Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch11 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch11 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

81
0
Read Nithilavalli Part 3 Ch11 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch11|Na. Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch11 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றி மங்கலம்

அத்தியாயம் 11 : இரத்தினமாலையின் முத்துமாலை

Read Nithilavalli Part 3 Ch11 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நீண்ட நாட்களுக்குப் பின்பு காராளரைச் சந்தித்ததும் ஏற்பட்ட வியப்பில், அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ செய்திகள் இருந்தும், இளையநம்பியால் சில கணங்கள் எதுவும் பேச முடியவில்லை. தவிரவும், காராளரோடு வந்திருந்த புதிய இளைஞன் வேறு உடன் இருந்ததால், இளையநம்பி அவரிடம் மனம் விட்டுப் பேசவும் இயலவில்லை. ஒருவருக்கொருவர் நலன் விசாரித்துக் கொள்ள முடிந்த அளவில் உரையாடல் நின்று போயிற்று. அப்போது காராளரே முன் வந்து, “பெரியவர் தங்களிடம் இந்த ஒலையைச் சேர்த்து விடச் சொல்லிக் கொடுத்தனுப்பினார்” என்று ஓர் ஒலையை எடுத்து இளைய நம்பியிடம் அளித்திருந்தார். பிடரியிலும், காதோரங்களிலும் சுருண்டு வளர்ந்திருந்த முடியுடனும், பெண்மை முகச் சாயலுடனும், காராளரின் அருகே நின்று கொண்டிருக்கும் இந்தப் புதிய இளைஞனைப் பற்றிப் பெரியவர் அந்த ஒலையில் ஏதாவது எழுதியிருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தபடியே அதை முத்திரை நீக்கிப் பிரித்தான் இளையநம்பி. அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அந்தச் செய்திகள் அதில் இருந்தன.

“… மங்கல நல்வாழ்த்துகளுடனும் நற்பேறுகளுடனும் இளையநம்பி காண்பதற்கு விடுக்கும் ஒலை. இந்த ஒலைதான் திருமால் குன்றத்திலிருந்து நான் உனக்கு விடுக்கும் இறுதி ஒலையாக இருக்கும். என் இடத்தை இனி நீ அறிவதால் அபாயமில்லை. இதற்குப் பின்னால் இப்படி மறைந்திருந்து யாரும் அறியாமல் உனக்கு ஒலையனுப்பவும், கட்டளைகளை இடவும், உபாயங்களைச் சொல்லிக் கொடுக்கவும் அவசியம் இராது. விரைவில் மதுரை மாநகரத்து அரியணையில் புகழ் பெற்ற பாண்டியர் வெண் கொற்றக் குடையின் கீழ், நீ வெளிப்படையாக அரசு வீற்றிருப்பாய். களப்பிரர் ஆட்சியால் வீழ்ச்சியடைந்து விட்ட நமது சமயமும், மொழியும், கலைகளும், நாகரிகமும் மீண்டும் வளரும். நீ அவற்றை வளரச் செய்வாய் என்ற திடநம்பிக்கை எனக்கு உண்டு. நாளை நள்ளிரவு நடு யாமத்திற்குப் பின்னர் களப்பிரக் கருநாடவேந்தன் கலியரசனின்[1] ஆட்சி பாண்டிய நாட்டில் இருக்க முடியாது.

நாளை நள்ளிரவிற் கோட்டையைக் கைப்பற்று முன் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றி, இந்த ஒலையில் உனக்கு நான் தெரிவிக்கப்போகிறேன். இதிற் கண்ட கட்டளைகளை அணுவளவும் பிழையாமல் நிறைவேற்ற வேண்டியது உன் கடமை. இந்தக் கடமையை நீ செம்மையாக நிறைவேற்றுகையில், உனக்கு உறுதுணையாய் இருப்பதற்காகவே, காராளரையும் அனுப்பி இருக்கிறேன். காராளரோடு வந்திருக்கும் புதிய இளைஞன் யார் என்ற கேள்வி இப்போது உன் மனதில் எழலாம். நீ திருக்கானப் பேர்க்காட்டிலிருந்து முதன்முதலாக என்னைச் சந்திக்கத் திருமோகூருக்கு வந்த மறுநாள் காலையில், ‘களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றுவிட்ட இருவரைத் தவிரப் பாண்டிய அரச வம்சத்தில் நீ உட்பட இன்னும் மூவர் எஞ்சியிருக்கிறீர்கள்’ என்று நான் உன்னிடம் கூறினேன். உடனே நீ என்னிடம் அந்த மூவரில் உன்னொருவனைத் தவிர, ‘மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள்?’ என்று கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

‘இப்போது நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ. நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம்’ என்று அன்று, அந்த அதிகாலை வேளையில் உனக்கு நான் மறுமொழி கூறியிருந்தேன். தீவினையோ அல்லது நமது துர்ப்பாக்கியமோ தெரியவில்லை; அதில் ஒருவனை நீ சந்திக்க முடியாமலே போய் விட்டது. களப்பிரர்கள் அவனைக் கழுவேற்றிக் கொன்று விட்டார்கள். தென்னவன் மாறன் கழுவேற்றப்பட்ட தினத்தன்று, அவன் உனக்குத் தமையன் முறை ஆக வேண்டும் என்ற உண்மையை உன்னிடம் தெரிவித்து விட்டதாக இரத்தினமாலை எனக்கு அறிவித்திருந்தாள். அந்தத் தென்னவன் மாறனைத் தவிர, எஞ்சியிருக்கும் மற்றொருவன்தான் இப்போது காராளரோடு உன்னைக் காண வந்திருக்கிறான். இவன் பெயர் பெருஞ்சித்திரன். இதுவரை இவன் மாறோக வளநாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய கொற்கையில் குதிரை கொட்டாரத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானின் பொறுப்பில் வளர்ந்தவன். பாண்டியர் குலநிதியாகிய நவநித்திலங்களோடு, சில திங்களுக்கு முன்புதான் இவன் என்னைக் காண வந்தான். இதற்கு மேல் குறிப்பறியும் திறனுள்ள உனக்கு நான் எதையும் அதிகமாகக் கூற வேண்டியதில்லை. வீரமோ, திடசித்தமோ, ஆண்மையோ அதிகம் இல்லாத இந்தப் பிள்ளையாண்டான் உனக்குத் தம்பி முறை ஆக வேண்டும். ஒரு தம்பியைத் தமையன் எப்படி வரவேற்க வேண்டுமோ, அப்படி முறையாக நீ இவனை வரவேற்கவும், ஏற்றுக் கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறாய். எனினும் மிகப் பெரிய சாதனைகளைச் சாதித்துக் கொடுக்கும் எந்தத் திறனையும், நீ இவனிடம் எதிர் பார்க்க முடியாது. பிறவற்றைக் காராளர் உன்னிடம் விவரிப்பார். இனி இந்த ஓலையின் தொடக்கத்தில் நான் உனக்கு இடப் போவதாகக் கூறிய கட்டளைகள் வருமாறு:

வெள்ளியம்பலத்திலும், அகநகரின் பிறபகுதிகளிலும், நம்மவர்கள் நிறைய ஊடுருவி இருக்கிறபடியால், நாளை மாலை மயங்குகிற வேளையில், அவர்களைக் கொண்டு புறத் தாக்குதலைத் தொடங்க வேண்டும். இந்தப் புறத் தாக்குதலுக்கு நீ தலைமை தாங்கிப் படை நடத்திச் செல்லக் கூடாது. களப்பிரர்கள் அகநகரில் இப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். பார்வைக்கு ந்ன்றாகத் தெரிந்தாலும், ஒரு மணல் கோட்டை எப்படித் தொட்டால் உடனே சரிந்து விழுந்து விடுமோ, அப்படித்தான் களப்பிரர்களின் கோட்டையும் இப்போது இருக்கிறது. படை வீரர்கள் எல்லாரும் எல்லைகளில் போரிட்டுக் கொண்டிருக் கிறார்கள். ஒரு மமதையின் காரணமாகத் தானே போர்க் களத்திற்குச் செல்லாமல், படைவீரர்களே வெற்றியை ஈட்டிக் கொண்டு வருவார்கள் என்ற தப்புக் கணக்கில் களப்பிரக் கலியரசன் மதுரையிலேயே அரண்மனையில் மாவலி முத்தரையனுடன் வட்டாடிக் கொண்டு[2] கிடக்கிறான். கூடியவரை அரண்மனையிலும், அகநகர் எல்லையிலும் உள்ள சிறிதளவு களப்பிர வீரர்களின் எண்ணிக்கையும் தனித்தனியே சிதறும்படியாகச் செய்து பல முனைகளில் அவர்களைப் பிரித்துத் தாக்க வேண்டியது நம் கடமை.

வெளிப்படையாக நடைபெறும் புறத்தாக்குதலைத் தொடங்கி அரண்மனையை வளைத்துக் கொள்ளச் செல்லும் நம் வீரர்கள் குழுவிற்குப் பெருஞ்சித்திரன் மட்டும் தலைமை தாங்கினால் போதும். மாலையில் தொடங்கும் இந்தப் புறத்தாக்குதலால், நள்ளிரவுக்குள் நமக்குச் சாதகமான பல மாறுதல்கள் ஏற்படும். நள்ளிரவில் இந்த மாறுதல்கள் தெரிந்த பின், சூழ்நிலையை உறுதி செய்து கொண்டு, அதன்பின் நீயும் காராளரும், கொல்லனும், நிலவறையிலுள்ள நம் வீரர்களும் கரந்துபடை வழியாக அரண்மனையிற் புகமுடியும். அவ்வாறு அரண்மனையில் புகுந்ததும், முதல் வேலையாக அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் அழகன் பெருமாள் முதலியவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் அரண்மனையில் எங்கே சிறைப்பட்டிருப்பார்கள் என்பதை உங்களுக்குக் காட்டுவதற்கு உங்களோடு இருக்கும் உப வனத்துக் குறளன் உதவியாக இருப்பான். மதுரை மாநகரத்துக் கோட்டையில், நம் மீன் கொடி பறக்கத் தொடங்கியதும், அதைக் கண்டு வந்து என்னிடம் தெரிவிக்க, வையையின் இக்கரையில் செல்லூர் அருகே நானே ஆட்களை நிறுத்தியிருக்கிறேன். கோட்டையில் நம் கொடி பறப்பதை அறிந்த சில நாழிகைகளில், நானும் என்னோடு மறைந்திருக்கும் மற்றவர்களும் கிழக்குக் கோட்டை வாயில் வழியே அகநகரில் புகுந்து, அங்கே அரண்மனைக்கு வந்து சேருவோம். இக்கட்டளைகளை எவ்விதத் தயக்கமும், ஐயப்பாடும் இன்றி நிறைவேற்றுக…” என்று பெரியவர் ஒலையை முடித்திருந்தார். ஒலையைப் படித்து முடித்ததும், பெருஞ்சித்திரனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டு உறவு சொல்லி மகிழ்ந்தான் இளையநம்பி. அரச வம்சத்தின் கடைசி இரண்டு குலக் கொழுந்துகள் சந்தித்துத் தழுவிக் கொண்ட அந்தக் காட்சியைக் காராளர் விழிகளில் ஆனந்தக் கண்ணிர் மல்கக் கண்டு மகிழ்ந்தார்.

இரத்தினமாலை தன் மாளிகைக்குப் புதிய விருந்தினர்களாகிய காராளரையும், பெருஞ்சித்திரனையும் வரவேற்று உபசரிக்கத் தொடங்கினாள். உணர்ச்சிக் குமுறல்களை எல்லாம் உள்ளேயே அடக்கிக் கொண்டு இரத்தினமாலை அவ்வளவு விரைவாய் வந்திருப்பவர்களுக்கு முன்னால் எப்படி இத்தனை இயல்பாகச் சிரித்து மகிழவும், வரவேற்கவும் முடிகிறதென எண்ணி வியந்தான் இளையநம்பி. அவளுடைய திறமையை அவன் அப்போது காண முடிந்தது.

அன்று அந்த மாளிகையில், அவர்கள் மூவரையும் ஒரு சேர அமர வைத்து விருந்து பரிமாறினாள் இரத்தினமாலை. விருந்துண்டு முடிந்ததும், மாளிகைக் கூடத்தில் அமர்ந்து மிகமிக நுட்பமான அரச தந்திர உபாயங்களைப் பற்றிக் காராளரும் இளையநம்பியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாக உடனிருந்த பெருஞ்சித்திரன் இடையிடையே கொட்டாவி விட்டபடி, உறக்கக் கலக்கத்தில் இருந்ததையும் கவனித்துக் கொண்ட இளையநம்பி, “தம்பீ! நீ உறங்கப் போவதாயிருந்தால், போகலாம்” என்று சிரித்துக் கொண்டே அவனை நோக்கிச் சொன்னான். பெருஞ்சித்திரனோ, இளையநம்பி அப்படிச் சொல்லுவதற்காகவே காத்திருந்தவனைப் போல் உடனே எழுந்திருந்து உறங்கப் போய்விட்டான். அதைக் கண்டு இளையநம்பி பெரிதும் ஏமாற்றம் அடைந்தான். ஏமாற்றத்தோடு அவன் காராளரைக் கேட்டான்:

“ஐயா, நாளை மாலை அரண்மனையை வளைத்துப் புறத் தாக்குதல் நடத்திச் செல்லும் படையணிக்கு இவன் தலைமை தாங்கினால் போதும் என்று பெரியவர் கட்டளையிட்டிருக்கிறாரே; அதை நினைத்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. இவனோ பொறுப்பில்லாதவனாகத் தெரிகிறான். மன உறுதியும் போதாது போலிருக்கிறதே?”

“உண்மைதான்! ஆனால், பெரியவருக்கும் இவனைப் பற்றி நன்கு தெரியும்: தெரிந்திருந்தும், அந்தப் படையணிக்கு இவனைத் தலைவனாக அவர் நியமித்திருக்கிறார் என்றால், அதில் வேறு ஏதாவது நுணுக்கமான காரணம் இருக்கும். அவர் கட்டளைப்படியே செய்து விடுவதுதான் நமக்கு நல்லது…” என்றார் காராளர். பெருஞ்சித்திரனைக் கண்டு மிகமிக வேதனையும், ஏமாற்றமும் அடைந்திருந்தான் இளையநம்பி. புகழ் மிக்க பாண்டிய மரபில் வந்தவனாகவே நம்ப முடியாதபடி விடலைத் தனமாகவும், விட்டேற்றியாகவும் தோன்றினான் அவன். ஒடுக்கப்பட்டுவிட்ட ஓர் அரச குடும்பத்து இளைஞனுக்கு இந்த இளம் பருவத்தில், தான் இழந்த நாட்டை மீட்பதில் எவ்வளவு ஆவலும், சுறுசுறுப்பும் இருக்க வேண்டுமோ, அதில் ஒரு சிறிதும் பெருஞ்சித்திரனிடம் இல்லை என்பது இளையநம்பிக்குப் புரிந்தது.

‘தென்னவன் மாறனின் இயல்பு இவனுக்கு நேர் மாறானது ஐயா! சீறிப் பாயும் பதினாறடி வேங்கை போன்ற கனலும் தோற்றமும், எதிரிகள் பெயரைக் கேட்டாலே பொங்கி எழும் வீரமும் தென்னவன் மாறனுடையவை. இந்தப் போரில் தென்னவன் மாறன் இருந்திருக்க வேண்டும் ஐயா’ என்று கொலையுண்ட பாண்டிய குல மகா வீரனும் இளையநம்பிக்குத் தமையன் முறையுடையவனும் ஆகிய தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டினார் காராளர். களப்பிரர்களால் சிறை செய்யப்பட்டுக் கொலையுண்ட தன் தமையனைப் பற்றி அவர் நினைவூட்டவே, ஓரிரு கணங்கள். ஒன்றும் பேசத் தோன்றாமல், அப்படியே கண் கலங்கிப் போய் இருந்து விட்டான் இளையநம்பி. அவன் அடைந்த வேதனையைக் கண்டு தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டியதன் மூலம், அப்போது அவன் உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கச் செய்து விட்டோமோ என்று காராளருக்குக் கூட வருத்தமாக இருந்தது. அவனைத் தனிமையில் இருக்க விட்டு விட்டு, இரத்தினமாலையைத் தேடி அவளிடம் பேசுவதற்குச் சென்றார் காராளர். அதன் பின்பு பிற்பகல் வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து உரையாடிக் கொள்ள வாய்ப்பின்றியே கழிந்தது. முன்னிரவின் தொடக்கத்திலேயே இளைய நம்பியால் திருமோகூர் அனுப்பப்பட்டிருந்த கொல்லன் திரும்பி வந்து சேர்ந்திருந்தான்.

“ஐயா! தங்கள் ஒலையைக் காராளர் திருமகளிடம் சேர்த்து விட மட்டுமே முடிந்தது. ஒலையைக் காராளர் மகள் படித்தறிகிற வரை காத்திருந்து மறுமொழியோ, மாற்று ஒலையோ தரச் சொல்லிப் பெற்று வர நேரமில்லை. நான் காலந் தாழ்த்தாமல், உடனே இங்கு திரும்பி வர வேண்டும் என்று தாங்கள் கட்டளை இட்டிருந்ததைக் கருதித்தான் விரைந்து திரும்பி விட்டேன். இங்கு நான் வந்து, நிலவறையிற் படியேறி மேலே வரும் போதுதான் ஏற்கெனவே காராளரும், கொற்கைப் பெருஞ்சித்திரனும், இங்கு வந்து சேர்ந்திருப்பதாக நம் வீரர்கள் கூறினார்கள்” என்றான் திருமோகூர் கொல்லன். காராளர் மூலம் அறியக் கிடைத்த பெரியவரின் கட்டளைகளை எல்லாம் கொல்லனிடமும் விவரித்தான் இளையநம்பி. கொல்லனும் அவற்றையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டபின்,

“அகநகரின் புறத்தாக்குதலைத் தாங்கள் தலைமை நடத்துவது காரணமாகத் தங்களுக்கு அபாயம் எதுவும் நேரிட்டு விடக் கூடாதே என்று கருதித்தான் பெரியவர் கொற்கைப் பெருஞ்சித்திரனை அதற்கு அனுப்பச் சொல்லி இருக்கிறார் போலும்” என்று சொன்னான். உடனே அதற்கு இளையநம்பியிடமிருந்து பதில் வந்தது.

“இது உன் அநுமானம் என்று நினைக்கிறேன்…”

“ஆம் ஆனால் இந்த அதுமானத்தில் பிழையிருக்காது என்பது மட்டும் உறுதி” என்று மீண்டும் தீர்மானமாக அழுத்திச் சொன்னான். இளையநம்பி அவனிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டான்.

“ஆமாம், இந்தப்பெருஞ்சித்திரன் கொற்கைக் குதிரைக் கோட்டத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானுடைய பொறுப்பில் வளர்ந்தும் ஏன் இப்படி ஒரு பொறுப்பும் அறியாத விட்டேற்றியாகத் தலையெடுத்திருக்கிறான்?”

“மருதன் இளநாக நிகமத்தார் குதிரைகளை வளர்ப்பதிலும், பழக்குவதிலும், தேர்ச்சி பெற்றவர். மனிதர்களைப் பழக்குவதிலும், வளர்ப்பதிலும் அவர் திறமை எவ்வளவு என்பதற்கு நம் பெருஞ்சித்திரனே சான்று!”

கொல்லனின் இந்த மறுமொழியைக் கேட்டு இளையநம்பிக்குச் சிரிப்பு வந்தது. இரும்புப் பட்டறையில் பொன் இழை போன்ற நகைச்சுவையாக, முதன் முதலாக இப்போதுதான் அவனிடமிருந்து கேட்டான் இளையநம்பி. பேசிக்கொண்டே இருவரும் மாளிகையின் அலங்கார மண்டபத்தருகே சென்றனர். அங்கே பேரொளியாக மின்னும் தீபாலங்காரங்களிடையே, விளக்குகளுடன் பகை செய்வது போற் சுடர் மின்னுகிற வெண்முத்துகளைக் கொட்டிக் குவித்து ஒவ்வொன்றாகத் தேர்ந்து பட்டு நூலில் கோத்து ஆரமாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை.

“என்ன? முத்துமாலை உருவாகிக் கொண்டிருக்கிறாற் போலிருக்கிறதே? நாங்கள் எல்லாம் வாள் முனையைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கே இரத்தினமாலையின் கையிலோ முத்துமாலை கோர்க்கப்படுகிறது…” என்று கூறியபடியே அருகில் வந்த இளையநம்பியை, ஒன்றும் மறுமொழி கூறாமல் அமைதியாக ஏறிட்டுப் பார்த்தாள் இரத்தினமாலை. சில கணங்கள்.அந்த அமைதி நீடித்தது. பின்பு நிதானமாக அவனிடம் இந்த மறுமொழியைக் கூறினாள்.

“அரசகுமாரர்கள் வாள் முனையைக் கூராக்குவார்கள். போர் முனையில் வெற்றி பெறுவார்கள்! அப்படி வெற்றி பெற்ற பின், அவர்களை மணக்கும் உரிமையுள்ள நற்குடியிற் பிறந்த பெண்ணழகிகள், அந்த அரசகுமாரரை மாலை சூடி மணக்க ஓடோடி வருவார்கள். அப்படி மணக்கும் வேளையில், அந்தப் பாக்கியத்தைப் பெற்ற பெண்ணரசிக்கு அந்தப் பாக்கியத்தைப் பெற முடியாத என் போன்ற பேதைகள், இப்படி அன்பளிப்பாக எதையேனும் தொடுத்தோ, சூடியோ கொடுக்கத்தான் முடியும்.” கொல்லன் உடனிருந்ததால், சுபாவமாகச் சொல்லுவது போல் இந்தச் சொற்களை அவள் கூறியிருந்தாலும், நீறு பூத்த நெருப்பைப் போல் இதன் ஆழத்திலிருந்து, அவளுடைய துயர வெம்மை கனல்வதை இளையநம்பி உணர முடிந்தது. அந்த நிலையில் அவளோடு அதிகம் பேச விரும்பாமல், கொல்லனுடன் நிலவறைக்குச் சென்று படைவீரர்களைக் கவனிக்கும் எண்ணத்தோடு புறப்பட்டான் இளையநம்பி.

ஆதாரம்- வேள்விக்குடிச் செப்பேடுகள்.
தாயக்கட்டம் போல் ஒரு விளையாட்டு

Previous articleRead Nithilavalli Part 3 Ch10 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch12 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here