Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch17 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch17 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

108
0
Read Nithilavalli Part 3 Ch17 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch17|Na.Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch17 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றி மங்கலம்

அத்தியாயம் 17 :கடமையும் காதலும்

Read Nithilavalli Part 3 Ch17 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

போர் நிகழும் எல்லைகளில் இருந்து வந்திருந்த தூதர்கள், வெற்றிச் செய்தி கொண்டு வந்திருந்தார்கள். கோநகரையும், சுற்றுப் புறங்களையும் பாண்டியர்கள் கைப்பற்றி விட்டதன் விளைவாக வடக்கே வெள்ளாற்றங்கரைப் போரில் களப்பிரப் படை வீரர்கள் சின்னாபின்னமாகி அழிந்தார்கள். எஞ்சியவர்கள், மதுரைக்கு திரும்பாமல் தங்கள் பூர்வீகமாகிய வடகருநாடக நாட்டை நோக்கித் தோற்று ஓடிப் போய் விட்டார்கள். பாண்டியர்கள் உள்நாட்டையும், கோநகர் கோட்டையையும், அரண்மனையையும் கைப்பற்றி வென்று, களப்பிரக் கலியரசனைக் கொன்று விட்டார்கள் என்று செய்தி தெரிந்ததும், களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த பூத பயங்கரப் படையினருக்கும், ஏனைய களப்பிர வீரர்களுக்கும் மிகப்பெரிய தடுமாற்றமும் தளர்ச்சியும் ஏற்பட்டன.இரண்டு போர் முனைகளிலுமே, களப்பிர வீரர்கள் தெம்பிழந்து நம்பிக்கையற்றுப் போயினர். தோல்விக்கும், வீழ்ச்சிக்கும், இதுவே காரணமாய் அமைந்தது. பாண்டிய நாட்டின் வடக்கு எல்லைப் போரில் ஈடுபட்ட களப்பிர வீரர்களாவது தலை தப்பினால் போதும் என்று தோற்றதும், சொந்த நாட்டிற்குத் திரும்பியோடும் வாய்ப்பிருந்தது. தென் மேற்கே சேரனோடு போரிட்டுக் கொண்டிருந்த களப்பிர சேனையோ பெரும்பகுதி அழிந்து விட்டது. எஞ்சியவர்களைச் சேரன் சிறைப் பிடித்து விட்டான் என்று தெரிந்தது.

இந்தப் போரில் வென்றால், வெற்றி பெற்றதுமே மதுரை மாநகரில் நிகழப் போகும் புதிய பாண்டியப் பேரரசின் முடி சூட்டு விழா வைபவத்திற்கு வந்து, கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என முன்பே சேரனுக்கும், பல்லவனுக்கும் எழுதியிருந்த ஒலைகளில் இவர்களை மதுரைக்கு அழைத்திருந்தார் பெரியவர். இப்போது போர் முடிவுக்குப் பின், இன்று வெற்றிச் செய்தியோடு, பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வந்திருந்த தூதர்கள் இருவரில், சேரவேந்தனின் தூதுவன் தன்னுடைய அரசன் முடிசூட்டு வைபவத்துக்காகப் பரிவாரங்களோடு மதுரையை நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான். பல்லவ வேந்தன் சிம்ம விஷ்ணுவோ, ‘களப்பிரநாடு தன்னுடைய எல்லையில் இருப்பதாலும், பாண்டிய நாட்டிலும், தெற்கெல்லையிலும், வெள்ளாற்றங்கரையிலும் தோற்ற தோல்விகளுக்காகப் பழி வாங்குவதற்காக, களப்பிரர்கள் எந்த சமயத்திலும் தன் மேல் படையெடுக்கலாம் என்பதாலும், மதுரை மாநகருக்கு வந்து முடிசூட்டு விழாவில் கலந்து மகிழ இயலாதென்று’, தன் தூதன் மூலம் மதுராபதி வித்தகருக்குச் சொல்லியிருந்தான். பல்லவன் சொல்லி அனுப்பியதில் உள்ள நியாயம் பெரியவருக்குப் புரிந்தது. பல்லவன் சிம்ம விஷ்ணு காலத்தாற் செய்த உதவிக்கு நன்றி உரைத்துப் பதில் ஒலை வரைந்து தூதனிடம் கொடுத்திருந்தார். அவர் முடிசூட்டு விழாவுக்காகப் பல்லவ மன்னன் மதுரை வந்தால், அந்த நேரம் பார்த்து பல்லவ மண்ணிற் படையெடுத்துத் துன்புறுத்தக் களப்பிரர்கள் தயங்க மாட்டார்கள் என்பதைப் பெரியவர் புரிந்து கொள்ள முடிந்தது. வடதிசையிலிருந்து மீண்டும் தெற்கே களப்பிரர் படையெடுப்பு நேராதிருக்க, வலிமை வாய்ந்த சிம்ம விஷ்ணு அரணாகவும் பாதுகாப்பாகவும் நடுவே இருக்க வேண்டிய இன்றியமையாத நிலையை உணர்ந்தே, மதுரைக் கோநகரின் மங்கல முடி சூட்டு விழாவுக்கு வரச் சொல்லி மீண்டும் அவனை வற்புறுத்தாமல் விட்டு விட்டார் பெரியவர். மற்றொருவனாகிய சேர தூதனிடம், “மகிழ்ச்சியோடு உங்கள் சேர வேந்தனை வரவேற்கக் காத்திருக்கிறோம் என்பதையும், போருக்கு முன் உங்கள் அரசனுக்கு நான் அளித்திருக்கும் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதையும் எதிர் கொண்டு சென்று தெரிவித்து, உங்கள் அரசனை இங்கு அழைத்து வா!” என்று சொல்லி விளக்கி அனுப்பினார் மதுராபதி வித்தகர். அவர் முன்னிலையில், அரச தூதர்களுக்குரிய முறைகளுடனும், பெருமைகளுடனும், அவர்களை விடை கொடுத்து வழியனுப்பி வைத்தான் இளையநம்பி.

ஃ⁠ஃ⁠ஃ

வந்திருந்த தூதர்கள் புறப்பட்டுச் சென்ற பின், அந்த மாபெரும் அலங்காரக் கூடத்தில் பெரியவர் மதுராபதி வித்தகரும், பாண்டியன் இளைய நம்பியும் தனியே எதிர் எதிராக நின்று கொண்டிருந்தனர். பிரம்மாண்டமான தூண்களும், பளிங்குத் தரையும், முத்துப் பதித்த இருக்கைகளும், இரத்தினக் கம்பளங்களும் எல்லாம் நிசப்தமாக ஒடுங்கியிருந்து, அவர்கள் இருவரையும் கவனிப்பது போல தோன்றின. அவனிடம் பேசுவதற்கு என்று அவரிடமும், அவரிடம் பேசுவதற்கென்று அவனிடமும் இரகசியங்கள் இருந்தன. முதலில் யார் தொடங்குவது, எப்படித் தொடங்குவது என்று ஒரே சமயத்தில் இருவருமே தயங்கி நின்றாற் போலிருந்தது அவர்கள் நிலை. அவருடைய அந்தப் பெரிய கண்கள், அவனையே நேருக்கு நேர் நோக்கிக் கொண்டிருந்தன. சில கணங்கள் தயக்கத்திலும், மெளனத்திலும் கழிந்த பின் அவர் தாம் முதலில் பேசினார்:

“இந்தக் கணத்தில் நீ என்னிடம் கேட்கத் தவிப்பது என்னவாக இருக்கும் என்பதை நானே புரிந்து கொள்ள முடிகிறது. இளையநம்பி! நான் உன்னிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டுவிட்டால், அதன்பின் நீ என்னிடம் கேட்க நினைத்ததைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமலும் போய்விடலாம்! அரசர்கள் கொடுக்க வேண்டியவர்களே, தவிர கேட்க வேண்டியவர்கள் இல்லை! ஆனால், நீ இன்னும் முறைப்படி முடி சூட்டிக் கொண்டு பாண்டிய நாட்டின் அரசன் ஆகிவிடவில்லை. ஆகவே நான் உனக்குக் கட்டளையிடலாம். அரசனாகிய பின், உன்னிடம் என் வாக்குறுதிகளை நான் கேட்க முடியுமோ, முடியாதோ? இப்போதே உன்னிடம் அவற்றைக் கேட்டு விடுகிறேன்.” “ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது! இந்த அரசே தாங்கள் மீட்டுத் தந்தது. இதில் தங்களுக்கில்லாத உரிமையா? தாங்கள் வேண்டும் வாக்குறுதிகள் எவையாயினும் சிரமேற் கொண்டு அவற்றை உடனே நிறைவேற்றுவது என் கடமையாகும்.”

“உன் பணிவைப் பாராட்டுகிறேன்; ஆனால் உன் பணிவையும், அன்பையும் தவறாகப் பயன்படுத்தி, முன் கேட்காத புதிய வாக்குறுதிகள் எதையும் இப்போது மீண்டும் நான் கேட்டு விட மாட்டேன், பயப்படாதே. சூரிய சந்திரர்கள் சாட்சியாக ஆலவாய் இறையனார் மேலும், இருந்த வளமுடைய பெருமாள் மேலும் ஆணையிட்டு எனக்கு இரு வாக்குறுதிகள் நீ அளித்திருக்கிறாய். என் சார்பில் போரில் உதவுவதற்கு நிபந்தனையாகச் சேர மன்னனுக்கு ஒரு வாக்குறுதியும் தனியே அளித்திருக்கிறாய்..”

“ஆம், ஐயா! நன்றாக நினைவிருக்கிறது. அந்த வாக்குறுதிகள் என்னவென்று கூறினால், இப்போதே அவற்றை நான் நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.”

அவர் இதற்கு மறுமொழி கூறத் தயங்கி, அவனை நோக்கி மெல்லப் புன்னகை பூத்தார். பின்பு கூறலானார்.

“என் வாக்குறுதிகள் இரண்டும் சுலபமானவை. பாண்டிய நாட்டின் நீண்ட கால நலனை மனத்திற் கொண்டவை. அவற்றை நீ உடனே ஏற்றுக் கொண்டு விட முடியும். ஆனால்… சேரனுக்காக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி மட்டும் சற்றே சிரமமானது…?”

“சிரமமானது என்று எதுவுமே இருக்க முடியாது ஐயா! போரில் நமக்கு உதவி, நம் நாட்டை மீட்டுக் கொடுத்தவர்களுக்கு, நாம் அளித்த வாக்குறுதியை மறக்க முடியுமா?”

“மறக்க முடியாது. மறக்கவும் கூடாது! ஆனால், இந்த உலகில் கண்ணீரோடுதான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும்…” “தாங்கள் கூறுவது புரியவில்லையே ஐயா?”

அவன் குழப்பத்தோடு அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவரோ தயங்கினாற் போல் நின்றார்; மீண்டும் மெளனமும், ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கும் அமைதியும், இருவருக்கு இடையேயும் நிலவின. மெளனம் நீங்கி அவனே, அவரைக் கேட்டான்:-

“தயை கூர்ந்து வாக்குறுதிகளைச் சொல்லுங்கள் ஐயா?”

“இளையநம்பீ! என் முன்னோர்கள் பரம்பரையாகச் சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள். நான் அந்த மரபில் வந்தவனாக இருந்தும், என் காலம் முழுவதும் நான் களப்பிரர்களை ஒழிக்கச் சாதுரியமும், சூழ்ச்சியும் புரிவதிலேயே கழித்து விட்டேன். காரணம், களப்பிரர் ஆட்சி நடந்த தலைமுறைகளில், அவர்கள் சிறிது சிறிதாகத் தமிழ் நாகரிகத்தையே அழித்து விட முயன்றார்கள். தமிழ்ச் சங்கத்தை அழித்தார்கள். தமிழ்ப் புலவர்களைச் சீரழிய விட்டார்கள். ஆகவே, நீ செய்ய வேண்டிய முதற் காரியம், உன் முன்னோர்கள் புகழ் பெற நடத்திய தமிழ்ச் சங்கத்தை மீண்டும் நடத்திப் புலவர்கள் தமிழாராயவும், நூல்களை அரங்கேற்றவும், பரிசில் பெறவும் உதவுவதாக இருக்க வேண்டும். ஒரு மொழியோடு, நாகரிகமும் அழியாமற் காக்க இதை நீ உடனே செய்ய வேண்டும். இந்த வேண்டுகோளை உன் முதல் வாக்குறுதியால் நிறைவேற்று!”

“மகிழ்ச்சியோடு நிறைவேற்றுகிறேன் ஐயா! இனி அடுத்த வாக்குறுதிக்கான வேண்டுகோளைச் சொல்லுங்கள்!”

“உன் ஆட்சிக் காலம் வரை, எக்காரணத்தைக் கொண்டும் நீ பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களோடு போரைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல், மீண்டும் களப்பிரர்கள் தனியாகவோ, வேறு யாருடனாவது சேர்ந்தோ, உன் மேல் படையெடுத்து வருவது தவிர்க்க முடியாததாகி விடும். நட்புள்ள எல்லைப்புற நாடுகள் இருந்தால், உன்னால் துணிவாக எதையும் சாதிக்க முடியும்!”

“தங்களது இந்த இரண்டாவது வாக்குறுதியையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் ஐயா!”

“பொறு! இப்படி அவசரப்பட்டு ஒப்புக் கொள்வதை விட இந்த இரண்டாவது வாக்குறுதியை ஒரளவு நிதானமாகச் சிந்தித்த பின், ஒப்புக் கொள்வதே உனக்கு நல்லது!”

“சிந்திக்கவோ, தயங்கவோ இதில் எதுவும் இல்லை ஐயா! எனக்கும் நாட்டுக்கும் நன்மை தராத எதையுமே, தாங்கள் ஒரு போதும் கூற மாட்டீர்கள்…”

“இதில் ஒரு வேளை உன் நன்மை பாதிக்கப்பட்டாலும், நாட்டின் நன்மையைப் பாதிக்க விட மாட்டேன் நான்”

என்று அவன் கூறிய வாக்கியத்தையே சிறிது திருத்தி, அர்த்தம் நிறையச் சிரித்த படியே மீண்டும் திருப்பிச் சொன்னார் அவர். அதை ஏன் அவர் அப்படித் திருப்பிச் சொல்கிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லையாயினும், சேரனின் சார்பில் நிறைவேற்றியாக வேண்டிய மூன்றாவது வாக்குறுதியைக் கூறுமாறு அவன் அவரை வேண்டினான்:-

எதற்காகவோ அவர் மீண்டும் தயங்கினார். அவனைக் கூர்ந்து பார்த்தார். பின்பு மெல்ல அதைச் சொல்லத் தொடங்கினார்:

“போரில் நமக்கு உதவியதற்கு ஒர் அடையாளப் பிரதியுபகாரமாகச் சேரமன்னனின் மகளைப் பாண்டிய நாட்டு வெற்றிக்குப் பின் முடி சூடும் முதற் பாண்டியனின் பட்டத்தரசியாக ஏற்க வேண்டும் என்பதுதான் மூன்றாவது வேண்டுகோள்! இப்போதுள்ள சூழ்நிலையில் பாண்டிய நாட்டின் எல்லைப்புற அரசன் ஒருவனிடம், பெண் கொண்டு மணந்து உறவை வளர்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிக மிக இன்றியமையாதது ஆகும்” இதைக் கேட்டு இளைய நம்பியின் முகம் போன போக்கைப் பார்த்து அவர் பேச்சைப் பாதி யிலேயே நிறுத்திக் கொண்டார். எதுவுமே பதில் பேசத் தோன்றாமல், அப்படியே திக் பிரமை பிடித்து நின்று விட்டான் அவன். “நான் உன்னிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டு விட்டால், அதன் பின், நீ என்னிடம் கேட்க நினைத்ததைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமலும் போய் விடலாம்” என்று, உரையாடலைத் தொடங்கும் போதே, அவர் கூறியதை இப்போது மறுமுறை நினைத்தான் அவன். நினைவுகள் தளர்ந்து, உணர்வுகள் ஓய்ந்து அந்த வேண்டுகோளைச் செவியுற்ற பின், கண்களில் நீர் மல்க, அவன் தம் எதிரே நின்ற வேதனைக் கோலத்தைக் கண்டு, அவருக்கே வருத்தமாக இருந்தது. அவர் கூறினார்-

“என் மேல் தவறில்லை இளையநம்பி! ‘இந்த உலகில் கண்ணீரோடுதான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண் டியிருக்கும்’ என்று நான் முதலிலேயே சொல்லி விட்டேன்.”

“இதில் என் கண்ணீர் மட்டுமில்லை ஐயா, திருமோகூர்க் காராளர் மகள் செல்வப்பூங்கோதையின் கண்ணீரும் அடங்கியிருக்கிறது…”

“எனக்கு எல்லாம் தெரியும்! கொல்லனிடம் இருந்து நான் அனைத்தையும் கேட்டறிந்திருக்கிறேன். நானாகவும் உங்கள் நேசத்தை அநுமானித்திருந்தேன். காராளர் மகளை மணக்க விரும்பும் உன் ஆசையைத்தான், நீ இன்று இங்கே என்னிடம் வெளியிட இருந்தாய் என்பதைக் கூட நான் அறிவேன். அதனால்தான், ‘நான் என் வாக்குறுதிகளைக் கூறிய பின், நீ என்னிடம் கேட்க எதுவும் இல்லாமலும் போகலாம்’ என்று முதலிலேயே கூறியிருந்தேன்!”

“இப்படி ஒரு நிலை வரும் என்றால், நான் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை முயன்று வென்றிருக்க வேண்டியதே இல்லை! ஒரு பாவமும் அறியாத பேதைப் பெண்ணொருத்தியைக் கண்ணீர் சிந்தி அழவிட்டு விட்டு நான் அரியணை ஏறுவதை விடச் சாவது மேலான காரியமாக இருக்கும் ஐயா!” “இப்படி ஒரு கோழையைப் போல் பேசாதே! நீ நினைத்தா, இந்த வெற்றியும் மாற்றமும் விளைந்தன? நாட்டின் நன்மையை விட எந்தத் தனி ஒருத்தியின் கண்ணீரும் பெரியதில்லை. ‘நாட்டின் நன்மைக்குக் குறுக்கே நிற்கமாட்டேன்’ என்று அந்த ஒருத்தியிடமே, கொற்றவை சாட்சியாகச் சத்தியம் செய்து வாக்கு வாங்கியிருக்கிறேன் நான்…”

“நீங்கள் வாக்கு வாங்கியிருக்கலாம்! ஆனால், இந்த நாட்டின் வெற்றியை நாடி நான் முதன் முதலாகத் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்த போது அந்த வெற்றிக்காகத் தங்களைக் காண வேண்டிய முதல் ஒற்றையடிப் பாதையை எனக்குக் காண்பித்தவள் அவள்…”

“சில ஒற்றையடிப் பாதைகளில் அதைக் காட்டுகிறவர் உடன் நடந்து வர முடியாமலும் போய்விடலாம்.”

“ஆனால், அதில் நடக்கத் தொடங்கியவன் அதன் வழியே நடந்து ராஜபாட்டைக்குச் சேர்ந்தவுடன், முதற் சிறு வழியைக் காட்டியவர்களை மறந்து விடுவது, என்ன நியாயம் ஐயா?”

“இளையநம்பீ! நியாயங்களைக் கேட்டு என்னைச் சோதனை செய்யாதே. இதில் உன்னையும், செல்வப் பூங்கோதையையும் விட என் அந்தராத்மா கோவென்று கதறி, உங்களைப் போல் அழ முடியாதபடி அறிவும், சாதுரியமுமே என்னைக் கல்லாக்கியிருக்கின்றன என்பதை நீ அறிவாயா?”

இதைக் கேட்ட பின், அவனால் அப்போது அவரை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை.

“மூன்று வாக்குறுதிகளை நீயும், ‘நாட்டின் நன்மைக்குக் குறுக்கே நிற்பதில்லை’ என்ற ஒரு வாக்குறுதியைச் செல்வப் பூங்கோதையும் ஏற்கிறீர்கள்?” என்று அவர் மீண்டும் உரத்த குரலில் கட்டளை போல் கூறியதும், கடமையை உணர்ந்து ‘ஆம்’ என்பதற்கு அடையாளமாகக் கண்ணீரோடு அவர் முன்பு தலை வணங்கினான் அவன்.

Previous articleRead Nithilavalli Part 3 Ch16 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch18 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here