Home Na Parthasarathy Read Nithilavalli Part 3 Ch6 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch6 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

98
0
Read Nithilavalli Part 3 Ch6 Nithilavalli Na. Parthasarathy, Read Nithilavalli Online Free, Nithilavalli PDF, Download Nithilavalli novel, Nithilavalli book
Read Nithilavalli Part 3 Ch6|Na. Parthasarathy|TamilNovel.in

Read Nithilavalli Part 3 Ch6 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றி மங்கலம்

Read Nithilavalli Part 3 Ch6 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

இளைய நம்பிக்குச் செல்வப் பூங்கோதை எழுதியிருந்த அந்த ஒலை, கோபத்தோடும் தாபத்தோடும் தொடங்கியது. அதில் கோபம் அதிகமா, தாபம் அதிகமா என்று பிரித்துக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஏனெனில் அந்த மடலில் தொனித்த கோபத்திலும், தாபம் கலந்திருந்தது. அதே போல் தாபத்திலும், கோபம் கலந்திருந்தது. ஒர் அழகிய இளம் பெண்ணின் கோபத்தில், அதன் மறுபுறமுள்ள தாபங்களே அதிகம் தெரிய முடியும் என்பதைத்தான் செல்வப் பூங்கோதையின் சொற்கள் காட்டின.

“திருக்கானப்பேர் நம்பிக்கு, அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடலை அவர் நலத்தோடும் நல்லுறவோடும் காணட்டும். தாங்கள், இந்தப் பேதையை நினைவு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, தங்களை நித்தியமாகவும், நிரந்தரமாகவும், நினைவு வைத்துப் போற்றுவது இப்பேதையின் கடமையாகி விட்டது. திருமோகூரில் இருந்தாலாவது, கொல்லன் எதிர்ப்படுகிற போதெல்லாம் நேராகவோ, குறிப்பாகவோ, தங்களைப் பற்றி விசாரித்து அறிய முடியும். இன்னும் சில திங்கள் காலத்துக்குத் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்று பெரியவர் இட்ட கட்டளையை மேற்கொண்டு, நாளைக் காலையில் பிரம்ம முகூர்த்தம் கழிவதற்குள் மங்கல நேரத்தில் தந்தையும், தாயும், அவர்களோடு நானும் யாத்திரை புறப்படுகிறோம். இனி மேல் தங்களைப் பற்றி ஆவல் தீரக் கேட்டறியவோ, விசாரிக்கவோ கூட என்னருகே மனிதர்கள் இல்லை. தந்தையிடம் நானாக வலியச் சென்று, தங்களைப் பற்றிப் பேச முடியாது. தாயிடம் பேசினால், அவள் சந்தேகப்படுகிறாள். என் உணர்வுகளைப் பெற்ற அன்னையிடம் கூட நான் பூரணமாகக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் ஊருக்கு நீங்கள் வழிப்போக்கராகப் பிரவேசித்த முதல் தினத்தன்று, நீங்கள் என்னை ஊமை என்பதாகக் கூறி ஏளனம் செய்தீர்கள். அப்போது அன்று நான் காரியத்திற்காக ஊமையாக நடிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம், உங்களைப்பற்றிப் பேசவோ, விசாரிக்கவோ, அருகில் யாருமே அந்தரங்கமானவர்கள் இல்லாத காரணத்தால், நான் உண்மையிலேயே ஊமையைப் போலாகி விட்டேன். வாய் திறந்து நான் பேசும் எதுவும் உங்களைப் பற்றிய பேச்சாகவே இருக்க வேண்டுமென்று தவிப்பதால், வேறெதையும் நான் பேச முடியவில்லை. செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப் பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால், வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக் கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்து விட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும், கோபமுமே என்னைக் கொல்கின்றன. என் வரையில் நீங்கள் ஒரு சிறிதும் கருணை இல்லாதவர்! பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள், தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி, செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமையாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப் பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடி சூடி, அரியணை ஏறும் காலத்தில், இந்தச் சிறப்புப் பெயர்களும் குடிப் பெயர்களும் அவர்கள் இயற் பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக, என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும், கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடி சூட்டு விழாக் காலத்துப் பெயர் மங்கலமாக, எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால், ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். ‘பிரியத்துக்குரிய நீயே, இப்படிச்சாபம் கொடுப்பது போல் என்னை அழைக்கலாமா?’ என்பதாக, உங்களுக்கு இந்த இடத்தைப் படிக்கும் போது, அடியாள் மேல் சினம் தோன்றலாம். என் வரையில், இளங்கோவாக நடந்து கொள்ளாத உங்களைக் கடுங்கோனாக வர்ணிப்பதே பொருந்தும் என்று நான் நினைத்தால், அதில் பிழை என்ன? எந்தப் பேரரசை மீட்பதற்காக நீங்கள் ஓர் எளிய வழிப்போக்கனைப் போல் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தீர்களோ, அந்தப் பேரரசை மீட்கும் முதல் ஒற்றையடிப் பாதையை உங்களுக்குக் காட்ட உதவியவள் இந்தப் பேதைதான் என்பதை இதற்குள் நீங்கள் மறந்து போயிருக்க மாட்டீர்கள். அறிந்தோ, அறியாமலோ அந்த முதல் வழியை நான் காட்டினேன். சாம்ராஜ்யவாதிகளுக்கு வழிகாட்டும் ஏழைகளுக்கு வெறும் அன்பைக் கூடவா, நீங்கள் பிரதி உபகாரமாகத் தரலாகாது? என்னைப் போல் ஏழைகளும், பேதைகளும் அன்பைப் பெறுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களா? நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர்தான் மென்மையான உணர்வுகளே நெகிழாத கருங் கல்லைப் போன்றவர் என்றால், தாங்களுமா அப்படி இருக்க வேண்டும்? அடியாள் முன்பு கொல்லனிடம் கொடுத்தனுப்பிய மடலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தாழம்பூ மடலும், சிறிது பொதியை மலைச் சந்தனமும் கொடுத்து விட்டிருந்தீர்கள். ஆனால், அந்தப் பூவும், சந்தனமும் என் கைகளில் கிடைக்கும் போது வாடிப் புலர்ந்து போய் விட்டன. இந்தப் பேதையைப் பொறுத்த வரை தங்கள் அன்பும், பிரியமும் கூட இப்படி வாடிப் புலர்ந்து போய் விடுமோ என்று பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. கவலையும், பயமும், தவிப்பும், தாபமும் எல்லாமே எனக்குத்தான். தங்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. மிகவும் சுகமாகவும், பாதுகாப்பாகவும், எல்லா விதமான உபசாரங்களுடனும், தாங்கள் கோநகரில் இருந்து வருகிறீர்கள் என்று கொல்லனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதோடு, கொல்லன் என் உள்ளத்தில் பொறாமையேற் படும்படியான இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னான். ‘அம்மா! இங்கே இந்தக் காராளர் பெருமாளிகையில், தாங்கள் இடை விடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால், அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ, அப்படிக் கவனித்துக் கொள்கிறவர்களோடு, அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்’ என்பதாகக் கொல்லன் என்னிடம் சொல்லிய போது, கோநகரத்தில் உங்களை அப்படி அருகிருந்து பேணி உபசரிப்பவர்கள் யாரோ, அவர்கள் மேல் எனக்குப் பொறாமை தாங்க முடியவில்லை. உடனே, நான் பொறுக்க முடியாத கோபத்தோடு, ‘இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே! இந்தத் திருமோகூர் மாளிகையில் நான் அவரைக் கவனித்துப் பேணிப் பாதுகாத்து உபசரிப்பது போல் வேறு எங்கும், வேறு எவராலும் என்றும் உபசரித்துவிட முடியாது. உன் ஒப்புமையே தவறானது. நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை மிக மிகத் தவறானது’ என்று கொல்லனைக் கடிந்து கொண்டேன். நீங்களே சொல்லுங்கள். உங்களிடம் இந்தப் பேதை கொண்டாட முடிந்த உரிமையை, இன்னொருவரும் கொண்டாட முடியும்படியான இடத்திலேயா தாங்கள் வாழ்கிறீர்கள்? மறுபடி திருமோகூர் மண்ணில் தங்கள் பாதங்கள் பதியும் நாள் எப்போது வரும் ஐயா? இங்கு ஒருத்தி தங்களை நினைத்துத் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பதாவது, தங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா?

தீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு எப்போது மீண்டும் திருமோகூர் திரும்புவோம் என்பதைத் தந்தையார் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. நான் தொழ வேண்டிய தெய்வம் மதுரையில் இருக்கிறது. என் பெற்றோர் வேறு எங்கேயோ இருக்கும் பலப் பல தெய்வங்களைத் தொழுவதற்காக என்னை அழைத்துப் போகிறார்கள். என்னுடைய தெய்வத்தின் கடுங்கோன்மை தவிர்த்து, அதன் அருளை என்றைக்கு நான் அடையப் போகிறேனோ தெரியவில்லை. தங்களைக் கடுங்கோன் என்று கூறியதற்காகப் பெருந்தன்மையோடு இந்த எளியவளைப் பொறுத்தருள வேண்டும். அப்படி ஒரு சாபமே கொடுக்கிற அளவிற்குத் தாங்கள் என்னைத் தவிக்க விட்டிருக்கிறீர்கள் என்பதைத்தான், தங்களுக்கு இந்தப் பேதை சூட்டியிருக்கும் மென்மையும், இங்கிதமில்லாத புதிய பெயர் குறிப்பிடுமே ஒழிய, அகங்காரத்தைக் குறிப்பிடாது. என் அகங்காரங்களை நான் உங்களிடம் பறிகொடுத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்பதைத் தாங்களே நன்கு அறிவீர்கள்.

இவ்வளவில் இப்போது தங்கள் பாதார விந்தங்களில் மானசீகமாக வீழ்ந்து, வணங்கி இந்த மடலை முடிக்கிறேன். முடிவாக ஒரு வார்த்தை-நானும் பெற்றோர்களும் தீர்த்த யாத்திரை முடித்து திரும்பும் போது, நீங்கள் வெற்றிவாகை சூடி நிற்கப் போகிறீர்கள்! நாங்கள் திரும்பி வந்து அதைக் காணத்தான் போகிறோம்.”

என்பதாக முடிந்திருந்தது அவள் மடல். பல ஒலைகளில் எழுதி இணைத்து சிறிய சுவடியாகவே ஆக்கி அனுப்பியிருந்தாள் செல்வப் பூங்கோதை. இந்த மடல் இளையநம்பியின் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்திருந்தது.

‘பெண்ணே நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னைப் போல் என்மேல் அன்பு செய்யும் பெண்களிடம் நான் ஒரு போதும் கடுங்கோனாக ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ள மாட்டேன்’ என்று அந்த ஒலையைப் படித்த உணர்ச்சிப் பெருக்கில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன்.

ஒலையைப் படித்து முடித்த இன்பக் கிளர்ச்சிகளிலிருந்து அவன் முழுமையாக விடுபடுவதற்குள், கொல்லன் விரைந்து வந்து மேலும் ஒரு செய்தியைக் கூறினான்:

‘ஐயா! மற்றொரு நல்ல செய்தியைத் தூதன் இப்போதுதான் கொண்டு வந்தான். நம்முடைய இந்த அணிவகுப்புக்கும், ஏற்பாட்டிற்கும் சாதகமான ஒரு செயல் வட திசையில் இப்போது நடந்திருக்கிறது.’

Previous articleRead Nithilavalli Part 3 Ch5 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Nithilavalli Part 3 Ch7 | Nithilavalli Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here