Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

85
0
Read Nithilavalli Part 3 Ch5 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch5|Na. Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றி மங்கலம்

அத்தியாயம் 5 : அணிவகுப்பு

Read Nithilavalli Part 3 Ch5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

இரத்தினமாலையைப் பின் தொடர்ந்து போன இளையநம்பி சந்தனம் அரைக்கும் பகுதிக்குச் சென்று நிலவறை வழிக்கான அடைப்புக் கல்லைத் திறந்த போது, உட்புறம் ஏற்கனவே ஒளி தெரிந்தது. உடனே இளையநம்பி இரத்தின மாலையை நோக்கி, “உன்னை ஆடல் பாடல்களில் வல்லவள் என்பதை விட, ஓர் அரச தந்திர மேதை என்றே சொல்லலாம் போலிருக்கிறதே இரத்தினமாலை! நீ என் வியப்புகளை ஒவ்வொன்றாக வளரச் செய்கிறாய்” என்றான்.

“எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் வியக்கின்ற வியப்புகளும், சொல்லுகின்ற புகழ் வார்த்தைகளும் என்னைச் சேர வேண்டியவை அல்ல. அவை பெரியவர் மதுராபதி வித்தகரைச் சேர வேண்டியவை. இந்தக் காரியங்களை எல்லாம் அவரே திட்டமிடுகிறார். அவரே மூலமாக இருந்து இயக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்” என்று இரத்தினமாலை மிகவும் தன்னடக்கமாக மறுமொழி கூறினாள்.

அங்கே உள்ளே படியிறங்கிப் பார்த்ததும் நிலவறையின் இரு முனைகளிலும் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பாண்டிய வீரர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். அங்கங்கே சொருகியிருந்த தீப்பந்தங்கள் நிலவறையில் மண்டிக் கிடந்த இருளைப் போக்கியிருந்தன. படியிறங்குகிற இடத்தில் திருமோகூர்க் கொல்லன் இளையநம்பியை வணங்கி வரவேற்றான்.

“எல்லாம் நல்ல ஏற்பாடுதான் இரத்தினமாலை! ஆனால் ஒரே ஒரு சந்தேகம். தந்திரமாக வீரர்களையும் ஆயுதங்களையும் கோநகருக்குள் வரவழைத்து விட்டோம். உபவனத்திலும், அகநகரில் வெள்ளியம்பல மன்றத்தின் தோட்டத்திலுமாக இரு வேறு முனைகளில், இந்த நிலவறைக்குள்ளே இறங்கி வர வழிகள் இருக்கின்றன. எதிர்பாராதவிதமாகக் களப்பிரர்களின் படைகள் இன்றோ, நாளையோ இந்த இரு முனைகளையும் கண்டு பிடித்து உள்ளே இறங்கி இரண்டு பக்கங்களிலிருந்துமே நம்மை வளைத்துத் தாக்குமானால் நாம் என்ன செய்யமுடியும்?” என்று வினவினான் இளையநம்பி. அவனுடைய இந்த வினாவிற்கு ஒரே சமயத்தில் ஒரே விதமான மறுமொழியை இரண்டு குரல்கள் கூறின. “நீங்கள் சொல்கிறபடி செய்வதற்குப் போதுமான வீரர்களோ, ஏற்பாடுகளோ இப்போது களப்பிரர்களிடம் அகநகரில் இல்லை. தவிர இந்த இரு முனைகளிலும் யாத்திரீகர்கள் போல் தங்கி நம்மவர்கள் நூற்றுக்கணக்கில், நிலவறை வழிகளைப் பாதுகாத்து வருகிறார்கள்” என்று இரத்தினமாலையும், கொல்லனும் ஏக காலத்தில் கூறவே, இந்த ஏற்பாட்டை அவர்கள் மிகவும் திட்டமிட்டு முனைந்து செய்திருக்கிறார்கள் என்பது இளையநம்பிக்கு விளங்கியது.

“பெரியவர் எங்கே இருக்கிறார் என்பதை இப்போதாவது சொல்ல முடியுமா அப்பனே?” என்று இளையநம்பி கொல்லனை அணுகிக் கேட்டான். கொல்லன் முதலில் மெல்லச் சிரித்தான். பின்பு சில கணங்கள் கழித்து,

“பொறுத்தருள வேண்டும் ஐயா! இதை அறிவதற்கு இனிமேல் தாங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியதிருக்காது. ஒருவருக்கொருவர் மறைந்தும், மறைத்தும் வாழ நாளை உருவாக்கி வரும் பாண்டியர் பேரரசில் இடம் இருக்காது” என்றான். இந்த மறுமொழியைக் கொல்லன் தன்னிடம் கூறிக் கொண்டிருந்த போது, மறைந்தாற் போல அவனருகே ஒட்டிக் கொண்டு நின்ற குறளனின் உருவத்தை, இளையநம்பி பார்த்து விட்டான். உடனே வியப்படைந்த அவன், “அடே இந்தத் தம்பி இங்கே எப்படி வர முடிந்தது? இவன் தென்னவன் மாறனை மீட்பதற்கு, அழகன் பெருமாளுடன் சென்ற குழுவில் அல்லவா இருந்தான்?” என்று கேட்டான். உடனே, குறளன் முன்னால் வந்து நடந்ததை ஆதியோடு அந்தமாக இளையநம்பிக்குச் சொன்னான். அவன் கூறியதையெல்லாம் கேட்டு விட்டு, “நடுவூர் வசந்த மண்டபத்தில் நீங்கள் தப்பிய கரந்து படை வழியெல்லாம் இவ்வளவு நாட்களுக்குப் பின் இன்னும் உனக்கு நன்றாக நினைவிருக்கிறது அல்லவா? மறுபடி ஒரு காரியம் நேருமானால், அவற்றை நீ அடையாளம் காண்பிக்க இயலுமா?” என்று வினவினான் இளையநம்பி. சிறிதும் தயங்காமல், ‘இயலும்’ என்று உடனே மறுமொழி கூறினான் குறளன். கொல்லனிடம் காராளர் குடும்பத்தைப் பற்றி விசாரித்தான் இளையநம்பி. காராளர் குடும்பத்தோடு வட திசையிலும், மேற்கேயும் தீர்த்த யாத்திரை போயிருப்பதைக் கூறினான் கொல்லன். அதைக் கேட்டு இளையநம்பிக்கு ஆச்சரியமாக இருந்தது. நாடும், பாண்டியர்களும் இவ்வளவு சிரமமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இந்த வேளையில், காராளர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படித் தீர்த்த யாத்திரை போகத் துணிந்தார் என்று சிந்தித்தான் அவன். காராளரைப் பற்றியும், அவர் மகளைப் பற்றியும், வேறு அந்தரங்கச் செய்திகளையும் இளையதம்பி கொல்லனிடம் கேட்க முடியாமல் இரத்தினமாலை அங்கே உடன் இருந்தாள். கொல்லனுக்கும் இளையநம்பியிடம் மட்டும், தனியே தெரிவிக்கச் சில செய்திகள் இருந்தன. ஆனால், இருவர் விருப்பமும் நிறைவேற முடியாமல் இருந்தது. அந்த நிலையில் கொல்லன் ஒரு தந்திரம் செய்தான்.

“ஐயா! தங்களுக்கு மறுப்பில்லை என்றால், நிலவறையின் மறுகோடி வரை உள்ள நம் படைக் கலன்களையும், வீரர்களையும் பார்த்து வரலாம். இந்த வீரர் குழு செயற்படும் போது தங்கள் தலைமையில் செயற்பட வேண்டும் என்பது பெரியவர் கட்டளை” என்று இரத்தினமாலைக்கு ஒரு சிறிதும் சந்தேகம் தோன்றாதபடி, இளையதம்பியை நிலவறையின் மறுகோடிக்குத் தன்னோடு தனியே வருமாறு அழைத்தான் கொல்லன். அதேநேரத்தில் இரத்தினமாலையும் அதை இயல்பாக வரவேற்று,

“ஐயா! நீங்கள் இருவரும் பேசி ஆகவேண்டிய காரியங்களைக் கவனியுங்கள். நான் மேலே மாளிகைக்குள் போய், இவர்கள் அனைவரும் வயிறார உண்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன்’ என்று கூறிவிட்டுப் படியேறிச் சென்றாள். பேசிக் கொண்டே நிலவறையில் நடந்து சென்ற இளைய நம்பியும், கொல்லனும் படை வீரர்கள் கூட்டத்தை எல்லாம் கடந்து தனியானதொரு பகுதிக்கு வந்திருந்தனர். அதுவரை ஆவலை அடக்கியவாறு நடந்து வந்திருந்த இளையநம்பி கொல்லனைக் கேள்வி மேல் கேள்வியாகத் தொடுத்துக் கேட்டான்,

“காராளர் எதற்காக இப்போது பார்த்துத் தீர்த்தயாத்திரை போக வேண்டும்? நல்ல சமயத்தில் அவர் இப்படி விட்டு விலகிப் போகலாமா?” என்று இளையநம்பி கேட்டதற்கு,

“ஐயா! அவரை இப்போது தீர்த்த யாத்திரைக்குப் போகச் சொல்லிக் கட்டளை இட்டதே நம் பெரியவர்தான்! ஏதோ ஒரு தீர்மானத்தோடுதான் அவர் அனுப்பப்பட்டிருக்கிறார்” என்று கொல்லனிடமிருந்து மறுமொழி வந்தது. அடுத்த கேள்வியை இளையநம்பி கேட்பதற்கு முன்பாகவே, கொல்லன் அந்தக் கேள்வி என்னவாக இருக்கும் என்பதைக் குறிப்பறிந்து, தானே மறுமொழி கூறினான்;

“ஐயா! தங்களைக் காணவும் முடியாமல், தங்களிடமிருந்து ஒலையும் பெற முடியாமல், காராளருடைய மகள் செல்வப்பூங்கோதை மிகவும் ஏங்கிப் போய் விட்டாள். என்னைக் காண நேரும் போதெல்லாம், தங்களிடம் இருந்து ஏதாவது செய்தி கிடைக்கலாம் என்ற தவிப்புடன் அவள் என்னெதிரே வந்து, கண்களில் நீர் நெகிழ நிற்பது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது.”

“சென்ற முறை நீ அந்த மடலைக் கொண்டு வந்து கொடுத்ததற்குப் பதிலாக, நான் அனுப்பிய சந்தனத்தையும், தாழம்பூ மடலையும் நீ அங்கே கொண்டு போய்ச் சேர்த்தாய் அல்லவா?”

“என்ன கேள்வி கேட்டீர்கள் ஐயா? அவற்றை நான் அங்கே கொண்டு போய்ச் சேர்த்திருக்கா விட்டால், அந்தக் கொடி உடலில் இத்தனை காலம் உயிர் தங்கியிருக்கவே முடியாமற் போயிருக்கும்…”

இளையநம்பி இதைக் கேட்டுச் சில கணங்கள் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் திக்பிரமை பிடித்துப் போய் இருந்தான். தன்னால் ஆறுதல் சொல்ல முடியாத ஒர் ஏக்கம் அப்போது தன் தலைவனைத் துன்புறுத்துவது கொல்லனுக்குப் புரிந்தது. அவனும் எதுவுமே சொல்லத் தோன்றாமல், தலைகுனிந்து நின்றான். ஒரு பேதைப் பெண்ணின் காரணமாக, எவ்வளவு பெரிய வீரனும் நிலை குலைந்து ஏங்கி நின்று விடுகிற உணர்வைக் கொல்லன் வியந்தான். அடுத்த சில கணங்களில் கொல்லன் தன் நிதானத்துக்கு வந்தான்.

“ஐயா! முதலில் தாங்கள் அடியேனை இந்தக் கால தாமதத்துக்காகப் பொறுத்தருள வேண்டும். காராளர் தீர்த்த யாத்திரை புறப்படுவதற்கு முந்திய தினம் மாலை, இந்த ஒலைகளைத் தங்களிடம் சேர்த்து விடும்படி செல்வப் பூங்கோதை எளியேனிடம் சேர்ப்பித்திருந்ததன் காரணமாக, இதைத் தங்களிடம் இவ்வளவு நாள் கழித்துத் தர நேரிடுகிறது” என்று கூறியபடியே, அந்த ஒலைகளை எடுத்து, இளையநம்பியிடம் கொடுத்தான் கொல்லன்.

“இன்னும் சிறிது முன்பாகவே இதை நீ என்னிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் நீ மிகக் கொடிய தாமதக்காரன்” என்றான் இளையநம்பி.

“என் தவறு இதில் எதுவும் இல்லை! கணிகை மாளிகைத் தலைவியை அருகில் வைத்துக் கொண்டு, இந்த ஒலையைத் தங்களிடம் தர விரும்பாமலே இன்று காலம் தாழ்த்தினேன்” என்று கொல்லனும் அதற்கு உரிய மறுமொழி சொன்னான். கைக்குக் கிடைத்த செல்வப் பூங்கோதையின் ஒலையைப் பிரிப்பதற்கு முன், கொல்லனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே இளையநம்பி அவனை ஒரு கேள்வி கேட்டான்:

“நான் கோநகருக்குள் வந்த நாளிலிருந்து, இங்கே இப்படி இந்தக் கணிகை மாளிகையில்தான் தங்கியிருக்கிறேன் என்பது செல்வப் பூங்கோதைக்குத் தெரியுமா?”

“தெரியுமா, தெரியாதா என்பதை நான் அறிய மாட்டேன். ஆனால், என் வாயினால் அதைத் தெரிய விடவில்லை என்பதற்கு மட்டுமே நான் உறுதி கூற முடியும்” என்றான் கொல்லன். அவனுடைய சாதுரியமான மறுமொழியை உள்ளுற வியந்து கொண்டே, இளையநம்பி அவனை மேலும் கேட்டான்:

“தென்னவன் மாறனுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிப் பெரியவர் என்ன எண்ணுகிறார்?”

“அதை நான் அறிய முடியவில்லை ஐயா! ஆனால், பெரியவரின் துயரங்களோ, மகிழ்ச்சிகளோ மிகவும் ஆழமானவை. மேலோட்டமாகத் தெரியாதவை. திருமோகூருக்கு வந்து சேர்ந்தவுடன், தென்னவன் மாறனுக்குப் பெரியவர் கூறியிருந்த அறிவுரைகளின்படி மட்டும் அவர் நடந்து கொண்டிருப்பாராயின், இப்படிச் சிறைப்பட்டிருக்கவும், கழுவேறவும் நேரவே நேர்ந்திருக்காது. தென்னவன் மாறனின் உணர்ச்சி வேகமும், முன் கோபமுமே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டன. தாங்களும் அப்படி உணர்ச்சி வசப்பட்டு, எங்காவது அகப்பட்டுக் கொண்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான், ‘இங்கே இந்தக் கணிகை மாளிகையை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் எங்கேயும் வெளியேறி விடக் கூடாது’ என்று தங்களுக்குத் திரும்பத் திரும்ப வற்புறுத்திச் சொல்லி அனுப்புகிறார் பெரியவர். ‘கை கால்களைக் கட்டிப் போட்டு ஒரே இடத்தில் சிறை வைத்தது போல் ஆக்கி விட்டாரே’ என்று தங்களுக்குக் கூடப் பெரியவர் மேல் மனத்தாங்கல் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் பெரியவர் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், தாங்கள் எங்கெங்கோ எத்தனை எத்தனையோ அபாயங்களில் சிக்கிக்கொள்ள நேர்ந்திருக்கும்-” என்று ஒரளவு விரிவாகவே இளையநம்பிக்கு மறுமொழி கூறினான் கொல்லன்.

“காராளர் தீர்த்தயாத்திரை புறப்பட்டு எவ்வளவு காலமாயிற்று?” என்று இளைய நம்பி வினாவிய போது, “ஐயா! அவர் யாத்திரை புறப்பட்டுப் போய் அதிக நாட்களாகி விட்டன. அதனால்தான், இந்த மடலைத் தங்களிடம் இவ்வளவு காலந் தாழ்த்திச் சேர்ப்பதைப் பொறுத்தருளுமாறு முதலிலேயே கூறினேன்” என்றான் கொல்லன். அவ்வளவில் கொல்லனிடம் உரையாடுவதை நிறுத்திக் கொண்டு, சந்தனமும், பூக்களும், இளம் பெண்கள் மேனிக்குப் பூசிக் கொள்ளும் நறுமணச் சுண்ணமும் மணக்கும், அந்த ஒலைக் கற்றையைப் பிரித்தான் இளையநம்பி. அவன் அந்தரங்கமான அவ்வோலையைப் படித்து அறியும் போது, தான் அருகில் நின்று அவனுடைய தனிமைக்கு இடையூறாகி விடலாகாது என்று கருதியும், திடும் என்று இரத்தினமாலை அங்கே வந்து விடாமல், கண்காணித்துக் கொள்ள நினைத்தும் விலகி நடந்து சென்று நிலவறையிலிருந்து கணிகை மாளிகைக்குப் படியேறுகிற இடத்தில், நின்று கொண்டான் கொல்லன். தான் நின்ற இடத்தின் பக்கச் சுவரில் சொருகியிருந்த தீப்பந்தத்தின் கீழே போய், அந்த ஒலையைப் படிக்கலானான் இளையநம்பி.

Previous articleRead Nithilavalli Part 3 Ch4 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch6 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here