Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch14 | Pandima Devi Na. Parthasarathy |...

Read Pandima Devi Part 2 Ch14 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

104
0
Read Pandima Devi Part 2 Ch14 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch14|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch14 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 14 : தாயாகி வந்த தவம்

Read Pandima Devi Part 2 Ch14 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

திருவாட்டாற்றிலிருந்து சுசீந்திரத்துக்கு வந்திருந்த அந்தத் தாய் தன் சொற்களால் மகாராணியின் உள்ளத்தில் ஓங்கி அறைந்து விட்டிருந்தாள். எழுத்தாகிச் சொல்லாகி ஒலியாகிப் பொருள்பட்டுப் புரிந்த வெறும் சொற்களா அவை? ஒரு தாயுள்ளத்தின் கொதிப்பு, பெற்றவளின் பீடு அன்னையின் ஆணவம்-அவளுடைய வார்த்தைகளில் சீறிக் குமுறின. நா. பார்த்தசாரதி 39f

அந்த வார்த்தைகள் நெஞ்சில் கிளப்பிய வலியைத் தாங்கிக் கொண்டு அதிலிருந்து விடுபட்டுத் தன் நிதானத்துக்கு வரச் சிறிது நேரம் ஆயிற்று. வானவன்மாதேவிக்கு ஒரு தாய் இன்னொரு தாய்க்கு விடுத்த அறைகூவலாக இருந்தது, திருவாட்டாற்றுப் பெண்ணின் கேள்வி. அதன் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலைகுனிந்து கொண்டு நின்ற மகாராணி நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பெண்ணும், அர்ச்சகரும், புவனமோகினியும் தமது முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் இன்னும் வேதனையாக இருந்தது அவருக்கு.

மற்றவர்கள் தன் முகத்தைப் பார்க்கவில்லையே என்று

ஏங்கும் மனநிலையும் வாழ்வில் உண்டு. மற்றவர்கள் தன் முகத்தைப் பார்க்கிறார்களே என்று ஏங்கும் மனநிலையும் வாழ்வில் உண்டு. அன்று அவ்வளவு அவசரமாக யாருக்கும் தெரியாமல் சுசீந்திரத்துக்குப் புறப்பட்டு வந்திருக்காவிட்டால் இந்த இரண்டாவது நிலை மகாராணிக்கு ஏற்பட்டிருக்காது. அந்தக் கைமுக்குத் தண்டனையைக் காணவும், அதற்காளான மகனின் தாயைச் சந்திக்கவும் நேர்ந்திருக்காது. அந்தத் தாயைச் சந்தித்திருக்காவிட்டால் அவள் அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கவும் மாட்டாள். – *

வானவன்மாதேவி ஆத்திரமும் அலங்கோலமுமாக நின்ற அந்தத் தாயின் அருகே சென்று, அவளைத் தம் தோளோடு தோள் சேரத் தழுவிக் கொண்டார். புன்முறுவலும், சாந்தமும் தவழும் முகத்தோடு அவளை நோக்கி ஆறுதலாகப் பேசினார்: – ‘அம்மா! தாயானாலும் நீதி நியாயங்களுக்குக் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும்? நீ அழுதும், அலறியும் என்ன பயன் விளையப் போகிறது?” –

“நீதியாம்! நியாயமாம்! அவைகளை உண்டாக்கியவர் களைப் பெற்றவளும் தாய்தான். இந்த வறட்டு அறிவுரைகளை என் செவிகளில் திணிப்பதற்குத்தான் என்னை இங்கே கூப்பிட்டு அனுப்பினர்களா?” w

“பதறாதே, அம்மா! என் வார்த்தைகளை முழுவதும் கேள். உலகத்து உயிர்களைப் படைத்ததால் கடவுளுக்கும்,

ஒரு மகா காவியத்தை எழுதியதால் கவிஞனுக்கும், எவ்வளவு பெருமை உண்டோ, அதைவிட அதிகமான பெருமை ஒரு மகனைப் பெற்றதால் தாய்க்கு உண்டு. ஆனால் அந்தப் பெருமையை நாம் அடைவதற்கு நாம் பெற்ற பிள்ளைகளும் தகுதி உள்ளவர்களாக நடந்து கொள்ளவேண்டாமா?”

மகாராணியின் கேள்விக்கு அந்தப் பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை. கோபத்தால் அவளுடைய உதடுகள் துடித்தன. பளிங்குக் கண்ணாடியில் முத்துக்கள் உருள்வதைப் போல் அவளுடைய கன்னங்களில் கண்ணிர்த் துளிகள் உருண்டன. மகாராணி உரிமையையும், பாசத்தையும் தாமாகவே உண்டாக்கிக்கொண்டு நடுங்கும் கையால் அந்தப் பெண்ணின் கண்ணிரைத் துடைத்துவிட்டுச் சொன்னார்:

“உன் அழுகை என் நெஞ்சை வருத்துகிறது. அம்மா நீ அழாதே. தாயாக வாழ்வதே பெண்ணுக்கு ஒரு தவம். அந்தத் தவத்தில் சுகபோக ஆடம்பர இன்பங்களுக்கு இடமே இல்லை. பெறுவதற்கு முன்னும் துன்பம்! பெறும்போதும் துன்பம், பெற்ற பின்னும் துன்பம். ஒரே துன்பம்-ஒயாத துன்பம்! அந்தத் துன்பம்தான் தாய்மை என்கிற தவம்! எந்தப் பொருள்களின் மேல் அதிகமாகப் பற்றும், பாசமும் இருக்கிறதோ, அந்தப் பொருளைக்கூட இழக்கத் துணிவதுதான் தவம்!”

அந்தத் தாய் மகாராணியின் தோளில் சாய்ந்து முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். பதவியும், பொறுப்பும் பெருமையுமாகச் சேர்ந்துகொண்டு எந்த ஓர் அழுகையைத் தான் அழ முடியாமல் தடைப்படுத்தி வைத்திருக்கின்றனவோ, அந்த அழுகையை-மகனுக்காகத் தாய் அழும் அழுகையை-அந்தப் பெண் தம்முன் அழுதுகொண்டிருப்பதை மகாராணி இரு கண்களாலும் நன்றாகக் கண்டார்.

இந்த ஏழைச் சோழியப் பெண்ணும் ஒரு தாய், நானும் ஒரு தாய். இவள் ஏழையாயிருப்பதன் பெரிய நன்மை துன்பம் வந்தால் மனம் விட்டு அழ முடிகிறது. நான் மகாராணியாயிருப்பதனால் அப்படி அழக்கூடச் சுதந்திர

மில்லை. நல்ல பதவி! நல்ல பெருமை ! அழவும் உரிமையில்லை, சிரிக்கவும் உரிமையில்லை! மகாராணி தம் மனத்துக்குள் நினைத்துக்கொண்டு வேதனைப்பட்டார். தம் தோளில் சாய்ந்திருந்த அந்தத் தாயை ஆறுதலாக அணைத்துக்கொண்டு முதுகைத் தடவிக் கொடுத்தார். தாயும் தாயும் அணைத்துக் கொண்டு, நின்ற அந்தக்காட்சி கங்கையும், காவிரியும் கலந்தாற்போல் புனிதமாகத் தோன்றியது.

விலகி நின்றுகொண்டிருந்த அர்ச்சகரும், புவன மோகினியும் அந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் உருதினர். “அம்மா! தெய்வத்தின் சந்நிதியில் உலகத்தையெல்லாம் காக்கும் ஆதிபராசக்தி போல் வலுவில் வந்து என்னைக் கூப்பிட்டு எனக்கு அறிவுரை கூறினர்கள். நீங்கள் யார்? எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் திருப்பெயர் என்ன? மறுக்காமல் எனக்குச் சொல்லுங்கள். என்னிடம் கூச்சமோ, தயக்கமோ கொள்ளவேண்டாம் நீங்கள்” என்று மகாராணியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள் அந்தச் சோழிய பெண். அர்ச்சகரும் புவனமோகினியும் பொருள் பொதிந்த பார்வையால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தனக்கு ஆறுதல் கூறிக்கொண்டு தன் முன் நிற்கும் தாய் யாரென்று தெரிந்துகொண்டால் அந்த ஏழைப் பெண் எவ்வளவு பரபரப்பும், பதற்றமும் அடைவாளென்று புவனமோகினி மனத்துக்குள் கற்பனை செய்து பார்த்துக்கொண்டாள்.

மகாராணி அந்தப் பெண்ணுக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் நின்றார். உதடுகள் பிரியாமல் சிரிக்கும் தன்னடக்கம் நிறைந்த கண்ணியமான சிரிப்பை மட்டும் மகாராணியின் இதழ்களில் காணமுடிந்த அவருடைய உள்ளத்திலோ அந்தத் தன்னடக்கச் சிரிப்புக்குப் பின்புலமான சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருந்தன. மகனைக் கொதிக்கும் நெய்க் கொப்பரைக்குப் பலி கொடுத்து இழக்கப் போகிறோமே என்ற துடிதுடிப்போடு தம்முன் கதறி நிற்கும் அந்தச் சோழியப் பெண்ணின் நிலையில் தம்மை

எண்ணிப்பார்த்தார் மகாராணி. எண்ணம் நிரம்பிப் பெருகியது. –

“தாய்க்குப் பெண்ணாகப் பிறந்து, தானும் தாயாகித் தனக்குப் பிறந்த பெண்களையும் தாயாக்கித் தன் தாய் போன இடத்துக்குப் போய்ச் சேருவதுதான் உலகத்துப் பெண் இனத்தின் அவலக் கதை. உலகத்தின் முதல் பெண் பிறந்த நாளிலிருந்து இந்தத் துன்பக் கதை தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்தத் தொடர்பு முடியும் போது உயிர்க்குல்மே அழிந்துவிடும். கனமான பெரிய மாங்காய் கனமற்ற சிறிய காம்பில் தொங்கிக் கொண்டிருப்பது போல் தாய்மை என்ற ஒரு மெல்லிய அடிப்படையில் இந்தத் தொல்லைப் பழம்பெரும் பூமி இன்னும் தன் உயிர்த்துடிப்பை இழந்து விடாமல் இருந்து கொண்டிருக்கிறது.” . . .

சிந்தனைப் பெருக்கின் ஊடே எப்போதோ கேள்விப் பட்டிருந்த தாயைப் பற்றிய செய்யுள் ஒன்று மகாராணி யாரின் நினைவில் குமிழியிட்டது.

“எனக்குத் தாயாகியாள் என்னை யீங்கிட்டுத் தனக்குத் தாய்நாடியே சென்றாள்-தனக்குத்தாய் ஆகியவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண் டேகும் அளித்திவ் வுலகு” நீராழி யுடுத்த நெடும்புவனமாகிய இந்த மண்ணுலகம்இது தாய்க்குலம் அளித்த பிச்சை. அந்த தாய்க்குலத்தில் ஒருத்தி துன்பம் அடைய அதை மற்றொருத்தி பார்த்துக் கொண்டிருப்பதா? நீயும் ஒரு தாயாக இருந்தால்-உனக்கும் ஒரு மகன் இருந்தால்-அவனும் திருடி விட்டு அகப்பட்டுக் கொண்டிருந்தால்? இப்படிக் குத்திக் காட்டிக் குமுறிக் கேட்ட பின்பும் வாளா இருக்கலாமா? – – – –

மகாராணியின் உள்ளத்தில் ஒரு பெரிய போராட்டம், நினைவில் வேதனை. சிந்தனையில் தடுமாற்றம். அப்படியே பிரமை பிடித்தவர்போல் சிந்தனையிலிருந்து விடுபடாமல் நின்றார் அவர். – –

“என்னம்மா திகைக்கிறீர்கள்? என் கேள்விக்கு மறு மொழி சொல்வதற்கு உங்களுக்கு விருப்பமில்லையா?” அந்தப்

பெண் மறுபடியும் கேட்டாள். அவள் குரல் பணிவோடு குழைந்து ஏங்கியது.

“பெண்ணே! நான் யார் என்பதை நீ தெரிந்துகொள் வதைவிடத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆனால் ஒன்றுமட்டும் நான் உனக்குச் சொல்ல முடியும். நானும் உன்னைப்போல் ஒரு துர்பாக்கியவதி, கொஞ்சம் அதிகமான புகழும் பெருமையும் உள்ள துர்ப்பாக்கியவதி. வேறுபாடு அவ்வளவுதான். உன்னைப் போலவே பிள்ளையைப் பெற்றதால் தொல்லையை அடைந்து கொண்டிருக்கும் தாய்தான் நானும். இதைத் தவிர வேறு என்ன நான் உனக்குச் சொல்லவேண்டும்?”

சொல்லிவிட்டுப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே அந்தப் பெண்ணின் கண்களைக் கூர்ந்து பார்த்தார் மகாராணி. அவைகளில் ஏமாற்றம் தேங்கிப் பதிந்திருந்தது.

‘நான் வருகிறேன். ஆத்திரத்தால் உங்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்து மறந்து விடுங்கள்!” அந்தப் பெண் மகாராணியிடம் விடை பெற்றுக்கொண்டு வந்த விழியே திரும்பிக் கைமுக்குத் தண்டனை நடக்கும் மண்டபத்தை நோக்கி நடக்கலானாள். “உன்னை மன்னித்துவிடுகிறேன். ஆனால் மறந்துவிடச் சொல்கிறாயே, அதுமட்டும் என்னால் முடியவே முடியாது. உன்னை என்றுமே நான் மறக்கமாட்டேன்.”

மகாராணியின் இந்தச் சொற்கள் வேகமாக நடந்து சென்று அவள் செவிகளில் விழுந்தனவோ, இல்லையோ? அவள். திரும்பிப் பாராமல் வேகமாக நடந்து சென்று கூட்டத்தில் கலந்துவிட்டாள். –

புவனமோகினியும், அர்ச்சகரும் மகாராணி வானவன் மாதேவிக்கு அருகில் நெருங்கி வந்தார்கள்.

“தேவி! அந்தப் பெண்ணிடம் தாங்கள் இன்னாரென்ற உண்மையைக் கூறாததே நல்லதாயிற்று. கூறியிருந்தால் உங்கள் கால்களைப் பிடித்துக்கொண்டு தன் மகனைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருப்பாள்” என்றார் அர்ச்சகர்.

‘அர்ச்சகரே! அவள் நிலையில் யார் இருந்தாலும் அப்படிக் கெஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” மகாராணியிடமிருந்து இந்தப் பதில் கேள்வியை அர்ச்சகர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“வேறொன்றும் செய்ய முடியாதுதான். ஆனால் அதற்காக யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இங்கே வந்திருக்கும் உங்களிடம் மகனைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்?”

“என்ன செய்ய முடியுமோ, அதை இப்போதும் நான் செய்யத்தான் போகிறேன். அர்ச்சகரே! ஆனால் நான்தான் செய்தேன் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள மட்டும் எனக்கு விருப்பமில்லை.” –

“என்ன செய்யப் போகிறீர்களோ ? அர்ச்சகர் பரபரப்படைந்து வினவினார். –

“நான் செய்யப்போவதில்லை. எனக்காக நீங்களே அதைச் செய்துவிடவேண்டும். இந்தச் சமயத்தில் நான் இங்கு வந்துபோனது யாருக்குமே தெரிய வேண்டாம்.”

இப்படிக் கூறிக்கொண்டே தமது வலது கை விரலில் அணிந்திருந்த அரச முத்திரையோடு கூடிய கணையாழி மோதிரத்தைக் கழற்றினார் மகாராணி, அர்ச்சகர், புவன மோகினி இருவருக்கும் விழிகள் ஆச்சரியத்தால் அகன்றன. “கைமுக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இருக்கும் தெய்வநீதிமன்றத்துத் தலைவரிடம் இந்த மோதிரத்தைக் காண்பியுங்கள். அந்தத் தாயின் மகன் திருடிய பொன் அணிகலன்களைப் போல் நான்கு மடங்கு பெறுமானமுள்ள பொன்னை அவன் அபராதமாகச் செலுத்தினால் போதும், கைமுக்குத் தண்டனை வேண்டாமென்று நான் கூறியனுப்பியதாகச் சொல்லுங்கள். அந்தத் தாயின் பெருமையைக் காப்பாற்றுவதற்காக அபராதம் விதிக்கப்பெறும் நான்கு மடங்கு பொன்னை நானே அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பிவிடுகிறேன். இது உமக்கும் நீதி மன்றத்தின் தலைவருக்கும் தவிர வேறெவர்க்கும் தெரிய வேண்டாம்.”

சிறிய மகரமீன் இலச்சினையோடு கூடிய அந்த மோதிரத்தைப் பயபக்தியோடு இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார் அர்ச்சகர்.

“காரியம் முடிந்ததும் மோதிரம் பத்திரமாக எனக்குத் திரும்பி வந்து சேர்ந்துவிடவேண்டும்.”

“அப்படியே செய்கிறேன், தேவி!” என்றார் அர்ச்சகர்.

“புவனமோகினி! இனி நமக்கு இங்கு வேலை இல்லை. வா. நாம் போகலாம்” மகாராணி புவனமோகினியை உடன் அழைத்துக்கொண்டு சிவிகையில் ஏறுவதற்காக வெளியேறினார். அர்ச்சகர் முத்திரை மோதிரத்தோடு கைமுக்கு மண்டபத்துப் பக்கம் சென்றார்.

Previous articleRead Pandima Devi Part 2 Ch13 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch15 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here