Home Na Parthasarathy Read Pandima Devi Part 1 Ch11 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 1 Ch11 | Na. Parthasarathy | TamilNovel.in

103
0
Read Pandima Devi Part 1 Ch1 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 1 Ch1 | Na. Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 1 Ch11 | Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

முதல் பாகம், அத்தியாயம் 11 : முன்சிறை அறக்கோட்டம்

Read Pandima Devi Part1 Ch11 | Na. Parthasarathy | TamilNovel.in

செல்வச் செழிப்பும், வேளாண்மை வளமும் மிக்க அந்நாளைய நாஞ்சில் நாட்டில் மூலைக்கு மூலை ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம், அறக்கோட்டங்களும், ஆலயங்களும், வழிப்போக்கர் தங்கக்கூடிய மன்றங்களும் இருந்தன.

‘அறத்தால் விளங்கி: ஆன்ற கேள்விப் புறத்தாய நாடு’ என்று புலமைவாணர்கள். புகழ்ந்த பெருமை அதற்கு உண்டு. மகாமன்னர் பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய தர்மசிந்தனை மிகுந்த உள்ளத்தினாலும், மாகமண்டலேசுவரரின் நிர்வாகத் திறமையினாலும் புதிய தர்மசாலைகள் பல . தென் பாண்டி நாடு முழுவதும் உண்டாயின.

அப்போது தென் பாண்டிப் பகுதியிலேயே முதன்மையானதும் பெரியதுமான அறக்கோட்டமொன்று முன்சிறையில் அமைக்கப்பட்டது. துறைமுகப் பட்டினமான விழிளுத்தில் பல தேசத்துக் கப்பல்களில் வரும் வணிகர்கள் தங்குவதற்கு முன்சிறை அறக்கோட்டத்துக்கு வந்து சேர்வது வழக்கம். கீழ்ப்புறத்தாய நாட்டையும், மேலப்புறத்தாய நாட்டையும் இணைக்கும் இராஜபாட்டையில் கிளை வழி பிரிகின்றதொரு திருப்பத்தில் முன்சிறை நகரம் இருந்ததால், கடல் வழியே கப்பலில் வருவோர், தீர்த்த யாத்திரைக்காக வடபால் நாடுகளிலிருந்து வருவோர், புனிதம் நிறைந்த குமரிக் கடலில் நீராடிப்போக வருவோர், ஆகிய யாவருக்கும், எப்போதும் தங்குவதற்கு வசதி நிறைந்ததாக முன்சிறை அறக்கோட்டம் கேந்திரமான இடத்தில் வாய்த்திருந்தது.

நாகைப்பட்டினத்துத் துறைமுகத்தில் பாய்மரக்கப்பல் புறப்பட்டபின் ஒரு நாள் இரவு மூன்றாம் யாமத்தில் முன் சிறை அறக்கோட்டத்தில் ஒர் அதிசயமான சம்பவம் நடந்தது. சத்திரத்து மணியகாரனான அண்டராதித்த வைணவனும் அவன் மனைவியும் அங்கேயே ஒரு பகுதியில் குடியிருந்து வந்தனர். சாதாரணமாக, முதல் யாமம் முடிவதற்கு முன்பே மணியக்காரன் பிரதான வாசலை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக்கொண்டுத் தன் வீட்டுக்குப் போய்விடுவான். அவனுடைய குடியிருப்பு வீடும் உட்புறமே கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.

முன்சிறை அறக்கோட்டத்தின் அமைப்பை மானnகக் கண்ணால் நோக்கிப் பார்த்தால்தான் நேயர்களால் இவற்றையெல்லாம் நன்றாக விளங்கிக் கொள்ளமுடியும், வாருங்கள் இரவு நேரமே என்று தயங்காமல் முன்சிறைக்குப் போவோம். இப்போது நாழிகை என்ன? நாழிகையைப் பற்றி நமக்கு என்ன பயம்? இன்னும் முதல் யாமம் முடிய வில்லையாதலால் அறக்கோட்டத்தின் கதவை இதற்குள் அடைத்திருக்கமாட்டார்கள்.

ஆ! இதோ வந்துவிட்டோம். எதிரே தெரிகிறது பாருங்கள், உயரமான மருதமரக் கூட்டத்துக்கு நடுவே காவி நிறக் கட்டிடங்கள். கோட்டை வாசல் கதவுகளைப் போன்ற அந்த முன்வாசல் கதவருகே யாரோ தீவட்டியும் கையுமாக நின்று கொண்டிருப்பது தெரிகிறதே! நிற்பது யார்? சற்று அருகில் நெருங்கிப்போய் அவர்களைப் பார்ப்போம்.

அடாடா! முதல் யாமம் முடிகிற நேரம், நெருங்கிவிட்டது போலிருக்கிறது. தீவட்டியோடு நிற்பவன் வேறு யாருமில்லை, மணியக்காரனான அண்டராதித்த வைணவன்தான். கதவுகளை அடைப்பதற்காக வந்து நின்றுகொண்டிருக்கிறான். ஆகா! இந்த மாதிரிக் கட்டை குட்டையான தோற்றத்தையுடைய ஆளை இதற்கு முன்பே பல தடவைகள் பார்த்திருப்பதைப்போல் ஒரு பிரமை உண்டாகிறதே!

ஆமாம்! இப்போது நினைவு வருகிறது. கையில் தீப்பந்தத்தோடு கதவைச் சாத்துவதற்காக நிற்கும் இந்த மனிதன் அசைப்பில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான நாராயணன் சேந்தனைப்போல் அல்லவா இருக்கிறான்? அதேபோலக் குடுமி! அதேபோல நெற்றியில் கீற்றுத் திலகம்! அகத்திய வடிவம்!

இங்கே மணியகாரனாக இருக்கும் இந்த அண்டராதித்த வைணவன் வேறு யாருமில்லை. நம்முடைய சாட்சாத் நாராயணன் சேந்தனின் சொந்தத் திருத்தமையன்தான். முன் சிறைத் தர்மசாலையின் எல்லா நிர்வாகப் பொறுப்புக்களும் இவன் கையில் தான். ஆனால் இவனையும், இவனுடைய நிர்வாகங்களையும் மொத்தமாகச் சேர்த்து மேய்க்கும் பொறுப்பு இவனுடைய மனைவியான கோதை நாச்சியாரிடம் இருந்தது.

தன் தம்பி மகாமண்டலேசுவரரிடம் மிக முக்கியமான பதவியை வகிக்கிறான் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதில் அண்டராதித்த வைணவனுக்குத் தனிப் பெருமை. தன் மனைவி எப்போதாவது தன்னைக் கண்டிப்பது போல் இரைந்து பேசினால் அவள் வாயை அடக்குவதற்கு அவன் பிரயோகிக்கும் கடைசி அஸ்திரமும் இதுதான்.

“இந்தா, கோதை! என் தம்பி இந்தத் தென்பாண்டி மகாமண்டலேசுவரருக்கு எவ்வளவு அந்தரங்கமானவன் தெரியுமா? அவன் இல்லாவிட்டால் அவருக்கு ஒரு காரியமும் ஓடாது. அவன் சுட்டு விரலை அசைத்தால் போதும், பெரிய பெரிய காரியங்களைச் சாதித்துவிடுவான். அப்படிப்பட்டவனுக்கு மூத்தவனாகப் பிறந்துவிட்டு நான் உன்னிடம் மாட்டிக்கொண்டு இந்தப் பாடுபடுகிறேனே!” என்று தன் மனைவியிடம் கூறுவான் அண்டராதித்த வைணவன்.

“ஏன் சும்மா இருக்கிறீர்களாம்? உங்கள் தம்பியிடம் சொல்லிச் சுட்டு விரலை ஆட்டச் செய்து என்னையும் அடக்குவதுதானே?’ என்பாள் அவள்.

இந்த வேடிக்கைத் தம்பதிகளால் அந்தச் சத்திரத்து நிர்வாகம் குறைவில்லாமல் நடந்து வந்தது. இவர்களுடைய பேச்சும் சிரிப்பும் அங்கே வந்து செல்லும் நூற்றுக்கணக்கான யாத்திரீகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவை. மூத்தவனான அண்டராதித்த வைணவனுக்கும், இளையவனான நாராயணன் சேந்தனுக்கும் சுபாவத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. துணிவும், சாமர்தியமும், சூழ்ச்சிகளைப் பழகிய இராஜதந்திரமும் தேர்ந்தவனான நாராயணன் சேந்தன் எங்கே? பயந்த சுபாவம், எளிதில் பிறருக்கு அடங்கிவிடுகிற இயல்பு, ஒளிவு மறைவில்லாத எண்ணம், அப்படியே பேச்சு, அப்படியே செயல் எல்லாம் அமைந்த அண்டராதித்த வைணவன் எங்கே?

இப்படிக் குணரீதியாகப் பார்த்தால் நாராயணன் சேந்தனை மூத்தவனென்றும், அண்டராதித்த வைணவனை இளையவனென்றும் மாற்றிச் சொல்ல வேண்டியதாக நேரிட்டுவிடும். போகட்டும், கதை நிகழ்ச்சிக்கு வருவோம்.

முதல் யாமம் முடியப்போகிற தறுவாயில் அண்டராதித்த வைணவன் கதவைச் சாத்துவதற்காக அறக்கோட்டத்தின் வாசலில் வந்து நின்றானல்லவா? அப்போது தென்கிழக்குத் திசையிலுள்ள கிளை வழியிலிருந்து யாரோ இரண்டு மூன்று ஆட்கள் சத்திரத்தை நோக்கி வருவதுபோல் தோன்றியதனால் தான் அவன் கதவை அடைக்காமல் தயங்கி நின்றான்.

“கதவை அடைத்துவிட்டு உள்ளே வரப் போகிறீர்களா இல்லையா? குளிர் வாட்டி எடுக்கிறது!” என்று அதட்டுவது போன்ற தொனியில் வினவிக்கொண்டே நடுத்தர வயதுள்ள கோதை நாச்சியார் உட்புறத்தில் இருந்து வெளியே வந்தாள்.

“கொஞ்சம் பொறு, கோதை கிழக்கே துறைமுகச் சாலையிலிருந்து யாரோ ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் ! எவராவது வெளி தேசத்திலிருந்து கப்பலில் புதிதாக வந்து இறங்கியிருப்பார்கள். நாம் கதவை அடைத்துக் கொண்டு போய்விட்டால் தங்குவதற்கு இடமின்றி அவர்கள் திண்டாடப் போகிறார்கள்” எனறான.

“ஐயோ! என்ன கருணை! என்ன கருணை மகா மண்டலேசுவரர் சத்திரத்து மணியகாரர் பதவிக்குச் சரியான ஆளாகப் பிடித்துத்தான் நியமித்திருக்கிறார்” என்று அழகு காட்டினாள் அவன் மனைவி கோதை நாச்சியார்.

“இதோ பார், தாயே! பரதேவதை! உனக்குக் கோடிப்புண்ணியம் உண்டு! வருகிறவர்களுக்கு முன் என் மானத்தை வாங்காதே. தயவு செய்து உள்ளே போ, கோதை” என்று அவள் அருகே வந்து நின்று கொண்டு தணிந்த குரலில் கெஞ்சினான் அவன்.

“ஆள் இனம் தெரியாமல் கண்டவர்களுக்கெல்லாம் சத்திரத்தில் தங்க இடம் கொடுக்காதீர்கள். சத்திரத்துப் பொருள்கள் அடிக்கடி மாயமாக மறைந்து விடுகின்றன. களவு போவதற்கு இடம் கொடுப்பது உங்களால் வருகிற வினைதான்!” என்று உரிமையோடு கணவனை எச்சரித்து விட்டு உட்புறம் இருட்டில் மறைந்தாள் கோதை நாச்சியார்.

“ஐயா! இதுதானே முன்சிறை அறக்கோட்டம்?” உள்ளே செல்லும் மனைவியின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற அண்டராதித்த வைணவன் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பரபரப்படைந்து திரும்பிப் பார்த்தான்.

சத்திரத்து வாசற்படியில் பருத்த தோற்றத்தையுடைய மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கையிலிருந்த தீப்பந்தத்தை அவர்கள் முகத்துக்கு நேரே பிடித்துப் பார்த்த அண்டராதித்தன், ‘உங்களுக்கு எந்த தேசம் ? என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’ என்று வினவினான் மூவரையும் பார்த்து.

‘முதலில் நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!”

அதிகாரம், அல்லது அதையும் மிஞ்சிய கடுமை அவர்களுடைய குரலில் ஒலித்ததைக் கேட்டு அண்டராதித்தன் சிறிது சினமடைந்தான்.

முதலாவதாக அவர்களுடைய தோற்றமே அவன் மனத்தில் நல்ல எண்ணத்தை உண்டாக்கவில்லை. காளிகோவில் பூசாரிகள் உடுத்துக் கொள்வது போன்று இரத்த நிறச் சிவப்புத் துணியில் தலைப்பாகையும், அமைதி இல்லாமல் நாற்புறமும் சுழலும் விழிப் பார்வையுமாகச் சத்திரத்து அதிகாரியான தன்னிடமே அதிகாரம் செய்து கேள்வி கேட்கும் அவர்கள் யாராயிருக்கலாம் என்று எண்ணியவாறு முகத்தைச் சுளித்து அவர்களைப் பார்த்தான் அவன்.

‘அடேடே இவன் என்ன நம்மை இப்படிக் கடுமையாகப் பார்க்கிறான்? காமனையும், நக்கீரனையும் நெற்றிக் கண்ணால் எரித்து வாட்டிய சிவபெருமான் என்று எண்ணம் போலிருக்கிறது இவனுக்கு” என்று வந்தவர்களில் ஒருவன் தன் பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் எகத்தாளமாகக் கேட்டான்.

“அட, அது இல்லை அப்பா ! இந்த மனிதன் நம்மைப் பார்த்ததும் ஊமையாகிவிட்டான்” என்றான் மற்றவன்.

தன் கேள்விக்குப் பதில் சொல்லாமலே தன்னைப் பற்றித் தன் முன்பே அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு போவதைக் கண்டு அண்டராதித்தனின் கைகள் துடித்தன. கையிலிருக்கும் தீப்பந்தத்தால் அந்த மூன்று முரடர்களையும் அப்படியே மூக்கு, முகம் பாராமல் வாங்கு வாங்கென்று வாங்கிவிடலாம் என்று தோன்றியது.

“மரியாதை தெரியாத மனிதர்களுக்கு இங்கே பதில் சொல்கிற வழக்கம் இல்லை” என்று சுடச்சுடப் பதில் கூறினான் அண்டராதித்தன்.

“ஒகோ! இனிமேல் உங்களிடம்தான் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.”

“பண்பாடற்ற தடியர்களுக்கு இந்த நாட்டில் யாரும் எதையும் கற்பிக்க விரும்புவதில்லை.”

இப்படியே பேச்சு முற்றியது. அண்டராதித்தன் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று சொல்ல அறக்கோட்டத்து வாசலில் ஒரே கூப்பாடாகிவிட்டது.

உள்ளே ஒதுங்கி நின்று அந்தக் கூப்பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டராதித்தனின் மனைவி கோதை நாச்சியார் பொறுமையிழந்து, ‘அது யார் அங்கே வந்திருக்கிறார்கள்? என்ன கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்?” என்று இரைந்து கொண்டே வெளியில் வந்தாள். கண்களில் கனல் பொறி பறக்க வந்து நின்ற கோதை நாச்சியாரைப் பார்த்து, “யாரா? யாரென்று நீயே வந்து கேள்! இவர்கள் பேசுவதைக் கேட்டால் மனிதர்கள் பேசுவதுபோல் தெரியவில்லை” என்று பதில் கூறினான் மணியகாரன்.

ஒரு பெண்ணுக்கு முன்னால் துச்சமான சொல்லுக்கோ செயலுக்கோ ஆளானால் அது யாருக்குத்தான் பொறுக்கும்? “அப்பனே! ஒழுங்காகப் பேசு!” என்று சொல்லிக் கொண்டே கையை ஓங்கிக்கொண்டு அண்டராதித்தன் மேல் பாய்ந்தான் ஒருவன்.

“அருகில் நெருங்கினாயோ பொசுக்கி விடுவேன் பொசுக்கி ‘ என்று தீப்பந்தத்தை ஓங்கினான் அண்டராதித்தன். உடனே இன்னொருவன் இடையிலிருந்த வாளை உருவினான். மற்றொருவன் கையிலிருந்த வேலை நீட்டினான். ‘ஐயோ! இந்தக் குண்டர்களிடம் எதற்காக வம்பு செய்தோம்? இவர்கள் ஆயுதபாணிகளாக வந்திருக்கிறார்களே’ என்று அப்போது தான் மனதில் பயம் உறைத்தது அவனுக்கு. கொடுமை தவழும் அவர்களுடைய கண்களைக் கவனிக்கையில் ‘இவர்கள் எந்தத் தீமையையும் கூசாமல் செய்துவிடக் கூடியவர்கள்’ என்று தோன்றியது.

“இதுதானா சத்திரம் என்று கேட்டால் பதில் சொல்வானா? தீவட்டியை ஓங்கிக்கொண்டு வருகிறான் மடையன்” என்று வந்தவர்களில் ஒருவன் தன் கடைசி வசை புராணத்தை வெளிப்படுத்திய அதே சமயத்தில், “இதுதான் சத்திரம் யார் ஐயா நீங்கள்: அகால வேளையில் வந்து கலவரம் செய்கிறீர்கள்? என்ன வேண்டும்?” என்று வினவிக் கொண்டு பெண்புலி போல் கணவனுக்கு முன் வந்தாள் கோதை.

பெண்ணின் முகத்துக்கு இந்த உலகத்தில் எப்போதும் இரண்டு பெரிய ஆற்றல்கள் உண்டு. பிறரைக் கவருவது; பிறரை அடக்குவது. கோதை நாச்சியார் வந்து நின்றவுடன் வாளையும், வேலையும் பார்த்துப் பயந்து சிறிதே நடுங்கிக் கொண்டிருந்த அண்டராதித்த வைணவனுக்குத் தெம்பு உண்டாயிற்று.

“அப்படிக் கேள், சொல்கிறேன்! இந்த மாதிரி முரடர்களுக்காகவா சத்திரத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள்?” என்று அவளோடு ஒத்துப்பாடினான்.

“அம்மணி! இதுவரை இந்த அசட்டு மனிதரிடம் சண்டை பிடித்ததுதான் பலன். நீங்கள் மிகவும் நல்லவர்போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் வெளிதேசத்திலிருந்து வந்தவர்கள். விழிஞத்தில் வந்து இறங்கினோம். முன்சிறைச் சத்திரத்துக்குப் போனால் தங்குவதற்கு இடம் கிடைக்கும் என்று கூறினார்கள். அதனால்தான் இங்கு வந்து சேர்ந்தோம்” என்று குழைந்து கொண்டு பேசினான் ஒருவன்.

“அது சரி! நீங்கள் மூவரும் யாரென்று முதலில் சொல்லுங்கள். வருகிறவர்களை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல் இங்கு யாருக்கும் இடம் கொடுப்பது வழக்க மில்லை” என்றாள் கோதை நாச்சியார்.

வாசற்படியில் நின்ற அந்த மூவரும் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆந்தையைப்போல் பேந்தப்பேந்த விழித்தனர்.

“ஒரு வேளை நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாதோ” – மனைவி பக்கத்தில் நிற்கிற தெம்பில் குத்தலாக இப்படி ஒரு போடு போட்டான் அண்டராதித்த வைணவன்.

“ஏய்! குடுமிக்காரச் சோழியா! இனிமேல் நீ குறுக்கே பேசினால் மண்டையைப் பிளந்துவிடுவோம்” என்று சினம் அடைந்து கத்தினான் ஒருவன்.

“யாராயிருந்தால் உங்களுக்கு என்ன? சத்திரத்தில் தங்க இடம் கேட்டால் பூர்வோத்ரமெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டுமா?” என்றான் இன்னொருவன்.

கோதை நாச்சியார் அவர்களை ஒருமுறை நன்றாகப் – பார்த்தாள். அவர்கள் விவாதமும் குயுக்தியும் அவளுடைய மனத்தில் பல மாதிரியான சந்தேகங்களைக் கிளப்பின.

“ஐயா! உலகத்தில் தங்களை இன்னாரெனச் சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள் இவர்கள்தான், திருடினவர்கள் – திருட வந்தவர்கள், கொலை செய்தவர்கள், கொலை செய்யப் போகிறவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், அல்லது மானம் இழந்தவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தாம் தங்களை இன்னாரென்று சொல்லிக் கொள்ளுவதற்கு நாணம் அடைய வேண்டும்” என்று சொல்லி விட்டுக் குறும்புத்தனமான சிரிப்பொன்றை நெளியவிட்டாள் அவள்.

“என்ன சொன்னாய்? எவ்வளவு திமிர் உனக்கு!” என்று சொல்லிக்கொண்டே மூன்று பேர்களும் சத்திரத்து வாசற் படியின் மேலே ஏறினார்.

“ஆமாம்! சொன்னேன், சோற்றுக்கு உப்பில்லை என்று, சி! போங்கள் வெளியே” என்று சொல்லிக்கொண்டே கணவனை உட்புறம் இழுத்துக்கொண்டு முகத்தில் அறைந்தாற்போல் வாசல் கதவைப் படிரென்று அடைத்துத் தாழிட்டாள் கோதை.

கதவு முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் அதிர்ச்சியடைந்து பின்னுக்கு. நகர்ந்த மூவரும் வாசற்படிகளில் தடுமாறி நிலைகுலைந்து வீழ்ந்தனர்.

“அயோக்கியப் பெண்பிள்ளை! என்ன பேச்சுப் பேசி விட்டாள்” என்று கறுவிக் கொண்டான் ஒருவன்.

“வரட்டும்! வரட்டும்! எங்கே போய்விடப்போகிறாள்? நாமும் சில நாட்கள் இந்தப் பிரதேசத்தில் தானே இருக்கப்போகிறோம்? இந்த அம்மையைக் கவனித்துக் கொள்ளலாம்” என்று சூளுரை கூறினான் இன்னொருவன்.

“அந்த ராணியைத் தீர்த்துவிட்டுப் போகிறபோக்கில் இந்தச் சத்திரத்து ராணியையும் தீர்த்துவிடவேண்டியது தான்!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு உறுமினான் மூன்றாமாவன்.

அப்போது மேலேயிருந்து மூன்று பேர்களின் தலையிலும் அருவி கொட்டுவதுபோல் மாட்டு சாணம் கரைத்த தண்ணிர் விழுந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். மேல் மாடத்தில் அந்தப் பெண் கோதை கலகலவென்று சிரித்துக் கொண்டு நின்றாள். அவள் தன் கையிலிருந்த செப்புக் கொப்பரையை அவர்கள் தலைகளுக்கு நேரே கவிழ்த்தாள். அந்த மூன்று ஆண்பிள்ளைகளின் நரம்புகள் யாவும் முறுக்கேறித் துடித்தன.

Previous articleRead Pandima Devi Part1 Ch10 | Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 1 Ch12 | Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here