Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch12 | Pandima Devi Na. Parthasarathy |...

Read Pandima Devi Part 2 Ch12 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

103
0
Read Pandima Devi Part 2 Ch12 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch12|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch12 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 12 : கொடும்பாளூர் உடன்படிக்கை

Read Pandima Devi Part 2 Ch12 | Na. Parthasarathy | TamilNovel.in

கோனாட்டின் பெரு நகரமாகிய கொடும்பாளூர் அன்று வைகறையிலிருந்தே புதுமணப் பெண்போல் அழகு பொலிந்து விளங்கியது. அரண்மனைச் சுற்றுப்புறங்களும் வீதிகளும் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோட்டைக்கு வரும் அகன்ற வீதியில் அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்றார்கள். உயர்ந்தோங்கி நின்ற பெரிய மலையைப் போன்ற கோட்டையின் பிரதான வாசலில் பூரண கும்பங்களோடும், பொற்பாலிகைகளுடனும், அரண்மனையைச் சேர்ந்த உடன் கூட்டத்துப் பெருமக்கள் சூழக் கொடும்பாளூர் மன்னன் நின்று கொண்டிருந்தான். யாரோ மதிப்புக்குரிய பெரியவர்களை மரியாதையாக வரவேற்பதாக எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் தென்பட்டது. கோட்டைச் சுவரின் மேல் பக்கத்துக்கு ஐந்து பேராக நுழைவாயிலின் இருபுறம் நின்றுகொண்டு திருச்சின்னம் எனப்படும் நீண்ட வளைந்த இசைக் கருவியையும் முரசங்களையும் முழக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த மகத்தான வரவேற்பு ஏற்பாடுகள் எல்லாம் யாருக்காக, எதன் பொருட்டு-என்று நேயர்களுக்குச் சந்தேகமாக இருக்கிறதல்லவா! இதுவரை கதையுடனும் கதாபாத்திரங்களுடனும் தென் பாண்டி நாட்டுப் பகுதிகளிலும், கடற் பிரதேசத்திலுமே சுற்றிக் கொண்டிருந்து விட்டோம். கதையின் தொடக்கத்தில் ஒரே ஒரு முறை உறையூரில் நடந்த வடதிசையரசர் சதிக் கூட்டத்தையும் அதன் விளைவாக நாகப்பட்டினத்திலிருந்து மகாராணியையும் குமாரபாண்டியனையும் கொலை செய்யவும் தென்பாண்டி நாட்டு நிலையை அறியவும், ஒற்றர்கள் அனுப்பப்பட்டதையும் காண்பதற்காகப் பாண்டி நாட்டு எல்லையைக் கடந்து செல்ல நேரிட்டது. இதுவரை இந்த வரலாற்றுப் பெருங்கதையில் நமக்கும், கதைக்கும் வேண்டிய தன்மையான மனிதர்களை மட்டுமே அதிகமாகச் சந்தித்துக் கொண்டு வந்தோம்; எதிரிகளையும் சந்திக்க வேண்டாமா? உறையூரில் முன்பு சந்தித்த பின் இப்போது இரண்டவது முறையாகக் கொடும்பாளுரில் சந்திக்கப் போகிறோம்.

ஆம்! சோழ கோப்பரகேசரி மகாமன்னர் பராந்தகரும் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையானும் இன்னும் இது வரையில் நமக்கு அறிமுகமாகாத பரதுருடையான், கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன் என்னும் இருவரும் அன்று காலை கொடும்பாளுருக்கு வருகிறார்கள். அதற்காகத்தான் அத்தனை வரவேற்பு ஏற்பாடுகள். அன்று உறையூரில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு தென்திசைப் படையெடுப்பைப் பற்றிய மேல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்காக இந்த இரண்டாம் கூட்டத்தைக் கொடும்பாளுரில் கூட்டியிருந்தான் அதன் சிற்றரசன். சோழ நாடும், பாண்டி நாடும் சந்திக்குமி டத்தில் இரண்டையும் இணைக்கும் நிலப்பகுதி போல் விளங்கிய கோனாடும் அதன் ஆட்சிப் பொறுப்பும் கொடும்பாளுரானிடம் இருந்தன.

தங்கள் தலைநகரத்துக்கு வரும் சோழனையும் மற்றவர்களையும் ஆசை தீரக் கண்டு களிப்பதற்குத்தான் கோனாட்டு மக்கள் கொடும்பாளுர் அரண்மனைக்கும், கோட்டைக்கும், போகும் சாலையில் அவ்வாறு திரண்டு

கூடியிருந்தார்கள். சாலையின் கிழக்குக் கோடியில் நான்கு குதிரைகள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பாய்ந்தோடி வந்தன. எல்லோருடைய கண்களிலும் ஆவல் நிறைந்திருந்தது. திருச்சின்னங்களும், முரசங்களும் திசைகள் அதிர ஒலித்தன. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிலர் வருகிற மன்னர்களுக்குத் தங்கள் மனக்களிப்பையும், ஆர்வத்தையும் தெரிவித்துக் கொள்ள எண்ணி முன்னேற் பாடாக வாங்கிக்கொண்டு வந்திருந்த மலர்களை வாரித் தூவினார். சிலர் பெரிய பெரிய வெண்தாமரைப் பூக்களையும், செந்தாமரைப் பூக்களையும் தூக்கி எறிந்தபோது அவை வெண்ணிறமும் செந்நிறமும் பொருந்திய புறாக்கள் பறந்து போகிற மாதிரிப் போய்க் குதிரை மேல் செல்லும் அரசர்கள் மேல் விழுந்தன. சோழனையும், ஏனையோரையும் வரவேற்று வாழ்த்தும் குரல்கள் கடலொலிபோல் அதிர்ந்தன.

உடலை ஒட்டினாற்போன்று இறுக உடையணிந்திருந்த நான்கு ஆடல் மகளிரிடம் பூரண கும்பங்களைக் கொடுத்து முன் நிறுத்தினான் கொடும்பாளுர் மன்னன். இன்னும் சில கன்னிகைகள் பொற்பாலிகைகளை ஏந்தி அழகு படையெடுக்க நிற்பது போல் அணிவகுத்து நின்றனர். மங்கல விளக்குகளை உயர்த்திப் பிடித்தனர். பனைமரக் கொடிகள் எங்கும் பட்டொளி வீசிப் பறந்தன. குதிரைகள் கோட்டை வாசலில் வந்து நின்றதும், அவற்றின் மேலிருந்தவர்கள் சிரித்த முகத்தோடு கீழே இறங்கி எல்லோருக்கும் வணக்கம் செலுத்தினர். கொடும்பாளுரான் ஆசையோடு ஒடி வந்து சோழனை மார்புறத் தழுவிக் கொண்டான். பின்பு மற்ற மூவரையும் அதே போல் மார்புறத் தழுவி வரவேற்றான்.

“புலியின் பாதுகாப்பில் இந்தப் பனைமரம் வளர்ந்து வருகிறது. சோழ மண்டலப் பேரரசின் அன்பும், ஆதரவும் இந்தப் பனைமரத்துக்குக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும்’ – மலர்ச்சியும், சிரிப்பும் கொஞ்சிக் குழையும் முகத்துடனே இப்படி கூறிக்கொண்டே கொடும்பாளுரான் சோழனுக்கு மாலை சூட்டினான். மற்றவர்களுக்கு உடன் கூட்டத்துப் பெருமக்களும், அமைச்சர்களும் மாலையிட்டன்ர். .

எல்லோரையும் உள்ளே அழைத்துக்கொண்டு சென்றான் கொடும்பாளுரான். சோழனுக்குப் பக்கத்தில் நடந்து சென்ற அவன், “அரசே! நாம் நாகைப்பட்டினத்திலிருந்து கடல் மார்க்கமாக அனுப்பிய ஆட்கள் தெற்கேயிருந்து ஏதேனும் இரகசியச் செய்திகள் அனுப்பினார்களா? அவர்கள் போன காரியம் என்ன ஆயிற்று?-என்று காதருகில் மெல்லக் கேட்டான்.

“அதைப்பற்றி நம்முடைய தனிக் கூட்டத்தில் விரிவாகப் பேசிக் கொள்ளலாம்” என்று சுருக்கமாக மறுமொழி கிடைத்தது சோழனிடமிருந்து. உரிமை கொண்டாடி ஆர்வத்தோடு கேட்டதன் கேள்விக்கு அங்கேயே அப்போதே சோழன் விடை சொல்லாதது கொடும்பாளுர் மன்னனுக்குக் கொஞ்சம் வருத்தத்தை அளித்தது.

கொடும்பாளுர் அரண்மனையில் மிக ரகசியமான தொரு பகுதியில் ஐந்து அரசர்கள் சந்தித்தார்கள். முன்னையக் கூட்டத்தைக் காட்டிலும் இது முக்கியமான கூட்டமாகையினால் அமைச்சர்கள் பிரதானிகளைக்கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு விடவில்லை.

சோழன் கூட்டத்தைத் தொடங்கிவைத்தான். “உறையூரில் சந்திக்கும்போது நாம் மூவராயிருந்தோம். இப்பொழுது கொடும்பாளுரில் ஐந்து பேராக வளர்ந்திருக்கிறோம். இது நம்முடைய எண்ணத்தின் வெற்றிக்கு ஒரு சிறிய அறிகுறிதான். காவிரிக்கரையிலிருந்து காந்தளூர்ச் சாலையிறாக அவ்வளவு பிரதேசமும் சோழப் பேராட்சி ஒன்றுக்கே உட்பட்டிருக்கவேண்டும் என்பதில் நம்மையெல்லாம் காட்டிலும் கொடும்பாளுர் அரசருக்கு அவா அதிகம். மூன்று பேராக இருந்த நாம் ஐந்து பேராக வளர்ந்திருப்பது கூட அவருடைய முயற்சியின் விளைவேயாகும். கீழைப்பழுவூர்க் கண்டன் அமுதனையும், பரதுரருடையானையும் நாம் நல்வரவு கூறி நம்முடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். அவ்வாறு சேர்த்துக்

கொள்வதில் உங்களில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்காதென்று எண்ணுகிறேன்”

கருத்து மாறுபாடு இல்லை என்பதற்கு அடையாளமாக எல்லோரும் தலையை ஆட்டித் தங்கள் இணக்கத்தைக் காடடினா.

“நம்முடைய நோக்கமெல்லாம் சோழ நாட்டுக்குத் தெற்கே வேறு ஒருவருடைய ஆட்சிக்கு உட்பட்ட வேறொரு நிலப்பரப்பு இருக்கக் கூடாதென்பதுதான். அதற்கு ஒத்து உழைக்க எத்தனைபேர் சேர்ந்தாலும் நம்மோடு அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்’ என்று கொடும்பாளுரான் அந்தக் கருத்தை ஆதரித்தான்.

சோழன் மேலும் கூறலானான்: “கூடியவரை போர் செய்து துன்பப்படாமலே நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டு விடலாம் என்று உறையூரில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் செய்தோம். கொடும்பாளுர் மன்னர் அன்று உறையூரில் கூறிய திட்டப்படி இளவரசன் இராசசிம்மனையும், மகாராணி வானவன்மாதேவியையும் சூழ்ச்சியால் அழித்துவிடுவதற்கும் மகாமண்டலேசுவரரை நம் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தோம். கப்பல் மார்க்கமர்க் நம் ஆட்களைத் தென்பாண்டி நாட்டுக்கும் ஈழத் தீவுக்கும் அனுப்பினோம். ஆனால் அந்தப் பழைய ஏற்பாடுகளெல்லாம் நமக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை.” இடையில் அரசூருடையான் குறுக்கிட்டு ஏதோ கேட்கத் தொடங்கவே சோழன் பேச்சுத் தடைப்பட்டது.

“அந்தச் சூழ்ச்சிகள் வெற்றியளிக்குமென்றுதான் அவற்றைச் செய்தோம். இல்லையானால் உடனே படையெடுப்புக்கு வழி செய்வதைத் தவிர வேறு முயற்சியில்லை.” – – “அவசரப்படாதீர்கள். நான்தான் ஒவ்வொரு விவரமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேனே! எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட பின் அவரவருடைய கருத்துக்களைச்

சொல்லுங்கள், போதும். நாம் நாகைப்பட்டினத்திலிருந்து கப்பலில் அனுப்பிய ஆறு ஆட்களில் மூன்று பேரைத் தென்மேற்குக் கோடியிலுள்ள விழிளும் துறைமுகத்தில் இறக்கி விட்டுவிட்டு மற்ற மூவரோடு கப்பல் ஈழ நாட்டுக்குப் போய்விட்டதாம். விழிஞத்தில் இறங்கிய நம் ஆட்களான செம்பியன், இரும்பொறை, முத்தரையன் ஆகிய மூவரும் தென்பாண்டி நாட்டுக்குள் புகுந்து கன்னியாகுமரிக் கோயிலில் வானவன் மாதேவியின் மேல் வேலை எறிந்து கொல்ல முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை. நாம் இடையாற்றுமங்கலம் நம்பியிடம் கொடுக்குமாறு அனுப்பிய ஒலையை நம் ஆட்களோடு போரிட்டுத் தளபதி வல்லாளதேவன் கைப்பற்றிக் கொண்டுவிட்டானாம். வடதிசைப் பேரரசுக்கு உட்பட்டு நம்மோடு சமரசமாக அடங்கியிருக்க விரும்பினால் திருப்புறம்பியத்தில் வந்து நம்மைச் சந்திக்குமாறு இடையாற்றுமங்கலம் நம்பியைக் கேட்டுக்கொண்டு அந்த ஒலையை எழுதியிருந்தோம் நாம். வானவன்மாதேவியைக் கொலை செய்ய இயலாததனாலும், இடையாற்றுமங்கலம் நம்பி இதுவரையில் சந்திக்க வராததனாலும் அந்தத் திட்டம் இனிமேற் பயன்படாது. எனினும் நம்முடைய ஒற்றர்கள் மூவரும் இன்னும் தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளே தான் மறைவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எனக்கு அடிக்கடி போதுமான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. –

‘குமார பாண்டியனைக் கொல்லுவதற்காக ஈழ நாட்டுக்குப் போனவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றித் தாங்கள் ஒன்றுமே கூறவில்லையே?”

அதுவரையில் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த கொடும்பாளுர் மன்னன் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான். . .

“அவர்களைப் பற்றித்தான் எனக்கும் இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை. விரைவில் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் வந்தால் நாகைத்

துறைமுகத்தில் இறங்கியதும் உடனே இங்கு வருமாறு கூறியிருக்கிறேன். தாமதமின்றி இங்கே கூப்பிட்டுக்கொண்டு வருவதற்குத் துறைமுகத்துக்கே ஆட்களை அனுப்பி எதிர் பார்த்துக்கொண்டு காத்திருக்கச் செய்திருக்கிறேன்.”

“தென்பாண்டி நாட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் நம் ஒற்றர்கள் போதுமான செய்திகளை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னிர்களே, அந்தச் செய்திகளை யெல்லாம் நாங்களும் அறிந்துகொள்ளலாமோ?”

அரசூருடையானின் இந்தக் கேள்விக்குச் சோழன் சிரித்துக்கொண்டே பதில் கூறினான்:

“நம்முடைய புதிய நண்பர்கள் இருவரும் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சேர்த்துக் கேட்பதுபோல் பழைய நண்பர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள். யோசனைகளைக் கூறுகிறார்கள். நம் அரசூருடைய சென்னிப் பேரரையர் கேட்பதற்கு முன் தென்பாண்டி நாட்டிலிருந்து ஒற்றர்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நானே விரிவாகச் சொல்ல வேண்டு மென்றிருந்தேன். அதற்கு முன்னால் உங்களையெல்லாம் கலந்தாலோசித்துக் கொள்ளாமல் நான் செய்திருக்கும் ஒரு சில செயல்களுக்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ‘நாம் மிக விரைவில் படையெடுத்துவிடப் போகிறோம் என்ற பெரும் பீதியைத் தென்பாண்டி நாடு எங்ஙனும் உண்டாக்குவதற்காக ஒரு தந்திரம் செய்தேன். நம் வீரர்களை வணிகர்கள் போலவும், தலயாத்திரை செய்பவர்களை போலவும் நிறைய அனுப்பியிருக்கிறேன். தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையான கரவந்தபுரத்துப் பகுதிகளில் நம் ஆட்கள் திடீர் திடீரென்று கலகங்களையும், குழப்பங்களையும் செய்து போர் நெருங்கி வருவதுபோல அச்சுறுத்துகிறார்கள். கொற்கையில் நடந்த முத்துக்குளி விழாவின்போது நம்மிடமிருந்து போன ஆட்கள் உண்டாக்கிய கலவரம் தென்பாண்டி நாட்டையே நடுங்கச் செய்திருக்கிறது. வட எல்லைக் காவலனும், கரவந்தபுரத்து அரசனுமாகிய பெரும்பெயர்ச்சாத்தன் அஞ்சிப்போய்

மகாமண்டலேசுவரருக்குத் தூது அனுப்பி விட்டான். அந்தத் தூதன் மகாமண்டலேசுவரரிடமிருந்து கரவந்தபுரத்துக்கு வாங்கிக்கொண்டுபோன பதில் செய்தியை நம் ஆட்கள் எப்படியோ கைப்பற்றி, இங்கே எனக்குக் கொடுத்தனுப்பி யிருக்கிறார்கள்; அதில் முக்கியமான விவரம் ஒன்று மில்லாவிட்டாலும் , உண்மையிலேயே நாம், இன்றோ நாளையோ படையெடுத்து வந்துவிடப் போகிறமாதிரி எண்ணி அரண்டு படை ஏற்பாடுகளைத் தயார் செய்யும் முனைப்பு தெற்கே உண்டாகிவிட்டது என்று அறிந்துகொள்ள முடிகிறது. இதே போல் கரவந்தபுரத்துக்கும் அரண்மனைக்கும் நடக்கும் செய்தித் தொடர்புகளைக் கண்காணித்தோ, கைப்பற்றியோ அனுப்பு வேண்டுமென்று நம் ஆட்களுக்குக் கூறி அனுப்பியிருக்கிறேன், சாமர்த்தியமும் திறமையும் போதாத காரணத்தினால், நம் ஆட்களில் சிலர் அகப்பட்டு விட்டனர். அவர்கள் கரவந்தபுரத்துச் சிறைச்சாலையில் சிக்கி விழித்துக்கொண்டிருக்கிறார்களாம்.” –

“புலி வருகிறது, புலி வருகிறதென்று பயமுறுத்திக் கொண்டிருப்பதனால் மட்டும் நமக்கு பயன் என்ன ? படையெடுத்துப் போய்விட வேண்டும்.”

பேசுவதற்குக் கூச்சப்படுகிறவனைப் போலப் பேசாமல் உட்கார்ந்திருந்த கண்டன் அமுதன் மேற்கண்டவாறு உடனே படையெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினான்.

“நிதானமாக செய்வோம். இன்று ஒரு நாளில் செய்துவிட முடிகிற முடிவில்லை இது. இங்கே கொடும்பாளூரிலேயே தங்கி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆலோசனை செய்து முடிவுக்கு வருவோம். அதற்குள், நமக்கு ஏதாகிலும் நம்பிக்கையூட்டும் புதிய செய்திகள் தெற்கேயிருந்து கிடைத்தாலும் கிடைக்கலாம். சோழன் விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லிச் சமாளித்தான். அதன்பின் சோழனும், கொடும்பாளூர் மன்னனும் சிறிது தொலைவு தள்ளிப்போய் நின்று தனியாகத் தங்களுக்குள் ஏதோ

பேசிக்கொண்டு திரும்பவும் பழைய இடத்துக்கு வந்து எல்லோரோடும் அமர்ந்தார்கள்.

அப்படி அமர்ந்தவுடன் தனக்கே சொந்தமான முரட்டுக் குரலில் கனைத்துக் கொண்டு ஏதோ இன்றியமையாத விஷயத்தைப் பேசுகிறவனின் முகச் சாயலோடு தொடங்கினான் கொடும்பாளுரான்;

“நண்பர்களே! நம் எல்லோருக்கும் நோக்கமும் நினைவும் ஒன்றானாலும் அரசும், ஆட்சியும் வேறு வேறாக, இருப்பவை. ‘நன்றாற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். எல்லாவகையிலும் ஒருவருக்கொருவர் முழு மனத்தோடு ஒத்துழைப்பதென்று முதலில் நாம் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும். இன்று கொடும்பாளுர் அரச மாளிகையின் ஒரு மூலையில் நாம் ஐவருக்குள்ளே செய்துகொள்ளும் இந்த உடன்படிக்கை தான் எதிர்காலத்தில் தமிழ் வழங்கும் நிலம் முழுவதும் சோழநாடாக ஒருமை பெற்று விரிவடையினும் நம்மை பிரிக்க முடியாத உடன்படிக்கை. கை விரல்கள் ஐந்து ஆனால் கை ஒன்றுதான். தனித் தனியாகச் சொந்த நன்மைகளைப் பொருட் படுத்துவதில்லை என்றும் வெற்றிகள் அடைந்தால் அந்த வெற்றிக்காகத் தனித்தனியே பெருமைப் படுவதில்லை என்றும் உறுதி செய்திகொள்ள வேண்டும். நமது கூட்டணியின் மாபெரும் படைக்கு அரசூருடையாரையும், பரதுாருடையாரையும் தளபதிகளாக்கி மற்ற மூவரும் போர்த்தலைவர்களாக இருக்கட்டும் என்றே மதிப்புக்குரிய சோழமன்னர் கருதுகிறார். அந்தக் கோரிக்கைக்கு இணங்குகிறோம் என்பதற்கு அடையாளமாக வாள்களை உறைகழித்து நீட்டிச் சத்தியம் செய்வோம் என்று சொல்லிக்கொண்டே தன் வாளை உருவி நீட்டினான் கொடும்பாளுரான். அடுத்த கணம் மற்ற நான்கு கைகளும் ஒரே சமயத்தில் வாள்களை உருவும் ஒலி உண்டாயிற்று. ஐந்து வாள்கள் நுனி கூடி உறவாடுவது போல் கூடார மிட்டுக்கொண்டு நின்றன. அந்த வாள்களின் நுனி கூடுமிடத்தில் எங்கிருந்தோ ஒரு வண்டு பறந்து வந்து உட்கார்ந்தது. பாண்டியர் பலத்தையே அடித்து வீழ்த்துகிறவனைப்போல் கடுப்போடு அந்த வண்டை அடித்துத் தள்ளினான் கொடும்பாளுரான். “அரசே! அவசரமாக ஓர் ஒற்றன் வந்திருக்கிறான்.” என்று சோழனை விளித்துக் கூறிக்கொண்டு உள்ளே வேகமாக வந்த ஒரு வீரன் முகத்தில் போய் விழுந்தது அந்தச் செத்த வண்டு.

Previous articleRead Pandima Devi Part 2 Ch11 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch13 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here