Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch2 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch2 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

80
0
Read Nithilavalli Part 3 Ch2 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch2|Na. Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch2 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றி மங்கலம்

Read Nithilavalli Part 3 Ch2 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

மழைக் காலத்து நள்ளிரவில் திருமால் குன்றத்து மலைக் குகையில் பெரியவர் வகுத்த திட்டங்கள் நிறைவேறின. அவர் கூறிய தந்திரமான யோசனையின் படியே காராளர் மதுரைநகர் சென்று களப்பிரர் கலியரசனையும், மாவலி முத்தரையரையும் நம்பச் செய்து, அவர்களுடைய முழு ஒப்பு தலுடன், ஆசியும் பெற்றுக் குடும்பத்தோடு தீர்த்த யாத்திரையைத் திவ்ய தேசப் பயணமாகத் தொடங்கி விட்டார். திருமோகூர்க் கொல்லன், குறளன் ஆகியோர் பணிகளும், மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தன.

நாடு உண்மையாகவே அமைதியடைந்து பாண்டியர்கள் ஒடுங்கிவிட்டார்கள் என்று களப்பிரர்களும், பூதபயங்கரப் படையும் நம்பி அயர்ந்திருந்த நேரம் அது, சந்தேகத்துக்கு இடமான பழைய அந்த அவிட்ட நாள் விழாவின் போது கோநகரத்தில் களப்பிரர்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தார்களோ அவ்வளவு எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இப்போது இல்லை. இனி நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது” என்ற அளவுகடந்த துணிவினால் அயர்ந்து போயிருந்தார்கள் அவர்கள். தென்னவன் மாறனும், காமமஞ்சரியும் கொல்லப்பட்டு விட்டதாலும், கோநகரில் சந்தேகத்துக்கு உரியவர்களாக அவர்களுக்குத் தோன்றிய அழகன் பெருமாள் முதலியவர்களை வெளியேற முடியாத காராக்கிருகத்தில் அடைத்து விட்டதாலும் கலியரசனே.

“மாவலி முத்தரையரே! இனிமேல் பாண்டியர்களைப் பற்றி மறந்து விடலாம். அந்த வமிசம் போன இடத்தில் புல் முளைத்துவிட்டது” -என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் மாவலி முத்தரையர் என்னவோ அதை அப்படியே ஒப்புக் கொண்டு முழுமையாக நம்பி விடவில்லை.

“கலியா! நீ எவ்வளவு சொன்னாலும் அந்த மதுராபதி வித்தகன் உயிரோடு இல்லை என்பது தெரிகிற வரை இதை நான் நம்பமாட்டேன், எதற்கும் விழிப்பாயிரு.” என்றுதான் மாவலி முத்தரையர் அடிக்கடி பிடிவாதமாக அவனை எச்சரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே மாவலி முத்தரையர் இருட் சிறையில் நலிந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் முதலியவர்களிடம் இருந்து நயமாகவும், பயமாகவும் மதுராபதி வித்தகரைப் பற்றி அறிய முயன்று கொண்டே இருந்தார். ஒரு நாள் அப்படி அவர் அறிய முயன்ற போது, அவர் செய்த சித்திரவதை பொறுக்க முடியாமல் அவரை வேண்டும் என்றே குழப்பி விட்டுக் கவனத்தைத் திசை திருப்பி ஏமாற்றக் கருதிய அழகன் பெருமாள்,

“ஐயா! உங்கள் சித்தரவதை பொறுக்காமல், இன்று நான் உள்ளதைச் சொல்லி விடுகிறேன்! நேற்று வரை மதுராபதி வித்தகர் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாதென்று உங்களிடம் கூறி வந்தேன். அது பொய்! பல மாதங்களுக்கு முன் அந்தப் பழைய அவிட்ட நாள் விழாவன்று, கோநகரைக் கைப்பற்ற முயன்று முடியாமற் போன ஏமாற்றத்தில் மதுராபதி வித்தகர் தென்னவன் சிறுமலைக் காட்டில் ஒரு பெரிய சிகரத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார். அவர் அமரராகிப் பல மாதங்கள் ஆகி விட்டன. அவர் இறந்ததைக் களப்பிரர்கள் அறிந்தால் எங்கள் பாண்டியர் இயக்கத்தை அறவே ஒடுக்கி விடுவார்களோ என அஞ்சியே, அவர் இன்னும் உயிரோடு இருந்து வழி காட்டி வருவதாக நாங்கள் நடிக்க நேர்ந்தது!” என்று மாவலி முத்தரையரை நம்ப வைத்து விட ஏற்ற உருக்கமான குரலில் கூறினான். அவன் எதிர் பார்த்தபடி மாவலி முத்தரையர் அதை உடனே நம்பிவிடவில்லை. “அப்பனே! நீ என்னை இவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது, மதுராபதியானை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்பதை நான் நன்கு அறிவேன். நீ சொல்வது போல் அவன் இறந்திருந்தால், பாண்டியர் இயக்கமும் அத்துடன் உயிரற்றுப் போயிருக்கும்… அப்படிப் போகாததாலும் வேறு பல சான்றுகளாலும் நீ கூறுவதை நான் நம்ப முடியாது…”

“நீங்கள் நம்புகிறீர்களோ, நம்பவில்லையோ, நடந்தது நடந்ததுதான்…” – என்று குரல் துக்கத்தால் குன்றிக் கண்களில் நீர் நெகிழ, அவர் முன் நடித்தான் அழகன் பெருமாள்.

அவனுடைய கண்ணீரும், குரலின் நெகிழ்ச்சியும் மாவலி முத்தரையரைக் குழப்பமடையச் செய்தன. ஒருவேளை உண்மையிலேயே மதுராபதி வித்தகர் மரணம் அடைந்திருப்பாரோ என்ற சந்தேகம் கூட அவருள்ளத்தில் மெல்ல எழுந்தது. ஆனால் எதிரே நிற்பவர்களால், தம் உணர்வுகள் கட்டுப்படுத்தப் படுகிற அளவு பலவீனப்பட்டு விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அவரைத் தடுத்தது. அவர் விழிப்பாயிருந்தார். அழகன் பெருமாளே, முதலில் பெரியவர் மதுராபதி வித்தகரைப் பற்றி அப்படி ஒர் அமங்கலமான பொய்யைச் சொல்லத் தயங்கினான் என்றாலும், எதிரிகளின் கவனத்தைத் திசை திருப்பவும், பெரியவரின் பாதுகாப்புக்கும் அந்தப் பொய் மிக மிகப் பயன்படும் என்ற நம்பிக்கையே அவனைத் துணிய வைத்திருந்தது.

சிறையிலேயே, அப்போது உடனிருந்த காரி, கழற் சிங்கன், முதலிய நண்பர்களுக்குக் கூட அழகன் பெருமாள் கற்பனையில் சொல்லிய அந்தப் பொய் பிடிக்கவில்லை என்றாலும், அதில் ஏதேனும் தந்திர உபாயம் இருக்க வேண்டும் என்று கருதிக் கட்டுப்பட்டு, அவர்கள் மெளனமாக இருந்து விட்டனர். –

இந்தப் பொய்யின் மூலம் தன்னையும், தன்னுடன் இருக்கும் நண்பர்களையும் இருட்சிறையிட்டு அவர்கள் புரியும் கொடுமைகளின் பிடி ஒரளவு தளரும்-தளரலாம் என்று அவன் எதிர்பார்த்தான். அந்த அளவிற்கு அது பயனளித்தது. மாவலி முத்தரையரின் கவனத்தைப் பெரியவர் இறந்து விட்டதாகச் சொல்லித் திசை திருப்பியதன் மூலம், அவரது கடுமையான சந்தேகத்தின் பிடி தளர்ந்திருப்பது மட்டும் புரிந்தது.

அவருடைய உடனடியான முதற் சந்தேகத்தைப் பிடி தளர்த்தி வேறு சந்தேகத்தில் திசை திருப்பிவிட்ட அளவு, அழகன் பெருமாளுக்கு வெற்றி கிடைத்திருந்தது. மாவலி முத்தரையர் எதையும் அறிந்து கொள்ள விடாமல் அவரது கவனம் பெரியவர் பற்றியே திரும்பச் செய்ய முடிந்த வரை அவர்கள் சாதுரியமாகவே செயல் பட்டிருந்தார்கள்.

ஒரு பிடி தளர்ந்தது. ஆனாலும் அதுவும் முழுமையாகப் பலிக்கவில்லை என்று சிறிது நேரத்தில் மாவலி முத்தரையர் பேசிய பேச்சிலிருந்து புரிந்தது. நம்பிக்கைதான் அரச காரியங்களைச் செய்பவர்களின் மூலதனமோ என்று புரிந்து கொள்ளத் தக்க விதத்தில் மறுபடி சீறத் தொடங்கினார் அவர். இன்னும் அவர் தங்களை ஆழம் பார்க்கிறார் என்பதை அழகன் பெருமாள் அதன் மூலம் அறிந்து கொண்டான்.

Previous articleRead Nithilavalli Part 3 Ch1 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch3 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here