்தினமாலைதான் தன்னருகே வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனை உணரச் செய்தன.

உடனே அவன் முன்னெச்சரிக்கையும், விழிப்பும் அடைந்தவனாகச் செல்வப்பூங்கோதையிடமிருந்து தனக்கு வந்திருந்த ஒலைகளையும், அப்போது செல்வப்பூங்கோதைக்குக் கொடுத்தனுப்புவதற்காகத் தான் வரைந்து கொண்டிருந்த ஓலையையும், எழுத்தாணியையும் எல்லாவற்றையும் சேர்த்து விரைந்து மேலாடையால் போர்த்தி மறைக்க முயன்றான்.

இன்னிசையாய்க் கலீரென்ற சிரிப்பொலி அவன் செவிகளை நிறைத்தது. அவன் முயற்சியை இரத்தினமாலை கவனித்துவிட்டாள் என்பதற்கு இந்தச் சிரிப்பொலி அடையாளமாய் இருந்தது. அவன் நிமிர்ந்து அவளை ஏறிட்டுப் பார்த்து வினாவினான்:

“ஏன் சிரிக்கிறாய் இரத்தினமாலை?”

“ஏன் சிரிக்கிறேன் என்று உங்கள் மனத்தையே கேட்டுப் பாருங்கள்! தெரியும்! அடுத்த பிறவி வரை உங்களுக்காகக் காத்திருக்கத் துணிந்தவளை, இந்தப் பிறவியிலேயே நீங்கள் நம்பாததைப் பார்த்துத்தான் சிரிக்கிறேன்.”

“நான் உன்னை நம்பவில்லை என்பதை நீ இப்போது எப்படிக் கண்டுபிடித்தாய்?”

“என்னிடமே மறைக்கவும், ஒளிக்கவும் உங்களுக்கு இரகசியங்கள் இருக்கின்றன. அப்படி நான் எதையும் உங்களிடம் ஒளிக்க முயன்றதில்லை…” இளையநம்பியின் நெஞ்சில் சுரீரென்று தைத்தன இந்தச் சொற்கள். உடனே ஒரு வைராக்கியத்தோடும், நிர்ப்பயமான நேர்மையோடும், எந்த அந்தரங்கத்தையும் பங்கிட்டுக் கொள்ள ஏற்ற அவளிடம் எதையும் மறைக்க வேண்டியதில்லை என்ற நியாய உணர்வோடும், மேலாடையால் மறைத்திருந்த ஒலைகளை எல்லாம் எடுத்து, “இந்தா! இதில் உன்னிடம் ஒளிக்க எதுவும் இல்லை. இவற்றை நீயும் படிக்கலாம். இவற்றைப் படித்த பின்பும், நீ அடுத்த பிறவி வரை எனக்காகக் காத்திருக்கச் சித்தமாயிருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு இரத்தினமாலை!” என்று அவற்றை அவளிடம் அளிக்கலானான் இளையநம்பி.

அவள் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமலேயே, அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள்.

“சில வேளைகளில் உன் வார்த்தைகளை விட புன்னகைகள் கடுமையானவையாக இருக்கின்றன, இரத்தினமாலை!”

“ஐயா! இப்போது நான் கூறப் போவதைக் கேட்டு நீங்கள் திகைப்படையவோ, என் மேல் கோபப்படவோ கூடாது. என்னைப் பொருத்தருள வேண்டும்! இந்த ஒலைகளை நீங்கள் அறியாமலே, பலமுறை உங்கள் அங்கியிலிருந்து ஏற்கெனவே எடுத்துப் படித்திருப்பதற்காகத் தாங்கள் இந்தப் பேதையை முதலில் மன்னிக்க வேண்டும்.”

“அப்படியானால் அதை ஏன் என்னிடம் நீ மறைத்தாய்?”

“மறைத்ததற்குக் காரணம் உண்டு. என்னால், தாங்கள் சலனமோ, மனக்கிலேசமோ அடைந்து, ஒரு பாவமும் அறியாத அந்தப் பேதை செல்வப்பூங்கோதையிடம் வேறுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நான் இவற்றை அறிந்ததை உங்களிடம் காண்பித்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால், இவற்றை அறிந்த பின்பே, என் நிலையை அவளோடு ஒப்பிட்டுச் சிந்தித்துக் கொண்டுதான் அன்று நான் உங்களிடம், ‘ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ, அது முடியப் போகிறதே என்றுதான் நான் கண் கலங்குகிறேன். புதிதாக எதையும் தொடங்கவில்லை’ என்று கண்ணீர் சிந்திக் கதறினேன். நீங்கள் உறுதி கூறிய பின்பு, அடுத்த பிறவி வரை காத்திருப்பதாக வாக்களித்தேன். என் தியாகத்தை நான் இந்தச் செல்வப்பூங்கோதையின் நலனுக்காகவே செய்தேன் என்பதைக் கூட, அன்று நான் உங்களிடம் கூறவில்லை. காரணம் அவ்வளவு ஏமாற்றங்களையும், நிராசைகளையும் தாங்கிக் கொள்ளும் மனோதிடமும், உறுதியும் அந்தத் திருமோகூர்ப் பெண்ணுக்கு இருக்கும் என்று அவள் எழுதிய ஒலைகளிலிருந்து தெரியவில்லை. அவளுடைய உரிமை முதன்மையானது. உங்களைப் போன்றதொரு சாம்ராஜ்யாதிபதிக்கு அந்த அரசை நோக்கிச் செல்லும் முதல் ஒற்றையடிப் பாதையையே அவள் காட்டியிருக்கிறாள். அவள் என்னை விடப் பாக்கியசாலி. என்னை விடக் கொடுத்து வைத்தவள். என்னை விட உங்களை, உலகறிய மணப்பதற்கு ஏற்ற குடிப் பிறப்பு உள்ளவள். நானோ அரச தந்திரங்களோடும், அரசியல் சூழ்ச்சிகளோடும் பழகிப் பழகி மனம் மரத்துப் போனவள். பெரிய ஏமாற்றங்களைக் கூட என்னால் எளிதாகத் தாங்கிக் கொண்டு விட முடியும். அவளால் அது முடியாது… முடியும் என்று தோன்றவும் இல்லை…”

பேசிக் கொண்டே வந்தவள் பேச்சுத் தடைப்பட்டு இருந்தாற் போல் இருந்து சிறு குழந்தைபோல் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். மேலே அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவள் செய்திருக்கும் அந்தரங்கமான தியாகம் எவ்வளவு பெரியது என்று நினைக்க, நினைக்க இளையநம்பியின் மனத்தில் அந்தத் தியாகத்தின் எல்லை பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது.

“உனக்கு நான் மிகப் பெரிய கொடுமை செய்து விட்டேன் இரத்தினமாலை! நீ ஏன் இப்போது அழுகிறாய்? கல் நெஞ்சனாகிய நான் அல்லவா கதறி அழவேண்டும்? அழவும் முடியாத பாவியாகி விட்டேனே நான்?” என்று விரக்தியோடு கூடிய ஒரு சினத்தின் வயப்பட்டவனாக அந்த ஒலைகளைக் கிழிக்க முற்பட்ட இளையநம்பியை அவள் தடுத்தாள். கண்ணீருக்கிடையே அவனிடம் மன்றாடினாள்:-

“எந்தப் பேதைக்காக நான் தியாகம் செய்தேனோ, அவள் துன்பப்படக் கூடாது ஐயா? இப்போது நீங்கள் அவளுக்குக் கொடுத்தனுப்ப எழுதத் தொடங்கிய ஒலையை மகிழ்ச்சியோடு எழுதிக் கொல்லனிடம் கொடுத்தனுப்ப வேண்டும். இல்லையானால், நீங்களே இந்தப் பேதையின் தியாகத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறீர்கள் என்று ஆகும்.”

திக்பிரமை பிடித்தவனாக வீற்றிருந்த இளைய நம்பி கண்களில் நீர் மல்க, அவள் கூறிய படியே செய்வதாகத் தலையசைத்தான். தான் செய்த தியாகத்தைக் கூட ஒர் அரச தந்திரக் காரியம் போல், மிக மிக இரகசியமாகவும், யாருக்கும் தெரியாமல் ஆத்மார்த்தமாகவும் அவள் செய்திருப்பதை உணர்ந்து, அவளை எப்படி வியப்பது என்றும், எப்படிப் புகழ்வது என்றும் சொற்கள் கிடைக்காமல் திகைத்திருந்தான் இளைய நம்பி. அவன் இதயத்தில் இரத்தினமாலை ஒரு புனிதமான தியாக தேவதையாகக் குடியேறிக் கொலு வீற்று விட்டாள். ‘எவ்வளவு பெரியவள்’ என்று அவன் ஏற்கெனவே அவளைப் பற்றி மதிப்பிட்டிருந்தானோ, அதையும் விடப் பெரியவளாக இப்போது உயர்ந்திருந்தாள் அவள். கணிகை மாளிகையில் அடியெடுத்து வைத்த முதற் கணத்தில், தனக்கும் அழகன் பெருமாளுக்கும் நடந்த விவாதமும் அன்று அழகன் பெருமாள் இரத்தினமாலையின் குணச் சிறப்பை வியந்து புகழ்ந்ததும், இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தன. பெரியவர் மதுராபதி வித்தகர் போன்ற பெரிய ஞானியின் ஆசி மொழியை இரத்தினமாலை எப்படி அடைந்திருக்க முடியும் என்பது இப்போது அவனுக்கு மிக மிக எளிதாகவே புரிந்தது. அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உடல் புல்லரித்தது.

இரத்தினமாலை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகை பூத்தபடி நின்றிருந்தாள்.

“ஒலையை எழுதி முடித்துச் செல்வப் பூங்கோதைக்கு அனுப்புங்கள் ஐயா! உங்கள் தனிமைக்கு இப்போது இங்கே நான் இடையூறாக இருக்க விரும்பவில்லை” என்று சிரித்தபடியே கூறி விட்டு உட்புறம் சென்று மறைந்தாள் அவள்.

நெடுநேரம் திகைத்திருந்து விட்டுப் பின், ஒருவாறு ஒலையை எழுதி முடித்தான் இளையநம்பி. அதற்குள் கொல்லனும் கூப்பிட்டனுப்பிய கட்டளையை ஏற்று, நிலவறையிலிருந்து வந்திருந்தான்.

“நாளை இரவு நாம் கோட்டைக்குள் புகுந்து, ஆட்சியைக் கைப்பற்றி நமது மீனக்கொடியை மீண்டும் மதுரை மாநகரில் பறக்கச் செய்யப் போகிறோம். அதற்குள் நீ திருமோகூர் சென்று இந்த ஒலையை எனக்காகக் காராளர் மகளிடம் சேர்த்து விட முடியுமா?” என்று இளையநம்பி அவனைக் கேட்டான். உடனே அதைச் செய்ய இணங்கி, ஒலையை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் கொல்லன். ‘விரைந்து மீண்டும் நிலவறைக்குத் திரும்பி வந்துவிட வேண்டும்’ என்பதை அவனிடம் ஒரு முறைக்கு இரு முறையாக வற்புறுத்திய பின், அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் திருமோகூருக்குப் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று, அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், எதிர்பாராத விதமாகத் திருமால் குன்றத்திலிருந்து காராளரும், அவரோடு இளையநம்பிக்குப் புதியவனாகிய இன்னோர் இளைஞனும் நிலவறை வழியே கணிகை மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள்.

Previous articleRead Nithilavalli Part 3 Ch9 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch11 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here