Home Na Parthasarathy Read Pandima Devi Part 2 Ch17 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch17 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

91
0
Read Pandima Devi Part 2 Ch17 Pandima Devi Na.Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Read Pandima Devi Part 2 Ch17|Na.Parthasarathy|TamilNovel.in

Read Pandima Devi Part 2 Ch17 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம், அத்தியாயம் 17 : காந்தளூர் மணியம்பலம்

Read Pandima Devi Part 2 Ch17 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

ஒர் ஏழைத் தாயின் கண்ணிரைத் துடைத்த மகிழ்ச்சி யோடு சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்திலிருந்து வெளியேறிய மகாராணி வானவன் மாதேவி நேரே அரண்மனைக்குத்தான் திரும்பிச் செல்வாரென்று புவனமோகினி எண்ணினாள்.

இருவரும் சிவிகையில் ஏறி அமர்ந்து கொண்டதும், “நேரே காந்தளூர் மணியம்பலத்துக்குப் போகவேண்டும், வேகமாகச் செல்லுங்கள்” என்று சிவிகை தூக்குவோருக்குக் கட்டளை பிறந்தபோதுதான் புவனமோகினிக்கு மகாராணியின் நோக்கம் புரிந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி மகாராணிக்கு அரண்மனையில் அடைபட்டுக் கிடப்பதில் வெறுப்பு ஏற்பட்டுவிட்டதென்பதை வண்ணமகள் நினைத்து உணர முடிந்தது.

எவ்வளவுதான் துன்பம் நிறைந்த சூழ்நிலையாக இருந்தாலும், மகாராணியின் முகத்தில் ஏக்கத்தைக் காட்டிலும் சாந்த குணத்தை வெளிக்காட்டும் சால்பு மிக்க மலர்ச்சி ஒன்று பதிந்திருக்கும். ஆனால் இன்று சுசீந்திரம் கோவிலில் அந்தத் தாயைச் சந்தித்துவிட்டு வந்தபின் தெய்வத்தின் திருவடிகளில் அர்ச்சிப்பதற்கு மலர்ந்த பெரிய செந்தாமரைப் பூவைப் போன்ற மகாராணியின் முக மண்டலத்தில் எதையோ மீண்டும் மீண்டும் எண்ணி மனத்துக்குள்ளேயே நினைவுகளின் சூட்டினால் வெந்து புழுங்கித் தவிக்கும் சோகச் சாயை கோடிட்டிருந்தது. அந்த முகத்துக்கு எதிரே அமர்ந்து கொண்டு அந்த முகத்தையே பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது வண்ணமகளுக்கு தன் மன வேதனைகளைத் தெரிந்து கொண்டு தனக்கு வேண்டியவர்கள் தன்னை எண்ணி வருந்தக்கூடாதே என்கிற அளவுக்குக் கூச்சம் நிறைந்த மெல்லிய மனம் மகாராணியினுடையது.

அந்த முகத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு அஞ்சித் தன் பார்வையைப் பல்லக்கின் வெளிப்பக்கத்திற்கு

மாற்றிக்கொண்டாள் புவனமோகினி. பல்லக்கு விரைந்து கொண்டிருந்தது.

பெருமூச்சோடு மெல்ல விம்மி அழுவதுபோன்ற ஒலியைக்கேட்டுத் திகைத்துத் திரும்பினாள் வண்ணமகள். அவள் கண்களுக்கு எதிரே சிவிகையில் வீற்றிருந்த மகாராணி ஒசைப்படாமல் மெல்ல அழுதுகொண்டிருந்தார். அந்தத் தாமரைப் பூ முகத்தில் கண்ணிர்த் துளிகளைக் கண்டபோது புவனமோகினி திடுக்கிட்டாள். அவளுக்குத் துயரங்கலந்த ஒருவகைப் பயத்தினால் மெய்சிலிர்த்தது. மகாராணியிடம்

என்ன பேசுவது? – ஏன் அழுகிறீர்கள்? என்று எப்படிக் கூசாமல் கேட்டது? ஒன்றும் புரியாமல் திகைத்துக் கலங்கும் மனநிலையோடு மகாராணியையே பார்த்துக்

கொண்டிருந்தாள் அந்த எளிய வண்ணமகள்.

“புவனமோகினி! என் அழுகையின் காரணம் புரியாமல் தானே நீ இப்படி என்னைப் பார்க்கிறாய்? கேட்டால் நான் ‘வருந்துவேனோ என்று தயங்குகிறாய் இல்லையா?”

சாம்பலை ஊதிக் கனியவைத்த மங்கலான நெருப்பின் ஒளிபோல் அழுகையின் நடுவே ஒரு புன்னகையோடு கேட்டார் மகாராணி.

“தாயே! தங்கள் முகத்தையும், கண் ணிரையும் பார்க்கும்போது எனக்குப் பெரிதும் வேதனையாயிருந்தது. அதே சமயத்தில் தங்களைக் கேட்பதற்கும் பயமாக இருக்கிறது.” “பயம் என்ன வந்த்து உனக்குத் தோன்றிய எண்ணத்தை நீ கேட்கவேண்டியதுதானே?” –

“திருவட்டாற்றுச் சோழியப் பெண்ணின் தாய்மைத் துன்பத்தை எண்ணி உங்கள் மனம் கலங்குகிறதென்று நான் அனுமானிக்கிறேன். நீங்கள்தான் அந்தப் பெண்ணின் துன்பத்தைப் போக்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டீர்களே! இனியும் ஏன் கலங்கவேண்டும்?” –

“கலக்கமல்ல, பெண்ணே இது! உலகத்தின் கசப்பு நிறைந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு அழுகை வருகிறது. எனக்கு அழுகை வரும் பா.தே.27

போதெல்லாம் உண்மைகளை அடைகிற தகுதியும் வருகிறது. புவனமோகினி! இந்த மாதிரித் தத்துவங்களெல்லாம் உனக்குப் புரியாது. என்றாலும் சொல்லுகிறேன். மெய்யைத் தெரிந்துகொள்வதற்கு நூல்களைப் படித்தலும் அறிவுரைகளைக் கேட்டலுமே போதுமான கருவிகளென்று பல பேர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உலகத்துத் துன்பங்களையெல்லாம் உணர்ந்துணர்ந்து உருகி அழுகின்ற மனம் வேண்டும். உள்ளம் உருகி அழுதால் உண்மை விளங்கும். நெஞ்சம் கலங்கிக் குமுறினால் நியாயம் பிறக்கும். பிறவி என்ற பிணிவாசனை தொலைக்கும் மணிவாசகர் ஒரே வாக்கியத்தில் இதை, “அழுதால் உன்னைப் பெறலாமே” என்று விளக்குகிறார். இப்போது சில சமயங்களில் இறைவனைப் பெறுவதற்கு அழுவதைவிட நம்மைப் புரிந்துகொள்வதற்கே நாம் அழுதாக வேண்டும். நான் அழுகின்ற அழுகை உண்மையை அறிந்தும், அறிய முயன்றும் அழுவதே தவிர வேறென்று நீ வருந்தவேண்டாம்.”

மகாராணியின் இந்தச் சொற்களைக் கேட்டதும் புவன மோகினிக்கு ஒரு சிலிர்ப்பு உடல் முழுவதும் பரவியது. கண்களில் பக்திப் பரவசத்தின் ஒளி சுடர்க்கோடிட்டது. மின்னல் மின்னும் நேரத்தில், ஒரு கணத்தின் ஒருசிறு பகுதிப் பொழுதில், அந்த வண்ணமகளின் கண்களுக்கு முன்னால் மகாராணி வானவன்மாதேவியாரின் கண்ணிர் சிந்திய முகம் தெரியவில்லை. நீலத்திரைக் கடலோரத்திலே கோலக் கன்னிமை யெனும் தவம் பூண்டு நிற்கும் வாலைக்குமரி வடிவம் சிவிகையினுள் வந்தமர்ந்துகொண்டு “ஐயோ! தலைமுறைக்குத் தலைமுறை உலகில் தாய்க் குலத்தின் துன்பங்கள் பெருகி வருகின்ற்னவே” என்று கதறிக் குமுறிக் கலங்கியழுவதுபோல் ஒரு பொய்த் தோற்றம்- ஒரு பிரமைக் காட்சி-புவனமோகினியின் கண்களுக்கு முன்பு தெரிந்து மறைந்தது. புவனமோகினி தன் வசமிழந்த நிலையில் அந்த ஒருகணம் உடலெங்கும் பரவி நின்ற எல்லையற்ற பரவசத்தினால் என்ன செய்கிறோமென்ற நினைவேயின்றி

இரண்டு கைகளும் மேல் எழுப்பிக் கைகூப்பி வணங்குவதற்குத் தயாராகிவிட்டாள்.

ஆகா! எவ்வளவு விந்தையான பரந்த மனம் இவருக்கு வாய்த்திருக்கிறது? உலகத்தில் முக்கால்வாசிப் பேருக்கும் தங்கள் சொந்தத் துன்பத்தை எண்ணி வருந்துவதற்கே நேர மில்லை. கால்வாசிப் பேருக்குத் துன்பங்களே நிரந்தரமாகப் பழகிவிட்டதால் அவற்றையே இன்பங்களாக எண்ணிச் சிரித்துக்கொண்டே வாழப் பழகி விட்டார்கள். கண்களின் பார்வைக்கு இவர் பாண்டிமாதேவி மட்டும்தான். கருணையின் பார்வையில் இவர் உலகமாதேவி! நாட்டையும், மகனையும் கண்ணிரையும் அடக்கிக் காக்க முடியாத சூழ்நிலை. உலகத்தையே துன்பமின்றிக் காக்க வேண்டுமென்ற ஆவல், உண்மைக்காக அழுது உயர உயரப் போகும் உலகளாவிய மனம், இந்த மனம்?. இது மனிதப் பெண்ணின் மனமில்லை! தெய்வப் பெண்ணின் மனத்தோடும் மனிதத் தாயின் உடலோடும் அந்தச் சமயத்தில் புவனமோகினியின் கண்களுக்குத் தோன்றினார் மகாராணி,

“தாயே! உணவைக்கூட முடித்துக் கொள்ளாமல் அரண்மனையிலிருந்து கிளம்பினர்கள். சுசீந்திரத்திலிருந்து நேரே அரண்மனைக்கே திரும்பிவிடலாமென்று எண்ணி யிருந்தேன். தாங்களோ திடீரென்று காந்தளூர் மணியம்பலத்துக்குப் புறப்பட்டு விட்டீர்கள்” என்று வண்ணமகள் கவலையோடு வினவினாள்.

‘உணவுக்கென்ன? எங்கும் கிடைக்கக்கூடியதுதான். நிம்மதியை அல்லவா நான் தேடிக்கொண்டு போகின்றேன். திரும்பத் திரும்பக் கூட்டுக்குள் அடைபடும் பறவையைப் போல் மறுபடியும் நான் அரண்மனைக்குள் போய் அடைபட்டுக் கொண்டிருக்க என் மனம் ஒப்பமாட்டேன் என்கிறதே! ஆசிரியர், பவழக்கனிவாயர் போன்றவர்கள் அரண்மனையில் வந்து தங்கியிருந்தார்கள். அவர்களும் திரும்பிச் சென்று விட்டார்கள். என்னோடு உடன் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண் விலாசினி. அவளும் திடீரென்று தந்தையோடு புறப்பட்டுப் போய்விட்டாளே, வல்லாளதேவனின் தங்கைக்கு

என்னிடம் சொல்லிக் கொள்வதற்குக்கூட நேரமில்லை போலிருக்கிறது. அவளும் போய்விட்டாள். மனம் விட்டுப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள் அரண்மனையில்? காந்தளூர் மணியம்பலத்துக்குப் போய் நிம்மதியாக இரண்டு நாட்கள் தங்கிவிட்டுக் கொஞ்சம் மெதுவாகத்தான் திரும்பிப் போகலாமே, இப்போது என்ன அவசரம்?”

“அவசரம் இல்லை! ஆனால் நாம் கூடியவரையில் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டிருக்கிறோமே என்றுதான் கவலைப்படுகிறேன்.”

“ஒரு கவலையும் உனக்கு வேண்டாம். பேசாமல் என்னோடு 6)ifr!”

கண்களைத் துடைத்துக்கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு மகாராணி இவ்வாறு உறுதிமொழி கூறியதும் புவன மோகினி அமைதியடைந்தாள்.

மகாராணியையும், வண்ணமகளையும் சுமந்துகொண்டு அந்தப் பல்லக்கு அப்படியே காந்தளுரை அடைவதற்குள் நேயர்களுக்கு ஒருவாறு காந்தளூர் மணியம்பலத்தைப் பற்றியும் அறிமுகப்படுத்தி வைத்துவிடுகிறேன். –

பல்லாயிரங் காலத்துப் பேரெல்லைவரை பரவிக் கிடக்கும் தமிழக வரலாற்றுப் பெருக்கில் தமிழ் மூவேந்தர்களிற் சிறப்பெய்திய எவரும் காந்தளூருடன் தொடர்புற்றிருப்பர். எந்த மகா மன்னனுடைய மெய்க் கீர்த்தியும் காந்தளூர்ச் சாலையில் கலமறுத்தருளிய பெருமையைப் பறைசாற்றத் தவறியதில்லை. எத்தனை முறைகள் தோல்வியடைந்தாலும் பாண்டியனை எதிர்த்துக் காந்தளூரை வென்றிடும் ஆசையை எவரும் விடத் தயாராயில்லை. இவ்வாறு மன்னாதி மன்னர்களின் ஆசைகளை வளர்க்கும் அழகுக் கனவாகத் தென்பாண்டி நாட்டில் இலங்கிவந்தது காந்தளூர். – – செருவல ரானதன்ாற் சிந்தியார் போலும் மருவலராய் வாள்மாறன் சிறக்-கருவிளை கண்தோற்ற வண்டரவம் கார்தோற்றும் காந்தளூர் மண்தோற்ற வேந்தர் மனம்.

சாலை என்றும், காந்தளூர்ச் சாலை என்றும் இதே இடத்துக்கு வேறு பெயர்கள் வழங்கும். இராசசிம்மனின் தந்தை பராந்தக பாண்டியனுடைய காலத்தில் விழிஞத்தையும், காந்தளுரையும் சேர மன்னனிடமிருந்து கைப்பற்றினார் பராந்தக பாண்டியர். மிக இளைஞராயிருக்குங் காலத்திலே முதல் முதலாகச் செய்த கன்னிப்போர் காந்தளூரில்தான் நிகழ்ந்தது. கன்னிப் போர் திருமணமாகாமல் இளைஞராயிருந்த அவருக்கு ஒரு கன்னிகையையே அளித்துவிட்டது. சேரமன்னன், பராந்தகனுக்குத் தன் மகளை மணம் முடித்துக் கொடுத்தான். அந்தப் பெண்ணே பட்டமகிஷியாய் வானவன்மாதேவி என்னும் பெயரோடு பராந்தகன் வாழ்வில் பங்கு பற்றினாள். விழிஞத்தில் நிறையக் கடற்போர்களைச் செய்து, பகைவர்கள் கப்பல்களை அழித்து வாகை சூடும் பெருமை பராந்தகனுக்குக் கிடைத்தது. அதையெல்லாம் விடப் பெரிய பெருமை அவன் காந்தளுரில் திருத்தியமைத்து நிறுவிய மணியம்பலமே ஆகும்.

இந்த மணியம்பலத்தில் ஆயிரத்தெட்டுப் பேர் எல்லாக் கலைகளிலும் வல்லவர்களாக இருந்தார்கள். மறையவர்கள் பெரும்பாலோரும், கவிஞர்களும், கலைஞர்களும், தர்க்க நியாயசாத்திரங்களில் வல்லவர்களுமாகச் சிலரும் காந்தளூர் மணியம்பலத்தில் இருந்ததனால் தென்பாண்டி நாட்டின் பல்கலைக்கழகம் போன்றிலங்கி வந்தது இது. பவழக்கனிவாயர் இந்த மணியம்பலத்தின் அறங் காவலராகவும், அதங்கோட்டாசிரியர் கலை கல்வி, தமிழ் போன்ற் அறிவுத் துறைகட்குக் காவலராகவும் பொறுப்பேற்றிருந்தனர்.

அதேபோல் திருநந்திக்கரையிலும் குழித்துறையாற்றங் கரையில் திருச்சேரண நகரிலும் சமணர்களின் கலாசாலைகள் இருந்தன. அவற்றையும் பராந்தகன் ஆதரித்தான். காந்தளூர் மணியம்பலத்திலிருந்த மறையவர்களும் அற நூலாசிரியர்களும் மிக உயர்ந்த கருத்துக்களைக் கல்லில் செதுக்கச் செய்து நாட்டின் பல பகுதிகளிலும் அக்கற்களை நடுவித்தனர். காந்தளூரில் மரங்களும், செடிகொடிகளும், மலர்வனங்களும் நிறைந்த அற்புதமான இயற்கைச் சூழலின் நடுவே மணியம்பலம்

அமைந்திருந்தது. இந்த மணியம்பலத்தில் இருந்த ஆயிரத்தெட்டு மறையவர்களும், பிறரும், போட்டி பொறாமை, புலமைக் காய்ச்சலின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதில் பராந்தனுக்கு அக்கறை அதிகமாயிருந்தது.

திருச்சேரணத்துச் சமணர்களும் தங்கள் கலாசாலை மூலம் பெரிய காரியங்களைச் சாதித்தனர். தெய்வங்களின் கோவில்கள் பல இருந்தனபோல் அறிவின் ஆலயங்களாக மணியம்பலமும், பிறவும் விளங்கிவந்தன.

எனவே, மகாராணியாகிய வானவன்மாதேவி தாணு மாலய விண்ணகரமென்னும் சுசீந்திரம் தேவாலயத்தைத் தரிசனம் செய்தபின் அறிவாலயமாகிய மணியம்பலத்துக்குப் புறப்பட்டது மிகவும் பொருத்தமும் ஆகிவிட்டது.

பவழக்கனிவாயர் முதலியவர்களும் கூட அன்று அதிகாலையில் தான் அரண்மனையிலிருந்து அங்கே திரும்பி வந்திருந்தார்கள். யாருக்கும் தெரியாமல், யாரும் எதிர்பாராதபோது அப்படித் திடீரென்று மகாராணி அங்கே வருவார் என்று எவரும் நினைத்திருக்க முடியாது. சுசீந்திரத்திலிருந்து புறப்பட்ட சிவிகை காந்தளூர் மணியம்பலத்தை அடையும்போது மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கியது.

இயற்கையின் அழகான பசுமைக்கோலத்தின் நடுவே தீப ஒளியில் அமைதியாகக் காட்சியளித்தது மணியம்பலம், பகுதி பகுதியாகப் பிரிந்திருந்த அந்தப் பேரம்பலத்தில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு வகைக் கலையைக் கற்பிக்கும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. ஒருபுறம் மறை யொலி, இன்னொருபுறம் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் விரிவுரை, வேறோர் பகுதியில் பாதச் சிலம்புகள் குலுங்கும் நாட்டிய ஒலி, இசைக் குரல்களின் இனிமைஎல்லா ஒலிகளுமாகச் சேர்ந்து வேறு வகையில் அந்த இடத்தின் அமைதியைத் தெளிவுபடுத்தின.

சிவிகையை விட்டு இறங்கி மணியம்பலத்துக்குள் நடந்தனர் மகாராணியும், புவனமோகினியும்.

“நான் முன்னால் ஒடிப்போய்த் தங்கள் வரவைப் பவழக்கனிவாயருக்கு அறிவித்துவிடுகிறேன்” என்று சிறிது விரைவாக முன்னால் நடக்க முயன்ற புவனமோகினியைத் தடுத்து நிறுத்தினார் மகாராணி,

“நமக்குக் கால் இருக்கிறது. நாமே நடந்து செல்லலாம். அவரவர் கடமைகளை அந்தந்த நேரத்துக்கு ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கும் இந்தக் கலைக்கோயிலில் இப்போது நீ போய் என் வரவைக் கூறினால் இங்குள்ள அத்தனை மறையவர்களும், கலைஞர்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் பரபரப்படைந்து என்னை வரவேற்பதற்கு ஓடிவந்து வீண் கூட்டம் போடுவார்கள், அந்த ஆடம்பர ஆரவாரத்தை எதிர்நோக்கி நான் இங்கு வரவில்லை.”

புவனமோகினி பதில் சொல்ல வாயின்றி உடன் நடந்தாள். மணியம்பலத்தில் யாருமே இவர்கள் உள்ளே வந்ததைக் கவனிக்கவில்லை.

தர்க்க நியாய சாத்திரங்களையும், சமய நூல்களையும் கற்பிக்கும் ஒரு பகுதிக்கு அருகே வந்ததும் மகாராணியும், புவனமோகினியும் நின்றார்கள். அங்கே ஒரு முதுபெரும் புலவர் மணியம்பலத்தைச் சேர்ந்த சீடர்களைத் தம்மைச் சுற்றிலும் உட்காரவைத்துக் கற்பித்துக்கொண்டிருந்தார். அதில் சில வார்த்தைகள் உள்ளத்தைத் தொடவே, தாம் நிற்பது தெரியாமல் மறைந்து நின்று கேட்கத் தொடங்கினார் மகாராணி. – “துன்பங்கள் குறைவதற்கு எதையும் இழக்கத் துணிகின்ற மனம் வேண்டும். இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசையை வளர்த்துக்கொண்டு போகிறவனைக் காட்டிலும் எதுவுமே வேண்டாமென்று மனத்தைக் கட்டுகிறவன் பெரிய செல்வன். வேண்டாமையைப் போன்ற சிறந்த செல்வம் வேறில்லை. எந்தப் பொருளை அடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அந்தப் பொருள்களை விரும்புவதால், பெறுவதால் வரும் துயரங்கள். நமக்கு இல்லை.

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்”

“மாணவர்களே! சமயவெறி ஒப்புக்கொண்ட வாழ்க்கை இதுதான். இதுவே தவம்” என்று மூதறிஞர் கூறி முடித்தார்.

“எதையும் இழக்கத் துணிகின்ற மனம் வேண்டும்.” மகாராணி தமக்குள் மெல்லக் கூறிக்கொண்டார் அந்த வாக்கியத்தை விளக்கைக் கண்டவுடன் மாயும் இருள்போல் நெடுநேரமாக மனத்தை வதைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்றை அந்த முதுபெரும் புலவர் கூறிய திருக்குறள் கருத்து நீக்கிவிட்டது போலிருந்தது. “புவன மோகினி வா… நாம் அரண்மனைக்கே திரும்பிப் போய்விடலாம்.” இவ்வாறு கூறிவிட்டு இருளில் மறைந்து நின்று கொண்டிருந்த மகாராணி புறப்பட்டபோது புவன மோகினிக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. மகாராணியின் மனம் ஒரு நிலையில் நிற்காமல் ஏதோ காரணத்தால் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போலுமென்று அவளுக்குத் தோன்றியது. –

“இரண்டு நாட்கள் இங்கே நிம்மதியாகத் தங்கி விட்டுப் போகவேண்டுமென்று கூறினீர்களே! இப்போது உடனே புறப்படவேண்டுமென்கிறீர்களே சுசீந்திரத்திலிருந்தே அரண்மனைக்குத் திரும்பியிருந்தால் இதற்குள் போய்ச் சேர்ந்திருக்கலாமே?” என்று மெல்லிய குரலில் மகாராணியைக் கேட்டாள் வண்ணமகள்.

“பெண்ணே ! அப்போது அப்படித் தோன்றியது, சொன்னேன். இப்போது இப்படித் தோன்றுகிறது, சொல்கிறேன். இரண்டு நாட்கள் இந்த மணியம்பலத்தில் தங்கி என்னென்ன தெரிந்துகொண்டு நிம்மதி அடைய வேண்டுமென்று எண்ணி வந்தேனோ அந்த நிம்மதி இரண்டு கணங்களில் இந்தப் புலவரின் சொற்களில் கிடைத்துவிட்டது.”

‘போகு முன் பவழக்கனி வாயரைப் பார்க்க வேண்டுமல்லவா?” –

“யாரையும் பார்க்கவேண்டாம்! யாருக்கும் தெரியாமல் நாம் திரும்பி விடுவோம்!”

ஒசைப்படாமல் திரும்பிச் சென்று, வந்தது போலவே வெளியேறினார்கள் அவர்கள். மணியம்பலத்தின் வாயிலில் அலுத்துப்போய் உட்கார்ந்திருந்த பல்லக்குத் தூக்குவோர் களைப்பையும் பொருட்படுத்தாமல் புறப்பட்டுவிட்டார்கள். இருளின் நடுவே ஒளி நிறைந்த மனத்தோடு மகாராணியின் பயணம் தொடர்ந்தது.

Previous articleRead Pandima Devi Part 2 Ch16 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articleRead Pandima Devi Part 2 Ch18 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here