Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch13 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch13 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

122
0
Read Nithilavalli Part 3 Ch13 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch13|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch13 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றி மங்கலம்

அத்தியாயம் 13 : மகாமேருவும் மாதவிக்கொடியும்

Read Nithilavalli Part 3 Ch13 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

பெரியவர் மதுராபதி வித்தகர் பேதைப் பெண்களில் ஒருத்தியாகிய தன்னைச் சந்திப்பதற்காகவே, மீண்டும் திருமோகூர் வந்திருக்கிறார் என்பதைத் தன் செவிகளாற் கேட்டுமே, செல்வப்பூங்கோதை அதை நம்ப முடியாமல் திகைத்தாள். பெரியவரை எந்நேரமும் நிழல் போற் காத்துவரும் அந்த ஆபத்துதவிகள் இருவரையும், அவள் நன்கு அறிவாளாகையினால் அவர்கள் மேல் அவளுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் எழவில்லை. பொய் சொல்லுவார்கள் என்றோ, ஏமாற்றுவார்கள் என்றோ, அவர்களைப் பற்றி நினைப்பது கூடப் பெரும் பாவம் என்பதை அவள் தெளிவாக உணர்ந்திருந்தாள். அப்படியிருந்தும் காரணமின்றியே, அவள் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. பதற்றத்தோடு அவள் அவர்களைக் கேட்டாள்:-

“உள்ளே போய்ச் சொல்லி அன்னையையும் உடன் அழைத்துக் கொண்டு வரலாம் அல்லவா?”

“இல்லை, அம்மா தங்களை மட்டுமே தனியே அழைத்து வரச் சொல்லித்தான் கட்டளை!”

“அப்படியானால் உள்ளே சென்று, தாயிடம் வேறு ஏதாவது புனைந்து சொல்லிவிட்டு நான் மட்டும் வருகிறேன்” என்று அவர்களிடம் கூறி விட்டு, மாளிகைக்குள் சென்ற செல்வப்பூங்கோதை கொற்றவைக் கோவிலுக்குச் சென்று வருவதாகத் தாயிடம் கூறி விடை பெற்ற பின், மீண்டும் வாயிற்புறம் வந்தாள். தாய் ‘வாயிற்புறம் யார்?’ என்று கேட்ட போது, வேறு ஏதோ புனைந்து கூறியிருந்தாள் அவள். தாயிடம் கூறியது பொய்யாகி விடாமல், போகிற வழியிலேயே கொற்றவையை வணங்கிச் செல்லவும் நினைத்தாள்.

“போகலாம்! வாருங்கள்” என்று சொல்லி அவர்கள் புறப்பட்டதும் பின் தொடர்ந்தாள் அவள். வாயிற்புறம் வரும்போது முதலில் நடை தடுக்கியதனாலும், மனம் இனம் புரியாமலே வேகமாக அடித்துக் கொண்டதாலும், இன்னதென்று புரியாத ஒருவகை மருட்சியும், பயமும் ஆட்கொண்டிருந்ததாலும், இளையநம்பியின் காதல் மயமான ஓலையைப் படித்த உற்சாகம் அவள் இதயத்தில் இன்னும் நிறைவாக இருந்தது. அந்த உற்சாகம், அவளை எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நடந்து போகச் செய்ய முடியும் போலிருந்தது. நடு வழியில் கோவில் வாயிலில், ஒரு கணம் நின்று கொற்றவையை வணங்கினாள். மனத்தின் உற்சாகம் புறத்தே தெரிய, அப்போதில் அவள் நடையே ஒட்டமாக இருந்தது. பெரியவர் வழக்கமாகத் தங்கும் அந்தப் பெரிய ஆலமரத்தடிக்குப் போய்ச் சேர்ந்ததும், அவளை அழைத்து வந்த ஆபத்துதவிகள் வெளிப்புறமே விலகி நின்று கொண்டனர். உள்ளே செல்லும் முன்பாக வந்த வேகம் குறைந்து, அவள் கால்கள் வெளிப்புறமே தயங்கின. என்ன காரணத்தினாலோ, உள்ளே செல்வதற்குக் கால்கள் நகர மறுப்பதை அவள் உணர்ந்தாள். ஆனால் செயல்பட முடியவில்லை.

அன்று என்னவோ இருள் சூழ்ந்து விட்ட அந்த நேரத்தில், அந்தப் பழம் பெரும் ஆலமரமும், அதைச் சுற்றிய பகுதிகளும் இயல்பை மீறிய அமைதியோடு தென்பட்டன. குகை போல் இருந்த அடிமரப் பொந்தின் முனையில் ஒளி தந்து, தீப்பந்தம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. முன்பெல்லாம் பெரியவர் இதே இடத்தில் தங்கியிருந்த போது, இந்தப் பகுதி இந்த நேரத்திற்கு எவ்வளவு கலகலப்பாக இருக்குமோ, அவ்வளவு கலகலப்பாக இன்று, இப்போது இல்லை என்பது போல் அவளுக்குப் புரிந்தது. எல்லாமே, எதையோ எதிர்பார்த்து ஒடுங்கி உறைந்து போயிருப்பது போல் ஒரு சூனிய அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இவ்வளவு இரகசியமான இத்தனை குறைவான எண்ணிக்கையுள்ள ஆபத்துதவிகளுடன், எதற்காகத் திடீரென்று இவர் திருமோகூருக்கு மீண்டும் வந்திருக்கிறார் என்று சிந்திக்கவும், அநுமானிக்கவும் முயன்று தோற்றது அவள் மனம்.

வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் துணிந்து ஒவ்வோர் அடியாகப் பெயர்த்து வைத்து உள்ளே சென்றாள் அவள். கணிரென்ற அந்தக் குரல் அவளை வரவேற்றது.

“வா, அம்மா! நீயும் உன் அன்னையும் மற்றவர்களும் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?”

முன்னை விடத் தேசு நிறைந்து சுடர் விரிக்கும் அந்தத் தோற்றத்தையும், முகத்திலிருந்து ஊடுருவும் ஒளி நிறைந்த கண்களையும், பார்த்துக் கூசிய அவள் ஒரிரு கணங்கள் மறு மொழி கூற வார்த்தைகளே இன்றி திகைத்தாற் போல் அப்படியே நின்று விட்டாள். செம்பொன் நிறமுடையதும், மிகப் பெரியதுமான மகா மேரு மலையைத் திடீரென்று மிக அருகில் கண்டு துவண்ட ஒரு சிறிய மாதவிக் கொடி போல், தளர்ந்து திகைத்திருந்தாள் செல்வப் பூங்கோதை. மீண்டும் அவர் குரலே ஒலித்தது:-

“உன்னைத்தானே கேட்கிறேனம்மா? ஏன் பதில் சொல்லாமல் நின்று விட்டாய்?”

“தங்கள் திருவருளால், இதுவரை நலத்துக்கு ஒரு குறைவும் இல்லை, ஐயா!”

மீண்டும் இமையாமல் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு, அவர் கூறினார்:

“இன்று நீ மிகவும் ம்கிழ்ச்சியாயிருப்பதாகத் தெரிகிறது செல்வப்பூங்கோதை”

“தங்களை ஒத்த பெரியோர்களைக் கண்டு வணங்கும் பேறு கிடைத்தால், இந்தப் பேதை அதற்காக அடையாத மகிழ்ச்சியை வேறு எதற்காக அடைய முடியும்?” “இன்று உன் பேச்சுக் கூட மிகவும் சாதுரியமாக இருக்கிறது. ஆயினும் இது என்னைக் காண்பதற்கும் முன்பாகவே உனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது பெண்ணே…”

இந்தச் சொற்களைக் கேட்டு நடுங்கிய நடுக்கத்தில், தன் இடைக் கச்சினுள் மறைக்கப்பட்டிருந்த இளையநம்பியின் ஓலையே மெல்ல நழுவி, அவர் முன்பாகக் கீழே விழுந்து விடுமோ என்று அஞ்சினாள் செல்வப்பூங்கோதை. இந்த வினாவிற்குப் பின், எதிரே அமர்ந்திருந்த அந்தக் கம்பீரமான வடிவம் மிகப் பெரிய சிகரமாய் உயர்வது போலவும், தான் அந்தச் சிகரத்தின் முன்னே பெருங்காற்றில் ஆடும் ஒரு சிறு தளிர்க் கொடி போல் தளர்வதாகவும் உணர்ந்தாள் அவள். பயத்தில் அவளுடைய உடல் பதறியது. பேச்சை வேறு திசைக்கு மாற்ற முயன்று,

“ஐயா தீர்த்த யாத்திரை முடிந்து திரும்பித் திருமோகூர் வந்ததுமே, என் தந்தை இங்கிருந்து வெளியேறியவர்தான்; இன்னும் அவர் திரும்பி வரவில்லையே?” என்றாள்.

“அவர் வேறெங்கும் போய் விடவில்லை, செல்வப்பூங்கோதை என்னிடம்தான் வந்திருந்தார். இப்போதும் என் காரியமாகத்தான் போயிருக்கிறார். தீர்த்த யாத்திரை முடிந்ததும் நான்தான் அவரை என்னிடம் உடனே வரச் சொல்லியிருந்தேன்” என்று அதற்கு அவரிடமிருந்து மறுமொழி வந்தது; தன்னையும் தன் உள்ளுணர்வுகளையும் அவர் காண விடாமல் விலக்கும் நோக்கத்தோடு, வேறு பேச்சுகளை வளர்க்க விரும்பிய அவள், ‘இவ்வளவு காலமாகத் தாங்கள் எங்கே சென்றிருந்தீர்கள் ஐயா?’ என்று கேட்க எண்ணினாள்; ஆனால் அப்படி எண்ணிய மறு கணமே அந்தக் கேள்வி தன் நிலைமையை மீறியது என்னும் பயத்துடன், அவ்வாறு அவரை வினாவும் எண்ணத்தை உடனே விரைந்து தவிர்த்தாள்.

‘இவ்வளவு காலமாகத் திருமோகூர் எல்லையில் தங்களைக் கண்டு வணங்கும் பேறு எங்களுக்குக் கிட்ட வில்லையே; ஏன்?’ என்று வேண்டுமானால் பணிவாகவும், அதே கேள்வியை வேறு விதமாக மாற்றிக் கேட்கலாமே தவிர, முதலில் நினைத்தபடி, ‘எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு காலம்?’ என்பது போல் அவரைக் கேட்கவே கூடாது என்று தன் நாவை அடக்கிக் கொண்டு விட்டாள் அவள். வாளின் நுனியில் நடப்பது போல் மிக,மிக எச்சரிக்கை உணர்வோடு அவள் அவர் முன்பு நிற்க வேண்டியிருந்தது.

அவள் இவ்வாறு சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே, அவர் காலடியிலும் அருகிலும் இருந்த புற்றுகளில் இருந்து, நாகப் பாம்புகள் சீறியபடி, செக்கச் செவேரென்று பிளந்த நாவோடு வெளிப்பட்டு, உடலின் மேலேறின. படமெடுத்தன; அவரோ அசையாமல், அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

கழுத்திலும், தோளிலும், காலிலும் கொடிய நாக சர்ப்பங்களோடு முன்பும் சில சந்தர்ப்பங்களில், இப்படிக் கோலத்தில் அவள் அவரைக் கண்டு பயந்திருக்கிறாள். இன்றும் கூட, அந்தப் பயத்தையும், நடுக்கத்தையும் அவளால் தன்னிடமிருந்து தவிர்க்க முடியவில்லை. பயமும், திகைப்பும் மாறி, மாறித் தெரியும் விழிகளோடு அவள் அவர் எதிரே மருண்டு நின்று கொண்டிருந்தாள். அந்த நிலையில் அவரே சிறிது நேரத்திற்குப் பின் மெல்ல மீண்டும் அவளை வினாவத் தொடங்கினார்:-

“இன்று மாலையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சியோடு இருப்பதை நான் குறுக்கிட்டுப் பாழாக்கி விட்டேனே என்று உனக்கு என் மேல் கோபம் வருகிறதல்லவா?”

“அப்படி ஒரு போதும் இல்லை ஐயா! தாங்கள் என் போன்ற பேதைகளின் கோபத்துக்கு அப்பாற்பட்டவர்! இன்னும் சொன்னால், என்னை ஒத்த பேதைகளைக் கோபித்துக் கொள்வதற்கும், கடிந்து கொள்வதற்கும் உரியவர்…”

“நீ சொல்வது போல் உரிமை இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் நானும் இங்கு இன்று வந்தேன். உன்னைக் கூப்பிட்டனுப்பினேன். நீயும் என் அழைப்புக்கிணங்கி வந்திருக்கிறாய்…” நேராக எதைச் சொல்ல முடியாததனால், இதையெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவர் சொல்லியதிலிருந்து, சொல்ல விரும்புவதைப் புரிந்து கொள்ள முடியாமல் மருண்டாள் செல்வப் பூங்கோதை. அதிகாரமோ, ஆணையோ, சினமோ, சீற்றமோ சிறிதுமின்றி அவர் எல்லையற்ற நிதானத்தோடும், எல்லையற்ற பொறுமையோடும் இன்று தன்னிடம் பேசியதே அவளுக்குச் சந்தேகத்தையும், பயத்தையும் உண்டாக்கிற்று. இந்த அடக்கம் இயல்பானதில்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது. இந்த நிதானமும், ஐயப்பாட்டிற்கு உரியதாகவே அவளுக்குத் தோன்றியது. ‘தந்தையாரை இவரே வேறு காரியமாக எங்கோ அனுப்பியிருக்கிறார். தாயை உடன் அழைத்து வரவேண்டாம் என்று முன்கூட்டியே இவர் எனக்குச் சொல்லி அனுப்பி விட்டார். என்னை மட்டும் தனியே அழைத்து இப்படிப் பேசுவதற்கு அது என்னதான் அவ்வளவு பெரிய அந்தரங்கமாக இருக்கும்’ என்று அவள் மனம் ஒவ்வொரு கணமும் நினைத்துத் தயங்கிக் கொண்டேதான் இருந்தது. அந்தத் தயக்கத்தோடுதான் அவள் அவர் முன்பாக அப்போது நின்று கொண்டிருந்தாள்.

“செல்வப்பூங்கோதை முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மாலை தோறும் எனக்கு நீ கொண்டு வந்து அளித்த தேனும், தினைமாவும் எவ்வளவு சுவையாக இருந்தன தெரியுமா?” என்று சிறிது நேர மெளனத்திற்குப் பின், பழைய நாட்களில் எப்போதோ அவள் செய்த உபசாரம் ஒன்றை இருந்தாற் போலிருந்து நினைவு கூர்ந்து பேசினார், அவர். இப்படி அவர் பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தித் தன் மனத்தை மெல்ல மெல்ல இளகச் செய்வது அவளுக்கே புரிந்தாலும், அவருடைய பேச்சில் இசைந்து வணங்கி வசப்படுவதைத் தவிர்க்க ஆற்றலின்றி இருந்தாள். மிகவும் பணிவாக அவளே அவரை வேண்டவும் செய்தாள்:-

“ஐயா! இப்போது கூடத் தாங்கள் கட்டளையிட்டால், நாளைக்கே தங்களுக்குத் தேனும், தினை மாவும் கொண்டு வந்து படைக்கின்ற பேறு இந்தப் பேதைக்குக் கிடைக்கும்…” “இன்று நீ மிக, மிக மகிழ்ச்சியாயிருப்பதால், உன்னை நான் விரைவாக விடை கொடுத்து அனுப்புவதுதான் முறை. செல்வப்பூங்கோதை! நாளை மாலைக்குள் நீ மீண்டும் வா! வரும் போது இந்தக் கிழவனின் ஆசையை மறந்து விடாமல், தேனும் தினை மாவும் கொண்டுவா… நாளை இரவில், நான் இங்கிருந்து புறப்பட்டு விடுவேன். கோநகர் சென்று, வையையின் வடகரையில் மறைந்து தங்கப் போகிறேன். அப்படிப் புறப்படுமுன் இந்தக் கிழவனுக்கு உன்னிடமிருந்து ஒரு நல்வாக்குக் கிடைக்க வேண்டும். அந்த நல்வாக்கைக் கோரவே இன்று இங்கு வந்தேன்! நீ மறுக்க மாட்டாய் என்பதை நான் அறிவேன்.”

“ஐயா! தங்களைப் போன்றவர்கள் வேண்டவும், கோரவும் செய்கிற அளவு நான் அத்துணைப் பெரியவளில்லை. தாங்கள் எனக்குக் கட்டளை இடவேண்டும். தங்கள் கட்டளைக்கு இந்தப் பேதை எக்காலத்திலும் கடமைப்பட்டிருப்பவள். தாங்கள் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றக் காத்திருக்கிறோம்” என்று மிகவும் பணிவாகக் கை கூப்பினாள் செல்வப்பூங்கோதை. இப்படி வணங்கும் போதே, அவரைக் கருங்கல்லாகவும், தன்னை மென்மையான மலர் மாலையாகவும் ஒப்பிட்டுச் சிந்தித்துத் தான் முன்பொரு முறை அஞ்சியதையும் நினைத்துக் கொண்டாள் அவள். கொடியாகத் துவண்டு பணிந்து மறுமொழி கூறிக் கொண்டிருந்தாலும், உள்ளுற அவளுக்கு அவரிடம் அச்சமாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. அந்த மாமலை, வாடித் துவளும் கொடி போன்ற தன்னைத் தலையெடுக்க விடாத படி எந்தத் தந்திரத்தினாலாவது நசுக்கி விடுமோ என்று. பயந்து பதறினாள் அவள். தன்னைப் போன்ற பேதைப் பெண்களைப் பற்றி, இவ்வளவு அக்கறையோடும், பிரியத்தோடும் நினைக்கிற வழக்கமே இல்லாத அவர், இன்று காட்டும் இந்தப் பரிவைப் பார்த்து அவள் வியந்ததை விடப் பயந்ததே அதிகமாயிருந்தது.

“நாளைக்கு மாலையில் மீண்டும் வா அம்மா! தேனையும் தினை மாவையும் மட்டும் மறந்து விடாதே.” என்று கூப்பிட்டனுப்பிய விரைவுக்கு ஏற்ப, எதையுமே பேசாமல், தனக்கு அவர் மிகவும் சுலபமாகவே விடை கொடுத்துத் திரும்பப் போகச் சொல்லியதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எதற்காகவோ, தன்னைச் சிறிது விட்டுப் பிடிக்க முயல்கிறார் போலும் என்றும் அவளுக்கே தோன்றியது. மாளிகை வரை ஆபத்துதவிகள் துணை வந்து அவளைத் திரும்பக் கொண்டு வந்து விட்டனர். இரவு முழுதுமே அவருடைய பரிவின் காரணத்தைப் பற்றிச் சிந்தித்துப் புரிந்து கொள்ள முயன்றாள் அவள்.

Previous articleRead Nithilavalli Part 3 Ch12 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch14 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here