Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch4 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch4 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

96
0
Read Nithilavalli Part 3 Ch4 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch4|Na. Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch4 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

கூடற்கோநகரத்தின் வானத்தில் மழை மேகங்களோடு, மெல்ல இருண்டு கொண்டு வந்த பின், மாலை வேளையில் மாளிகையின் கூடத்தில், இரத்தின மாலைக்கும் இளைய நம்பிக்கும் இடையே இந்த உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அவள் தரையில் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் அருகே அமர்ந்து அவள் பூத்தொடுக்கும் அழகைக் கண்களாலும், இதயத்தாலும் இரசித்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“இரத்தினமாலை! அழகன் பெருமாளும் உப வனத்து நண்பர்களும்தான் களப்பிரர்கள் வசம் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்று நீ சொல்கிறாய்! ஒரு விதத்தில் பார்க்கப் போனால், நானும்தான், இந்த மதுரை மாநகர எல்லைக்குள் சிறைப்பட்டிருக்கிறேன். அவர்கள் களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருக்கிறார்கள். நான் நம்மவர்களிடமே, சிறைப்பட்டுப் போய் விட்டேன். கொலை செய்யப்பட்டு விட்ட என் தமையன் தென்னவன் மாறனை அவர்களாலும் மீட்க முடியவில்லை. நான் மீட்பதற்கும் முயல முடியாமல், எல்லாருமாகச் சேர்ந்து என் கைகளைக் கட்டிப் போட்டு விட்டீர்கள். இதன் விளைவாகக் களப்பிரர்கள் காட்டில்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய நல்வினைக் காலம் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.”

“ஆத்திரம் வரும் போதெல்லாம், உங்களுக்கு இப்படி என்னிடம் ஏதாவது வம்புக்கு இழுத்தாக வேண்டும். என்னைப் போருக்கு இழுக்காவிட்டால் உங்களுக்குப் பொழுது போகாதோ?”

“கோபித்துக் கொள்ளாதே இரத்தினமாலை! இங்கே நான் செய்ய முடிந்ததாக மீதமிருக்கும் ஒரே போர் இதுதான்! வேறு போர்களிலிருந்தும், முயற்சிகளிலிருந்தும் நான்தான் தடுக்கப்பட்டிருக்கிறேனே?…”

“யார் சொன்னார்கள் அப்படி? நீங்கள் செய்வதற்குப் பெரிய, பெரிய போர்கள் எல்லாம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.”

“விரைவில் என்றால் எப்போது?”

“இப்போதே இன்றிரவில் கூட அது தொடங்கப் படலாம்! நான் கூறுவது மெய்…”

“மெய்யாயிருக்கலாம். ஆனால், நீ ஒன்றை மறந்து விடக் கூடாது இரத்தினமாலை. ஆயுத பலமும், ஆள் பலமும், இல்லாமல் களப்பிரர்களோடு மோத முடியாது. போருக்கு நம்மிடம் வலிமை இல்லை. போரே இல்லா விட்டாலும் ஒரு சிறு கலகம் புரியக் கூட நம்மிடம் ஆள் வலிமை இல்லை…”

“போருக்கும், கலகத்துக்கும், மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதாய் நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.”

“அதில் சந்தேகமென்ன? தொடக்கமும், முடிவும் நியாயமும், இலக்கணமும் உடையது போர். அதற்கு இரு தரப்பிலும் வலிமை வேண்டும். ஆனால், ஒரு கலகத்தை எப்போதும், எப்படியும், எவ்வளவு குறைந்த வலிமையோடும் எங்கேயும் தொடங்கலாம். கலகத்துக்கு முடிவு இல்லை. போருக்குத் தொடக்கத்தைப் போலவே முடிவும் உண்டு…”

“களப்பிரர்களை எதிர்த்து இனி நாம் செய்ய வேண்டியது போரா, கலகமா?”

“நாம் நீண்ட காலம் காத்திருந்து விட்டோம். பல பூசல்களுக்கும், கலகங்களுக்கும் பின்பு கூட, நமக்குப் பயன் விளையவில்லை. போருக்குத்தான் முடிவான பயன் உண்டு! கலகத்துக்கு அது இல்லை. எனவே, இம்முறை நாம் எதைச் செய்தாலும், அது நமக்கு முடிவான பயனைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.”

“அப்படியானால், இங்கே நீங்கள் அதற்குத் திட்டமிட வேண்டிய காலம் வந்து விட்டது…”

“வெறும் கை முழம் போட முடியாது! பெரியவரிடம் இருந்து கட்டளை இல்லை. வீரர்கள் இல்லை. மாபெரும் களப்பிர அரசை எதிர்க்கப் போதிய படைக்கலங்கள் இல்லை. திட்டமிடுவது மட்டும் எப்படிச் சாத்தியமாகும்? தரையில் உள்ள பூக்களை எடுத்துக் கைகளால் தொடுப்பது போல், அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.”

Previous articleRead Nithilavalli Part 3 Ch3 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here